வெள்ளி, செப்டம்பர் 10, 2010

தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழி - தினமணி

ஒரு வரலாற்று முக்கியத்துவம் நடந்திருக்கிறது தமிழுக்கு. தினமணியின் நேற்றைய (09/09/2010) தலையங்கத்தில்   'தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும்.'  என்கிறது தினமணியின் தலையங்கம்.

தமிழ் வழிகல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவைப்பில் 20% விழுக்காடு ஒதுக்கீடு, வழங்குவது  தொடர்பாக எழுதப்பட்ட,  தலையங்கத்தில் மேற்கொண்டவாறு கூறியுள்ளது தினமணி நாளிதழ்.

தேவநேயப் பாவணார் முதற்கொண்டு பல்வேறு தமிழ் அறிஞர்கள்  இதற்காகத்தானே போராடினார்கள்.  தமிழ் மொழி சம்ஸ்கிருதத்திளிருந்துதான் வந்தது என்று பொய் உரை கூற முயன்றவர்கள் ஏராளம் ஏராளம். பொய்யை மெய்யாக்க தலைமுறை தலைமுறையாய் முயன்றவர்களும் உண்டது.

ஆனால், தமிழனுக்கே உரிய தாய்  மொழி  பற்று, அதை தவிடிப் பொடியாக்கி தமிழை நாம் இன்றளவும் வாழவைத்துள்ளும்.  தமிழ் கூறும் நல் உலகில் தமிழுக்கு முக்கியத்துவம் வந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் பலர் முயற்சி செய்து வரும் வேளையில் இந்த தலையங்கம் நமக்கு பெரும் ஆறுதலை தருகிறது.





....இனி தலையங்கம்.


ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?


முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.

நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.

ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.

அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!

இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!


-நன்றி தினமணி.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...