"26 டிசம்பர் நாளையும் வருகிறது...!"
 |
மாங்ரோ காடுகள் |
கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது அந்த கருப்பு ஞாயறு. உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி, உறவுகளை சிதைத்து, உலகின் பல நாடுகளின் மக்களை கபலீகரம் செய்த அந்த கருப்பு 26 ஞாயற்றுக் கிழமை நாளை மீண்டும் வருகிறது. ஆம் நளை டிசம்பர் 26.
 |
கொத்துகொத்தாய் மடிந்தவர்கள் |
26/12/2004 அது ஒரு மோசமான ஞாயிறு. நாங்கள் கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 2ம் தளத்தில் வசித்துவந்தோம். விடியற்காலை 6 மணி இருக்கும், ஒரு முக்கியமான விளம்பரம் எப்படி வந்திருக்கிறது என்ற ஆவலில் வாசலில் கிடந்த தினமணி நாளிதழை கையில் எடுத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தேன். சில வினாடிகள்தான் கடந்திருக்கும், நான் அமர்ந்திருக்கும் நாற்காலி சில வினாடிகள் ஆடியது. எனக்கு என்னத் தோன்றியது என்றால், 'நமது உடல்நிலை வர வர மோசமாகிவிட்டது. பலகீனத்தால்தான் இப்படி உடல் நடுங்குகிறது...' என்று நினைக்கும் அந்த நொடிகளில் மீண்டும் நாற்காலி குளுங்கியது...!
இந்த முறை சற்று பலமாகவே. அதற்குள் கீழியிருந்து சத்தம் கேட்டது. " கீழே.... ஓடுங்க...! ஓடுங்க... பூகம்பம்" என்று அலறல் சத்தம் கேட்டது. எங்கும் ஒரே அமளிதுமளி. குடியிருப்பே பரபரப்பாக கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. கட்டிலில் கிடந்த எனது மகளை தூக்கிக்கொண்டு, பைக் சாவி கூடவே பர்ஸையும் எடுத்துக் கொண்டு மனைவியோடு கிழே இறங்கி ஓடினால், மொத்த குடியிறுப்பும் 'கோட்டுவாயோடு' பிளாட்டையே பீதியோடு பார்த்துக் கொண்டு இருந்தது.
சில மணித் துளிகளில்... 'சென்னை முழுவதும் வீடுகள் குளுங்கின' என்ற செய்தி காட்டுத் தீ போன்று பரவியது. நாங்கள் பல்லுவிலக்கக் கூட... வீட்டுக்குள் செல்ல தயங்கி 1 மணி நேரம் வெளியிலேயே நின்றுக் கொண்டு இருந்தோம். அதுவரைக்கும் உன்மையாக என்ன நடந்தது என்ற விவரம் கூட தெரியவில்லை.
அதற்குள் எங்கள் அண்ணன் தாம்பரத்தில் இருந்து, தொலைபேசி...எங்களை அவரது வீட்டிற்கு வரச் செய்துவிட்டார்.
பிறகுதான் தெரிந்தது, ஜாவா சுமத்திரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்துமா கடலில் சுனாமி ஏறுபட்டுள்ளது என்று. அது வரையில் 'சுனாமி' என்றால் என்னவென்றே நமக்குத் தெரியாது. அந்த பெயரும் புதிது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சுனாமி ஜப்பானிய வார்த்தை.
 |
சுனாமியின் போது சென்னை மெரீனா கடற்கரை |
சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தையாகும். இது இரண்டு எழுத்து வார்த்தையாகும். முதல் எழுத்தான சு- துறைமுகத்தையும் னாமி - என்பது அலையையும் குறிக்கிறது. கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற கடுமையான தாக்குதலால் கடல் பாதிக்கப்படும் சமயங்களில் மிக ஆக்ரோஷமான கடல் அலைகள் உருவாகின்றன. இது மட்டுமின்றி கடலுக்கு அடியில் தரைப்பகுதிகளில் நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் போன்றவை பெருமளவில் நிகழும் சமயங்களில் கடல் நீர் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் காரணமாக கடலின் தரைப்பகுதிகளில் இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக உருவாகும் அலைகள் கரையை நோக்கி கடலுக்கு அடியிலேயே மிக வேகமாக பயணித்து கரையை அடைந்ததும் மோதிச் சிதறுகின்றன. இவ்வாறு சிதறும் போது கரைப்பகுதியில் இருப்பவை அனைத்தையும் அழைத்துச் செல்லுகின்றன. இந்தத் தக்குதலே சுனாமி என்று அழைக்கப்படுகிறது
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சுனாமி இந்துமகாச் சமூத்திரத்தில் உள்ள இந்தோனேஷியா, புங்கட் தீவுகள், அந்தமான், இலங்கை, இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டிவிட்டது. இங்கு தமிழகத்தில் சென்னையில் மெரீனா, நொச்சிக் குப்பம், ஸ்ரீனிவாச புரம், பட்டினப்பாக்கம், மகபலிபுரம், கடலூர் மாவட்டதில், கிள்ளை, பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம் மற்றும் புதுச்சேரி, நாகை மாவட்டத்தில் பழயாறு, புதுப்பட்டிணம், பூம்புகார், கொட்டாயமேடு, மடவாமேடு, கீச்சாங்க்குப்பம், வேளாங்கன்னி, நாகர்கோவில் கடற் பகுதி என்று தமிழகத்தையே ஒரு புரட்டு புரட்டியது ஆழிப் பேரலை.
இதில் அதிகப் பாதிப்பு நாகை மாவட்டத்திற்குதான். அதுவும் வேளங்கன்னியில் படுபயங்கரம். அங்கு பொதுவாகவே எப்பதும் கூட்டம் இருக்கும். அதுவும் கிருஸ்துமஸ் முடிந்த ஞாயறு என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரு பத்திரிகையின் நிருபர் தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்துவிட்டு தனது குடும்பத்தோடு கடற்கரையில் இறங்கி, தண்ணீரை மொண்டு தனது மகன்களின் தலையில் தெளிக்கும் போது "ஹொ" வென பாய்ந்து வந்த ஆழிப் பேரலை அவரது இரு மகன்கள், மனைவி, மாமியார் என்று மொத்த குடுப்பத்தையும் சுருட்டிக் கொண்டு போனது. அதில் தப்பிய அவர் இன்றும் நடை பினமாக வாழ்த்துக் கொண்டு இருக்கிறார். இப்படி குடும்பம் குடும்பமாக காவு வாங்கியது சுனாமி.
அந்தமான் போன்ற தீவுகளில் மக்கள் ஓட... ஓட... அவர்களுக்கு முன்பாக கடல் நீர் 'குமிழ்' விட்டு, 'குமிழ்' விட்டு, ஊரையும் மக்களையும் சூழ்ந்துள்ளது. அங்கும் பாதிப்பு மிக அதிகம். இப்படி சென்ற இடமெல்லாம் தனது கொடிய கரங்களால் மக்களை கொன்று குவித்தது ஆழிப்பேரலை.
புன்னைவனக் காடுகள்
இதில் அதிசயமான ஒரு உண்மை என்னவென்றால், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியை சுனாமி தாக்கவில்லை என்பதுதான். புன்னைவனக் காடுகள் என்றும் மாங்க்ரோ காடுகள் என்று கூறக் கூடிய மரங்கள், கடற்கரை முழுவதும் அந்தப் பகுதியில் ஏக்கரா கணக்கில் இருப்பதுதான். அது மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து அந்த பகுதியை காத்துள்ளது. இத்தகைய புன்னைவனக் காடுகள் கடற்கரை ஓரங்களில் அடர்த்தியாக வளர்ந்து கடல் அரிப்பு மற்றும் கடல் அலைகளை ஊருக்குள் வரவிடாமல் செய்துவிடுகிறது. அதனால் மிகப் பெரிய ஆழிப் பேரலைகலிருந்து இந்த பகுதி முற்றிலுமாக பாதுகாக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் கல்கத்தா மற்றும் தமிழத்தில்தான் இந்தகைய மாங்க்ரோ காடுகள் இருக்கின்றன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு.
இப்படி இயற்கையே நமக்கு பல வழிகளில் நாம் பாதுகப்பாக வாழ வழிசெய்திருக்கின்றன். அத்தகைய பாதுகாப்புகளை நாம் கண்டுணர்ந்து, அதன் மரபுத்தன்மை கெடாமல் நாம் அதனை பாதுகாக்க வேண்டும். கடற்கரை ஓரங்களில் மனித குடியிருப்புகளை அமைப்பதை தவிர்த்து, கடல் ஓரங்களில் சவுக்கு, புன்னை போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் சுனாமி ஊருக்குள் வருவதை தவிர்க்கலாம், குறைந்தபட்சம் நாம் தப்பிப்பதற்காகவாவது நேரம் கிடைக்கும்.
அப்படி நம்மை பீதியில் ஆழ்த்திய 26 டிசம்பர் நாளையும் வருகிறது. இந்த துயர் மிகுந்த நாளில் தனது உறவுகளை இழந்த அந்த ஆத்மாக்களுக்கு தனது ஆழ்ந்த துயரங்களை இந்த கட்டுரையின் வாயிலாக தமிழன் வீதி தெரிவித்துக் கொள்கிறது.
இனியாவது இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நமக்கு நலம் உண்டு.
◦
மீண்டும் வரும் அதே ஞாயறு