செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்

    னிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.


Share/Bookmark

சனி, ஜனவரி 21, 2017

மறுதாம்பு கவிதை நூல் வெளியீடு

சமகால பிரச்னைகளை கவிதைகள் பிரதிபலிக்க வேண்டும்: 

கவிக்கோ அப்துல் ரகுமான்.

 
மறுதாம்பு வெளியீட்டின் போது ... 
இடமிருந்து கவிஞர் வேல் கண்ணன்,   நூல் ஆசிரியர் தோழன் மபா, ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி, தோழன் மபா வின் தந்தை பத்மநாபன், கவிக்கோ அப்துல் ரகுமான், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கல்கி வார இதழ் தலைமை துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா. 

      மகால பிரச்னைகளை பிரதிபலிப்பதாக கவிதைகள் இருக்க வேண்டும் என கவிக்கோ அப்துல் ரகுமான் வலியுறுத்தினார்.


கவிஞர் தோழன் மபா எழுதிய "மறுதாம்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை (02/01/2017) நடைபெற்றது. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து நூலை வெளியிட, கவிக்கோ அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார்.பின்னர் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் பேசியது: இந்தக் காலத்தில் சமுதாயத்தில் நடக்கும் அவலம், உண்மைகளைப் பேச யாரும் தயாராக இல்லை என்ற ஆதங்கம் பலரிடையே இருக்கிறது. எது உண்மை என்று தெரியாத நிலையிலேயே பலர் இருக்கிறார்கள். இது பற்றிப் பேசுகையில் "பெரியவங்க பொய் சொன்னா பேப்பரில போடுறான். சின்னவங்க உண்மை சொன்னா ஜெயிலுக்குள்ள போடுறான்' என்று கொத்தமங்கலம் சுப்பு எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


தான் எழுதிய நூலுக்கு "மறுதாம்பூ' என்ற அற்புதமான பெயரை வைத்த தோழன் மபா தனது மனைவி, தந்தை ஆகியோரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து கௌரவித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் இன்று அரிதாகி வருகின்றன. மபா எழுதிய கவிதைகள் எதுவுமே மனைவியை வைத்துக் கொண்டு சொல்வதற்கு தயங்கும் கவிதைகள் இல்லை. ஒரு படைப்பு அப்படித்தான் இருக்க வேண்டும்.


சமுதாய நோக்கம் அவசியம்: கவிதைகளில் நவீனத்துவம் எப்போதோ வந்து விட்டது. சிலர் அறியாமையின் காரணமாக "வசனத்தை ஒடித்துப் போட்டால் புதுக்கவிதை' என்கிறார்கள். அது தவறு. "ஒடித்துப் போடப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதுதான் புதுக்கவிதை'. பொதுவாக கவிதைகளில் தற்போதைய பிரச்னைகளைப் பற்றி சொல்வது அவசியம். சமகாலப் பிரச்னைகளை பிரதிபலிக்கும் கவிதைகள்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.


வீழாதததற்கு விருது வழங்க வேண்டும்: புயலில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்க்கும்போது எனக்கு அழ வேண்டும்போல் தோன்றியது. அதனால் இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு "வெறித்தனமாக வீசிய புயலோடு வீராவேசமாக போராடி நின்று கொண்டிருக்கும் மரங்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும்' என்று ஒரு கவிதையை எழுதிவிட்டுத்தான் வந்தேன். இன்றைய சூழலில் தென்றலைக் காட்டிலும் புயலைப் பற்றிக் கூறுவதே சரியாக இருக்கும். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தாத கருத்துகள் இல்லாவிட்டால் கவிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை.
அந்தக் காலத்தில் தீபாவளி மலரில் மட்டும்தான் கவிதைகள் வெளியாகும். இப்போது கவிதைகள் வெளியாகாத செய்தித்தாள்களே இல்லை. கவிஞர்கள் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதட்டும். அவற்றில் ஒரு கவிதையாவது சமூகத்துக்குப் பயன்பட்டாலே போதுமானது. அன்றாடம் நிகழும் வீட்டுப் பிரச்னைகள், சமூக அவலங்கள் குறித்து ஒருவர் எழுதினால் அவரையும் அவர் கவிதையையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் நாம் எழுத்துக்கு கொடுக்கும் மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர்.


முன்னதாக கல்கி வார இதழ் தலைமை உதவி ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அப்போது மறுதாம்பு கவிதை நூலில் இடம்பெற்றுள்ள சமுதாய சிந்தனைகள் கொண்ட கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கினர்.


விழாவில் ரஹமத் பதிப்பக உரிமையாளர் முஸ்தபா, கவிஞர் வேல்கண்ணன், மபாவின் தந்தை கே.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 

 தினமணி ஆசிரியர் கி.வைத்திய நாதன் உரை:

https://www.youtube.com/watch?v=fbs4ToqQARo

கல்கி வார இதழ் துணை ஆசிரியர் கவிஞர் அமிர்தம் சூர்யா உரை:

 https://www.youtube.com/watch?v=CYBLRKvnd-8&t=21s

கவிஞர் சுகந்தி நாச்சியாள் உரை

https://www.youtube.com/watch?v=ZeHCHHKlIdY 

மனைவியிடம் எதையும் மறைக்ககூடாது - கவிக்கோ அப்துல் ரகுமான் நகைச்சுவை பேச்சு | Kaviko Abdul Rahman

https://www.youtube.com/watch?v=3lgUvNoTZCcShare/Bookmark

வியாழன், டிசம்பர் 29, 2016

மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

       திசையறியாது திகைத்து நின்றவனுக்கு வழி காட்ட எத்தனையோ நல் உள்ளங்கள். சிக்கிக்கொண்ட ஆற்றுச் சுழலில் அதன் போக்குணர்ந்து போராடுபவனுக்கு நம்பிக்கையாய் கரை தெரிவதுபோல் இதோ 'மறுதாம்பு' எனது கவிதை நூல் வெளிவரத் தயாராக இருக்கிறது.


அழைப்பிதழ்

வரும் ஜனவரி இரண்டாம் தேதி மாலை 6 மணிக்கு கவிக்கோ மன்றத்தில்

 மறுதாம்பு புத்தக வெளியீட்டு விழா

தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள் தலைமையேற்று நூலை வெளியீடுகிறார்கள்.

கவிதைகளின் சக்ரவர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சிறப்புரை.

நண்பர் அமிதம் சூர்யா மற்றும் சுகந்தி நாச்சியாள் வாழ்த்துரை.

நண்பர் வேல் கண்ணன் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

அனைவரும் வருக!. உங்கள் வருகையால்தான் இவ் விழா மேலும்
 சிறப்படையும்!.

உங்களுக்காக Iam waiting

#மறுதாம்பு

Share/Bookmark

செவ்வாய், நவம்பர் 22, 2016

எனது முதல் கவிதை தொகுப்பு 'மறுதாம்பு'.
மறுதாம்பு  கவிதை தொகுப்பு    


         டந்த ஞாயிறு  அன்று தினமணியில் (13.11.2016)  'இந்த வாரம்' பகுதில், வெளிவரப் போகும் எனது 'மறுதாம்பு' கவிதை தொகுப்பிலிருந்து 'நந்தி' என்ற கவிதையை வெளியீட்டு எனது கவிதை தொகுப்பை முன் மொழிந்திருக்கின்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

என்றோ தொடங்கப்பட்ட எனது பயணம், இன்றுதான் ஒரு இலக்கை அடைந்திருக்கிறது.
எனது கவிதை தொகுப்பு 'மறுதாம்பு' வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 6 மாதமாகிவிட்டது. இதோ முடிவுற்று புத்தகமாய் வெளிவர இருக்கின்றது. அச்சு வேலை முடிந்தப்பின் கவிதை புத்தகத்தைப் பற்றி முக நூலில் அறிமுகம் செய்யலாம் என்று இருந்தேன், ஆனால் அதற்கு முன்னர் தினமணியே எனது கவிதை தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்திருப்பது, நான் பெற்ற பேறு!.
தினமணியில்  வந்த அறிமுகம் 
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை சொல்லக் கூடிய மிகச் சிறிய, மிக எளிமையான கவிதைதான் 'நந்தி'. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குறையத் தொடங்கினால், அணையிலிருக்கும் நந்திச் சிலை வெளியே தெரிய ஆரம்பிக்கும். நந்தி சிலை வெளிய தெரிய ஆரம்பித்தால், காவிரி ஆற்றை நம்பி வாழும் விவசாயி கவலைக் கொள்ள ஆரம்பித்துவிடுவான். இதை பின்னணியாக வைத்தே இக் கவிதையை எழுதினேன்.


நந்தி


மேட்டூரில்

நந்தி தெரிந்தால்

கீழையூரில் 
எங்கள் 
தொந்தி காயும்.


                                      ()()()
ஜனவரி சென்னை 

புத்தகக் காட்சிக்கு ரிலீஸ்!. 

      

     தில் கீழையூர் என்ற ஊர், காவிரி ஆறு கடல் புகும் பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது. மறுதாம்பு வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வெளிவரயிருக்கிறது. இக்கவிதை தொகுப்பை 'மேய்ச்சல் நிலம்' பதிப்பகம் வெளியீடுகிறது.

அதென்ன 'மறுதாம்பு' என்று நீங்கள் கேட்கலாம்?. அறுவடை முடிந்தப் பின்னரும், மீண்டும் கிளைத்து எழும் நெற்கதிரே மறுதாம்பு. அதையே எனது கவிதைப் புத்தகத்திற்கு பெயராக வைத்துவிட்டேன். அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நமக்கு இதுவே சாஸ்வதம்!.

தினமணி ஆசிரியருக்கு எனது நன்றியும் அன்பும்!.
அன்புடன் 
தோழன் மபா

Share/Bookmark