ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

சென்னையில் கவர்ந்து இழுக்கும் யுத்த கல்லறைகள். (படங்கள் இணைப்பு)

  



           சென்னையில் கிண்டியிலிருந்து போரூர் செல்லும் வழியில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில்  வலது புறம் இருக்கிறது போர் வீரர்கள் நினைவு கல்லறைகள்.  பிரமாண்டமான புல் தரையில் அழகியலோடு வரிசையாக நடப்பட்டு  காலத்தை வென்று நிற்கும் இந்தக் கல்லறைகள் பார்ப்பவர்களை என்றுமே கவர்ந்து இழுத்துவிடும்?!.

'என்ன கல்லறை கவர்ந்து இழுத்துவிடுமா...?'  என்று பயத்தோடு வினா எழுப்ப வேண்டாம்.  அவை கல்லறையானலும் காவியங்கள். 



        அந்த வழியில் செல்லும் போதெல்லாம், அங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் 'அனுமதி கிடைக்காது' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இருந்தேன்.  ஒரு மதியம் வேளையில் 'பைக்கை' நிறுத்தி தூரத்தில் புல் தரையை பராமரித்துக் கொண்டு இருந்தவரைப் பார்த்து "உள்ளே வரலாமா..?" என்றேன். 

'இங்கு உயிரோடு வரக் கூடாது...!'  என்று சொல்லி விடுவாரோ என்ற பயம் வேறு எனக்கு!.  'கேட்டை திறந்துக் கொண்டு வா'  என்று சைகையில் காண்பித்தார். நுழைவு வாயிலில் இருந்த அந்த சின்ன கேட்டை திறக்க முடியவில்லை. ஏதோ பாரின் கதவு போல இருக்கு...நம்ம கை வைத்தியத்திறகு அது போடா என்றது!.  நான் நோண்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அவரே வந்து திறந்துவிட்டார்.  கொஞ்சம் வித்தியாசமான தாழ்பாள்தான் அது.
   
'சாம்ராஜ்ஜிய யுத்த கல்லறைகள்' 

'மெட்ராஸ் வார் சிமிண்ட்ரி'  என்று அழைக்கப்படும் 'சாம்ராஜ்ஜிய யுத்த கல்லறைகள்' 1952ம் வருடம் கட்டப்பட்டது.   இரண்டாம் உலக போரின் போது, இந்தியாவில் பல்வேறு இடங்களில்  உயிர் நீத்த வீரர்களின் நினைவாக அவர்களது பெயர் பொரிக்கப்பட்ட கல்லறைகள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன. 
   
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த காலனி நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பு தனது  Commonwealth War Graves Commission (CWGC)  மூலமாக இந்திய அரசின் துணைக் கொண்டு இதை பராமரித்து வருகிறது.  1939 லிருந்து 1945 வரை இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு வீரமுடன் போரிட்டு மடிந்த அந்த வீரர்களின் நினைவுகளைத் தாங்கி நிற்கிறது இந்த சாம்ராஜ்ஜிய யுத்த கல்லறைகள்.
கொடிப் பந்தல்

    



இங்கு 857 கல்லறைகள் உள்ளன. இதில் இங்கிலாந்து மட்டுமல்லாமல் கனடா, மேற்கு ஆப்ரிக்கா, பிரிவினைக்கு முந்தைய இந்தியா, நியுஸ்லாந்து, பர்மா, ஆஸ்திரேலியா, போலந்து,  ரூடேஷ்யா மற்றும் மலாயா நாட்டை சார்ந்த வீரர்களின் கல்லறைகள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன.

கல்லறைகள் வரிசைக்கிரமமாக  ஒரு அழகியலோடு  நேர்த்தியாக நடப்பட்டுள்ளன. எங்கிருந்து பார்த்தாலும் எல்லா கல்லறைகளும் ஒரு நேர் கோட்டில் வருவது போல் அமைத்துள்ளனர். அழகிய புல் வெளிகள், மலர் வளைய வலைவுகள், நிழல் தரும் மரங்கள், ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள் என்று பார்க்கும் இடமெல்லாம் அழகு நிறைந்திருக்கிறது. ஏதோ வெளி நாட்டில் இருப்பது போன்ற ஒரு பிரமையை அந்த இடம் ஏற்படுத்திவிடுகிறது.
   

படம் எடுத்துக் கொண்டு இருந்தபோது...தூரத்தில் மர நிழலில் மூன்று பெண்கள் அமர்ந்து ஹாயாக பேசிக் கொண்டு இருந்தார்கள். "கல்லுரி பெண்களா என்று கேட்டதற்கு, அருகில் இருந்த நிறுவனத்தைக் காட்டி கம்பெனி ஸ்டாப் என்றார்கள்.  நல்லதுதான். பெண்களுக்கு பயம் விட்டுபோச்சு!. 


முதலாம் உலக போர்.

முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் பெயர்கள் செதுக்கப்பட்ட  சுவர்.
அதோடு இங்கு இன்னோரு குறிப்பிடத்தக்க  ஒரு விஷயமும் உண்டு.  முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் நினைவிடம் இருப்பதுதான். இந்த நினைவிடத்தின்  கடைசியில் மிகப் பெரிய ஒரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது, அதில் 1914லிருந்து 1918 வரை முதலாம் உலகம் போரில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உயிர் நீத்த சுமார் 1000 இராணுவத்தினர் மற்றும் சிவில் வீரர்களின் பெயர்கள் இச் சுவற்றில் பொரிக்கப்பட்டுள்ளன.  அந்த நினைவுச் சுவர் வீரர்களின் பெயர்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது.
   

21  வயது வீரரின் கல்லறை


அரேபிய மொழியில் எழுதப்பட்ட கல்லறை

19 வயது சொஹெனின்  கல்லறை
ஒவ்வொரு வருடமும் உலக சமாதான  (Armistice Day)  நாளான நவம்பர் 11ம் தேதி உலக ஒற்றுமைக்காக சண்டையிட்டு மடிந்த அந்த வீரர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அவர்களது ஆன்மா சாந்தியடைய  பிரார்த்தனை செய்யப்படுகிறது.   இங்கு பார்வையாளர்கள் அனுமதி என்பது  திங்கள் முதல் சனி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (பொது அல்லது உள்ளுர் விடுமுறை நீங்களாக) அனுமதிக்கப்படுகிறது.



நினைவிடத்தை விட்டு வெளியே வந்தால் ஹோவென பெரும் இரைச்சளுடன் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வாகனங்கள்  நகர்ந்துக் கொண்டு இருக்கிறது. ஒரு 8  பத்து வருடங்களுக்கு முன்னெல்லாம் இந்த சாலையில் ஆல் நட மாட்டமும் வாகன போக்குவரத்தும் அவ்வளவாக இருக்காது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த சாலை முழுவதும் ஆக்ரமித்துள்ளன. அதனால் எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படுகிறது.




அன்று சென்னை நகரத்தின் வெளியே என்று நினைத்து  இந்த நினைவிடத்தை கட்டிவிட்டார்கள், ஆனால் இன்று நகரத்தின் முக்கியமான வளர்ந்து வரும் இடத்தில் இக் கல்லறைகள் மாட்டிக் கொண்டுள்ளன.   நகரமயமாக்களின் விளைவாக நகரத்தின் பாரம்பரிய அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிறது. மனிதனின் இடத் தேவை என்ற அகோரப் பசிக்கு இயற்கையே ஆங்காங்கே பலியாகிக் கொண்டுதான்  இருக்கிறது. உயிர் வாழ மனிதன் பரப்பரப்பாக ஒடிக்கொண்டு இருக்க... இறந்தவர்களின் இக் கல்லறைகள் இன்னும் எவ்வளவு நாட்கள்  இங்கு உயிருடன் இருக்கும் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

- தோழன் மபா.
புகைப்படங்கள்: எனது காமிரா மொபைல் Nokia N8.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...