வியாழன், ஜூன் 26, 2014

"முதல்ல லீவு போடு, அப்புறமா கட்டு போடு".



           புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் பாலம் கடந்து அலுவலகம் போக....வேப்பேரிக்கு வலதுபுறம் திரும்பும் போது சொற்பமாக தேங்கி இருந்த தண்ணீரில் பைக் ஸ்கிட்டாக.... அப்படியே வழுக்கி நடு ரோட்டில் நடு நாயகமாக விழுந்தேன். நல்ல வேளை வண்டி எதுவும் வரவில்லை என்று நினைத்த  வேளையில்...தண்ணி லாரி என்னை நோக்கி வந்தது.

மோதி செத்துவிடுவோம் என்று எனக்கு தோன்றவில்லை, அடிபட்டால் அந்த இம்சையை தாங்கவேண்டுமே என்ற எண்ணம்தான் அந்த கணத்தில் எனக்கு தோன்றியது. இப்படி நினைக்கும் போதே தண்ணி லாரி என் பைக்கில் மோதி நிற்க.....சரியாக பைக்குக்கும் லாரி பம்பருக்கும் இடையில் எனது இடது கால் மாட்டிக் கொண்டது. (ரொம்ப நாளா எனக்கு பம்பர் அடிக்குமுன்னு நெனைச்சிருந்தேன் அது இதுதான் போல...?!). 

'யாரு பெத்த புள்ளையோ...?' என்று மற்ற வாகன ஓட்டிகள் உச்சு கொட்டுவதற்கு முன்பே காலை லாரி பம்பரிலிருந்து வெடுக்கென்று வினாடி நேரத்தில் விடுவித்துக் கொண்டு தாவி குதித்துவிட்டேன். அதற்குள் கூட்டம் சேர....ஆளுக்காள் லாரி டிரைவரை வாய்க்கு வந்தபடி பாராட்டினார்கள்.  "நல்ல வேளை பிரேக் போட்டு நிறுத்திட்டப்பா", இல்லெனா இந்த ஆளு இம்மா நேரம் பூட்ட கேஸாயிருப்பான்' என்று.

சென்னையில ஓடுற தண்ணி லாரிக்கு பிடிக்காத வார்த்தை 'பிரேக்'. நல்ல வேளை அன்று அந்த லாரிக்கு அது பிடித்து இருந்தது!.


வெடுக்கென்று இழுத்ததில் கால் புசு புசுவென்று வீங்கிவிட்டது. ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. வலது காலில் கல் குத்தி ரத்தம் பேண்ட் வழியோடி ஷூவை நனைத்துக் கொண்டு இருந்தது. நல்ல வேளையாக சக அலுவலக தோழர்கள் ராஜாவும் அருணும் பின்னடியே வந்து முன்னாடி வந்துவிட்டார்கள். பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, என்னை 'டோ' பண்ணிக்கொண்டு போய் டவுண்டனில் இருந்த கிளினிக்கில் சேர்ந்து முதலுதவினார்கள்.

காலில் கட்டை போட்டுக்கொண்டு, பிற்பாடு ஒரு கால் பண்ணி, கால் டாக்ஸியை பிடித்து, வீடு வந்து சேர்ந்தால் மனைவி கண்ணை கசக்கினாள்.  அடுத்த நாள் அம்பத்தூரில் இருக்கும் செந்தில்குமார் எலும்பு டாக்டரிடம் போனேன். கிரேஸி மோகன் போல நோயாளர்களிடம் நேயமாய் கதை பேசிக்கொண்டு இருந்தார்.

"டாக்டர் ஏற்கனவே உங்களிடம் வந்து இருக்கிறேன்" என்றேன்.

"எலும்பு முறிவுன்னு நினைச்சவுடனே என் ஞாபகம் வருதுன்னா, நான் நல்லா மார்கெட்டிங் பண்ணி இருக்கிறேன்னு" அர்த்தம் என்றார்.

அடுத்த முறை கறி கடையில் நல்லி எலும்பு வாங்குறப்ப இவர் ஞாபகம் வராம இருக்க வேண்டும்!?.


எக்ஸ்ரேயை லைட்டடிச்சி பார்த்தவர் "உங்கள் காலில் 'சிப் கிராக்' ஆகியிருக்கு" என்றார் கண்ணடித்துக் கொண்டே....!.  "காலில் காயம் ஆறிய பிறகு 'கிரிப் பேண்டேஜ்' போடலாம்.  அப்படி இப்படி எப்படியும் காலை அசைக்கக் கூடாது. காலை தொங்கப் போடாம நீட்ட வாக்கில்தான் வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் வலி இருக்கும்" என்றார்.

"எவ்வளவு செலவு ஆகும்? டாக்டர்ன்னு கேக்கிறதுக்குப் பதிலா எத்தனை நாளாகும்? டாக்டர்"ன்னு கேட்டேன். "குறைந்தது மூனு வாரம் ஆகும்" என்றார். "அவ்வளவு நாள் லீவு கிடைக்காது டாக்டர்" அப்படின்னேன்.

கிராக்குக்கு கிராக்குத்தனமா பேசாதிங்க என்பது போல் பார்த்தவர், முதல்ல லீவு போடுங்க அப்புறமா காலில் கட்டு போடலாம் என்றார் பலமாக சிரித்துக் கொண்டே!.

இந்த வலியைவிட தினமணி இலக்கியத் திருவிழாவில் கலந்துக் கொள்ள முடியாததே எனக்கு பெரும் 'வலி'யைத் தந்தது.

-தோழன் மபா.
19/06/2014

----------------------- 

திங்கள், ஜூன் 23, 2014

கரைபுரண்டோடும் காவிரி'-கவின் மிகு காட்சிகள். வீடியோ இணைப்பு



ஒரு கன்னி முயற்சி. சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எங்களூர் காவிரி ஆற்றை படம் எடுத்திருந்தேன். அதை ஒரு இனிய இசையுடன் கூடிய வீடியோ ஸ்லைடாக மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் விமசர்னம் முக்கியம்.

இனிமையான இசை. மனதை வருடும் ஆற்றாங்கரை. காவிரியின் அழகு நமது மனதை மயக்கும்.
   


வெள்ளி, ஜூன் 20, 2014

தினமணி நடத்தும் இரண்டு நாள் இலக்கியத் திருவிழா!. சென்னையில் நாளை தொடங்குகிறது!.


அப்துல் கலாம் தொடங்கி வைக்கிறார்!.

                தமிழ் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் தினமணி நாளிதழ்,  தமிழ் மீதான தனது காதலை வெளிப்படுத்த எப்போதும் தவறியதில்லை. தமிழ் மொழிக்கான தனது வழமைகளிலிருந்து என்றுமே அது பின் வாங்கியதில்லை. தலையங்கம், தினம்தோறும் சமூகம்/ இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், துணை கட்டுரைகள்,  ஞாயிறு தோறும் ஒரு பக்கம் தமிழ் மணி, செம்மொழி சிறப்பு மலர், தில்லியில் தமிழ் இலக்கிய மாநாடு என்று முன்னெப்போதையும் விட இப்போது  தமிழ் மீது பித்துப் பிடித்துக் கிடக்கிறது தினமணி நாளிதழ்.

வரும் 21 (சனிக் கிழமை) மற்றும் 22ம் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பிரமாண்டமான தமிழ் இலக்கிய திருவிழாவினை தினமணி நடத்துகிறது. 32 அறிஞர்கள் பங்கேற்கும் 8 அமர்வுகளில் ஆய்வு அரங்கம், இலக்கிய பேருரைகள், எழுத்தாளர்களின் நினைவலைகள், அரசியல் தலைவர்களின் இலக்கிய பேச்சு, என்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நல்லதொரு தமிழ் இலக்கிய திருவிழா தொடங்க இருக்கிறது.

முதல் நாள் (21/06/2014)
முதல் அமர்வு

'இன்றைய தேவையும் இலக்கியமும்'          
        தலைமை: அவ்வை நடராஜன்.       
        பேராளர்கள்: வீ,அரசு,எஸ்.ராமகிருஷ்ணன், நா.கண்ணன் (மலேஷியா).


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: பழ.நெடுமாறன்.

இரண்டாவது அமர்வு

 'காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்'.
         தலைமை: ஞானராஜசேகரன்,
        பேராளர்கள்: எஸ்.பி.முத்துராமன், கே.பாரதி, ரோகிணி.


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: திருச்சி சிவா.


மூன்றாவது அமர்வு

 'தகவல் ஊடகத்தில் தமிழ்'
              தலைமை: மாலன்.
             பேராளர்கள்; ஆ.இரா,வேங்கடாசலபதி,சுபாஷிணி ட்ரம்மல் (ஜெர்மனி),
             'காலச்சுவடு' கண்ணன்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: தமிழருவி மணியன்.

நான்காவது அமர்வு
மொழியும் பெயர்ப்பும்'
             தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்.
             பேராளர்கள்: நா.குறிஞ்சி வேலன், கா. செல்லப்பன், 'வயல்' சி. மோகன்.

கலை விருந்து: ஜாஹிர் உசேனின் 'தசாவதாரம்' நாட்டிய நாடகம்.


இரண்டாம் நாள் (22/06/2014)

ஐந்தாவது அமர்வு
 'சமயமும் தமிழும்'.
                  தலைமை: சுதா சேஷய்யன். 
     பேராளர்கள்: அரங்க. ராமலிங்கம், திருப்பூர் கிருஷ்ணன், சங்கர. சீத்தாராமன்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: பழ.கருப்பையா.

ஆறாவது அமர்வு
 'வாசிப்பும் பழக்கமும்'
   தலைமை: ம.இராசேந்திரன்.
   பேராளர்கள்: சு.வெங்கடேசன், நா.முத்துக்குமார், பாரதி.கிருஷ்ணகுமார்.

'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: திருமாவளவன்
.

ஏழாவது அமர்வு

    'வேர்களைத் தேடி-இலக்கியம்'.     
தலைமை: இ.சுந்தரமூர்த்தி. 
பேராளர்கள்: கி.நாச்சிமுத்து, மு.மேத்தா, க.நெடுஞ்செழியன்.


'என்னை செதுக்கிய இலக்கியம்'
சிறப்புரை: வைகோ.

எட்டாவது அமர்வு

 'வேர்களைத் தேடி- கலைகள்'.    
 தலைமை: இரா.நாகசாமி.
பேராளர்கள்: ட்ராட்ஸ்கி மருது, சே.இராமானுஜம், பி.எம்.சுந்தரம்.


மாலை 6 -7.30 மணிக்கு

சொர்ணமால்யா கணேஷ் குழுவினரின் 'ராஜராஜன் நாட்டிய நாடகம்'
.


தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் தொடங்கி வைத்து சிறப்புறை ஆற்றுகிறார்.  விழா நிறைவுரையை ஆற்றுகிறார் தமிழக ஆளுனர் ரோசைய்யா. இரண்டு நாள் விழா நிகழ்ச்சிகளை தினமணி இணையதளத்தில் நேரலையாகவும்  நாம் காணலாம். தொடக்க விழாவில் இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் நாதஸ்வர நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதோடு பபாபிசியின் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் விற்பனையும் விழா அரங்கில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு!.

அனைவரும் வருக! தமிழ் அமுதம் பருக!!.

தொடர்புக்கு:
98405 98008, 98411 43048.
98404 54062, 99416 14411.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...