சனி, ஜனவரி 31, 2009

'எந்த மட்டை எந்த குட்டையில் விழுமோ?'

ஆயிற்று ! ஒரு மாதமாகிவிட்டது. தமிழன் வீதியில் பதிந்து... முந்தய பதிவிற்கும் இந்த பதிவிற்கும் ஒரு நீண்ட இடைவெளி. காலையில் 6.20 க்கு வீட்டை விட்டு புறப்பட்டால் இரவு ஒன்பது மணியாகி விடுகிறது வீடு வந்து சேர.

அண்ணா நுற்றாண்டை முன்னிட்டு தினமணி நாளிதழ் ஒரு சிறப்பு மலர் ஒன்றை வெளி கொண்டுவர இருக்கிறது. அதற்கான பணிகள் மற்றும் விளம்பரம் தொடர்பாக ஊர் ஊரக அலையவேண்டி இருக்கிறது. நேரம் இதற்கே செலவிடப் படுவதால், சொந்த வேலைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

இதற்கிடையில் தமிழகத்தில் நிறைய மாறுதல்கள். புரட்சி தமிழன் முத்துகுமாரின் மரணத்திற்கு பிறகு காட்சிகள் நிறையவே மாறி இருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கையில்,தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டன பொதுக் கூட்டம், உண்ணா நிலை என்று பல்வேறு போராட்டங்களை அறிவித்தாலும், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு. நிச்சயம், இது வரும் பாராளும் மன்ற தேர்தலில் எதிரொலிக்கும். இனி காங்கிரசால் கனவில் கூட தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.

இலங்கை தமிழர்க்காக போராடுவதில் நீ பெரியவனா இல்லை நான் பெரியவனா என்று தமிழகத்தில் பல பரீட்சை நடந்துக் கொண்டு இருக்கிறது. இதில் அமைதியாக இருந்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார் செல்வி ஜெயலலிதா.

ராமதாசின் நியாயமான கேள்விகளுக்கு 'அண்ணன் இப்போ சாக மாட்டேன், திண்ணை இப்போ காலியாகது', என்கிறார் கருணாநிதி. இந்த அறிவிலிகளை என்ன வென்று சொல்வது. எல்லாவற்றிலும் தனது சுய லாபத்தை பார்க்கும் சுயநல அரசியல்வாதிகள்.

ஈழ தமிழருக்கு ஆதரவான போராட்டங்களில் பா. ம. கா., வி. சி., ம.தி.மு.கா., போன்ற கட்சிகள் பல லகரங்களை செலவிட்டுள்ளன. தி. மு. கா., வும் தன் பங்கு க்கு ஒரு பக்க விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. இல்லன ஒட்டு போயிடுமே!.

இந்த நிகழ்வுகளில் ப.ஜா.கா., வும் வலை விரித்து காத்து இருக்கிறது.

'எந்த மட்டை எந்த குட்டையில் விழுமோ?'

புளிய மரமும் நானும்...

புளிய மரமும் நானும்...
-தோழன் மபா
எனது பால்யகால வாழ்வில் புளியமரதிற்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. என்ன இவன் பேயாக இருந்திருப்பானா என்று கேட்காதீர்கள்? வைக்கம் முகமது பஷிர் சொல்வது போல் எனது 'பால்யகால சகி' எங்கள் வீட்டு புளிய மரம்.
திருவாலங்காட்டில் ரயிலடி தாண்டி நடுத் தெருவில் எஙகள் வீடு. ஓடு வேயிந்த இரண்டு சுற்று உள்ள வீடு. ஒரு பக்கம் எஙகள் வீடு, அடுத்தப் பக்கம் எஙகள் பெரியண்ணன் வீடு. வீட்டின் கொல்லைப் புறத்தில் அந்த புளிய மரம். தப்பு ...தப்பு ...புளிய மரம் இல்லை, புளிய மரங்கள். இரண்டு புளிய மரங்கள் காதலன் காதலி போல் பின்னி பிணைந்து இருக்கும். அந்தளவிற்கு நெருக்கம்.

தாழ்வாக இருக்கும் கிளையில் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தொங்குனவாகில் ஏறினால் சர சர வென்று உச்சி மரத்திற்கு ஏறிவிடலாம். அந்தளவிற்கு எனக்கும் என் புளியமரதிர்க்கும் இணக்கம் உண்டு. இரு மரங்கள் இணைந்தே இருப்பதால் பாதுகாப்பைப் பற்றி பயம் இல்லை. என் வயது ஒத்த பசங்களுக்கு நான் தான் தலைவன் என்பதால், என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். கபடி தான் எங்களது பிரதான விளையாட்டு. புளிய மரத்திற்கு கீழே தான் நாங்கள் கபடி விளையாடும் இடம் இருப்பதால், புளிய மரத்தில் வவ்வால் தொங்குவது போல் எப்போதும் நாங்கள் தொங்கிக் கொண்டு இருப்போம் அல்லது மரத்தில் தூங்கிக் கொண்டு இருப்போம். அந்தளவிற்கு புளிய மரத்தை எங்களது வசதிக்காக மாற்றி இருந்தோம்.

புளிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கும் என்று சொன்னேன் அல்லவா ? அந்த இடம் தான் புளிய மரத்தின் மடி. மிகவும் பாதுகாப்பான இடம். ஒரு மாதிரி கிண்ணம் போல் இருக்கும், நாம் மிக எளிதாக பொருந்தி அமரலாம். கால்களை மரத்தின் இருப் பக்கமும் போட்டுக் கொண்டால் மிக பாதுகாப்பாக அமர்து இயற்கையின் அந்த சுகமான தாலாட்டை அனுபவிக்கலாம். மரம் மிக மெதுவாக அசைந்து ஆடும். புளிய மரத்தின் இலைகள் மிக சிறியது என்பதால், சூரிய கதிர்கள் மிக அழகாக ஊடுரிவி நம் மேல் இதமாக படும்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் 'தாய்லந்து' நாட்டின் 'தாய் எக்ஸ்போ ' கண் காட்சி அண்மையில் நடைப்பெற்றது. அங்கு அவர்களது பாரம்பரியமான தின் பண்டம் ஒன்று வைத்து இருந்தார்கள், அது என்ன தெரியுமா? புளியம் பழத்தின் மேல் சீனி தூவி அழகான பிளாஸ்டிக் கண்டைனரில் அடுக்கி இருந்தார்கள். மக்கள் மிக ரசித்து, ருசித்தார்கள் . நானும் வாங்கலாம் என்று போனேன், பிறகு ஒரு எண்ணம் வந்தது 'நமக்கு தெரியாத புளியம் பழமவென்று, வாங்காமல் தெரிம்பினேன். இல்லத்திற்கு வந்த பிறகுதான் வாங்காதது பெரும் வருத்தமாக இருந்தது.

போகட்டும் கதைக்கு வருவோம்...

புளிய மரத்தில் நான், குண்டுமணி, ரமேஷ், கலியபெருமாள், லோகநாதன் என்று ஒரு பட்டாளமே விளையாடிக் கொண்டு இருப்போம். மரத்தில் படுத்து தூங்க வசதியா ஒரு பரண் அமைத்து இருந்தேன். மூங்கில் தட்டியை, இரு மரத்தின் கிளைகள் வரும் இடத்தில் படுப்பதிற்கு வசதியாக அமைத்து, அதன் மேல் பெட் சீட், தலகாணி எல்லாம் வைத்து பாதுகாப்பாக அங்கு தூங்கலாம். அந்த அளவிற்கு யனது படுக்கையை தயார் செய்து இருந்தேன். அங்கு ரேடியோ வைக்க, முகம் பார்க்கும் கண்ணாடி மாட்ட என்று, என்னால் முடிந்ததை எல்லாம் மேலே கொண்டு வைத்து இருந்தேன்.
அங்கு எப்போதும் ஒரு சுவையான பானம் செய்வோம். பழுக்காத சதைப் பிடிப்பான, செம் புளியம் பழத்தை ஒரு பாத்திரத்தில் கரைத்து கொள்வோம். கூடவே நாட்டுசர்க்கரை , உப்பு, அரைத்த மிளகாய் தூள் இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்தால், புளிப்பு, இனிப்பு, கார்ப்பு என்று பலவித சுவை கொண்ட நீங்கள் விரும்பும் ஒரு பானம் கிடைக்கும். இதை நீங்கள் குடிக்கும் சமயம் நிச்சயம் உங்கள் ஒரு கண்ணை மூடுவீர்கள். புளிப்பின் காரணமாக...
அப்படிதான் ஒரு நாள்....
-தொடரும்

ஞாயிறு, ஜனவரி 25, 2009

பகட்டிலிருந்து பட்டினிக்கு.....

எனது நண்பன் அஸ்ரி வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிகின்றான். ஆனந்த விகடனில் வந்த கட்டுரையை எனக்கு ( ஈமெயில் ) அனுப்பி இருந்தான். படிக்க படிக்க மனசு வலித்தது. யாரோட (?) போதைக்கோ இவர்களை ஊறுகாயாக பயன்படுத்தி விட்டார்கள்.


சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!

'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள் பாதிக்கப்படும்!' என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது!

விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம்.

அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.



''நான் சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம் ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..'' என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்கு வேலை இல்லை.

''வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமே கம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது. மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டு இருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு 'இனிமே கம்பெனியை நடத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள் என்னை பிக்கப் பண்ண கார் வரல..

வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல. என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது'' - கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.

வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலை செய்கிற கல்பனா. ''நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சு வேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலை செய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.

கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாது இல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, 'ஸ்டார் பர்ஃபார்மரா' ('பிரமாதமாக வேலை செய்கிறவர்' என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர் மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்'' என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச் சொன்னார்..

''எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியா கெடந்திருக்காங்க ரெண்டு பேரும். 'பேசாம செத்துப் போய்டலாம்போல இருக்கு'னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல.

ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே 'ஜூனியர் மோஸ்ட்' ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு'' என்கிறார் கண்ணீர் மல்க!

கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது.

''எதுவா இருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது'ன்னு ஒரு இ-மெயில் அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ் வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்'' என்றார் ரேவதி.

பெங்களூருவின் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்..

''ஐ.டி. துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன். ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன் இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம் வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..'' என்றவர் நிறுத்தி, ''என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம். பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம் ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம் முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதி கிடைக்கும்!'' என்றார் கலங்கும் கண்களுடன்.

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்..
''தொண்ணூறுகளின் இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர் மக்கள்.

ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.

சமீபத்தில் 'யுனைட்ஸ்' என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்' என்று அறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது'' என்றவர்,

''இருந்தாலும் '2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்'' என்றார்.

இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?

என் கர்சிப் எங்கும் பிரியாணி வாசம்...

வேலை நிமித்தமாக நான்கு நாட்கள் வேலூருக்கு செல்ல நேர்ந்தது. நானும் எங்களது பொது மேலாளரும்வர்த்தகம் ) மகிழுந்தில் சென்றோம். ஆச்சியர் மாளிகைக்கு அருகில் உள்ள 'மவுண்ட் வியூ ' வில் தங்கினோம்.

மிகவும் பரப்பரப்பான நகரம். தமிழகத்தின் நுழைவு வாயில் என்பதால் இங்கு பல மொழி பேசுபவர்கள் அதிகம். கர்நாடகவிலுருந்தும் ஆந்த்ராவிலுமிருந்தும் வர, தமிழகத்தின் வட மேற்கு எல்லையாக வேலூர் திகழ்கிறது. இங்கு வேலூர் ஜெயில், சி எம் சி, இரண்டு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், காவல் துறை பயிற்சி மையம் என்று அதிகார மையம் குவிந்திருப்பதால் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. வாகன விபத்தும் அதிகம். பெங்களூரு மற்றும் சித்தூர் செல்ல நீங்கள் வேலூர் கடந்து தான் செல்லவேண்டு.

நீர் இல்லா ஆறு !
மரம் இல்லா மலை !
மன்னன் இல்லாத கோட்டை!
இதுதான் வேலூரின் சிறப்பு.

இதோடு ' சாமி இல்லா கோவில் ' என்ற சொல்லும் உண்டு. வேலூரின் மையத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரின் சிலை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நகரத்தின் தொடக்கத்தில் உள்ள சத்துவாச்சேரியில் தான் இருந்தது. திப்பு சுல்தான் படையேடுபிளுருந்து மூலவரை காப்பாற்றவே அங்கு உள்ள மக்கள் சிலையை பத்திரப்படுத்தி இருந்தனர். பின்னர் சிலை மீண்டும் கோவிலில் பிரதிழ்டை செயப்பட்டுள்ளது.

அசைவப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்.

நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற ஊர் வேலூர். நவாபுகளின் படையெடுப்பால் இங்கு இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கின்றனர். வேலூர், ஆம்பூர், ஆற்காடு , வாணியம்பாடி என்று முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகம். மிகவும் மரியாதையான மனிதர்கள். இவர்களின் தாக்கத்தால் இந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பிரியாணி ஏக பிரபலம். தமிழ் நாட்டின் எந்த ஒரு இடத்திலாவது இந்த ஊர் பெயர்களில் நிச்சயம் ஒரு பிரியாணிக் கடை இருக்கும். வேலூரில் திரும்பியப் பக்கமெல்லாம் பிரியாணிக் கடைதான்.

மாலை நேரம் தொடங்கிவிட்டால் இங்கு தள்ளு வண்டிகளில் இருந்து கம...கம... innu வாசனை வரும். இங்கு 'சிக்கன் பக்கோடா' வெகு பேமஸ். நகரம் முழுவது தள்ளு வண்டிகளில் சிக்கன் பகோடா, பிஷ் பகோடா, இரா பகோடா யன்று சுடச் சுட பொறித்து தருவார்கள். அந்த மனமும் சுவையும் மொரு... மொருப்பும் வேறு எங்கும் கிடைக்காது. காரணம், அவர்கள் பயன்படுத்தும் மசாலா. வெற்றியின் ரகசியம் அந்த மசாலாவிலும் அதை அவர்கள் பக்குவமாக செய்யிம் விதத்திலும் தான் இருக்கிறது. கூடவே சேமியா வும் தருவார்கள். நம்ம வூர் இடியப்பம் போல் இருக்கும். ரெண்டும் மேளத்தின் , ரெண்டுப் பக்கம் போல நீங்கள் தனி ஆவர்த்தனமே செய்யலாம்.

அம்மா பிரியாணி. வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கிறது. அடாடா...! இலையை மடிக்க மனம் இருக்காது. அப்படி ஒரு ருசி. கடந்த பதினேழு வருடங்களாக பிரியாணி தயாரிப்பில் இருக்கிறார்கள். தரம் மாறாத ருசி, யதர்க்காகவும் தயாரிப்புப் பொருட்களில் கை வைப்பதில்லை. விலை ஏறினாலும் அனைத்துப் பொருட்களையும் குறைக்காமல் போடுகிறார்கள். ( எல்லாம் சொல்லக் கேள்வி) நீங்கள் மதியம் மூன்று மணிக்கு சென்றால் உங்களக்கு வெறும் பிரியாணிதான் கிடைக்கும். அதோடு மாலை ஆறு மணிக்கு மீண்டும் பிரியாணி திருவிழ்தான். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டக் கூடிய தன்மையுடன் இருந்தது அம்மா பிரியாணி.

என் கர்சிப் எங்கும் பிரியாணி வாசம்...

ஸ்ரீ புறம், வேலூரின் கல்வி நிலையங்கள், அம்ரிதிக் காடு, தொரப்படி சிறைச் சாலை, சி எம் சி பற்றி மற்றொரூ பதிவில் சொல்கிறேன்.

-தோழன் மபா

ஞாயிறு, ஜனவரி 18, 2009

இனியும் தினமலரைப் படிக்கத்தான் வேண்டுமா?

"இருப்பது தமிழ் நாடு, தின்பது தமிழன் சோறு "ஆனால் எழுதுவது தமிழனுக்கு எதிராக.

தொடர்ந்து தமிழுக்கும், தமிழ் இன உணவுர்க்கும் எதிராக செய்திகளை வெளியிட்டு வருகிறது தினமலர் நாளிதழ்.

பக்கம் முழுவதும் விளம்பரங்களை அடிக்கி வாசகர்களின் முதல் பக்கத்தை திருடும் தினமலர் நாளிதழ், தமிழ் உணர்வாளர்களை கேலி செய்வது கண்டனத்திற்கு உரியது.

ஷாக், திமிர், அடங்கு, பொறு, பகீர், களி இவையெல்லாம் தினமலர் நாளிதழின் தலைப்புச்செய்திகள். மனநலம் பாதித்த இவர்கள் தமிழ் மொழியை, தொடர்ந்து கேவலப்படித்தி வருகின்றனர். இவர்கள் பாட்டன் வீட்டு மொழியா தமிழ் ? இந்த கழுதைகளுக்கு புரியுமா தமிழின் கற்பூர வாசனை?

கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஈழ விடுதலை புலிகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவருகிறது தினமலர். இலங்கை அரசின் கைக்கூலி கருணாவின் துணைக்கொண்டு கட்டுரைகளை எழுதிவருகிறது. என்னமோ இலங்கை அரசு தமிழர்கள்மேல் ராணுவத்தை ஏவ வில்லை என்பதுபோலும், விடுதலை புலிகள் தான் இலங்கை அரசின் மீது போர்த் தொடுக்கிறார்கள் என்பதுபோல் செய்திகளை பரப்பி வருகிறது தினமலர்.

கருணாவின் தூதுவர்கள், இலங்கை அரசின் நிதி உதவியோடு அந்தச் செய்திகளை வெளியீட முன்னணி நாளிதழ்களை தொடர்புக் கொண்டார்கள். ஆனால் எந்த பத்திரிகையும் செய்தியை வெளியீட மறுத்துவிட்டனர். ஆனால் தினமலர் நாளிதழ் மட்டுமே வெளியிட்டு தான் யார் என்பதை நிருபித்துள்ளது.

இலங்கை அரசின் நிதி உதவியோடுதான் தற்போது தினமலர் நடத்தப்படுகிறது என்ற சந்தேகம் நமக்குள் பலமாக எழுகிறது.


ஒரு மூன்றாம் தர பத்திரிகையாக தன்னை மாற்றி வரும் தினமலர், தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான செய்திகளை நாள் தோறும் வெளியீட்டு வருகிறது. இலங்கை அரசு மேற்கொண்டுஇருக்கும் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த, விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் உண்ணா நோன்பை, கிண்டலடித்து முதல் பக்கத்தில் எழுதுகிறார்கள். எப்படி? ' பொறு' 'இனி களிதான்' இதுதான் ஒரு தேசிய நாடு நிலை நாளேட்டின் (அப்படித் தங்களை கூறிக்கொள்ளும்) தலைப்புச் செய்தி.

பெரிய பெரிய அனுபவஸ்தர்கள் வாழ்ந்த தமிழ் பத்திரிக்கை உலகில் இப்படியும் சில கிறுக்கர்கள்.

ஒருவனைப் பற்றி பக்கம் பக்கமாக அவதூறு செய்திகளை எழுதிவிட்டு, அவர்களிடமே முழுப்பக்கம் விளம்பரம் வாங்கும் மோசடி ஆசாமிகள் தானே இவர்கள்.

'Real Journalism' என்பது இவர்கள் செய்தியில் இருக்காது. எந்த ஒரு செய்திக்கு பின்னும், அவர்களின் தனிப்பட்ட நலன் இருக்கும். சமுதாய நலன் என்பது துளியும் கிடையாது.

தினமலரின் கொள்கை என்ன? என்பதை அவர்களின் வாரமலரைப் பார்த்தாலே புரியும். எதை கலந்து குடித்தால் போதை வரும், எவன் பொண்டாட்டியோடு படுத்தால் அதிகம் சுகம் கிடைக்கும், இதுதானே இருக்கிறது. துத்...தேறி நாய்கள்.

தமிழனுக்கும், தமிழ் இன உணர்வுக்கும் எதிராக எழுதி வரும் தினமலரை இனியும் படிக்கத்தான் வேண்டுமா?

தமிழன் வீதி: புத்தகக் காட்சியில் நான் வாங்கியது என்ன?

தமிழன் வீதி: புத்தகக் காட்சியில் நான் வாங்கியது என்ன?


ஈழமும் ஈரமும்


தோழன் மபா
கவிதைகள்...


  • வானம் சிவந்து

வைகறை

காணும்பொழுது

  • வாசல் தெளித்து

சாணம் இட்டு
கோபித் தண்ணி
குடிக்கும்


  • அந்த-வேளையில்
    தெரியாது...

  • எம் கானகம்
    எம் குருதியால்
    சிவக்கும்யென்று.


    18/01/09

வெள்ளி, ஜனவரி 16, 2009

புத்தகக் காட்சியில் நான் வாங்கியது என்ன?

சென்னை புத்தக காட்சிக்கு செல்ல இன்று (கன்னிப் பொங்கல் ) தான் நேரம் கிடைத்தது. அரங்கு முழுவதும் சுற்றிப் பார்க்க இரண்டு நாளாவது வேண்டும். இந்த வருடம் 600 அரங்குகளுக்குமேல் காட்சிக்கு வைத்து இருந்தனர். BAPASI (தென் இந்திய புத்தக தயாரிப்பாளர்கள் மற்றும் வெளியிட்டாளர்கள் சங்கம் ) சிறந்த முணைப்புடன் மக்கள் சுதந்திரமாக வாங்கும் வண்ணம் அரங்குகளை அமைத்து இருந்தனர்.

பபசியின் தலைவர் காந்தி கண்ணதாசன் மற்றும் செயலர் சண்முகம் இவர்களின் அயராத உழைப்பினால், வருடம் தோறும் சென்னை புத்தக கட்சி விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

எனது முதல் சுற்றில் (அதாங்க ... இரண்டு வரிசை தான் சுற்ற முடிந்தது) நான் வாங்கிய புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

  1. 'நரிக்குறவர் இனவரைவியல்' கரசூர் பத்மபாரதி எழுதியது. இந்திய-ஆரிய மொழிச் சமூகமான நரிக்குறவர் இந்தியா முழுமைக்கும் புலம்பெயர்ந்து நிலைநிறுத்திக் கொண்டுள்ள அசைவியக்கத்தை இந்த நூல் முனைப்புடன் எடுத்துரைக்கிறது. பொதுவாக நரிக்குறவர் பற்றி அறிந்துக் கொள்ள எல்லோரும் ஆவலாக இருப்பார். அதற்கு இந்நூல் துணை புரியும். வெளியீடு: தமிழினி. விலை Rs.160/- பக்கம்: 270
  2. 'குமரிக்கண்டம்' - ம. சோ.விக்டர். தமிழர்களின் தாயகம் எது? முதல் மாந்தவினத் தோற்ற நாடு எது ? உலகின் முதல்மொழி எங்கே அறியப்பட்டது? முதல் நாகரிகம் தோன்றிய நாடு எது ? போன்ற கேள்விகளுக்கு விடைக் காண ... நீங்கள் குமரிக் கண்டம் படிக்கவேண்டும். தமிழ் மையம் சார்பாக நல்லோர் பதிப்பகம் மூலமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு, உயர்தர காகிதம் என்று புத்தகத்தை மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளனர். விலை Rs.300/-
  3. 'தீண்டப்படாத நூல்கள்' - ஸ்டாலின் ராஜாங்கம். தலித் முன்னோடிகளின் பதிப்புப் பணிகள் குறித்த வரலாற்றின் விடுப்பட்ட பதிவுகள். அயோத்திதாசர், எம்.சி.ராஜா. இரட்டைமலை சீனிவாசன் முதலிய தொடக்க கால தலித் அறிஞர்களின் பங்களிப்பின்றி நவீன தமிழகம் இல்லை என்பதை மிக அழுத்தத்தோடு கூறும் நூல். சொல்ல மறந்த அல்லது மறுத்த தலித்துகளின் தமிழ் பங்களிப்பு. வெளியீடு: ஆழி. Rs.70/-
  4. 'வலி' - அறிவுமதி. ஈழத்து தமிழன் இழந்ததின் மிட்சம் மீதங்கள் இங்கே வலி யாக சிதறி இருக்கிறது. மடக்கி மடக்கி எழுதப்பட்ட கவிதைகளில் தமிழச்சியின் இரத்தமும், அழுகையும் , துயரமும் ஓலமிட்டு அழுகின்றன. வெளியீடு: தமிழ்மண். Rs.70/-
  5. 'யூதர்கள்' வரலாறும் வாழ்க்கையும் - முகில். யூதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், திருமணம், வழக்கை முறை என்று யூதர்களை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பு. வெளியீடு: கிழக்கு. Rs.100/-
  6. 'செங்கிஸ்கான்' - முகில். இதுவும் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு தான். சாமானியன் ஒருவன் சாம்ராஜியத்தை கட்டி அமைத்த சாகச சரித்திரம். Rs.80/-
  7. 'மதராசபட்டினம்' - நரசய்யா. சென்னை மாநகரத்தின் கதை. "சென்னை மா நகரத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? " என்று இனியும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி வந்திருக்கிறது இந்த நூல். வரலாற்று சம்பவங்களோடு வெளிவந்திருக்கும் இன் நூல் நிச்சயம் ஒரு பொக்கிஷம் தான். வெளியீடு: பழனிப்பா பிரதர்ஸ். Rs.275/-

இந்த புத்தகங்களைப் பற்றி படித்து விட்டு கூறுகிறேன். உங்களுக்கு தெரிஞ்ச நல்ல புத்தகங்கள் இருந்தாலும் சொல்லுங்கள். இனி நாளையும் புத்தகக் காட்சிக்கு போகவேண்டு.

- தோழன் மபா

திங்கள், ஜனவரி 12, 2009

'அப்பா -அம்மா ' விளையாட்டு

இப்போதெல்லாம் கவிதை எழுத நேரம் கிடப்பதில்லை. கல்லூரி காலங்களில் வரைந்த கவிதைகள் இன்றும் மனதில் வந்து போவதுண்டு.


அப்படி ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

'அப்பா -அம்மா ' விளையாட்டு

தலையில்

தட்டித் தட்டிதான்

சொல்லித் தந்தார்கள்.

வலது இடது

குழம்பாமல்

செருப்புப் போட...

டிராயர் நனையாமல்

ஒண்ணுக்குப் போக...

கையை கிழிக்காமல்

பென்சில் சீவ...

ஆனால்

கொஞ்சம் கூட

தப்பாமல்

வந்தது

'அப்பா -அம்மா '

விளையாட்டு !


-தோழன் மபா

திங்கள், ஜனவரி 05, 2009

சயாம் மரண ரயில்

காலம்தோறும் உலகம் பல்வேறு நிகழ்வுகளை எதிர் கொண்டு வந்துள்ளது; எதிர் கொண்டு வருகின்றது. பல நிகழ்வுகள் ஆதிக்கத்திற்கும் இன்னும் பல நிகழ்வுகள் அழிவிற்கும் வழி வகுப்பனவாக உள்ளன. அந்த வகையில் சமிபத்தில் என்கையில் தொலைந்து போனவர்களின் எழுத படாத வரலாறு கிடைத்தது. வாசிக்க வாசிக்க அதன் துயரம் இன்னும் என் இருதயத்தை இரு கரம் கொண்டு பிசைகிறது.

அது ! திரு சண்முகம் எழுதிய
"சயாம் மரண ரயில்"
தமிழோசை பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியிடு.
டிசம்பர் 2007 -இல் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது.
விலை Rs.150/-
304 பக்கங்களில் எடை குறைவாக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது.
முகவரி,
1050, சக்தி சாலை, காந்திபுரம் , கோவை -641 012.

சரி இனி வரலாற்றை பார்ப்போம்....

வரலாற்று அடிப்படையில் தென்கிழக்காசிய மக்கள் எதிர் நோக்கிய மிக துயரமான நிகழ்வுகளுள் 'சயாம் - பர்மா இருப்புப் பாதை'முக்கியமானதாகும். இன் நிகழ்வினை தமிழர்கள் ' சயாம் மரண ரயில் பாதை ' என்கின்றனர். இதில் மரண ரயில் என்ற சொல் மிக பொருள் பொதிந்ததாகும். இந்த இருப்புப் பாதை போடுவதற்காக எண்ணிலடங்கா உயிர்கள் பலி கொடுக்கப் பட்டுள்ளது.

சயாம் மரண ரயில் பற்றி அறிய வேண்டும் என்றால், நீங்கள் இரண்டாம் உலகப் போர் காலத்திற்கு செல்லவேண்டு.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி,இத்தாலி, ஜப்பான் போன்ற பாசிச நாடுகள் ஓர் அணியில் இருந்தன. அதில் சிங்கப்பூர்,தாய்லாந்து, மலேசியா, பர்மா போன்ற நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது ஜப்பான். ஜப்பானின் அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலம் கொண்டு வருவது சிரமம். அத்துடன் நீண்ட காலம் பிடிக்கும். எனவே கடல் வழியாகக் கொண்டு வருவதை விட தரை வழிய அவற்றை கொண்டு வர எண்ணியது ஜப்பான் முடியாட்சி இராணுவம்.

எனவே சயாமி (தாய்லாந்து) லிருந்து பர்மா வரை இருப்புப் பாதை மூலம் அத்திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டது. ரயில் பாதை அடர்ந்த காடுகளிலும், சீறிப்பாயும் காட்டாறு களையும் கடந்து பாதை அமைக்கப்பட்டது. இதில் 16000 ஆயிரம் பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய போர்க்கைதிகள் பயன்படுத்தப் பட்டனர்.

ரயில் பாதை அமைக்க அவர்கள் மட்டும் போதுமா? இளிச்சவாய் சுமுதயம் எதுவும் கிடைக்க வில்லையா? கிடைத்தார்கள்; அவர்கள் தமிழர்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் வேலைசெய்ய மலேய கொண்டு செல்லப்பட்டுஇருந்தனர். இவர்களை அங்கு உள்ள கங்காணிகள் மூலம் ஏமாற்றி ரயில் பாதை அமைக்க இழுத்து சென்றனர். அதோடு தெருவில் நடுந்து சென்றவர்கள், பூங்காவில் அமர்ந்து இருந்தவர்கள், திருமணத் திற்கு வந்திருந்தவர்கள், தொழுகை முடிந்து தெருவில் நடந்தவர்கள், அழுத குழந்தைக்கு மிட்டாய் வாங்க கடையில் நின்ற தந்தை என்று ஜப்பான் இராணுவம் கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் பிடித்து சயாமுக்கு கொண்டுசென்றனர். தப்பியவர்களை அங்கேயே சுட்டுக் கொன்றது கொடிய வெறிப் பிடித்த ஜப்பான் இராணுவம்.



புத்தகம் முழுவது மரண ஓலங்கள் தான். இந்த வரலாறு முழுவதும் ஒரு கதை போல் சொல்லப்படுகிறது. கூடவே மனதிற்கு சற்றே இதமாஒரு காதல் கதையும் உண்டு.

வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போதுதான், புரிகிறது தமிழன் எப்படிப்பட்ட அறிவிலியாக இருகிறான் என்று! தனக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போன என்ன. என்ற மனோ நிலைதான் பெருவாரியான தமிழனின் நிலையாக இருக்கிறது. அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான். கேட்டால் "நமக்கு எதுக்கு தம்பி வம்பு" என்கிறான்.



சயாம் மரண ரயில் பற்றி இணையத்தளத்தில் தேடினால் ஒரு இடத்தில் கூட தமிழர்கள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என்ற தகவல் இல்லை. மாறாக ஒரு பட்டியல் கண்ணில் படுகிறது. அது இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் இறந்தவர்களின் பட்டியல். அதில் பிரிடிஷ்காரர்கள், ஆஸ்திரேலியர்கள், ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.



இதில் ஈடுப்படுதப் பட்டு, உயிர் துறந்த லட்சக்கணக்கான தமிழர்கள் பற்றி ஒரு இணைய தளத்திலும் தகவல் இல்லை. இப்படி வரலாற்றிலும் வஞ்சிக்கப்பட்ட இனம் இது. வரலாறு தானாகவே தங்களை பற்றி எழுதிக்கொள்ளும் என்று எண்ணிய அப்பாவிகள்.



இதற்கு நிகழ்கால உதாரணம் இலங்கை. ஆதிகுடிகள் தமிழர்கள் என்பது உலகு அறிந்த ஒன்று. ஆனால் இன்றைய சிங்கள அரசு "மகா வம்சம்" என்ற நூலை எழுதி சிங்களர்கள் தான் இலங்கையின் பூர்விக குடிகள் என்று உலகை நம்ப வைக்கப் பார்கிறது.

இனியாவது தமிழனின் தியாகத்தை உலகம் உணரட்டும். மலேஷியா,இலங்கை, சிங்கப்பூர் மொரிஷியஸ் போன்ற காடுகள் மண்டிய தீவை, மக்கள் வாழ வழி செய்து காடு திருத்தி கழனி ஏற்படுத்தியவன் தமிழன் என்பதை நமது பாட்டன் பூட்டன் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

இப்ப உள்ள இந்த பிலகா பசங்க தெரிஞ்சிகிட்டும்.

அந்த வகையில் "சயாம் மரண ரயில்" தமிழர்களின் துயரத்தை உலகிற்கு உணர்த்திய உயர்வான நூல். பாசிச ஜப்பானின் பிடியில் சிக்கித் தங்களது உயிரை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சோக வரலாறு.
-தோழன் மபா




ஞாயிறு, ஜனவரி 04, 2009

டோரா -புஜ்ஜிக்கு யாரு அப்பா?


"தொலைக்காட்சி பெட்டி ஒரு அறிவு வளர்ச்சி சாதனமென்பதில் சந்தேகமில்லை. எங்கள் வீட்டில் யாராவது தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தால் நான் பக்கத்து அறைக்குசென்று புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவேன் " என்கின்றார் கிரெஸ்கொமார்க்ஸ்.


எங்கள் வீட்டில் மிகப்பெரிய ஒரு விரோதியா இது நாள் வரையில் இருந்து வந்த டிவி பெட்டியை, கடந்த ஜனவரி ஒன்னாம்தேதியன்று தலையை சுத்தி ஒரு மூலையில் வைத்துவிட்டோம்.

சின்னதாக ஆரம்பிச்ச பிரச்சனை, பெரியதாக வெடித்து டிவி பெட்டியை தூக்கி தூர எறிந்து விட்டது.

வழக்கம்போல் என்அருமை புதல்வி கையில் ரிமோட் கன்றோலோடுதான் துயில் கலைந்தாள். ஒரு யு கே ஜி வாண்டுக்கு இந்தளவிற்கு டிவி மோகம் தேவையா என்ற கேள்வி எனக்குள் பலமாக எழுந்தது. டிவி யின் ஆதிக்கம் சிறுவர்களின் வாழ்வில் நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகிறது. அவர்களால் நாம் சொல்லும் எதையும் காது கொடுத்து கேட்க முடிவதில்லை. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, அக்கா போன்ற உறவு முறைகளில் அவர்களால் கலந்து பழக முடிவதில்லை.

வரும் பொங்கலுக்கு எங்கள் கிராமத்திற்கு போகலாம் என்று சொல்லும் போது என் மகள் வர மாட்டேன் என்கிறாள். கேட்டால் அங்கு "தாத்தா எப்போதும் நீவ்ஸ் சேனல் தான் பாப்பாரு அதனாலே அங்கு வேண்டாம் " என்கிறாள். அந்தளவிற்கு டிவி யின் தாக்கம் வருங்கால தலைமுறை யினரிடம் இருக்கிறது.

இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்குமிடையே பரஸ்பரம் அன்னியோன்யம் குறைகிறது. இது எந்த வகையில் பார்த்தாலும் டிவி பார்பதென்பது அவர்கள் நலத்திற்கு கேடானதுதான்

நமக்கு உயர் கல்வி கற்கும்போது தெரிந்த பல விழயங்கள், அவர்களுக்கு இப்போதே தெரிந்து விடுகிறது. டிவியில் நல்லதும் வருகிறது, பொல்லாததும் வருகிறது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, 'புத்தாண்டில் புது உறுதிகொள்வோம்' என்ற வீர முழக்கத்தோடு சட்டேன்று எடுத்து, பட்டென்று ஒரு மூலையில் வைத்து விட்டோம். அன்று அபார்ட் மென்ட் முழுவதும் இது தான் டாக்.

இனி என் மகள் டோரா -புஜ்ஜிக்கு யாரு அப்பா? என்று கேட்க மாட்டாள்.


என்ன நமக்குத்தான் ஒரு சானலையும் பார்க்க முடிவதில்லை. ஹூம் ! சில நல்ல விழயங்க ளுக்காக சில வற்றை இழப்பதில் தவறு ஒன்றும் இல்லை.


நீங்களும் முயற்சி செய்யுங்களேன்?

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...