திங்கள், அக்டோபர் 25, 2010

இப்போதெல்லாம் யாரும் குளத்தில் குளிப்பதில்லை...



முன்பெல்லாம் கிராமங்களில் ஆறு குளங்களில் குளிப்பதென்பது அன்றாட நடைமுறைகளில் ஒன்று. தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி குளிக்க அருகில் உள்ள குளங்களுக்கோ அல்லது ஆற்றுக்கோ செல்வார்கள். அந்த குளிர்ந்த நீர் அவர்களை நாள் முழுக்க ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். ஆனால் இன்றைய காலகட்டங்களில் ஆறு அல்லது குளங்களில் குளிப்பதென்பது கிராமங்களில் கூட அரிதான ஒன்றாகிவிட்டது.

நானெல்லாம் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆற்றுக் குளியல்தான். எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம்தான் காவிரி, அருகிலேயே கோயில் குளம், அதனால் குளங்களில் குளிப்பதென்பது வழக்கமான ஒன்று.
சமீபத்தில் எங்கள் ஊருக்கு போயிருந்தேன். குளத்தில் பயலுங்க ஒரே கொட்டம் அடிப்பானுங்க, என்று ஆசையோடு போய் பார்த்தா... ஊர் குளம் பாசி பிடிச்சிப் போய், படித்துறையெல்லாம் வீணாகிக் கிடந்தது. என் வயதொத்த சிறுவர்களுக்குப் பிறகு வந்த மூன்றாம் தலைமுறை பசங்க குளத்துக்கெல்லாம் வருவதில்லை. எல்லோர் வீட்டிலும் குளியலறை கம் கழிவறை கட்டிய பிறகு யாரும் வெளியே வருவதில்லை.

எல்கேஜி படிக்கும் போது, நாங்கள் குடவாசலில் இருந்தோம், வீட்டிற்கு எதிரிலேயே சோழ சூடாமணி ஆறு. கூப்பிடும் தூரத்தில் எனது தந்தை பணிபுரியும் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி. எனது தந்தை குளிக்க ஆற்றுக்கு செல்லும்போதே நானும் கூட குளிக்க சென்றுவிடுவேன்.
சுழித்துக் கொண்டு ஓடும் ஆறு. பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பார் தந்தை. காலுக்கிடையே மணல் அரித்துக் கொண்டு ஓடும், கொஞ்சம் அசைந்தாலும் ஆறு அதன் போக்கில் நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும். இருந்தும் பழக பழக எதிர் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். பிறகென்ன அக்கரையும் இக்கரையும் நமக்கு கைவந்த கலையாகி விட்டது.

பிறகு சொந்த கிராமத்திற்கே (திருவாலங்காடு) வந்துவிட்டதால் நீச்சல் அடிக்க அதிக வாய்ப்புக் கிடைத்தது. சிறு வயதில் பகல் நேர விளையாட்டே குளத்தில் நீச்சல் அடிப்பதுதான். அதுவும் குளத்தில் கண்ணாமூச்சி விளையாடுவோம். 'என்னது... தண்ணிக்குள்ள கண்ணாமூச்சான்னு திகைக்காதீங்க...' மேலே படிங்க!.

கோட்டானே கோட்டான் *
ஏன் கோட்டான்...
ஆத்தில குளத்தில மீன் புடிச்சேன்
எல்லாருக்கும் குடுத்தேன்
அவனுக்கு---------- மட்டும் குடுக்கல
எங்க கண்டுபிடி"

*கோட்டான்... என்பது ஒரு இரவு பறவை.

பாட்ட முடிக்கும் போது யாரு எங்கள  புடிக்க போறானோ அவன் பேர சொல்லிட்டு எல்லோரும் தண்ணிக்குள்ள மூழ்க ஆரம்பிச்சுடுவோம். பிறகென்ன ஒரே உள் நீச்சல்தான். அதுவும் உள் நீச்சல் அடிக்கும் போது, கீழே கால் படக் கூடது. சேற்றில் கால் பட்டால், அது நாம் போகும் பாதையை காட்டிக் கொடுத்துவிடும். அதனால் சேற்றில் கால் படாமல் நீந்துவோம். அதனால யாரு எங்க இருக்கான்னு கண்டுப் பிடிப்பது கஷ்டமா இருக்கும். ஒவ்வருவனையும் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

ஆனால் இன்று அதே குளம் சுருங்கி போய், பாசிப் படிந்து பார்க்கவே பாவமாய் இருக்கிறது. இப்போதெல்லாம்  குளங்களை மீன் வளர்க்க குத்தகைக்கு விட்டு காசு பார்த்துவிடுகிறது ஊர் நிர்வாகம். அவர்கள் குளத்திற்கு மேல் ஒரு பெரும் வலையைக் கொண்டு மூடி 'கட்ளா கெண்டை' மீன்களை வளர்க்கிறார்கள். இதனால் மீன் கொத்தி, கருவாட்டு வாலி போன்ற பறவைகள் குளத்தில் வந்து அமர்வதில்லை. குளத்தில் மீன் பிடிக்க முடிவதில்லை.  

நம்மை போன்றே பறவைகளும் குளத்தின் பயனை அடைய முடியாமல் போய் விடுகிறது. இது எத்தகைய ஒரு இயற்கை இழப்பு, என்பதை என்னைப் போன்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அதோடு இல்லாமல் மீன்களுக்கு போடும் செயற்கை உணவு மற்றும் கழிவுகள்,  மருந்துகள் தண்ணிரின் இயற்கை தண்மையை பாதித்து எதிர்காலத்தில் நாம் அதை பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது என்பதுதான் நிஜம்

கிராமங்களும் தங்களது உண்மையான முகத்தை இழக்கத் தொடங்கி விடுமோ என்கிற பயம் என்னை பலமாக ஆட்கொண்டது.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...