ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்- கவிதை நூல் வெளியீடு




                   ரண்டு நாளுக்கு முன்னர் வரை 'பாலைவன லாந்தர்' என்றால் யார் என்றே தெரியாது. அதுவும் நண்பர் வேல் கண்ணன் அவரது முக நூல் பக்கத்தில் கவிதை வெளியீடு பற்றி தெரிவித்திருந்தார். பாலைவன லாந்தர் என்பது ஒரு பதிப்பகத்தின் பெயர் என்றே நினைத்திருந்தேன். கவிதை புத்தக வெளியீட்டிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. பாலைவன லாந்தர் என்ற பெயருக்குப் பின் ஒரு பெண் கவி இருக்கிறார் என்று!. 'லீடிங் லைட்ஸ்' போல காத்திரமான ஒரு மெட்டாலிக் பெயரை சூடிக் கொள்ளவே ஒரு துணிச்சல் வேணும். அந்தத் துணிச்சல் கவிஞர் பாலைவன லாந்தருக்கு இருக்கிறது! .


சென்னை மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் குளிரூட்டபபட்ட அரங்கில் நேற்று மாலை பாலைவன லாந்தர் எழுதிய 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' கவிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் புத்தகத்தை வெளியிட, ஓவியர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். கவிதை நூல் குறித்து இந்திரன், எஸ். சண்முகம், அமிர்தம் சூர்யா, வேல் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். உரை யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது.
புறம் மற்றும் அகச் சூழலில் காணும் எதுவும் கவிதை ஆகுமென்பதை இக் கவிதை தொகுப்பிலும் காண முடிகிறது. மிக சிரத்தையான வார்த்தை கோர்ப்புகளில் கவிதையெங்கும் இழையோடும் உக்கிரம், வெகுஜனத்தின் ஒரு குரலென நாம் மதிக்க வேண்டும். கொடி பிடிப்பவனுக்குள் இருக்கும் பாசாங்கற்ற முழக்கத்தினை பெண்ணிய குரலாக தனது கவிதைகளில் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். பெண்ணியத்தின் பொதுமை குற்றச்சாட்டுப் போல இங்கேயும் 'ஆண் குறி' ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.

அவர்களிடம் மூன்று ஆயுதங்கள் இருந்தன
கத்தி 
மரக்கட்டை 
அவர்களது ஆண் குறி

இக் கவிதைவரிகள் ஏதோ ஒரு சம்பவத்தின் குறியீடு என்றாலும், 'அது' தொங்குவதாலையே ஆண் மிக எளிதாக எதையும் கடந்து விடுகிறான்.. அல்லது எதையும் செய்ய துணிகிறான் என்பதையே சம கால சூழல் நமக்குச் சுட்டுகிறது. போகட்டும்.... அதே நேரத்தில் தனது தந்தைக்கும் ஒரு கவிதை (என் அப்பனுக்கு ஒரு கனவு இருந்தது) எழுதி அதை சமன் செய்துவிடுகிறார் பா.லா., இப்படியான சமன்பாடுகளில்தான் உலகம் இன்றளவும், ஆண் பெண்ணுக்கான புரிதலில் அன்பு கொண்டு இயங்குகிறது என்றே நினைக்கிறேன். வேறொன்றிலிருந்து இன்னொன்றாக அல்லது பிரிதொன்றிலிருந்து வேறொன்றாக வெளி வந்திருக்கிறது 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' தொகுப்பு. பாலைவன லாந்தரின் முதல் கவிதைத் தொகுப்பு இது என்று; யாராவது சொன்னால்தான் தெரிகிறது!.

விழாவினை எழுத்தாளர் விஜய் மகேந்திரன் தொகுத்து வழங்கினார். இக் கவிதை தொகுப்பினை சால்ட் பதிப்பகம் வெளியீட்டு இருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில் கவிஞர் நரனின் மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள்!.
பக்கம் 112 
நூலின் விலை ரூ 100/-

-தோழன் மபா.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...