இது நமக்கான மேய்ச்சல் நிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இது நமக்கான மேய்ச்சல் நிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 02, 2013

" அசையாத தசையையும் அசையவைத்த 'சிவாஜி'! -டாக்டர் கூப்பர்.



                          டிகர் திலகம் சிவாஜி இறந்த அன்று, எனது தந்தையார் எனக்கு போன் செய்து "டேய், சிவாஜி வீட்டுக்கு போயிட்டு வந்துடு." என்றார்.  ஒரு நடிகரின் இறப்புக்கு ஒரு சராசரி மனிதன் தான் செல்ல முடியாததால் தனது மகனை அந்த இறுதி ஊர்வலத்திற்கு அனுப்புகிறார் என்றால் அந்த நடிகர் எத்தகைய ஆற்றல்மிக்க நடிகராக இருந்திருப்பார்.  அப்படி மக்கள் கொண்டாடிய மகத்தான கலைஞன் அவன்.

ஒரு சிற்றிதழில் மலையாள இயக்குனர்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  அப்பப்பா....!, மனிதர் சிலேகித்து எழுதியிருப்பார்.  சிவாஜி யார், அவன் எத்தகைய மாகத்மியம் படைத்தவன் என்பதை மிக பிரமிப்போடு வர்ணித்திருப்பார்.  சிவாஜியை அவரது வீட்டு மாடியில் சந்தித்தையும், அந்த சந்திப்பின் இரவொன்றில் கிளாசில் அளவோடு 'ஸ்காட்ச்'  ஊற்றியதையும், கம்பீரமாய் நடந்து... அந்த தனித்துவமிக்க நாற்காலியில் கால்மேல் கால்போட்டுக் கொண்டு அமர்ந்ததையும், தனது கணீர் குரலில் தன்னை நலம் விசாரித்ததையும்  என்று,  சிவாஜியை அனுஅனுவாக ரசித்து எழுதியிருப்பார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.  "கேரளாவில்   நடிகர் திலகத்தின் திரைப்படம்  வெளியாகும்போது  அறிவிப்பு  வண்டியில்அமர்ந்து சிவாஜின் பிரஸ்தாபங்களை மைக்கில் அளந்த குஞ்சன் நான். நான் அந்த மகா நடிகன் பக்கத்திலா....?" எனறு ஆச்சரியமும் பிரமிப்பும் கலந்து எழுதியிருப்பார்.

சிவாஜியைப் பற்றிய இப் பதிவு என்னை  பெரிதும் கவர்ந்தது. அந்த எழுத்து  பசுமரத்து ஆணி போன்று இன்றும் இன் நினைவில் இருக்கிறது.

பிற்பாடு இப் பதிவுப் பற்றி சாந்தி திரையரங்கின் வேணுகோபால் (சிவாஜியின் மைத்துனர்) அவர்களிடமும் கூறினேன். அவர் உடனடியாக கேரளாவில் தொடர்புகொண்டு அச் செய்தியை பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

இப் பதிவுப் பற்றி நண்பர் ஜே.ரங்கராஜனிடம் (தினமணி சிறப்பு நிருபர்) பேசிக்கொண்டு இருந்த போது, மருத்துவர் கூப்பர் என்ற உடலியக்கத் துறை பேராசியரர் (Professor of Anatomy)  சிவாஜியின் முகத்தில் சதையும் நடிப்பதைப் பற்றி கூறியிருந்ததை நினைவுக் கூர்ந்தார்.  உடலில் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத தசையையும் தனது நடிப்பாற்றலால் அசைய வைக்கும் ஆற்றல் பெற்றவர் நடிகர் சிவாஜி. இதை கூப்பர் 30ம் ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களிடம்  பகிர்ந்துக் கொண்டார். பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தினமணி சிறப்பு நிருபர் ரங்கராஜனிடம்,  மருத்துவர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் இச் செய்தியை பகிர்ந்து கொண்டார். இது நடந்தது சிவாஜி இறப்பதற்கு முன்பு.   
    
தினமணியில் வந்த 'இமையம் பதித்த சுவடுகள்'

நான்கு ஆண்டுகள் கழித்து, சிவாஜி இறந்த அன்று, 'இமையம் பதித்த சுவடுகள்' என்ற நினைவு கட்டுரை தயாரிக்கும்போது, சிவாஜி பற்றி மருத்துவர் கூப்பர் சொன்னதை செய்தியாக்க,   என்றோ தன்னிடம் இச் செய்தியை பகிர்ந்துக் கொண்ட  மருத்துவர்  ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் பிடித்து 'அசையாத தசையையும் அசையவைத்த 'சிவாஜி!' என்று அதை  தினமணியில் பாக்ஸ் செய்தியாக்கினார் ரங்கராஜன்.  அச்செய்தி பரவலாக பேசப்பட்டது.

நிருபர்கள் எப்போதுமே அலார்ட் ஆறுமுகமாகத்தான் இருக்கவேண்டுபோல....?!

இச் செய்தியை என்னிடம் பகிர்ந்துக் கொண்ட ரங்கராஜன். தினமணியில் வந்த அந்த பக்கத்தை  எனக்கு (PDF) பார்மெட்டில் அனுப்பினார்.
நான் அதை உங்களிடம் நான் பகிர்ந்துக் கொள்கிறேன். 
பார்க்க படம்!.
------------BOX NEWS!----------------
 இன்றைய தேதியில் தமிழகத்தில் மருத்துவம் தொடர்பான செய்திகளை தருவதில்  ரங்கராஜன் சூப்பர் என்றே சொல்லலாம்!  தினமணியில் கடந்த 16 ஆண்டுகளாக  வெளிவரும் 'மருத்துவ மலர்' இவரது கை வண்ணத்தில்தான் வெளிவருகிறது.  மருத்துவம் தொடர்பான செய்திகளை தருவதில் அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு.
------------BOX NEWS!----------------


-தொடர்ந்து பேசுவோம்.


வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

பகல் நேரத்து பஸ் பயணமும் புத்தக வாசிப்பும்!




                   ப்போதெல்லாம் பகல் நேரத்து பஸ் பயணத்தையே மனம் விரும்புகிறது.  சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதாக  இருந்தாலும் சரி பகல் நேர பஸ் பயணமே  வசதியாக இருக்கிறது. 

வீடு, அலுவலகம் என்று எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இச் சூழ்நிலையில், புத்தகம் படிக்க நல்லதொரு வாய்ப்பு எங்கே கிடைக்கிறது?.  வீட்டில் படிக்கலாமென்றால் ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் குழந்தைகள் என்று பிய்த்து எடுத்துவிடுகிறார்கள். பேருந்து பயணம்தான் புத்தகங்களை படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.  முன்பெல்லாம் பேருந்து பயணத்தின்போது ஜூவி அல்லது ஆவி என்று ஏதாவது ஒன்று கைகளில் படபடக்கும்.  இப்போதெல்லாம் அந்த தப்பை செய்வதில்லை. ஆவியை வீட்டில் பி(ப)டிப்பதோடு சரி!.

போகும் தூரத்தை கணக்கில் வைத்து புத்தகங்களின் எண்ணிக்கையும் அமைகிறது.  கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு சனிக் கிழமையும் சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்.  சனிக்கிழமை அரை நாள்தான் வேலை நாள் என்பதால், மதியம் ஒரு மணிக்கே அலுவலக  கேண்டினில்  சாப்பிட்டுவிட்டு பைக்கை உருட்டினால், அடுத்த அரை மணி நேரத்தில் கோயம்பேடு.  மாயவரம் செல்லும் ஏதாவது ஒரு சிறப்பு (?) பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்துக் கொண்டால் போதும், புத்தகம் படிக்க ஏதுவான சூழல் உருவாகிவிடும்.

ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பர்பி அல்லது பிஸ்கெட் பாக்கெட். இது போதும் புத்தகம் படிக்க....!  இடையிடையே கொஞ்சம் ஆயாசம் ஏற்படும், அப்போது புத்தகத்தை நெஞ்சோடு வைத்து மூடிவிட்டு,கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது நல்லதொரு தூக்கம் போடலாம். இடையே பேருந்தை எங்கேயாவது ஓரங்கட்டுவார்கள், அங்கே இறங்கி சும்மா சூடாய் ஒரு டீ (அது வென்னீராய் இருந்தாலும் அமுதமாக இருக்கும்) குடிக்கலாம்.   முடிந்தால் ஒரு 'தம்'  போடலாம்.

பயணத்தின் போது வள வளவென்று பக்கத்து சீட்டு காரரிடம் பேச வேண்டாம்.  நம் குலம் கோத்திரத்தை அவர் விசாரிக்க, பதிலுக்கு நாம் விசாரிக்க...என்று மொக்கை போடவேண்டாம். முடிந்தால் சிறு  இடைவேளையில் எஸ். ராமகிருஷ்ணன் போல் பயணிகளிடம் பாடம் படிக்கலாம்.

இப்படிதான் கபூர் குல்யாம் எழுதிய 'குறும்பனை' ஒரு பஸ் நேர பயணத்தில்தான் படிக்க முடிந்தது. திருச்சி போகும் போது அலமாரியில் பொத்தாம் பொதுவாய் எடுத்ததில் 'குறும்பன்' கைக்கு அகப்பட்டான். அப் அண்ட் டவுனில் அந்த 300 பக்க நாவலை முடித்தேன். (என்னமோ... எழுதினா மாதிரி பீத்திக்கிறியேன்னு கேட்கப்படாது?! இதெல்லாம் ஒரு ஜாலி பதிவுதான்)

கி.ராஜ நாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்', சாருவின் 'எக்சைல்', கீரனூர் ஜாகிர் ராஜவின்'கருத்த லப்பை', பாமாவின் 'வன்மம்', சன்முகம் எழுதிய 'சயாம் மரண ரயில்', பல்லவி ஐயர் எழுதிய 'சீனா- விலகும் திரை', வைக்கம் முகமது பஷீரின் தொகுப்புகள், சு.கி.ஜெயகரனின் 'மூதாதையரைத் தேடி',  கரசூர் பத்மா எழுதிய 'குறவர் இன வரைவியல்'  வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' என்று படிக்கும் பட்டியல் பஸ் பயணத்தை பொறுத்து நீண்டுக் கொண்டே இருக்கிறது.

தட தடக்கும் பேருந்து பயணத்தில் 'குற்றப்பரம்பரை' பெரிய பிரயாசையையே ஏற்படுத்தியது.  லைட் ரீடிங்காய் இருந்தால், பக்கங்கள் படபடவென்று நகரும். இது கொஞ்சம் ஹாட் ரீடிங். அதன் கதையின் கனம் தாங்கமல் அவ்வப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.  கதை இன்னும் மிச்சமாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது?!

நான் கொஞ்சம் பொறுமையான வாசிப்பாளிதான். பிடித்த வரிகளை இரண்டு மூன்றுதரம் மறுபடியும் வாசித்துவிட்டு, பிறகுதான் அடுத்த வரிக்கு தாவுவேன்.  முழுசாய் ஐந்தாறு பக்கம் முடிந்ததும், அதைப் பற்றிய பிரமிப்போ அல்லது 'சை என்னடா...இது!' என்ற என்னமோ எழும்.  புத்தகத்தை மூடிவிட்டு கொஞ்சம் நேரம் வேடிக்கைப் பார்ப்பேன்.  பிறகு மறுபடியும் எடுத்து படிக்க ஆரம்பிப்பேன்.  வேடிக்கை பார்ப்பதும் வாசிப்பதும் பஸ் பயணத்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கும்.

சின்ன குழந்தைகள் காராசேவை வைத்து.... வைத்து.... சாப்பிடுமே அப்படி!.
 


அதுவும் பகல் நேரத்து பயணம் ஒரு கவிதைதான்.

  எங்கேயோ ஒரு ஆள் இல்லா வனாந்திரத்தில் உள்ள மோட்டலில் பஸ்ஸை நிறுத்துவார்கள்.  சொற்பமாய் இருக்கும் பயணிகள் இறங்கி அங்கொன்றாய் இங்கொன்றாய் நிற்க, வெயில் சுள்ளென்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை காய்ந்துக் கிடக்கிறது. தூங்குமூஞ்சு மரத்தின் கீழ் நிற்கும் பேருந்தில் கொஞ்சம் வெக்கையோடு மனிதர்கள் தண்ணீர் பாட்டிலைத் திறக்க, கடைசி சீட்டிற்கு முந்தைய சீட்டில் உள்ள குழந்தை எதையோ கேட்டு அடம் பிடிக்கிறது.  மோட்டல் ஓரத்தில் ஒன்னுக்கு போக போனவரை, காவலாளி துரத்திக் கொண்டு இருக்க.... ஸ்பீக்கரில்  "எத்தன முறதா காப்பி கொடுப்பா எங்கக்கா. எத்தன முறதான் பாட்டு பாடுவா எங்கக்கா" ன்னு பாடிக் கொண்டு இருந்தார் சின்னபொண்ணு.  

நின்றிருந்த பேருந்து புழுதியை வாரி இறைத்துவிட்டு சின்ன குலுக்களோடு பைபாஸ் ரோட்டில் ஏறியது.  புழுக்கம் குறைந்து காற்று சுள்ளென்று முகத்தில் மோதியது!.   சன்னலுக்கு வெளியே உலகம் கழுவி துடைத்தது போல் பளிச்சென்று நகர்ந்துக் கொண்டு இருக்க.....  பகல் நேர பஸ் பயணம் படிக்கவும், உணரவும்  நல்லதொரு இலக்கியமாகவே என்னுள் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

படங்கள் உதவி: http://voipadi.blogspot.in/

சனி, மார்ச் 10, 2012

"உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா...?"



புதிய பகுதி -                                                                              இது நமக்கான
மேய்ச்சல் நிலம்! 

                  கடவுள் அந்த குழந்தையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்து,  "நீ நாளையிலிருந்து என்னை விட்டு பிரிய போகிறாய்,   இனி என்னை உன்னால் காண முடியாது" என்கிறார்.   அந்தக் குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை,  அவரது கரங்களைப் பற்றி " இறைவா நான் உங்களை விட்டு பிரிய மாட்டேன்,  நானோ சிறு குழுந்தை உங்கள் அருகில் இருப்பதால் எப்போதும் பாதுகாப்பாகவே உணர்கிறேன். என்னை நன்றாக கவனித்துக் கொள்ள, உங்களால் நியமிக்கப்பட்ட தேவதைகள் இருக்கிறார்கள். அதனால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று கண்ணீருடன் மன்றாடுகிறது குழந்தை.

"இல்லை,  இயற்கையின் விதிப்படி நீ போய்தான் ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்" என்கிறார் கடவுள்.

 "அப்படியென்றால் என்னை அன்போடு கவனித்துக் கொள்ள அங்கு யார் இருப்பார்கள்?" என்கின்றது குழந்தை.

"கவலைப்படாதே உன்னை கவனித்துக் கொள்ள அங்கு ஒரு தேவதை இருக்கிறாள். அவள் கண்ணின் மணிபோல் உன்னை காத்து அரவணைத்திடுவாள்.  கருக்கொண்டு, உரு தந்து,  உன்னை தன்னில் தங்கிக்கொள்வாள். " என்றார் கடவுள்.

"யார் அது ...?"  குழந்தை கண்ணீருடன் கேட்கிறது.

"அது உன் அம்மா!"

என்றார் கடவுள், சிலிர்ப்புடன்!!!.

**********


             " போன சனி கிழமை மதியம் 'பாலமந்திர்'  செல்ல நேர்ந்தது.   நண்பரின்  மகள் பிறந்த நாளுக்கு அங்கு செல்வதுண்டு.  பழங்கள் மட்டுமே வாங்கிச் செல்ல முடியும் என்பதால், கோயம்பேட்டிலிருந்து ஆப்பிள்,வாழைப்பழம் வாங்கிக் கொண்டு மதியம் 3 மணிக்கு சென்றோம்.

  1949ல் காமராஜரால் தொடங்கப் பட்ட பாலமந்திர் அனாதை இல்லம்,  சென்னை தி. நகர்,  ஜி.என் செட்டி சாலையில் இயங்கி வருகிறது. பெற்றோரால் கைவிடப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குழந்தைகள் இங்கு வளர்கிறார்கள்.
இந்த இல்லம் தொடங்க எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா முக்கிய பங்காற்றியுள்ளார்.  இந்த மாதத்தில் 63ம் வருட விழாவை கொண்டாட இருக்கிறார்கள். 
*****

  

          மூன்று, நான்கு வயது ஒத்த குழந்தைகள் வரிசையாக அந்த சாப்பாட்டு அறையில் நுழைந்தார்கள். விபரம் அறியாத அந்த சிறு சிறு பாலகர்கள்  கண்ணில் பயத்துடன் நம்மை பார்த்துக் கொண்டே வரிசையில் வர,  நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது.  தன்னார்வ தொண்டர்கள் அவர்களை வரிசைப்படுத்த, அந்த பிஞ்சு பாதங்கள் 'மலங்க மலங்க' விழித்துக் கொண்டு வரிசையில் அமர்ந்தார்கள்.   எதிர்வரிசையில் இவர்களைவிட வயது அதிகமான எட்டு, பத்து வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்  வந்து அமர்ந்தனர்.

முதலில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனை "உன் பெயர் என்ன...? " என்றேன்.  "வினோத்" என்றான் மழலைக் குரலில். 

இன்னும் சில குழந்தைகளுக்கு பேசக் கூட சரியாக வரவில்லை.  வரிசையாக ஒழுங்கு மாறாமல் அமர்ந்துக் கொண்டார்கள்.   ஆளுக்கு ஒரு ஆப்பில் கொடுக்க அழகாக வாங்கிக் கொண்டார்கள்.  ஒரு சிறுவன் "அண்ணா" என்று என்னை அழைத்து, கையை நீட்டி, "மதாணி" என்றான்.   பிறகுதான் தெரிந்தது, அவன் கையில் மருதாணி போட்டிருந்தான்.  அதைதான் என்னிடம் கான்பித்தான்.  அவனது கையை கண்ணீருடன் தடவிக் கொடுத்தேன். 

   இந்த குழந்தைகள் எங்கிருந்து வந்திருப்பார்கள்?. இவர்களது பெற்றோர் யார்? என்ன காரணத்தினால் இந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர்.    எந்த ஒரு தாயும் ஒரு வாரத்திற்குள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது,   குறைந்தது 10 மாதங்களாவது சுமக்க வேண்டும்.     ஊர் உலகத்திற்குத் தெரியாமல் யாரும் கர்ப்பம் சுமக்க முடியாது...?   அப்படி இருக்க... அதுவரை சுமந்துவிட்டு, பெற்றபின் ஏன் தெருவில் வீச வேண்டும்.  உடல் நோக சுமந்துவிட்டு,  உதறி எறியலாமா...?     இதில் இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்....?  அனாதைகள் உருவாக யார் காரணம். பெற்றோரா இல்லை சமூகமா...? என்று மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்விகள் மோதத் தொடங்கின.
 

  'அனாதைகளாக யாரும் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்' என்ற சொல் நம்மிடையே பல காலம் இருந்து வருகிறது.  இத்தகைய குழந்தைகள் உருவாக சமூகம்தான் காரணம் என்று நாம் தப்பிக்க முடியாது.   தனிப்பட்ட ஒரு மனிதனின் அபிலாஷைகள்தான் இதற்கு காரணம்.  பிறந்தவுடன் அனாதைகளாக மாற 'ஏழ்மை' ஒரு காரணமாக இருந்தாலும், ஏழ்மை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.  பெரும்பாலான குழந்தைகள் அனாதைகள் ஆக  தவறான தொடர்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்கின்றது உலக சுகதார அமைப்பு.   பெற்ற குழந்தைகளை அனாதைகளாக விட ஆண்களைவிட பெண்களே இச் செயலை அதிகம் செய்கின்றனர்.

அனாதைகள் உருவாக யார் காரணம்?.
  
சமூக கட்டுப்பாடுகள் குறைந்துவிட்ட இக் காலகட்டத்தில் உடல் வேட்கைக்காக கள்ளத்தனமாக இணையும் ஜோடிகள் அதிகரித்துள்ளனர்.  அவர்களது சொற்ப நேர சுகம்,  ஒரு குழந்தையை உருவாக்கி அனாதையாக்குகின்றது. பெற்றெடுத்த   குழந்தையை கோயில் வாசலில் போட்டுவிடுவது, இரயில் வண்டியில் வைத்துவிட்டு இறங்கி விடுவது, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவது, அனாதை இல்ல வாசலில் போட்டுவிட்டு மறைந்துவிடுவது, ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தையை துணியில் சுற்றி வைத்துவிடுவது, சிலர் மருத்துவமனையில் தவறான முகவரி தந்து  குழந்தையை பெற்றெடுத்தப் பின்னர் 'எஸ்கேப்' ஆவது,   கூட்டத்தில் அல்லது பொது இடத்தில் குழந்தை காணாமல் போவது என்று பல வழிகளில் குழந்தைகள் அனாதைகளாக்கப்படுகின்றனர். 

குழந்தைகள் அனாதைகளாக உருமாற மற்றொரு  சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

      சென்னை மணலி புது நகரில் புருஷன் பெண்டாட்டிக்கு இடையே சண்டை மூள, கணவன் அம்மிக் கல்லை தூக்கிப் போட்டு மனைவியை கொலை செய்துவிடுகிறான். பின்னர் போலீஸுக்கு  பயந்து  தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறான்.   காலையில் கண் விழித்து  பார்க்கும் இரு மகன்களுக்கும்  ஒன்றும் புரியவில்லை.  இருவருக்கும் முறையே 8 மற்றும் 3 வயதுதான் ஆகிறது. தொடர்ந்து வளர்க்க முடியாத அவர்களது  வயதான தாத்தா பாட்டி, அந்த இரண்டு குழந்தைகளையும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள்.   இந்நிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவர்களின் பிள்ளைகள் இருவரையும் காப்பாற்ற உறவினர்கள் முன் வரவில்லை. அது நாள் வரையில் அப்பா அம்மாவோடு சந்தோஷமாக வாழந்த அந்த இரு குழந்தைகள் இப்போது அனாதைகளாகிவிட்டனர்..  திருவள்ளூரில் உள்ள காப்பகத்தில் இரு குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் முன் பின் யோசிக்காமல்  செய்யும் சிறு தவறு அவர்களின் குழந்தைகளை அனாதையாக்குகிறது.

     ஒரு முறை திருவேற்காட்டில் உள்ள 'உதவும் கரங்கள்'  அமைப்புக்கு செல்ல நேர்ந்தது.  அங்கு ஒரு அறையில் சின்ன சின்ன  குழந்தைகள் இருந்தன.  எல்லாம் ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைகள் வரை இருந்தனர். ஒவ்வொரு தொட்டிலிலும் ஒரு குழந்தை அழுது கொண்டும் நின்று கொண்டும் இருந்தன. ஆயாக்கள் கையில் பீடிங் பாட்டிலை வைத்துக் கொண்டு பால் புகட்டிக் கொண்டு இருந்தனர்.  நம்மை பார்த்ததும், கையை நீட்டி தூக்க சொல்லி அழுதன.  எந்தக் குழந்தையை தூக்குவது?   மனது கனத்து போனது!.

      "பொதுவாக எந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் புதியவர்களைக் கண்டால் ஒளிந்துக் கொள்ளுவார்கள், அல்லது எளிதில் பேச மாட்டார்கள். ஆனால் இத்தகைய அனாதை இல்லங்களில் வாழும் சிறு சிறு குழந்தைகள் கூட  புதியவர்களை பார்த்தவுடன் தூக்க சொல்லி அழும். அல்லது சிரிக்கும்" என்றார் அங்கிருந்த நிர்வாகி ஒருவர்.  ஆதரவை தேடும் அந்த பிஞ்சுகள் பார்ப்பவரையெல்லாம் தனது தாய் தந்தையாக நினைப்பார்களோ...?  தெரியவில்லை?!.

     தலைவாரி,  பூச்சூடி, ஆடை அணிவித்து, நிலா காட்டி சோறுட்டி, தூங்கவைக்க கதைகள் சொல்லி என்று எந்த நிகழ்வும் இவர்களுக்கு இல்லை.   அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தப்பா, அண்ணன், தங்கை என்று எந்த உறவுமில்லாமல்;   சாப்பிட்டு, தட்டு தம்ளர் கழுவி, தனது ஆடையை தானே துவைத்து, வயதுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியுடன்,  ஒருவருக்கொருவர் உதவி செய்து கொடுத்ததை வாங்கிக் கொண்டு வரிசையில் செல்லும் இவர்களை பார்க்கும் போது முதல் பாராவில் சொன்ன கதை பொய்யோ என்று தோன்றியது!.
                                                                                                             'தொடர்ந்து பேசுவோம்!
-தோழன் மபா.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...