ஞாயிறு, அக்டோபர் 16, 2016

வதந்தி பரப்புவர்கள் மீது கைது நடவடிக்கை; தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தி!





        முன் எப்போதும் இல்லாத வகையில் முகநூல் மற்றும் ட்விட்டர்களில் எழுதுபவர்கள் கிலிப் பிடித்துக் கிடக்கின்றனர்.  முதல்வர் ஜெயலலிதா உடல் நிலைப் பற்றி தவறான தகவலைப் பரப்பினார்கள் என்று இதுவரை 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல் துறை. அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர்களை கைது செய்து, சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக காவல் துறையின் இந்த ஏதேச்சதிகார நடவடிக்கை,  மக்களிடையே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது!.

முதல்-அமைச்சர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பியதாக ஏற்கனவே மாடசாமி, சதீஷ் குமார், பாலு, திருமணி செல்வம், ரமேஷ்குமார், சுரேஷ் குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஆண்டனி ஜேசுராஜ், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இத்தைகைய கைது நடவடிக்கையால் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதை தமிழக அரசு கவனித்ததா என்று தெரியவில்லை?. 

சமூகவலைத் தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்ஸப் பயன்படுத்துவதுப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எத்தகைய தகவலை பகிரவேண்டும், எத்தகைய செய்திகளை லைக் செய்ய வேண்டும் என்ற குறைந்தப்பட்ச தெளிவு இல்லாமலேயே மக்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இணையத் தளங்களைப் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்ட வேளையில், இதற்கான சட்ட பூர்வ விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அதன் வாயிலாகவே இத்தகைய இக்கட்டுகளை நான் தவிற்க முடியும். பள்ளிக் கல்லூரிகளில் இதற்காண பாடத்திட்டத்தை வைத்தாலும் தவறில்லை. அந்தளவிற்கு மனிதன் குனிந்த தலை நிமிராமல் காலம் ஓட்டுகிறான்.

கடந்த 24 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. முதலில் சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் மன்றத்தில் கூறிய தமிழக அரசு, போக போக முதல்வர் உடல் நிலைப் பற்றி தெளிவான தகவலை வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. 

முதல்வர் ஜெயலலிதா மீது பற்றும் பாசமும் கொண்ட இரத்தத்தின் இரத்தமான அதிமுக உடன்பிறப்புகள்,  ஆயிரக் கணக்கில் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். அப்பல்லோ வாசலில் குவிக்கப்பட்ட காவல் துறையினராலும், அப்பல்லோவைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பரண்களாலும் ஒரு அசாதராண நிலை மாநிலம் முழுவதும் பரவத்தொடங்கியது. 

"இவ்ளோ போலீஸூ....... இவ்ளோ கெடுபிடி..... அப்ப அம்மாவிற்கு ஏதோ ஆயிடுச்சிடா" என்று சாதாரண அதிமுக தொண்டன் நினைக்கத் தொடங்கினான். விளைவு; முதல்வர் உடல் நிலைப் பற்றிய வதந்திகள் விர் விர்ரென்று எட்டுத் திக்கும் பறக்கத் தொடங்கியது. உண்மை நிலை தெரியாத மக்கள், அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... யூகத்தின் அடிப்படையில் பேசியதே வதந்தியாக உருவெடுத்தது.   வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் தமிழ் நாட்டில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து "அம்மாவுக்கு என்னதான் ஆச்சு?" என்று கேட்கும் அளவிற்கு விஷயம் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. . 

முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலையே அவரது உடல் நிலைக் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதல்வர் உடல் நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம்பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும்.  ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே  முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வழக்கமான உணவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறிய மருத்துவமனை கம் தமிழக அரசுதான், அடுத்த சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. இன்னும் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாக மூலம் தெரிவித்தது. இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்தான், முதல்வர் உடல் நிலை குறித்து அரசு நிர்வாகம் தரும் தகவல் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது. 

நிலமை இப்படி இருக்க.... முதல்வர் உடல் நிலைக்குறித்து வதந்தி பரப்பினார்கள் என்று, அப்பாவிகளை கைது செய்வது நியாயமான செயல் அல்ல. இத்தகைய கைது நடவடிக்கையால், அந்த அப்பாவிகளின் வாழ்க்கை முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.  இந்த கைது நடவடிக்கையால் அவர்களின் வேலை பறிபோகும், குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாகும், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்.   கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப எதிர்கால நலன் கருதி அவர்களை உடனே விடிவிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு. 

செய்யுமா தமிழக அரசு?.

-தோழன் மபா. 






 . 




வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...