ஞாயிறு, ஜனவரி 30, 2011

திமுக நிலை என்ன- ஒரு விரிவான பார்வை


  • திமுக தலை தப்புமா?

'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் இருக்கிறது தி.மு.க., நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்ற புலனாய்வு மனநிலை அடிமட்ட திமுக தொண்டனிடம் பலத்த கேள்வியாக உறுத்திக்கொண்டு இருக்கிறது. 

அது கவிதையாக இருக்கட்டும், கதையாக இருக்கட்டும் இல்லை சினிமாவாக இருக்கட்டும், கதையின் முடிவு (கிளைமாக்ஸ்) பொறுத்துதான் வெற்றி!.  படம் முழுவதும் ரசிக்கும் படியாக கொடுத்துவிட்டு, கதையின் முடிவில் இயக்குனர் சொதப்பி விட்டால் படம் எப்படி 'பப்படம்' ஆகுமோ... அப்படி ஆகிவிட்டது திமுகவின் ஆட்சி.

இந்த முறை (தற்போதைய ஆட்சிக் காலத்தில்)  எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்ற முடிவில் தீவிரமாக இருந்தார் கலைஞர். அதனாலயே பல்வேறு  மக்கள் நலத்திட்டங்கள்  அறிவிக்கப்பட்டன.  கட்சியை ஆட்சியை பலப்படுத்த இதுவே தக்கதருணம் என்று முனைப்புடன் செயல்பட்டார்கள். ஆனால் விதி வலியது என்று அடுத்தடுத்து வந்த சம்பவங்கள் நிருபித்தன. 
  • திமுக ஆட்சிக்காலத்தில் தமிழினம் அழிப்பு

அதில் முக்கியமானது,  இலங்கையில் தமிழினம் அழிப்பு போர்.  32 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துக் கொண்டு இருந்த சண்டை திமுக ஆட்சிக் காலத்தில்  முடிவுக்கு வந்ததுதான் பெரும் கொடுமை.  தமிழ் தமிழர் நலன் என்று மேடை தோறும் முழக்கம் இடும் கருணாநிதியால் இந்த முறை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது தமிழின ஆதரவாளர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் கருணாநிதி மீது திரும்பியது. கருணநிதியின் கையாலாகாதத்தனம் தான் இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு முக்கிய காரணம் என்று ஜெயலலிதா, வைகோ,நெடுமாறன் போன்றவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். 

இலங்கையில் போர் உக்கிரம் கொண்டிருந்தபோது இங்கு மனித சங்கிலி நடத்தியது, உண்ணாவிரதம் இருந்தது, டெல்லிக்கு தந்தி அடித்து காங்கிரஸ் செயல்பாட்டிற்கு 'காவடி'தூக்கியது என்று ஏகப்பட்ட 'டேமேஜ்'கள் திமுகமீது.

இலங்கை தமிழனை அழிக்க இங்கு தமிழ் நாட்டில் மீனம்பாக்கத்திலிருந்து விமானங்கள் சென்றன. இது தமிழர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

திமுகவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை தமிழன் அழிந்தது ஒரு வரலாற்று சோகம். இதை முன்னின்று நடத்தியது 'காங்கிரஸ்' என்பது ஊர் அறிந்த ரகசியம்.
  • வின்னைத்தாண்டி(ய) வருவாய்!

இதற்கு முன்பாகவே மக்களின் மனநிலையில் சற்று மாற்றம் வரத் தொடங்கியது. அது கலைஞரின் குடும்பம் மொத்தமும் திரைப்படத் தாயரிப்பில்  இறங்கியதுதான்.  முடிந்து திரைக்கு வரத் தயாராய் இருக்கும் படங்களை நல்ல விலைக்கு வாங்கி வெளியீடத் தொடங்கியது சன் குழுமம்.  தனது  பாதாளம் வரைப் பாயும் 'நெட் ஒர்க்' தந்திரத்தால், தயாரிப்பாளர்களை தடுமாறச் செய்து தங்கள் பக்கம் திருப்பியது சன் பிக்ச்சர்ஸ்.  விளைவு, சன் டிவில் தொடந்து பட விளம்பரங்கள் தந்து  'அட்டு' படங்களையும் 'பிட்டு' படங்களைப் போல் ஓடச் செய்தனர்!.

சன் குழுமத்தின் பட வெளீயிடு ஒரு பிரமாண்டத்தை எட்டவே,  அதுவரையில் சோம்பித்திருந்த கலைஞர் குழுமம் விழித்துக் கொண்டது. 'நாமலும் ஏதாவது செய்யனும்டா' என்ற நிலைக்கு ஸ்டாலின் வர அதற்கு துணை புரிந்தார் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின்.  விளைவு  'ரெட் ஜெயண்ட்' பிறந்தது.  இவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு படத் தயாரிப்பில் ஈடுபட, சினிமா இண்டஸ்ட்ரீயில்   இந்த ஆதிக்கத்தைப் பற்றி 'டாக்'வரத் தொடங்கியது.

இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று அழகிரிதரப்பும்  "கிளவுட் நைன்' மூலமாக சினிமா தயாரிப்பில் குதிக்க...  தொடர்ந்து  கலைஞரின் இன்னொரு மகன் மு.க தமிழரசும் 'மோகனா பிக்ச்சர்ஸ்'  மூலம் படத்தயாரிப்பில் ஈடுபட.... மொத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீக்கும் 'கிலி' பிடித்துக் கொண்டு 'அதிரிபுதிரி'யானது.  விளைவு கருணாநிதியின் குடும்ப சினிமா ஆக்கரிமிப்புப் பற்றி கதை கதையாக பல கதைகள் வரத்தொடங்கியது.

இவர்கள் யாரையும் படம் எடுக்க அனுமதிப்பதில்லை. நல்ல படங்கள் எடுத்தால் அதை இவர்களிடம் இவர்கள் சொல்லும் விலைக்கு விற்று விடவேண்டும். திரையரங்குகள் இவர்கள் வெளீயிடும் படங்களுக்கு உடனே இடம் தரவேண்டும், தாங்கள் எதிர்க்கும் படங்களுக்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது, தங்களுக்கு எதிப்புக் காட்டும் கதாநாயகர்களை வைத்து யாரும் படம் தயாரிக்கக் கூடாது.  அப்படியே எடுத்தாலும், அதை வெளியீட முடியாத அளவிற்கு கிடுக்கிப்பிடி. பிறர் எடுக்கும் படங்களுக்கு சன் டிவியில் 'டாப் 10' ல்  கூட இடம் கிடையாது    என்பது போல்  பல கதைகள் பல கிளைகளாக வளர்ந்து படர்ந்தன.

இந்த நேரத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான சில சினிமா தாயாரிப்பு   கம்பெனிகள் 'நமக்கு எதுக்கடா வம்பு' என்று கையைக் கட்டிக் கொண்டு அமைதி காத்தன.

சாதாரணமாகவே சினிமா பற்றிய செய்தி ஒரு வினாடியில் உலகம் முழுவதும் பரவிவிடும்  அத்தகைய 'வலுவான' ஊடகம் அது. அதில் இப்படி ஒரு குடும்ப ஆதிக்கம்  நடப்பதால், அதை பிடிக்காதவர்கள் நாளொரு வதந்திகளை பரப்பிவந்தனர்.  இப்படித்தான் ஆரம்பித்தது கருணாநிதியின் குடும்பத்தின் மேல் வெறுப்பு. அந்த வெறுப்பு 'ஸ்பெக்ட்ரமில்' விஸ்வரூபம் எடுத்தது.    அதுநாள் வரையில் திமுக அரசு மீது மக்கள் 'கிராப்' ஏறிக்கொண்டுதானிருந்தது. இவர்கள் சினிமாத் துறையில் அடித்த கொட்டம்தான் திமுக அரசின் மீது மக்களுக்கு எழுந்த முதல் வெறுப்பு. 

அதுவே, இவர்கள் குடும்பம் மட்டுமே கோடிகளை குவித்து வாழ்கிறதே என்ற என்னத்தையும் மக்களிடையே எழச்  செய்தது.  அதை சரியான முறையில் எழுதி பெரிதுப் படுத்தியது அச்சு ஊடகங்கள்.

இன்நிலையில் கனிமொழியும் படத் தயாரிப்பில் இறங்கப் போகிறார் என்கிறது ஒரு கோடம்பாக்கத்து பக்ஷி!

வெள்ளி, ஜனவரி 21, 2011

சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்.


 ....பாகம் இரண்டு

முதல் பாகம்


பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
'கான் அப்துல் கபார் கான்'



                                                                 இந்த 34வது புத்தகக் காட்சியில் நான் அதிகம் வாங்கியது, சிறுகதைகள்தான். பொதுவாக நான் அதிகம் சிறுகதைகள் வாங்குவதில்லை. ஆனால்,  இந்த வருடம் நிறைய சிறுகதைகள் வாங்க ஆர்வம் காட்டினேன். அதில் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை'  மற்றும் ஜே.ஜே சில குறிப்புகள்.  (இதுவரை படிக்கவில்லை).   புத்தகம் வாங்கும் போது  கண்ணன்  (சுந்தர ராமசாமியின் மகன்) அவர்களை சந்திக்க நேர்ந்தது.    தினமணி அண்ணாசாலையில் இருக்கும் போது; அப்போதைய தினமணி கதிர் ஆசிரியர் இளையபெருமாளை சந்திக்க வருவார். அப்போது பார்த்ததுண்டு.  அறிமுகப்படுத்திக் கொண்டதும்...  எழுந்து நின்று வாஞ்சையோடு விசாரித்தார்!

இவர்களது  காலச்சுவடு பதிப்பகம் இம்முறை  நல்ல விஷயம் ஒன்றை செய்திருக்கிறது. மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் கதைகளை தமிழாக்கம் செய்து நேர்த்தியான முறையில் வெளியீட்டுள்ளனர். புகழ்பெற்ற கதைகளான 'மதில்கள், பாத்துமாவின் ஆடு, சப்தங்கள், பால்யகால சகி" ஆகிய   புத்தகங்களை ஒரு சேர எடுத்தேன். இதில் மதில்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு தேசிய விருதை அள்ளியது. அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி தனது ஒப்பற்ற நடிப்பாற்றலை இத் திரைப்படத்தில் கொடுத்திருப்பார்.
                                                                *****************

எல்லை காந்தி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட 'கான் அப்துல் கபார் கான்' அவர்களின் வழ்க்கை வரலாறு 'எனது வாழ்வும் போராட்டமும் ' என்ற நூல். ஒரு போராளியின்  வாழ்க்கை வரலாறு, எப்போதும் எல்லோரும் விரும்புவதாகத்தான் இருக்கும்.   இதை கோவை தமிழோசை பதிப்பத்தார் வெளியீட்டுள்ளனர்.

*****************


                                                    
'குற்ற முத்திரை' இந்திய ஆதிவாசிகளின் அவல நிலையைக் கூறும் நூல்.  திலீப் டிசொளசா 'Branded by Law' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய  நூலை, மக்கள் கண்காணிப்பகம்   தமிழில் மொழிபெயர்த்து வெளியீட்டுள்ளனர்.

                                                                 *****************

'சிதம்பர நினைவுகள்'-  மலையாள மூலம்  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு .
வெளியீடு:வம்சி புக்ஸ்

'இதில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற பெயரை பார்த்ததுமே புத்தகத்தை கையில் எடுத்துவிட்டேன்.  அதற்கு காரணம் இருக்கிறது. என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு இதழில்... யரோ ஒருவன்... தான் சிவாஜியை சந்தித்ததை எழுதிருந்தான்.  அந்த மகா நடிகன் தன்னிடம் அமர்ந்து பேசியதை, சிம்மம்மாக நின்று கர்ஜித்ததை,  தனக்கு ஸ்காட்ச் விஸ்கி பரிமாரியதை  என்று, ஒரு சாதாரண சந்திப்பை இலக்கியத்தரத்தோடு அந்த கட்டுரையில் விமர்சித்திருப்பார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.

படித்து முடித்ததும்தான் பெயரைப் பார்த்தேன் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்று இருந்தது. இலக்கியத்தில் புறந்தள்ள முடியாத எழுத்து அந்த எழுத்து!. அன்றிலிருந்து அந்த எழுத்து என் மனதில் தங்கிவிட்டது. இது உண்மை!

இதில் ஒரு ஆச்சரியமான ஒரு விஷயம், இப் புத்தகத்தை தமிழாக்கம் செய்துள்ள  கே.வி.ஷைலஜாவும் தனது முன்னுரையில் அந்த கட்டுரையைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான்.

                                                       *****************


சமூக உரிமைப் போராளி 'இம்மானுவேல் தேவேந்திரர்' பற்றிய நூல். முதுகுளத்தூர் கலவரமும் அதைத் தொடர்ந்து  இம்மானுவேல் படுகொலை செய்யப் பட்டதும் படித்திருக்கின்றேன். அதைப் பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதால் இப் புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன்.  இதில் ஒரு விஷயம் உறுத்தியது. இம்மானுவேல் 'தேவேந்திரர்', காமராசர் 'நாடார்' என்று அவர்களது சாதிப் பெயரும் கூடவே இருந்ததுதான் ஏன் என்று தெரியவில்லை?!. வெளியீடு: பதிப்பக பெயர் இல்லை.

                                                            *****************


' தோழர்களுடன் ஒரு பயணம்' - அருந்ததி ராய்.
எதையும் எட்ட நின்று எழுதுபரல்ல அருந்ததி ராய்.   சட்டிஸ்கர் மாநிலத்தில்  தான்தேவாடாவில் அவர்  மாவோயிஸ்ட்டு தோழர்களை சந்திக்கிறார். அதன் விரிவான பதிவே இன் நூல்.வெளியீடு: பயணி.

                                                     *****************

'கண்ணாடி உலகம்' -கவிதை தொகுப்பு. வே.நெடுஞ்செழியன்.  கவிதையாளர் திருவண்ணாமலை பகுதையச்  சார்ந்தவர் என்று நினைக்கிறேன்.  நிறைய சாமி மறுப்பு...  கூடவே..நவீன முற்போக்கு தொகுப்பு !

                                                  *****************

மற்றும் 'புதுமைப்பித்தன் கதைகள்', கிரியாவின் 'தற்காலத் தமிழ் அகராதி' (தமிழுக்கு கிடைத்த வெகுமதி)   இரண்டும் முந்தயை பதிவில். 

முதலில் எடுத்த புத்தகம் கடைசியாக...ஞானியின் 'ஓ' பக்கங்கள்  2009 -20'
வெளியீடு:  ஞான பானு

 புத்தகங்கள்  பற்றிய விமர்சனம் வரும் பதிவுகளில் (அ ) நேரம் கிடைக்கும்போது.



வெள்ளி, ஜனவரி 14, 2011

சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்.

இந்த பதிவின் தொடர்ச்சி.....

இன்று போகி என்பதால்                                                        பெரும்பாலான சாலைகள் குறைவான போக்குவரத்தோடேயே இருந்தது.  மதிய  உணவை ஸ்டேர்லிங் ரோடு சங்கீதாவில் முடித்துவிட்டு, சென்னை  புத்தகக் காட்சியில் நுழையும் போது கூட்டம் களைகட்டியிருந்தது.

உள்ளே நுழைந்து இரண்டு சுற்று முடிவதற்குள் கை கனத்தவிட்டது.

இந்தவருடம் என்னை பெரிதும் கவர்ந்தது 'புதுமைப்பித்தன்  கதைகள்' முழுமையான தொகுப்பு. சந்தியா பதிப்பகத்தின் மற்றுமொரு அங்கமான புதுமைப்பித்தன் பதிப்பகம் இத் தொகுப்பினை வெளியீட்டுள்ளனர்.


அதில் ஒரு ஆச்சரியமான்  விஷயம் புத்தகத்தின் எடை, மிக எளிதாக  நாம் தூக்கிப் படிக்கும் விதத்தில் அமைந்திருந்ததுதான்.  சுமார் 799 பக்கங்களில் ஆச்சர்யம் மூட்டும் அளவில் இப் புத்தகம் வெளிவந்துள்ளது. இதை எம். வேதசகாயகுமார் தொகுத்துள்ளார்.
விலையும் குறைவுதான் ரூ350/-

இப் புத்தகக் காட்சியில் 10% கழிவும் உங்களுக்கு உண்டு.  நல்ல புத்தகம்.

நான்வாங்கிய வேறுசில புத்தகங்கள்.

  1.  கிரியாவின் தமிழ் அகராதி
  2. ஞாநியின் 'ஓ' பக்கங்கள் தொகுப்பு
  3. வைக்கம் முகமது பஷிரின் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகத்தார் மிக நேர்த்தியாக இப் புத்தகங்களை வடிவமைத்துள்ளனர்) பாராட்டுகள்.
  4. இம்மானுவேல் கொலைவழக்கு
  5. இந்திய பழங்குடியினர்.
  6. கான் அப்துல் கபார் கான் - வரலாறு
பொங்கலுக்கு ஊருக்கு போகவேண்டும் என்பதால், மீதி அடுத்தப் பதிவில்....

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

செவ்வாய், ஜனவரி 04, 2011

புத்தகக் காட்சியில் 14 நாட்களின் நிகழ்ச்சி நிரல்

சென்னையில் இன்று (04-01-2011 முதல் 17-01-2011 வரை)  தொடங்கி இருக்கும் 34 வது புத்தகக் காட்சி, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 600 மேற்பட்ட புத்தக அரங்குகள் இம் முறை இப் புத்தகக் காட்சியில் பங்கேற்கின்றார்கள்.

 இதில் பல்வேறு இலக்கிய உரைகள், புத்தக வெளியீடுகள், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இன்னிசை பாட்டு மன்றம் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து 14  நாட்களின் நிகழ்வுகளை உங்களுக்காகத் தந்திருகின்றேன்.




















திங்கள், ஜனவரி 03, 2011

திராவிடர்களின் சாமி அய்யப்பன் ?!

தெலுங்கு
மலையாளம்
கன்னடம்




தமிழ்


                                                                                                                                                                டந்த 1999-லிருந்து சபரிமலைக்குச் சென்று வருகிறேன். ஆனால் கடந்த 5 அல்லது 6 வருடமாக ஒரு காட்சி என்னை பெரிதும் கவர்ந்து வருகிறது.  திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளைச் சார்ந்த விளம்பர தட்டிகள், பத்தனந்திட்டா  மாவட்டத்தில் சபரிமலை போகும் வழியெங்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.

முன்பெல்லாம் தமிழர் மற்றும் மலையாளிகள் மட்டுமே சபரிமலைக்கு சென்றுவந்தார்கள்.  ஆனால் தற்போது தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் பெரிய அளவில் சபரிமலையில் குவிகிறார்கள்.  இதனால் இந்த கேரள மலையக மாவட்டங்களில் திரும்பிய பக்கம் எல்லாம் தென்னிந்திய மொழிகள் சரளமாகக் காணப் படுகின்றன.
=================================================

ஐயப்பன் ஒரு கிராம எல்லை தெய்வம்.

ஐயப்பன் கேரளாவில் குடிகொண்டிருந்தாலும், அவர் தமிழர்களின் தெய்வம்தான் என்பது அழிக்கமுடியாத வரலாறு. தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் (குறிப்பாக தென் மாவட்டங்களில்) அவர் அய்யனாரின் சொரூபமாகத்தான் பார்க்கப்படுகிறார்.   இன்றும் தென் மாவட்டங்களில்  கிராமியப் பாடல்களில் ஐய்யப்பனை 'கருப்பன், சங்கிலி கருப்பன், சுடலைமாடன் சாமி, முனி' என்று கிராம  எல்லை தெய்வமாக பாவித்து பல்வேறு கிராமிய பாடல்கள் இன்றும்  பாடப் படுகின்றன.

ஐய்யப்பன் வழிபாடு ஒரு வாழ்க்கை முறை.

ஐய்யப்பன் வழிபாட்டினை சாதாரணமாக ஒரு மண்டல விரதம் என்று கூறிவிட முடியாது.  அது உயர்வானதொரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறை என்பது நடைமுறை வாழ்க்கை  முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். புலால் மறந்து, மது -மாது துறந்து இறைவனை முழுதாய் சுமந்து வாழ்வதாகும்.



=================================================
அதோடு மெடிமிக்ஸ், மணப்புரம், முத்தூட், அனாசின், ஹமாம், ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற வியாபார நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வைத்து அந்தந்த   மொழி ஐய்யப்ப பக்தர்களை தங்கள் பக்கம் இழுக்க  விளம்பரங்களை வைத்துள்ளனர்.

'மணப்புரம் கோல்டு லோன்' ஒரு படி மேலே போய், மலையாளத்திற்கு மோகன்லாலையும், தமிழுக்கு விக்ரமையும், தெலுங்கிற்கு வெங்கடேஷையும், கன்னடத்திற்கு புனித் ராஜ்குமாரையும் வைத்து வழியெங்கும் விளம்பரம் செய்திருந்தனர்.

போதாத குறைக்கு நம்ம நடிகர் விஜயும் 'பொன்னம்பல மேட்டிற்கு- ஜோதி தரிசணம்' காண வரும் பக்தர்களை வழியெங்கும் 'ஜோஸ் ஆலுக்காஸ்' விளம்பரத்தில் வரவேற்றுக்கொண்டு இருந்தார்.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் என்று இல்லாமல், கோவில் பிரகாரம் முழுவதும் இந்த நான்கு மொழிகளும் ஆக்கிரமித்துள்ளன. அதோடு தேவசம் போர்டும் தனது கோவில் சார்ந்த அறிவிப்புகளில் இந்த நான்கு  மொழிகளிலுமே செய்து வருகிறது.   கோவில் ஒலிபெருக்கிகளிலும்  திராவிட மொழிகள் வலம் வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் காலண்டர், ஐய்யப்பன் வரலாறு, புகைப்படங்கள் போன்றவையும் திராவிட மொழிகளான தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்,  அகிய மொழிகளில் அச்சிட்டு  விற்கப் படுகின்றன. 

ஒரு விஷயத்தை நான் மறந்து விட்டேன். அது... இசைத் தட்டு விற்பனை!.
மிக பிரமாண்டமான வியாபாரச் சந்தையான 'அய்யப்பன் இசைத் தட்டு விற்பனை';  இன்று  இந்த நான்கு  மொழிகளிலும் சக்கப் போடு போடுகின்றதை  நான் சொல்லித்தான்  நீங்கள் தெரிந்துக்  கொள்ளவெண்டியவசியமில்லை. 

வழியெங்கும் உள்ள உணவகங்களில் கூட தட்டுத்தடுமாறி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் எழுதிவைத்திருக்கின்றனர்.

இப்படி திரும்பிய  திசையெங்கும் திராவிட மொழி குடும்பத்தை சார்ந்த  மொழிகள் அதிக அளவில்   பின்னி பினைந்திருக்கும்  காட்சி நமக்குள் வியப்பையும் மகிழ்ச்சியை தருகின்றது.

அதனாலயே  'சாமி ஐய்யப்பனை' இனி  நாம்  'திராவிடர்களின் தெய்வம்' அல்லது 'தென்னிந்தியர்களின் தெய்வம்' என்று மனதார அழைக்கலாம்.


தம்பி என்று கூப்பிடுவது சரியா ?

தினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் 'பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும்  வழங்கி வருகிறார்.  இந்த வாரத்தில் வந்ததை உங்களுக்காக ...

சகோதரர் என்னும் சொல்லுக்கு உடன் பிறந்தவர் என்பது பொருள். சக+உதரர் (உதரம் -வயறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர்.   தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல். ஆனால் தமையன்,தமக்கை,தம்பி,தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?

தம் + ஐயன் = தமக்கு மூத்தவன்- தமையன் (அண்ணன்)

தம் + அக்கை =தமக்கை - தமக்கு மூத்தவள் (அக்கா)

தம் + பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் (தமக்குப் பின்)  பிறந்தவன்- தம்பி

தம் + கை = தமக்குச் சிறியவள்  - தங்கை  (கை எனும் சொல் சிறிய என்று பொருள்படும்)



இப்படி எல்லாம்  ஆங்கிலத்தில் கூறிவிட முடியுமா?  அங்கு Brother என்பதோடு ஒட்டுச் சொற்களை இணைக்க வேண்டும்.  Younger Brother, Elder Brother என்றிவ்வாறு  குறிப்பிடுகிறோம்.  நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனி பெயர் இருக்கும் போது, ஆங்கில மொழியின் தாக்கத்தால் 'மூத்த சகோதரர்' என்றும் 'இளைய சகோதரர்' என்றும் அழைப்பது சரியா?  என்று இக் கட்டுரையில் நம்மை கேள்வி கேட்கிறார் கட்டுரையாளர்.

அதோடு குழந்தை பருவம் என்று சொல்லுகிறோம். இந்த குழந்தை பருவத்திலேயே பத்து பிரிவை கண்டவர்கள் தமிழர்கள்.

ஆண்பால் பிள்ளையாயின்.... 1. காப்புப் பருவம், 2. செங்கீரைப் பருவம், 3. தாலப் பருவம், 4. முத்தப் பருவம், 5. சப்பாணிப் பருவம், 6. அம்புலிப் பருவம், 7. வருகைப் பருவம்,  8. சிற்றில் பருவம், 9. சிறுதேர்ப் பருவம், 10. சிறுபறைப் பருவம்.
இதுவே பெண் பிள்ளையாயின்.... இறுதி மூன்றும் மாறுபட்டு,   8. கழங்கு (தட்டாங்கல்), 9.அம்மானை, 10.ஊசல் (ஊஞ்சல்) என்று பகுத்துப் பிரித்தார்கள். 

தமிழின் பொருள் பட வாழ்ந்தார்கள் என்று தமிழின் பெருமையை தமிழன் உணர தொடர்ந்து எழுதிவருகிறார். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

ஆனால், இன்றோ தமிழன் வேற்று மொழிக்கு வரவேற்பு செய்து 'தமிழுக்கு' சங்கு ஊதுகிறான்.   நாம் தமிழைப் பற்றி, அதன்  பெருமை பற்றி ஏதாவது  கூறினால், 'உச்' கொட்டுகிறான்.

  • தமிழன் தம் மொழி மறந்த மாந்தனாக மாறிவிட்டான்.



வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...