வெள்ளி, ஜூலை 31, 2009

புளிய மரமும் நானும்...

புளிய மரமும் நானும்...
-தோழன் மபா


எனது பால்யகால வாழ்வில் புளியமரதிற்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. என்ன இவன் பேயாக இருந்திருப்பானா என்று கேட்காதீர்கள்? வைக்கம் முகமது பஷிர் சொல்வது போல் எனது 'பால்யகால சகி' எங்கள் வீட்டு புளிய மரம். திருவாலங்காட்டில் ரயிலடி தாண்டி நடுத் தெருவில் எஙகள் வீடு. ஓடு வேயிந்த இரண்டு சுற்று உள்ள வீடு. ஒரு பக்கம் எஙகள் வீடு, அடுத்தப் பக்கம் எஙகள் பெரியண்ணன் வீடு. வீட்டின் கொல்லைப் புறத்தில் அந்த புளிய மரம். தப்பு ...தப்பு ...புளிய மரம் இல்லை, புளிய மரங்கள். இரண்டு புளிய மரங்கள் காதலன் காதலி போல் பின்னி பிணைந்து இருக்கும்.

அந்தளவிற்கு நெருக்கம்.


தாழ்வாக இருக்கும் கிளையில் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தொங்குனவாகில் ஏறினால் சர சர வென்று உச்சி மரத்திற்கு ஏறிவிடலாம். அந்தளவிற்கு எனக்கும் என் புளியமரதிர்க்கும் இணக்கம் உண்டு. இரு மரங்கள் இணைந்தே இருப்பதால் பாதுகாப்பைப் பற்றி பயம் இல்லை. என் வயது ஒத்த பசங்களுக்கு நான் தான் தலைவன் என்பதால், என்னை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். கபடி தான் எங்களது பிரதான விளையாட்டு. புளிய மரத்திற்கு கீழே தான் நாங்கள் கபடி விளையாடும் இடம் இருப்பதால், புளிய மரத்தில் வவ்வால் தொங்குவது போல் எப்போதும் நாங்கள் தொங்கிக் கொண்டு இருப்போம் அல்லது மரத்தில் தூங்கிக் கொண்டு இருப்போம். அந்தளவிற்கு புளிய மரத்தை எங்களது வசதிக்காக மாற்றி இருந்தோம்.புளிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கும் என்று சொன்னேன் அல்லவா ? அந்த இடம் தான் புளிய மரத்தின் மடி. மிகவும் பாதுகாப்பான இடம். ஒரு மாதிரி கிண்ணம் போல் இருக்கும், நாம் மிக எளிதாக பொருந்தி அமரலாம். கால்களை மரத்தின் இருப் பக்கமும் போட்டுக் கொண்டால் மிக பாதுகாப்பாக அமர்து இயற்கையின் அந்த சுகமான தாலாட்டை அனுபவிக்கலாம். மரம் மிக மெதுவாக அசைந்து ஆடும். புளிய மரத்தின் இலைகள் மிக சிறியது என்பதால், சூரிய கதிர்கள் மிக அழகாக ஊடுரிவி நம் மேல் இதமாக படும்.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் 'தாய்லந்து' நாட்டின் 'தாய் எக்ஸ்போ ' கண் காட்சி அண்மையில் நடைப்பெற்றது. அங்கு அவர்களது பாரம்பரியமான தின் பண்டம் ஒன்று வைத்து இருந்தார்கள், அது என்ன தெரியுமா? புளியம் பழத்தின் மேல் சீனி தூவி அழகான பிளாஸ்டிக் கண்டைனரில் அடுக்கி இருந்தார்கள். மக்கள் மிக ரசித்து, ருசித்தார்கள் . நானும் வாங்கலாம் என்று போனேன், பிறகு ஒரு எண்ணம் வந்தது 'நமக்கு தெரியாத புளியம் பழமவென்று, வாங்காமல் தெரிம்பினேன். இல்லத்திற்கு வந்த பிறகுதான் வாங்காதது பெரும் வருத்தமாக இருந்தது.போகட்டும் கதைக்கு வருவோம்...புளிய மரத்தில் நான், குண்டுமணி, ரமேஷ், கலியபெருமாள், லோகநாதன் என்று ஒரு பட்டாளமே விளையாடிக் கொண்டு இருப்போம். மரத்தில் படுத்து தூங்க வசதியா ஒரு பரண் அமைத்து இருந்தேன். மூங்கில் தட்டியை, இரு மரத்தின் கிளைகள் வரும் இடத்தில் படுப்பதிற்கு வசதியாக அமைத்து, அதன் மேல் பெட் சீட், தலகாணி எல்லாம் வைத்து பாதுகாப்பாக அங்கு தூங்கலாம். அந்த அளவிற்கு யனது படுக்கையை தயார் செய்து இருந்தேன். அங்கு ரேடியோ வைக்க, முகம் பார்க்கும் கண்ணாடி மாட்ட என்று, என்னால் முடிந்ததை எல்லாம் மேலே கொண்டு வைத்து இருந்தேன்.

அங்கு எப்போதும் ஒரு சுவையான பானம் செய்வோம். பழுக்காத சதைப் பிடிப்பான, செம் புளியம் பழத்தை ஒரு பாத்திரத்தில் கரைத்து கொள்வோம். கூடவே நாட்டுசர்க்கரை , உப்பு, அரைத்த மிளகாய் தூள் இதையெல்லாம் சரியான விகிதத்தில் கலந்தால், புளிப்பு, இனிப்பு, கார்ப்பு என்று பலவித சுவை கொண்ட நீங்கள் விரும்பும் ஒரு பானம் கிடைக்கும். இதை நீங்கள் குடிக்கும் சமயம் நிச்சயம் உங்கள் ஒரு கண்ணை மூடுவீர்கள். புளிப்பின் காரணமாக...அப்படிதான் ஒரு நாள்....

-தொடரும். ◦
Share/Bookmark

கருத்துகள் இல்லை :