என்னைப் போன்ற மார்க்கெட்டிங் மனிதர்களுக்கு சென்னையின் வெயிலுக்கு ஒதுங்க நிழல் சார்ந்த இடங்கள் எப்போதும் பிரியமான ஒன்று. அதில் ஓமந்தூரார் தோட்டமும் ஒன்று.
அரசு உயர்மட்ட அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதி, காவல் துறை சார்ந்த அலுவலகங்கள், எப்போதும் கஞ்சிப் போட்ட வெள்ளை சட்டையில் திரியும் உடன்பிறப்புகள் என்று அதிகார வர்க்கத்தின் அத்தனை அடிப்படை இலக்கணத்தோடு காட்சி தரும் ஓமந்துரார் தோட்டம்.
மதியத்தில் மவுண்ட் ரோடு, திருவல்லிகேணி போன்ற பகுதிகளில் 'கால்ஸ்' (வாடிக்கையாளர் சந்திப்பு) இருந்தால் சிறிது மதிய ஓய்வு நிச்சயம் ஓமந்தூரார் தோட்டம்தான். நிழல் சார்ந்து வெயிலின் தாக்கம் இன்றி எப்போதும் குளு குளு என்று இருக்கும்.
பொதுவாக 'மார்கெட்டிங் பீப்புள்' மதிய உணவிற்கு ஏதாவது ஒரு இடத்தில் ஜமா சேருவார்கள். நகரம் முழுவதும் அலையும் இவர்களுக்கு எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கும், எங்கெல்லாம் உண்ட களைப்புத் தீர சிறிது ஓய்வு எடுக்கலாம் என்பதும் அத்துப்படி. அந்தப் பட்டியலில், சென்னையில் ஓமந்தூரார் தோட்டமும் ஒன்று.
மதியம் சாப்பிட்டு விட்டு வண்டியை அங்கே ஓட்டுனா. பெரிய பெரிய தூங்குமூஞ்சி மரங்கள் வரலாற்றின் வாசனையோடு வீற்றிருக்கும். எப்போதாவது ராஜாஜி ஹாலில் சினிமா படப்பிடிப்பு நடந்துக் கொண்டு இருக்கும். ராஜாஜி ஹாலின் எதிர்புரம் ஒரு பள்ளிக் கூடமும் அதன் அருகில் ஒரு ஆல மரமும் இருந்தது. அதை எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை? உள்ளேயே ஒரு தான் தோன்றி விநாயகர் கோவிலும் இருக்கிறது.
பழைய சட்டமன்ற விடுதி இருக்கும் போது உள்ளே கடைகளெல்லாம் கிடையாது. எது வாங்க வேண்டும் என்றாலும் மவுண் ரோட்டுக்கோ அல்லது அருகில் உள்ள சேப்பாக்கம் சாலைக்கோதான் சொல்லவேண்டும். பிறகு கலைஞர் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை மிக பிரமாண்டமாய் கட்டினார். அதற்கு பிறகு அந்த இடம் நிறைய மாற்றங்களை பெற்றது. ஆவின் பாலகம், அம்மா ரெஸ்டாரண்ட், தளபதி உணவகம், இரண்டு டீ கடை என்று அதன் வியாபரா உலகம் சற்றே விரிவடைந்தது.
பிறகு புதிய சட்டமன்றம் கட்டத்தொடங்கியதும் அவ்வளவாக அங்க செல்ல முடியவில்லை. இனியும் முன்புபோல் அங்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை ?.
போகட்டும் அங்கு நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.
இப்படித்தான் நானும் எனது தம்பியும் (டாக்டர் ஷங்கர்) ஒரு நாள் ராஜாஜி அரங்கின் எதிரில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம், அப்போது ஒரு மனிதர் கருப்பாக கண்ணாடி போட்டுக் கொண்டு 'அரக்க பரக்க' ஓடிவந்தார். "சார்..சார்... என்னோட பணத்தை யாரோ பிக் பாக்கெட் அடிச்சிட்டாங்க சார். என்னோட பொண்ணுக்கு, செமஸ்டருக்கு பணம் கட்ட சென்னை பல்கலைகழத்திற்கு வந்தேன் சார். இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சது பஸ்ல யாரோ பணத்த பிக் பாக்கெட் அடிச்சிட்டாங்க சார். இன்னைக்கு பீஸ் கட்ட கடைசி தேதி சார். எனக்கு சொந்த ஊரு திருவள்ளுர், அங்க போயிட்டுவரத்துக்கு டைம் இல்ல சார். நான் திருத்தணியில ஒரு பள்ளிக் கூடத்தில ஹெட் மாஸ்டரா இருக்கேன் சார்" என்று பள்ளி அடையாள அட்டையைக் காட்டினார்.
சொன்னவருக்கு 50 லிருந்து 60 வயது வரை இருக்கும். மழுங்க சவரம் செய்து, கோல்ட் பிரேம் கண்ணாடி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பார்க்க கெளரவமான தோற்றத்தில் இருந்தார். " நான் திருத்தணியில ஒரு மெடிக்கல் ஷாப்பும் வச்சிருக்கேன் சார். 300 ரூபாய் பணம் கொடுத்திங்கன்னா, தேர்வுக்கு பணம் கட்டிடுவேன் சார்" என்றார். அப்போதும் அவரிடம் பதற்றம் தணியவில்லை.
"பணத்த உங்களுக்கு உடனே எம்.ஓ அனுப்புறேன் சார்" என்று தனது பெயர், தொலைபேசி எண், வீட்டு விலாசம் எழுதித்தந்தார். எங்கள் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டார். நாங்கள் பரிதாபப் பட்டு தேர்வுப் பணம் 300 கூட பஸ்ஸுக்கு 50 ம் சேர்த்துக் குடுத்தோம்.
வாங்கியவர் கண் கலங்கியப் படி நா தழுதழுக்க நன்றி கூறி சென்றார். எங்களுக்கோ உள்ளுக்குள் பெருமிதம், இப்படி கஷ்டப் பட்ட ஆளுக்கு உதவி செஞ்சோமே என்று. அவர் நா தழு தழுக்க நன்றி கூறியது ரொம்ப நாளைக்கு எங்கள் கண் முன்னாடியே நின்றது.
ஆயிற்று, நாட்கள் இரண்டானது, மூன்றானது, ஒரு வாரம் ஆனது. அவரிடமிருந்து எந்த ஒரு தொலைபேசி அழைப்பும் வரவில்லை. நான் அவர் கொடுத்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன், 'நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்' என்றது. அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்தோம்.
ஒரு மனிதன் கஷ்டம் என்று வரும்போது உதவி செய்வது தவறா?. அதுவும் வயதானவர், தேர்வுக்கு பணம் இல்லை என்கிறாரே என்று நம்பி பணம் கொடுத்தோம். இப்படி தத்ரூபமாக நடித்து நம்மை ஏமாற்றி விட்டனே என்று எங்களுக்கு மனசே சரியில்லை. 'அந்த நாயி மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவுதான்' என்று மனதிற்குள் கருவிக் கொண்டோம்.
அந்த நாளும் வந்தது.
மூன்று மாதம் கழித்து ஒரு நாள் காலை 11 மணி இருக்கும், ஷங்கர் எனக்கு போன் செய்தான். " உடனே என் கிளினிக்குக்கு வாடா, நம்பள ஏமாத்திட்டு போனவன புடுச்சி வச்சிருக்கிறேன்" என்றான். எனக்கு உள்ள கோபத்தை வண்டியில் காட்டினேன்.
போனா... சார் சேர்ல கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். போன வேகத்தில் போட்டேன் ஒன்னு. அங்க திட்டுனத இங்க எழுத முடியாது.
விசாரித்ததில் அவனுக்கு இதுதான் வேலையாம். ஒரு பகுதிக்கு வந்து ஏமாற்றினால், அந்த பகுதிக்கு மீண்டும் செல்வது 4 அல்லது 5 மாதம் கழித்துதானாம். திருவாளர் திருடனாரின் அன்றைய விஜயம் பெஸண்ட் நகர். இவன் கிளினிக் அருகில் வந்து யாரையோ புருடா விட்டு ஏமாற்ற முயல, அப்போது பிடிபட்டிருக்கிறான்.
திருத்தணி முருகன் கோயிலில் உள்ள சத்திரத்தில்தான் ஜாகை. காலையிலேயே தொழிலுக்கு கிளம்பிவிடுவாராம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாம். குறைந்தது 200 லிருந்து 500 வரை கிடைக்குமாம். ஒரே ஒரு மகனாம். தகப்பனின் இந்த திருட்டுத்தனம் தெரிந்து வீட்டை விட்டு அனுப்பி விட்டானாம். அதிலிருந்து திருட்டை முழு நெர தொழிலாக கொண்டுள்ளார். 'தினம் ஒரு ஏரியா, சுக போக வாழ்க்கை' என்று நோகாமல் நொங்கு தின்றிருக்கிறான்.
பிறகென்ன... நம்பர் 100 க்கு போன் செய்து அவனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தோம்.
பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற நமது 'ஈகை குனம்' இத்தகைய ஏமாற்று பேர்வழிகளால் நசுக்கப் படுகிறது. யாரவது உண்மையாய் உதவிகள் கேட்டால் கூட, நம்மால் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடிகிறது. இத்தகைய நூதன திருடர்கள் இன்றும் நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
7 கருத்துகள்:
நீங்க... சட்டமன்ற உறுப்பினர்களைத் தான் சொல்றீங்களோன்னு வந்தேன்... ;-)
நாங்களும் இது மாதிரி ஒருத்தனை பிடிச்சு உதைச்ச அனுபவம் உண்டு...
Kindly remove this comment word verification.
எதையோ எழுத வந்து எங்கேயோ போய்விட்டது பதிவு. ஓமந்தூரார் தோட்டத்தின் சிறப்புகளை எழுத வந்தேன். கடைசியில் திருடனை பற்றி எழுதிவிட்டேன். அந்த
இடத்தின் மகிமை அப்படியோ...?!
-தோழன் மபா
"நெஞ்சு பொறுக்குதில்லை,இந்த நிலை கேட்ட மாந்தரை நினைக்கையில்"
நிலை கெட்ட மனிதர்கள்தான், பிறரின் நிலை கெடவும் காரணமாக இருக்கிறார்கள்.
//கடைசியில் திருடனை பற்றி எழுதிவிட்டேன். அந்த இடத்தின் மகிமை அப்படியோ...?!//
ஹி ஹி...
நீங்க சொன்ன மாதிரி சில ப்ராடு பசங்க பண்ற வேலையால, உண்மையா உதவிக்கேட்டு வருறவங்களையும் சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டி இருக்கிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் குறித்த வித்தியாசமான பதிவு. காலத்தின் மாற்றம் இதுதான், சிறிய அளவில் திருடியவர்கள் பெரிய திருடர்கள் வரும்போது அங்கிருந்து விரட்டப்படுவது இயற்கையே.
அது சரி, தோழரே உங்களுகளுக்கு தினமணி கிருஷ்ணமூர்த்தி தெரியுமா?
என்ன ஒரு குறும்பு, உங்களை தெரியாமலா ?
அதிரடியான செய்திகளை தந்து ஆட்சியாளர்களை அலற விடும் தங்களை தினமணி வாசகர்கள் நன்கு அறிவர்.
//சிறிய அளவில் திருடியவர்கள் பெரிய திருடர்கள் வரும்போது அங்கிருந்து விரட்டப்படுவது இயற்கையே. //
மிகச் சரியான விமர்சனம். நன்றி கிருஷ்ணமூர்த்தி.
கருத்துரையிடுக