இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி ஸ்டாலின் எழுத்தில், இசையில் வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடல் இணையத்தின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பிரபலமாகி வருகிறது.
முழுக்க, முழுக்க தமிழில் "யூ டியூப்பில்' வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடலை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கேட்டு ரசித்துள்ளனர். யாழ்ப்பாணம் செயின்ட் பேட்ரிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர் இப்போது கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். இசைஆர்வம் காரணமாக அவ்வப்போது சில கவிதைகளுக்கு இசைவடிவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில், நடிகர் தனுஷின் "கொலைவெறி' பாடலின் அடிச்சுவடைப் பின்பற்றி ஜெர்ரி வெளியிட்டிருக்கும் "யாழ்ப்பாணத்திலிருந்து கொலைவெறிடா' பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாடலின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் நகர எல்லையில் சிங்கள மொழியில் வைக்கப்பட்டிருக்கும் எழுத்துப் பலகை காண்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, "என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா' எனத் தொடங்கும் பாடல் வரிகள் ஒரு தமிழ் இளைஞரின் கோபத்தை ஆக்ரோஷமாகக் கொப்பளிக்கிறது.
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள்
கொஞ்சம்...
கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?
என்று இந்தப் பாடலின் வழியாக 28 வயதாகும் யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி கேட்கும் கேள்விகள் உலகத் தமிழர்களின் காதுகளில் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.உள்நாட்டு போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழின் அடையாளம், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இப் பாடல் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே தனுஷின் "கொலைவெறிடி' பாடலுக்கு இணையாகப் இந்தப் பாடலும் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக