வியாழன், மே 30, 2013

தமிழுக்குச் சிறுமை!

தினமணி  (28/05/2013 ) தலையங்கம்.


                                 லையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்:... செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?

ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.

இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.

மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.

சேர நிலம் - மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.

இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.

இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.

இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.

"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.

தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா? செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.

வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!

-நன்றி தினமணி!

Share/Bookmark

கருத்துகள் இல்லை :