ஞாயிறு, ஜூன் 16, 2013

ஒரு வார்த்தையால் எனது வாழ்க்கையை மாற்றிய எனது தந்தை.


பத்மநாபன்


           நான்  சென்னை வந்து தி நகரில் ஒரு எலக்ட்ரிக்கல் கம்பேனி ஒன்றில் மாதம் 1500க்கு அக்கவுண்டண்டாக வேலைப் பார்த்த போது எனது தந்தையிடமிருந்து போன் வந்தது. "என்னடா எல்லோரும் செய்யிற வேலையை செய்யற. சினிமா பீல்டு அல்லது பத்திரிகை பீல்டுக்கு போ. இந்த வேலையை யார் வேண்டுமானலும் செய்யலாம்." என்றார்

1995ல் கல்லூரி முடிந்து 20 நாளில் சென்னை வந்து, ஒரு நண்பரின் உதவியோடு அந்த வேலையில் சேர்ந்திருந்தேன்.  பி.காம் முடித்திருந்ததால் அக்கவுண்டண்டாக வேலைக்கு சேர்ந்தேன். வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு அட்வைஸ் எனது தந்தையிடமிருந்து வந்தது.

எனக்கு முன்பாக இரண்டு சாய்ஸ் இருந்தது.  சினிமாவா அல்லது பத்திரிகையா?  மிக கனமான கேள்வி. நான் விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. என்னதான் அப்பா அரசுத் துறையில் பணிபுரிந்துக் கொண்டு இருந்தாலும். 10பேர் அடங்கிய  பெரிய குடும்பம் என்னுது. குழந்தைகளில்  நான்தான் மூத்தவன். இதில்  நான் எடுக்கும் முடிவைப் பொருத்துதான் எனது தம்பி தங்கைகளின் வாழ்க்கை.


 சினிமா என்றால் போராடி வெளியே வர குறைந்தது 10 வருடமாவது ஆகும்.  நான் சம்பாதித்தால்தான் குடும்ப நிலமை சீராகும் என்ற நிலையில்  சினிமா பீல்டுக்கு போனால் என்னால் குடும்பத்திற்கு உடனடி பலனைத் தரமுடியாது. அதுவரையில் பொருளாதார ரீதியாக என்னையும்  நிலை நிறுத்திக் கொள்ளவது கடினம். தொடர்ந்து தந்தையிடமிருந்து பணம் எதிர்பார்க்க முடியாது.   அந்த 10 வருட காலக் கட்டத்தில் என்னை நம்பி இருப்பவர்கள் என்ன ஆவார்கள் என்று கூட தெரியாது.

இதற்கிடையில் அந்த அக்கவுண்டன் வேலை சரியாக செய்யத் தெரியவில்லை என்று அடுத்த மாதத்திலிருந்து நீ வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டர் அதன் எம்டி. வேலை செய்ததற்கு 600 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

இந்த இக்கட்டான சூழ் நிலையில் நான் எடுத்த முடிவு 'பத்திரிகை'.  அங்குதான் எதாவது ஒரு வேலையில் சேர்ந்தால் உடனடி சம்பளம் கிடைக்கும். நிச்சயம் அது எனது குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். கல்லூரி காலத்தில் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் ஆசிரியராக இருந்ததால் அந்த அனுபவத்தில் பத்திரிகை துறைக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். அப்படித்தான் 1995ல் 'தினபூமி' நாளிதழில் 'அட்வர்டைசிங் கேன்வாஸராக' வேலைக்கு சேர்ந்தேன். இப்போது எக்ஸ்பிரஸ் குழுமத்தில் முது நிலை வர்த்தக மேலாளராக பணிபுரிந்துக் கொண்டு இருக்கிறேன். .
 அதற்கு முன்பாக பத்திரிகைக்கு வேலைக்கு போகலாம் என்ற ஐடியாக் கூட எனக்கு இல்லை. எனது தந்தையின் வார்த்தையால்தான் எனது வாழ்க்கை பத்திரிகை உலகில் பயணமானது. ஒரு நல்ல நேரத்தில், ஒரு வார்த்தையால் எனது வாழ்க்கை பாதையை  மாற்றி அமைத்தவர் எனது தந்தை திரு. பத்மநாபன்.

ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் ஒரு தந்தை இருக்கிறார். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

Share/Bookmark

2 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் ஒரு தந்தை இருக்கிறார்.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி ராஜேஸ்வரி. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.