திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சமூக வலைதளங்களிலுமா சாதி?



//மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.//


 By தோழன் மபா.
First Published : DINAMANI 12 August 2013 02:15 AM IST




    நமது கலையும் பண்பாடும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. மொழி வளமை, இலக்கியங்களின் ஆளுமை, உயர்வான கலாசாரம், ஆன்மிகம் என்று உலகிற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கலாசார உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கண்டங்கள் இருண்ட கண்டமாக இருந்தது என்பார்கள்.


இப்படிப்பட்ட பெருமை மிக்க தமிழ்ச் சமுதாயம் சாதியின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான இணையதளங்களை சாதிப் பெருமைக்கும், சாதிய சண்டைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் தமிழர்கள் என்பது வருத்தமான உண்மை.


மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


முன்னெப்போதையும் விட தற்போது சாதிய சண்டைகள் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது. முன்பு தெரு முனைகளிலும், கடைத் தெருவிலும் நடந்த சாதிச் சண்டை தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சமூக மறுசீரமைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஒரு மேடையாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லிபியா, துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, சமூக வலைதளங்களே காரணமாக இருந்திருக்கின்றன.


நவீன உலகை கட்டமைப்பதில் இன்றைய தலைமுறையினரின் கருவியாக சமூக வலைதளங்கள் செயலாற்றுகின்றன. ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்.


முன்பெல்லாம் எழுதுவதற்கு எளிதில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. நமது கருத்தை நம்மை சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியே எழுதினாலும் அது அச்சேறுவதென்பதும் இமாலைய சாதனையாகவே இருந்தது.


என்னதான் முழு திறமையைக் கொண்டு எழுதினாலும், அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையென்றால் "பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற துண்டு சீட்டு உங்கள் வீடு தேடி வரும்.


ஆனால், இணையதளங்களிலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எவரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. இனம், சமூகம், மதம் போன்ற மிகவும் சென்சிட்டிவான விஷயங்கள் கூட அதன் விபரீதம் புரியாமல் இங்கே விஷமத்தனத்துடன் விமர்சிக்கப்படுகிறது. இதில் தனது சாதி பெருமையை தம்பட்டம் அடிப்பதோடு இவர்கள் நின்று விடுவதில்லை. இதில் சாதிகளை தங்களுக்குள் ஒப்பீடு செய்து கொள்கின்றனர். இரு பிரிவாக பிரிந்துக் கொண்டு மோதிக் கொள்கின்றனர். இதில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு, கேட்கவே காதுகூசும் பல நாராசமான சொற்கள் எழுத்தில் வடிக்கப்படுகின்றன.


இத் தளங்களை தொடங்குவது எளிது என்பதால், தனி நபர்கள்கூட தளங்களை தொடங்கி பிற சமூகங்களை சீண்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இத் தளங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கழிவறை சுவர் போன்று எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கிறுக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.


கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தமது பெயருக்கு பின்னால் தனது ஜாதி பெயரை வைத்துக் கொள்வது ஒரு அநாகரிகமான செயல் என்ற புரிதல் 60களிலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சாதியை தனது பெயரில் இருந்து தூக்கியெறிந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழகம் என்பதை வளரும் தலைமுறை அறிந்திருக்கவில்லை.


இத்தகைய போக்கு நமக்கு நிச்சயம் பலன் தராது. நம்மை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கிதான் அழைத்துச் செல்லும். பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் நம் பொழுதையும் சிலரின் உயிரையும் அழிப்பதற்குப் பயன்படவேண்டாம்.


நமது முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகப் பெரிய தடையாக சாதியே இருக்கிறது என்பதை வளரும் தலைமுறை உணரவேண்டும்.


அரசாங்கமும் சமூகத் தளங்களை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்தவேண்டும். அதில் வரும் பதிவுகள் தணிக்கை செய்யப்படவேண்டும். ஆயுதத்தை விட கூர்மையானது எழுத்து. அது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை சாதி என்ற கொடிய நோயால் பீடிக்கப்பட்டுவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
()()()()()()()()()()()()()


தினமணியில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுதான் எனது கட்டுரை தினமணி தலையங்கம் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.   தொடர்ந்து  எழுதி வந்தாலும் தினமணி தலையங்கப் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவருவதென்பது மிகுந்த கடினமான ஒன்று.  அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது எனது எழுத்திற்கு கிடைத்த  வெற்றியாகவே உணர்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டும் உங்கள் அனைவருக்கும் எனது  நன்றியும்  வணக்கங்களும்!. 

அன்புடன் 
-தோழன் மபா. 
நன்றி! தினமணி (12.08.2013).

5 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

மிகவும் அவசியமான பதிவு இது. அண்மையில் திருப்பூர் கிருஷ்ணன் கூட இது பற்றித் தன் கவலையை வெளியிட்டிருந்தார். சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் பேசிய பட்டுக்கோட்டை பிரபாகரும் இதைக் குறிப்பிட்டிருந்தார். வலைத்தளங்களில் நம் எழுத்துக்களை எடிட் செய்வதற்கு யாரும் இல்லை. எனவே எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடிகிறது. சாதி உணர்வுகளைக் கிளப்பி அதன் மூலம் அற்ப திருப்தி காணும் போக்கு பரவலாகத் தென்படுகிறது. எனவே எழுதுபவர்களுக்குப் பொறுப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது. வயதிலும் அனுபவத்திலும் இளையவர்கள் இணையத்தில் எழுத முற்படும் முன் தமக்குத் தெரிந்த மூத்த பதிவர்களிடம் ஆலோசனை கலந்து கொள்வது பயன் தரும். வரவிருக்கும் பதிவர் சந்திப்பிலும் நீங்கள் இது பற்றிப் பேச வேண்டும் என்பது என் விருப்பம். –கவிஞர் இராய. செல்லப்பா (சென்னை வந்துவிட்டேன்! – தொலைபேசி எண் மாறியுள்ளது: 9600141229 / 044-67453273).

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது. //

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. ஒரு நல்ல எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட பேஸ்புக்கை, இன்று குழு குழுவாக சாதியை அடையாளங் கண்டு கொள்ளவே சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது உண்மையிலேயே யோசிக்க வேண்டிய ஒன்று.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

“சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ்வளர்த்திடல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்ற
பாதி துலங்குதல் இல்லை” என்று பாரதி தன்னிடம் சொன்னதாகப் பாரதி தாசன் சொல்வார். இதன் தேவை இன்றும் இருப்பதன் அவசியத்தை அறைந்து சொல்லிவிட்டீர்கள். விஞ்ஞானத்தோடும் சேர்த்தே மூடநம்பிக்கையை வளர்க்கும் கலையில் தேறிய தமிழர்கள் வெளிநாடுகளிலும் சாதிச் சனியனை விடுவதாக இலலையாம்! எங்கே போய் முட்டிக்கொள்வது?
தங்களின்-
”மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது” எனும் உண்மை கொடுமைதான். நமக்கு இன்னும் வேலையிருக்கிறது நண்பரே! நன்றி.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ தி.தமிழ் இளங்கோ
நன்றி அய்யா,

சமூக வலைத்தளத்தில் தமிழர்களின் சாதி சண்டையை பார்த்து மனம் குமைந்தே இந்த கட்டுரையை எழுதினேன். சாதிய சண்டைகளுக்கு இணையத் தளம் இன்னும் வசதியாக போய்விட்டது?!.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ Muthu Nilavan
தங்கள வருகைக்கு நன்றி அய்யா!.

தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய அடையாளம் புரட்சி கவிஞர் பாரதிதாசன். அதனால் அவரது கருத்தையே எனது வலைத்தளத்தில் வைத்து இருக்கிறேன்.

தமிழ் இளைஞர்களுக்கு நமது மண்ணின் மான்புகளையும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் கொண்டு சேர்க்கவேண்டும். உடலில் மிச்சமிருக்கும் மலம் போன்றே சாதியும் இன்னும் தமிழனிடத்தில் மிச்சமிருக்கிறது.

அய்யா நீங்கள் சொன்னது போலே, நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. குடி, சாதி, உழைப்பின்மை போன்ற துர் குணத்திலிருந்து தமிழனை மீட்டடுக்க வேண்டும். அதற்கு இந்த இணையத் தளங்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

இப் பணிகளை பத்திரிகைகளால் செய்ய இயலாது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு குணாம்சங்களோடு இயங்கி வருகிறது. சாதி ஒழித்து சமத்துவம் காக்க அவைகளால் முடியாது.

பிரபலமான ஒரு தனியார் பல்கலைகழகத்தின் தலைவரே ஒரு சாதி கட்சியின் தலைவராக இருக்கும் போதுதான் நாம் எத்தகையதொரு சமூகத்தில் வாழ்கிறோம் என்ற உண்மை புரியும்.

நாம் நமது பணியை தொடருவோம் அய்யா!.
நன்றி !

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...