திங்கள், ஆகஸ்ட் 17, 2015

சரித்திரம் படைத்த சாமானிய மனிதன் லியோ முத்து!.
              இந்தியாவின் தென் கிழக்கு மூலையில் உள்ள, அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் பிரசித்திப்பெற்ற கல்வி நிலையங்களை தொடங்குவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

கனவுகளின் கதவுகளை நோக்கி தீரமுடன் நடக்கத் தொடங்கிய அந்த எளிய மனிதர், தனக்கான பெரும் சாம்ராஜியத்தை நிறுவிவிட்டு சென்றிருக்கிறார்.
நமக்கெல்லாம் அரசாங்க வேலைக் கிடைத்தால் என்ன செய்திருப்போம்....?. ஓய்வு பெரும் நாள் வரையில் ஓய்வாக வேலை செய்துவிட்டு, ஓய்வு பெற்றதும் வீட்டில் அமர்ந்து ஓய்வாக பென்ஷனை வாங்கி காலத்தை கடந்திருப்போம். ஆனால் பொதுப்பணித்துறையில் வேலை செய்த ஒருவர் தனக்கு கிடைத்த சொற்ப நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி, அதன் நெளிவு சுளிவுகளை கற்று நல்லதொரு நிறுவனத்தை தொடங்கினார். அதுவே அவரை சிங்கமென இத் தொழில் உலகில் கர்ஜிக்கவைத்து அவருக்கான நெல்லதொரு பெயரை பெற்றுத் தந்தது. 

அவர் லியோ முத்து!. 
 ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் தலைவர். 

கடந்த சில மாதமாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த மாதம் ஜூலை 10ம் தேதி, தனது 63வது வயதில் இயற்கை எய்தினார். இவரது இயர்பெயர் எம்.ஜோதிபிரகாசம். 

அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்ட லியோ முத்து, தனது கல்வி நிறுவனங்களை ஒரு முன் மாதிரி கல்வி நிலையமாக மாற்றி இருக்கிறார், கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழத்தின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி. 

அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு கல்லூரி, தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் வருவது என்பது பாராட்டப் படவேண்டிய ஒன்று!. 

மாணவர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி, பெற்றோர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி என்று இரண்டு விதமான பொறியியல் கல்லூரிகளை நாம் பார்க்க முடியும். இன்றைய கால கட்டத்தில் படித்து முடிக்கும் முன்பே பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பினை பெருவதையே மாணவர் சமுதாயமும் பெற்றோர்களும் விரும்புகின்றனர். தரமான கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் இவற்றில் அவர்கள் எந்தவித சமரசமும் செய்துக்கொள்வதில்லை. இரு தரப்பும் விரும்பும் ஒரு கல்லூரியாக தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் சவாலான ஒன்று!. அந்த சவாலை மிக அனாயசமாக செய்து முடிக்கிறது ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்கள்.

அதனாலயே தமிழகத்தில் இருக்கும் 552 பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவிடுகிறது. 

லியோ ஹவுஸிங்கை தொடங்கி நடத்திவந்த லியோ முத்து, 1989 வாக்கில் சென்னை மடிப்பாக்கத்தில் சாய் மெட்ரிக்குலேஷன் பள்ளியை 137 மாணவர்களைக் கொண்டு தொடங்கினார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 100 சதவீத தேர்ச்சியை தக்கவைத்து வருகிறது இப் பள்ளி!. ஒரு கல்விச்சாலையை தொடங்கி இக் சமூதாயத்திற்கு உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அதுவே பின்னாளில் அவர் சாய்ராம் பொறியியல் கல்லூரி தொடங்க வழிவகுத்தது. தொழிநுட்பக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் சித்தா, ஆயூர்வேதா, யூனானி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளையும், பாலிடெக்னிக்குகளையும் நடத்திவருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கல்லூரிகளை நடத்திவருகிறது சாய்ராம் கல்வி குழுமம்.

லியோ முத்து அவர்கள் விட்டுச் சென்ற பெரும் பணியை, அவரது புதல்வர் சாய் பிரகாஷ் ஏற்று செயல்பட தொடங்கிவிட்டார். கல்வி நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலன ஒன்று. சவாலான அந்த பணியை மிக துணிவுடனும் வெற்றிகரமாகவும் செய்துவருகிறார் சாய்பிரகாஷ். 

()()()() 

இரண்டு வருடங்களுக்கு முன்னர், அவரது நிறுவனத்தைப் பற்றிய செய்தி ஒன்றை அவரது ஒப்புதல் இல்லாமல் எழுதிவிட்டோம். அது எங்களுக்கும் அவருக்கும் மனக் கசப்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் காரம்சாரமாய் ஓடிய அந்த பிரச்சனையை எப்படியோ சமாளித்து முடிவுக்கு கொண்டுவந்தோம். பத்திரிகையாளர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். திடீரெண்டு அவரிடத்திலிருந்து போன் வரும் "சார்...... சேர்மன் சார் பேசுறாங்க" என்று அவரது உதவியாளர்கள் யாராவது பேசி போனைத் தருவார்கள். அவர் தொடங்கப் போகும் கல்வி நிலையங்களைப் பற்றி கூறுவார். அவருக்கான கனவுகள் என்பது மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. என்னை சில நேரங்களில் மாயவரத்துக்காரரே என்றுதான் அழைப்பார். அவரோடு ஒரு நாள் அவரது இல்லத்தில் உணவறுந்தும் பாக்கியமும் கிடைத்தது. 

தாம்பரத்தில் சர்வ வல்லமைப் படைத்த அரசியல் பிரமுகர் ஒருவர் அவரோடு மோதி வந்தார். சாலையில் செல்லும் கல்லூரி பேருந்துகள் மீது இடையூறு ஏற்படுத்திவருவது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, என்று பல வழிகளில் தொந்திரவு கொடுத்து வந்தார். இவர் பல முறை எச்சரித்தும் அந்த அரசியல்வாதி இவரை விடுவதாக இல்லை. முடிவில் இவர் செய்த ஒரு விஷயம் அந்த அரசியல்வாதியை தலையெடுக்க முடியாமல் செய்துவிட்டது.
சாய்ராம் கல்லூரிக்கு அந்த அரசியல்வாதி, என்னென்ன வழிகளில் இடையூறு செய்கிறார். அவரது அரசியல் ரீதியான தில்லுமுல்லுகள், சட்டத்திற்கு புறம்பான அவரது நடவடிக்கைகள், மக்கள் விரோத செயல்கள் என்று பெரும் பட்டியலை தயார் செய்து, அதை ஒரு மாலை பத்திரிகை ஒன்றில் ஒரு பக்கம் விளம்பரமாக கொடுத்துவிட்டார். முதலில் அந்த விளம்பரத்தை வெளியீட மறுத்த நிர்வாகம், இவர் வழங்கிய ஆதாரத்தை அடிப்படையாகவைத்து அந்த விளம்பரத்தை வெளியீட்டது. விளம்பரத்தை வெளியிட்டதோடு மட்டும் நில்லாமல், 50 ஆயிரம் பிரதிகளை காசு கொடுத்து வாங்கி தாம்பரத்தில் வீடு தோறும் விநியோகம் செய்துவிட்டார். அந்த விளம்பரத்தை அந்த அரசியல் பிரமுகர் எதிர்பார்க்கவில்லை. அந்த அரசியல்வாதியின் பொய் முகம் கிழிக்கப்பட்டு அவரது அரசியல் அஸ்திவாரத்தையே தகர்த்தெரிந்துவிட்டார். அத்தகைய போர்குணம்  கொண்டவர் லியோ முத்து. 

இத்தகைய போர் குணம் கொண்டவர்களே தங்களுக்கன வெற்றிகளை அடைகின்றனர். தங்களுக்கான கனவுகளை அடைய... அவர்கள் அயராது உழைக்கின்றனர். அது இச் சமூகம் மேம்படவும், மாணவர் சமுதாயம் நல்லதொரு உலகை படைக்க வழிகாட்டியாகவும் அமைந்துவிடுகிறது.  அத்தகைய மனிதர்களையே நாளைய விருச்சத்தின் விதையாக பார்க்கிறது இவ் உலகம்!. 

 அண்மையில் ( 9.8.2015) லியோ முத்து அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திராவிடர்க்கழக் தலைவர் வீரமணி கலந்துக் கொண்டு படத்தை திறந்துவைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தி.ஆர்.பாலு கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு, சன் டிவி  வீர பாண்டியன், ஜெயா கல்விக் குழுமத்தின் தலைவர் கனகராஜ், ஆரம்கே மற்றும் ஆரம்டி கல்விக் குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் போன்றோர் கலந்துக்கொண்டனர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு லியோ முத்துவின் மருமகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி .ஆர்.பி ராஜா நன்றி கூறினர்.

.
-தோழன் மபா 

Share/Bookmark

2 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படிப்பட்ட தைரியசாலிகள் நிறைய பேர்கள் வேண்டும்...

பகிர்வுக்கு நன்றி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

லியோ முத்து அவர்களின் நினைவினைப் போற்றுவோம்