திங்கள், அக்டோபர் 04, 2021

செம்மீன் மலையாள நாவல்


          தென்னவோ, தகழியின் 'செம்மீன்' படித்து முடித்தப்பின், கருத்தம்மா - ஃபரீக்குட்டியின் நினைவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் பரிக்குட்டி பெண் குட்டி என்றே நினைத்தேன். பிற்பாடுதான் தெரிந்தது அது ஃபரீக் குட்டி என்று.
மலையாளிகளின் இலக்கிய பிரஸ்தாபத்தில் செம்மீனுக்கு முக்கிய இடமுண்டு. 1956 ல் செம்மீன் நாவல் வெளிவந்த போது, அந்நாட்களில் இந் நாவல் பல பெரிய பாராட்டுகளையும், சில பல கடும் விமர்சனங்களையும் எதிர் கொண்டிருக்கிறது. 
 

சாகித்ய அகாடமி (1959) விருது பெற்ற இந் நாவலை,
தகழி சிவசங்கரப் பிள்ளை 20 நாட்களில் எழுதி முடித்துவிட்டார்?! என்னவோரு அசாத்திய வேகம்? 
 
1956 ல் செம்படவச் சேரிகளின் நிலையையும், அரையர்களின் இனவரைவியலுமாக இக்கதை நகர்கிறது. கட்டிய கணவன் கடல் மீதேறி போகையில், கரையில் இருக்கும் மனைவியின் ஒழுக்கம்தான், கடலாடும் மீனவனை காப்பாற்றுகிறது. கடலில் அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் என்றால், அதற்கான முழு பொறுப்பையும் தயவுதாட்சன்யமின்றி பெண்ணின் மீதே சுமத்தி வைக்கிறது இச் சமூகம். 
 
ஒரு ஆணும் பெண்ணும், அங்கே இங்கே பேசிக் கொண்டு நின்றால் போதும்....உடனே கதை கட்டிவிடுகிறார்கள். அதுவும் என்னேரமும் காத்து வீசும் பட்டிணச் சேரியில் கேட்கவா வேண்டும்? அது ஊதி ஊதி பெரிதாக்கப்படுகிறது. அப்படியான ஒரு சுழலில்தான் கறுத்தம்மாவும் முஸ்லிமான பரீக்குட்டியும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு வகையில் கறுத்தம்மாவின் தந்தைக்கு பரீக்குட்டி சின்ன முதலாளி. 
 
'மரக்காத்தியின் ஒழுக்கம்தான் மரக்கானுக்குச் சொத்து' என்பது போலவே பெண்கள் இச் சமூகத்தில் வளர்க்கப்படுகிறாள்.
பெண்ணின் ஒழுக்க நெறியின் ஊடே, இக் கதை பயணிக்கிறது. இந்தக் காலத்தோடு அந்தக் கதையை பொறுத்திப்பார்க்க முடியாது. அது அபத்தம். ஒரு அபப் புனைவாகத்தான் இக் கதை படைக்கப்பட்டிருக்கிறது. சுந்தரராமசாமியின் தேர்ந்த மொழி பெயர்ப்பு நம்மை மலையாள மூல நாவலை வாசிப்பது போன்றே இருக்கிறது. மொழி பெயர்ப்பு நாவல் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை.
செம்மீனின் ஏகோபித்த வரவேற்பையொட்டி... அது திரைப்படமாக 1965ல் எடுக்கப்பட்டது. ஒரிஜனல் நாவல் போலவே, படமும் செம ஹிட்! எட்டு லட்சம் முதல் போட்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படம் 40 லட்சத்தை சம்பாதித்து தந்திருக்கிறது. அந்த காலத்தில் அது ஜாக்பாட்! 
 
மலையாளிகளின் சுக ஜீவிதத்தில், ஒரு தேசிய கீதம் உண்டெங்கில் அது...
'கடலின் அக்கரை போனோரே
காணாப் பொன்னுக்காய்ப் போனோரே....' என்ற செம்மீன் பாடல் தான். இன்றளவும் மலையாள திரைப்பட பாடல்களின் அடையாளமாக, கலாச்சாரமாக இப்பாடலே இருக்கிறது. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர் திரையிசை மேதை சலீல் செளத்ரி அவர்கள்.
 
 
-----
சீர்காழிக்கு அருகில் எனது மாமா (மாமனார் வீடும் கூட) வீட்டிலிருந்து... கூப்பிடும் தூரத்தில் தான் சின்ன கொட்டாய்மேடு கடல் இருக்கிறது. நல்ல வெள்ளை மணல் போர்த்திய கடல். தண்ணீர் அப்படியே ஸ்படிகமாட்டாம் மின்னும். அப்படி ஒரு சுத்தம்.
செம்மீன் வாசித்தப் பிரேமையில் அப்படியே கடற்கரை ஓரம் நடந்தேன். கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோனியில் ஃபரீக் குட்டி போல் படுத்துக் கிடந்தேன். 
 
வானில் நட்சத்திரங்கள் மின்ன தொடங்கியிருந்தன...நினைத்துப் பார்த்தால் நம்முள்ளும் ஒரு கடல் இருக்கிறது. அது சதாசர்வகாலமும் நினைவுகளோடு ஆர்பரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 
 
இப்படியான கடற்கரைகளில்தான் எத்தனை எத்தனை கருத்தம்மாக்களும் ஃபரீக்குட்டிகளும், பழனியும் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களின் துயர் மிகுந்த கதையைதான் இந்தப் பெருங்கடல் மீண்டும் மீண்டும் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. 
 
செம்மீன் காலத்தால் அழியாத காவியம்!

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி ஐயா

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

மிக்க நன்றி அய்யா !

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...