திங்கள், ஜூலை 25, 2022

'வெண்ணிற ஆடை' இருட்டிலிருந்து சில உண்மைக் கதைகள்.



எனது புத்தக அலமாரியிலிருந்து மெலிதான ஒரு புத்தகத்தை உருவினேன்; அது சரவணன் சந்திரன் எழுதிய 'வெண்ணிற ஆடை'.
புத்தகம்தான் மெலிதாக இருந்ததே தவிர, உள்ளே உள்ள கதைகள் மெலிதாக இருக்கவில்லை, அவை கணத்துக் கிடக்கின்றன.
 
அக வாழ்வின் இருண்ட பக்கங்களில் வாழும் நிழல் மனிதர்களை இக் கதைகள் படம் பிடித்திருக்கிறது. அவர்கள் சக மனிதர்கள் போன்று நம்மிடையே உலவினாலும், அவர்கள் சக மனிதர்கள் இல்லை. இந்த நிழல் மனிதர்கள் பெரும்பாலும் தங்களது உறவுகள், தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று, இவர்கள் மீதே அவர்கள் அறியாமலயே படிந்துக் கிடக்கிறார்கள். சிலர் சுதாரித்து… பதறி உதறி விலகுகிறார்கள். சிலர் அதிர்ச்சியில் செய்வதறியாது சிதைந்துப் போகிறார்கள். 
 
ஒரு கதையை முடித்துவிட்டு அவ்வளவு எளிதாக மற்றொரு கதைக்குள் நீங்கள் சென்றுவிட முடியாது. “இப்படியும் நடக்குமா ….?” என்று நீங்கள் புருவம் உயர்த்திப் பர்க்க, உங்களுக்கு நீண்ட அமைதி தேவைப்படும். அந்த அமைதியே உங்களை ஆசுவசப்படுத்தும். 
 
‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி சின்னத் திரையில் வெளிவந்தது….. இன் நிகழ்ச்சி கடும் விமர்சனங்களையும், பராட்டுதலையும் ஒருசேர பெற்றது எனலாம். அன் நிகழ்ச்சியின் இயக்குனர்தான் இந் நூலின் ஆசிரியர். “இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் எழுத்து வடிவமல்ல. தொலைக்காட்சி திரையில் சொல்ல முடியாத பல உண்மைகள் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றன. இதுவும்தான் தமிழ் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் விசித்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை” என்கிறார் இன் நூலின் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன். 
 
கதைகள் பெரும்பாலும் மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகிறது. கதையாசிரியர், காட்சிப் பட இயக்குநர் என்பதால், எந்த வித நீட்டலுமின்றி உள்ளதை உள்ளப்படிக்கு சொல்கிறார். ஒரு டீ குடிக்கும் நேரத்தில் ஒரு கதையை சொல்லி முடித்துவிடுகிறார். சட் சட்டென்று காட்சிகள் மாறி, நமக்குள் கடத்த வேண்டிய கதையின் வாதையை ஒரு ஷாக் போன்று நமக்குள் பாய்ச்சிவிடுகிறார். 
 
இத் தொகுப்பில் இருபது கதைகள் இருக்கிறது. எந்தக் கதைக்கும் தலைப்பு இல்லை. நீங்களாக ஒரு தலைப்பை கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் கதையில்தான் கதையாசிரியர் எதையும் மூடி வைக்க வில்லையே…..? அப்புறம் எதற்கு தலைப்பு ? மற்றவர் பார்வைக்கு....தலைப்பின்றி கதை திறந்தேக் கிடக்கட்டுமே. 
 
-மபா
 
‘வெண்ணிற ஆடை’
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 120
விலை ரூ.110/-

கருத்துகள் இல்லை:

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...