செவ்வாய், மார்ச் 11, 2025

தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???

தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....??


தர்மேந்திர பிரதான்

முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிருந்து
ருந்து கோத்தபய ராஜபக்சே. அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கிறார் ஒன்றிய கல்வியமைச்சர் பாஜகவின் தர்மேந்திர பிரதான் ?

புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் திட்டத்தையும் முன்னிலைப்படுத்தும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை தமிழ்நாடு ஏற்காவிட்டால், தமிழகத்துக்குத் தரவேண்டிய 2,152 கோடி கல்விக்கான நிதியை   
கொடுக்க முடியாது என்று காட்டமாக கூறினார். தர்மேந்திர பிரதான்.  

இவரது ஆணவப் பேச்சு, தமிழக மக்களிடையே கோபத்தைக் கிளறியிருக்கிறது. 
தமிழகத்திலிருந்து பிரதானுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. கடந்தவாரம் சென்னையில் நடக்க இருந்த கூட்டத்திற்கு வரவிருந்த தர்மேந்திர பிரதான், நிலமை சூடாக இருப்பதை உணர்ந்து கடைசி நேரத்தில் தமிழகத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டார். 

இந்நிலையில்... இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக மக்களை மீண்டும் சீண்டியுள்ளார் தர்மேந்திர பிரதான். புதியக் கல்வி கொள்கைக்கு எதிராக முழக்கமிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து... "நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள்" என்றிருக்கிறார். இவரது பேச்சு மீண்டும் தமிழகத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

 தர்மேந்திர பிரதானின் இந்த மிரட்டல் பேச்சுக்கு, தமிழக முதல்வர் முதற்கொண்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள்
மத்திய கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக. 

தர்மேந்திர பிரதானின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக இவர் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து காட்டமாக பேசிவருகிறார்.  

"அரண்மனை நாயே, அடுக்கடா வாயை"
 என்று மந்திரிகுமாரியில் கலைஞர் எழுதிய வசனம்தான் ஞாபகத்தில் வருகிறது. 

தமிழை, தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசி... 
தமிழர்களின் பொது எதிரியாக மாறி வருகிறாரா தர்மேந்திர பிரதான் ???


ஞாயிறு, மார்ச் 09, 2025

'இது பெண்களுக்கான நேரம்'


நினைத்துப் பார்த்தால் ஆண் பெண் என்ற பேதம் ஒரு ஹம்பக் என்றே தோன்றுகிறது. 

அம்மா, அக்கா, தங்கை, மகள் என்று பெண்கள் சூழ் பெரு உலகமாக நமது உலகம் தொன்று தொட்டு வருகிறது. தினந்தோறும் அவர்களுடன்தான் பொழுது புலர்கிறது, சாய்கிறது. அவர்களின் நமக்கான நாட்கள் என்றுமே தொடங்கப்படுவதில்லை.

இந்த உலகம் தோன்றிய பொழுது பெண் வழிச் சமூகமாகவே இருந்தது. அது 'தாயின் ராஜ்யம்'. அவளே அனைத்தையும் தீர்மானித்தாள். தாய், மகன், மகள் என்ற பேதமில்லை. அங்கே உன்னுடையது- என்னுடையது என்ற வேறுபாடில்லை, அங்கு எல்லாமே பொது. 
அவளது ராஜ்ஜியத்தில் எல்லா ஆடவர் மீதும் தாய்க்குதான் முதல் அதிகாரம் இருந்தது என்கிறார் ராகுல சங்கிருத்தியாயன் தனது 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில். 

முந்தைய ஆண்களின் பெயரைக் கூட சொல்லுவதற்கு பெண்கள் அஞ்சினார்கள். ஆண் மட்டுமே அனைத்தையும் செய்ய வல்லமை உடையவன் என்ற ஒரு பிம்பம் பெண்களிடம் கட்டமைக்கப்பட்டது. அவள் கணவனுக்குப் பின்னால் மூணு அடி தள்ளியே நடந்துவந்தாள். 

பெண்கள் அவளது உடலைக் கொண்டே பொது அளவீடுகளின் வழியே வளர்க்கப்பட்டனர். போர்க்காலங்களில் ஆவினங்களை கவர்வது போல் பெண்களை கவர்ந்து இழுத்து சென்றார்கள். அவளுக்கென்று எந்த உரிமையும் இல்லை. மதவாத வேதங்களும் பெண்களை அடிமை என்றே சித்தரித்தது. 

இன்று உலகம் மீண்டும் பெண் வழிச் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் மிக அதிக பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களை தலைமை தாங்கி வழி நடத்துகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் பணிபுரியும் இடங்களில் பாலின பேதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
உலகளாவில் 2024 ஆம் ஆண்டில் 32.2% பெண்கள் தலைமைப் பதவிக்கு வந்துள்ளனர். 

கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியால், வீடுகளில் பாலின பேதங்கள் குறைந்துள்ளன. பெண்களின் உடல் ரீதியான இடர்பாடுகளில் குடும்பத்தினருக்கு ஒரு புரிதல் வந்திருக்கிறது. அந்த மூன்று நாட்களில் அவள் முன்புபோல் தனது உடமைகளை தூக்கிக் கொண்டு ஓட வேண்டாம். அது வழமையான ஒன்றாக, சகிக்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.

கடைக்கு செல்லும் போது, ​​மிக இயல்பாக 'அப்பா நாப்கின்ஸ் வாங்கிக்கிட்டு வந்துடுங்க'
என்கிறாள் மகள். "எந்த பிராண்டுமா ?" என்ற கேள்விக்கு, ஏதோ சோப்பு சீப்பு பெயர் சொல்வது போல் சங்கோஜமின்றி சொல்லிவிடுகிறாள். நாமும் அவள் கேட்கும் பிராண்டை கடையாக ஏறி இறங்கி வாங்கி வந்துவிடுகிறோம். 

ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே... அந்த குழந்தையின் தகப்பன், ஆண் பெண் பேதமற்ற மனிதனாக, அவனும் புதிதாக பிறக்கிறான். அதுநாள்வரையில் ஆண்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவன் இப்போது பெண்கள் உலகத்தில் நுழைகிறான். மகளை பார்க்கும் போது அவளது வலிகளை அவனும் உணர்கிறான் 

ஒரு பெண்ணும் அப்படிதான். "ஏய் அவன் என்னை பார்க்கிறாண்டி. இவன் முறைக்கிறாண்டி" என்று ஆண்களை கண்டாலே பயந்து கதா தூரம் ஓடுகிற அந்த பதின் பருவப் பெண், பிற்பாடு திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தைக்கு தாயானவுடன் அவளும் ஆண்கள் உலகில் நுழைகிறாள்.

அவளுக்கு, அவளது மகன்தான் உலகம் என்றாகிவிடுகிறது. அவனை உள்ளும் புறமுமாக, நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறாள். அவனது சிறு அசைவுக்குக்கூட அவளிடம் ஒரு பதில் இருக்கும். ஆண்களை கண்டு மிரண்டு ஓடியவள், மிக எளிதாக தனது மகனை வளர்க்கிறாள். 

ஆணுக்கும் பெண்ணுக்கும் முன்பைவிட இப்போது பரஸ்பர புரிதல் வந்திருக்கிறது. கணவன் மனைவி என்ற பந்தத்தைத் தாண்டி அவர்கள் 'நண்பர்கள்' என்ற அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். கணவனை பெயர் செல்லி அழைப்பதற்குப் பயந்த இந்திய மனைவிகள், இன்று 'வாடா போடா' என்ற அளவிற்கு வந்திருக்கிறார்கள். (பாவம் பயலுகள்தான் செய்வறியாது முழி பிதுங்கிக் கிடக்கிறார்கள். இப்படியானபோக்கு இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் நீடிக்கும்)
மெக்ஸிக்கோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் 

"மனிதகுலத்தின் போக்கை ஆண்கள் மட்டுமே வழி நடத்துகிறார்கள் என்று நம்பவைக்கப்பட்டது. அவர்கள் விரும்பிய வரலாற்றை அடைய குழந்தை பருவத்திலிருந்தே நம்மில் பலருக்கு அப்படியே சொல்லப்பட்டது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கண்ணோட்டம் தலைகீழாக மாறிவிட்டது.  இது பெண்களுக்கான நேரம்" என்றார் மெக்ஸிக்கோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம் தனது பதவியேற்பு உரையில்.

20 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகான நவீன உலகப் வார்ப்புகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி குறுகிக் கொண்டே வருகிறது.  

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் !!

-மபா. 
8.3.2025

தர்மேந்திர பிரதான் - தமிழர்களுக்கு பொது எதிரியா ???

தமிழர்களுக்கு காலம்தோறும் ஒரு பொது எதிரி உருவாவார்கள் போலும்....?? தர்மேந்திர பிரதான் முன்பு இலங்கை அதிபர் ஜெயவர்தனா, பின்பு அதே இலங்கையிலிர...