வியாழன், ஜூலை 04, 2013

கட்சியை நடத்த நிதி தேவை. பொது மக்களின் ஆதரவை கோரும் வைகோ.



  தமிழர்களுக்கு ஆதரவான தொடர் பயணத்தில் என்றும் முன்னணியில் இருப்பவர் வைகோ. மன பலமும், ஆள் பலமும் கொண்டு பல எதிர்ப்புகளை கடந்து தனது போராட்ட பயணத்தை எப்போதுமே துடிப்புடன் வைத்திருக்கும் தைரியசாலி. இவரது பேச்மெட்டுகள் அமைச்சர், வாரியத் தலைவர் என்று அதிகாரத்திலும் கல்லூரி, சாராய ஆலை, தொழிற் நிறுவனங்கள் என்று பணத்திலும் புரண்டுக் கொண்டு இருக்க.... இவர் மட்டும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார்.

என்னதான் பொது நலனுக்கான போராட்டம் என்றாலும் காசு, பணம், துட்டு எதுவுமில்லாமல் எதுவும் செய்ய முடியது. அதை உணர்ந்தே தங்களது கட்சியை நடத்த 'நிதி தேவை' என்று முழு பக்க விளம்பரம் ஒன்றை இந்த வார ஆனந்த விகடனில் கொடுத்திருக்கிறது மதிமுக.

மிக துணிச்சலான ஒரு முடிவு.

நமக்கா 'குரல்' குடுப்போருக்கு நாம் 'குரல்' கொடுப்போம். நிதி வழங்குவோம்.

நிதியை 'General Secretary MDMK' என்ற பெயருக்கு எடுத்து காசோலை அல்லது வரைவோலையாகவோ அனுப்பலாம். 


முகவரி: 

தாயகம்
12, ருக்மணி இலட்சுமிபதி சாலை,
எழும்பூர், சென்னை-600008.
தொலைபேசி: 044-28516565, 28516566.
Email: mdmkdonationquery@gmail.com.
 

ஞாயிறு, ஜூன் 16, 2013

ஒரு வார்த்தையால் எனது வாழ்க்கையை மாற்றிய எனது தந்தை.


பத்மநாபன்


           நான்  சென்னை வந்து தி நகரில் ஒரு எலக்ட்ரிக்கல் கம்பேனி ஒன்றில் மாதம் 1500க்கு அக்கவுண்டண்டாக வேலைப் பார்த்த போது எனது தந்தையிடமிருந்து போன் வந்தது. "என்னடா எல்லோரும் செய்யிற வேலையை செய்யற. சினிமா பீல்டு அல்லது பத்திரிகை பீல்டுக்கு போ. இந்த வேலையை யார் வேண்டுமானலும் செய்யலாம்." என்றார்

1995ல் கல்லூரி முடிந்து 20 நாளில் சென்னை வந்து, ஒரு நண்பரின் உதவியோடு அந்த வேலையில் சேர்ந்திருந்தேன்.  பி.காம் முடித்திருந்ததால் அக்கவுண்டண்டாக வேலைக்கு சேர்ந்தேன். வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு அட்வைஸ் எனது தந்தையிடமிருந்து வந்தது.

எனக்கு முன்பாக இரண்டு சாய்ஸ் இருந்தது.  சினிமாவா அல்லது பத்திரிகையா?  மிக கனமான கேள்வி. நான் விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. என்னதான் அப்பா அரசுத் துறையில் பணிபுரிந்துக் கொண்டு இருந்தாலும். 10பேர் அடங்கிய  பெரிய குடும்பம் என்னுது. குழந்தைகளில்  நான்தான் மூத்தவன். இதில்  நான் எடுக்கும் முடிவைப் பொருத்துதான் எனது தம்பி தங்கைகளின் வாழ்க்கை.


 சினிமா என்றால் போராடி வெளியே வர குறைந்தது 10 வருடமாவது ஆகும்.  நான் சம்பாதித்தால்தான் குடும்ப நிலமை சீராகும் என்ற நிலையில்  சினிமா பீல்டுக்கு போனால் என்னால் குடும்பத்திற்கு உடனடி பலனைத் தரமுடியாது. அதுவரையில் பொருளாதார ரீதியாக என்னையும்  நிலை நிறுத்திக் கொள்ளவது கடினம். தொடர்ந்து தந்தையிடமிருந்து பணம் எதிர்பார்க்க முடியாது.   அந்த 10 வருட காலக் கட்டத்தில் என்னை நம்பி இருப்பவர்கள் என்ன ஆவார்கள் என்று கூட தெரியாது.

இதற்கிடையில் அந்த அக்கவுண்டன் வேலை சரியாக செய்யத் தெரியவில்லை என்று அடுத்த மாதத்திலிருந்து நீ வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டர் அதன் எம்டி. வேலை செய்ததற்கு 600 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

இந்த இக்கட்டான சூழ் நிலையில் நான் எடுத்த முடிவு 'பத்திரிகை'.  அங்குதான் எதாவது ஒரு வேலையில் சேர்ந்தால் உடனடி சம்பளம் கிடைக்கும். நிச்சயம் அது எனது குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். கல்லூரி காலத்தில் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் ஆசிரியராக இருந்ததால் அந்த அனுபவத்தில் பத்திரிகை துறைக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். அப்படித்தான் 1995ல் 'தினபூமி' நாளிதழில் 'அட்வர்டைசிங் கேன்வாஸராக' வேலைக்கு சேர்ந்தேன். இப்போது எக்ஸ்பிரஸ் குழுமத்தில் முது நிலை வர்த்தக மேலாளராக பணிபுரிந்துக் கொண்டு இருக்கிறேன். .




 அதற்கு முன்பாக பத்திரிகைக்கு வேலைக்கு போகலாம் என்ற ஐடியாக் கூட எனக்கு இல்லை. எனது தந்தையின் வார்த்தையால்தான் எனது வாழ்க்கை பத்திரிகை உலகில் பயணமானது. ஒரு நல்ல நேரத்தில், ஒரு வார்த்தையால் எனது வாழ்க்கை பாதையை  மாற்றி அமைத்தவர் எனது தந்தை திரு. பத்மநாபன்.

ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் ஒரு தந்தை இருக்கிறார். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.




வெள்ளி, ஜூன் 14, 2013

வேறுமாதிரியாக இருக்கும் அரசியல்வாதிகள்?!



                  அமைச்சருக்கு ஒப்பான பதவி வகிக்கும் அரசியல்வாதி அவர்.  சைரன் வைத்த இன்னோவா அரசுக் காரில்தான் வந்தார். அதற்கு முன்பே என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, "தம்பி நான் கேஷ் எடுத்துட்டு வரேன். நீங்கள் ஆபிஸ் வாசலில் நில்லுங்கள்" என்றார். அவர் சைரன் வைத்த காரில் வந்ததால் கொஞ்சம் பேர் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.


இரண்டு நாளுக்கு முன்பு போட்ட விளம்பரத்திற்கான பணம் அது. வந்தவர் ரூ 15 ஆயிரத்தை என்னிடம் கொடுத்துவிட்டு தம்பி இந்த  15 ஆயிரத்தை வச்சிக்கிங்க மீதி பணம் 10 ஆயிரத்தை இரண்டு நாளைக்குள்ள கொடுத்திடுறேன் என்றார்.  அதை  சொல்லும்போது தயங்கி தயங்கி சொன்னார்.  இவரிடம் பணம் இல்லையா என்று மனதிற்குள் ஒரு ஷாக் அடித்தாலும், அதை முகத்தில் காட்டாமல் இருக்க நிறையவே சிரமப் பட்டேன்.


அவர் எதுவும் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக "பரவாயில்ல சார், நீங்க மீதி அமவுண்ட பொறுமையா கொடுங்க" என்று கூறிவிட்டு அந்த பணத்திற்கு பில் போட்டு அவரது உதவியாளரிடம் கொடுத்தேன்.

பொதுவாக அரசியல்வாதிகள் என்றால் பணபலம் மிக்கவர்களாகவும், கோடிகளில் புரள்பவர்களாகவும் அரசு பணத்தில் மஞ்சக் குளிப்பவர்களாகவும்தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், சில இடங்களில் உண்மை வேறுமாதிரியாக இருக்கிறது?!.  அரசியலில் எல்லோருமே சம்பாதிப்பதில்லை.  தன்னிடம் இருந்ததை விட்டவர்கள்தான் அதிகம்.

ஞாயிறு, ஜூன் 09, 2013

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!






              நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார்.



உணவே நோய்



பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகின்றது. உணவின் வாயிலாகவே நோய்க்கிருமிகள் பரவி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடற் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும். உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது. பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது. உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.சுவையுடன்  இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும். மேலும் சிலர் உணவு கிடைக்கின்றதே என்பதற்காக முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிய பிறகு உண்ணாது உண்பர். இதனால் முன்னர் உண்ட உணவு விஷமாக (Food poison) மாறி உயிருக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். நோய் வருமுன் காப்பதற்கு இதுவே சிறந்த வழி. இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தின் முதற்படிநிலையை,



மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்(942)

என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.



அளவாக உண்ணுதல்



எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய்ஏற்படும். உணவு அளவு குறைந்தால் சிலருக்கு குறைந்த அழுத்த நோய் ஏற்படும். இதனை '‘low pressure’ என்று கூறுவர். உணவு சரியாக உண்ணாமையால் வரக்கூடிய நோயே இக்குறைந்த ரத்த அழுத்த நோயாகும். உணவு சரியான நேரத்தில் உணாமலோ, குறைந்த அளவிலோ உண்டால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து உடலில் படபடப்பு ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஊறுநேரக்கூடிய அளவிற்கு இது கொண்டு சென்று விடும். தேவைக்கு அதிகமாக உண்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை ‘High pressure’ என்பர். சிலர் இறைச்சி உணவை அதிக அளவில் உண்டு தங்களின் உயிருக்கு இறுதியைத் தாங்களே தேடிக்கொள்வர்.



இறைச்சியில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்தக் குழாயில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்த்த்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. அவ்வாறு தங்கிவிடும் கொழுப்பு இரத்தக் குழாயை அடைப்பதும் உண்டு. இதனால் இரத்தம் உடலில் அல்லது இதயத்திற்குப் போகின்ற தமனிகளில் உள்ள சிறிய வழியை அடைத்து இதயத் தாக்குதல் ஏற்படவும் வழி ஏற்படுகிறது. இதனை அறிந்தே வள்ளுவர் மருந்தில்லா மருத்துவத்தின் இரண்டாவது படிநிலையாக,

மிகினும் குறையினும் நோய் செய்யும்(941)

என்று குறிப்பிட்டு அவரவர் உடற்திறத்திற்கு ஏற்ப உண்டால் மருந்து தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார்.



நீண்ட நாள் வாழ.



உலகில் தோன்றிய மக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக பல்வேறு வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். காயகல்பம் உண்கின்றனர். சிலர் தங்கபஸ்பம், பல்வேறுவகையான பஸ்பங்களையும் உண்ணுகின்றனர். எவ்வகையிலேனும் தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு முயல்கின்றனர். இம்முயற்சியிலேயே சிலர் தங்களது குறிக்கோளை அடையமுடியாமல் இறந்தும் விடுகின்றனர். பல்வேறு காலங்களில் பல நாட்டினரும் தமது வாழ்நாளை நீடித்துக் கொள்ள முயன்றிருக்கின்றார். இவ்வாறு பல்வேறு வகையான மருந்துகளைத் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழ் நாளை நீடித்துக் கொள்வதற்கு மருந்துகளோ பஸ்பங்களோ, காயகல்பங்களோ தேவையில்லை. அவ்வாறெனில் எங்ஙனம் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு நோயின்றி வாழலாம்? என்ற வினாவும் நம்முள் பலருக்கு எழுகின்றது.



நலமுடன் நீண்ட நாள் வாழ மருந்தே வேண்டாம்.அதற்கு அளவுடன் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாது தாம் முன்னர் உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகிய பின்னர் உண்டாலே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து முன்னர் உண்ட உணவு முழுமையாக செரித்த பின்னர் அளவுடன் உணவு உண்டாலே நீண்ட நாள் வாழலாம்.


இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாற(943)

என்ற திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றார்.  நாம் அளவில்லாது செரிக்காது தொடர்ந்து உணவை உண்டு கொண்டு இருப்பதனால்தான் உடலில் நோய் ஏற்படுகின்றது. அளவறிந்தும் நாம் உண்பதில்லை. இதனால் தேவையற்ற கொழுப்பு நமது உடலில் சேர்ந்து விடுகின்றது. அதிகப்படியான சதை உடலில் போட்டுவிடுகின்றத� �. தகுந்த உடற்பயிற்சியும் இல்லாத நிலையில் நாம் உண்ட உணவே நமக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகின்றது. எனவே நீண்ட நாள் நோயின்றி வாழ வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.



உணவு உண்ணும்முறை நம்மில் பலருக்கு எவ்வாறு உண்ண வேண்டும் என்பதும் எவ்வளவு, எவ்வப்போது உண்ண வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இத்தகைய உணவு உண்ணுகின்ற முறையினை நாம் நன்கு அறிந்து கொண்டோமானால் நம்மை நோய் என்பது அணுகாது. நன்கு பசித்த பின்னர் தான் நாம் உணவினை உண்ண வேண்டும். அதுவே சரியான உணவு உண்ணும் முறையாகும். “பசித்துப் புசி“ என்ற பழமொழியும் உணவு உண்ணும் முறையை நன்கு எடுத்துரைக்கின்றார்.  இவ்வாறு உண்ணுவதே ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். இத்தகைய மருத்துவ முறையை,

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து (944)

என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.



உண்ட உணவு செறித்து ஜீரணமானதை அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருகின்றார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை  நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது.



அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது.



மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை,



மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)

என வள்ளுவர் நவில்கிறார்.

(நான் படித்ததை இங்கு மீள் பதிவு செய்திருக்கின்றேன். எழுதியவர் பெயர் தெரியவில்லை.)

திங்கள், ஜூன் 03, 2013

தமிழ்க் கிழவன்






எம்  நாவில் நடமாடும்
'தமிழ்' மூன்றெழுத்து !

தமிழேந்தி வாழ என்னுள் ஓடும்
'உயிர்' மூன்றெழுத்து!

என்றும் செய்து முடிக்க
காத்திருக்கும்  'கடமை' மூன்றெழுத்து !

தேர்தலில் நீ கண்டதெல்லாம்
'வெற்றி'  என்ற மூன்றெழுத்து!

தமிழ் நாடு கண்ட
எங்கள் 'அண்ணா' மூன்றெழுத்து!

திராவிடம் போற்றும்
'திமுக'   மூன்றெழுத்து!

தமிழை ஆட்கொண்டு -நீ
உதித்த  நாளும் 'மூன்(று)'றெழுத்து!

திருக்குவளையில் பூத்த
தமிழ்க்கிழவனே - நீ வாழ
தமிழும் வாழும்.  

வாழ்க  நின் பல்லாண்டு!

 -தோழன் மபா.





வியாழன், மே 30, 2013

தமிழுக்குச் சிறுமை!

தினமணி  (28/05/2013 ) தலையங்கம்.


                                 மலையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்:... செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?

ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.

இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.

மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.

சேர நிலம் - மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.

இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.

இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.

இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.

"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.

தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா? செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.

வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!

-நன்றி தினமணி!

வியாழன், மே 23, 2013

'சண்டே சிக்கன்' ரிசிப்பி!







 மே  மாதம் வந்தால் போதும், பெரும்பாலான குடும்பஸ்தர்கள்   பேச்சிலர் லைபுக்கு  யு டேர்ன்  அடித்துவிடுவார்கள். என் பெட்டர் ஆப்  குழந்தை குட்டிகளோடு ஊருக்கு போய்விட....நாட்கள் பெக் பெக்காய் கழிந்தது.

  இன் நாட்களில் பீர் தங்கு தடைஇன்றி கிடைக்க சோற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும். இரவுகளோ வெறுமையில் கழியும். இப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமையில்  செய்த 'சண்டே சிக்கன்'. ரிசிப்பி உங்களுக்காக ...


தேவையான பொருட்கள்: 

  • சிக்கன் அரைகிலோ 
  • வேர்க்கடலை (நிலக்கடலை) இரு கைப் பிடி அளவு 
  • வெள்ளை எள்ளு 3 டீஸ் ஸ்பூன் 
  • தயிர் மூணு கப் 
  • பெரிய வெங்காயம் 4 
  • சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் 
  •  மிளகாய்த்தூள் ஒரு டீஸ் ஸ்பூன்
  • உப்பு  தேவையான அளவு.











எள்ளை வறுத்துக் கொள்ளவேண்டும்


 
வேர்க்கடலையை  வறுத்துக் கொள்ளவேண்டும்

 
இப்படி பொடி  செய்து கொள்ளவும்


வெங்காயத்தை அறிந்து இப்படி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
சிக்கனை சுத்தப் படுத்திக்கொள்ளவும்.
தயிர்  எள்ளு வேர்க்கடலை பொடி,வறுத்த வெங்காயம்,மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து
....இப்படி அரைமணிநேரம் ஊற வைக்கவும்.
 அதே பாத்திரத்தை அடுப்பில்  வைத்து தண்ணிர் கலக்காமல்  வேக வைக்கவும். பாத்திரத்தின் மூடியில் ஒரு தட்டை வைத்து அதில் கொஞ்சமா தண்ணீரை விடவும். அடி பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும்.
சுவையான சண்டே சிக்கன் ரெடி!

'பாக்ஸ் டிராவல்ஸில்'  டிவியில் எதோ ஒரு வெளி நாட்டில்  சிக்கனை வைத்து இந்த டிஷ்ஷை  செய்து காண்பித்துக் கொண்டு இருந்தார்கள். பார்க்க எளிதாகவும் செய்வது சுலபம் என்பது போல் இருந்தது.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டும், மிளகாய் தூளும் நான் சேர்த்தது. அது இல்லாமலும்  இச் சிக்கனை தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டிஷ் இது!.

 இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் 'சண்டே சிக்கன் என்று பெயரை வைத்துவிட்டேன்.  நீங்கள் வேண்டுமானாலும் ஒரு பெயரை வைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய், மே 14, 2013

ஏமாறும் கலை (புத்தக விமர்சனம்)


நூலின் பெயர்      : ஏமாறும் கலை 
எழுத்தாளர்            : யுவன் சந்திரசேகர் 
பக்கம்                       : 240
வெளியீடு               : காலச்சுவடு 
                                      669 கே.பி.சாலை, 
                                      நாகர்கோவில், 629001.
விலை                     : ரூ.190/-


நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா 'பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறு கதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள்.  கதை கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளை தந்து நீங்கள் கொடுத்த காசுக்கு மேலேயே உங்களுக்கு வாசிப்பனுவம் கிடைக்கிறது. 

சிறுகதை தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது.  அதனதன்  பிணைப்பை  மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர். 

 
 உதாரணமாக ஒரு கதை:   வங்கியில்தொடர்ந்து  பணம் கட்டவரும் பெண்மனி, தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன், என்று கேஷியரிடம்  சொல்லி  கீயுவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும்    பரிதாபப்பட்டு பர்மிஷன் தந்துவிடுகிறார். 
 
அப்படி இருக்க... ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.  அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர்
"சை...இந்த அம்மாள்  நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " எற்று குமைந்து போகிறார்.   நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....'அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள், அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க'. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...?  என்கிறார். 

 'ஏமாறும் கலை'  தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம்?!.

 தினமணியில் நான் எழுதிய  புத்தக விமர்சனம். 13 மே 2013.  


 

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...