செவ்வாய், அக்டோபர் 25, 2011

'திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும்'


கங்கைக் கரையில் தீபாவளிக் கொண்டாட்டம்
 
         ஒரு இனம் இருக்க, அந்த இனத்தின் கலாச்சாரம் அழிக்கப்படுவதென்பது, உடல் இருக்க உயிர் பறிக்கப்படுவது போல். அந்த இனத்தின் பழக்க வழக்கங்களும், பண்டிகைகளும் ஒரு அந்நிய இனத்தின் வருகையால் முற்றிலும் புறம் தள்ளப்பட்டு,  அந்த அந்நிய இனத்தின் பழக்க வழக்கங்களை சுவிகரீத்துக் கொள்வது உலகில் நடவாத ஒன்று.  அப்படியே நடந்தாலும் அது முற்றிலும் தன் நிலை மாறிவிடுவதில்லை.
   
'கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று வாய் கிழிய பேசும் நாம், நமது கலாச்சாரத்தை காவு கொடுத்தது ஏன்?  கட்டுக்கதைகளும், பொய் புரட்டல்களும் நமது மேன்மையை மறைத்து விட முடியுமா...?  யாரோ ஒருவரின் பண்டிகையை நம் பண்டிகையாக நாம் கொண்டாடத்தான் வேண்டுமா....? அதுவும் நமது பண்டிகையை புறம்தள்ளிவிட்டு....? 


பொங்கலைத் தின்ற தீபாவளி.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில், தமிழர் பண்டிகையான பொங்கல் மட்டுமே பிரதான பண்டிகையாக இருந்து  வந்துள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.   

பழையன கழித்து, அல்லாதவற்றை ஒழித்து, வீடு துடைத்து, வர்ணம் பூசி,  மார்கழி தொடங்கி தை வரை வாசலில்    மாக்கோலம் இட்டு, அதில் பறங்கிப் பூ வைத்து,   அப்போதுதான் அறுவடை செய்த தானியங்களை பொங்கி (சமைத்து), உலகின் முதற்கடவுளான சூரியனுக்குப் படைத்து,  உழுவதற்கு உதவி செய்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு (ஆடு மாடு), நன்றி தெரிவிக்கும் விழாவாகத்தான் தமிழன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினான். தமிழர்கள் தங்களது பண்டிகைகளை இயற்கை சார்ந்தே கொண்டாடிவந்தனர் என்பது இயற்கை!.

ஆனால், இடைக்காலத்தில் ஆரியர்களின் வருகைக்குப் பின்னர்தான் எல்லாமே மாறிப்போனது. ஜோதிடம், வானசாஸ்த்திரம், யாகம், பூஜை என்று மன்னர்களிடம் அண்டிப் பிழைத்த  ஆரியர்கள், பிற்பாடு மன்னனை வளைத்து,  மண்னையும் வளைத்தார்கள்.  அவர்களது கலாச்சாரத்தை நம்முள் விதைத்தார்கள்.

அதுநாள் வரை சுமூகமாக போய்கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில்,  பெரும் மாற்றம் காணத் தொடங்கியது. கலாச்சார மாறுபாடும் அப்போதுதான் தோன்றியது.  வடபுலத்தார் தங்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்த பண்டிகைகளில், மன்னனையும் சிறுப்பு அழைப்பாளர்களாக அழைத்தனர்.   பிற்பாடு மன்னனிடம், இந்தப் பண்டிகையை எல்லோரும் கொண்டாட வேண்டும், அதற்கு நீங்கள்தான் உத்திரவிடவேண்டும்  என்று கூறி மண் ஆளும் மன்னன் மூலமாக மக்கள் மனதை மாற்றியிருப்பார்கள். 

பின்னர் சிறுக சிறுக மாற்றம் ஏற்பட்டு தமிழர் பண்டிகையின் முக்கியத்துவம் குறைந்து 'தீபாவளி' முக்கிய பண்டிகையாக மாறியிருக்கும்.  
கங்கைக் கரையில் தீபாவளிக் கொண்டாட்டம்
கட்டுக் கதை தீபாவளி.

'கிருஷ்ண பக்ஷம், அமாவசை திதிக்கு முன்தினம்  சதுர்த்தசி திதி அன்று நடுநிசி காலம் கழிந்து, பிரம்ம மூகூர்த்த காலத்திற்கு முன்பாக நரகாசுரனை, ஸ்ரீ கிருஷ்ண பகவானும் ராதையும் வதம் செய்ததாகவும், இந்த நாளை அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து குதுகலத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று நரகாசுரன் கிருஷ்ணரை வேண்டிக்கொண்டதாக  சொல்லப்படுகிறது.   அதன் விளைவாக தோன்றியதுதான் தீபாவளி என்கிறார்கள். போகட்டும்.


அதோடு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணை குளியல்) , 'கோதார கவுரி விரதம்' போன்றவை கடைபிடிக்கப்  படுகிறது. இதில் எங்கேயாவது தமிழர் பண்பாடு,  கலாச்சாரம் இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் 'காவேரி குளியல்' என்றுதானே இருக்கவேண்டும். நமது இலக்கியங்களிலும் தீபாவளி குறிப்பிடப்படவில்லை.   

தீபாவளி பண்டிகை என்பது முழுக்க முழுக்க வடபுலத்தாரின் பண்டிகை. அதற்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை. 

கங்கைக் கரை இரு மருங்கிலும் தீபாவளி தொன்றுதொட்டு பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.  இன்றும் வட இந்தியர்கள் தீபாவளி அன்றுதான் தங்களது வியாபாரத்திற்கு புதுக் கணக்கு தொடங்குகின்றனர்.  நாம் தீபாவளி அன்று புதுக்கணக்கு தொடங்குவதில்லை. இப்படி எல்லாவற்றிலும்  வேறுபாடு இருக்க,  அவர்களது பண்டிகையை நாம் ஏன் வரிந்துக் கட்டிக் கொண்டு கொண்டாடவேண்டும்.நம்மீதும் குற்றம் உண்டு.


'மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் வாசம் உண்டு' என்றார் அறிஞர் அண்ணா,  

யார் எது சொன்னாலும் அல்லது காட்டினாலும், சிந்திப்பதில்லை.  'ஆவென்று' வாய் பிளக்கும் கூட்டமாக மாறிவருகிறோம்.  ஏன் என்று கேள்வி கேட்பதில்லை, அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என்று நினைப்பது.  சாதி பாகுபாடுப் பார்த்து பிரிந்தே இருப்பது.

இன்னோரு சக தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நமக்கு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி விடுவது. அல்லது ஒதுங்கி வாழ்வது. என்று தமிழனிடம் பட்டியல் போட நிறையவே மைனஸ்  இருக்கிறது.  

என்னதான் பிறர் நம் மீது எதையாவது திணித்தாலும், " உன் சுய புத்தி எங்கேயா போச்சி...?" என்று எவனாவது கேள்வி கேட்டால், மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைப்பது.  பிறரை குற்றம் சொல்லும் அதே நேரத்தில்,   அதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.

மலையாளிகள் தீபாவளி கொண்டாடுவதில்லை.

திராவிட  மொழி குடும்பத்திலிருந்து பிறந்த மலையாள தேசத்தினர், தங்களது மாநிலத்தில் தீபாவளி கொண்டாடுவதில்லை. அங்கு அவர்களது பண்டிகையான 'திரு ஓணம்' தான்  பிரதானம்.  அவர்கள் ஓணத்தைதான் விமர்சையாக கொண்டாடுகின்றனர்.  அவர்கள் தீபாவளியை திரும்பிக் கூட பார்ப்பதில்லை


அங்கு உள்ள வியாபார நிறுவனங்களும் ஓணத்தை ஒட்டிதான் சலுகைகள் வழங்குகின்றன. அங்கு உள்ள நாளிதழ்கள் 'ஓணம் சிறப்பு மலரை'தான் வெளியிடுகின்றன.  இப்படி பொதுமக்களோடு சேர்ந்து வியாபார நிறுவனங்கள் தங்களது பங்குக்கு ஓணத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

ஆனால், இங்கு....?


காலத்தின் கோலம்.

காலம் எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எத்தனை யுகங்களைக் கடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாமா? ஒரு அறுவடை முடிந்து அடுத்த அறுவடை போன்றதுதான்,   பூமி அழிந்து புத்துயிர் பெறுவது.  நாம் எத்தனையாவது ஈடில் இருக்கிறோம் என்று தெரியுமா...!?

இப்படி பதில் தெரியா கேள்விகளுக்கிடையேதான்  மனிதன், தமது கலாச்சாரத்தையும் மொழியையும் காக்க பல காலமாக போராடி வருகிறான்.  போராடும் அதே வேளையில் பிறர் கலாச்சாரத்தையும் அவர்தம் மொழியையும் அந்த இனத்தையும் சிதைக்கவும் தயங்குவதில்லை.  இதில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல் யார் கை ஓங்கி இருக்கிறதோ அவனது இனம்,  மொழி காப்பாற்றப்படுகிறது.


தடுமாறி, தயங்கி, தூங்கிக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்துவரும்  ஒரு இனத்தின்  இயல்பு என்பது,  நம்மைப்போல் இருக்குமானால், அதுதான்  இன அழிவின் ஆரம்பம்.   அதன் தொடக்கம் வெளியில் தெரியாமல் தொடங்கி,அதன் அழிவு பகிரங்கமாக முடிந்துபோகும்.

நமது இன்றைய நிலை மேலே சொன்னதுபோல்தான்.   நாம் எதையும்  காது கொடுத்துக் கேட்க தயாரில்லை எனும்போதும், இது என்ன பத்தாம் பசலித்தனம் என்று புருவம் உயர்த்தும்போதும் , நம்மை அரியாமலேயே நாம்  எதையும் 'காவு' கொடுக்கத் தயாராகிவிடுகிறோம்.   நம்மையும் சேர்த்து....?!

 'உலகில் எதுவும் தானாக  மாறாது 'என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்'.


Share/Bookmark

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

அய்யா
ஓணம் தான் பழம் தமிழர் விழா, நாம் விட்டுவிடோம் அவர்கள் கொண்டாடுகின்றார்கள். பொங்கலும், தீபாவளியும் பிறகு வந்ததுதான் அது எந்ந ஒன்றை விட்டுவிட்டு மற்றதை மட்டும் கொண்டாட வேண்டும். மக்கள் இரண்டு நாள் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

பெயரிலிக்கு....
இன்னும் ஒரு நாள் கூடுதலாக எடுத்துக் கொண்டு பொங்கல் பண்டிகையை மூன்று நாள் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்கிறேன். நீங்கள் இரண்டு நாள் சந்தோஷமாக இருந்துவிட்டு போகட்டுமே என்கிறீர்கள்.

அந்நிய கலாச்சார ஆக்கிரமிப்பால் நாம் பெற்றதை விட இழந்தது அதிகம், என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமென்பதில்லை ....?!