சனி, மார்ச் 10, 2012

"உடல் நோக சுமந்துவிட்டு, உதறி எறியலாமா...?"



புதிய பகுதி -                                                                              இது நமக்கான
மேய்ச்சல் நிலம்! 

                  கடவுள் அந்த குழந்தையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்து,  "நீ நாளையிலிருந்து என்னை விட்டு பிரிய போகிறாய்,   இனி என்னை உன்னால் காண முடியாது" என்கிறார்.   அந்தக் குழந்தைக்கு ஒன்றும் புரியவில்லை,  அவரது கரங்களைப் பற்றி " இறைவா நான் உங்களை விட்டு பிரிய மாட்டேன்,  நானோ சிறு குழுந்தை உங்கள் அருகில் இருப்பதால் எப்போதும் பாதுகாப்பாகவே உணர்கிறேன். என்னை நன்றாக கவனித்துக் கொள்ள, உங்களால் நியமிக்கப்பட்ட தேவதைகள் இருக்கிறார்கள். அதனால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று கண்ணீருடன் மன்றாடுகிறது குழந்தை.

"இல்லை,  இயற்கையின் விதிப்படி நீ போய்தான் ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்" என்கிறார் கடவுள்.

 "அப்படியென்றால் என்னை அன்போடு கவனித்துக் கொள்ள அங்கு யார் இருப்பார்கள்?" என்கின்றது குழந்தை.

"கவலைப்படாதே உன்னை கவனித்துக் கொள்ள அங்கு ஒரு தேவதை இருக்கிறாள். அவள் கண்ணின் மணிபோல் உன்னை காத்து அரவணைத்திடுவாள்.  கருக்கொண்டு, உரு தந்து,  உன்னை தன்னில் தங்கிக்கொள்வாள். " என்றார் கடவுள்.

"யார் அது ...?"  குழந்தை கண்ணீருடன் கேட்கிறது.

"அது உன் அம்மா!"

என்றார் கடவுள், சிலிர்ப்புடன்!!!.

**********


             " போன சனி கிழமை மதியம் 'பாலமந்திர்'  செல்ல நேர்ந்தது.   நண்பரின்  மகள் பிறந்த நாளுக்கு அங்கு செல்வதுண்டு.  பழங்கள் மட்டுமே வாங்கிச் செல்ல முடியும் என்பதால், கோயம்பேட்டிலிருந்து ஆப்பிள்,வாழைப்பழம் வாங்கிக் கொண்டு மதியம் 3 மணிக்கு சென்றோம்.

  1949ல் காமராஜரால் தொடங்கப் பட்ட பாலமந்திர் அனாதை இல்லம்,  சென்னை தி. நகர்,  ஜி.என் செட்டி சாலையில் இயங்கி வருகிறது. பெற்றோரால் கைவிடப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குழந்தைகள் இங்கு வளர்கிறார்கள்.
இந்த இல்லம் தொடங்க எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா முக்கிய பங்காற்றியுள்ளார்.  இந்த மாதத்தில் 63ம் வருட விழாவை கொண்டாட இருக்கிறார்கள். 
*****

  

          மூன்று, நான்கு வயது ஒத்த குழந்தைகள் வரிசையாக அந்த சாப்பாட்டு அறையில் நுழைந்தார்கள். விபரம் அறியாத அந்த சிறு சிறு பாலகர்கள்  கண்ணில் பயத்துடன் நம்மை பார்த்துக் கொண்டே வரிசையில் வர,  நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது.  தன்னார்வ தொண்டர்கள் அவர்களை வரிசைப்படுத்த, அந்த பிஞ்சு பாதங்கள் 'மலங்க மலங்க' விழித்துக் கொண்டு வரிசையில் அமர்ந்தார்கள்.   எதிர்வரிசையில் இவர்களைவிட வயது அதிகமான எட்டு, பத்து வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்  வந்து அமர்ந்தனர்.

முதலில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனை "உன் பெயர் என்ன...? " என்றேன்.  "வினோத்" என்றான் மழலைக் குரலில். 

இன்னும் சில குழந்தைகளுக்கு பேசக் கூட சரியாக வரவில்லை.  வரிசையாக ஒழுங்கு மாறாமல் அமர்ந்துக் கொண்டார்கள்.   ஆளுக்கு ஒரு ஆப்பில் கொடுக்க அழகாக வாங்கிக் கொண்டார்கள்.  ஒரு சிறுவன் "அண்ணா" என்று என்னை அழைத்து, கையை நீட்டி, "மதாணி" என்றான்.   பிறகுதான் தெரிந்தது, அவன் கையில் மருதாணி போட்டிருந்தான்.  அதைதான் என்னிடம் கான்பித்தான்.  அவனது கையை கண்ணீருடன் தடவிக் கொடுத்தேன். 

   இந்த குழந்தைகள் எங்கிருந்து வந்திருப்பார்கள்?. இவர்களது பெற்றோர் யார்? என்ன காரணத்தினால் இந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டனர்.    எந்த ஒரு தாயும் ஒரு வாரத்திற்குள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது,   குறைந்தது 10 மாதங்களாவது சுமக்க வேண்டும்.     ஊர் உலகத்திற்குத் தெரியாமல் யாரும் கர்ப்பம் சுமக்க முடியாது...?   அப்படி இருக்க... அதுவரை சுமந்துவிட்டு, பெற்றபின் ஏன் தெருவில் வீச வேண்டும்.  உடல் நோக சுமந்துவிட்டு,  உதறி எறியலாமா...?     இதில் இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தார்கள்....?  அனாதைகள் உருவாக யார் காரணம். பெற்றோரா இல்லை சமூகமா...? என்று மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்விகள் மோதத் தொடங்கின.
 

  'அனாதைகளாக யாரும் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்' என்ற சொல் நம்மிடையே பல காலம் இருந்து வருகிறது.  இத்தகைய குழந்தைகள் உருவாக சமூகம்தான் காரணம் என்று நாம் தப்பிக்க முடியாது.   தனிப்பட்ட ஒரு மனிதனின் அபிலாஷைகள்தான் இதற்கு காரணம்.  பிறந்தவுடன் அனாதைகளாக மாற 'ஏழ்மை' ஒரு காரணமாக இருந்தாலும், ஏழ்மை மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.  பெரும்பாலான குழந்தைகள் அனாதைகள் ஆக  தவறான தொடர்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்கின்றது உலக சுகதார அமைப்பு.   பெற்ற குழந்தைகளை அனாதைகளாக விட ஆண்களைவிட பெண்களே இச் செயலை அதிகம் செய்கின்றனர்.

அனாதைகள் உருவாக யார் காரணம்?.
  
சமூக கட்டுப்பாடுகள் குறைந்துவிட்ட இக் காலகட்டத்தில் உடல் வேட்கைக்காக கள்ளத்தனமாக இணையும் ஜோடிகள் அதிகரித்துள்ளனர்.  அவர்களது சொற்ப நேர சுகம்,  ஒரு குழந்தையை உருவாக்கி அனாதையாக்குகின்றது. பெற்றெடுத்த   குழந்தையை கோயில் வாசலில் போட்டுவிடுவது, இரயில் வண்டியில் வைத்துவிட்டு இறங்கி விடுவது, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவது, அனாதை இல்ல வாசலில் போட்டுவிட்டு மறைந்துவிடுவது, ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தையை துணியில் சுற்றி வைத்துவிடுவது, சிலர் மருத்துவமனையில் தவறான முகவரி தந்து  குழந்தையை பெற்றெடுத்தப் பின்னர் 'எஸ்கேப்' ஆவது,   கூட்டத்தில் அல்லது பொது இடத்தில் குழந்தை காணாமல் போவது என்று பல வழிகளில் குழந்தைகள் அனாதைகளாக்கப்படுகின்றனர். 

குழந்தைகள் அனாதைகளாக உருமாற மற்றொரு  சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

      சென்னை மணலி புது நகரில் புருஷன் பெண்டாட்டிக்கு இடையே சண்டை மூள, கணவன் அம்மிக் கல்லை தூக்கிப் போட்டு மனைவியை கொலை செய்துவிடுகிறான். பின்னர் போலீஸுக்கு  பயந்து  தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்கிறான்.   காலையில் கண் விழித்து  பார்க்கும் இரு மகன்களுக்கும்  ஒன்றும் புரியவில்லை.  இருவருக்கும் முறையே 8 மற்றும் 3 வயதுதான் ஆகிறது. தொடர்ந்து வளர்க்க முடியாத அவர்களது  வயதான தாத்தா பாட்டி, அந்த இரண்டு குழந்தைகளையும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள்.   இந்நிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அவர்களின் பிள்ளைகள் இருவரையும் காப்பாற்ற உறவினர்கள் முன் வரவில்லை. அது நாள் வரையில் அப்பா அம்மாவோடு சந்தோஷமாக வாழந்த அந்த இரு குழந்தைகள் இப்போது அனாதைகளாகிவிட்டனர்..  திருவள்ளூரில் உள்ள காப்பகத்தில் இரு குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் முன் பின் யோசிக்காமல்  செய்யும் சிறு தவறு அவர்களின் குழந்தைகளை அனாதையாக்குகிறது.

     ஒரு முறை திருவேற்காட்டில் உள்ள 'உதவும் கரங்கள்'  அமைப்புக்கு செல்ல நேர்ந்தது.  அங்கு ஒரு அறையில் சின்ன சின்ன  குழந்தைகள் இருந்தன.  எல்லாம் ஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைகள் வரை இருந்தனர். ஒவ்வொரு தொட்டிலிலும் ஒரு குழந்தை அழுது கொண்டும் நின்று கொண்டும் இருந்தன. ஆயாக்கள் கையில் பீடிங் பாட்டிலை வைத்துக் கொண்டு பால் புகட்டிக் கொண்டு இருந்தனர்.  நம்மை பார்த்ததும், கையை நீட்டி தூக்க சொல்லி அழுதன.  எந்தக் குழந்தையை தூக்குவது?   மனது கனத்து போனது!.

      "பொதுவாக எந்த வீட்டிற்கு சென்றாலும் அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் புதியவர்களைக் கண்டால் ஒளிந்துக் கொள்ளுவார்கள், அல்லது எளிதில் பேச மாட்டார்கள். ஆனால் இத்தகைய அனாதை இல்லங்களில் வாழும் சிறு சிறு குழந்தைகள் கூட  புதியவர்களை பார்த்தவுடன் தூக்க சொல்லி அழும். அல்லது சிரிக்கும்" என்றார் அங்கிருந்த நிர்வாகி ஒருவர்.  ஆதரவை தேடும் அந்த பிஞ்சுகள் பார்ப்பவரையெல்லாம் தனது தாய் தந்தையாக நினைப்பார்களோ...?  தெரியவில்லை?!.

     தலைவாரி,  பூச்சூடி, ஆடை அணிவித்து, நிலா காட்டி சோறுட்டி, தூங்கவைக்க கதைகள் சொல்லி என்று எந்த நிகழ்வும் இவர்களுக்கு இல்லை.   அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தப்பா, அண்ணன், தங்கை என்று எந்த உறவுமில்லாமல்;   சாப்பிட்டு, தட்டு தம்ளர் கழுவி, தனது ஆடையை தானே துவைத்து, வயதுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியுடன்,  ஒருவருக்கொருவர் உதவி செய்து கொடுத்ததை வாங்கிக் கொண்டு வரிசையில் செல்லும் இவர்களை பார்க்கும் போது முதல் பாராவில் சொன்ன கதை பொய்யோ என்று தோன்றியது!.
                                                                                                             'தொடர்ந்து பேசுவோம்!
-தோழன் மபா.

வியாழன், மார்ச் 08, 2012

'தோல் கொடுப்போம்'




     'தோள்' என்று எழுதுவதற்குப் பதிலாக 'தோல்' என்று எழுதிட்டேன்னு             
பாக்கிறீங்களா  
....?  உண்மையாகவே இன்று  காலையில் பத்திரிகையில் வந்த செய்தி  ஆச்சரியப்படுத்தியது!.      
 
கண் தானம், இரத்த தானம், இதய தானம், ஈரல் தானம் போன்றவற்றைத் தொடர்ந்து தோலையும் தானம் செய்யும் முறை தமிழகத்திற்கு வந்துவிட்டது.  
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் புதன்கிழமை திறக்கப் பட்ட 'தோல் வங்கி'   மருத்துவ மைய திறப்பு  விழாவில்சென்னை தோல் மருத்துவ மைய  இயக்குநர் எஸ். முருகுசுந்தரம்தான்  மேற்கண்ட  தகவலைத் தெரிவித்தார்.

இந்தியாவில் முதல் முறை.

கண். எலும்பு, இதயம் ஆகியவைகளுக்கு தனித்தனி ஆராய்ச்சி மையம் இருப்பதுபோல், இந்தியாவியல் முதல் முறையாக  சென்னையில் தோல் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.




இந்த மையத்தில் மனித தோல் வங்கிப் பிரிவு உள்ளது. மனிதர்கள் கண் தானம் செய்வதுபோல் இந்த வங்கியில் தங்களது தோலையும் தானமாக அளிக்க பதிவு செய்யலாம். இறந்த மனிதர்களின் உடலில் இருந்து 6 மணி நேரத்திற்குள் தோலை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கலாம்.   தோல் வங்கியில் பதப்படுத்தி வைக்கப்படும் மனித தோலை 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்கமுடியும்.  தீக்காயம் அடைந்தவர்களுக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் இயல்பான நிலையில் பொருத்த முடியுமாம்.

தீக் காயம் அடைந்து  தோல் பொசுங்கி, விகார தோற்றத்துடன்  தங்களது வாழ்வை இழந்தவர்கள் அதிகம். அவர்களுக்கெல்லாம் இச் செய்தி மிகவும் ஆறுதல் அளிக்கக் கூடியது.

 பொதுவா ஆடு, மாடு,  பாம்பு போன்ற பிராணிகளின் தோலைதான் உரித்து நாம் பயன்படுத்துவோம். இன்று நம் தோலையே உரித்து பயன்படுத்தும் அளவிற்கு மருத்துவம் முன்னேறிவிட்டது.  அதிசயம்தான்.

"தோல் இழந்தவர்களுக்கு தோள் கொடுப்போம்.
துயரத்தில் இருப்பவர்களுக்கு குரல் கொடுப்போம்!"

திங்கள், மார்ச் 05, 2012

பைக் பின் சீட்டில் அமர்ந்து சென்ற நாய்!



              சென்னை நீயூ ஆவடி சாலையில் மதியம் வந்துக் கொண்டு இருந்தபோது, அருகில் சென்ற பைக்கில் யாரோ வித்தியாசமாக அமர்ந்து சென்றது போல் தெரிந்தது.   ஒருவர் நல்ல பெரிய நாயை தனது பின் இருக்கையில் அமரவைத்து அழைத்துபோனார்.  அது தனது இரண்டு பின்னங்கால்களால் சீட்டின் நுனியைப் பிடித்துக் கொண்டது.   இரண்டு முன்னங்கால்களை அவரது தோள்பட்டையில் வைத்துக் கொண்டு, முகத்தை அவரது தோளில் சாய்த்துக் கொண்டு பிரயாணம் செய்தது.  என்ன வகை நாய் என்று தெரியவில்லை...? 
 


பொதுவாக பொமெரியன் வகையைச் சார்ந்த நாய்களை பைக் டாங்கில் உட்காரவைத்து அழைத்துப் போவார்கள். பார்த்திருக்கிறேன்.  இவர் என்னடாவென்றால்  இவ்வளவு பெரிய நாயை யாருடைய துணையுமின்றி பின் இருக்கையில் அமரவைத்து  தனியாக ஓட்டிக் கொண்டு போனார். மனிதன் போன்றே இந்த நாயும் ஜம்மென்று உட்கார்த்துக் கொண்டு போனது.

அதுசரி... நாய்ன்னு சொன்னதுக்கு அந்த 'நாய்' கோவிச்சுக்காதே....? 
 
 


 

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...