ஞாயிறு, டிசம்பர் 07, 2014

பிரிதலின் பொருட்டு ஒரு பை.....பை.....!


           அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கிட்டதட்ட 7 வருடங்களுக்கு மேலாக இணை பிரியாமல் இருந்துவிட்டு, விட்டுவிலகுவது என்பது வலி நிறைந்ததாகத்தான் இருக்கிறது!.

தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்த பின் தூக்கி எறிவது என்பது, மனிதனின் அடிப்படை கசடுகளில் ஒன்றாகிவிட்ட பிறகு, நான் மட்டும் எப்படி அதிலிருந்து தப்ப முடியும்?. பிரிதலின் அவசியம் உணர்ந்தே அந்த முடிவு எடுக்கப்பட்டது. விட்டு விலகிய அந்த நொடிகளில் துளிர்த்த கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பி பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.    

சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்பதால், அதிலிருந்து விலகி இருக்க ரொம்ப மெனக்கட வேண்டியிருக்கிறது. தொடர்பை துண்டித்து விட்டுவிட்ட பிறகும்......அது என்னை பார்ப்பது(?) போன்ற ஒரு பிரேமை எனக்குள் ஏற்பட்டது.

நடக்க...நடக்க...பாதை நீண்டு கொண்டே இருந்தது. இன்னேரம் எனது பைக் இருந்திருந்தால், இரண்டு சிக்னல் கடந்து இருப்பேன். பைக்கை எக்ஸ்ச்சேஞ்சில் விட்டுவிட்டு வந்த பிறகும், அதன் உருவம் என்னினைவிலிருந்து எக்ஸ்சேஞ்சாகாமல் தங்கியே இருக்கிறது. அவ்வளவு எளிதாக எனது பைக்கை எக்ஸ்சேஞ்சில் விட்டு வர மனமில்லை.

உயிரற்ற வாகனம் என்றாலும், அது தனது சுய நினைவுடனே என்னை இந்த மாநகரத்தில் சுமந்து திரிந்திருக்கிறது. எனது சுக துக்கங்களில் உடன் இருந்து ஆறுதல் தரும் நல்லதொரு பயணத்தையும் அது எனக்கு வழங்கி இருக்கிறது. வாழ்வின் கடினங்களையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றலைத் தருவது எனது பைக் பயணம் மட்டுமே. முகத்தில் அறையும் காற்றில் கவலைகள் கரைந்து போகும் வரை எனக்கான பயணத்தை அது தந்திருக்கிறது. நமது சிந்தனை ஊர் சுற்றும் போதெல்லாம், பழக்கப்பட்ட குதிரையாய் தடம் பார்த்து தங்குதடையின்றி பயணத்தை மேற்கொள்ளும் திறன் (?) நமது வாகனத்திற்கு உண்டோ என்று நினைக்கும் அளவிற்கு அது இருந்திருக்கிறது!. 
எனது பைக்


நினைத்துப் பார்த்தால் இது சிறு பிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம். இத்தகைய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் என்னை போன்று ரோட்டில் அலையும் மார்க்கெட்டிங் மனிதனுக்கு பைக் என்பது ஒரு உடன் பிறவாத நண்பன் போன்றது; என்பதை நீங்கள் உணரும் பட்சத்தில் இக் கட்டுரையை தொடரலாம்.

என்னை போன்ற மார்க்கெட்டிங் மனிதர்கள், வீட்டிலிருக்கும் நேரத்தை விட, அலுவலகத்தில் இருக்கும் நேரத்தைவிட ரோட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். இத்தகைய வேலைகளுக்கு அடிப்படை தகுதியே வண்டிதான். நேர்காணலில் போது கைவசம் பைக் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் அப்பாயின்மெண்ட் ஆர்டரையே டைப் செய்வார்கள். டார்க்கெட் நோக்கிய பயணம் என்பதால், வண்டி எப்போதும் சீறீப் பாயும் சிறுத்தையாகத்தான் இருக்கும். அப்படி இருக்க... பைக்கின் மீதான பிடிமானம் என்பது இல்லாமலா இருக்கும்?!.

பயணத்தோடு மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து எடுத்து வரும் மதிய உணவை சாப்பிட பைக் சீட்டுதான் தற்காலிக டைனிங் டேபிளாக பயன்படும். அதோடு, உண்ட களைப்பு போக..... சிறிது நேரம் உட்கார்ந்து இளைபாரவும் வண்டியே மஞ்சு மெத்தையாகவும் அவதாரம் எடுக்கும். தி நகர் நடேசன் பார்க், அதை சுற்றிய இடங்கள், ஜாய் ஆலுகாஸ் பின்புறம் இருக்கும் சோமசுந்தரம் கிரவுண்ட், அண்ணா நகர் பார்க், அடர்ந்த நிழல் கொண்ட ஏதாவது ஒரு தெரு, நிழல் தரும் ஏதாவது ஒரு மரத்தடி என்று பல இடங்களில் இப்படிப்பட்ட மார்கெட்டிங் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பைக்கையே ஒரு சிறு வீடாக மாற்றி இருப்பார்கள். புற உலகைப் பற்றி கவலை இன்றி தாங்கள் கொண்டு வந்த மதியம் உணவை, சீட்டில் அமர்ந்துக் கொண்டு ஸ்பூனால் எடுத்து சாப்பிடும் அழகு இருக்கிறதே....அது அலைந்து திரியும் மனிதனுக்கு மட்டுமே வரும்!.

இப்படியான ஒரு பிடிப்பு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது இருக்கத்தான் செய்கிறது. நமக்கும் அதுக்குமான அந்த ஆத்மார்த்தமான நினைவுகளை சேமித்து வைத்து நமக்கு தருகிறது. நமக்கு விளையாட்டாய் தெரியும் சில விஷயங்கள் சிலருக்கு உணர்வு பூர்வமாய் இருக்கும். தொடர்ந்து பயன்படுத்திய பேனா, சைக்கிள், கார், மோட்டார் பைக், சட்டை, டி ஷர்ட், செருப்பு, மூக்கு கண்ணாடி, கத்தி, வெற்றிலை பெட்டி, குடை, கைகடிகாரம், பர்ஸ் என்று ஏகத்திற்கும் பட்டியல் நீளும். இதற்கான பட்டியளில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இந்த போஸசிவ் டைப் மனிதருக்கு மட்டும்தானா.....? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

நாய்களுக்கு தேங்காய் சிரட்டை கிடைத்தால் விடாது. ஒன்றுமில்லாத அந்த தேங்காய் சிரட்டையை கவ்விக் கொண்டு, லொங்கடா.....லொங்கடா....என்று ஒரு ஓட்டம் ஓடும். அங்கே போய் தனது இரண்டு கால்களையும் நீட்டி வைத்து படுத்துக் கொண்டு, அந்த சிரட்டையை கறண்டிக் கொண்டு இருக்கும். நக்கியது போரடித்தவுடன் மீண்டும் ஒரு நாய் ஓட்டத்தை ஆரம்பிக்கும். அது முடிந்த பிறகு மீண்டும் அந்த சிரட்டையை எடுத்துக் கொண்டு வேறொரு மூலையில் அமர்ந்துக் கொண்டு கரண்டத் தொடங்கிவிடும். (கி.ராஜநாராயனின் கரிசல் காட்டு கடுதாசியில் இந்த நாய் ஓட்டைத்தை மிக அழகாக விவரித்து இருப்பார்) தனக்கான பொருட்கள் மீது நாய்களுக்கு எப்போதும் பிரியம் இருக்கும். வீட்டில் வளர்க்கும் விலங்குகள் கூட, தாம் பயன்படுத்தியதை பிறர் தொட்டால் சண்டைக்கு வந்துவிடும். மனிதனுக்கும் அதே குனம் இருக்கத்தான் செய்கிறது!. யாரிடமிருந்து யார் கற்றுக் கொண்டார்கள், என்று தெரியவில்லை....?!.

ஒரு பைக்கை எக்ஸேஞ்சில் போட்டதற்கு இவ்வளவு அளப்பரையா? என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கதான் செய்கிறது?!.

இதற்கு முன்பும் இதே நிலை ஏற்பட்டபோது அப்போதைய பைக்கான டிவிஸ் சுசுகியை விற்க மனமில்லாமல் வீட்டிலேயே வைத்து விட்டேன். புது டயர் பளபளக்க இன்னும் அது வீட்டில்தான் (ஊரில்) நின்றுக் கொண்டு இருக்கிறது. இந்த ஹோண்டா ஷைனையும் வீட்டில் வைக்கத்தான் நினைத்திருந்தேன். "இன்னும் எத்தனை பைக்கைதான் வீட்டில் இப்படி வெட்டியாய் நிறுத்துவே.....?" என்ற எதிர்ப்பு குரல் வலுக்கவே, ஜகா வாங்கிவிட்டேன்.

நினைத்துப் பார்த்தால் எங்கேயும் எப்போதும் பிரிதலே நிலையாக இருக்கிறது!. ஆனால் வேறு வழியில்லை, காலத்தின் எக்ஸ்க்ளேட்டர்களில் நாம் தொடர்ந்து பயணம் செய்ய... இந்த பிரிதல் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நிலையற்ற வாழ்வில் நினைவுகள் மட்டுமே நிலைத்திருக்கிறது. இதுகாரும் என்னை சுமந்து திரிந்த எனது பைக்கை விட்டுவிட்டு, அதன் சுகமான நினைவுகளை சுமந்தபடி நடக்கத் தொடங்கினேன்.

என்றேனும் ஒரு நாள் சாலையில் நாங்கள் சக பயணியாய் சந்திக்கலாம்?!.
(((((()()())))))

Share/Bookmark

11 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மைதான் ஐயா
நானும் இதே உணர்வினை அனுபவித்திருக்கின்றேன்
கடந்த முறை எனது வண்டியை, கொடுத்து விட்டு, புது வண்டியை வாங்கியபோது, பழைய வண்டியைப் பார்த்தேன்,
ஏக்கதோடு என்னையே அவ்வண்டி பார்ப்பது போன்ற ஓர் உணர்வு.
தங்கள் பதிவினைக் கண்டதும், மீண்டும் அந்த நினைவலைகள் மனதில் மோதுகின்றன

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஜடப் பொருளாக இருந்தாலும், ஒரு வித பாசம் இருப்பதை அறிவேன்... உதாரணம் எனது பள்ளிக்கால சைக்கிள்... நீங்களும் இவ்வாறு இருப்பதைக் கண்டு வியப்பு + மகிழ்ச்சி...

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.

நன்றி அய்யா!. நம் எல்லோருக்குமே இத்தகைய அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. முன்பு வெளியே சொல்ல வழியில்லை. இப்போதுதான் இணையம் இருக்கிறதே, நமது எண்ணத்தை பகிர ஒரு வாய்ப்பு!. பகிர்ந்துவிட்டேன்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன்.
கருத்திற்கு நன்றி தித. ரொம்ப நாளாச்சி உங்களை பார்த்து. மதுரை சந்திப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள் வாழ்த்துகள்!.

இத்தகைய அனுபவம் எல்லோருக்குமே ஏற்பட்டு இருக்கிறது!. எதையுமே பிரிவது துயரம்தான்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அவசியத்தின் பொருட்டு இவ்வாறு நமது பயன்பாட்டுப் பொருட்களை தள்ளி விடுகிறோம். அந்த அனுபவத்தை உணர்வுக் கலவையாய்
நினைவு கூர்ந்தது உங்கள் பதிவு.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

பதிவைப் படித்து முடித்ததும் உண்மையில் மனது கனத்தது. அந்த போட்டோவில் அது உயிர் உள்ள ஜீவனாகவே “என்னை விட்டு விட்டாயே?” என்று அழுவதுபோல் தோன்றியது. எனக்கும் இந்த மனம் கசிவான அனுபவங்கள் உண்டு. கொஞ்சநாளில் மனது சரியாகி விடும். What is next? அடுத்து ஆவதைப் பார்க்க வேண்டியதுதான்.


-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@அ. முஹம்மது நிஜாமுத்தீன்,

நன்றி நிஜாம்!.
தோன்றியதை அப்படியே பதிவு செய்தேன். இத்தகைய அனுபவம் நம் எல்லோருமே கிடைத்திருக்கும்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ தி.தமிழ் இளங்கோ.

மிக்க நன்றி சார்!. உங்கள் வார்த்தை ஆறுதலாக இருக்கிறது!. உண்மையில் பார்த்தோமானல் பிரிதல் ஒன்றே உலகில் நிலையானதாக இருக்கிறது.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ தி.தமிழ் இளங்கோ.

மிக்க நன்றி சார்!. உங்கள் வார்த்தை ஆறுதலாக இருக்கிறது!. உண்மையில் பார்த்தோமானல் பிரிதல் ஒன்றே உலகில் நிலையானதாக இருக்கிறது.

Chellappa Yagyaswamy சொன்னது…

உங்கள் துக்கத்தில் பங்குகொள்கிறேன் நண்பரே! வாகனம் என்பது நம் மனைவியைப் போன்றது. நாம்மைப் புரிந்துகொண்ட ஒத்துழைப்பது. சிலநேரம் வேண்டுமென்றே ஊடல் கொள்வது. அதைப் பிரிவதென்றால் மனைவியைப் பிரிவதைப் போன்றே துயரமானதுதான்.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@Chellappa Yagyaswamy.

மிக்க நன்றி ஸார்!. பிரிவற்றாமை என்பது அனைத்து உயிர்களிடமும் இருக்கிறது. அதன் விளைவே இப்படிப் பட்ட பதிவுகள். எங்க சார், உங்களை பார்த்து ரொம்ப நாளாட்சி?!.