ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

இருதடமான 'இருதயம்'



                                                                                          



          இருதயம் என்பது ஒரு காரணப் பெயர்.  'இருதடம்' என்பது மருவி இருதயம் ஆனது. தடம் என்பதற்கு பாதை அல்லது வழி என்று பொருள்.  இருதயத்தில் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நல்ல ரத்தம் செல்லும் பாதை மற்றொன்று அசுத்த ரத்தம் செல்லும் பாதை. அதனால்தான் அதற்கு இருதடம் என்று பெயர் வந்தது. அதைதான் நாம் இருதயம் என்று அழைத்து பின்னர்  'இதயம்' என்று ஷர்ட் கட் செய்துவிட்டோம்.

- பேராசிரியர்  சர்.இரா. இராமகிருஷ்ணன்.
இருதய நோய் நிபுணர். சென்னை.

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

பகல் நேரத்து பஸ் பயணமும் புத்தக வாசிப்பும்!




                   ப்போதெல்லாம் பகல் நேரத்து பஸ் பயணத்தையே மனம் விரும்புகிறது.  சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதாக  இருந்தாலும் சரி பகல் நேர பஸ் பயணமே  வசதியாக இருக்கிறது. 

வீடு, அலுவலகம் என்று எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இச் சூழ்நிலையில், புத்தகம் படிக்க நல்லதொரு வாய்ப்பு எங்கே கிடைக்கிறது?.  வீட்டில் படிக்கலாமென்றால் ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் குழந்தைகள் என்று பிய்த்து எடுத்துவிடுகிறார்கள். பேருந்து பயணம்தான் புத்தகங்களை படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.  முன்பெல்லாம் பேருந்து பயணத்தின்போது ஜூவி அல்லது ஆவி என்று ஏதாவது ஒன்று கைகளில் படபடக்கும்.  இப்போதெல்லாம் அந்த தப்பை செய்வதில்லை. ஆவியை வீட்டில் பி(ப)டிப்பதோடு சரி!.

போகும் தூரத்தை கணக்கில் வைத்து புத்தகங்களின் எண்ணிக்கையும் அமைகிறது.  கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு சனிக் கிழமையும் சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்.  சனிக்கிழமை அரை நாள்தான் வேலை நாள் என்பதால், மதியம் ஒரு மணிக்கே அலுவலக  கேண்டினில்  சாப்பிட்டுவிட்டு பைக்கை உருட்டினால், அடுத்த அரை மணி நேரத்தில் கோயம்பேடு.  மாயவரம் செல்லும் ஏதாவது ஒரு சிறப்பு (?) பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்துக் கொண்டால் போதும், புத்தகம் படிக்க ஏதுவான சூழல் உருவாகிவிடும்.

ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பர்பி அல்லது பிஸ்கெட் பாக்கெட். இது போதும் புத்தகம் படிக்க....!  இடையிடையே கொஞ்சம் ஆயாசம் ஏற்படும், அப்போது புத்தகத்தை நெஞ்சோடு வைத்து மூடிவிட்டு,கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது நல்லதொரு தூக்கம் போடலாம். இடையே பேருந்தை எங்கேயாவது ஓரங்கட்டுவார்கள், அங்கே இறங்கி சும்மா சூடாய் ஒரு டீ (அது வென்னீராய் இருந்தாலும் அமுதமாக இருக்கும்) குடிக்கலாம்.   முடிந்தால் ஒரு 'தம்'  போடலாம்.

பயணத்தின் போது வள வளவென்று பக்கத்து சீட்டு காரரிடம் பேச வேண்டாம்.  நம் குலம் கோத்திரத்தை அவர் விசாரிக்க, பதிலுக்கு நாம் விசாரிக்க...என்று மொக்கை போடவேண்டாம். முடிந்தால் சிறு  இடைவேளையில் எஸ். ராமகிருஷ்ணன் போல் பயணிகளிடம் பாடம் படிக்கலாம்.

இப்படிதான் கபூர் குல்யாம் எழுதிய 'குறும்பனை' ஒரு பஸ் நேர பயணத்தில்தான் படிக்க முடிந்தது. திருச்சி போகும் போது அலமாரியில் பொத்தாம் பொதுவாய் எடுத்ததில் 'குறும்பன்' கைக்கு அகப்பட்டான். அப் அண்ட் டவுனில் அந்த 300 பக்க நாவலை முடித்தேன். (என்னமோ... எழுதினா மாதிரி பீத்திக்கிறியேன்னு கேட்கப்படாது?! இதெல்லாம் ஒரு ஜாலி பதிவுதான்)

கி.ராஜ நாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்', சாருவின் 'எக்சைல்', கீரனூர் ஜாகிர் ராஜவின்'கருத்த லப்பை', பாமாவின் 'வன்மம்', சன்முகம் எழுதிய 'சயாம் மரண ரயில்', பல்லவி ஐயர் எழுதிய 'சீனா- விலகும் திரை', வைக்கம் முகமது பஷீரின் தொகுப்புகள், சு.கி.ஜெயகரனின் 'மூதாதையரைத் தேடி',  கரசூர் பத்மா எழுதிய 'குறவர் இன வரைவியல்'  வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' என்று படிக்கும் பட்டியல் பஸ் பயணத்தை பொறுத்து நீண்டுக் கொண்டே இருக்கிறது.

தட தடக்கும் பேருந்து பயணத்தில் 'குற்றப்பரம்பரை' பெரிய பிரயாசையையே ஏற்படுத்தியது.  லைட் ரீடிங்காய் இருந்தால், பக்கங்கள் படபடவென்று நகரும். இது கொஞ்சம் ஹாட் ரீடிங். அதன் கதையின் கனம் தாங்கமல் அவ்வப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.  கதை இன்னும் மிச்சமாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது?!

நான் கொஞ்சம் பொறுமையான வாசிப்பாளிதான். பிடித்த வரிகளை இரண்டு மூன்றுதரம் மறுபடியும் வாசித்துவிட்டு, பிறகுதான் அடுத்த வரிக்கு தாவுவேன்.  முழுசாய் ஐந்தாறு பக்கம் முடிந்ததும், அதைப் பற்றிய பிரமிப்போ அல்லது 'சை என்னடா...இது!' என்ற என்னமோ எழும்.  புத்தகத்தை மூடிவிட்டு கொஞ்சம் நேரம் வேடிக்கைப் பார்ப்பேன்.  பிறகு மறுபடியும் எடுத்து படிக்க ஆரம்பிப்பேன்.  வேடிக்கை பார்ப்பதும் வாசிப்பதும் பஸ் பயணத்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கும்.

சின்ன குழந்தைகள் காராசேவை வைத்து.... வைத்து.... சாப்பிடுமே அப்படி!.
 


அதுவும் பகல் நேரத்து பயணம் ஒரு கவிதைதான்.

  எங்கேயோ ஒரு ஆள் இல்லா வனாந்திரத்தில் உள்ள மோட்டலில் பஸ்ஸை நிறுத்துவார்கள்.  சொற்பமாய் இருக்கும் பயணிகள் இறங்கி அங்கொன்றாய் இங்கொன்றாய் நிற்க, வெயில் சுள்ளென்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை காய்ந்துக் கிடக்கிறது. தூங்குமூஞ்சு மரத்தின் கீழ் நிற்கும் பேருந்தில் கொஞ்சம் வெக்கையோடு மனிதர்கள் தண்ணீர் பாட்டிலைத் திறக்க, கடைசி சீட்டிற்கு முந்தைய சீட்டில் உள்ள குழந்தை எதையோ கேட்டு அடம் பிடிக்கிறது.  மோட்டல் ஓரத்தில் ஒன்னுக்கு போக போனவரை, காவலாளி துரத்திக் கொண்டு இருக்க.... ஸ்பீக்கரில்  "எத்தன முறதா காப்பி கொடுப்பா எங்கக்கா. எத்தன முறதான் பாட்டு பாடுவா எங்கக்கா" ன்னு பாடிக் கொண்டு இருந்தார் சின்னபொண்ணு.  

நின்றிருந்த பேருந்து புழுதியை வாரி இறைத்துவிட்டு சின்ன குலுக்களோடு பைபாஸ் ரோட்டில் ஏறியது.  புழுக்கம் குறைந்து காற்று சுள்ளென்று முகத்தில் மோதியது!.   சன்னலுக்கு வெளியே உலகம் கழுவி துடைத்தது போல் பளிச்சென்று நகர்ந்துக் கொண்டு இருக்க.....  பகல் நேர பஸ் பயணம் படிக்கவும், உணரவும்  நல்லதொரு இலக்கியமாகவே என்னுள் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

படங்கள் உதவி: http://voipadi.blogspot.in/

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

பறந்துபோன பட்டாம்பூச்சி


எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் மறைவு!

ரா.கி. ரங்கராஜன்


பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முக திறன் கொண்ட ரா.கி. ரங்கராஜன் தனது 85ம் வயதில் சனிக்கிழமை சென்னையில் காலமானார்.

கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்த ரா.கி. தனது 16 வயதினேலேயே எழுதத் தொடங்கிவிட்டார். சக்தி காரியாலயம், காலச்சக்கரம் போன்றவற்றில் தனது இதழியல் பணியை தொடங்கியவர், பிற்பாடு 1947ல் குமுதத்தில் சேர்ந்தார்.  கிட்டத்தட்ட 42 வருடங்கள் குமுதத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.  ரா.கி இருந்த காலம்தான் குமுதத்தின் உச்சம் என்று சொல்லாம்!.

ஹென்றி ஷாரியரின் 'பாப்பிலான்' கதையை குமுதத்தில் 'பட்டாம் பூச்சி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். ஏகோபித்த பாராட்டை பெற்ற அக் கதை மீண்டும் வராதா என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு.   ஜெனிபர், கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான் போன்ற  ரா.கி.யின் மொழி பெயர்ப்பு கதைகள் அன்றைய குமுதத்தில் பரபரப்பான பக்கங்கள்.   உலக புகழ் பெற்ற ஆங்கில நாவல்களை தமிழர்களுக்கு தமிழில் படிக்கக் கொடுத்த பெருமை ரா.கி.யைதான் சாரும்.

அவரது எழுத்தில் நான் கடைசியாக படித்தது 'நான் கிருஷ்ண தேவராயன்'. வரலாற்று நாவலான நா.கி.தே. வழக்கமான வரலாற்று நாவல்களின் சாயல்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியிருந்தார்.     கிருஷ்ண தேவராயரைப் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தியது ரா.கியின் எழுத்துகள்.

எழுத்துகளில் உயிர் வாழ்ந்த ஒரு மனிதருக்கு இறப்பு என்பது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!.

                                                                                                                                                                           - தோழன் மபா. 



ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி நர்மதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை ரூ.220/-

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்வதையே சாதனையாக நினைக்கும் இந்திய வீரர்கள்.

          


இந்திய ஹாக்கி அணியில் சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பெரிய சந்தோஷம் என்ற மன நிலையில் உள்ளனர் என்றார் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்

பதக்கம் பெறும் என்று மிகுந்த எதிர்ப்பார்போடு சென்ற இந்திய ஹாக்கி ஆணி 3 தொடர் தோல்விகளை சந்தித்து,  அரையிறுதிக்கு  தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டனர். இந்திய ஹாக்கி வீரர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு குறைவாக உள்ளதே தொடர் தோல்விகளுக்கு காரணம் என்கின்றார், பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்.

இந்திய ஹாக்கி அணியில் சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பெரிய சந்தோஷம் என்ற மன நிலையில் உள்ளனர்.   இப்போது உள்ள சூழ்நிலையில் கடுமையான போராட்ட குணத்துடன் களத்தில் இறங்கினால் மட்டுமே ஹாக்கியில் வெற்றி பெற முடியும்.  நாட்டின் கொளரவத்தை மனதில் கொண்டு முழு திறனுடன் சவால்களை எதிர்கொள்ளும் வீரர்களே அணிக்குத் தேவை.   இந்திய மக்கள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதை  மனதில்வைத்து வீரர்கள் சவால்களை எதிர்கொள்ளவேண்டும். என்று சற்று கடுமையாகவே சாடியுள்ளார் ஆஸ்திரேலியரான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய ஹாக்கி அணி பற்றி அதன் பயிற்சியாளர்  கூறிய குற்றச்சாட்டு இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...