மறுதாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுதாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்





    இனிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

செவ்வாய், நவம்பர் 22, 2016

எனது முதல் கவிதை தொகுப்பு 'மறுதாம்பு'.




மறுதாம்பு  கவிதை தொகுப்பு    


         கடந்த ஞாயிறு  அன்று தினமணியில் (13.11.2016)  'இந்த வாரம்' பகுதில், வெளிவரப் போகும் எனது 'மறுதாம்பு' கவிதை தொகுப்பிலிருந்து 'நந்தி' என்ற கவிதையை வெளியீட்டு எனது கவிதை தொகுப்பை முன் மொழிந்திருக்கின்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

என்றோ தொடங்கப்பட்ட எனது பயணம், இன்றுதான் ஒரு இலக்கை அடைந்திருக்கிறது.
எனது கவிதை தொகுப்பு 'மறுதாம்பு' வேலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 6 மாதமாகிவிட்டது. இதோ முடிவுற்று புத்தகமாய் வெளிவர இருக்கின்றது. அச்சு வேலை முடிந்தப்பின் கவிதை புத்தகத்தைப் பற்றி முக நூலில் அறிமுகம் செய்யலாம் என்று இருந்தேன், ஆனால் அதற்கு முன்னர் தினமணியே எனது கவிதை தொகுப்பை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்திருப்பது, நான் பெற்ற பேறு!.
தினமணியில்  வந்த அறிமுகம் 
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வலியை சொல்லக் கூடிய மிகச் சிறிய, மிக எளிமையான கவிதைதான் 'நந்தி'. மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் குறையத் தொடங்கினால், அணையிலிருக்கும் நந்திச் சிலை வெளியே தெரிய ஆரம்பிக்கும். நந்தி சிலை வெளிய தெரிய ஆரம்பித்தால், காவிரி ஆற்றை நம்பி வாழும் விவசாயி கவலைக் கொள்ள ஆரம்பித்துவிடுவான். இதை பின்னணியாக வைத்தே இக் கவிதையை எழுதினேன்.


நந்தி


மேட்டூரில்

நந்தி தெரிந்தால்

கீழையூரில் 
எங்கள் 
தொந்தி காயும்.


                                      ()()()
ஜனவரி சென்னை 

புத்தகக் காட்சிக்கு ரிலீஸ்!. 

      

     இதில் கீழையூர் என்ற ஊர், காவிரி ஆறு கடல் புகும் பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது. மறுதாம்பு வரும் சென்னை புத்தகக் காட்சிக்கு வெளிவரயிருக்கிறது. இக்கவிதை தொகுப்பை 'மேய்ச்சல் நிலம்' பதிப்பகம் வெளியீடுகிறது.

அதென்ன 'மறுதாம்பு' என்று நீங்கள் கேட்கலாம்?. அறுவடை முடிந்தப் பின்னரும், மீண்டும் கிளைத்து எழும் நெற்கதிரே மறுதாம்பு. அதையே எனது கவிதைப் புத்தகத்திற்கு பெயராக வைத்துவிட்டேன். அடிப்படையில் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த நமக்கு இதுவே சாஸ்வதம்!.

தினமணி ஆசிரியருக்கு எனது நன்றியும் அன்பும்!.
அன்புடன் 
தோழன் மபா

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...