ஆந்திரா புத்தூரில் எலும்பு
முறிவுக்கு கட்டு கட்டலாம்!!
முறிவுக்கு கட்டு கட்டலாம்!!
இந்த புத்தூரில் நான் வெஜ் அயிட்டத்தை ஒரு கட்டு கட்டலாம்!!
அடடா...! அரம்பமே கிறு கிறுக்குதே என்று நினைக்க வேண்டாம்.
சிதம்பரம் சீர்காழி சாலையில் இருக்கிறது புத்தூர். இங்கு புத்தூர் ஜெயராமன் கடை படு பிரபலம். சாலை ஓரத்திலேயே குடிசை போன்ற அமைப்பில் இருக்கும் கடையின் எதிரே பல உயர் வகையான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. மதியம் ஒரு மணிக்கு உட்கார இடமில்லாமல் மனிதர்கள் வாசலில் தவம் கிடக்கிறார்கள். அப்படி சுவைக்கு சரித்திரம் படைக்கிறது புத்தூர் ஜெயராமன் கடை.
சுவையான எறா குவியல் |
சில வருடங்களுக்கு முன்பு தினமலர் வாரமலரில் பா.கே.ப., பகுதியில் அந்துமணி இந்த கடையை பற்றி எழுதியிருந்தார். அப்போதே போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. போன வாரம்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.
எறா (இறால்) தான் இங்கு கதாநாயகன் அல்லது கதாநாயகி. கடையின் முகப்பில் பெரிய பெரிய தோசை கல்லில் அம்பாரமாக குவித்து வைத்து தயார் செய்கின்றனர். ஒரு ப்ளேட் 75 ரூபாய். இதுவே சென்னையாக இருந்திருந்தால் அதை நான்கு பங்காக போட்டு இருப்பார்கள். அந்த அளவிற்கு எறா குவியலாக கிடைக்கும். புத்தூர்; கடற்கரையோர கிராமம் என்பதால் எறா சல்லிசாக கிடைக்கிறது.
மீன் மற்றும் சிக்கன் வறுவல் |
நல்ல தழை வாலை இலை, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, எறா குழம்பு என்று வகைக்கு ஒன்றாக கிடைக்கிறது. கூடவே நேர்த்தியாக வறுத்த மீன். சற்றே அளவில் பெரிய கோழி வறுவல் என்று சமையல் சரித்திரம் படைக்கிறது.
அப்புறம் கெட்டி தயிர். ஒரு அண்டாவில் வைத்துக் கொண்டு நமக்கு கட்டிகட்டியாக வெட்டி போடுகிறார்கள். ஆஹா....அற்புதம்!
கடை உரிமையாளர் ஜெயராமன் |
இங்கு சமையல் எல்லாமே பாரம்பரிய முறையில்தான் தயார் ஆகிறது. சமையலுக்கு விறகு அடுப்பைதான் பயன்படுத்துகிறார்கள்.
சோறு பெரிய பெரிய பானையில், விறகு அடுப்பில் வைத்து பொங்கப்படுகிறது. கீற்று கொட்டகை என்பதாலும் சிறிய இடம் என்பதாலும் இட நெறுக்கடி நிச்சயம் உண்டு. கொஞ்சம் காத்திருந்துதான் பசியாறணும்.
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் இருப்பதால், மாணவர்கள் பேராசிரியர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
அடுத்த முறை அந்தப் பக்கம் போனா.... அங்க போயிட்டு வாங்களேன்....?
மீன் குறிப்பு : இங்கு மதியம் மட்டுமே ஹோட்டல் உண்டு என்பதை நான் சொல்ல மறந்தாலும் நீங்க...போகும் போது நினைக்க மறக்காதீங்க...!?