எனது பிதற்றல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது பிதற்றல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 07, 2014

பிரிதலின் பொருட்டு ஒரு பை.....பை.....!


           அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கிட்டதட்ட 7 வருடங்களுக்கு மேலாக இணை பிரியாமல் இருந்துவிட்டு, விட்டுவிலகுவது என்பது வலி நிறைந்ததாகத்தான் இருக்கிறது!.

தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்த பின் தூக்கி எறிவது என்பது, மனிதனின் அடிப்படை கசடுகளில் ஒன்றாகிவிட்ட பிறகு, நான் மட்டும் எப்படி அதிலிருந்து தப்ப முடியும்?. பிரிதலின் அவசியம் உணர்ந்தே அந்த முடிவு எடுக்கப்பட்டது. விட்டு விலகிய அந்த நொடிகளில் துளிர்த்த கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பி பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.    

சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்பதால், அதிலிருந்து விலகி இருக்க ரொம்ப மெனக்கட வேண்டியிருக்கிறது. தொடர்பை துண்டித்து விட்டுவிட்ட பிறகும்......அது என்னை பார்ப்பது(?) போன்ற ஒரு பிரேமை எனக்குள் ஏற்பட்டது.

நடக்க...நடக்க...பாதை நீண்டு கொண்டே இருந்தது. இன்னேரம் எனது பைக் இருந்திருந்தால், இரண்டு சிக்னல் கடந்து இருப்பேன். பைக்கை எக்ஸ்ச்சேஞ்சில் விட்டுவிட்டு வந்த பிறகும், அதன் உருவம் என்னினைவிலிருந்து எக்ஸ்சேஞ்சாகாமல் தங்கியே இருக்கிறது. அவ்வளவு எளிதாக எனது பைக்கை எக்ஸ்சேஞ்சில் விட்டு வர மனமில்லை.

உயிரற்ற வாகனம் என்றாலும், அது தனது சுய நினைவுடனே என்னை இந்த மாநகரத்தில் சுமந்து திரிந்திருக்கிறது. எனது சுக துக்கங்களில் உடன் இருந்து ஆறுதல் தரும் நல்லதொரு பயணத்தையும் அது எனக்கு வழங்கி இருக்கிறது. வாழ்வின் கடினங்களையும் நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றலைத் தருவது எனது பைக் பயணம் மட்டுமே. முகத்தில் அறையும் காற்றில் கவலைகள் கரைந்து போகும் வரை எனக்கான பயணத்தை அது தந்திருக்கிறது. நமது சிந்தனை ஊர் சுற்றும் போதெல்லாம், பழக்கப்பட்ட குதிரையாய் தடம் பார்த்து தங்குதடையின்றி பயணத்தை மேற்கொள்ளும் திறன் (?) நமது வாகனத்திற்கு உண்டோ என்று நினைக்கும் அளவிற்கு அது இருந்திருக்கிறது!. 
எனது பைக்


நினைத்துப் பார்த்தால் இது சிறு பிள்ளைத்தனமாகக் கூட இருக்கலாம். இத்தகைய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் என்னை போன்று ரோட்டில் அலையும் மார்க்கெட்டிங் மனிதனுக்கு பைக் என்பது ஒரு உடன் பிறவாத நண்பன் போன்றது; என்பதை நீங்கள் உணரும் பட்சத்தில் இக் கட்டுரையை தொடரலாம்.

என்னை போன்ற மார்க்கெட்டிங் மனிதர்கள், வீட்டிலிருக்கும் நேரத்தை விட, அலுவலகத்தில் இருக்கும் நேரத்தைவிட ரோட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். இத்தகைய வேலைகளுக்கு அடிப்படை தகுதியே வண்டிதான். நேர்காணலில் போது கைவசம் பைக் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் அப்பாயின்மெண்ட் ஆர்டரையே டைப் செய்வார்கள். டார்க்கெட் நோக்கிய பயணம் என்பதால், வண்டி எப்போதும் சீறீப் பாயும் சிறுத்தையாகத்தான் இருக்கும். அப்படி இருக்க... பைக்கின் மீதான பிடிமானம் என்பது இல்லாமலா இருக்கும்?!.

பயணத்தோடு மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து எடுத்து வரும் மதிய உணவை சாப்பிட பைக் சீட்டுதான் தற்காலிக டைனிங் டேபிளாக பயன்படும். அதோடு, உண்ட களைப்பு போக..... சிறிது நேரம் உட்கார்ந்து இளைபாரவும் வண்டியே மஞ்சு மெத்தையாகவும் அவதாரம் எடுக்கும். தி நகர் நடேசன் பார்க், அதை சுற்றிய இடங்கள், ஜாய் ஆலுகாஸ் பின்புறம் இருக்கும் சோமசுந்தரம் கிரவுண்ட், அண்ணா நகர் பார்க், அடர்ந்த நிழல் கொண்ட ஏதாவது ஒரு தெரு, நிழல் தரும் ஏதாவது ஒரு மரத்தடி என்று பல இடங்களில் இப்படிப்பட்ட மார்கெட்டிங் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பைக்கையே ஒரு சிறு வீடாக மாற்றி இருப்பார்கள். புற உலகைப் பற்றி கவலை இன்றி தாங்கள் கொண்டு வந்த மதியம் உணவை, சீட்டில் அமர்ந்துக் கொண்டு ஸ்பூனால் எடுத்து சாப்பிடும் அழகு இருக்கிறதே....அது அலைந்து திரியும் மனிதனுக்கு மட்டுமே வரும்!.

இப்படியான ஒரு பிடிப்பு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது இருக்கத்தான் செய்கிறது. நமக்கும் அதுக்குமான அந்த ஆத்மார்த்தமான நினைவுகளை சேமித்து வைத்து நமக்கு தருகிறது. நமக்கு விளையாட்டாய் தெரியும் சில விஷயங்கள் சிலருக்கு உணர்வு பூர்வமாய் இருக்கும். தொடர்ந்து பயன்படுத்திய பேனா, சைக்கிள், கார், மோட்டார் பைக், சட்டை, டி ஷர்ட், செருப்பு, மூக்கு கண்ணாடி, கத்தி, வெற்றிலை பெட்டி, குடை, கைகடிகாரம், பர்ஸ் என்று ஏகத்திற்கும் பட்டியல் நீளும். இதற்கான பட்டியளில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இந்த போஸசிவ் டைப் மனிதருக்கு மட்டும்தானா.....? என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

நாய்களுக்கு தேங்காய் சிரட்டை கிடைத்தால் விடாது. ஒன்றுமில்லாத அந்த தேங்காய் சிரட்டையை கவ்விக் கொண்டு, லொங்கடா.....லொங்கடா....என்று ஒரு ஓட்டம் ஓடும். அங்கே போய் தனது இரண்டு கால்களையும் நீட்டி வைத்து படுத்துக் கொண்டு, அந்த சிரட்டையை கறண்டிக் கொண்டு இருக்கும். நக்கியது போரடித்தவுடன் மீண்டும் ஒரு நாய் ஓட்டத்தை ஆரம்பிக்கும். அது முடிந்த பிறகு மீண்டும் அந்த சிரட்டையை எடுத்துக் கொண்டு வேறொரு மூலையில் அமர்ந்துக் கொண்டு கரண்டத் தொடங்கிவிடும். (கி.ராஜநாராயனின் கரிசல் காட்டு கடுதாசியில் இந்த நாய் ஓட்டைத்தை மிக அழகாக விவரித்து இருப்பார்) தனக்கான பொருட்கள் மீது நாய்களுக்கு எப்போதும் பிரியம் இருக்கும். வீட்டில் வளர்க்கும் விலங்குகள் கூட, தாம் பயன்படுத்தியதை பிறர் தொட்டால் சண்டைக்கு வந்துவிடும். மனிதனுக்கும் அதே குனம் இருக்கத்தான் செய்கிறது!. யாரிடமிருந்து யார் கற்றுக் கொண்டார்கள், என்று தெரியவில்லை....?!.

ஒரு பைக்கை எக்ஸேஞ்சில் போட்டதற்கு இவ்வளவு அளப்பரையா? என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கதான் செய்கிறது?!.

இதற்கு முன்பும் இதே நிலை ஏற்பட்டபோது அப்போதைய பைக்கான டிவிஸ் சுசுகியை விற்க மனமில்லாமல் வீட்டிலேயே வைத்து விட்டேன். புது டயர் பளபளக்க இன்னும் அது வீட்டில்தான் (ஊரில்) நின்றுக் கொண்டு இருக்கிறது. இந்த ஹோண்டா ஷைனையும் வீட்டில் வைக்கத்தான் நினைத்திருந்தேன். "இன்னும் எத்தனை பைக்கைதான் வீட்டில் இப்படி வெட்டியாய் நிறுத்துவே.....?" என்ற எதிர்ப்பு குரல் வலுக்கவே, ஜகா வாங்கிவிட்டேன்.

நினைத்துப் பார்த்தால் எங்கேயும் எப்போதும் பிரிதலே நிலையாக இருக்கிறது!. ஆனால் வேறு வழியில்லை, காலத்தின் எக்ஸ்க்ளேட்டர்களில் நாம் தொடர்ந்து பயணம் செய்ய... இந்த பிரிதல் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நிலையற்ற வாழ்வில் நினைவுகள் மட்டுமே நிலைத்திருக்கிறது. இதுகாரும் என்னை சுமந்து திரிந்த எனது பைக்கை விட்டுவிட்டு, அதன் சுகமான நினைவுகளை சுமந்தபடி நடக்கத் தொடங்கினேன்.

என்றேனும் ஒரு நாள் சாலையில் நாங்கள் சக பயணியாய் சந்திக்கலாம்?!.
(((((()()())))))

வியாழன், ஜூன் 26, 2014

"முதல்ல லீவு போடு, அப்புறமா கட்டு போடு".



           புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் பாலம் கடந்து அலுவலகம் போக....வேப்பேரிக்கு வலதுபுறம் திரும்பும் போது சொற்பமாக தேங்கி இருந்த தண்ணீரில் பைக் ஸ்கிட்டாக.... அப்படியே வழுக்கி நடு ரோட்டில் நடு நாயகமாக விழுந்தேன். நல்ல வேளை வண்டி எதுவும் வரவில்லை என்று நினைத்த  வேளையில்...தண்ணி லாரி என்னை நோக்கி வந்தது.

மோதி செத்துவிடுவோம் என்று எனக்கு தோன்றவில்லை, அடிபட்டால் அந்த இம்சையை தாங்கவேண்டுமே என்ற எண்ணம்தான் அந்த கணத்தில் எனக்கு தோன்றியது. இப்படி நினைக்கும் போதே தண்ணி லாரி என் பைக்கில் மோதி நிற்க.....சரியாக பைக்குக்கும் லாரி பம்பருக்கும் இடையில் எனது இடது கால் மாட்டிக் கொண்டது. (ரொம்ப நாளா எனக்கு பம்பர் அடிக்குமுன்னு நெனைச்சிருந்தேன் அது இதுதான் போல...?!). 

'யாரு பெத்த புள்ளையோ...?' என்று மற்ற வாகன ஓட்டிகள் உச்சு கொட்டுவதற்கு முன்பே காலை லாரி பம்பரிலிருந்து வெடுக்கென்று வினாடி நேரத்தில் விடுவித்துக் கொண்டு தாவி குதித்துவிட்டேன். அதற்குள் கூட்டம் சேர....ஆளுக்காள் லாரி டிரைவரை வாய்க்கு வந்தபடி பாராட்டினார்கள்.  "நல்ல வேளை பிரேக் போட்டு நிறுத்திட்டப்பா", இல்லெனா இந்த ஆளு இம்மா நேரம் பூட்ட கேஸாயிருப்பான்' என்று.

சென்னையில ஓடுற தண்ணி லாரிக்கு பிடிக்காத வார்த்தை 'பிரேக்'. நல்ல வேளை அன்று அந்த லாரிக்கு அது பிடித்து இருந்தது!.


வெடுக்கென்று இழுத்ததில் கால் புசு புசுவென்று வீங்கிவிட்டது. ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. வலது காலில் கல் குத்தி ரத்தம் பேண்ட் வழியோடி ஷூவை நனைத்துக் கொண்டு இருந்தது. நல்ல வேளையாக சக அலுவலக தோழர்கள் ராஜாவும் அருணும் பின்னடியே வந்து முன்னாடி வந்துவிட்டார்கள். பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, என்னை 'டோ' பண்ணிக்கொண்டு போய் டவுண்டனில் இருந்த கிளினிக்கில் சேர்ந்து முதலுதவினார்கள்.

காலில் கட்டை போட்டுக்கொண்டு, பிற்பாடு ஒரு கால் பண்ணி, கால் டாக்ஸியை பிடித்து, வீடு வந்து சேர்ந்தால் மனைவி கண்ணை கசக்கினாள்.  அடுத்த நாள் அம்பத்தூரில் இருக்கும் செந்தில்குமார் எலும்பு டாக்டரிடம் போனேன். கிரேஸி மோகன் போல நோயாளர்களிடம் நேயமாய் கதை பேசிக்கொண்டு இருந்தார்.

"டாக்டர் ஏற்கனவே உங்களிடம் வந்து இருக்கிறேன்" என்றேன்.

"எலும்பு முறிவுன்னு நினைச்சவுடனே என் ஞாபகம் வருதுன்னா, நான் நல்லா மார்கெட்டிங் பண்ணி இருக்கிறேன்னு" அர்த்தம் என்றார்.

அடுத்த முறை கறி கடையில் நல்லி எலும்பு வாங்குறப்ப இவர் ஞாபகம் வராம இருக்க வேண்டும்!?.


எக்ஸ்ரேயை லைட்டடிச்சி பார்த்தவர் "உங்கள் காலில் 'சிப் கிராக்' ஆகியிருக்கு" என்றார் கண்ணடித்துக் கொண்டே....!.  "காலில் காயம் ஆறிய பிறகு 'கிரிப் பேண்டேஜ்' போடலாம்.  அப்படி இப்படி எப்படியும் காலை அசைக்கக் கூடாது. காலை தொங்கப் போடாம நீட்ட வாக்கில்தான் வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் வலி இருக்கும்" என்றார்.

"எவ்வளவு செலவு ஆகும்? டாக்டர்ன்னு கேக்கிறதுக்குப் பதிலா எத்தனை நாளாகும்? டாக்டர்"ன்னு கேட்டேன். "குறைந்தது மூனு வாரம் ஆகும்" என்றார். "அவ்வளவு நாள் லீவு கிடைக்காது டாக்டர்" அப்படின்னேன்.

கிராக்குக்கு கிராக்குத்தனமா பேசாதிங்க என்பது போல் பார்த்தவர், முதல்ல லீவு போடுங்க அப்புறமா காலில் கட்டு போடலாம் என்றார் பலமாக சிரித்துக் கொண்டே!.

இந்த வலியைவிட தினமணி இலக்கியத் திருவிழாவில் கலந்துக் கொள்ள முடியாததே எனக்கு பெரும் 'வலி'யைத் தந்தது.

-தோழன் மபா.
19/06/2014

----------------------- 

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

"நினைவுகள் மடியும் பொழுது....?!"





"எவ்வளவோ மக்க(ள் )வர்றாங்க போறாங்க அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இருக்க மாட்டங்குது. நல்லா இருக்காங்க, திடீருன்னு  எப்படி இருக்காங்க என்னு, ஊருக்கு போறப்ப  கேட்டா, உனக்கு விசயமேதெரியாதா, அவரு போயி மாசம் இரண்டாகுதுன்னு ரொம்ப அசால்ட்டாக சொல்றாங்க."


ராமச்சந்திரன் நைனா, ஓங்குதாங்கா இருந்த நாராயணசாமி மாமா,  மேரி அக்கா, எங்க வூட்டுக்கு பால் ஊத்துன இருளாயி அக்கா, 'டகு' அண்ணன்னு எல்லாம் சட்டு சட்டுன்னு போறாங்க. அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இல்ல.  எவ்ளோ பேரு ஒன்னுமே இல்லாம செத்து போறாங்க. போனதடவ ஊருக்கு போறப்ப பாக்குறவுங்க அடுத்த தரவ போறப்ப இருக்க மாட்டாங்கறாங்க...?


நெனச்சி நெனச்சி மனசு ஆத்து போவுது...! இப்ப கூட எழுதறப்ப கண்ணுல தண்ணி முட்டுது. என்ன வாழ்க்கைடா சாமி!.


-தோழன் மபா

Thanks Photo: http://xavi.wordpress.com/net/

வெள்ளி, ஜூன் 22, 2012

"எது தேடுவதாக இருந்தாலும் உன்னிடமிருந்தே தொடங்கு !"










 ண்பர் பை நிறைய மல்லிகை மொட்டுகளை எடுத்துவந்திருந்தார்.  அவரின் தோட்டத்தில் விளைந்த மல்லிகை  பார்க்க அழகாக குண்டுக் குண்டாக இருந்தது.  மல்லிகையின்  மனம் மனதை அள்ளியது.  

எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க அவரவர் ஒரு பிளாஸ்டிக் பையில் வாங்கிக் கொண்டனர். எனக்கு கொடுக்க வரும்போது, பிளாஸ்டிக் பை இல்லை. நானும் தேடு தேடு என்று தேடினேன் பை கிடைக்கவில்லை. பிறகென்ன இன்னொரு நாள் வாங்கிக் கொள்கிறேன் என்று விட்டுவிட்டேன்.


வீட்டிற்கு வந்ததும் எதேச்சையாக பாண்ட் பாக்கெட்டில் கை விட, அங்கே ஒரு பிளாஸ்டிக் பை கையேடு வந்தது. காலையில் கலர் ஜெராக்ஸ் எடுத்தபோது கொடுத்த அந்த மெல்லிய பிளாஸ்டிக் பை என்னிடம்தான் இருந்திருக்கிறது. 



நாம் தேடுவது எதுவாக இருந்தாலும் அதை பிரிதொரு இடத்தில்தான் தேடுகிறேம். அது நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யாமலேயே.....?





-ஜல்லியடிப்போம் .

திங்கள், ஜூன் 04, 2012

'நீ நக்கித்தான் ஆகவேண்டும் !?'



எந்தவித திட்டமிடலுமின்றி வாழ்க்கை நகர்ந்துக் கொண்டுஇருக்கிறது.

சம்பளம் வாங்குவதும், அதை செலவு செய்வதும், மீண்டும் அடுத்த சம்பளத் தேதிக்காக காத்திருப்பதும்,
என்று வாழ்க்கை ஒரு வட்டத்திற்குள்ளே சுழன்றுக் கொண்டு இருக்கிறது.

இதுதான் சரியான பாதையா...? என்ற கேள்வி ஒரு அலைபோல மனதிற்குள் மோதியபடியே இருக்கிறது.

எப்போதும், என்னேரமும் பிறருக்காக உழைக்க வேண்டி இருக்கிறது. நாமாக சுமந்தது கொஞ்சம் என்றாலும், பிறரால் சுமத்தப் பட்டதுதான் அதிகமாக இருக்கிறது.

"செய் ஏதேனும் செய்!" என்ற மனதின் கூக்குரலுக்கு இந்த சாமானிய சம்சாரியிடம் பதில் இல்லை!.

இந்த வாழ்க்கை நம்மை முழுமையாக தின்று தீர்க்கிறது. நமது ஆசைகளை, கனவுகளை, கடந்த கால நினைவுகளை என்று நமது வாழ்வின் பாதையில் உள்ள அனைத்தயும் அது தின்று தீர்க்கிறது. வாழ்க்கை தின்று தீர்த்த 'மிச்சங்கள்' பெரும் பாறையாக உருவெடுத்து நம் கால்கள் மீது பிணைக்கப் படுகிறது.

எப்போதும், என்னேரமும் யாரோ ஒருவருடைய வெற்றிக்காக கை தட்ட வேண்டியிருக்கிறது. வேறொருவரின் வெற்றியின் ருசி வலுக்கட்டாயமாக நமது புரங்கையின் மீது தடவப் படுகிறது. நீ வேண்டாம் என்று முகம் திருப்பினாலும் நீ நக்கித்தான் ஆகவேண்டும் என்று போதிக்கப்படுகிறது.

'இலக்கு டார்கெட்' அப்ரைசில்,  பிளான் ஆப் ஆக் க்ஷ ன்  , என்று பலவாறு, பல்வேறு பெயர்களில் கூறப்பட்டாலும், அவை உன் கழுத்தை அழுத்தும் 'நுகத்தடி' என்பதை மறந்துவிடவேண்டாம். அதை தூக்கி உன் கழுத்தில் வைத்து கட்டிவிட்டு, உன் பின்பக்கத்தில் நெருப்பையும் வைத்து விடுவார்கள்.

நீ நின்று திரும்பிப் பார்ப்பியா....?
இல்லை தலைதெறிக்க ஓடிவியா....?

-பிதற்றல்கள் தொடரும்.

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...