தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 07, 2026

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன் 

தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும். அவர்களின் படபடவென சுறுசுறுப்பும், அறிவார்ந்த செயல்திறனும் நமக்கு என்றும் வியப்பைத் தரும்!. அவர்களின் தொய்வில்லாப் பணி ஆர்வம், நம்மையும் தொற்றிக் கொள்ளும். அப்படியான ஒரு மனிதர்தான் தினமணியின் இணை ஆசிரியர் ஜே.ரங்கராஜன். பத்திரிகைத் துறையில் 40 ஆண்டுகளைக் கடந்த ஞாயிறு அன்று பூர்த்தி செய்து, இன்றும் பலருக்கு வழிக்காட்டியாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்.

ஒரு விஷயத்தை அவரிடம் சொல்வதற்காக  தொடர்பு கொண்டால்.... நாம் சொல்வதற்கு முன்பே, நாம் சொல்லவந்ததை யூகித்து…. அவரே கடகடவென சொல்லிவிடுவார். “இதைதானே சொல்ல வந்தீங்கஎப்படி  ?”  என்பார் கூலாக. சிரித்துக் கொண்டு; அப்படி ஒரு மதியூகம் !.

தினமணியில் சேர்ந்த போது, ஒரு செய்திக்காக அவரை தொல்லை செய்ய வேண்டி இருந்தது.  என்ன நினைத்தாரோ.? கையைப்பிடித்து நேராக அழைத்துப் போய்  அப்போதைய தினமணி ஆசிரியர் ஆர்.எம்.டி. சம்பந்தம் சார் முன்பாக நிற்க வைத்துவிட்டார். “இந்த பையன் என்னை தொல்லை செய்து கொண்டு இருக்கிறான்என்று சொல்லிவிட்டர். அவர் நேராக எங்களது துறைத் தலைவருக்கு போன் செய்துவிட்டார். பிற்பாடு அவரிடத்தில் என்ன தலைவா இப்படி பண்ணிட்டிங்களே ?” என்றேன். 

எங்கள் நட்பு இப்படிதான் தொடங்கியது. எடிட்டோரியலுக்கும் மார்க்கெட்டிங்குக்குமான உறவு எப்போதும் இப்படிதான் ஏற்றம் இறக்கமாகத்தான்  இருக்கும்.

நாற்பது ஆண்டுகளான இதழியல் பெரும் பணியில் தினமணி மருத்துவ மலர்’ மூலம் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் ஜே.ரங்கராஜன். இதழியல் பணி மூலமாக  மருத்துவத் துறைக்கும் அவர்கள் ஆற்றியப் பணி மெச்சதக்கது.  அலுவலகத்தில் யாருக்கு எந்த மருத்துவ உதவி என்றாலும் அதை முன்னின்று செய்து கொடுத்துவிடுவார்.   எனது மகன் குறைமாத குழந்தையாக பிறந்த போது, அப்போதைய மருத்துவத் துறை இயக்குநர் மீர் முஸ்தபா அவர்களிடம் சொல்லி எனக்கு உதவி புரிந்தார். அதை என்றும் மறக்க முடியாது. எவருக்கும் சளைக்காமல் உதவி செய்வார்.

போரூர் ராமசந்திரா பல்கலைக்கழக செய்தி இயக்குநராக இருந்த நல்லமுத்து சாரிடம் பேசும் போது ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்துக் கொண்டார்.  ஒரு முறை நான் ரயிலில் பயணம் செய்த போது, எதிர் சீட்டுக்காரர் ஒரு புத்தகத்தை ரொம்ப சுவாரசியமாக படித்துக் கொண்டு இருந்தார். அந்த புத்தகம் கிழியாமல் இருக்க அட்டை வேறு போட்டிருந்தார். இப்படி ஆழ்ந்து படிக்கிறரே.? அது என்ன புத்தகமாக இருக்கும் என்று எனக்கு ஆர்வம் ஏற்பட்டது; கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்அது என்ன புத்தகம் ?” என்று கேட்டதில், அதுதினமணி மருத்துவமலர்’ என்று தெரிந்தது. புத்தகத்தை படிக்க படிக்க மருத்துவம் சார்ந்த அத்தனை தகவல்களோடு மருத்துவமலர் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தது.  

தினமணி முன்னாள் ஆசிரியர் 

ஆர்.எம்.டி. சம்பந்தம்


 

இதற்காக உங்கள் ஆபிஸ் வந்து ஆர்.எம்.டி.யை சந்தித்து இந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டேன். இண்டர்காமில் ரங்கராஜனை அழைத்த ஆர்.எம்.டி, “உங்கள் பாராட்டுக்கு முழு சொந்தக்கரர் இவர்தான்என்று ரங்கராஜனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றார்.

தினமணியில் 1995-ஆண்டு நிருபர்கள் பிரிவில் தமக்கு அளிக்கப்பட்ட மருத்துவத் துறையை பெரிய வரமாகக் கருதி, மருத்துவம் சார்ந்த தமிழாக்க சொற்களைதான் ரங்கராஜன் அதிகம் பயன்படுத்துவார், பல மருத்துவ நிபுணர்கள் மூலம் மருத்துவம் குறித்த ஏராளமான தகவல்களை தினமணி வாசகர்களுக்காக வழங்கினார். இவரது மருத்துவ கட்டுரைகள் வாசகர்களிடையே ஏக பிரசித்தம்.  

பிற துறையினர் தமிழில் புலமை பெறுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். தமிழ்ப்புலமையாளர்கள், அறிவியல்துறைகளில் தேர்ச்சி பெறுவதைக் கடப்பாடாகக் கொள்ள வேண்டும் என்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழம் கூறுவது போல்…தனது மருத்துவக் கட்டுரைகளில் அதிகம் தமிழ் சொறகளை ரங்கராஜன் பயன்படுத்தினார்.

உதா: அகச்சுரப்பியியல் – Endocrinology, அடிசிலியல் – Aristology, அடையாளவியல் – Symbology, உடலியல் – Physiology, உடற் பண்டுவஇயல் – Phytogeography, உடற்பண்பியல் – Somatology, உடுவியக்கவியல்Cornea- கருவிழி வெண்படலம், Asteroseismology , உணர்வகற்றியல் – Anesthesiology, எலும்பியல் – Osteology,  எலும்பு நோய் இயல் - Osteo pathology, ஒளி உயிரியல் – Photobiology, ஒளி விளைவியல் – Actinology, ஒளிவேதியியல் - Photo Chemistry இப்படி சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
      

எழுபதுகளில் இவரது  தாய் வழி தாத்தா பத்மநாபன் மன்னார்குடியில் பத்திரிகைகளின் முகவராக  இருந்தார். தினந்தோறும் அதிகாலை தாத்தாவின் கடையில் சுதேசமித்திரன், அலை ஓசை, மக்கள் குரல், தினமலர், ஹிந்து (ஆங்கிலம்) நாளிதழ்கள், பாட புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய உதவிய பிறகு பள்ளிக்கூடம் செல்வதை வழக்கமாகக் கொண்டார் ரங்கராஜன். இதனால் பள்ளியில் படிக்கும் காலம்தொட்டே ரங்கராஜன் அவர்களுக்கு  பத்திரிகை ஆர்வம்  வந்துவிட்டது.

1964-இல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பிறந்தவர்; தற்போது அவருக்கு 62 வயதாகிறது மனிதரிடம் சுறுசுறுப்பு மட்டும் குறையவில்லை. ஒரு தேனி போன்ற  சுறுசுறுப்பு !

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எம்.எஸ்ஸி. (கணிதம்) படிப்பை 1986-இல் முடித்த பிறகு, இதழியல் துறை ஆர்வம் காரணமாக தினமலர் திருச்சி பதிப்பில் 1986 இல் பிழை திருத்துநராகப் பணியில் சேர்ந்தார் ரங்கராஜன். “எம்.எஸ்ஸி. கணிதம் படித்து விட்டு பத்திரிகை துறை பணி தேவையா  ?”  என்ற தாத்தாவின் அறிவுரையை ஏற்க மறுத்து, ஆர்வம் காரணமாக தாத்தாவின் உதவியுடன் இதழியல் துறையைத் தேர்வு செய்து, . சென்னை  தினமணியில் 1987-ல் பணியில் சேர்ந்தார்.

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

 

தினமணியில் நிருபராகப் பணியாற்றியபோது இவர் அளித்த சிறப்புச் செய்திகள் அரசின் கவனத்தை மட்டுமல்லாது, பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தன. தினமணியில், பிழை திருத்துநர், நிருபர், முதுநிலை நிருபர், தலைமை நிருபர், தலைமைச் செய்தியாளர் (சிஓபி), சிறப்பு நிருபர், ஆசிரியர் உரைப் பக்க பொறுப்பாளர், செய்தி ஆசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்து இணை ஆசிரியர் (அசோசியேட் எடிட்டர்) என்று உயர்ந்து நிற்கிறார்.

இவரது இடைவிடாத பணித்திறனை கண்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள்,  இவருக்கு இணை ஆசிரியர்  பதவி தந்து அங்கீகாரம் தந்திருக்கிறார்.  ஆசிரியர் அவர்களோடு அணுக்கமாக இருந்து  இருந்து தினமணியின் தனித்துவம் குன்றாது பார்த்துக் கொள்கிறார்.

சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் அச்சு ஊடகங்களின் தேவையும் அவற்றின் இன்றியமையாத பங்களிப்பையும் வெகுஜன மக்கள் உணர தொடங்கியுள்ளனர். மக்களின் கவனம் பத்திரிகைகளின் மீது மீண்டும் திரும்பத் தொடங்கி இருக்கிறது. சமூக ஊடகங்கள் போல் அச்சு ஊடகத்தை போகிற போக்கில் கையாள முடியாது. அதற்கு நேரம் காலம் உணரா அயராத உழைப்பும், அர்ப்பணிப்பு மன நிலையும் அவசியம். ஜே. ரங்கராஜன் போன்ற மூத்த பத்திரிகையாளர்களே கண்ணுக்கு தெரியாத வேர்கள் போல் காத்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.

-மபா

----------------

வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

வெள்ளி, மார்ச் 14, 2014

காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!


(தினமணியில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய கட்டுரை, பிடித்திருந்ததால் இங்கு  பிரசுரம் செய்கிறேன்)

                         பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒட்டப்பட்டிருக்கும் "காணவில்லை' சுவரொட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் துணுக்குறுகிறது. இவர்கள் எல்லாம் எப்படி காணாமல் போக முடியும்? மனிதர்கள், காட்டில் காணாமல் போகலாம், நாட்டில் காணாமல் போகலாமோ? இவர்கள் காணாமல் போக எது காரணமாக இருந்திருக்கும்? "தேடுவதற்கு யாருமற்றவர்கள் காணாமல் போவதில்லை' - எங்கோ படித்தவரி, எட்டிப்பார்க்கிறது.

காணாமல் போனவர்கள் காணாமல் போன அன்றைக்கு, பெரும்பாலும் கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறார்கள். "மனநிலை சரியில்லாதவர்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

அண்மையில், தென்மாவட்டத்திலுள்ள ஒரு நகரப்பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர், நல்ல மனநிலையுடையவராகவும் ஒழுங்கான முறையில் உடை அணிந்தவராகவும் காணப்பட்டாலும், எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் கைநீட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் முகம் பரிச்சயமானதாக இருந்தது. அவரை நெருங்கினேன். அவரும் என்னை கவனித்து விட்டார். சட்டென்று பேருந்து நிலையக் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்.

சென்னையில் யார் வீட்டிலோ இவரைப்பார்த்திருக்கிறேன். யார் வீடாக இருக்கும் நினைவின் அடுக்குகளில் துழாவினேன். மனம் பதைத்தது. வழி தவறி வந்துவிட்டாரோ? என்னை கண்டதும் ஏன் ஒளிய வேண்டும்? அந்த பேருந்து நிலையத்தில் எவ்வளவு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெயில் - கூட்டம் - பேருந்துகளின் ஹாரன் சப்தம். நான் விரைவிலேயே களைத்துப் போய்விட்டேன்.

சற்று நின்றேன். கையில் பை கனத்தது. அதைவிட மனசு கனத்தது. வீட்டைவிட வெளியிடத்தை பாதுகாப்பாக உணர்வது எவ்வளவு துர்பாக்கியமானது? சுயமான சம்பாத்தியமோ, பென்ஷன் போன்ற வருவாயோ இல்லாத முதியவர்கள், வீட்டில் உள்ளோரின் கடுஞ்சொல் தாங்காது சில நேரங்களில் வெளியேறி விடுகின்றனர்.

இந்த முதியவரும் அப்படிப்பட்டவர்களில் ஒருவாராக இருப்பாரோ? பெரும்பாலான "காணவில்லை' சுவரொட்டிகளில், சில குறிப்பிட்ட வாசகங்களே அடிக்கடி காணப்படும்.

ஒருமுறை நான் பார்த்த "காணவில்லை' சுவரொட்டி ஒன்றில், மீசை அரும்பத் தொடங்கும் ஒரு பையனின் பால் வடியும் முகமும், அதன் கீழே, "அசோக்! எங்கிருந்தாலும் வரவும். அம்மா உன் நினைவாக படுத்த படுக்கை ஆகிவிட்டாள். உன் விருப்பப்படி இனி எல்லாரும் நடந்து கொள்கிறோம், உடனே வரவும்' என்ற வாசகங்களும் காணப்பட்டன.

இந்த சுவரொட்டியை அந்த பையன் பார்த்திருப்பானா? அம்மாவின் மேல் உள்ள பாசம் அவனை வீட்டுக்கு அழைத்துப் போயிருக்குமா? சூதும் வாதும் நிரம்பிய இந்த உலகத்தில் கெட்டவர்கள் கையில் அவன் கிடைத்திருந்தால், அவன் நிலைமை என்னவாகியிருக்கும்? கடவுளே, அப்படி ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது.

அந்த பையன் திரும்ப வந்திருப்பானா என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எனக்குள் மூண்டது. அந்த சுவரொட்டி ஆறு மாதங்கள் முன்னால் ஒட்டப்பட்டதாக இருந்தது. அதிலிருந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டேன். மறு முனையில் ஒரு பெண் குரல் கிறீச்சிட்டது.

"ஐயா, நீங்க யாருங்க? அசோக் கிடைச்சுட்டானா? அவனைப் பார்த்தீங்களா?' என் கைகள் நடுங்கின. நான் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். ஆனாலும் "ஐயா'... "ஐயா'.. அந்தத் தாயின் தீனக்குரல் என்னைப் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்தது.

வீட்டை விட்டு ஓடிப்போன ஒரு சிறுவனைப் பற்றிய ருஷ்யக்கதை உருக்கமானது: தாத்தா, பேரன் } இரண்டே பேர். தாத்தா பேரனை கண்டிப்பாக வளர்க்கிறார். சின்னஞ்சிறுவனான பேரனுக்கு தாத்தாவின் கண்டிப்பு பிடிக்கவில்லை. ரயில் ஏறி தொலைதூர நகரத்துக்கு போகிறான். அங்கே ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். ஒருநாள் காகிதமும், கவரும் சேகரித்து தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறான்.

அன்புள்ள தாத்தா,

இங்கே நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். உடம்பெல்லாம் கரியும் அழுக்குமாக இருக்கிறேன். அடிக்கிறார்கள். என்னை வந்து அழைத்துப் போங்கள். இனிமேல் உங்கள் பேச்சை கேட்கிறேன். உடனே வரவும். இப்படிக்கு - உங்கள் பேரன்.
கவரை ஒட்டி எடுத்துக் கொண்டு ஓடுகிறான். தபால் பெட்டியில் சேர்க்கும் முன்னதாக ஞாபகம் வந்தவனாய் முகவரியை எழுதுகிறான் தாத்தா, கிராமம். அவ்வளவுதான். 

நாம் நாளும் காணும் "காணவில்லை' சுவரொட்டிகளுக்குப் பின்னால் இது போன்ற கண்ணீர்க் கதைகள் எத்தனையோ? இனி ஒரு விதி செய்வோம். முதியோருக்குப் பரிவு காட்டுவோம்; பெண்களையும் சிறுவர்களையும் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவோம்; மனநலம் குன்றியவர்களைப் பாதுகாப்போம். காணாமல் போகட்டும் "காணவில்லை' சுவரொட்டிகள்!.



நன்றி தினமணி.

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சமூக வலைதளங்களிலுமா சாதி?



//மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.//


 By தோழன் மபா.
First Published : DINAMANI 12 August 2013 02:15 AM IST




    நமது கலையும் பண்பாடும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. மொழி வளமை, இலக்கியங்களின் ஆளுமை, உயர்வான கலாசாரம், ஆன்மிகம் என்று உலகிற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கலாசார உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கண்டங்கள் இருண்ட கண்டமாக இருந்தது என்பார்கள்.


இப்படிப்பட்ட பெருமை மிக்க தமிழ்ச் சமுதாயம் சாதியின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான இணையதளங்களை சாதிப் பெருமைக்கும், சாதிய சண்டைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் தமிழர்கள் என்பது வருத்தமான உண்மை.


மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


முன்னெப்போதையும் விட தற்போது சாதிய சண்டைகள் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது. முன்பு தெரு முனைகளிலும், கடைத் தெருவிலும் நடந்த சாதிச் சண்டை தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சமூக மறுசீரமைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஒரு மேடையாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லிபியா, துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, சமூக வலைதளங்களே காரணமாக இருந்திருக்கின்றன.


நவீன உலகை கட்டமைப்பதில் இன்றைய தலைமுறையினரின் கருவியாக சமூக வலைதளங்கள் செயலாற்றுகின்றன. ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்.


முன்பெல்லாம் எழுதுவதற்கு எளிதில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. நமது கருத்தை நம்மை சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியே எழுதினாலும் அது அச்சேறுவதென்பதும் இமாலைய சாதனையாகவே இருந்தது.


என்னதான் முழு திறமையைக் கொண்டு எழுதினாலும், அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையென்றால் "பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற துண்டு சீட்டு உங்கள் வீடு தேடி வரும்.


ஆனால், இணையதளங்களிலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எவரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. இனம், சமூகம், மதம் போன்ற மிகவும் சென்சிட்டிவான விஷயங்கள் கூட அதன் விபரீதம் புரியாமல் இங்கே விஷமத்தனத்துடன் விமர்சிக்கப்படுகிறது. இதில் தனது சாதி பெருமையை தம்பட்டம் அடிப்பதோடு இவர்கள் நின்று விடுவதில்லை. இதில் சாதிகளை தங்களுக்குள் ஒப்பீடு செய்து கொள்கின்றனர். இரு பிரிவாக பிரிந்துக் கொண்டு மோதிக் கொள்கின்றனர். இதில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு, கேட்கவே காதுகூசும் பல நாராசமான சொற்கள் எழுத்தில் வடிக்கப்படுகின்றன.


இத் தளங்களை தொடங்குவது எளிது என்பதால், தனி நபர்கள்கூட தளங்களை தொடங்கி பிற சமூகங்களை சீண்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இத் தளங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கழிவறை சுவர் போன்று எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கிறுக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.


கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தமது பெயருக்கு பின்னால் தனது ஜாதி பெயரை வைத்துக் கொள்வது ஒரு அநாகரிகமான செயல் என்ற புரிதல் 60களிலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சாதியை தனது பெயரில் இருந்து தூக்கியெறிந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழகம் என்பதை வளரும் தலைமுறை அறிந்திருக்கவில்லை.


இத்தகைய போக்கு நமக்கு நிச்சயம் பலன் தராது. நம்மை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கிதான் அழைத்துச் செல்லும். பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் நம் பொழுதையும் சிலரின் உயிரையும் அழிப்பதற்குப் பயன்படவேண்டாம்.


நமது முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகப் பெரிய தடையாக சாதியே இருக்கிறது என்பதை வளரும் தலைமுறை உணரவேண்டும்.


அரசாங்கமும் சமூகத் தளங்களை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்தவேண்டும். அதில் வரும் பதிவுகள் தணிக்கை செய்யப்படவேண்டும். ஆயுதத்தை விட கூர்மையானது எழுத்து. அது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை சாதி என்ற கொடிய நோயால் பீடிக்கப்பட்டுவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
()()()()()()()()()()()()()


தினமணியில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுதான் எனது கட்டுரை தினமணி தலையங்கம் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.   தொடர்ந்து  எழுதி வந்தாலும் தினமணி தலையங்கப் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவருவதென்பது மிகுந்த கடினமான ஒன்று.  அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது எனது எழுத்திற்கு கிடைத்த  வெற்றியாகவே உணர்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டும் உங்கள் அனைவருக்கும் எனது  நன்றியும்  வணக்கங்களும்!. 

அன்புடன் 
-தோழன் மபா. 
நன்றி! தினமணி (12.08.2013).

வியாழன், மே 30, 2013

தமிழுக்குச் சிறுமை!

தினமணி  (28/05/2013 ) தலையங்கம்.


                                 லையாளத்துக்கு செம்மொழித் தகுதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு ஆகியவற்றுடன் மலையாளமும் செம்மொழித் தகுதிப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

மலையாள அன்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், நம் மனதில் தோன்றும் நெருடலான கேள்வி இதுதான்:... செம்மொழித் தகுதி வரையறைக்குள் தமிழ், சமஸ்கிருதம் தவிர ஏனைய இந்திய மொழிகள் வருகின்றனவா?

ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றால், அது "தொன்மையானதாக இருக்க வேண்டும்; தனக்கான சொந்தக் கலாசாரம், பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருக்க வேண்டும்; மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது ஒரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்'.

இந்த வரையறை அனைத்தும் பொருந்திய தமிழ் மொழியைச் செம்மொழியாக மத்திய அரசு அறிவிக்க நாம் பட்ட பாடெல்லாம், தமிழ்ச் சான்றோர் மட்டுமே அறிவர். இப்போது, விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் செம்மொழித் தகுதிச் சான்று வழங்கி கௌரவிக்கத் தலைப்பட்டிருக்கிறது நடுவண் அரசு.

மலையாள மக்கள் பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசியவர்கள்தான். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.

சேர நிலம் - மலைஞாலம். மலைஞாலம் என்பதன் திரிபே மலையாளம். மூவேந்தர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விடுத்து, ஆங்காங்கே குறுநில மன்னர்களும் விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் ஏற்பட்டபோது தமிழும் சமஸ்கிருதமும் கலந்து புதிய பல வார்த்தைகள் உருவாகித் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தோன்றின என்பதுதான் திராவிட மொழி ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவு. அதில் குறிப்பாக மலையாளம் அதிகமான தமிழ்ச் சொற்களால் உருவான மொழியாக அமைந்தது.

இன்றும்கூட, பல தூயத் தமிழ்ச் சொற்கள் மலையாளத்தில் வழக்கத்தில் உள்ளன. நாம் மறந்துவிட்ட வெள்ளம், இல்லம், ஊன், உறக்கம் போன்ற சொற்கள் மலையாளத்தில்தான் புழக்கத்தில் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில்தான் மலையாள மொழி, எழுத்தச்சனால் எழுத்துரு பெறுகிறது. மலையாளத்துக்கென தனியாகத் தொன்மை இலக்கியங்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து கிளைத்து உருவானவர்கள். தொன்மை இலக்கியம் என்று மலையாளத்தினர் தேடினால் அது தமிழ்ச் சங்க நூல்களில்தான் வந்து முடியும்.

இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், மலையாளம் முன்னணியில் நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படத் துறையை எடுத்துக்கொண்டாலும்கூட, கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த 100 சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ஐம்பது திரைப்படங்கள் மலையாள, வங்க மொழித் திரைப்படங்களாகத்தான் இருக்கும். அதற்காக, மலையாளத்தை செம்மொழி என்று சொல்லும்போது நெருடல் ஏற்படவே செய்கிறது.

இந்நிலைக்குக் காரணம், மொழியின் தொன்மைக்கான காலவரையறையை 2,000 ஆண்டுகளாக நிர்ணயிக்காமல், 1,000 ஆக குறைத்ததுதான். செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழின் தொன்மையை வெறும் ஆயிரம் ஆண்டுகளாகச் சுருக்கிக்கொள்ள நாம் தலைப்பட்டதால்தான் இப்போது, எல்லா மொழிகளும் செம்மொழி அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்கின்றன. முன் யோசனை இல்லாமல் செய்த அந்த முடிவின் விளைவால் இப்போது தமிழின் தொன்மையே கேள்விக்குறியாக்கப்படுகிறது.

"மற்றொரு மரபின் நீட்சியாக அல்லது மற்றொரு மரபில் கிளைத்ததாக இருத்தல் கூடாது, மிகச் சிறந்த தொன்மை இலக்கியத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற வரையறைக்குள் மலையாளம் வரவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய மத்திய அமைச்சரவை, அரசியல் காரணங்களுக்காக இந்த வரையறைகளை எளிதில் மறந்துவிட்டு, மலையாளத்தையும் செம்மொழியாக அறிவித்திருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தில்கூட முதல் மூன்று பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு அளித்து, ஓடி முடித்த மற்றவர்களுக்கு வெறும் சான்றிதழ் கொடுத்து வேறுபடுத்தும் நிலை உள்ளதைப் போல, தமிழ்ச் செம்மொழி இந்தியாவின் செம்மொழிகளிலேயே முதன்மையானது என்ற உயர்வை அளிக்க வேண்டாமா? குறைந்தபட்சம் இந்த நியாயத்தைக்கூட செய்யவில்லை என்றால், தமிழ்மொழியும் ஒரு செம்மொழியாக உலா வருவது என்பது, "தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்பதற்கு ஒப்பானது.

தமிழ் மொழி சாதாரண செம்மொழி அல்ல. அது உயர்தனிச் செம்மொழி. அதற்கேற்ப அதிக நிதி, அதிக இருக்கைகளை ஏற்படுத்துதல் வேண்டும். தமிழுக்குத் தனித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மலையாளமும் செம்மொழி, தமிழும் செம்மொழி என்றால், அது மலையாளத்தைப் பெருமைப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாகத் தமிழைச் சிறுமைப்படுத்தும் முடிவு. இதற்கு செம்மொழி அந்தஸ்து இல்லாமலேயேகூட இருந்துவிடலாம். செம்மொழி அந்தஸ்து இல்லை என்பதால் தமிழின் தொன்மையொன்றும் குறைந்துவிடாது. செம்மொழி அந்தஸ்து பெற்று அதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடுகளை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். தகுதி இல்லாவிட்டாலும்கூட செம்மொழித் தகுதி பெற்று தங்களது தாய்மொழியை வளப்படுத்தத் துடிக்கிறார்கள் மற்றவர்கள். இனிமேலாவது நாம் விழித்துக் கொள்வோமா? செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டதாலேயே ஏனைய மொழிகள் பழம்பெரும் மொழிகளாகிவிடாது.

வெட்டி பந்தாவுக்காகத் தகுதி இல்லாதவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதுபோல இருக்கிறது மத்திய அரசின் செம்மொழித் தகுதி வழங்கும் போக்கு!

-நன்றி தினமணி!

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...