திங்கள், ஏப்ரல் 26, 2021

கரோனா எதிர்ப்பு போரில் குஜராத்தை மிஞ்சும் தமிழகம் !

வர் குஜராத் பெண்மணி. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அதனால் தமிழ் அட்சரம் பிசகாமல் வரும். ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். அவரது உறவினர்கள் அடையார், புரசைவாக்கம், செளகார்பேட்டை என்று சென்னை முழுவதும் வியாபித்து வாழ்கிறார்கள்.
இதுனால் வரைக்கும் எங்க குஜராத் அப்படி, எங்க குஜராத் இப்படி என்று வம்படியாக கம்பு சுற்றிக் கொண்டு இருந்தார். மோடி, அமித்ஷா வகையராக்களின் வீர தீர பராக்கிரமங்களை வாய் வலிக்க வியாக்கியானம் பாடுவார். அவர் என்று இல்லை, அவரது உறவுகள் முழுவதுமே அப்படிதான். குஜராத்திகளின் பெருமைகளை அவர்கள் பேசும் போது கேட்க வேண்டுமே? காதில் ரத்தம் வந்துவிடும். ரொம்ப உக்கிரம் காட்டுவார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் வாழும் அவரது உறவினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார், ஸ்டான்லி , ராஜீவ்காந்தி போன்ற அரசு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு நல்ல சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குஜராத் அம்மணி பேஸ்தடித்துக் கிடக்கிறார். குஜராத்தில் உள்ள அவரது உறவினர்களில் பலர் கரோனாவால் பீடிக்கப்பட்டு கிடக்கிறார்களாம். பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவுடன் அரசுக்கு தெரியப்படுத்தினால், அரசிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லையாம். மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறதாம். இதனால் பலர் உயிரிழக்க நேர்கிறதாம். என்று சோக கீதம் வாசித்தார்.
'அந்த வகையில் நம்ம தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லைப்பா.... (கவனிக்க...நம்ம தமிழ்நாடு). பாசிட்டிவுன்னு அரசாங்கத்துக்கு தகவல் தெரிந்தவுடன், சுகாதார ஆய்வாளர்கள் வீட்டுக்கு நேரடியாகவே வர்றாங்க. சுவாப் மற்றும் சிடி ஸ்கேன் டெஸ்ட் மூலம் கரோனா தொற்றின் நிலை குறித்து தெரிந்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சையா...? இல்லை வீட்டில் தனிமைப்படுத்துதல் போதுமா என்று முடிவெடுத்து நோயாளிகளை காப்பாற்றுகின்றனர்' என்றவர் முத்தாய்ப்பாக 'thank god' என்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் நிலை அறிந்து தன்னை மேம்படுத்திக் கொணடிருக்கிறது தமிழக சுகாதாரத்துறை. கரோனா நோய்க்கு எதிரான முன் களப்பணி, கரோனா நோய்க்கு பிந்தைய நலவாழ்வு என்று அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி இருக்கின்றது தமிழகம்.
மருத்துவ துறையில் இப்படி நிலையான வளர்ச்சிக்கு சுயமாய் சிந்தித்த திராவிட ஆட்சியாளர்களே காரணம். இது வட மாநிலங்களில் மிஸ்ஸிங்.
அதனாலேயே உண்மை நிலை உணர்ந்து அந்த குஜராத் பெண்மணி இப்போது கதறுகிறார்.
ஆனால் சில மேதாவிகள், குஜராத் பற்றிய போலி பிம்பங்களை இங்கு பரவவிட்டும், 'தமிழகத்தை திராவிட கட்சிகள் வீணடித்து விட்டன' என்றும் கூக்குரலிட்டு வருகிறார்கள்.
-மபா
No photo description available.

சனி, ஏப்ரல் 17, 2021

சித்திரை ஒன்று ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை. விரிவான தகவல்
தமிழ் புத்தாண்டு தை மாதமா சித்திரை மாதமா என்ற கேள்வி தமிழர்களிடையே பல காலமாக இருந்து வருகிறது. உலகின் முது மொழியான தமிழ் மொழியின் ஆண்டுகள் எப்படி சமஸ்கிருதத்தில் இருக்க முடியும் ? என்ற கேள்வியின் முடிவே தை ஒன்றே தமிழர்களின் புத்தாண்டு என்ற முடிவிற்கு தமிழாய்ந்த அறிஞர்கள் வந்திருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1935 ஆம் ஆண்டு தை ஒன்றே தமிழற்களின் புத்தாண்டு என்று எடுக்கப்பட்ட முடிவை இன்று வரை அதாவது 2021 ஆம் வரை கூட நடைமுறைப் படுத்த முடியவில்லை என்றால், இங்கு தமிழ் நாட்டில் எத்தகைய சூழல் நிலவுகிறது என்று பாருங்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரான ஒரு கும்பல் இன்றுவரை சதி செய்கிறது. அதனாலயே சித்தரை ஒன்றே தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடக் கூடிய இழி நிலை இருந்து வருகிறது.

தை ஒன்றே தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு என்று உண்மை தற்போது இணைய வெளியில் உலாவந்துக் கொண்டு இருக்கிறது. அவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இதை தமிழர்களிடம் பரப்பச் செய்வோம்.

- மபா.


கட்டுரை 1


தமிழ்ப் புத்தாண்டு சிறப்புப் பார்வை !! தை (சுறவம் ) முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921) 02. தேவநேயப் பாவாணர் 03. பெருஞ்சித்திரனார் 04. பேராசிரியர் கா.நமசிவாயர் 05. இ.மு. சுப்பிரமணியனார் 06. மு.வரதராசனார் 07. இறைக்குருவனார் 08. வ. வேம்பையனார் 09. பேராசிரியர் தமிழண்ணல் 10. வெங்காலூர் குணா 11. கதிர். தமிழ்வாணனார் 12. சின்னப்பத்தமிழர் 13. கி.ஆ.பெ. விசுவநாதர் 14. திரு.வி.க 15. பாரதிதாசனார் 16. கா.சுப்பிரமணியனார் 17. ந.மு.வேங்கடசாமியார் 18. சோமசுந்தர் பாரதியார் 19. புலவர் குழுவினர் (1971) மலையகத்தில் 01. கோ.சாரங்கபாணியார் 02. சா.சி. குறிஞ்சிக்குமரனார் 03. அ.பு.திருமாலனார் 04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார் 05. கம்பர் கனிமொழி குப்புசாமி 06. மணி. வெள்ளையனார் 07. திருமாறன் 08. இரெ.சு.முத்தையா 09. இரா. திருமாவளவனார் 10. இர. திருச்செல்வனார் இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி உரையாடி ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்துத் தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள். இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும். 1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய இந்த அறுபதில் எது தமிழ்ச்சொல்? யாராவது சொல்ல முடியுமா? தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் வியப்பானது. தமிழர்கள் இயற்கையைச் சான்றாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை காலை நண்பகல் எற்பாடு மாலை யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீனக் காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும். (1 நாழிகை - 24 நிமிடங்கள் 60 நாழிகை - 1440 நிமிடங்கள் இதனை இன்றைய கிறித்தவக் கணக்கீட்டின் படி பார்த்தால் 1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள் 24 மணித்தியாலங்கள் - 1 நாள்) பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள். 1. இளவேனில் - (தை---மாசி) 2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை) 3. கார் - (வைகாசி - ஆனி) 4. கூதிர் - (ஆடி - ஆவணி) 5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி) 6. பின்பனி (கார்த்திகை - மார்கழி) மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் எனச் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் உயர்மட்டக் கடுமையை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனில் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டு பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனில் காலங்களில்தான் தொடங்குகின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனில் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான ஆற்றல்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள். நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன் அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆக வேண்டுமெனில் சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள்!

-------------------------------------------------------------------


கட்டுரை 2
1-சித்திரை புத்தாண்டு முறை கிபி 78க்கு பிறகுதான் சாலிவாகனன் காலத்துக்கு பிறகு மத புராணங்களின் வழி தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டது.
2-கிருஷ்ணரும் நாரதரும் 60 ஆண்டுகள் உடலுறவு கொண்டு பெற்றுகொண்ட 60 மகன்கள்தான் பிரபவ தொடங்கி அட்சய வரைக்குமான சமஸ்கிருத ஆண்டுகள் என்கிறது அபிதானசிந்தாமணி.
3 - இந்த 60 ஆண்டுகளில் 15 ஆண்டுகளை சூத்திர ஆண்டுகள் என்கிறார்கள். ஆண்டுகளில் கூட சாதி வர்ண பிரிவினை.
4 - இப்படிப்பட்ட முட்டாள்தனமான அறிவுக்கு புறம்பான யாரோ தமிழரல்லாதவர் உருவாக்கிய கதைகளைக் கொண்ட சமஸ்கிருத திணிப்பு ஆண்டு கணக்கை மாற்ற தமிழறிஞர்கள் முடிவெடுத்தனர்.
5 - 1935ல் திருவிக, மறைமலைஅடிகள், உவேசா, கா நா சுப்ரமணியபிள்ளை, சோமசுந்தர பாரதியார், கிஆபெ விஸ்வநாதம் முதலான தமிழ் அறிஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி புதிய ஆண்டை உருவாக்க தொடங்கினர்.
6 -தமிழ் மீது பற்றுகொண்ட பெருமக்கள் ஆரியகலப்பையும் சமஸ்கிருத திணிப்பையும் புறந்தள்ளினர். தமிழ் புத்தாண்டுக்கு ஏன் சமஸ்கிருத ஆண்டு பெயர்கள், தமிழ் புத்தாண்டுக்கு ஏன் மத சார்பு கதைகள் என... தமிழர்களுக்கென திருவள்ளூர் ஆண்டுகளை உருவாக்கினர்.
7 - உலகங்கும் ஜனவரியின் வசந்தகால அடிப்படையில்தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் நமக்கென புத்தாண்டுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை என்றாலும், மாதங்களில் தை மாதத்தில் மட்டுமே 80% கொண்டாட்டங்களே பிரதானமாக இருந்திருக்கிறது. விவசாய குடிகளான நமக்கு அறுவடைக்காலமே புதிய ஆண்டின் துவக்கமாக இருக்க முடியும் என தீர்மானித்து திருவள்ளுவர் ஆண்டு காலண்டரை உருவாக்கினர்.
8 - அறுவடைக்காலமான தை முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டு சமஸ்கிருத ஆண்டுகணக்கிலிருந்து 31 வருடங்கள் பின்னோக்கி திருவள்ளுவர் ஆண்டினை உருவாக்கினர். இதில் தை 1ஐ முதல் மாதமாக்கி அதையே தமிழ்புத்தாண்டு என அறிவித்தனர் தமிழ் அறிஞர்கள்.
9 - 1935லேயே இதை அறிவித்திருந்தாலும், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தபின் 1972ல் கலைஞர் இதனை ஏற்றுக்கொண்டு அரசு பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை பயன்படுத்த ஆணையிட்டார்.
10 - இருப்பினும் பொல்லாத ஆரிய சதி நம்மை விட்டு அகலவில்லை. மீண்டும் மீண்டும் சமஸ்கிருத நாட்காட்டியின் படி உருவாக்கப்பட்ட சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு என்கிற பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு வியாழனும் சனி கிரகமும் சூரியனை சுற்ற 60 ஆண்டுகள் ஆகிறது என்றெல்லாம் விஞ்ஞான காரணங்களை புனைந்தன சமஸ்கிருத கூட்டம்.
11 - பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா தமிழர் கூட்டம். 2006ல் முதல்வராக பதவியேற்ற கலைஞர் தை1 தான் இனி தமிழ்புத்தாண்டு என அதிகாரபூர்வமாக அறிவித்து ஆணையிட்டார்
12 - பார்ப்பனர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா... ? பிரிட்டிஷ் காலத்தில் பிராமின் நியூ இயர் என்று அறிவிக்கபட்ட நாள் ஆயிற்றே. கலைஞர் ஆட்சி அகலும் வரை காத்திருந்தனர். ஜெயலலிதா மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்ததும் அம்மையாரிடம் முறையிட்டு மீண்டும் பழையபடி சித்திரை 1 ஐயே புத்தாண்டாக அறிவிக்க செய்தனர்
13 - நம் சங்க இலக்கியங்கள் எங்கும் நிறைந்திருப்பது தை கொண்டாட்டங்கள் மட்டும்தான். தை கொண்டாட்டங்களுக்கு மத சார்பு கிடையாது.தமிழராக அனைவரையும் ஒன்றிணைக்கிற ஒன்றாக அது இருக்கிறது. ஆனால் சித்திரை புத்தாண்டு மத சார்பு கொண்டது. அது இந்துக்களுக்கு மட்டுமானது என்பதை பறைசாற்றுகிறது. சித்திரை 1 ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது அல்ல. தை 1தான் அனைவருக்குமான புத்தாண்டு.
14 - அதனால்தான் நம் கவி பாரதிதாசன் பாடினான்...
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
15 - ஆரியர்கள் திணித்த சித்திரை திருநாள் நம்முடைய புத்தாண்டு அல்ல... தை 1 தான் தமிழர்களாகிய நாம் நமக்காக உருவாக்கிய புத்தாண்டு. அதை கொண்டாடுதல்தான் நமக்கு பெருமையே தவிர இது அல்ல.
இறுதியாக கொண்டாட்டத்தில் அரசியல் பார்க்கவேண்டுமா என்று கேட்கலாம். அரசியல் பார்க்காமல் போனதால்தான் சமஸ்கிருத புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என நமக்கே விற்றிருக்கிறது இன்னமும் விற்றுக்கொண்டிருக்கிறது பார்ப்பன கும்பல்!

-------------------------------------------------------
கட்டுரை 3

தமிழ் புத்தாண்டு எப்போது: அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇 ஆங்கிலேயர்களுக்கு... 1. சனவரி 2. பிப்ரவரி 3 . மார்ச் 4. ஏப்ரல் 5. மே 6. சூன் 7. சூலை 8. ஆகத்து 9. செப்டம்பர் 10. அக்டோபர் 11. நவம்பர் 12. திசம்பர் வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு... 1. சித்திரை 2. வைகாசி 3. ஆனி 4. ஆடி 5. ஆவணி 6. புரட்டா…
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி

 தமிழர்களுக்கு... 

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி )
3. மீனம் ( பங்குனி)
4. மேழம் ( சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி )
10. துலை (ஐப்பசி )
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.

எனவே தமிழர்களுக்கு தை திருநாளே தமிழ் புத்தாண்டு !


நண்பர்களே.... தை ஒன்றே தமிழ் புத்தண்டு தொடர்பான விளக்கக் கட்டுரை இருந்தால் பதிவிடவும்.

சனி, மார்ச் 27, 2021

காதல் வைபோகமே காணும் நன்னாள் இதே' சுவரில்லாத சித்திரங்கள்

'காதல் வைபோகமே காணும் நன்னாள் இதே' இந்தப் பாடல் மீது எனக்கு  எப்போதுமே ஒரு கிரேஸ் உண்டு. ஆர்ப்பாட்டமான துள்ளல் இசைக்கு இப்பாடலை தயக்கமின்றி கை காட்டலாம்.  

சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் 
 மலேஷியா வாசுதேவன்  எஸ். ஜானகி ஆகியோரின்  இளமைக் குரலில்,  கேட்கும் போதெல்லாம் இப்பாடல் நமக்குள் உற்சாகத்தை பீய்ச்சி அடிக்கும்.  பாடலில் பல்லவி கொஞ்சம்  போர் ரகம்தான், பாடலின் தொடக்கமே சுலோவாக இருக்கும். பிற்பாடு  சரணத்தின் போது.... டாப் கியரில் எகிற ஆரம்பித்து, கேட்ப்பவர்களை  அப்படியே கிறுகிறுக்க வைத்துவிடும்.  
என்னைப் போல பெருவாரியான இசைஞானியின்  ரசிகக் குஞ்சுகளுக்கு  இது இளையராஜா பாடல் என்ற உள்ளார்ந்த புலகாங்கிதம் இருந்தது.   கடைசியில் பார்த்தால் இது அவரது தம்பி கங்கை அமரனின்  பாடல் !   அடடா... என்னவோரு இசைப் படையல் ?! சும்மா கடாவெடட்டி விருந்து  வைத்திருப்பார்.

அதுவும் சரணத்தில் வரும் இந்தப் பகுதி  'ஏ' கிளாஸ் !

கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடைக் காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்

வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட

பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு (காதல் வைபோகமே)

போகட்டும்,  இந்த விலாவரிப் பதிவே.... 
இந்த வீடியோவுக்குதான். 

குளிரிலம் கல்லூரி குமாரிகள் இப் பாடலுக்கு  கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.  எந்தக் கல்லூரி  என்று தெரியவில்லை?  வண்ண வண்ண புடவையில் கூலர்ஸ் சகிதமாக  அவர்கள் ஆடும்  ஆட்டம் இருக்கிறதே... ஆஸம் !....ஆஸம் !! சேர்ந்திசைப் போல... எல்லோரும் ஒன்றிணைந்து  ஆடியிருக்கிறார்கள்.  ஆட்டத்தின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டுவிடுகிறது. 


என்ன... இவர்கள்  ஆடும் ஆட்டத்தின் முழு வீடியோவும் கிடைத்தால் கண் குளிர்ச்சியாக... ஜென்ம சாபல்யம் அடையலாம்.  ஹூம்... ? !  

படம்: சுவரில்லாத சித்திரங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

#சுவரில்லாதசித்திரங்கள்
#கங்கைஅமரன்

சனி, டிசம்பர் 26, 2020

தொ.பரமசிவன் ஐயா அவர்களுக்கு பிரியா விடை !தொ.பரமசிவன், நம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத் தகுந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு,சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டிய அவசியத்தை முன் வைத்தவர். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எளிய மொழியில் புரியவைத்தவர்.

அவரது '#அறியப்படாததமிழகம்' மற்றும் #இந்துதேசியம்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் தற்போதைய கள நிலவரத்திற்கு ஏற்ற முக்கியமான நூலாக பார்க்கிறேன்.
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணத்தை, அறியப்படாத தமிழகம் மூலம் சுட்டிக் காட்டினார் என்றால்.... இந்து மதம் வாயிலாக தமிழர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்க அத்துமீறல்களுக்கு இந்து தேசியம் என்ற நூலின் வாயிலாக எதிர்க்குரல் எழுப்பினார்.
அவரது நான் இந்துவல்ல . நீங்கள்...? என்ற புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும். (இந்து தேசியம் என்ற புத்தகத்தில் இக் கட்டுரை இருக்கிறது)

இந்து மாயையில் பிதற்றிக் கொண்டு இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவடைவார்கள்.
அய்யா தொ.பரமசிவன் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளும் தமிழர்களுக்கானது. அவர்களது சமூக விடுதலைக்கானது. அவரது திடீர் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தலையாயக்கடமை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


சனி, டிசம்பர் 12, 2020

பாரதி - கவிஞர்களின் நுழைவு வாயில்

                

பாரதியின் பிறந்த நாள் பதிவு !  (11.12.2020)
என் பதின் பருவ தொடக்கத்தில் பாரதியை வாசிக்கத் தொடங்கினேன். முடிவுறாத கிளர்ச்சியின் வெளிப்பாடாய், திரண்டிறிந்த கவிதைகள் எனக்குள் பால் கட்டிக் கொண்டு நின்றது.காலகிராமத்தில் விடலை பருவத்தில் உதித்தெழும் காதலில் சிக்குண்டவனுக்கு... பாரதியே பிடிமானம். துளிர்க்கும் காதலுக்கு கவிதையே ஆதாரம், கவிதைக்கு பாரதி ஆதாரம் !

யாருக்கு யார் ஆதாரம் ? 
தொன்னையா ...நெய்யா ?
பாரதியா....காதலா...?
அந்த ஏகாந்த பெரு வெளியில் பாரதி...

"நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!... (நின்)
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் கண்ணம்மா!...
பொன்னயே நிகர்த்த மேனி,
நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே, நித்ய கன்னியே கண்ணம்மா!.....
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா " 

என்று நீண்ட நெடிய அரவம் போன்று பாரதி என்னுள் நுழைந்தான்.

அதற்கும் அவளே காரணம். பேச்சுப் போட்டியில் நானும், பாட்டுப் போட்டியில் அவளும் பரிசில் வேண்டி நின்றோம். காற்றில் களைந்த ஒற்றை முடி அழகில் மனம் கண்ணமா... கண்ணமா என்று அரற்றியது.

தகிக்கும் ஓர் கோடையில் அவளிடத்தில் என் காதலை சொல்ல...எதிர் காற்றில் சைக்கிள் மிதிக்க...மிதிக்க...பாதையும் பாரதியின் கவிதை போன்று நீண்டுக் கிடந்தது. ஏதோ ஒரு வேகத்தில் சைக்கிளை கிளப்பியவனுக்கு....
நிதர்சனமும்... வயதும் புரிபட.... பாதை முடிவுற்றது.
எழுதியிருந்த காதல் வரிகள் கை நழுவ... 
நீரில்லா காவிரியில் கடிதம் காற்றில் மிதந்து கரை ஒதுங்கியது.

திருக்கொடிக்கா காவிரி பாலம் தாண்டி....திருவாவடுதுறை ஆதீனம் ஆர்ச்சு தொட்டு வீடு வரும் வரையில் பாரதி என் சைக்கிள் கேரியரில் அமர்ந்து....
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? 
என்று விசும்பிக் கொண்டே வந்தார்.

- மகேஷ் நந்தா.

இன்று (11.12.2020) பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு முக நூலில் நான் எழுதிய பதிவு. 

#பாரதி

#பாரதியார் 
See less

திங்கள், டிசம்பர் 07, 2020

திருவாலங்காடு வெடி

கம்பி கட்டு
கம்பி கட்டு வெடி


எங்கள் பகுதியில் 'கம்பி கட்டு' என்றொரு வெடி இருக்கிறது. கோயில் திருவிழா, திருமணம், சவ ஊர்வலம், அரசியல் நிகழ்வுகள் என்று இந்த வெடியைப் பயன்படுத்துவார்கள். பார்க்க நாட்டு வெடிபோல் இருக்கும். (இல்லை, அதே தானா...தெரியவில்லை ?) அதன் வெடிசத்தமே அதன் பிரமாண்டத்தை காட்டிவிடும். அப்படி ஒரு சத்தம்!!மாயவரம் கும்பகோணம் பக்கத்தில் இந்த கம்பிக்கட்டு வெடி ஏக பிரசித்தம்! இந்த கம்பி கட்டு வெடியில், சின்ன சைஸ் வெடியும் இருக்கிறது.
தீபாவளி நேரத்தில் யார் வீட்டில் அதிகம் வெடி வெடித்திருக்கிறது என்ற போட்டி உண்டு. அதனாலேயே பால்யத்தில் வீட்டு வாசலில் வெடி வெடித்த பேப்பர் கிடக்க வேண்டும் என்பதால் அந்த சின்ன சைஸ் கம்பி கட்டு வெடியை வாங்கி நிறைய பேப்பர் சுத்தி வெடிப்போம். (பார்க்க படம்) ஒரு வெடி வெடித்தால் போதும், வீட்டு வாசலில் நூறு வெடி வெடித்தது போல் ஆகிவிடும்.
அதே நேரத்தில் இந்த கம்பி கட்டு வெடி ஆபத்தானதும் கூட.... நிறைய பேரை பதம் பார்த்திருக்கிறது. அதில் நானும் ஒருவன். தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.
😃
பத்தாம் வகுப்பு படிக்கும் போது....
இப்படி ஒரு நசநசப்பான தீபாவளி மழை நாளில்... வாங்கி வைத்திருந்த வெடியெல்லாம் நனைந்திருந்தது. அதில் கம்பி கட்டு வெடியும் உண்டு. வீட்டில் அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த பரீட்சை பேப்பரை எல்லாம் கம்பிகட்டு வெடியில் சுத்தி ஒரு பெரிய சைஸ் வெடியை தயார் செய்திருந்தேன்.
நனைந்திருந்த வெடிகளை உலர வைக்க.... வெந்நீர் அடுப்பு ஓரத்தில் வைக்கப் போக....அந்த நேரத்தில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. ஒரு நொடிதான் 'டமார்' என்ற வெடி சத்தம். எங்கே என்று சுதாரிப்பதற்குள் மொத்த பானையும் சிதறி என் இரண்டு கால்களிலும் பொத்தல் போட்டு விட்டது. உடம்பு முழுவதும் சாம்பல். பானை ஓடுகள் துப்பாக்கி குண்டுகளாய் எனது இரண்டு கால்களிலும் துளைத்து தஞ்சம் அடைந்து விட்டது. (அதனாலேயே நான் கரிகாலனாக வடுக்களோடு இன்றும் இருக்கிறேன்) ஆங்காங்கே பொத்தல் போட்டு ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. நல்ல வேளை.... அது விடியற்காலை என்பதால், வேறு யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. "என்னாச்சு" என்று பதறி ஓடி வந்த அம்மாவை வெளியே தள்ளிவிட்டு, நானும் வெளியே ஓடி வந்துவிட்டேன்.
பிறகென்ன....ஈக்களிடமிருந்து தப்பிக்க இரண்டு மாதம் கொசு வளைக்குள்தான் ஜாகை. டாக்டர் தினமும் வீட்டிற்கே வந்து, டிஞ்சர் வைத்த dressing forceps ஆல் காயத்திற்குள் சாவியை விட்டு திருகுவதுபோல் திரும்புவார். அதிலேயே பாதி உசுர் போய்விடும். இருந்தாலும் வீரனுக்கு இதெல்லாம் சகஜம் தானே! வலி வலியது.
******
அதே போல் எங்கள் பகுதியில் 'ஓலை வெடி' என்று ஒரு வெடி இருக்கிறது. இது குழந்தை வெடி ! பனை ஓலையில் வெடி மருந்து திரி வைத்து செய்வார்கள். சிறு குழந்தைகள் கூட இந்த வெடியை கையில் வைத்து வெடிக்கலாம். அந்தளவிற்கு மிக இலகுவான வெடி. கம்பி கட்டு, ஓலை வெடி போன்றவை வேறு பகுதிகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை?

திங்கள், மே 25, 2020

வேலைக்கு போவதற்காக வாழ்கிறோமா...?

(கீற்று இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 2020 மாதத்தில் வந்த எனது கட்டுரையின் திருத்திய மீள் பதிவு)
'வாழ்வதே வேலைக்கு போவதற்காகத்தான்' என்ற பெரும்பாலான இந்தியர்களின் பொதுப் புத்திக்கு இயற்கை கட்டாய ஓய்வளித்திருக்கிறது. இப்படி 2 மாதங்கள் மொத்தமாய் வீட்டில் முடங்குவது என்பதெல்லாம் அவர்கள் நினைத்திடாத ஒன்று!

இரண்டு நாள் லீவு கேட்க... நாம் படும் பாடு இருக்கிறதே.. அப்பப்பா சொல்லி மாளாது. தலை சொறிய வேண்டும், குரல் கம்ம வேண்டும், மேனேஜரின் மனநிலை பார்த்து விடுப்பு சொல்ல வேண்டும். அப்படியே எடுத்தாலும் சில சமயம் லாஸ் ஆப் பே வந்து விடும். வாங்கும் சம்பளத்தில் துண்டு விழும். விடுப்பு எடுப்பதிலும் சொல்வதிலும் இப்படி பல இடர்பாடுகள். இந்த கரோனா வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

சென்னை ரிப்பன் பில்டிங் 
வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே ஒரு மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்றெல்லாம் இந்தியர்கள் எவரும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வீடு விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு. வீட்டிற்கு வந்த பிறகும் வேலை பற்றிய சிந்தனை, அதற்கான மெனக்கெடல் என்று மிக மிகச் சாதாரணமான வாழ்க்கை இந்தியர்களுடையது.
தனது வாழ்வில் பெரும்பாலான நேரத்தையும் ஒப்பற்ற இளமையையும் வேலைக்காக சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் நம்மில் பலர் உண்டு. கூலி குறைவோ, நிறைவோ... ஆனால் திருப்தியான மனநிலையில் தொழில் மற்றும் நிறுவனம் சார்ந்த ஓர் இரத்த பிணைப்பு நம்மிடம் உண்டு. வாழ்வதற்காக வேலைக்குச் சென்று பொருள் ஈட்டிய மனிதன், காலப்போக்கில் வேலைக்குச் செல்வதற்காக வாழத் தொடங்கினான். பணி மற்றும் பணியிடம் சார்ந்தே அவனது வசிப்பிடமும், வாழ்வியலும் அமைந்தது.
வரலாறுகளின் தொடக்கத்தில் ஆற்றுப் படுகைகளில் தனது வசிப்பிடங்களை அமைத்துக் கொண்ட மனிதன், தொழில் புரட்சிக்குப் பிந்தைய நாட்களில் நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினான். தனது வசிப்பிடங்களை அங்கேயே அமைத்துக் கொண்டான்.
கிடைத்த நேரத்தில் வேட்டையாடி, கிடைத்த நேரத்தில் ஓய்வு எடுத்து, கிடைத்ததை உண்டு, ஓர் ஏகந்தமான சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த மனித இனத்திற்கு நாகரீக உலகம் முற்றுப்புள்ளி வைத்தது. பணி சார்ந்தே, அவன் எதையும் சிந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டான். விளைவு கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கமென்று திசைக்கொன்றாய் பிரிந்து வாழ வேண்டிய சூழல் இங்கு சர்வ சாதாரணம். கணவன் அயல் நாட்டில் வருடக் கணக்கில் பணி புரிய... மனைவி பிள்ளைகளோடு தனித்து வாழ வேண்டிய சூழலும் இங்கு சர்வ சாதாரணம்தான்.
விடியற்காலையில் 5 மணி ரயிலைப் பிடிக்க, 4 மணிக்கு எழுந்து அரக்க பரக்க குளித்து சோத்தைக் கட்டிக் கொண்டு, திருத்தணி உள் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து பாசஞ்சர் ரயிலைப் பிடித்து, சென்னை வந்து சேர சரியாக ஒன்பதரையாகும். வேலை முடிந்து அதே ஓட்டமும் நடையுமாக சென்டரல் ஸ்டேஷன் வந்து ரிட்டன் பாசஞ்சர் ரயிலைப் பிடித்து இடம் கிடைத்து, உட்கார்ந்து வீடு வந்து சேர இரவு 9 அல்லது பத்து பத்தரையாகும். இனி இரவு உணவு முடிந்து மனைவி பிள்ளைகளோடு அளவளாவி படுக்கையில் விழுந்து அரைகுறையாக தூங்கி, இதோ மீண்டும் மூணு மணிக்கு எழுந்து ஓட வேண்டும். 'ஏன் இந்தக் கஷ்டம் சென்னைக்கே வந்து விடலாமே ' என்று கேட்டால்... 'மனைவி உள்ளூரிலேயே ஆசிரியையாகப் பணி புரிகிறார். அதனால் வீடு மாற முடியாது' என்று ஒரு பதில் வரும்.
வெவ்வேறு ஊர் என்றில்லை, பணி நிமித்தமாக தினந்தோறும் நாடுவிட்டு நாடு, எல்லை தாண்டும் மனிதர்களும் இருக்கின்றனர்.

தினமும் நாடுவிட்டு நாடு எல்லை தாண்டும் மனிதர்கள்
சிங்கப்பூர் அருகில் இருக்கும் மலேஷிய நகரமான ஜோகர்பரிலிருந்து (ஜேபி) பல்லாயிரக்கணக்கான மலேஷியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) தினமும் உட்லன்ஸ் வழியாக சிங்கப்பூர் வந்து பணி புரிகின்றனர். இதற்காக பல மணி நேரம் பயணம் செய்து, தினமும் இரு நாட்டு எல்லை சோதனைச் சாவடியில் தங்களது பாஸ்போர்ட் மற்று கடவுச் சீட்டு ஆவணங்களைக் காண்பித்து குடியேற்ற ஒப்புகை பெற்று பணிக்குச் செல்கின்றனர். பின்னர் அதே நடைமுறைகளோடு பணி முடிந்து இரவு மலேஷியா திரும்புகின்றனர். பின்னர் மீண்டும் விடியற்காலையில் ஆயத்தமாகின்றனர். இப்படி திருத்தணி - சென்னை, ஜோகர்பர் - சிங்கப்பூருக்குப் பதிலாக நீங்கள் வெவ்வேறு ஊர்களைப் போட்டுக் கொள்ளலாம்.
உலகில் எல்லாமே வேலை அல்லது பணி சார்ந்தே சிந்திக்கப்படுகிறது. அதை மையமாக வைத்தே மனிதன் தனது எல்லைகளை வகுத்துக் கொண்டு நகர்கிறான். இதையே நீங்கள் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அவர்கள் வேலைக்கும், வாழ்தலுக்குமான எல்லைகளை மிக அழகாக வகுத்து இருப்பார்கள். மிக எளிதாக இரண்டு மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு உலகைச் சுற்றி வருவார்கள். இந்தியப் பணி சூழலில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
தொடக்கத்தில் 12 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை, 1942ம் ஆண்டு நடந்த 7வது தொழிலாளர்கள் மாநாட்டில் 8 மணி நேரமாகக் குறைத்து இந்தியத் தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்தார் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். இல்லையென்றால் கூடுதலாக மூன்று மணி நேரம், நாக்கு தொங்க ஓடிக் கொண்டு இருக்க வேண்டும்.
இப்படி வேலையே பிரதானம், வேலையே சாஸ்வதம் என்றிருந்த நிலையில் இயற்கையே... 'நீ வீடடங்கு' என்று ஊரடங்கு உத்திரவு போட்டிருக்கிறது. உலகை அச்சுறுத்தும் கரோனா ஆட் கொல்லி வைரஸ் மின்னல் வேகத்தில் மனிதர்களை பலி கொண்டு வருகிறது. சங்கிலித் தொடராய் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்த, அந்த தொடர் சங்கிலியை அறுத்தெறிய வீடடங்குவதைத் தவிர வேறு மருந்தில்லை என்றாகி விட்டது.
அரசு அறிவித்த மொத்தம் 21 நாளில் இரண்டு வாரங்கள் தான் கழிந்திருக்கிறது. இன்னும் 1 வாரம் வீட்டில் இருக்க வேண்டும். இந்நிலையில் ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுதே கண்ணைக் கட்டுதே என்று வீட்டில் நெளிய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தியா என்றில்லை உலக நாடுகளில் உள்ள மொத்த மக்களுமே வீடடங்கிக் கிடக்கின்றனர். வீட்டை விட்டு நேரம் காலமின்று அலைந்து கொண்டு இருந்த மனிதன், வீட்டில் அமர்ந்து மனைவி மக்கள் முகம் பார்த்துக் கிடக்கின்றான்.
மனிதனின் இடைவிடாத ஓட்டத்தின் மீது காலம் கரோனாவை சொடுக்கி இருக்கிறது. வேலை, வேலை என்று ஓடிக் கொண்டு இருந்த மனித இனத்திற்கு 'கட்டாயமாக வீட்டில் இரு' என்று பணிக்கப்படுவதெல்லாம் கனவிலும் கிடைக்காத ஒன்று! எக்காலத்திலும் நடவாத ஒன்று ! அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்றைதான் நாம் வீடடங்கி எழுதிக் கொண்டிருகின்றோம். 'வேலையை விட நலமுடன் வாழ்தல் இனிது' என்பதை படித்துக் கொண்டு இருக்கின்றோம்.

கரோனா எதிர்ப்பு போரில் குஜராத்தை மிஞ்சும் தமிழகம் !

அ வர் குஜராத் பெண்மணி. பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அதனால் தமிழ் அட்சரம் பிசகாமல் வரும். ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக...

பிரபலமான இடுகைகள்