புதன், ஏப்ரல் 23, 2014

தமிழகத்திலிருந்து யாரை (எல்லாம்) தேர்ந்தெடுப்பது.....?




                             ழக்கமான தேர்தலைவிட இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரையில் இரு அணிகள் மோதும் தேர்தலைதான் இது நாள்வரையில் பார்த்திருக்கிறோம். தற்போதுதான் முதல் முறையாக ஐந்து முனை தேர்தலை தமிழகம் சந்திக்கிறது.  அதிமுக, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் என்று ஏகத்தும் பிரிந்து நின்று மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐந்து முனை போட்டி என்பதால் நிறைய  கட்சிகள் ஆள் கிடைக்காமல் கடைசி வரை தனது வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுத்தடித்துக் கொண்டு இருந்தது. சில  தொகுதிகளுக்கு கடைசி நேரத்தில்தான்  ஆள் கிடைத்தார்கள்.   தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட பாஜக  கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் பெரும் இழுபரி நீடித்தது. காங்கிரஸில் போட்டி போட ஆள் இல்லாமல் எல்லோரும் தெரித்து  ஓடினார்கள்.  காங்கிரஸ் வேட்பாளர்கள்  தேர்வில் கடைசி நேரத்தில் சிதம்பரத்தின் கை ஓங்க, வாசன் ஆதரவாளர்களுக்கு டில்லியிலிருந்து எண்ட் கார்ட் போட்டார்கள். இது சிதம்பரம் தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் பாமகவிற்கு தாவும் அளவிற்கு கொண்டு சென்றது.

இதில் திமுக நிலையே வேறு, வெளி எதிரிகளை சமாளிப்பதை விட உள்ளுக்குள் அடித்துக் கொள்ளாமல் இவர்களால் வெளியே கிளம்ப முடியவில்லை. அந்தளவிற்கு வாரிசு போர் உச்சத்தில் இருக்கிறது. அழகிரி குறுக்குசால் ஓட்டி திமுக வேட்பாளர்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் கிட்டதட்ட 875 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். இரண்டு கட்சி கூட்டணி என்றால் வேட்பாளர்கள் பற்றிய விபரம் விரல் நுனியில் இருந்திருக்கும். இது ஐந்து கட்சி கூட்டணி என்பதால் ஒரு விபரமும் தெரியாமல் எல்லோரும் குழம்பிக் கிடக்கிறார்கள். இதில் போதாதக்கொறைக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேறு.....?!. வேட்பாளரின் சின்னத்தையும் முகத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக்கூட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை  .

இப்படி 'குழப்பம்' அரசியல் கட்சிகளில் குடும்பம் நடத்த.....  மக்களுக்கு யார் நிற்கிறார்கள்...? அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்.....? எந்த ஊர்.....?  போன்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் மக்களாகிய நாம்  குழம்பிக் கிடக்கிறோம்.

நிற்க.

வேட்பாளர்கள் குழம்பலாம், ஆனால் வாக்காளர்களாகிய நாம் குழம்பக் கூடாது. நமது தெளிவான நிலையான முடிவு மத்தியில் ஒரு திடமான ஆட்சியை அமைக்க உதவும்.  தமிழகத்தை பொருத்தவரை உடனடி தீர்வுகான வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளன.  
தமிக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல், மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு, அண்டை மாநிலங்களோடு காவிரி, பெரியாறு, பாலாறு பிரச்சனை, நடப்பு நிதி ஆண்டில் தமிழக வேளான்துறையில் 12 சதவீத சரிவு என்று உடனடி தீர்வு காணவேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளன.   அதற்கு குரல் கொடுக்க கூடிய  வேட்பாளர்களைதான் நாம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.   யாரை அனுப்பினால் வேலை நடைபெறுமோ அவர்களை அனுப்பவேண்டும். இதில் நமது சாதிக்காரன், நமது கட்சிக்காரன், நமது மதத்தை சார்ந்தவன் போன்ற சுய மன நிலையில் இருந்து விலகி பொது மன நிலையில் வேட்பாளர்களை   தெரிவு செய்யவேண்டும்.


பாராளுமன்றத்தில் தமிழகம் சார்பாக குரல் கொடுக்கக் கூடிய  சிலரை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும். யாரை எல்லாம் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  இது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்தோடு உங்களது கருத்து ஒத்து போக வேண்டும் என்பது அவசியமில்லை. மாறுபடலாம்....வேறுபடலாம்....தொடர்ந்து படியுங்கள்.

அந்த லிஸ்ட்.......?

வை.கோ, திருமாவளவன், டி.ஆர் பாலு, அன்புமணி ராமதாஸ், வசந்த குமார், ஆ.ராசா, ஏ.கே.மூர்த்தி,, இல. கணேசன், மணிசங்கர் அய்யர், தம்பிதுரை, ரவிக்குமார், அ.வேலு, ராமசுப்பு , அழகிரி, பழனிச்சாமி,கணேச மூர்த்தி, சி.பி இராதாகிருஷ்ணன்,ஹச். ராஜா, மோகன் குமாரமங்கலம், குமார், புதுச்சேரி: ராதா கிருஷ்ணன் (என் ஆர்)

இந்த லிஸ்ட் எப்படி வந்தது......?

அதிமுக கட்சியில் வேணுகோபால், தம்பிதுரை, குமார் போன்றவர்களுக்குதான் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற 36 பேரும் புது முகங்கள். அதனால் அவர்களது செயல்பாடுகளை நம்மால் கணிக்க முடியவில்லை.  வளைந்து குழைந்தை ஜெவின் ஹெலிகாப்டருக்கு  வணக்கம் போட்டு தமிழக மானத்தை இந்தியா முழுவதூம் பரப்பியவர்கள் அதிமுக வேட்பாளர்கள். இவர்களால் எந்த அளவிற்கு தமிழக நலன் சார்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை.

திமுகவை பொருத்தவரை நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படக் கூடிய நிறைய வேட்பாளர்களை நாம் காண முடியும். இந்த லிஸ்டில்  ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இன்று நாம் பயன்படுத்தும் செல்போனில், நமக்கு தொலை தொடர்பு நிறுவனங்களால் கிடைக்கும் பல நவீன செயல்பாடுகளுக்கு ஆ.ராசாவே காரணம் என்று கூறலாம்.  தொலை தொடர்பு  துறையின் முன்னேற்றத்தை சராசரி மனிதன்வரை கொண்டுவந்ததற்கு ராசாவும் ஒரு காரணம்.

டி.ஆர் பாலு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது இந்தியா முழுவதும் சுற்றிச் சுழன்று பணிகளை கவனித்தார்.  அவரது தீவிரமான செயல்பாட்டால் இந்தியா முழுவதும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் பாடி மேம்பாலம், கிண்டி ரவுண்டானா போன்றவை வெற்றிகரமாக செயல்பட  அவரது முழுமூச்சான ஈடுபாடே காரணம் எனலாம்.

தமிழனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வை.கோ என்ற தலைவன் தேவை அதற்காக அவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக நலன் சார்ந்தே இவரது குரல் ஒலிக்கும் எனபதால், இவரது சேவை நமக்கு தேவை. விருப்பு வெறுப்பு அற்று பொது நலன் சார்ந்து குரல் கொடுக்கக் கூடிய ஒரு தலைவர்  வைகோ.

பாமக மீதான சாதிய அணுகுமுறையில் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், மத்திய அமைச்சராக அ. வேலு, ஏ.கே மூர்த்தி, அன்புமணி ராமதாஸ் போன்றோரின் செயல்பாடுகள் நிச்சயம் பாராட்டக் கூடிய ஒன்று. போலியோ ஒழிப்பு, 108 ஆம்புலன்ஸ் என்று மருத்துவத் துறையில் அன்புமனி மிகச் சிறப்பான முறையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார்.  புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதில் உள்ள தீமையை இந்தியா முழுவதும் பரப்பியதில் இருக்கிறது இவரது வெற்றி!.

தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைத் தரும் தலைவனாக  திருமாவளவன் இருக்கிறார். தமிழருக்காக தில்லியில் போராடக் கூடிய ஒருவராகவும் திருமா அடையாளம் காணப்படுகிறார். இவரது வெற்றி விளிம்பு நிலை மனிதர்களின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தீர்க்கமான சிந்தனை கொண்ட மனிதர்.

 சமூகம் சார்ந்த தனது புரிதலை மிக ஆழமாக தனது கட்டுரையில் வெளிப்படுத்தக் கூடியவர் விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார். 'கடல் கிணறு' என்ற சிறுகதை தொகுப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் திருநின்றவூரில் வெளியீட்டர். ஒரு எழுத்தாளரை  தேர்ந்தெடுப்பது நல்லதுதானே.....?!.


வருடத்திற்கு 500 கோடி வர்த்தகம் செய்கிறார் வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார். மற்றவர்கள் ஊரார் காசில் தேங்காய் உடைத்தால் இவர் தனது காசை தொகுதி மக்களுக்காக செலவு  செய்யக்கூடியவர். 230 கோடி சொத்து இருக்கிறது என்று உண்மையை பேசி பல போலி அரசியல்வாதிகளை அலறடித்திருக்கிறார். மிக எளிதாக அனுகக் கூடிய மிக நல்ல மனிதர் வசந்தகுமார் அண்ணாச்சி. இவரை தேர்ந்தெடுப்பது இவரது தொகுதி மக்களுக்கு நல்லது.

மயிலாடுதுறையை துபாயாக மாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதியில் காலடி எடுத்து வைத்தவர் மணிசங்கர் அய்யர். இத் தொகுதியில் மூன்று முறை வென்று மயிலாடுதுறையை இந்தியா முழுவதும் அறியச் செய்தவர். மிகச் சிறப்பான நிர்வாகி.   அரசியல் பாரம்பரியம் கொண்ட  அழகிரி மற்றும்  மோகன் குமாரமங்கலத்தை நீங்கள் செலக்ட் செய்யலாம்.

பாஜக என்ற தேரை இந்தியா முழுவதும் வடம் பிடித்து இழுத்துச் சென்று வருகிறார் நரேந்திர மோடி. மோடி அலை இந்தியா முழுவதும் வீசினாலும் பாஜகவினர் அதிகம் நம்பி இருப்பது தென் இந்தியாவைதான். இங்குதான் பாஜக தலைமையில் சாதிய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. இதில் இல.கணேசன், சிபி.ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா என்று மிகச் சிலரை செயலாற்றக் கூடிய தலைவர்களாக நம்மால் இனம காண முடிகிறது.  பாஜக ஆட்சி அமையும்பட்சத்தில் நமக்கு சில அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்பது உறுதி!.

பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் புதுச்சேரியில் போட்டியிடுகிறது. அதே கூட்டணியில் இருக்கும் பாமகவும் புதுச்சேரியில் போட்டி இடுகிறது.  தனது மச்சான் மகனுக்காக இங்கு கூட்டணி தர்மத்தை காற்றில் பறக்கவிட்டுள்ளார் மருத்துவர் ராமதாஸ். என்.ஆர் காங்கிரஸ் என்பது புதுச்சேரியை மட்டுமே மையப்படுத்தி செயலாற்றக் கூடிய கட்சி. இக் கட்சி புதுச்சேரி  நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும். அந்தக் கட்சி தமிழகத்தில் நிற்க முடியாது. அப்படி இருக்க அந்த தொகுதியை என்.ஆர் காங்கிரஸுக்கு விட்டு கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து அங்கு பாமக நிற்பது கூட்டணி கொள்கைக்கு வேட்டுவைப்பது போன்றது.  கட்சி தொடங்கி 6 மாதத்தில் ஆட்சியை பிடித்த என்.ஆர் காங்கிரஸே, இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். ரங்கசாமி சுயமாக செயல்பட ராதகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.


தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. பிரச்சாரம் ஓய்ந்து வேட்பாளர்கள் எல்லோரும் நகம் கடிக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது. இன் நிலையில் இத்தகைய தன்னார்வ அலசல்கள் வாக்காளர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. நாற்பது தொகுதிக்கும் கருத்துச் சொல்ல நம்மால் முடியவில்லை என்பதால் மீதம் உள்ளதை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.  அலசி ஆராய்ந்து காயப் போடுங்கள். அது சிலருக்கு பேர் உதவியாக இருக்கும்.  பலருக்கு பேர் இடியாக இருக்கும்.

-தோழன் மபா.

வியாழன், ஏப்ரல் 17, 2014

'டிக்கியை திறந்து காட்டுங்க!'




                     கொள்ளிடம் ஆறு தாண்டி, கடலூர் மாவட்ட எல்லை தொட்டதும்  ஒரு தடவை திறந்து காட்டுங்க என்றார்கள். மஞ்சகுப்பம் தாண்டி புதுச்சேரி பார்டரில் முல்லோடை கென்னடி பார் அருகே வந்த போது மறுபடியும்  திறந்து காட்டுங்க என்றார்கள்.

பாண்டிச்சேரி டவுன்  நடு செண்டரில் வைத்து மறுபடியும் திறந்து காட்டுங்க என்றார்கள்.  பாண்டிச்சேரி பார்டரை தாண்டி திண்டிவானம் பைபாஸில் விழுப்புரம் எல்லைத் தொட்டதும்  மறுபடியும் வண்டியை நிறுத்தி,  "டிக்கியை திறந்து காட்டுங்க" என்றார்கள்.

தேர்தல் ஆணையத்தின் 'எந்திர துப்பாக்கி ஏந்திய வீரர்கள்'  காரை வழி மறித்து டிக்கியை திறந்து காட்டுங்க என்று சொல்வதும், நானும் பொறுமையாக வண்டியை நிறுத்தி,  டாஷ் போர்டு திறந்து, டிக்கியை திறந்து  ஏதோ வீட்டை வாடகைக்கு பார்க்க வரும் டெனண்டுக்கு காட்டுவது போன்று அவர்களுக்கு திறந்து காட்டிக் கொண்டே  வந்தேன்.  'நான் அந்த அளவிற்கு ஒர்த்து இல்லை ஏட்டைய்யா' என்று சொன்னாலும் கேட்பதாக  இல்லை. வைதீஸ்வரன் கோயில் ஏரியாவில் மட்டும் பிரஸ் என்றதும் விட்டுவிட்டார்கள்.

மாயவரத்திலிருந்து சென்னை வருவதற்குள் கிட்டதட்ட 10 இடத்திலாவது நம்மை சோதனை செய்திருப்பார்கள்.  இவர்கள் சோதனை சாமானிய மக்கள் மீதே இருந்ததே தவிர தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அது பாதித்ததாக தெரியவில்லை.  தேர்தலுக்காக எந்த ஒரு பணப் பரிவர்த்தனையும் இப்படி பொத்தாம் பொதுவாக எடுத்துச் செல்வதில்லை என்பது ஊர் அறிந்த ஒன்று!.

இது நாள் வரையில் ஒரு வேட்பாளரிடமிருந்து இந்தளவிற்கு பணம் கைபற்றப்பட்டது என்ற செய்தியை நாம் கேட்கவில்லை பார்க்கவும் இல்லை. வாக்காளர்களுக்கு தலைவர்களின் பெயரை போட்டு புடவை விநியோகிப்பதும், பணத்தை பல்வேறு வழிகளில் பட்டுவாடா செய்வதும், பொது கூட்டதிற்கு வர... ஒரு நாள் படி 500 ரூபாய், சாப்பிட பிரியாணியும், குடிக்க குவார்ட்டர் கொடுப்பதும், கூட்டத்திற்கு ஆள் பிடிக்க தனியார் பேருந்துகளை திருப்பிவிடுவதும் நடந்துக் கொண்டுதானே இருக்கிறது.  இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா....?.

அப்பாவி ஜனங்கள் கொண்டு செல்லும் 50 ஆயிரம் 1 லட்சத்தை கணக்கு கேட்டு பிடிங்கி வைத்துக் கொண்டு அவர்களை அழவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஊர் பஞ்சாயத்துகளை கூட்டி எந்த "நீ கட்சியில் இருந்தாலும் சரி, சாதிக்கட்சிக்குதான் ஓட்டு போடவேண்டும்" என்று மிரட்டும் சாதிய கட்சிகளை தேர்தல் ஆணையத்துக்கு தெரியதா....?.  இல்லை எந்த ஒரு அரசியல் கட்சியும் வேட்பாளர்களுக்கு பணம் தரவில்லையா....?.   எதற்கு இப்படி சமானிய  பொது மக்களை வாட்டி வதைக்க வேண்டும்.  இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளை வேண்டுமானால் மகிழ்விக்கலாம். நம்மை போன்ற சாமானிய மக்களை அல்ல.....?!

கொசுறு:

மதுரவாயில் பைபாஸிலிருந்து இறங்கி, அம்பத்தூர் OT  தாண்டி விவேகானந்தா  பள்ளிக்கூடம் வரும் போது,  திடீரென்று குறுக்கே பாய்ந்த இன்ஸ்பெக்டர் ...பின்னடியே ஓடி வந்து வண்டியை நிறுத்தினார்.  "எதற்காக நிறுத்தாம போறீங்க, சீக்கிரம் வண்டிய விட்டு இறங்கி டிக்கியை திறந்து காட்டுங்க" என்றார் அதிகாரத்துடன்.

நானும் திறந்து காட்டினேன்.

() () ()

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...