ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

காத்திருக்கவும்.....


இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெறுவதால் பதிவுகள் வரும் திங்கள் கிழமையன்று (5 /09 /2011 ) பதிவேற்றப்படும்.
எனது மற்றப் பதிவுகளை பார்க்கவும். 
நன்றி!!!

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

பூசான் திரைப்பட விழாவிற்கு 'தெய்வத் திருமகள்' தேர்வு!
வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'தெய்வத் திருமகள்' படம் பூசான் திரைபட விழாவிற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென் கொரியாவில் செப்டம்பர் 13லிருந்து 21ம் தேதி வரை 'பூசான்' BIFF திரைப்பட விழா நடைபெறுகிறது. 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூசான் திரைப்பட விழா ஆசிய நாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு,  உலகளாவிய கவனத்தை ஏற்படுத்தித்தர  இந்த திரைபட விழா நடத்தப்படுகிறது.  இதில் தமிழகத்திலிருந்து விஜய் இயக்கியுள்ள 'தெய்வத் திருமகள்'  படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சீயான் விக்ரம் நடித்துள்ள இப்படம்  'I AM SAM' என்ற ஆங்கில படத்தை தழுவிஎடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தேர்வு செய்த இக் குழுவின் தலைவர் கிம் கூறியதாவது.  " I  AM SAM படத்தோட இன்ஸிபிரேஷன்னு சொன்னாங்க. கொஞ்சம் யோசனையோடுதான் படம் பார்த்தேன். ஆனா, இந்தப்படம் மொத்தமே வித்தியாசமா இருக்கு  அந்தப் படத்தோட செண்டிமெண்ட் லெவலை  'தெய்வத் திருமகள்' அடுத்த லெவலுக்கு கொண்டு போயிருச்சு.  நான் ஆசிய சினிமாக்களின் பிரிவில் இந்தப் படத்தை பிளேஸ் பண்ணாலாமுனு ஐடியா வச்சிருந்தேன். ஆனா, இப்போ ஒப்பன் கேட்டகிரியில் உலக சினிமாக்களுக்கான  வரிசையில் பிளேஸ் பண்ணி இருக்கிறேன் என்றார்.

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

முன்பு போலவே...


மழை பெய்யும்-இந்த
இரவில்
வானம் இருண்டு
குளிருடன் கிடக்கிறது.

மின்னல் வெட்டும்
அகால வேளையில்
உணர்வுகள்
ஒற்றையடிப் பாதையில்
வெளிச்சமிட்டுக் கிடக்கின்றன...

ஊதல் காற்றின்
தாலாட்டில் -இருவர்
உடலும் சிலிர்த்து
உலகின்
மறு கூட்டலுக்கு
தயாரானது,

அசைந்தெரியும்
வெளிச்சத்தில்
முகங்களும் கைகளும்
உயிர்களுக்குள்
துழாவின...

அடித்து பெய்த
மழையில்
படுக்கை;
உணர்வுகளுக்குள்
அமிழ்ந்தே கிடந்தது.

எதன் பொருட்டும்
இருந்திராத
முன்மாதிரியில்


மீண்டும் - ஓர்
இரவு
செப்பனிடப்படாமல்


முன்பு போலவே... 

கலைந்தே கிடந்தது. 

-தோழன் மபா.

மீள் பதிவு

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

தமிழ் மணம் அபிமானிகளுக்கு..... நன்றி!
தமிழ் மணம் இந்த வார நட்சத்திர அறிமுகமாக அறிவித்து ஒரு வாரமாகிவிட்டது.  சரியாக சுதந்திர தினதன்று எனது பதிவுகள் தொடங்கியது எனது அதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஒருவாரமும் அந்த அறிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேனா என்று தெரியவில்லை?.  

நான் எழுதிய சில பதிவுகளில்  எனக்கு திருப்திதந்த பதிவுகள் எது என்றால்  கீழே இருக்கும் இந்த பதிவுகளைத்தான் சொல்லவேண்டும்.
2 உங்கள் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள்.
இந்த இரண்டு விஷயங்களும் ரொம்ப நாளாக எனக்குள் உருத்திக்கொண்டு இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து 'டாஸ்மாக்'கையும்,  தமிழில் பெயர் எழுதும்போது 'ஆங்கிலத்தில் இன்ஷியலை' எழுதுவதையும் நாம் ஒழித்தாகவேண்டும். . இந்த செய்தி ஒரு சதவீதமாவது மக்களுக்கு சென்றிருந்தாலே போதும்,  எனது பதிவுக்கு வெற்றிதான். 

இந்த இரண்டு பதிவுக்கும் நிறைய பின்னோட்டங்கள் வந்திருக்கின்றன. நிறைய நண்பர்கள் முக நூல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்  ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அவர்களுக்கு எனது  நன்றி!

'தொல்லைத் தரும் தில்லை தீட்சதர்கள்' 'சுதந்திர தினத்திலிருந்து முழு நேர தமிழ் தொலைகாட்சியாகிறது டிஸ்கவரி சேனல். 'வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து!? போன்ற பதிவுகள் பதிவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 
தமிழ்மணம் வாயிலாக எனது பதிவை வாசித்த உலகளாவிய  தமிழ் மணம் அபிமானிகளுக்கு எனது இதயம் கனிந்த  நன்றிகள். ..
தமிழ் மணம் இணைய தளத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டு இருக்கும் தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு எனது இதயம் கனிந்த  நன்றி!

 தொடர்ந்து எழுத  எனக்கு உதவிபுரிந்த எனது சகதர்மபத்தினி கிரிஜா, எனது மகள் இரக்சிதா, மகன் சபரிஷ் பாபு   ஆகியோருக்கும் நன்றிகள் பல....

தமிழ் மணத்தில்  எனது நட்சத்திர பதிவுகள் ஞாயிறு இரவா அல்லது திங்கள் இரவா எப்போது  முடியும், என்பது சரியாகத் தெரியாததால் உங்களுக்கு முன்கூட்டியே நன்றி உரைக்கின்றேன்.

இது ஒரு புதுமையான அனுபவம்!.

தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்நோக்குகின்றேன்.

வணக்கத்துடன்
-தோழன் மபா.

வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் சென்னையில் விபச்சாரம் பெருகும் ஆபத்து!?

                                                                                               தமிழ்மணம் நட்சத்திர பதிவு!


பகீர் ரிப்போர்ட்.

சமீபத்தில் எனது கல்லூரி நண்பனைக் காண அய்யப்பன்தாங்கள் சென்றிருந்தேன். அவன் ஸ்ரீபெரம்பதூரில் உள்ள ஒரு கொரியன் கம்பெனியில் வேலையில் இருந்தான்.   பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோதுதான் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொன்னான். 

அது..... இந்தப் பகுதிகளில் தங்கு தடையின்றி நடைபெற்றுவரும் 'விபச்சாரம்'.


இந்திய தொழிற் நகரங்களில் சென்னை முக்கியமான  நகரமாக மாறிவருகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சின்னதும் பெரிதுமாய் நிறைய வெளிநாட்டு தொழிற் நிறுவனங்கள் சென்னையில் கால் பதித்துள்ளன.  இதனால் சென்னையை சுற்றி தொழிற்சாலைகள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வகையில்.   ஹூண்டாய், ஃபோர்ட்,  நிசான் போன்ற உலக புகழ்பெற்ற கார் கம்பெனிகள் இங்கு அமைந்திருப்பதால்  சென்னையை அடுத்த  ஸ்ரீபெரம்புதூர் இந்தியாவின் 'டெட்ராய்டாக' மாறிவருகிறது.

இதனால் உலகின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர்.  பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, வேலைவாய்ப்பு  என்று  ஒரு பக்கம் மகிழ்ச்சியாக  இருந்தாலும். நாம் அதிர்ச்சி அடையவும் செய்திகள் இருக்கின்றன.

கொரியன்கள் ஆதிக்கம்.

கார் உதிரி பாகங்கள் தாயரிப்பில் அதிக அளவில் கொரியன் கம்பெனிகள் ஈடுபட்டுவருகின்றன. சென்னை சுற்றுப் பகுதிகளில் ஹூண்டாய், சாம்சங், எல்ஜி., உட்பட 160க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு துறையில் ஈடுபட்டுவருகின்றன.  மாதத்திற்கு சராசரியா 100 கொரியன்கள் சென்னையில் கால் பதிக்கின்றனர்.  ஸ்ரீபெரம்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் நிறைய கொரிய குடியிருப்புகள் முளைத்துள்ளன.  கொரியன் என்றில்லை உலகின் பல பாகங்களிருந்து  தொழிலாளர்கள் சென்னைக்கு வந்தவன்னம் உள்ளனர்.   

இவர்கள் வீட்டை விட்டு பல மாதங்கள் தனியாக இருப்பதால், இவர்களுக்கு பெண் துணை தேவைப்படுகிறது. அதனை இங்கு உள்ள ஏஜெண்டுகள் பயன்படுத்தி பெண்களை சப்ளை செய்து காசு பார்க்கின்றனர். கொரியன்களுக்கு இயல்பாகவே இரண்டு நாளுக்கு ஒரு முறை பெண் துணை தேவைப்படுமாம்   (நண்பன் சொன்னது) . இவர்களது தேவை நமது கலாச்சாரத்தை பதம் பார்க்கிறது. இதனால் தமிழ் நாட்டின் மானம் விமானம் ஏறுகிறது.
நண்பன் சொன்ன செய்தி!


   நண்பனது அலுவலகத்தில் படுக்கை அறைகளும் இருந்தது.  கார் கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அது.  இங்கு இருக்கும் படுக்கை அறைகளைக் காட்டி,  உயர் அதிகாரிகள் தங்கி ஓய்வு எடுக்கும் அறை என்றான். ஓய்வு என்றால் தனியாக அல்ல இளம்பெண்களோடு!?.

இத்தகைய வெளிநாட்டு பணியாளர்களுக்கு பெண்களை சப்ளை செய்யவே தனியாக இந்தப் பகுதிகளில் ஏஜெண்டுகள் இருக்கின்றார்களாம். வெளி நாட்டினர் எந்த வகை பெண்களை விரும்புகின்றனறோ அந்த வகை பெண்களை அவர்கள் சப்ளை செய்கின்றனர்.  கல்லூரிப் பெண்கள், வழக்கமான பாலியல் தொழிலாளர்கள் , குடும்பம் பெண்கள் (?) துணை நடிகைகள் என்று பல வகைகளிலும் சப்ளை நடக்கிறதாம்.
     
     

வெளிநாட்டினர் தங்கி இருக்கும் வீடுகளுக்கோ அல்லது பங்களாவிற்கோ சென்று இந்தகைய பெண்கள் சேவை ஆற்றுகின்றனர்.  அதனால் இவர்களை போலீஸ் பிடிப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. அதுவும்போக வெளி நாட்டினர் மீது நமது காவல்துறை அவ்வளவு சுலபமாக நடவடிக்கை எடுத்துவிடமுடியாது.

இதுபோக  கொரியன் ஒருவரே  இங்கு பங்களாவை வாடகை எடுத்து,  கொரிய பெண்களை வைத்து தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம்.  இங்கு வரும் கொரியன் மற்றும் ஜப்பானியர்களுக்கு நம்மூர் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லையாம். அதனால் மணிப்பூர், மேகாலயா நேபாளம் போன்ற இடங்களிலிருந்து பெண்களை தருவித்து தருகிறார்களாம்" என்றான்.  எனக்குத் தலை சுற்றியது.

இதுபோக வித்தியாச அனுபவத்திற்கு ஆசைப்பட்டு நிறைய சென்னை வாழ் இளம்வட்டங்கள் ஸ்ரீபெரம்புதூருக்கு படையெடுக்கின்றனர்.

காவல்துறை நடவடிக்கை தாமதமா?

இரண்டு மூன்று மாதத்திற்கு முன் இந்த பகுதிகளில் பெரிய அளவில் விபச்சார வேட்டையை நடத்தியது புறநகர் காவல்துறை. அதில் ஒரு கொரியன் ஒருவன் சிக்கினான்.  இன்னும் விபச்சார வேட்டையை தீவிரப் படுத்தினால் இந்த பகுதியில் விபச்சாரத்ததை அடியோடு ஒழித்துவிடலாம்.

அதுவும் இல்லாமல்  ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களையும் இந்த கும்பல்  விபச்சாரத்தில் ஈடுபடுத்திவருகிறது.  வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி, ஸ்ரீபெரம்பூதூரை சுற்றி உள்ள இளம் கிராமப்புற  பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் சுற்றி வருகிறது. இதை தடுக்க இப்போதே தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய நகரங்களோடு சென்னையை ஒப்பிடும்போது சென்னையில் மட்டும்தான் விபச்சாரத்திற்கு என்று தனியாக பகுதி இல்லை. மும்பையில் காமந்திபுரா, கல்கத்தாவில் சோனாகஞ், தில்லியில் சில பகுதிகள் என்று விபச்சாரதிற்குகேன்றே சில இடங்கள் வரையிறுக்கப்பட்டு அங்கு தொழில்கள் நடைபெற்று வருகிறது.  சென்னையில் கோடம்பாக்கத்தை அப்படிபட்ட இடமாக மாற்ற 80ளில் சிலர் முயற்சி செய்தனர். ஆனால் நமது காவல் துறையினர் திறமையாக செயல்பட்டு அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டனர்.  அத்தகைய ஆற்றல் பெற்றது தமிழ்நாடு காவல் துறை.

இங்கேயும் அப்படிப்பட்ட ஒரு  நடவடிக்கையை எடுத்து, சென்னையை சுற்றி அப்படி ஒரு அவலம் ஏற்படாவன்னம்  காக்கவேண்டியது காவல்துறையினரின் கடமை.
செய்வார்களா......?சனி, ஆகஸ்ட் 20, 2011

போலாமா....போலாமா....மீனு வாங்க போலாமா....?


                                                                               தமிழ்மணம் நட்சத்திரப்  பதிவுகள்!


ஞாயிற்று கிழமை வந்தாலே....மட்டனா, சிக்கனா அல்லது மீனா எது வாங்குவது  என்று வீட்டில்   'இங்கி பிங்கி' போட்டு பார்ப்போம்.  என்னதான் அலசி ஆராய்ந்தாலும்,  கடைசியில் மீன் வாங்குவது என்று முடிவாகும்.  அவ்வப்போது மட்டன் வாங்கினாலும் சிக்கன் பக்கம் அவ்வளாவாக தலைகாட்டுவதில்லை.  ஏனோ தெரியவில்லை சிக்கன் மீது எப்போதும் ஒரு பயம் உண்டு.  மீன் அப்படி அல்ல, துணிந்து வாங்கலாம்.  பிரச்சனை இல்லாதது. 
    

சென்னையில் திருமுல்லைவாயில் அம்பத்தூர் ஆவடி போன்ற பகுதிகளில் பழவேற்காடு மீன்கள் கிடைக்கும். பழவேற்காடு இறா சற்று பெரியதாக இருக்கும்.  இங்கு கிடைக்கும் மீன்கள் நல்ல ருசியாக இருக்கும் என்பது நிஜமான ஒன்று. 

கடற்கரை நகரான சென்னையில் என்றுமே மீன் தட்டுப்பாடு வந்ததில்லை. மீன்பிடி கட்டுப்பாடு காலங்களில் கூட ஆந்திராவிலிருந்து மீன்கள் சென்னைக்கு வந்துவிடும்.
காசிமேடு மார்க்கெட்
   
சிலநேரங்களில் மீன் வாங்க காசிமேட்டுக்கு போவதுண்டு. சுற்றி கண்டைனர் லாரி அணிவகுத்து நிற்க கடற்கரையில் மீன் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.  அங்கு சிறிய சிறிய படகுகள் வந்த வன்னம் இருக்கும். பெரிய பெரிய வஞ்சிரம் மீன்கள் ஏலம் போகும். யார் வேண்டுமானாலும்  ஏலம் கேட்கலாம். 4அல்லது 5 கிலோ எடை உள்ள வஞ்சிரம் மீனை 2 ஆயிரம் ரூபாயிக்கு ஏலம் எடுத்து பிரித்துக் கொள்வோம்.  அங்கே இருக்கும் மீன் சுத்தம் செய்பவர்களிடம் கொடுத்துவிட்டல் போதும் அவர்கள் மிக நேர்த்தியாக  யாருக்கும் கூடுதல் குறைவின்றி சமமாக  பிரித்துக் கொடுத்துவிடுவார்கள்.  அவர்கள் மீனை பிரிக்கும் முறை நிச்சயம் பாராட்டுக்குறியது. இங்கு கை நீளமுள்ள பெரிய பெரிய இறா(ள்) இங்கு சல்லிசாக கிடைக்கும்.
சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது காசிமேடு மீன் மார்கெட்டுக்கு போய்பாருங்க...


காவிரி மீனை காசுகொடுக்காமல் கொண்டுவந்தேன்.

எங்கள் ஊர் திருவாலங்காடு (நாகை மாவட்டம்) காவிரி ஆற்றில் பிரசித்தமான 'வாளை' மீன் கிடைக்கும். நல்லா நீளமா...வழ வழவென்று பார்க்கவே அழகா இருக்கும். அந்த மீன் வாங்க வேண்டுமென்றால் விடியற்காலை 5 மணிக்கு  சட்ரசுக்கு (காவிரியிலிருந்து விக்ரமாதித்யன் ஆறு பிரியும் இடம்)  செல்லவேண்டும். அப்போதுதான் வாளை மீன் கிடைக்கும். இருள் பிரியாத அந்த நேரத்தில் கிராமத்து மக்கள்  போர்வையை போர்த்திக் கொண்டு  ஆத்துப்பக்கம் நடையை கட்டுவார்கள். ஆற்றில் பெரும் பெரும் கூடையை கயிரில் கட்டி தண்ணி வெளியே பீச்சிக் கொண்டு வரும் வழியில் கட்டி வைத்திருப்பார்கள். தண்ணீர் வரும் வழியில்  ஏறி வரும் மீன்கள்   துள்ளி குதிக்கும்போது அந்தக் கூடையில் விழுந்துவிடும்.  இதில் அதிகமாக 'கெண்டை குஞ்சு' போன்ற மீன்கள்தான்  கிடைக்கும்.  வாளை மீனை வலைவைத்து பிடிப்பார்கள். 

அன்றும் அப்படித்தான்.  நான் ஏழாவதோ எட்டாவதோ படித்துக்கொண்டு இருந்த நேரம். என்னை மீன் வாங்க அனுப்பினார்கள்.  எனது 'ஹெர்குளிஸ் கேப்டனை' எடுத்துக் கொண்டு அங்கு போனால், அந்த விடியற்காலை நேரத்திலும்  நல்ல கூட்டம் இருந்தது. இப்போது போல் அப்போதெல்லாம் எடை வைத்து மீன் விற்பதில்லை. மீனை கண்ணால் பார்த்தே விலையை சொல்லி விடுவார்கள்.  ஒரு பெரிய கூடையில் மீன்களை போட்டு விற்பனை செய்தார்கள்.  நானும் கூட்டத்தில் நின்றுக் கொண்டு கையை நீட்டிக் கொண்டு இருந்தேன். எல்லோர் கைக்கும் மீன் சென்றது என் கைக்கு மீன் வரவில்லை. கையை இன்னும் நீட்டவே மீனை என் கையில் திணித்தார் விற்பவர். மீனை வாங்கி ஒயர் கூடையில் போட்டுக் கொண்டு பணத்தை நீட்டினால் அவர் வாங்குவதாக இல்லை. நானும் ஒரு அரை மணி நேரமாக 'பணம் இந்தாங்க வாங்கிக்கிங்க" என்று கிளிப்பிள்ளையாய் கூவிக் கொண்டு இருந்தேன். அவர் கண்டுக் கொள்வதாயில்லை.  பொறுத்துப் பொறுத்து பார்த்த நான், பணத்தையும் மீனையும் எடுத்துக் கொண்டு சிட்டாய் சைக்கிளை  எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.   அன்று பணம் கொடுக்காமலேயே வாளைமீன் எங்க வீட்டில் வாழை இலைக்கு வந்தது. 

இன்றும் எனது அம்மா இதை சொல்லி சொல்லி  என்னை கேலி செய்வார்.

முன்பெல்லாம் எங்கள் ஊருக்கு மாலையில்தாங் கடல் மீன் வரும். என் தாத்தா வாங்கிக்கொண்டு வருவார். வாழமட்டையில் வைத்துதான் மீனை கட்டித்தருவார்கள்.மீன் வகைகள்

உலகில் 22000 வகை மீன்கள் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது.   என்னன்ன நல்ல சமாச்சாரம்  உள்ளனவோ அவை அனைத்தும்  மீன் உணவில் இருக்கிறது.  அத்தகைய சக்தி வாய்ந்தது மீன் உணவு.  உலகம் 75 சதவீதம் நீரால்  சூழப்பட்டு இருப்பதால் மீன் உணவிற்கு என்றுமே பஞ்சமே ஏற்பட்டதில்லை. 
மீன்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கடல் மீன்கள் மற்றொன்று நாட்டு மீன்கள்.  ஆறு, குளம், ஏறி, கன்மாய், குட்டை போன்ற இடங்களில் வாழக்கூடியது நாட்டு மீன்கள். உப்பு நீரில் மட்டுமே வாழ்வது கடல் மீன்கள். இது இரண்டுமே அநதந்த வாழ்விட மக்களால் உண்ணக்கூடியது. எங்கள் ஊரில் நாட்டு மீனைவிட கடல் மீனைத்தான் அதிகம் விரும்புவர். ஏனென்றால் நாட்டு மீனில் சேற்று நாற்றம் சிறிது அடிக்கும். அதனை நிறைய பேர் விரும்பமாட்டார்கள்.

நாட்டு மீன்களில், விரால், ஆரா, கெளுத்தி, கெண்டை,  கட்ளா, அயிரை, கொறவை, தொய்மா, சிலேப்பி, சார, வாளை போன்ற மீன்கள், மனிதர்கள் சாப்பிடும் பட்டியளில் இருக்கின்றது.

கடல் மீன்களில் சங்கரா, , வஞ்சிரம், வவ்வாள், கொடுவா, கிழங்கான், நெத்திலி, அயிலை(கானாங்கழுத்தை), மத்தி. உறி பாரை, தேங்கா பாறை, திருக்கை, சுறா, பால் சுறா, சுதும்பு, காரபொடி, சூரமீன், காளா, நாக்கு மீன், கவலை, பொறுவா, வாளை,ஓரா, உளுவை, காரப்பொடி, கீச்சான், கோளா, சுதும்பு, ஷீலா, சூடான், பன்னா  போன்ற மீன்கள் மனிதர்களின் தேவைக்காக  கடலில் உயிர் வாழ்ந்துக் கொண்டு  இருக்கிறது. 


மீன் ஆயுளுக்கும் துணை புரியும்.

மீன் உணவில் ரொம்ப முக்கியமானது ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட்.  இதில் உள்ள ஓமேகா 3 வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைத்துவிடுகிறது. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

உலகம் முழுவதும் மீன் உணவை வைத்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மீன் சாப்பிட்டால் கண்கள், இருதயம், தோல் போன்றவைக்கு  மிகவும் நல்லது என்கிறது ஒரு ஆய்வு. அதோடு தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்த நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறது இன்னொரு ஆய்வு.பூஜைகளில் மீன்கள்.

என்னது பூஜைகளில் மீனா என்று திகைக்க வேண்டாம்.
பூஜையில் மீன்
                        

மீன்கள் உலக மக்களிடையே எப்போதும் இனக்கமாகவே இருந்து வருகிறது. ஆதிகாலம் தொட்டு உலகில் முதலில் தோன்றிய உயிரினம் என்ற அடிப்படையில் மனிதர்கள் அதனை சில இடங்களில் பூஜிக்கவே செய்கின்றான். வங்காள பிராமனர்கள் தங்களது திருமண சடங்கின் போது மீனையே தெய்வமாக வைத்து வணங்குவார்கள்.  மீனை 'கடல் புஷ்பம்' என்று கொண்டாடுவார்கள். திருமண சடங்கின்போது மீனே பிரதானமாக அமையும்.  திருமண சடங்கு முடிந்த பின் அனைவருக்கும் மீன் உணவே பரிமாறப்படும். வ்ங்காள பிராமனர்கள் சமையளில் மீன்ககள் தினந்தோறும் இடம் பெறும்.
மணமக்கள் அலங்காரத்தில் மீன்கள்
     

இந்தியாவின் வடக்கே  லடாக் பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆறு மற்றும் குளங்களில் வற்றிபோய் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் மீன்களை பிடித்து நீர் ஓடும் ஆற்றில்  விடுவார்கள். அப்படி செய்வது புன்னியத்தையும் தாம் செய்த பாவத்திற்கு பரிகாரமாய் இருக்கும் என்றும்  நம்புகின்றனர்.  அதனால், அவர்கள் மீன் உணவை சாப்பிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
      

நம்மூரில் கோயில் குளங்களில் இன்றும் மீன் வளர்ப்பதை பார்த்திருக்கின்றோம். என்னேரமும் சலசலவென்று மீன்கள் இயங்கிக்கொண்டு இருப்பது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசப்படுத்துகிறது.

அதேபோல் ஊர் குளமோ அல்லது கோயில் குளமோ இப்போதெல்லாம் காண்ட்ராக்ட் விட்டு மீன் வளர்க்கின்றனர். அதனால் அந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதிலை.  பயன்படுத்த முடிவதில்லை.  'இப்போதெல்லம் யாரும் குளத்தில் குளிப்பதேயில்லை' என்ற எனது கட்டுரை கல்கியில் வெளிவந்தது.    இதனால் கிரமங்களில் கூட ஆறு குளம் மீன் போன்றவை நமக்கு அன்னியமாகவே மாறிவிட்டது. எனலாம்.

நமது தென் மாவட்டங்களில் கூட கோயில் குளங்களில்  'மீன் கொடை' குடுக்கப்படுகிறது.  ஊர் பெரியவர்களால்  நல்ல நாள் குறித்து அன்று கோயில் குளத்தில் மீன் பிடித்து எடுத்துக் கொள்வார்கள்.  அவரவர் பிடிக்கும் மீன் அவரவருக்கு.

.
இப்படி காலம்காலமாக மனிதன் மீன்களை சார்ந்தே தனது வாழ்க்கை அமைத்திருக்கின்றான். ஆறுகளின் ஓரத்தில் நாகரிகம் வளர்ந்ததும் ஒரு காரணம்.  மீன்கள் பிடிப்பதும் அதை உணவாக சமைப்பதும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அது அந்தந்தப் பகுதி கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. 
'மீன் வாங்கும் போது நாறும் சமைக்கும் போது மணக்கும்'  என்று கேலியாய் கூறினாலும் மீன்  உலக மக்களை என்றென்றும் வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.


'நாளை ஞாயிற்றுக் கிழமை...... 
மீண்டும் முதல் பாராவைப்  படிக்கவும்!'

'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.

 தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

டாஸ்மாக் மதுபானக் கடை

இன்று தெருவுக்குத் தெரு டீ கடை இருக்கிறதோ இல்லையே அம்மா ஜெயலலிதா புண்ணியத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. ஒயின்ஷாப்புகளை அரசுடமையாக்கி தமிழர்களை குடிக்கு அடிமையாக்கிய பெருமை ஜெயாவையே சாரும். 

முந்தைக்கும் முந்தைய  ஜெயா ஆட்சியில் திமுகாவினர் சிண்டிக்கேட் அமைத்து ஒயின்ஷாப்புகளை நடத்தி வந்தனர். அதிகம் பணம் புழங்கும் இந்த போதை தொழிலில் திமுகவினரின் ஆதிக்கத்தை நினைத்து பொறுமிய ஜெயலலிதா அவர்களின் கொட்டத்தை அடக்க என்ன செய்யாலாம் என்று யோசித்ததன் விளைவுதான்,  அதை அரசே ஏற்று நடத்துவது.


உலகில் எங்கேயாவது இந்த அநியாயத்தை கேள்விபட்டிருக்கிறீர்களா....? அரசாங்கமே போதை பொருள் விற்பதை!

இந்த அநியாயம் வேறு எங்கும் நடக்கவில்லை. 'கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று நாம் வாய்கிழிய பேசுகிறோமே அந்த செந்தமிழ் நாட்டில்தான் இந்த அவலம். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றாரே கனியன் பூங்குன்றனார். அவர் பிறந்த திரு நாட்டில்தான் இந்த அவலம்.
 
காங்கோ உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில்தான் மக்களை சிந்திக்க விட வேண்டாம் என்றும் அரசும், தீவிரவாத குழுக்களும்  போட்டி போட்டுக் கொண்டு  போதை பொருட்களை விற்பனை செய்யும். விற்பனை என்றால் இப்படி ரோட்டுக்கு ரோடு அல்ல...மறைமுகமாக கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வார்கள்.  அனால் இங்கே.....?

ஒயின்ஷப்புகளை நடத்துவதில்  திமுகவினர் ஆதிக்கம்.

அன்றைய அதிமுக ஆட்சியில் திமுகவினரின் கையில்தான் பெரும்பான்மையான ஒயின்ஷாப்பும் பார்களும் இருந்தன. திமுக ஆட்சி போன பின்னரும் அவர்கள் கை இறங்குவதாக இல்லை.  அதனால் ஜெயலலிதா திமுகவினரின் ஆதிக்கத்தை ஒழிக்க  'தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 ' ஒரு திருத்தம் செய்து ஏல முறையை கொண்டுவந்தார். இதில் அதிகம் வருவையுள்ள கடைகள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு குலுக்கள் முறையில் பிரித்தளிக்கப்பட்டன. 


ஆனால் இந்தத் தொழிலில் (?) பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுத்தருவார்களா?  ஏலம் எடுக்க யாரும் வராமல் பார்த்துக் கொண்டனர். அப்படியே எடுத்தாலும் அதை தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கடைகளை பிரித்துக் கொண்டனர். இது ஜெயலலிதாவை இன்னும் வெறுப்பேற்றியது. இயல்பாகவே கண்மூடித்தனமான பிடிவாதம் கொண்ட ஜெயலலிதா அப்போதுதான் அந்த விபரீத முடிவை எடுத்தார். அதாவது அரசாங்கமே ஒயின்ஷாப்புகளை  ஏற்று நடத்துவது.  அதுவரை யாருக்கும் அப்படிபட்ட யோசனை தோன்றி இருக்காது.  கேள்வியும் பட்டு இருக்கமாட்டார்கள். முடிவெடுத்தப் பின் துணிந்து செயலில் இறங்கினார் ஜெயலலிதா.  மீண்டும் மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து அக்டோபர் மாதம் 2003ம் வருடம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) மூலமாக டாஸ்மாக்கை தொடங்கினார்.   இந்த ஈன காரியத்தை ஜெயலலிதா செய்யாமல் கருணாநிதி செய்திருந்தால், என்ன நடந்திருக்கும் தெரியுமா....? 

ஊடகங்கள் ஒன்று திரண்டு இருக்கும். பேசியும் எழுதியும் கருணாநிதியை கிழித்தெடுத்திருப்பார்கள். மடங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும். எதிர்ப்புகள் சுனாமியாய் எழுந்து அந்த திட்டத்தை அடியோடு ஒழித்துவிட்டுதான் உக்கார்ந்திருப்பார்கள். 

இன்று தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் என்று திரும்பிய பக்கமேல்லாம் ஒயின் ஷாப்புகளை ஆரம்பித்து, வருடத்திற்கு 12ஆயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டுகிறது தமிழ அரசு.

குடிக்க பயம் இல்லை.

இப்படி பிறந்ததுதான்  'டாஸ்மாக்'. அன்று தனியாரிடம் இருந்தபோது என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில்தான் இருக்கிறது டாஸ்மாக். முன்பு இருந்த கெடுபிடிகள், கூடுதல் விலையில் சரக்கு விற்பனை என்று எல்லா அவலங்களும் இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. பார்  நடத்துவர்களின் அராஜக போக்குகளுக்கு கொஞ்சமும்  குறைந்து விடவில்லை.

தமிழன் ஈயோடு ஈயாய் உட்கார்ந்து சரக்கு   அடித்துவருகிறான்.
  
அரசாங்கமே ஊத்தித் தருவதால் மக்களுக்கு குடிக்க பயம் இல்லாமல் போச்சு. முன்பெல்லாம் குடிக்க போகும்போது  பயந்து பயந்து பம்மிக்கொண்டு குடிப்பார்கள். ஆனால் இன்றைய நிலை...? அதை நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்.

தனியார் துறையிடம் ஒயின்ஷப்புகள் இருந்தபோது... குடிமகன்கள் போலீசை கண்டால் கொஞ்சம் அடங்கி போவார்கள்.  அரசே ஒயின்ஷாப்புகளை ஏற்று நடத்திவுடன் குடிமகன்களை கண்டால் போலீஸ் அடங்கி போனது.கண்டுகொள்ளாத கருணநிதி

தமிழக அரசியலில் ஒரு விஷயம் எப்போதும் கடைபிடிக்கப்படும். ஒரு ஆட்சி கொண்டுவந்த திட்டத்தை, அடுத்து வரும் ஆட்சி  அமுல்படுத்தாது. அந்தத் திட்டதை ரத்து செய்துவிடும். அப்படிதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த டாஸ்மாகை கருணாநிதி கலைத்து விடுவாறென்று. ஆனால் நடந்தது வேறு....!முதலில் எதிர்த்த கருணாநிதி, பின்னர் அதிலிருந்து கொட்டிய வருமானத்தைப் பார்த்து அப்படியே டாஸ்மாக்கிற்கு ஷாஷ்டாங்கமாய்  நமஸ்காரம் செய்துவிட்டார்.  'தொறடா டாஸ்மாக்கை' என்று தெருவுக்குத் தெரு திறந்து அரசு கஜானாவை நிறப்பத் தொடங்கினார். அப்போதுதானே தான் அறிவித்திருக்கும் இலவச திட்டங்களுக்கு பணம் சேர்க்க முடியும்.


தமிழ்நாட்டு மக்களைப் பற்றி  கவனம் கொள்ளாமல், தனது ஆட்சி அதிகாரத்தை இந்த டாஸ்மாக்கை கொண்டு பலப்படுத்தவே கருணாநிதி முயன்றார். இவரது ஆட்சி காலத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்தது. அது நாள் வரையில் இரவு 11 மணி வரை திறந்திருந்த கடைகள் இரவு 10 மணிவரைதான் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இன்று எல்லா மட்டத்திலும் குடிகாரர்கள் இருக்கிறார்கள். குடிப்பது தவறில்லை என்பதை இன்றைய தலைமுறையினருக்கு அரசாங்கமே குழப்பமில்லாமல் தெளிவாகவே (?) சொல்லாமல் சொல்லிவருகிறது.பல  கேள்விகள் ?
  • இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன் பிற மாநிலங்கள் இதை தங்களது மாநிலத்தில் அமுல் படுத்தவில்லை? 
  • பாண்டிச்சேரி என்றாலே நமக்கு தண்ணி பற்றிதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு சரக்கு அங்கு சகஜம். அந்த மாநிலத்தில் ஏன் அரசாங்கமே ஒயின்ஷப்புகளை ஏற்று நடத்தவில்லை....?
  • அயல் நாட்டு மது விறபனை செய்யலாம் என்றால். தமிழர்களின் பாரம்பரியமான கள்ளுக்கு தடை ஏன்?


நாம் போராடுவோம்!

பாமக நிறுவனர் இராமதாஸ் மட்டுமே அவ்வப்போது  டாஸ்மாக்கிற்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். பிற தமிழக தலைவர்களும் குரல் கொடுக்கவேண்டும்,  போராடவேண்டும்,  தமிழன் தலை நிமிர்ந்து நடக்க   டாஸ்மாக்கை அழிதொழிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்.

"தமிழ் நாட்டில் படிக்காதவனை விட... குடிக்காதவனே இல்லை" என்ற பெருமையை தமிழ் நாட்டிற்கு பெற்று தந்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா.  அதை துடைத்து,  இந்த அவலத்தை தமிழனிடமிருந்து போக்க நாம் போராடுவோம்.  டாஸ் மாக்கை அழித்து தமிழக மக்களை காப்பற்றுவோம்.*************வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

சரத்குமார்- சக்சேனா என்ற மனிதக் குரளிகள்?

                                                                                              தமிழ்மணம் நட்சத்திர பதிவு !

         உலகில் எது மிகவும் வேகமானது சக்திவாய்ந்தது என்று உங்களை கேட்டால்,  நீங்கள் எதை சொல்வீர்கள்?                                                                      

நீங்கள் எதை சொல்வீர்களோ....எனக்குத் தெரியாது. 

என்னை கேட்டால் ...நான் 'காலம்'தான் என்று சொல்வேன்.  

 காலம்தான் ஒருவருடைய வாழ்வை தலைகீழாக புரட்டிப்போடக்கூடிய அசாத்திய சக்திப் படைத்தது. 
      
அதிகாரத்தின்  உச்சத்தில், புகழ் மயக்கத்தில்  ஆடும் ஆட்டம்....அதன் காரம் குறையும் போது,  சாரம் இழந்து முகம் வெளுத்து 'கை' கொடுப்பார் யாருமின்றி, அன்று போற்றியவர்கள் இன்று அணி திரண்டு  தூற்றும் காட்சியை 'காலம்' எப்போதும் கனக்கச்சிதாமக முடித்துவிடுகிறது. எல்லாவற்றையும் உடனுக்குடனே நம் கண் முன்னால் காட்டியும் விடுகிறது.

அதுவும் ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாக இருந்துவிட்டால் போதும். அவர்கள் தரும் அதிகாரத்தாலும் பண புழக்கத்தாலும்,   மந்திரவாதியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, மனசாட்சியற்ற  மனிதக் குரளியாக மாறிவிடுகிறார்கள். மந்திரவாதியின் கையில் இருக்கும் குரளி வேலை முடிந்ததும் திரும்பிவிடும்,  மாட்டிக் கொண்டால் தப்பித்துவிடும், அல்லது அந்த மந்திரவாதியையே கொன்றுவிடும். ஆனால் இந்த மனித குரளிகள் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். காலம் முடியும் வரை 'பலி ஆடுதான்'.  இவர்களால் இந்த மந்திரவாதியை ஒன்றும் செய்ய முடியாது. 

இங்கு  மனிதக் குறளிகள் இரண்டு பேர்.  ஒருவர்  கலைஞர் டிவி ஷரத்குமார் ரெட்டி.   மற்றொருவர் ஹன்சராஜ் சக்சேனா.  இருவரும் சன் டிவி கலாநிதி மாறனின் தாயரிப்புகள். யாரும் அசைக்க முடியாத  இந்த இரண்டு மனிதக் குறளிகளும்  இருப்பது சிறையில். காலத்தின் கோலத்தை சற்று விரிவாகப் பார்ப்போம். 


கலாநிதியின் நண்பர்கள்.

 
  இந்தியா டுடே நிறுவனம், அப்போது அதாவது 90களில்  வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, 'நியூஸ் ட்ராக்' என்ற வீடியோ பத்திரிகையை தொடங்கியது.

இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட்.
1993ல் சன் டிவி தொடங்கப்பட்டபோது இனைத்துக் கொள்ளப்பட்டவர்கள்தான்  சரத்குமார் ரெட்டியும் , ஹன்ஸ் ராஜ் சக்சேனாவும்.  சன் டிவி தொடங்க  ஷரத்குமார் ரெட்டியின் மூலதனமும் உண்டு. இவர்கள் இருவரும் கலாநிதி மாறனின் நெருங்கிய கல்லூரித் தோழர்கள். 

கலாநிதி மாறன் தனது நிறுவனங்களில் அனைத்து துறைகளிலும் தனது நம்பிக்கையைப் பெற்ற கல்லூரி நண்பர்களையே தளபதிகளாக நியமித்திருந்தார்.  ஷரத்குமார் ரெட்டி, ஹன்ஸ் ராஜ் சக்சேனா மற்றும் தினகரனின் முக்கிய நிர்வாகியான ஆர்.எம்.ஆர். ரமேஷ்.  இவர்கள்தான் சன் குழுமத்தின் முக்கிய தூண்கள். இதில் ஆர்.எம்.ஆர். ரமேஷ் 'சூரியன் எஃப் எம்' மற்றும் 'தினகரனில்' பிஸியாகிவிட....ஷரத் ரெட்டியும், ஹன்ஸ் ராஜ் சக்சேனாவும்  சன் டிவியில் பிசியாக இருந்தார்கள்.


சரத்குமார் ரெட்டி மற்றும் ஹன்ஸ் ராஜ் சக்சேனா இருவரில் முதலில் ஹன்ஸ் ராஜ் சக்சேனாவைப் பார்ப்போம்.

மாறனின் மனம் அறிந்து செயல்படும் ஹன்சராஜ் சக்சேனா!

 2007ல் சன் பிக்சர்ஸ் தொடங்கியபோதுதான் சக்சேனாவின் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது.

சன் டிவியின் நிகழ்ச்சிகளில் சினிமாவைதான் கூட்டாக, குருமாவாக பொறியலாக, வறுவலாக என்று 80% சினிமாவையே வித விதமாக தந்துக்கொண்டு இருந்தனர். அதனாலயே சன் டிவி நிறுவனம்.  பட வினியோகத் துறையில் கால் பதித்தது. படமெடுத்து வெளியிட முடியாமல் சிரமப்படும் தயாரிப்பாளர்களை அழைத்து படத்தை விலை பேசி வாங்கத்தொடங்கியது. அதற்கு சரியான ஆள் யார் என்ற கேள்வி எழுந்தபோது....  ஹன்சராஜ் சக்சேனாவை நியமித்தார் காலநிதி மாறன்.  ஹன்சராஜ் சக்சேனா தனக்குத் துணையாக அய்யப்பனை நியமித்துக் கொண்டார்.

நண்பனின் கட்டளையை சிரமேற்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தை முதலில் வாங்கினார் சக்சேனா.   'காதலில் விழுந்தேன்' படத்தை முதலில் 'அட்லாண்டி‌க் சினிமாஸ்' நிறுவனம்தான் தயாரித்தது. அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை வாங்கி விளம்பரப்படுத்தியது. ஹன்சராஜின் வியாபார தந்திரம் அந்த படத்தை பட்டித்தொட்டியெல்லம் பிரபலமாக்கியது. இங்கிருந்துதான் தனது ஆட்டதை ஆரம்பித்தார் ஹன்சராஜ் சக்சேனா. ஆட்டத்தின் நெளிவு சுளிவுகளை கண்டுக்கொண்ட ஹன்சராஜ் வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவை தனது கைக்குள் கொண்டுவந்தார்.  சன் பிக்சர்ஸின் காதலில்விழுந்'தேனை' தொடர்ந்து மாசிலாமணி, தெனாவெட்டு என்று பட விநி'யோகம்' புதுப் பாதையில் புறப்பட்டது.

இந்த நேரத்தில்தான் எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் ரூ. 150 கோடி பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கவும்  நாயகியாக ஐஸ்வர்யா ராயும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

பெரு நாட்டில் தொடங்கிய படப்பிடிப்பு . கிட்டத்தட்ட 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஐங்கரன் நிறுவனமும், அதன் பங்குதாரரான ஈராஸ் இண்டர்நேஷனலும் நிதி நெருக்கடியில் சிக்கின. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, ஈராஸ் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள  இந்த மாபெரும் படத்தைத் தயாரிக்க முன் வந்தது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்  நிறுவனம்.  பெரும் தொகைக்கு படம் கைமாறியது.. இதில் ஹன்சராஜ் சக்சேனாவின் பங்கு அதிகம். அவரது கண்பார்வையில் எந்திரன் பிரமாண்டமாய் வளர்ந்து வெளிவந்து இந்திய சினிமாவின் உச்சமான நிலையை அடைந்தது.  அல்லது அப்படி நமக்கு காட்டப்பட்டது. 

 நடப்பது அவுங்க ( திமுக)  ஆட்சி என்பதால்,   கெஞ்சிவாங்கப்பட்ட நிலை மாறி நல்ல படங்களை மிரட்டி வாங்கத் தொடங்கினார்  சக்சேனா.  இதில் பிரபல சினிமா நிறுவனங்கள் கூட தாங்கள் தயாரிக்கும் படத்தை மறுவார்த்தை பேசாமல் சன் பிக்சர்ஸுக்கு விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதைவிட கொடுமையான விஷயம் ஏவிஎம், கவிதாலயா போன்ற நிறுவனங்கள் கூட படத் தயாரிப்பையே தள்ளிபோட்டனர். படம் வாங்குவதிலும் தனது அதிரடியை காட்டினார் ஹன்சராஜ். அதாவது படத்தை தயாரித்த நிறுவனங்கள் விலை நிர்ணயக்கமுடியாது.  விலையை ஹன்சராஜ் சக்சேனாதான்  நிர்ணயப்பார் என்கிறது  விஷயம் அறிந்த சினிமா வட்டாரம். இதனால் சின்னதும் பெரிதுமான சினிமா தாயரிப்பாளர்கள் சக்சேனாவால் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று  பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த 'காவலன்' படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார்கள். அதே நேரத்தில்தான் ஆடுகளம் படத்தையும் வெளியிட முடிவு செய்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.இந்த நேரத்தில் விஜய் படம் வெளிவந்தால், ஆடுகளத்தின் ஓப்பனிங் பாதிக்கப்படும் என்பதால் சில மறைமுக காரியங்களை செய்ய ஆரம்பித்தார் சக்சேனா என்பது சினிமா உலகம் அறிந்த ரகசியம்.  இப்படி நிறைய திரைமறைவு வேளைகளை சன் பிக்சர்ஸுக்காக செய்ய ஆரம்பித்தார் சக்சேனா. இதை வெளியிலும் சொல்ல முடியாமல் உள்ளேயும் சொல்ல முடியாமல் தவித்தனர் பாதிக்கப்பட்ட சினிமா பிரமுகர்கள்

ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்.
            

இன்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
 
"கந்தன் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் கொடுத்த மோசடி புகாரின் அடிபடையில்....  கடந்த ஜுலை மாதம் 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே  கைது செய்து, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சக்சேனாவை 14 நாட்கள் கோர்ட் காவலில் வைத்து பின்னர் புழல் சிறையிலடைகப்பட்டார். அது நாள் வரையில் சும்ம இருந்த சினிமா வினியோகஸ்தர்கள் கம் தயாரிப்பாளகள் வெடி வெடித்து கொண்டாடினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சக்சேனா கைது செய்யப்பட்டதும், பல தயாரிப்பாளர்கள் துணிந்து அவர் மீது புகார் தெரிவித்தனர்.


    

 "படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காமலும், வாங்கிய படங்களுக்கு சரியாக பணம் தராமலும், பல சிறிய படங்கள் வெளிவர முடியாத நிலையை உருவாக்கியும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களையும், வஞ்சித்த சன், "டிவி தலைமை நிர்வாகி சக்சேனாவை கைது செய்ததன் மூலம், தமிழ்த் திரையுலகம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன். 

இப்படி அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள் பூதமென கிளம்பி ஹன்சராஜ் சக்சேனாவை இரும்பு அறைக்குள் வைத்திருக்கிறது சக்சேனாவை ஜாமீனில் எடுக்க பணம் பாதாளம் வரை பாய்ந்துக் கொண்டு இருக்கிறது. இனியும் யாரும் சன் பிக்சர்ஸ் மீது புகார் தரவேண்டாம் என்று அவசர அவசரமாக, யார் யாருக்கெல்லாம் பணம் நிலுவையில் இருந்ததோ  அனைவருக்கும் பணம் சுத்தமாக பட்டுவாட செய்யப்பட்டது.

ஆட்சி, அதிகாரம், அடாவடி, அத்துமீறல் போன்ற  போதை மனிதனை ஒரு நாள் சிறைக்குள் அனுப்பும் என்பதற்கு ஹன்சராஜ் சக்சேனா ஒரு உதாரணம். இந்தக் குறளி என்று தன் குகை திரும்பப் போகிறதோ.....தெரியவில்லை? 


அடுத்து.... ஷரத் குமார் ரெட்டி.
                   

  ஹன்சராஜ் போன்று அடாவடி பார்ட்டி அல்ல சரத்குமார் ரெட்டி. படு டீசண்ட் பார்ட்டி.  கலாநிதியின் நண்பரான சரத் சன் டிவி தொடங்கும் போது இவரது பங்கும் உண்டு. இவருக்கும் இவரது நண்பர் கலாநிதி மாறனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் இவர் சன் டிவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  கொஞ்சம் காலம் ஒதுங்கி இருந்த அவர், . கனிமொழியின் அழைப்பின் பேரில் கலைஞர் டிவியின் தலைமை  நிருவாகியானார்.  சரத் ரெட்டியின் சீரிய தலைமையால்  கலைஞர் டிவி தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே, சன் டிவிக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  

சன் டிவி சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு  குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப்பட்டு வந்ததுதான்.  கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள்.

இன்னிலையில் 214 கோடி பணம் கை மாறியதில் கலைஞர் டிவியும் பிரச்சைனையில் சிக்கிக்கொண்டது. கலைஞர் டிவிக்கு டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து பணம் பெறப்பட்டது தொடர்பாக கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோரிடம் சிபிஐ முன்னதாக விசாரணை நடத்தியிருந்தது. கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோர் அந்த டிவியில் முறையே 20,60 மற்றும் 20 சதவீதப் பங்குகளை வைத்துள்ளதுள்ளனர்.


 2ஜி அலைக்கற்றை உரிமங்களைப்பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகக் கூறினாலும், அந்த நிதியை டிபி ரியா லிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது. குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஒதுக்கித் தந்ததற்கு லஞ்ச மாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டி குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்படியாக சரத் மற்றும் சக்சேனா இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் அசாத்திய திறமைப் படைத்தவர்கள்.  டிவி தொழிலில் நிபுனத்துவம் பெற்றவர்கள். தலைமை சொல்லை தட்டாமல் செய்பவர்கள். இருவருக்கும் தாய் மொழி தெலுங்கு. இப்படி அதிசய ஒற்றுமை கொண்ட இருவரும் இன்று இருப்பது சிறையில். ஒருவர் புழல் மற்றொருவர் திகார். 
அட! இரண்டு சிறைக்கும் ஓர் ஓற்றுமை இருக்கிறது தெரியுமா...?  இரண்டும் மூன்றெழுத்து!


புதன், ஆகஸ்ட் 17, 2011

உங்கள் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள்.கிருத்துவத்தில் ஒரு பதம் உண்டு. 'பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெ‌ரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்று.... !

 நாம் தமிழர்களையும் இப்படித்தன் சொல்லவேண்டும். பல நூற்றாண்டாக தாம் செய்வது தவறு என்று கூட தெரியாமல், ஒரு மாபெரும் தவறை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.   அது, தமது பெயருக்கு முன்னால் வரும் தலை எழுத்தை அதாவது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதுவது.

பெயரை எழுதும் போது ஆங்கிலத்தில் இன்ஷியலை எழுதுவதுதனே முறை.  இதில் என்ன தவறு இருக்கு என்று நீங்கள் கேட்களாம்?.  உன்மைதான் ஆங்கிலத்தில் எழுதும் போது சரி. ஆனால் தமிழில் உங்கள் பெயரை எழுதும்போது, ஆங்கிலத்தில் எப்படி இன்ஷியலை எழுதுவீர்கள்?. தமிழில்தானே உங்கள் தலையெழுத்தை எழுத வேண்டும். இப்போது புரிகிறதா நாம் செய்யும் தவறு?.

உதாரணமாக...கதிரேசன் மகன் சன்முகன் என்கின்ற போது, சண்முகனின் தலையெழுத்து அதாவது இன்ஷியல் 'க' என்றுதான்  இருக்கவேண்டும். ஆனால் நாம்  எப்படி எழுதுகிறோம் என்றால்  K. சண்முகம்   என்றுதான் எழுதுகிறோம். இது ஒரு குறைபாடாக நமக்குத் தெரிவதில்லை.

மாறாக 'க. Shanmugam' என்று ஆங்கிலத்தில் பெயர் எழுதி தமிழில் இன்ஷியலை  எழுதினால் எப்படி ஒரு அபத்தமோ அப்படி ஒரு அபத்தம்தான் ஆங்கிலத்தில் நமது பெயரின் முதல் எழுத்தையும் எழுதுவது.

கடந்த 400 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலம் இந்தியாவிற்கு வந்தது.  வியாபரத்திற்காக வந்தவர்கள் நமது வெகுளித்தனத்தை கண்டு இங்கேயே தங்கி நாட்டையும் வளைத்து நம் கலாச்சாரத்தையும் கெடுத்துவிட்டார்கள்.  அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம் வரை பாய்ந்தது.

இதில் நமது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதி தவறுக்கு பிள்ளையார் சுஷி போடும் இடம் எது தெரியுமா..? அது பள்ளிக் கூடம்தான். பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் 'டீசி'யில் நமது பெயரை தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இன்ஷியல் போடுகிறார்கள்.  இந்த தவறை நமக்கு சொல்லித் தருவதோ ஆசிரியர்கள்தான்.  ஒரு வகுப்பில் இரண்டு கண்ணன் இருந்தால் ஒரு கண்ணனை T.கண்ணன் என்றோ அல்லது  R. கண்ணன் என்றோ அழைக்கிறார்கள்.

அவர்கள் நிர்வாக வசதிக்காக செய்யும் ஒரு செயல் நமது ஒரு தலைமுறையையே பாதிக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...? .

இன்னோரு  கொடுமையான விஷயமும் நடக்கும்.  அதாவது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதாமல், தமிழிலேயே எழுதுவார்கள். உதா... K.பத்மனாபன்  என்பதை  கே.பத்மனாபன் என்று எழுதுவார்கள். கேட்டால் நான் தமிழில்தானே எழுதியிருக்கிறேன் என்று வியாக்கியானம் வேறு!.  இதுவும் தவறான ஒன்று. திருத்திக் கொள்ளவேண்டிய ஒன்று.


இந்தத் தவறை சாதாரண படிப்பறிவு இல்லாதவன் என்று இல்லை, அனைத்துத் தரப்பு மக்களும் சர்வ சாதராணமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்கின்றனர்.  மெத்தப் படித்தவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று அனைவரும் இந்த தவறை செய்கின்றனர். 

சினிமா அழைப்பிதழ்கள் மற்றும் விளம்பரங்கள்,  விளம்பரச் சுவரொட்டிகள், கல்வி நிலைய அழைப்பிதழ்கள்,  திருமண அழைப்பிதழ்கள், அரசியல் விளம்பர பேனர்கள், பத்திரிகை விளம்பரங்கள் என்று இந்தத் தவறு,  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.   உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் உங்களது திருமண அழைப்பிதழை மீண்டும் ஒரு முறை பாருங்கள்,  அதில் நிறைய இடங்களில் ஆங்கிலத்தில்தான் இன்ஷியலை எழுதியிருப்பார்கள்.    
                                                    
ஆங்கிலத்தில் இன்ஷியல்  உள்ள கல்யாண பத்திரிகை      
இது அரசியல் விளம்பரம். இதுவும் அந்த ரகம்தான்.


சினிமாக்காரர்களின்  இரு மொழி மோகம்!

40களில் இருந்து தொடங்குகிறது சினிமா காரர்களின் இரு மொழிகளில் தங்களது பெயரை எழுதும் மோகம். அது ஒரு தவிற்க முடியாதா ஒரு விஷயமாகவே சினிமாத் துறையில் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது.  இரு மொழிகளில் தங்களது பெயர்களை வைத்துக் கொண்டவர்களின்  பட்டியல் வால் போன்று நீண்டுக் கொண்டே செல்கிறது.

M.K.தியாகராஜ பாகவதர் (MKT)
N.S. கிருஷ்னன்
T.A. மதுரம்
M.G.இராமச்சந்திரன் (MGR)
T.R.மகாலிங்கம்
A.V. மெய்யப்பச் செட்டியார் (AVM)
K.V. மகாதேவன்
S.S. ராஜேந்திரன்
M.R. ராதா
Y.A.K தேவர்
M.N. நம்பியார்
S.A. அசோகன்
V.K.ராமசாமி
M.N. ராஜம்
K.R. விஜயா
T.M. சொளந்தர்ராஜன்
T.R.பாப்பா
K.பாலச்சந்தர்
S.P. முத்துராமன்
K.பாக்கியராஜ்
M.S.விஸ்வனாதன்
T. ராஜேந்தர்
A.R. ரஹ்மான்
S.A. சந்திரசேகர்
K.S.ரவிக்குமார்
A.R. முருகதாஸ்
Y.G.மகேந்திரன்
S.J.சூர்யா
V.G.பன்னீர்தாஸ் (VGP)
H.வசந்தகுமார் (வசந்த் & கோ.,)
T.T. கிருஷ்னமாச்சாரி (TTK group)
T.R பாலு
K.N. நேரு
KKSSR. இராமச்சந்திரன்.
A.K.மூர்த்தி
எஸ். ராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)

      படிக்கும் உங்களுக்கு புரிய வைப்பதற்காகத்தான்  இரு மொழிகளில் பெயர் வைத்தவர்களின் பெயர் பட்டியல். இன்னும் இந்த கணக்கில் வராதவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இதைப் பார்க்கும் போதே  விஷயத்தின் விபரீதம் புரிந்திருக்கும்.

அதுவும் சினிமாக்காரர்கள் செய்யும் நல்லதும் கெட்டதும் மிக விரைவாக தமிழர்களிடம்  பரவிவிடுவதுதான் கொடுமையிலும் கொடுமை! இரு மொழிகளில் பெயரை எழுதுவது தவறில்லை என்ற என்னம் தமிழர்களிடையே வருவதற்கு சினிமாகாரர்களே முக்கிய  காரணம். 

தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களைப் பாருங்கள். அதில் வரும் தொழிற்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் எல்லாம் இரு மொழிகளில்தான் எழுதப்பட்டு இருக்கும்.


தமிழிலேயே இன்ஷியலை போட்ட செட்டியார்கள் 

முன்பு வியாபரத் துறையில் கோலோச்சிக் கொண்டு இருந்த தமிழ் செட்டியார்கள் தங்களது தந்தையார் பெயரினையும் தாத்தன் முப்பாட்டன் பெயரினையும் தங்களது பெயருக்கு முன்னால அழகு தமிழில்  வைத்து இருந்தனர்.  அதனாலயே அவர்கள் ஆனா ரூனா செட்டியார், வேனா செட்டியார், லேனா செட்டியார், தானா முனா செட்டியார் என்று அவர்களது முன்னோர் இன்ஷியலோடு அழைத்தார்கள். இன்றும் எங்கேயாவது அத்தகைய பெயர்களை வெகு அறிதாகத்தான் காணமுடியும். அதில் ஒரு பெயர் 'லேனா. தமிழ்வாணன்'.

ஆனால் காலம் செல்லச் செல்ல செட்டியார்கள் கூட தங்களது மரபுகளையும் காலச்சாரத்தையும் மற்றிக் கொண்டு வழக்கமான தமிழர்களாக மாறிவிட்டனர் என்பதுதான்  வேதனையான ஒன்று.

'தானாக எதுவும் மாறாது'

தமிழர் தந்தை ஆதித்தனார் ஒரு முறை கூறும் போது " உலகை  நான் நான்கு முறை சுற்றி விட்டேன். தமிழர்களிடம்  மட்டும்தான்  T.K.மூர்த்தி  P.R கண்ணன் என்று இரு மொழிகளில் தமது பெயரை எழுதும் மனிதர்களை  காணமுடியும்" என்றார்.

தாம் செய்வது தவறு என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு இந்த ஆங்கில தாகம் நமக்கு இருந்திருக்கிறது. இருந்துவருகிறது. 

இதை நாம் மக்கள் மனறத்தில் கொண்டு செல்ல வேண்டும்.  விஷயத்தின் விபரீதத்தைப் புரிய வைக்கவேண்டும். இதை ஒரு இயக்கமாக கொண்டு சென்று நல்ல ஒரு மாறுதலை காணவேண்டும்.  இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லை. 


நாம் ஒன்று சேருவோம்,  நமக்குத் தெரிந்தவர்கள், அருகில் உள்ள பள்ளிகள், ஊர் மக்கள்,  முக்கியஸ்த்தர்கள் என்று எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். சிறு துளி பெரும் வெள்ளமாய் மாறி இந்தத் தவறை தமிழனிடமிருந்து  துடைத்தெறிவோம்.

முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களை பயன்படுத்தி இனி வரும் காலங்களிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி,  தமிழர்கள் தங்களது பெயர்களை  இரு மொழிகளில் எழுதுவதை தவிர்த்திடுவோம்.  அதை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.


கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...