சனி, டிசம்பர் 26, 2020

தொ.பரமசிவன் ஐயா அவர்களுக்கு பிரியா விடை !



தொ.பரமசிவன், நம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத் தகுந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு,சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டிய அவசியத்தை முன் வைத்தவர். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எளிய மொழியில் புரியவைத்தவர்.

அவரது '#அறியப்படாததமிழகம்' மற்றும் #இந்துதேசியம்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் தற்போதைய கள நிலவரத்திற்கு ஏற்ற முக்கியமான நூலாக பார்க்கிறேன்.
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணத்தை, அறியப்படாத தமிழகம் மூலம் சுட்டிக் காட்டினார் என்றால்.... இந்து மதம் வாயிலாக தமிழர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்க அத்துமீறல்களுக்கு இந்து தேசியம் என்ற நூலின் வாயிலாக எதிர்க்குரல் எழுப்பினார்.
அவரது நான் இந்துவல்ல . நீங்கள்...? என்ற புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும். (இந்து தேசியம் என்ற புத்தகத்தில் இக் கட்டுரை இருக்கிறது)

இந்து மாயையில் பிதற்றிக் கொண்டு இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவடைவார்கள்.
அய்யா தொ.பரமசிவன் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளும் தமிழர்களுக்கானது. அவர்களது சமூக விடுதலைக்கானது. அவரது திடீர் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தலையாயக்கடமை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


சனி, டிசம்பர் 12, 2020

பாரதி - கவிஞர்களின் நுழைவு வாயில்

                

பாரதியின் பிறந்த நாள் பதிவு !  (11.12.2020)
என் பதின் பருவ தொடக்கத்தில் பாரதியை வாசிக்கத் தொடங்கினேன். முடிவுறாத கிளர்ச்சியின் வெளிப்பாடாய், திரண்டிறிந்த கவிதைகள் எனக்குள் பால் கட்டிக் கொண்டு நின்றது.காலகிராமத்தில் விடலை பருவத்தில் உதித்தெழும் காதலில் சிக்குண்டவனுக்கு... பாரதியே பிடிமானம். துளிர்க்கும் காதலுக்கு கவிதையே ஆதாரம், கவிதைக்கு பாரதி ஆதாரம் !

யாருக்கு யார் ஆதாரம் ? 
தொன்னையா ...நெய்யா ?
பாரதியா....காதலா...?




அந்த ஏகாந்த பெரு வெளியில் பாரதி...

"நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!... (நின்)
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் கண்ணம்மா!...
பொன்னயே நிகர்த்த மேனி,
நின்னையே நிகர்த்த சாயல்!..
பின்னையே, நித்ய கன்னியே கண்ணம்மா!.....
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா " 

என்று நீண்ட நெடிய அரவம் போன்று பாரதி என்னுள் நுழைந்தான்.

அதற்கும் அவளே காரணம். பேச்சுப் போட்டியில் நானும், பாட்டுப் போட்டியில் அவளும் பரிசில் வேண்டி நின்றோம். காற்றில் களைந்த ஒற்றை முடி அழகில் மனம் கண்ணமா... கண்ணமா என்று அரற்றியது.

தகிக்கும் ஓர் கோடையில் அவளிடத்தில் என் காதலை சொல்ல...எதிர் காற்றில் சைக்கிள் மிதிக்க...மிதிக்க...பாதையும் பாரதியின் கவிதை போன்று நீண்டுக் கிடந்தது. ஏதோ ஒரு வேகத்தில் சைக்கிளை கிளப்பியவனுக்கு....
நிதர்சனமும்... வயதும் புரிபட.... பாதை முடிவுற்றது.
எழுதியிருந்த காதல் வரிகள் கை நழுவ... 
நீரில்லா காவிரியில் கடிதம் காற்றில் மிதந்து கரை ஒதுங்கியது.

திருக்கொடிக்கா காவிரி பாலம் தாண்டி....திருவாவடுதுறை ஆதீனம் ஆர்ச்சு தொட்டு வீடு வரும் வரையில் பாரதி என் சைக்கிள் கேரியரில் அமர்ந்து....
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? 
என்று விசும்பிக் கொண்டே வந்தார்.

- மகேஷ் நந்தா.

இன்று (11.12.2020) பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு முக நூலில் நான் எழுதிய பதிவு. 

#பாரதி

#பாரதியார் 
See less

திங்கள், டிசம்பர் 07, 2020

திருவாலங்காடு வெடி









கம்பி கட்டு
கம்பி கட்டு வெடி


எங்கள் பகுதியில் 'கம்பி கட்டு' என்றொரு வெடி இருக்கிறது. கோயில் திருவிழா, திருமணம், சவ ஊர்வலம், அரசியல் நிகழ்வுகள் என்று இந்த வெடியைப் பயன்படுத்துவார்கள். பார்க்க நாட்டு வெடிபோல் இருக்கும். (இல்லை, அதே தானா...தெரியவில்லை ?) அதன் வெடிசத்தமே அதன் பிரமாண்டத்தை காட்டிவிடும். அப்படி ஒரு சத்தம்!!மாயவரம் கும்பகோணம் பக்கத்தில் இந்த கம்பிக்கட்டு வெடி ஏக பிரசித்தம்! இந்த கம்பி கட்டு வெடியில், சின்ன சைஸ் வெடியும் இருக்கிறது.
தீபாவளி நேரத்தில் யார் வீட்டில் அதிகம் வெடி வெடித்திருக்கிறது என்ற போட்டி உண்டு. அதனாலேயே பால்யத்தில் வீட்டு வாசலில் வெடி வெடித்த பேப்பர் கிடக்க வேண்டும் என்பதால் அந்த சின்ன சைஸ் கம்பி கட்டு வெடியை வாங்கி நிறைய பேப்பர் சுத்தி வெடிப்போம். (பார்க்க படம்) ஒரு வெடி வெடித்தால் போதும், வீட்டு வாசலில் நூறு வெடி வெடித்தது போல் ஆகிவிடும்.
அதே நேரத்தில் இந்த கம்பி கட்டு வெடி ஆபத்தானதும் கூட.... நிறைய பேரை பதம் பார்த்திருக்கிறது. அதில் நானும் ஒருவன். தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.
😃
பத்தாம் வகுப்பு படிக்கும் போது....
இப்படி ஒரு நசநசப்பான தீபாவளி மழை நாளில்... வாங்கி வைத்திருந்த வெடியெல்லாம் நனைந்திருந்தது. அதில் கம்பி கட்டு வெடியும் உண்டு. வீட்டில் அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த பரீட்சை பேப்பரை எல்லாம் கம்பிகட்டு வெடியில் சுத்தி ஒரு பெரிய சைஸ் வெடியை தயார் செய்திருந்தேன்.
நனைந்திருந்த வெடிகளை உலர வைக்க.... வெந்நீர் அடுப்பு ஓரத்தில் வைக்கப் போக....அந்த நேரத்தில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. ஒரு நொடிதான் 'டமார்' என்ற வெடி சத்தம். எங்கே என்று சுதாரிப்பதற்குள் மொத்த பானையும் சிதறி என் இரண்டு கால்களிலும் பொத்தல் போட்டு விட்டது. உடம்பு முழுவதும் சாம்பல். பானை ஓடுகள் துப்பாக்கி குண்டுகளாய் எனது இரண்டு கால்களிலும் துளைத்து தஞ்சம் அடைந்து விட்டது. (அதனாலேயே நான் கரிகாலனாக வடுக்களோடு இன்றும் இருக்கிறேன்) ஆங்காங்கே பொத்தல் போட்டு ரத்தம் வழிய ஆரம்பித்து விட்டது. நல்ல வேளை.... அது விடியற்காலை என்பதால், வேறு யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. "என்னாச்சு" என்று பதறி ஓடி வந்த அம்மாவை வெளியே தள்ளிவிட்டு, நானும் வெளியே ஓடி வந்துவிட்டேன்.
பிறகென்ன....ஈக்களிடமிருந்து தப்பிக்க இரண்டு மாதம் கொசு வளைக்குள்தான் ஜாகை. டாக்டர் தினமும் வீட்டிற்கே வந்து, டிஞ்சர் வைத்த dressing forceps ஆல் காயத்திற்குள் சாவியை விட்டு திருகுவதுபோல் திரும்புவார். அதிலேயே பாதி உசுர் போய்விடும். இருந்தாலும் வீரனுக்கு இதெல்லாம் சகஜம் தானே! வலி வலியது.
******
அதே போல் எங்கள் பகுதியில் 'ஓலை வெடி' என்று ஒரு வெடி இருக்கிறது. இது குழந்தை வெடி ! பனை ஓலையில் வெடி மருந்து திரி வைத்து செய்வார்கள். சிறு குழந்தைகள் கூட இந்த வெடியை கையில் வைத்து வெடிக்கலாம். அந்தளவிற்கு மிக இலகுவான வெடி. கம்பி கட்டு, ஓலை வெடி போன்றவை வேறு பகுதிகளில் இருக்கிறதா என்று தெரியவில்லை?

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...