ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 22, 2015

சன் டிவியை கை மாற்றத் துடிக்கும் பாஜக அரசு?

               ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பார்கள், ஊடக குரல்வளையை நெரிப்பது  என்றால் ஆளும் கட்சிகளுக்கு எப்போதும் அல்வா சாப்பிடுவது போல்தான். அதுவும் தனக்கு எதிரான ஊடகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதை ஒழித்துக் கட்டிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். இதில் காங்கிரஸும் ஒன்றுதான் பாரதிய ஜனதாவும் ஒன்றுதான். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பில் ஏறியதுமே சன் டிவி மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நமது எதிர்பார்ப்பின்படியே சன் குழுமத்தின் மீது தனது கோர பார்வையை திருப்பியுள்ளது பாஜக அரசு.

சன் டிவியின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடகங்கள் மீதான ஆளும் பாஜக அரசின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. சன் தொலைகாட்சிக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் கொடுக்கும் விஷயத்தில் மத்திய உள் துறையும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறையும் மறுத்துள்ளது. இது ஊடகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி வருகைக்கு முன்னர், சன் டிவி வருகைக்கு பின்னர்  (சமு சபி) என்று தமிழக தொலைகாட்சி வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். சன் டிவியின் வருகைக்கும் முன்னர், அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் வைத்ததுதான் சட்டம். மத்திய அரசின் விருப்பத்திற்கு இனங்க செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்தனர். ஆளும் கட்சியின் குரலாகவே தூர்தர்ஷன் செயல்படும். ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் என்று நிகழ்ச்சி தயாரித்து மக்களை பதம் பார்த்துவந்த தூர்தர்ஷனின் சக்தி (?) எப்படிப்பட்டது என்று இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஞாயிறுகளின் மதியத்தில் ராஜேஷ் கண்ணாவும் டிம்பிள் கபாடியாவும் 'கியா பியா' என்று ஹிந்தியில் ஆடி பாடி நடித்ததை நம் மக்கள் ஒன்றும் புரியாமல் கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தனர். சினிமா பாடல்கள் பார்க்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை 'சித்திரகார்' வரை காத்திருக்க வேண்டும்.

அதுவும் நாடகம் என்று ஒன்று போடுவார்கள், பார்க்கவேண்டுமே....?!. காத்தாடி ராமமூர்த்தி வகையறா டிராமாவை மொத்த குத்தகை எடுத்ததுபோல், சென்னை தூர்தர்ஷனில் வீட்டு தயாரிப்பு டிராமாக்களே ஆக்கிரமித்து இருக்கும். செட்டுக்குள்ளேயே மொத்த  நாடகத்தையும்  நடத்தி காட்டிவிடுவார்கள். வந்த விமர்சனத்தை படிப்பதற்கென்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை திட்டி கழுவி கழுவி ஊத்தியதை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பாராட்டி எழுதிய கடிதத்தை மட்டுமே இரெண்டு பேர் மெனக்கெட்டு படிப்பார்கள். இந்தக் கன்றாவியெல்லாம் இந்த தலைமுறை பார்க்காமல் போனது அவர்களது அதிஷ்டம். நமது துரதிஷ்டம்.

சன் டிவியின் வருகைக்கு பின்னர்தான் இந்திய தொலைகாட்சி வரலாற்றில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனலாம். கலாநிதி மாறன் தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் 'தமிழ் மாலை' என்ற வீடியோ பத்திரிகையை நடத்திவந்தார். வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து அதை கேஸட்டில் பதிவு செய்து ஒரு வீடியோ மேகஸினாக நடத்திவந்தார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள்  மாற்றப்பட்டு வெளிவரும். இந்த வீடியோ கேசட்டுகளே வார இதழ்கள் போல் விற்கப்படும். முந்தின வார காஸட்டை பெற்றுக் கொண்டு புதிய காஸட்டை தருவார்கள். அப்போதெல்லாம் தூர்தர்ஷன் டிவி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தது. அதனாலயே கலாநிதி மாறனின்  வீடியோ மேகஸினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரம் தோறும் புதிய புதிய நிகழ்ச்சிகளையும் உலக நிகழ்ச்சிகளையும் தயாரித்து வெளியீட்டு வந்தார். அதுவே பின்னர் தனியாக தொலைக் காட்சி தொடங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்.

எப்படி செட்டுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை பாரதிராஜா அவுட்டோருக்கு கொண்டுவந்தாரோ.....அப்படி ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த டிவி நாடகங்களை வெளியுலத்திற்கு கொண்டுவந்தது சன் டிவிதான். இதன் மூலம் 'சின்னத்திரை' என்ற உலகமே தோன்றியது. இதனால் நிறைய நடிகர் நடிகைகள் வாழ்வு பெற்றனர். பொருளாதார ரீதியாக சின்னத்திரை நடிகர்களை உயத்தியது சன் டிவி. மக்களின் பொழுது போக்கு ரசனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

()()()

பொதுவாக இந்திய அளவில் ஒரு நிறுவனம் பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் அது வட இந்தியாவை சேர்ந்த நிறுவனமாகத்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், பஜாஜ் என்று வட நாட்டு கம்பெனிகளின் பெயரை சொல்லித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து ஒரு நிறுவனம் இந்திய அளவில் பெயர் எடுப்பதிலோ....அல்லது தென் இந்தியாவை  தனது ஊடக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையோ வட நாட்டு அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் விடுவார்களா என்ன....?. அந்த நெருக்கடிதான் இப்போது மத்திய அரசு மூலம் சன் குழுமத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏதோ.... அரசியல் பின் புலம் இருந்ததால் சன் டிவி இத்தனை நாள் தப்பித்து வந்திருக்கிறது. அரசியல் பின்புலம் மட்டும் இல்லையென்றால் இன்னேரம் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.

சன் டிவி அதிபர்கள் மீது வழக்குகள் இருக்கிறது என்பதற்காக அந்த குழுமத்தின் டிவி சேனல்களுக்கு வழங்கப்பட்ட செக்கியூரிட்டி கிளியரன்சை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முயற்சிப்பது அபத்தமான செயலாகும். தனிப்பட்டவர் மீது இருக்கும் வழக்குகளை அவர் சார்ந்த நிறுவனத்தின் மீது திணிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை?. சன் டிவியை கை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு தரப்பில் பல் வேறு நெருக்கடிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. பாஜக அரசுக்கு சகலவிதத்திலும் படியளக்கும் இந்தியாவின் ஆகச்சிறந்த மிகப் பெரிய நிறுவனம் சன் டிவியை விலை பேசுவதாக தகவல் கசிகிறது. .

அரசின் மற்றுமொரு நெருக்கடியாக சன் கூட்டுக் குழுமத்தின் 45 RED FM வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி புதுப்பிப்பதற்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது எப்எம் ரேடியோ ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் சேர்ந்துள்ளது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கைக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் சன் குழுமத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் எப்எம் இரண்டும் சன் குழுமத்தின் அங்கம் என்றாலும் அனுமதி மறுப்பு விஷயத்தை பொறுத்தவரை மத்திய உள்துறை தனித்தனியாகவே மேற்கொண்டுள்ளது.  இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள்  வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

சன் தொலைகாட்சி மற்றும் எப்எம் ரேடியோக்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு மத்திய அரசு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது.

()()()

தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் சன் டிவி மட்டுமே முதன்மையான தொலைக்காட்சியாக இன்றும் திகழ்கிறது.  கிராமத்தில் கேபிள் டிவி கனெக்சன் கொடுப்பதை கூட,  மக்கள் சன் டிவி கனெக்சன் குடுங்கள் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சன் டிவியின் தாக்கம் கடை கோடி கிராமம் வரை பரவியிருக்கிறது. கிராமத்து வெள்ளாந்தி மக்களுக்கு டிவின்னா அது சன் டிவிதான்!. கிராமம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சன் டிவி ஒளிபரப்பாகிவருகிறது.

சன் டிவியை புறக்கணித்துவிட்டு எந்த ஒரு பொருளும் தமிழகத்தில் சந்தைப்படுத்த முடியாது என்பது விளம்பர உலகம் கண்ட  உண்மை. ஒரு விளம்பர பட்ஜெட்டில் முக்கால்வாசி பட்ஜெட்டையும் சன் டிவி இழுத்துக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் அதன் உலகம் தழுவிய வெற்றியே அபரிமிதமான கோடிகளை கரன்ஸியாக கொட்டச் செய்கிறது. இதுவே பிரச்சனைகளையும் இழுத்து வருகிறது. சன் டிவியின் ஆதிக்கத்தாலேயே வட இந்திய தொலைக்காட்சி ஜாம்பவான்களால் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைய முடிவதில்லை.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு  திராவிட மொழிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது சன் குழுமம். 25 வருடங்களுக்கு மேலாக தென் இந்தியாவில் 33 சேனல்களுடன் கோலோச்சி வரும் சன் டிவி, இந்தியாவின் முதல் தனியார் தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யும்பட்சத்தில் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.   இதனால் ஜெயலலிதா மீது பாஜக காட்டி வரும் நெருக்கம், உள்துறை மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்றச் செய்யலாம் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. அதன் விளைவே சன் டிவியை கை மாற்றத் துடிக்கிறது பாஜக அரசு.  சன் டிவி நிறுவனர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அவர்கள் நடத்தும் சேனல்களால்  நாட்டுக்கு எந்த வகையில் ஆபத்து இருக்கிறது என்பதை ஆளும் பாஜக அரசு விளக்கத் தவறிவிட்டது.
 
அரசியல் பின்புலத்திலிருந்து சன் டிவி தோன்றினாலும், அரசியல் மாட்சரியங்களை கடந்து தமிழகத்தின் பொதுவான டிவி என்ற பெயரை அது என்றோ பெற்றுவிட்டது. மக்கள் மன்றத்தில் சன் டிவிதான் தமிழகத்தின் டிவி என்பதையும் அது நிலை நிறுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்ததும்  இரவு ஏழரை மணிக்கு சன் டிவியில் தவறாமல் செய்தி பார்க்கும் குடும்பத் தலைவர்களே அதிகம் என்பது நிதர்சனமான ஒன்று. உண்மை இப்படி இருக்க... சன் குழுமத்தை முடக்குவது என்ற முடிவு பாஜக அரசுக்கு பெரும் பின்னடவைத்தான் ஏற்படுத்தும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் சன் டிவி மீதான அடக்குமுறையை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆளூம் பாஜக அரசு உணர்ந்துக் கொள்ளவேண்டும். இத்தகைய அதிகாரதுஷ்பிரயோகங்கள் ஆளும் கட்சிக்கு என்றும் ஆபத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனி!.
தோழன் மபா.
சென்னை.

ஞாயிறு, நவம்பர் 09, 2014

காஞ்சிபுரமும் மூத்திரச்சந்தும்?!.



முந்தைய பதிவை படிக்காதவர்களுக்கு..... 
             1997 மற்றும் 98ம் ஆண்டு வாக்கில், தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் தீபாவளி மலருக்கு ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி என்று அறிவித்து....பெரும் கல்லா கட்டிக்கொண்டு இருந்தனர். குலுக்கள் முறையில் தங்கம், வெள்ளி, மிக்சி, கிரைண்டர், பட்டுப்புடவைகள் என்று வாரி வழங்கி கொண்டு இருந்தது. அப்போது தினபூமிக்காக 300 பட்டுப்புடவை தரச் சம்மதித்து, தராமல் தலைமறைவாக இருந்த கடை ஓனரை கண்டுபிடித்த போது, அவர் ஒரு ரவுடிகளின் பிடியில் சிக்கி இருந்தார். அவரை அந்த சிக்கலில் இருந்து  காப்பாற்றினேன். அவர் எனக்கு பட்டுப்புடவைத் தராமல் மீண்டும் தலைமறைவாக, அவரை எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் இந்தப் பதிவு.

முந்தைய பதிவை விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும். (தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?! ) 

                   வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியிருந்தது. பட்டுப்புடவை கடை ஓனர் சுரேஷ் மீண்டும் எங்கோ அப்ஸ்காண்டாகிவிட்டார். வீடும் கடையும் பூட்டி இருந்ததால், பிரச்சனை மீண்டும் என்னை புடனியில் தாக்கியது. மறுபடியும் எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. டிவியில் அறிவித்தப்படி புடவை தரவில்லை என்றால், வாசகர்கள் நம் மீது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு போகக்கூடும். அதனால் பத்திரிகைக்கு  பெரும் பிரச்சனைகள் உருவாகலாம் என்று எனக்கு பலமான நெருக்கடி அலுவலகத்தில் தரப்பட்டது. மேனேஜர் ஒரு படி போய், என்னை விரோதியாக பார்க்க ஆரம்பித்திருந்தார். தினமும் எனக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டு இருந்தது. என்னைப் போட்டுப் பார்க்க அவர் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருந்தது. எங்கும் தீபாவளி களைகட்டத் தொடங்கி இருந்தது.

அலைந்து திரிந்து ஒரு வழியாக கடை மேனேஜர் ராமச்சந்திரன் வீட்டை கண்டுப் பிடித்துவிட்டேன்.  அவரது வீடும் அதே வடபழனி குமரன் காலனியில், 100 அடி ரோட்டை ஒட்டி இருந்த சந்தில் இருந்தது.  காலையில் சென்று அவரது வீட்டின் கதவை தட்டினேன். அவரே திறந்தார். என்னைப் பார்த்ததும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. "ஸார், ஓனர் ஊர்ல இல்லை, சூரத் வரைக்கும் போயிருக்காரு. நீங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சி கடைக்கு வாங்க, கடையை நாளைக்கு திறந்துவிடுவோம்" என்றார்.

எனக்கு தலை சுற்றியது!. "என்ன சார், இப்படி பண்றீங்க, நான் பிரச்சனையில் மாட்டி இருக்கேன், நீங்க என்னாடான்னா, சர்வசாதாரணமாக இரண்டு நாள் கழித்து வாங்க நாலு நாளு கழிச்சு வாங்கன்னு கூலா சொல்றீங்க?" என்றேன் கோபத்தில்.

"நான் என்ன சார் பண்ணட்டும், அவரு இங்க வர்ரதேயில்லை, வந்தாதானே சொல்ல முடியும். தீபாவளி அதுவுமா கடையை மூடி வச்சிருக்கோமே, உங்களுக்கு அது தெரியலையா?" என்றார் அவரும் விடாப்பிடியாக.

இனியும் வள வளன்னு பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது புரிந்தது. நேரிடையாக விஷயத்திற்கு வந்தேன். "சார், நீங்க சொல்லியபடி 300 பட்டுபுடவை கொடுக்கவில்லை என்றால், பிரச்சனையை நீங்கதான் சந்திக்கனும். பத்திரிகையிடம் வச்சிக்கிட்டிங்கன்னா பிரச்சனை உங்களுக்குதான். தேவையில்லாம பிரச்சனையை இழுத்துவிட்டுக்காதிங்க. இல்லெனா போலீஸ்ல புகார் கொடுக்கிறாப்பல ஆயிடும். சாதாரனமா நினைக்காதீங்க. உங்க ஓனரை எவ்வளவு பெரிய இக்கட்டுலேருந்து காப்பாத்திருக்கேன், கடைசில என்ன இக்கட்டுல மாட்டிவிடுவீங்க போலயிருக்கு" என்று சத்தம்போட்டேன்.

"வாங்க ஓனருட்ட பேசலாம், அவருட்ட போன போடுங்க, நான் பேசுறேன்" என்றேன். ஓனர் நம்பர் இல்லென்னு முதலில் மறுத்தவர், பிறகு கொடுத்த நெருக்கடிக்கு பேச ஓப்புக்கொண்டார். எஸ்டிடி பூத்திற்கு போனோம். அப்பெல்லாம் மொபையில் போன் ஏது....?!.

"நீங்க வெளியில இருங்க" என்று சொல்லியவர் பூத்திற்குள் புகுந்துக் கொண்டு கதவை சத்திக்கொண்டார். நம்ப நல்ல நேரம் கதவை சரியாக மூட முடியவில்லை. கதவு கொஞ்சம் திறந்து இருக்க.... என்னதான் பேசுகிறார் என்று சைடில் நின்று (ஒட்டு) கேட்டுக்கொண்டு இருந்தேன். மேனேஜர் பேசிக்கொண்டு இருந்தார். நான் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்வதை கூறிக் கொண்டு இருந்தார். "அண்ணே காஞ்சிபுரத்தில.....அந்த மூத்திர சந்து பக்கத்திலதான இருக்கிங்க?" என்ற வார்த்தை மட்டும் எனக்கு பளிச்சென்று கேட்டது. 'ஆகா...துப்பு கிடைத்துவிட்டது!, இனியும் இந்த மேனஜரை தப்ப விடக்கூடாது' என்று நினைத்துக் கொண்டேன்.

சிலபேர் சாப்பிட்டபின் எதுவும் சாப்பிடாதமாதிரி, வாயை வைத்துக் கொண்டு வருவார்களே பார்த்து இருக்கிறீர்களா....? அப்படிதான் வந்தார் அந்த மேனஜரும். "சார், ஓனருட்ட பேசிட்டேன், அவரு சூரத்தில இருக்காரு, வந்ததும் புடவையை கொடுத்திடுறேன்" என்றார்.

 எப்படி இப்படி முழு பூசணிக்காயை இந்த ஆளு சோற்றில் மறைக்கிறானே என்று எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறியது.  "ஹலோ...உங்க ஓனர் காஞ்சிபுரத்திலதான இருக்காரு, எனக்கு தெரியும். எதுக்கு இப்படி இல்லெனு பொய் சொல்றீங்க" என்று கத்த ஆரம்பித்தேன். "வாங்க காஞ்சிபுரம் போவோம்" என்று கூறிக்கொண்டு, அவரது பதிலையும் எதிர்ப்பார்க்கமல், அருகில் போன ஆட்டோவை கூப்பிட்டேன். அவரை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு பூந்தமல்லி வந்து காஞ்சிபுரம் பஸ் பிடித்தோம்.  ஓனர் காஞ்சிபுரத்தில்தான் இருக்காரு என்று எனக்கு தெரிந்துவிட்டது. இனியும் தாமதித்தால் நிலமை மோசமாகிவிடும், காஞ்சிபுரம் போனால், பட்டுபுடவைக்கு வழி பிறக்கும் என்று எனக்குப் பட்டது.

ஓவர் டூ காஞ்சி......!.
()()()()()()()



        காஞ்சிபுரத்தில் நாங்கள் இறங்கிய போது, மதியம் ஆகிவிட்டது. ஆட்டோவில் பயணித்து மார்க்கெட் பக்கம் வந்தோம். அங்கேதான் கடை ஓனர் வீடு இருந்தது. இதற்கிடையில் பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே வந்தார் மேனேஜர். எனக்கு பசியில்லை என்று சொல்லிப் பார்த்தும் விடவில்லை. பின்பு மார்க்கெட் பக்கத்தில் இருந்த ஹோட்டலைக் காட்டி இங்கே சாப்பிடலாம் என்றார். நுழைந்து அமர்ந்ததும், அவரே இரண்டு மீல்ஸ் ஆர்டர் செய்தார். பாதி சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, இலையை மூடிவிட்டு, "சார் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள், இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து அவசர அவசரமாக சென்றுவிட்டார்,

எதுக்கு இந்த ஆள் இப்படி அவசரமாக ஓடுறான்? என்று நினைத்துக் கொண்டே நானும் சாப்பாட்டை பாதியில் மூடிவிட்டு, ஹோட்டலுக்கு வெளியே வந்தேன்,  ஆனால் ஆளை காணவில்லை... சாலை இரு மருங்கிலும் ஆளை காணவில்லை 'எங்கடா போனான் இந்த ஆளு?' என்று நினைத்துகொண்டு.....சுற்றும் முற்றும் பார்த்தேன்.  அப்போதுதான் அந்த க்ளு கிடைத்தது!.  ஹோட்டலுக்கு பக்கத்தில் நடந்தவன், அதை ஒட்டி காம்பவுண்டுக்குப் பக்கத்தில் யாரும் பயன்படுத்தாத மூத்திர சந்து ஒன்று இருந்தது. அதைப் பார்த்த போது.....போனில் மேனேஜர் பேசிய போது குறிப்பிட்ட அதே மூத்திரச் சந்து இதுதான் என்று எனக்குள் பொறி தட்டியது!.

யாரும் பயன்படுத்தாத சந்து என்பதால் அது பொது கழிப்பிடமாக மாறிவிட்டு இருந்தது. சந்தில் புல் பூண்டு முளைத்து ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. முகப்பில் ஒரு சிதிலமடைந்த ஓட்டு வீடு வேற பெரும் திகிலை கிளப்பியது. சந்தேகத்தோடு அந்தச் சந்தில் நடக்க ஆரம்பித்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் அது நிகழ்ந்திருக்காது. நானும் கொஞ்சம் தூரம் நடந்து சென்றுவிட்டு, திரும்பி ஹோட்டல் வாசலில் மேனேஜருக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பேன். சந்தில் இரண்டு தப்படி நடந்து இருப்பேனே இல்லையோ.....அந்த சிதிலமடைந்த வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி, ஒரு ஓட்டு வீடு வராந்தாவில் அமர்ந்திருந்த உருவம் தலையை வெளியே நீட்டி வாயிலில் இருந்த தண்ணிரை கொப்பளித்து வெளியே துப்பியது. அது வேறு யாரும் இல்லை, நான் யாரை தேடி வந்தேனே, யார் சூரத் போயிருக்கிறார் என்று கூறினார்களோ அவரேதான்.....ஓனர் சுரேஷேதான் அங்கு அமர்ந்திருந்தார். கூட நாளைந்து நண்பர்களும் இருந்தார்கள். கடன்காரர்களுக்குப் பயந்து உள்ளூரிலேயே ஒளிந்துக் கொண்டு இருந்தார். ஜன நடமாட்டம் உள்ளப் பகுதியில் அப்படி ஒரு சந்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்?.

நான் எதிரில் போய் நிற்கவும், ஒரு கணம் அவர் ஆடிப் போய்விட்டார். என்னை அவர் எதிர்பார்க்கவில்லை.  இந்த நேரத்தில் இந்த இடத்தில் நம்மை பார்த்தால் யாருக்குதான் அதிர்ச்சி இருக்காது?. அதிர்ச்சி மேலிட..... "வா.....மகேஸூ" என்று அழைத்தவர், "எப்படி இந்த இடத்தை கண்டு பிடிச்ச....? இந்தப் பக்கம் யாரும் வரமாட்டாங்களே....?" என்றார் முகம் சிவக்க. நான் கண்டுபிடிச்ச விபரத்தை சொன்னதும், எதிரில் இஞ்சி திண்ண குரங்காய் உட்கார்ந்து இருந்த மேனேஜரை கடிந்துக் கொண்டார்.

"சார் உங்கள சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கச் சொன்னேன், எதுக்கு இப்படி இடத்த தேடி வந்தீங்க?. என்று என் மேல் எகிற அராம்பித்தார் மேனேஜர். "அட, சும்மா இருய்யா.....அவருதான் வந்துட்டாரே அப்புரம் எதுக்கு கத்துற?" என்று கூறிய ஓனர் புல் மப்பில் இருந்தார். "சார், என்ன சார் இப்படி தவிக்க விட்டுடீங்க? நான் பெரிய இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க இப்ப பட்டுப் புடவை குடுக்கலனா, பிரச்சனைதான் சார் அதிகமாகும். அதுக்கப்புறம் என்னை எதுவும் கேட்காதீங்க" என்று சத்தம் போட்டேன். ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினேன்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஓனர், "மகேஸூ கவலைப்படாத நீ மெட்றாஸூக்கு போறப்ப பட்டுப்புடவையோடத்தான் பேவே....போதுமா?. நீ என்னை காப்பாத்திருக்க......அதுவுமில்லாமல் இவ்வளவு தூரம் என்னை தேடி வேற வந்திட்ட......உனக்கு 200 பட்டுப்புடவை ஏற்பாடு பண்ணித்தரேன். மீதி இன்னும் இரண்டு நாளைக்குள்ள உனக்கு மெட்றாஸிலேயே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடுறேன் " என்றவர் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரது நண்பர் மாரிமுத்து என்பவரிடம் "மாரி....நீ சொசைட்டி குமாரை போய்ப் பார்த்து பட்டுப்புடவை வாங்கியா....இந்தா" என்று தனது பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டு கட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"மகேஸூ..... பட்டுப்புடவை வர ஈவினிங் ஆயிடும், அதுவரைக்கும் வா ஒரு பெக் போடு" என்றார். நான் யோசிப்பதைப் பார்த்து, "என்ன யோசிக்கிற......தண்ணி வாங்கிக் கொடுத்து உன்னை கவிழ்த்திடுவேன்னு நினைக்கிறியா...?. நீ தண்ணி அடிச்சாதான் உனக்கு சரக்கு (பட்டுப்புடவை) கொடுப்பேன். இல்லென உனக்கு பட்டுப்புடவை கிடையாது". என்றார் சிரித்திக் கொண்டு.... "வேணம் சார், ஆபிஸ் வேலையா வந்திருக்கேன், இப்போ போய் தண்ணி அடிச்சிகிட்டு இருந்தா, நல்லா இருக்காது. நான் இன்னோரு நாளைக்கு வரேன்" என்றேன். எனக்கு  வேலை முடிந்தால் போதும் என்றிருந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை.

 இருங்க.... 'ஆபிஸ்க்கு ஒரு போன் போட்டு வர்றேன்". என்று வெளியே கிளம்பி ஆபிஸ்க்கு போன் செய்தேன். மேனேஜர் விஜயன் சாரிடம் நடந்தவற்றை கூறி, இருக்கும் இடத்தையும் கூறி, ஈவினிங்குதான் சார் புடவை கிடைக்கும் என்று தகவலையும் தெரிவித்தேன். அவரும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டார். "பத்திரமாக எடுத்துகிட்டு வா" என்றார்.

எதுக்கு இருக்கும் இடத்தைக் கூறினேன் என்றால், எதாவது பிரச்சனை என்றால் நாம் இருக்கும் இடம் ஆபிஸூக்கு தெரிய வேண்டு என்பதற்காகத்தான். நான் திரும்பி போனபோது, ஒரு புல் பாட்டிலும் சிக்கன், மட்டன் முட்டை என்று அடிக்கி வைத்திருந்தார். எல்லாம் அவரது நணபர் வீட்டில் இருந்து வந்திருந்தது. நான் செய்த உதவியை அவரது நண்பர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.  இப்படியாக தொடங்கிய பார்ட்டி.....மாலை வரை தொடர்ந்தது. பார்ட்டி முடியவும், பட்டுப்புடவை வருவதற்கும் சரியாக இருந்தது.

பட்டுப் புடவையைப் பார்த்ததும்தான் எனக்கு உயிர் வந்தது. எத்தனை நாள் போராட்டம். தீபாவளி நெருங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பட்டுப் புடவை கிடைத்தது பெரிய விஷயம். கிடைக்காமல் போயிருந்தால், எனக்கு நிச்சயம் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். பத்திரிகைக்கும் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். வாசகர்களுக்கு அறிவித்த பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்படி மறைமுகமாக எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு செயல்களுக்கு பின்னரும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு கதைக்கும் பின்னரும் ஒரு செயல் இருக்கும். என்னைப் போன்ற மார்கெட்டிங் மனிதர்களின் வாழ்வு என்பது,  எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும். தான் வாழ வேண்டும் என்பதற்காகவே, பிறருக்காக வாழக் கூடியவர்கள் இவர்கள். இலக்குகள் நிர்ணயக்கப்பட்ட பெரிய குக்கர்களில் வேகக் கூடிய பருப்புகள் இவர்கள் என்றால் அது மிகையல்ல?!.
 
சரி, போகட்டும். கதையை முடிக்க வருவோம்.

இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகளில் வந்திரங்கிய பட்டுப்புடவையை எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரத்தில் பஸ் பிடித்து,  சென்னை எல்ஐசி பஸ் ஸ்டாப்பில் வந்திறங்கிய போது மணி இரவு பனிரெண்டு ஆகிவிட்டிருந்தது.  பேருந்து நிலையம் அப்போது பாரிஸ் கார்னரில் இருந்தது. கோயம்பேடுக்கு வரவில்லை. பட்டுப்புடவையை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, எடிட்டோரியல் பக்கம் தலையை காட்டிவிட்டு,  18K பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது....பொழுது விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.

()()()()()()()

வெள்ளி, அக்டோபர் 24, 2014

தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?!




             1997 அல்லது 1998ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம் நாளிதழ்கள் தங்களது தீபாவளி மலரோடு கை நிறைய பை நிறைய பரிசுப் பொருட்களை கொடுப்பது வழக்கம். ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, பைக், பிரிஜ், கிரைண்டர், கட்டில், பீரோ, பட்டுப் புடவைகள் என்று ஏகத்தும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கி, தீபாவளி மலர்களை கூவி கூவி விற்பார்கள். சந்தையில் தினகரன், தினமலர், தினபூமி என்று பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி மலரை விற்பனை செய்வார்கள். இதில் தினபூமியின் கையே ஓங்கி இருந்தது.

தீபாவளி மலர்களை படிக்க வாங்குகிறார்களோ இல்லையோ, இந்த பரிசுப் பொருட்களுக்காகவே வீட்டுக் வீடு ஐந்து பத்து என்று வாங்குவார்கள். ஒரு கிலோ தங்கம் இரண்டு கிலோ வெள்ளி என்று பரிசுப் பொருட்களை அறிவித்தால், பாவம் மக்கள்தான் என்ன செய்வார்கள்?!.  தங்கள் அதிஷ்டத்தை சோதித்துப் பார்க்க தீபாவளி மலர் கூப்பனாக வாங்கி குவிப்பார்கள்.

குலுக்களில் பரிசுப் பொருட்கள் மட்டும் இல்லாமல், தீபாவளி மலர் புத்தகத்தோடு சோப்பு, ஷாம்பு, டால்கம் பவுடர், விபூதி பாக்கெட், பத்தி பாக்கெட், சாம்பிரானி பாக்கெட், பிஸ்கட், சாக்லெட், காபித்தூள் என்று பை நிறைய பரிசுப் பொருட்களோடு தீபாவளி மலர் உங்கள் வீடு தேடி வரும்.

இதில் ஆர்வம் முத்தி போய் ஒரு வார இதழ் அரிசி மூட்டை தருகிறோம்  என்றேல்லாம் அறிவித்தது. பின்னர் விஜயன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கொன்றில், இத்தகைய திட்டத்திற்கு முற்று புள்ளி வைத்தது நீதி மன்றம்.

""வாங்கி விட்டீர்களா தீபாவளி மலர்" என்று தீபாவளி மலருக்காக முழ நீளத்திற்கு டிவியில் விளம்பரங்கள் வரும். 50,60வது ஸ்பான்ஸர் பெயர்களை வாசித்து முடிக்கவே பொழுது போய்விடும். டிவியில் வரும் தினபூமி தீபாவளி மலர் விளம்பரத்திற்கு அனுராதா மேடம்தான் வாய்ஸ் தருவார். தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருக்கும் ராகவேந்திரா ஸ்டூடியோவில்தான் அனைத்துவிதமான ஒலிப்பதிவுகள் நடைபெறும்.  கேசட்டுகளை டிவி சேனல்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது.

அப்போது நான் தினபூமி பத்திரிகையில் இருந்தேன். நண்பன் ராஜசேகரனும் இருந்தான். இருவரும் அட்வர்டைசிங் ரெப்ரசண்டேட்டிவாக  வேலையை ஆத்து ஆத்துன்னு ஆத்திகிட்டு இருந்தோம். நாங்கள் சேர்ந்து சுற்றிய நாட்களை மறக்க முடியாது.  இப்போ மாப்ள குமுதத்தில் இருக்கிறான், நான் இண்டியன் எக்ஸ்பிரஸில் இருக்கிறேன்.

ஒவ்வொரு விளம்பர பிரதிநிதிக்கும் டார்கெட் உண்டு.  பரிசுப் பொருட்களை நாங்கள்தான் வாங்க வேண்டும். அந்த நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது பொருட்களை வாங்கி இந்த குலுக்களில் சேர்க்க வேண்டும். இதுதான் எங்கள் வேலை. அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை டிவி மற்றும் தினபூமி பத்திரிகையில் வெளியீட வேண்டும்.

அப்படிதான் ஒரு பட்டுப் புடவைக் கடையைப் பிடித்தேன். சென்னை புரசைவாக்கத்தில் அப்போதுதான் அவர்கள் புதிதாக  அருள் ஜெயந்தி சில்க்ஸ்  (கடை பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையை திறந்து இருந்தனர். அதுநாள் வரையில் ஊர் ஊராக சென்று கண்காட்சி மூலம் விற்பனை செய்தவர்கள், ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடையை தொடங்கியிருந்தனர்.

கடை உரிமையாளர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நண்பராகிவிட...தினபூமி தீபாவளி மலருக்கு 300 பட்டுப் புடவைகள் வழங்க சம்மதித்தார். கேமிராவோடு சென்று அவரது கடையை ஷூட் செய்து, "காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸ் வழங்கும் 300 பட்டுப்புடவைகள்" என்று அனுராதா மேடம் குரலில் விளம்பரமும் வரத்தொடங்கிகிவிட்டது. பரிசுப் பட்டியலில் காஞ்சிபுரம் அருள் ஜெயந்தி சில்க்ஸூம்  சேர்ந்துவிட்டது.

----------

தீபாவளி நெருங்கிக் கொண்டு இருந்தது.....

                  ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே புரசைவாக்கம் கடைக்கு நடையாய் நடந்துக் கொண்டு இருந்தேன். எப்போது போனாலும் "ஓனர் இல்லை, வெளியூருக்கு போயிருக்கிறார். அப்புறமா வாங்க" என்ற பதிலே வந்தது.  ஆபிஸில் வேற பதில் சொல்ல முடியவில்லை. மற்ற பொருட்கள் எல்லாம் அலுவலகத்திற்கு லாரியில் வந்துக் கொண்டு இருக்க.... நம்ம பட்டுப் புடவை மட்டும் வரும் வழியே காணும். கடையில் இருந்த மேனேஜர் ராமச்சந்திரன்  "ஓனர் வந்தாதான் சார், பட்டுப் புடவைக்கு வழி; அவர் வராம நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்க இரண்டு நாள் கழித்து வாங்க, அவர் வந்தா நான் உங்களுக்கு போன் பண்றேன்." என்றார். நான் போகும் போதெல்லாம் இதே பதிலையே ஸ்டீரியோ டைப்பாய் கூறிக்கொண்டு இருந்தார்.

நாட்கள் வினாடிகளாய் ஓடிக் கொண்டு இருந்தது.......இன்னும் ஓனர் சூரேஷ் வந்தபாடில்லை. இனியும் மேனேஜரை நம்பியிருந்தால் வேலைக்காது என்று நானே அவரது கடை பையன் ஒருவன் மூலம் சுரேஷின் வீட்டு அட்ரஸை கண்டுபிடித்தேன். . வடபழனி குமரன் காலனியில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். மதியம் போனால் வீடு பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த கடைக்காரர் "சார், காலையில வந்தா பாக்கலாம்" என்றார்.

காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு போனால், வீட்டில் துண்டைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்தார் சுரேஷ். சுற்றியும் தடி தடியாய் ஒரு பத்து பேர் அவரை சுற்றி உட்கார்ந்திருந்தனர். "வா.... மகேஸூ" என்று வரவேற்ற அவரது முகம் வெளிறிக் கிடந்தது. "சார்....பட்டுப்புடவை" என்று நான் ஆரம்பிக்கவும் அந்த கும்பலில் இருந்த ஒருவன் "நீ  யாரு? முதல்ல வெளியில போ..." என்று கத்த ஆரம்பித்தான். "நான் பத்திரிகையில இருந்து வர்றேன்" என்றதும். சுரேஷே முந்திக்கொண்டு "மகேஸூ நீ வெளியில வெயிட் பண்ணு என்றார்"

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. சிறிது நேரம் கழித்து சுரேஷே வெளியில் வந்தார். கூடவே ஒரு தடியனும் வெளியில் வந்தான். "மகேஸூ நீ போயி வளசரவக்கம் சிக்னல்ட்ட இருக்கிற சைக்கிள் கடையில போய் பட்டுப் புடவை வாங்கிக்க" என்று கூறிகொண்டே மின்னல் வேகத்தில் எனது தொடையைத் தட்டி,  ஒரு துண்டு பேப்பரை எனது பேண்ட் பாக்கெட்டில் திணித்தார்.  "சீக்கிரம் போ, அங்க போனா உனக்கு புடவை கிடைக்கும். நான் முன்னாடியே சொல்லிவச்சிட்டேன்." என்றார்.  எப்படி சைக்கிள் கடையில பட்டுப்புடவை  கிடைக்கும்.   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

குழம்பிக்கொண்டே கீழயிறங்கி டிவிஸ் சேம்ப்பை ஸ்டார்ட் செய்து, இரண்டு தெரு தள்ளி நிறுத்தி பேண்ட் பாக்கெட்டில் இருந்த துண்டு காகிதத்தை பிரித்துப் பார்த்தேன். அதில் வட சென்னை அரசியல் பிரமுகர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு, அவரது ஆட்கள் என்னைக் கடத்தி வைத்திருக்கிறார்கள். உடனே சென்று வளசரவாக்கம் ராஜாராமனிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விஷயத்தை சொல்லி என்னை காப்பாத்து' என்று கோணல் மாணலாய் எழுதி இருந்தார். அப்போதுதான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது.

சரியாக வளசரவாக்கம் சிக்னல் அருகிலேயே அந்தக் கடை இருந்தது. போய் விஷயத்தை கூறியதும் பதறிவிட்டார்கள். நல்ல வேளை கடை ஓனரின் தம்பியும் அங்கிருந்தார். உடனே மூன்று டாடா சூமோக்களில் ஆட்களை நிரம்பிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். "தம்பி, நீங்க அந்தப் பக்கம் வராதீங்க. அப்படியே போரூர் பக்கம் போயிடுங்க. நீங்கதான் சொல்லி இருப்பீங்கன்னு உங்களைப் பார்த்தா கண்டு பிடிச்சிடுவாங்க" என்றார் வளசை ராஜாராமன். (கடத்துனவரும் இவரும்  ஒரே கட்சி)

அப்படியே போரூர் பக்கம்  வண்டியை திருப்பி விடு...  ஜூட்....!!!

அப்ப பட்டுப்புடவை.....?
-------

               ரண்டு நாள் கழித்து இராமச்சந்திரன் போன் செய்திருந்தார். "சார், சார் உங்கள பாக்கனுமா. வடபழனி  சேலம் ஆர் ஆர் ஹோட்டலுக்கு வரச்சொன்னார். என்றார். போயிருந்தேன். பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டார். "என் உயிர காப்பாத்தின மகேஸூ, நீ வரல்லனா நான் மாடியிலேருந்து குதிச்சி இருப்பேன். சேலம் செட்டியார்ட்ட வாங்கின கடன் 10 லட்சத்த திருப்பித் தரமுடியல. அதான் அவரு ஆள வச்ச என்ன தூக்க பாத்தாரு. நல்ல வேளை நீ வந்த நான் தப்பிச்சேன்.  வயிறு வலிக்குதுன்னு சொல்லி பாத்ரூம்ல போயி அந்த பேப்பர்ல எழுதினேன்".

இல்லெனா இவ்வளவு நேரம் என்ன நடந்து இருக்கும்ன்னே தெரியாது. அப்புரம் ஆளுங்கள வச்சி பஞ்சாயத்துப் பேசி ஒரு வழியா பிரச்சனையை முடிச்சாச்சிப்பா.   மகேஸூ உன் கல்யாணதுக்கு நம்ம கடை பட்டு புடவைதான்" என்றார்.

"அதெல்லாம் இருக்கட்டும்ண்ணே, எனக்கு பட்டுப் புடவையை குடுங்க. தீபாவளி நெருங்கிகிட்டு இருக்கு. ஆபீஸ்ல தலை காட்ட முடியால. பிரச்சனை பெருசா ஆகும்போல இருக்கு, அதனால பேசினபடி பட்டுப்புடவையை கொடுங்க என்றேன் விடாப்பிடியாக.

"எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, பட்டுப் புடவையை ரெடி பண்ணி கொடுத்திடுறேன். ஏவாரத்தில பயங்கர நஷ்டம். தலை போற பிரச்சனை எனக்கு நிறைய இருக்கு. வர்ற வாரத்தில பட்டுப்புடவை ஒன்ட்ட இருக்கும்" என்றார்.

குறிப்பிட்ட அந்த வாரமும் வந்தது.....

 பார்த்தா கடையும் பூட்டி இருக்கு, அவரது ரூமும் பூட்டி இருக்கு. ஆளூ.... மறுபடியும் எஸ்கேப்!.

அப்ப பட்டுப்புடவை.......??????

அது ஒரு பெரிய கதை. காத்திருக்கவும்!.
-------------

சனி, டிசம்பர் 14, 2013

ஆனந்த விகடனில் 'குமுதம்' டைப் கதைகள்...!?



                   இந்த வார விகடனில் (18/12/13) ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதிய 'இது காதல் இல்லாத கதை' தான் அப்படி நினைக்க வைத்தது.

அந்த கதையில் வரும் ஒரு சம்பவம்.

//தான் ஒரு பெண் என்பதற்கான  அடையாளங்களை அவள் பிடிவாதமாக மறுத்திருந்தாள். ஆனால், ஒரு ஓவியன் அவளை படமாக வரைந்தால், கழுத்துக்கு கீழே பிரஷை வெளி நோக்கிப் பெரிதாக வளைக்க வேண்டியிருக்கும்.

"ரொம்ப தப்பு....." என்றாள் வந்தனா, மிதுனை நோக்கி.

"என்ன...?"

"இப்ப நீங்க பார்த்த இடம்". //


என்று சற்றே மிகைப்படுத்தியே எழுதியிருந்தார்கள். இதைபோன்ற குமுதம் டைப் கதைகள் இதற்கு முன்னர் ஆவியில் படித்ததில்லை. வேறொரு தளத்தில் இயங்க வேண்டும் என்று நினைத்து இப்படி மாற்றிவிட்டார்களா என்று தெரியவில்லை...?

அதோடு அந்த 3D சமாச்சாரமும் எரிச்சலைதான் கிளப்புகிறது.

சனி, அக்டோபர் 19, 2013

மூன்று ஆங்கில பத்திரிகைகள் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துகின்றன!.




                       சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் தி நியூவ்  இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற மூன்று ஆங்கில பத்திரிகைகளும்,  தனித்தனியே விதவிதமான கண்காட்சிகளை நடத்துகின்றன.

இது ஒரு அதிசயமான நிகழ்வு என்றே சொல்லாம்!.

பத்திரிகை விற்பனை மற்றும் விளம்பரங்களில் போட்டிக் போட்டுக் கொண்டு இயங்கி வரும் இந்த மூன்று நாளிதழ்களும் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துவது வித்தியாசமானதுதானே.....?!

தி நியூவ்  இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் 'எக்ஸ்பாண்டிங் மெட்ரோபாலிஸ்' என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்துகிறது.  இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி பிளாட் புரோமோட்டர்ஸ் கலந்துக் கொண்டு தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். அதோடு பெரிய மற்றும் நடுத்தர  பட்ஜெட் அடுக்குமாடி விற்பனையாளர்களும் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.

நிலத்தில் முதலீடு செய்யக்கூடிய வகையில், நமது பட்ஜெட்டில் வாங்கக்கூடிய மனை விற்பனையாளர்களும் தங்களது அரங்குகளை இக் கண்காட்சியில் அமைத்துள்ளனர். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உபயோகமான கண்காட்சி இது!.

தி ஹிண்டு நாளிதழ் தனது 'ஹோம் டெக்கார்' என்ற கண்காட்சியை இங்கு நடத்துகிறது. இதில் வீடு உள் அலங்காரம் மற்றும் ஃபர்னிச்சர் ஸ்டால்கள் இக் கண்காட்சியில் இடம் பெருகின்றன.

தி டைம்ஸ் ஆஃப் இண்டியா   ஹோம் அப்ளையன்ஸஸ்  மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ற ''கண்சுயூமர் குட்ஸ்'  கண்காட்சியை நடத்துகிறது.

இந்த மூன்று கண்காட்சிகளும் இன்றும் நாளையும் மட்டுமே நடைபெறுகிறது.

வாங்க.....போங்க....!

-தோழன் மபா.

வெள்ளி, டிசம்பர் 30, 2011

'புயலைத் தொடரும் புதிய தலைமுறை!'





"தானாக வந்த 'தானே' புயலை தனதாக்கிக் கொண்ட புதிய தலைமுறை." 

      




    குறுகிய காலத்தில் முதல் இடத்திற்கு வந்த 'புதிய தலைமுறை' செய்தி சானல் 'தானே' புயலுக்கு சுற்றி சுழன்று செய்திகளை வழங்கியது.  தமிழகம் முழுவதும் தனது நிருபர் படையை முடுக்கிவிட்டு புயலை கவர் செய்தது  பு.த.,


நாகைமாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து அதன் நிருபர் ராமானுஜம் கொட்டும் மழையிலும் சுழன்று அடிக்கும் காற்றிலும், கடற்கரையோரம் நின்று கொண்டு செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்தார். பாவம் அவர்களால் காமிராவை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பக் கூட முடியவில்லை.  அப்படி ஒரு காற்று. 


செய்திகளை மெரினாவில் இருந்து செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்த அதன் நிருபர் மதிவாணன், அடுத்த காட்சியில் கலங்கரை   விளக்கிலிருந்துை வழங்கினார்.  காற்று அவரை அலேக்காக  தூக்கிக் கொண்டு போய்விடும்போல் இருந்தது. அப்படி ஒரு வேகம்.   இருந்தும் 'கழகு'ப் பார்வையில் மெரீனா கடற்கரை,  ஐஜி  அலுவலகம் கடற்கரை சாலை என்று
அழகாகக்  காட்டினார்கள்.  அந்த உயரத்தில், அடிக்கும் காற்றில் எப்படித்தான் பேசினார் என்று தெரியவில்லை.  வெள்ளம் சூழ்ந்த மெரீனாவைப் பார்க்கும்போது சுனாமிதான் ஞாபகத்தில் வந்தது.



ஸ்டுடியோவிலிருந்து வெங்கட் மிக நேர்த்தியாக அனைவரிடமும் செய்திகளை கறந்துக் கொண்டு இருந்தார். 

இன்னொரு பக்கம் வானிலை ஆய்வு மையத்திலிருந்து  ரமணனை இம்சை செய்து,  வினாடிக்கு வினாடி  செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்தார் திவ்யா.  அது எத்தகைய கடினமானப் பணி என்பது நமக்கு நன்றாகவேத் தெரிகிறது.   

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் கடற்கரையோரம் நின்று செய்திகளை வழங்குவதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இருந்து அதை சிறப்பாகவே செய்தது புதிய தலைமுறை.  இப் பணி தொடர வாழ்த்துகள்.



கொசுறு: சொட்ட சொட்ட நனைந்தப்படி செய்திகளை வழங்கிய ராமானுஜம், பின்னர் ரெயின் கோட் போட்டிருந்தார்.   நல்லவேளை!.

 

 

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...