திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சமூக வலைதளங்களிலுமா சாதி?//மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.//


 By தோழன் மபா.
First Published : DINAMANI 12 August 2013 02:15 AM IST
    நமது கலையும் பண்பாடும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. மொழி வளமை, இலக்கியங்களின் ஆளுமை, உயர்வான கலாசாரம், ஆன்மிகம் என்று உலகிற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கலாசார உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கண்டங்கள் இருண்ட கண்டமாக இருந்தது என்பார்கள்.


இப்படிப்பட்ட பெருமை மிக்க தமிழ்ச் சமுதாயம் சாதியின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான இணையதளங்களை சாதிப் பெருமைக்கும், சாதிய சண்டைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் தமிழர்கள் என்பது வருத்தமான உண்மை.


மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


முன்னெப்போதையும் விட தற்போது சாதிய சண்டைகள் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது. முன்பு தெரு முனைகளிலும், கடைத் தெருவிலும் நடந்த சாதிச் சண்டை தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சமூக மறுசீரமைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஒரு மேடையாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லிபியா, துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, சமூக வலைதளங்களே காரணமாக இருந்திருக்கின்றன.


நவீன உலகை கட்டமைப்பதில் இன்றைய தலைமுறையினரின் கருவியாக சமூக வலைதளங்கள் செயலாற்றுகின்றன. ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்.


முன்பெல்லாம் எழுதுவதற்கு எளிதில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. நமது கருத்தை நம்மை சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியே எழுதினாலும் அது அச்சேறுவதென்பதும் இமாலைய சாதனையாகவே இருந்தது.


என்னதான் முழு திறமையைக் கொண்டு எழுதினாலும், அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையென்றால் "பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற துண்டு சீட்டு உங்கள் வீடு தேடி வரும்.


ஆனால், இணையதளங்களிலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எவரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. இனம், சமூகம், மதம் போன்ற மிகவும் சென்சிட்டிவான விஷயங்கள் கூட அதன் விபரீதம் புரியாமல் இங்கே விஷமத்தனத்துடன் விமர்சிக்கப்படுகிறது. இதில் தனது சாதி பெருமையை தம்பட்டம் அடிப்பதோடு இவர்கள் நின்று விடுவதில்லை. இதில் சாதிகளை தங்களுக்குள் ஒப்பீடு செய்து கொள்கின்றனர். இரு பிரிவாக பிரிந்துக் கொண்டு மோதிக் கொள்கின்றனர். இதில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு, கேட்கவே காதுகூசும் பல நாராசமான சொற்கள் எழுத்தில் வடிக்கப்படுகின்றன.


இத் தளங்களை தொடங்குவது எளிது என்பதால், தனி நபர்கள்கூட தளங்களை தொடங்கி பிற சமூகங்களை சீண்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இத் தளங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கழிவறை சுவர் போன்று எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கிறுக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.


கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தமது பெயருக்கு பின்னால் தனது ஜாதி பெயரை வைத்துக் கொள்வது ஒரு அநாகரிகமான செயல் என்ற புரிதல் 60களிலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சாதியை தனது பெயரில் இருந்து தூக்கியெறிந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழகம் என்பதை வளரும் தலைமுறை அறிந்திருக்கவில்லை.


இத்தகைய போக்கு நமக்கு நிச்சயம் பலன் தராது. நம்மை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கிதான் அழைத்துச் செல்லும். பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் நம் பொழுதையும் சிலரின் உயிரையும் அழிப்பதற்குப் பயன்படவேண்டாம்.


நமது முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகப் பெரிய தடையாக சாதியே இருக்கிறது என்பதை வளரும் தலைமுறை உணரவேண்டும்.


அரசாங்கமும் சமூகத் தளங்களை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்தவேண்டும். அதில் வரும் பதிவுகள் தணிக்கை செய்யப்படவேண்டும். ஆயுதத்தை விட கூர்மையானது எழுத்து. அது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை சாதி என்ற கொடிய நோயால் பீடிக்கப்பட்டுவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
()()()()()()()()()()()()()


தினமணியில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுதான் எனது கட்டுரை தினமணி தலையங்கம் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.   தொடர்ந்து  எழுதி வந்தாலும் தினமணி தலையங்கப் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவருவதென்பது மிகுந்த கடினமான ஒன்று.  அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது எனது எழுத்திற்கு கிடைத்த  வெற்றியாகவே உணர்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டும் உங்கள் அனைவருக்கும் எனது  நன்றியும்  வணக்கங்களும்!. 

அன்புடன் 
-தோழன் மபா. 
நன்றி! தினமணி (12.08.2013).

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

'இறுதி சொற்பொழிவு'. - ரேன்டி பாஷ்.


"நாளையே நாம் இருக்குமிடத்தில்
 புல் முளைக்கப் போகிறது 
என்றால், 
நமது பெயரைச் சொல்லும்படியாக
 எதை விட்டுவிட்டுச் செல்ல 
                                                           நாம் ஆசைப்படுவோம்?"
 


      இறுதி சொற்பொழிவு என்ற தலைப்பில் பல பேராசிரியர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளனர். தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஓர் உரை நிகழ்த்த ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், எதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்புவார்கள் என்று கற்பனை செய்து, அதைப் பற்றிப் பேசுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். இதுதான் கடைசி வாய்ப்பு என்று அறிந்திருந்தால், உலகிற்கு நாம் எப்படிப்பட்ட ஞானத்தை விட்டுச் செல்ல விரும்புவோம்?.   நாளையே நாம் இருக்குமிடத்தில் புல் முளைக்கப் போகிறது என்றால், நமது பெயரைச் சொல்லும்படியாக எதை விட்டுவிட்டுச் செல்ல நாம் ஆசைப்படுவோம்?.

இது போன்ற 'இறுதி சொற்பொழிவு' ஒன்றை வழங்குமாறு கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி பேராசிரியர் ரேன்டி பாஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது தனது கடைசி சொற்பொழிவு என்று கற்பனை செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஏனெனில், குணப்படுத்த முடியாத புற்று நோய் அவருக்கு இருந்ததை அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அவர் கொடுத்த அந்த சொற்பொழிவு மரணத்தைப் பற்றி இருக்கவில்லை. குழந்தைபருவக் கனவுகளை உண்மையிலேயே அடைவதை பற்றியும், வாழ்வின் ஒவ்வோரு கணத்தையும் எவ்வாறு குதூகலமாகக் கழிப்பது என்பதைப் பற்றியும் மட்டுமே அந்த உரை அமைந்திருந்தது.

போற்றுதலுக்குரிய நூல் இது வென்று  முதல் 10 பக்கங்களிலேயே புரிந்துவிட்டது.  இறுதி தேதி தெரிந்தபின்  தனக்குப் பிறகான ஒரு உலகத்தை ரேன்டிபாஷ் தனது மனைவி குழந்தைகளுக்காக  தனது இறுதி சொற்பொழிவில் படைக்கிறார்.  அந்த 'இறுதி சொற்பொழிவின் விரிவாக்காம்தான் இந்த நூல்.

இதுவரை 50 லட்சம் பிரதிகளுக்கு மேல் இப்புத்தகம் விற்பனையாகியுள்ளது.    'The Last Lecture'  என்ற ஆங்கில புத்தகத்தை தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழி பெயர்த்துள்ளார்.

 Manjul Publishing House Pvt ltd., New Delhi என்ற நிறுவனம்தான் இன் நூலை தயாரித்துள்ளது. ஆங்கில புத்தகத்தை மிஞ்சும் அளவிற்கு இதன் தயாரிப்பு இருக்கிறது.  தமிழுக்கு நிச்சயம் புதுவரவு  இந்த மஞ்சூள் பப்ளிஷிங் ஹவுஸ்.  இதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த அளவிற்கு ஒரு நேர்த்தி.  உலக அளவில் பேசப்பட்ட பல ஆங்கில நூல்கள் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.


மேலும் விரிவான விமர்சனம் பிரிதொரு நாளில்.

Rs.199/-
Manjul Publishing House Pvt ltd.,
New Delhi.
www.manjulindia.com

கொசுறு...
ஆலன் மற்றும் பார்பரா பீஸ் எழுதிய 'அலுவலகத்தில் உடல் மொழி'  என்ற புத்தகத்தை கடந்த வெள்ளி அன்று 'ஹிக்கின்போத்தம்ஸில் வாங்க நேர்ந்தது. இதுவும் மஞ்சூள் தயாரிப்புதான்.  முன்பெல்லாம் ஆங்கில புத்தங்களின் செய் நேர்த்தியைக் கண்டு நாம் வாய் பிளந்து நிற்போம். அதற்கு இனி வாய்ப்பே இருக்காது போலும். அந்தளவிற்கு மஞ்சூள் தயாரிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.  சில விஷயங்கள் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் புரியும்!   இப் புத்தகத்தை பற்றிய விமர்சனம் பிரிதொரு பதிவில்.

சனி, ஆகஸ்ட் 03, 2013

ஆடிப் பெருக்கில் திருச்சியை தாண்டாத காவிரி.


வேதனையில் தஞ்சை நாகை மற்றும்  திருவாரூர் மாவட்ட மக்கள்!

இது அகண்ட காவிரி!


                      சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்பது போல் காவிரி கரை புரண்டு ஓடினாலும் தண்ணி திருச்சியை தாண்டி இந்த வருடமும்  வரவில்லை.

 ஆடி பெருக்கு என்பது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களான தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் மவட்டங்களில் முக்கியமான ஒரு திருவிழா.  விவசாய பூமியான இம்மாவட்டங்களில் ஆடி பெருக்கு என்பது அனைத்து  தரப்பு மக்களும் கொண்டாடக் கூடிய விழா. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம்
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மேட்டூர் 100 அடியை தொட்டுவிட்டது.  அப்படி இருக்க அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, மேட்டூர் அணையை முன்பே திறந்து இருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் இன்னேரத்திற்கு காவிரியின் கடைமடை பகுதியான கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் பூம்பூகார் பகுதிவரை காவிரியில் நீர் எட்டியிருக்கும்.
இது வறண்ட காவிரி !

வழக்கம்போல் அரசும்  மாவட்ட நிர்வாகமும் மெத்தனமாய் இருந்துவிட்டதன் விளைவு, கடைமடை விவசாயிகள் இந்த வருடமும் ஆடி பெருக்கில் விரக்தி பெருமூச்சுதான் விடமுடிந்தது.

காவிரி தண்ணீர் திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் நனைத்தால் போதும் என்று நினைத்துவிட்டர்களோ என்னவோ.....?!

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...