சடுகுடு ஆடி வந்த முந்தைய
தலைமுறை குடுகுடு கிழங்களாக
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய்
கிடக்கிறது.
(கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை ) |
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.
சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.
காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும்.
உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.
அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும்.
ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.
தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது.
1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது.
இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.
இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.
வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.
அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.
அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.
கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம்.
நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.