புதன், மார்ச் 20, 2013

'திரி'யில்லாம விளக்கு எரியுமா....?

                  சென்ற பதிவில் நானும் வசந்த் அன் கோ அண்ணாச்சி வசந்த குமாரும் சமயோசிதம் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது எனது வாழ்க்கையில் நடந்ததையும் சொன்னேன். 

அதுதான் இந்தப் பதிவு. 


தேவ் ஆனாந்த்

                                       அது  எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடத்திய 'சினிமா எக்ஸ்பிரஸ்'  விருது வழங்கும் விழாவில்  நடந்தது. எந்த வருடம் என்று சரியாக நினைவில்லை. அனேகமாக 2004ம் வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட செட் போடப்பாட்டு 'ஹீரோ ஹோண்டா' மெயின் ஸ்பான்சராக இருக்க, அந்த வருடத்திய சினிமா எக்ஸ்பிரஸ் அவார்ட் பங்ஷன் நடைபெற ஏற்பாடானது.  அப்போது 'சினிமா எக்ஸ்பிரஸ்' ஆசிரியராக ராமமூர்த்தி இருந்தார். சினிமா விபரங்களையும் ஆட்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.
    
சினிமா எக்ஸ்பிரஸ் மாதம் இரு முறை வெளிவரும் தமிழ் சினிமா பத்திரிகையானாலும், விருது வழங்குவதில் குறுகி  இருப்பதில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களுக்கும் சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்படும்.  அதனால் இந்திய அளவில் நட்ச்சத்திரங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வர்.  விஜய் அவார்ட்ஸ், சன் டிவி 
சினிமா விருதுகள் என்று பல சினிமா விருதுகளுக்கு  சினிமா எக்ஸ்பிரஸ் விருதே முன்னோடி. 

விழாவிற்கு முந்தைய ஒரு வாரமும் ஒரே விழாக் கோலம்தான். எங்களது மார்க்கெட்டிங் டீம்முக்குதான் நிறைய வேலை இருக்கும். ஒவ்வொரு நட்சத்திரங்க்ளையும் ரீசிவ் பண்ண ஒரு ஆளை ஒதுக்கிவிடுவார்கள். கூடவே காரும் உண்டு.  தொடர்பு கொள்ள  ஒரு வாக்கி டாக்கியும் உண்டு.  வெளி மாநில திரை நட்சத்திரங்கள் சென்னையில் ஷாப்பிங் செய்யப் பிரியப்படுவார்கள்.   அவர்களோடு ஊர் சுற்றுவது,  போட்டோ, விருந்து என்று ஒரு வாரம் சுகமாகக் கழியும்.


யாரார் எந்த நடிகர் நடிகைகளை பிக்கப் செய்வது என்று தனி தள்ளு முள்ளே நடைபெறும்.  பெரும்பாலும் சென்னையை சேர்ந்த நடிகர் நடிகைகள் தாங்களே வந்துவிடுவார்கள். வேறு மொழி நடிகர்களைத்தான் நாம் பிக்கப் செய்யவேண்டும்.
 விஷ்ணுவர்தன்


 கன்னட உச்ச நட்சத்திரம் விஷ்ணுவர்த்தனை அழைக்கக் கூடிய வேலையை எனக்கு தந்தார்கள்.  அவரை விமான நிலையத்தில் இரவு 8 மணிக்கு அழைக்கச் சென்றேன். காரின் பின் சீட்டில் என்னை உட்காரவைத்துட்டு முன் சீட்டில் அவர் உட்கார்ந்துக் கொண்டார்.  தமிழ் சரளமாக வந்தது.  அவர் சிகரட் பிடிக்க லைட்டர் கேட்டார்.   இல்லை என்றதும், வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லி ஒரு ஆட்டோ டிரைவரிடம் சகஜமாக பேசி தீப்பெட்டி வாங்கி சிகரெட் பற்றவைத்துக் கொண்டார்.


வீடு வரும் வரையில் சென்னையின் வளர்ச்சியை பாராட்டிக்கொண்டே வந்தார்.  "நான் ரஜினிக்கு முன்பே சென்னை வந்துட்டேன்பா. ஆனால் நம்மளாலதான் இங்க சூப்பர் ஸ்டாராக முடியல". ஆனா ரஜினி வந்துட்டார்" என்றார். வருத்தம் வாய்ஸில் தெரிந்தது.

பேசிக்கொண்டே வந்ததில் எல்டாம்ஸ் ரோடு தொட்டு, டிடிகே சாலை திரும்பி செட்டியார் ஹாலுக்கு பின்புறம் உள்ள சாலையில் இருந்த அவரது வீட்டுக்கு வந்துசேர்ந்தோம். ஒரு கன்னட சூப்பர் ஸ்டாருக்கு சென்னையில் வீடு இருந்தது வியப்பாக  இருந்தது.


பின்னர் மாலையில் நடந்த விழாவிற்கு நானே வந்துவிடுகிறேன். கார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

'சரி...இதில் எங்கே வந்தது உனது சமயோசிதம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.  பின்ன இவ்வளவு நேரம் மொக்க போட்டால்?'.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

அன்றைய விருது வழங்கும் விழாவில் எனக்கு பேக் ஸ்டேஜ் ஒர்க் கொடுத்துவிட்டார்கள். விருதுகளை பெயர் பார்த்து, அடிக்கி வைத்து அவர்கள் அறிவிக்கும்போது நாம் அங்கு நிற்கும் அந்த அழகு பதுமைகளிடம் கொடுக்கவேண்டும். அதை அவர்கள் மேடையில் கொடுப்பார்கள்.  தமிழ் திரை உலகம் என்றால் நமக்குத் தெரியும். இது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய திரை உலகினரின் சங்கமம்.  பிற மொழி நடிகர் என்றாலும் கண்டுபிடித்துவிடலாம். தொழிற்நுட்பம், தயாரிப்பாளர்கள் டான்ஸ் மற்றும் ஸ்டெண்ட் மாஸ்டரெல்லாம் எப்படி கண்டுபிடிப்பது, கொஞ்சம் சிரமமானப் பணிதான் இருந்தாலும் தங்கு தடையில்லாமல் செய்துமுடித்தோம் .

இன்னும் விஷயத்துக்கு வரலேயே....?

அன்றைய விழாவிற்கு பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த்தான் சிறப்பு விருந்தினர்.  விழா தொடங்க நேரம் நெறுங்கிவிட்டது.

நடிகர் தேவ் ஆனந்தை எங்கள் நிறுவனத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மேடை நோக்கி அழைத்து வர...  குத்துவிளக்கு ஏற்ற இருந்த அந்த ஆளுயர குத்து விளக்கில் திரியைக் காணும். எண்ணை  இருக்கிறது திரி மட்டும் மிஸ்ஸிங்.

மேடையே பரப்பராப்பாகிறது.  ஆளாலுக்கு தேடுகிறார்கள். திரியைக் காணும். மேடையில் செலிபிரிட்டிகள் ஒருவருக்கொருவர்  முகமன் கூறிக்கொள்ள... மேடையில் இருந்த எங்களுக்கோ....  ஒரே டென்ஷன்....டென்ஷன்..... டென்ஷன்.

ஒருவர் சணலை கொண்டு வந்து ஏற்ற முயற்சித்தார்.  சணல் அவ்வளவு சீக்கிரம் எரியக் கூடியதா?. 

டென்ஷன் உச்ச நிலையை அடைந்தது.


சற்றென்று எனக்குள் ஒரு மின்னல் அடித்தது. கை தண்டு அளவிற்கு இருந்த இரு மெழுகு வர்த்திகளில் ஒன்றை உருவி படக்கென்று முறித்தேன். உள்ளிருந்து  முழம் நீளத்திற்கு திரி தொங்கிக்கொண்டு இருந்தது.  சட்டென்று திரியை உருவி அதை இரண்டாக  மடித்து  எண்ணையில் முழுகி விளக்கில் வைத்தேன். மின்னல் வேகத்தில் நான் செய்ததற்கும்  பிரமுகர்கள் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.   பிறகென்ன தேவ்ஆனந்த் குத்துவிளக்கு ஏற்ற... விழா மிக சிறப்பாகத் தொடங்கியது.

அந்த சம்பவம் அப்போதைக்கு  பாரட்டப்பட்டாலும் பிற்பாடு அந்த களோபரத்தில் கரைந்துவிட்டது.  நானும் மறந்துவிட்டேன்.

இந்த நிகழ்ச்சியைதான் நான் வசந்த் அண்னாச்சியிடம் பகிர்ந்துக்கொண்டேன். அவரும் மனமுவந்து பாராட்டினார்.

இப்போ உங்களிடமும்.....

சனி, மார்ச் 02, 2013

இது சேவலை கோழியாக்கிய கதை!!!அண்ணாச்சி சொன்ன  கொக்கரக்கோ கதை !
                        
வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார், மற்ற  தொழில் அதிபர்களில் வித்தியாசமானவர். மிக எளிதாக சந்திக்கக் கூடிய மிக எளிமையான மனிதர்.  அவரது அறையில் அவர் இருந்தால் எப்போதும் சிரிப்பு சத்தம்தான் கேட்டுக் கொண்டு இருக்கும்.  அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு சுவரை ஏற்படுத்திக் கொள்ளாத மனிதர். டிவி, மாத பத்திரிகை, தொழில் அதிபர், அரசியல் வாதி என்று பன்முகத் திறன் படைத்தவர்.         அன்னாச்சியோடு எனக்கு 15 வருடங்களுக்கு மேல் பழக்கம். என்னை  "என்ன  தாடி?" என்றுதான் கூப்பிடுவார்.  சென்ற வியாழன் அன்று அவரை சந்திந்தப்போது  டேபிளில் இருந்த ஒரு கண்ணாடியிலான சேவல்  பொம்மையைக் காட்டி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

****

               னது அரசவையில் இருந்த பீர்பாலை எல்லோரும் அறிவாளி என்று சொல்வதை மன்னர் அக்பர் விரும்பவில்லை.   பீர்பாலை எப்படியாவது மட்டம்தட்ட  நினைத்தார் அக்பர்.   மன்னரை  சூழ்ந்த இருந்த மந்திரிகளும் அதற்கு  தூபம் போட்டனர். 

எல்லோரும் சேர்ந்து பீர்பலை  முட்டாளாக்க ஒரு திட்டம் தீட்டினர்.    தனது அமைச்சரவையில் இருந்த முக்கியமான மந்திரிமார்களை  அழைத்த அக்பர்  எல்லோர் கையிலும் ஒரு முட்டையை தந்து "இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.  நாளை நாம்  எல்லொரும் தோட்டத்தில் கிணற்றடியில் கூடுவோம்.  அப்படியே பீர்பாலையும் அங்கே அழைத்து வாருங்கள்" என்றார்.

அடுத்த நாள்  காலை எல்லோரும் தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் ஆஜரானார்கள்.  பீர்பாலும் வந்த சேர்ந்தார். மன்னர் முட்டையை ஒளித்து  வைத்திருந்த மந்திரிகளை அழைத்து, "கிணற்றில் குதித்து முட்டை எடுத்து வாருங்கள் " என்றார்.  அவர்களும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்து முட்டையோடு மேலே வந்தனர்.  

பீர்பாலுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் வெறும் கையேடு குதித்து முட்டையை எடுத்து வருகிறார்களே என்று  குழம்பி போனார். கடைசியாக பீர்பாலின் முறையும் வந்தது.  பீர்பாலை அழைத்த மன்னர்,  "நீங்களும் கிணற்றில் குதித்து முட்டை எடுத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

"கிணற்றில் குதித்த பீர்பால் மேலே வந்து என்ன சொல்லி தப்பித்து இருப்பார்...?"  என்றார் வசந்த் அண்ணாச்சி.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.....

அண்ணாச்சி  "கொக்கரக்கோ..."  என்றார்.

நான் விழிக்க.... சேவல் பொம்மையை உருட்டியபடியே என் பதிலுக்காக காத்திருந்தார்.

சற்றென்று பொறி தட்ட  "அண்ணாச்சி....  'நான் சேவல் கோழி  அதனால் முட்டை போட முடியாது' என்று கூறி இருப்பார் " என்றேன்.

"கரைட்யா.... பீர்பால் கொக்கரக்கோ கொக்கரக்கோன்னு கூவிகிட்டே கிணற்றில் இருந்து மேலே ஏறினார்" என்றார். 

"மன்னா.... நான் சேவல்.  அவுங்க எல்லாம் பொட்டை கோழிங்க. அதனாலதான் முட்டை போட்டாங்க என்னால முட்டை போடா முடியல! என்று மந்திரிகளை சுற்றி கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று கூவிகொண்டே ஓடினார் பீர்பால்.

ஆண்கள் என்ற சேவலை கோழியாக்கிய கதை தானே இது. 

பீர்பாலின் சமயோசித அறிவைக் கண்டு மீண்டும்  மிரண்டு போன மன்னர் அக்பர், அவருக்கு பரிசுகளை அளித்து கொளரவித்தார். பீர்பாலின் சமயோசித அறிவு அத்தகையது என்றார்.  


"எனது வாழ்விலும் அத்தகைய  சமயோசித நிகழ்ச்சி ஒன்று நடந்தது அண்ணாச்சி..."  என்றேன்.

அது....?!

அடுத்தப் பதிவில்.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...