வெள்ளி, ஜனவரி 27, 2012

உற்சாகமாகத் தொடங்கியது திருப்பூர் புத்தகத் திருவிழா!அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்
                திருப்பூர் மாநகரின் பண்பாட்டுத் திருவிழாவாக 9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012 புதனன்று உற்சாகமாகத் தொடங்கியது. மாநில இந்து சமய அறநிலை துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

திருப்பூர் மங்கலம் பாதை கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் பிப்ரவரி 5ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் செ.முத்துக்கண்ணன் வரவேற்றார். இதில் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன், சைமா பொதுச் செயலாளர் எம்பரர் வீ.பொன்னுசாமி, கபாடி அறக்கட்டளை சக்தி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   


புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கானுயிர் காப்போம் என்ற கண்காட்சியை மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி திறந்து வைத்தார். ஏஇபிசி அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் முதல் புத்தக விற்பனையைத் தொடங்கி வைக்க, துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஏராளமானோர் பங்கேற்றனர். மேடை நிகழ்ச்சிக்கு முன்னதாக திருப்பூர் சிறுவர் கலைக்குழுவின் தப்பாட்டம் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இக்கண்காட்சியில் மொத்தம் 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடைபெறும் இக்கண்காட்சியில் அங்கு புதிதாக வெளியிடப்பட்ட புதிய புத்தகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வழக்கம் போல் திருப்பூர் நகர மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெருமளவு இக்கண்காட்சியைக் காண வருவார்கள் என எதிர்பார்ப்பதாக புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.-----------------------------------------

முதல் படம் கண்காட்சியை அமைச்சர் திறந்து வைப்பது

இரண்டாவது படம் புத்தக விற்பனையைத் தொடங்கி வைப்பது

சனி, ஜனவரி 14, 2012

'குத்தகை' (சிறுகதை) - இரத்தின புகழேந்தி.பொங்கல் தின சிறப்பு சிறுகதை.


 'களம் புதிது'  தனிச்சுற்று    இதழில் 1996- ஏப்ரல் மாதத்தில் வந்த சிறு கதை. வாசிக்க வாசிக்க கதை கனமாக நமது நெஞ்சில் படிந்து விடுகிறது.  உழைத்த மனிதர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் பட்டனர் என்பதை மிக மிக எதார்த்தமாக மண் மனத்துடன் சொல்லி உள்ளார் இரெத்தின புகழேந்தி.  களம் புதிது  ஆசிரியர் குழுவின் தலைமை பொறுப்பும் இவர்தான்.  இக் கதை விருத்தாசலம் பகுதியில் நடைப்பெறுவதாக இருந்தாலும், இதில் கையாண்ட வட்டார வழக்கு சொற்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதிகளில்  பேசப்படுபவைதான். 

வட்டார வழக்குச் சொல்லில் வளைந்து நெளிந்து  செல்லும் கதாசிரியர், கதையின் முடிவில் சாதி பெயரை கொண்டு திட்டுவது   ஏனோ...மனதை  நெருடுகிறது....!     நன்றி!
புகைப்படங்கள்: வைலெட் ஐஸ்.


                  "ஏ... முத்தம்மா சனி மூலையில போயி அற, மொதல்ல மலப்பில்லாத மளமளன்னு ஆவும் அறப்பு"

சர்ரக்...கெழக்கத்தி அருவா நாலு மொதல ஒரே அறப்பா அறுத்தது.

சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...
சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...

"என்னடா மாப்ள, இம்மாங் கஷ்டப்பட்டு கடசீல பொகையான் அடிக்க உட்டுட்ட"

"ஏன்யா அந்த வவுத்தரிச்சல கெளப்புற.  பயிறுதான் வெளுத்து போயி இருக்கேன்னு ஒரு மூட்ட ஊரியாவ கொண்டாந்து போட்டு புட்டான். நல்லா பச்ச பசேர்னு வந்தது. திட்டு திட்டா அடிச்சி கெடாவிட்டது"

ரெண்டாவது வாட்டி போடும்போது, ஊரியா கொஞ்சனா காட்டனும்"

"புதுசா  புட்டமுட்டானாம் அவன் பூ....செல்லரிச்சுதாம்..." முணுமுணுத்தாள் முத்தம்மா.   இதைக் கேட்டதும் உம் என்று ஆனது குள்ளனின் முகம்.

"பொகையான் அடிச்சாலே ஒப்புடி ஆவாது. இதுல கொல்ல வாரம், தண்ணிவாரம் குடுத்து ஒனக்கு என்னா மீற போவுது."

"இதெல்லாம்  கணக்கு பண்ணி பாத்துட்டுதான் அவாளு குத்தவைக்கு உட்டது. சும்மாகிம்மா உடுல."

"குள்ள பய பெரியாண்ட நெலத்த கெரையம் வாங்குனவனாட்டம் பள்ளம் மேடு திருத்தறது என்ன, எருவு அடிக்கறது என்னா..."

ஆளுக்கு ஒன்றை சொல்லி குள்ளனின் வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள்.

0000


"நன்னானே நானே னன்னே
நானனன்னே நன்னா னனே...
கோத்தா கொடி பவழம்
கோருவைக்கே நப்பவழம்
கோப்பாரு இல்லாமலே- நான்
கொடி பழம் சிந்துறனே (நன்னானே....)"

    முத்தம்ம பாட நடவு சனங்கள் பின் பாட்டுப் பாட வடக்கு வேளி முழுக்க எதிரொலித்தது. பாட்டுக்குத் தாளம் போடுவது போல ச்சளக்...ச்சளக்...ச்சளக்... பயிரை சேற்றில் நட்டனர். சொந்த நடவு என்பதால் நெருக்கி நட்டனர். தார்க்குச்சியை குத்தியது போல குத்திட்டு நின்றது பயிர்.

     " நீங்கள்ளாம் இம்மாம் கத்திருக்கிங்க புள்ள....ம்...எங்க கொல்லன்னா சாச்சி போட்டு  எட்ட  எட்ட  நடுறது.   சொந்த நடுவுன்னதும் அஞ்சி வெரலும் சேத்துல போவுத!"    சத்தம் போட்டான் அந்த வழியா வந்த கொடுமனூராங்க மகன்.

"ஒங்களுக்கு மட்டும் என்னா வேற கையாலயா நட்டோம். பாக்கிறதுக்குதான் அதேமேரி தெரியும். கடசீல ஒங்களுக்குதான் நெல்லா வெளையும்."

"ஆமாம்...ஆமாம்...கவுடு வச்சி வேல செஞ்சிங்கன்னா எல்லாங் கட்டாந்தரையாத்தான் போவும்..."

"இங்க ரெண்டு முடி நாத்து எடுத்துகிட்டு வா மாமோய்...." 

"கையால ஆவாத கலவட....என்னாடி இன்னும் பின்னாலயே கெடக்குற?" கிண்டலடித்தப்படி நாற்று முடிகளைக் கொண்டு போனான் குள்ளன். அவனை உள்ளே வைத்து வெளியில் நடவு நட்டுவிட்டனர். இப்படி நட்டுவிட்டால் காசு கொடுத்து விட்டுத்தான் வெளியில் வரவேண்டும்.  கையில் காசு இல்லையென்றாலும் எது அவனிடம் இருக்கிறதோ அதை  பிடிங்கிக் கொள்வார்கள்.  பிறகு காசு கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

  "என்னா சொன்ன...கலவடையாமில்ல...." சிரித்துக் கொண்டே குள்ளனின் பின் பக்கக் கோவணத்தை அவிழ்த்து விட்டாள் கருப்பாயி.

   பொத்துக் கொண்டு பீரிட்டு அடித்தது சிரிப்பொலி, தொங்கிய கோவணத்தை முன் பக்கம் கெட்டியாக அழுத்தி பிடித்துக் கொண்டு "ச்சீ...கையில காசு இல்ல ...ஊட்ட வந்து தரன் உடுங்களன் மானங்கெட்ட கழுதை வோள..." முண்டாசை அவிழ்த்துக் கொடுத்தான்  ஏசியபடி.

  "ஊட்ட வந்து ஏமாத்தி புட்ட அங்க சுத்தமா அவுத்து உட்டுடுவன்"

இவர்களின் சேட்டைகளுக்கு எரிச்சலடைபவன் போல காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் குள்ளனுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஆண்டைகளுக்கு கிடைத்த அனுபவம் முதன் முதலாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது.

  நிலம் குத்தகைக்கு விடுவது தெரிந்து பெரியாண்டை வீட்டின் முன் கூனி குறுகி நின்றான் குள்ளன்.

  "தெக்குத் தெருவானுவோளுக்கு வேலைக்கு போறவன்,  குத்துவைக்கு உடுறாங்கன்னதும் கொழஞ்சிகிட்டு வந்து நிக்கிறதப்பாரு. சும்மாவா சொன்னாங்க கள்ளன நம்புனாலும் குள்ளன நம்பக் கூடாதுன்னு..."  பெரியாண்டையின் பேச்சு ஊசியாய் தைத்தது குள்ளனுக்கு. 

  "இல்லிங்க... " தயங்கி, பயந்து, நடுங்கி, பவ்யமாய், வாய்பொத்தி, தலை சொரிந்து, கூனியபடி சொன்னான். 

இந்த ஒணக்க ஓட்டு போடும் போது மட்டும் இருக்கட்டும். மாத்தி கீத்தி போட்டிங்கன்னு தெரிஞ்சிது...." கர்ச்சித்தார்.

   "எம் மூனு புள்ள மேல சத்தியமா நம்பள தவற மாத்தமில்லிங்க...உண்ட ஊட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டாங்க இந்த குள்ளன். "

  நல்ல பேச கத்துகிட்டிங்கடா ...சரி...சரி...அந்த மோட்டு ஓரத்து கொல்லையை நட்டுக்க. "

   "ஏரு...கெராக்கியா இருக்குங்க....நம்ப வண்டி..."

   "வண்டியா...ரேட் தெரியுமில்ல...? நானூத்தி இருவத்தஞ்சி " 

     ஆண்ட  நீங்க பார்த்து சொன்னா சரிதான்...."

0000


        "அடியோட அறங்கப்பா... வைக்கலாவுது நாலு தெர ஆவுட்டும்"

"வைக்க மட்டும் எங்கேருந்து ஆவும்ங்குற...கூளாந்தான் ஆவும்".

"வீசும் ஒன்ரை மூட்டையாவது தேறுமா...அநியாயமா இருக்க...." முத்தம்மாவின் வாயை கிண்டினாள் மூக்காயி.

" இந்த குள்ள பயதாண்டி பயிறுக்கு தீம்பா இருந்துட்டான். கொண்டாடி குட்டிச் சாத்தின்னு தாலிய வாங்கிகிட்டு போயி வச்சில்ல ஊரியா வாங்கிகிட்டு வந்து போடுறான். ஆனமுட்டும் சொல்லி பாத்தண்டி ஆயி....கேக்க மாட்டன்னுட்டானே.  ஒரே முட்டா அடிச்சி கொட்டிக்கலாம்னு ஆச....அதான்  ஒன்னுமில்லாம பூடுச்சி..."

  இந்த ஊரியா வாங்க பட்டபாடு குள்ளனுக்குத்தான் தெரியும்.  குறுக்கு ரோட்டுல ஒரு கடையிலியும் இல்லன்னுட்டானுவோ  விருத்தாலத்து ஒடயான் கடையில கேட்டா செட்டியாரு கடையில் இருக்குங்குறான், செட்டிய கேட்டா ஒடையார் கடையில இருக்குங்குறான்.

  "அஞ்சாறு பேரு சேந்துகிட்டு கடகாரங்கிட்ட சண்டைக்கு போயிட்டாங்க.  வேற வழி இல்லாம டோக்கன குடுத்து ஊரியா வாங்க வந்தவங்கள வரிசையில நிக்க வச்சிட்டான். உள்ள போறவங்கள்ட்ட பொட்டாஷ் வாங்குனாதான் ஊரியா தருவேங்குறான்.  அதுவும் மூட்ட எரனூத்தி இருவத்தஞ்சி ரூவாயாம். பில் சீட்டும் குடுக்கல".

 " நூத்தி எழுவது ருவா வித்தப்பயே ரெண்டு மூட்ட வாங்கியிருக்கலாம்.  என்னா பண்றது....கையிலியா வச்சிருக்கோம்....பிச்ச எடுக்குமாம் பெருமாளு அத புடிங்கி திங்குமாம் அனுமாருன்னு.... நூறு அம்பதுன்னு பொருக்கி பொணச்சில்ல வாங்குறதா இருக்கு".

...ம்.... இந்த பயிர கண்ணால பாக்க எம்மாஞ் சிருப்பா சிரிச்சேன்.

 அண்ட வெட்டும்போது கால வெட்டிக்கிட்டு காயத்தோடயே தழ கழிச்சி தூக்க முடியாம தூக்கிகிட்டுவந்து காலாலயே மிரிச்சி காயத்துல சேரு பூந்து பொட சச்சி லோக்கல்ல போயி கெடந்து காயத்த ஆத்திகிட்டு வந்தா கள மண்டிபோயி அத அரிச்சன்.

அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா,,,மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா எ

  அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா....மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா நெருப்ப வச்சாபல எரியும்.  நாத்தம் வேற கொடல புடுங்கும். ரெண்டு நாள் சென்னு போய் பாத்தா சுருட்டிக்கிட்டு இருக்குற சோலையில புழுவு நெளியுது.  என்னாய்யா மருந்து குடுத்தன்னு கடகாரன கேட்டா முழுங்கி (மூங்கிள்)  மெலாரால சேலைய கிழிச்சிட்டு அடிக்குனுங்குறான்.   இனிமே....புழுவ புடிச்சி மருத்துல போட்டாதான் சாவும்னு சொன்னாலும் சொல்லுவான்.

0000   கட்டு தூக்கும்போது காத்தாட்டம் லெக்காதான் இருந்தது. செத்த நாழியில களத்துக்கு போயி சேந்தது.  கெடாவடி ஒதரும் போதே கூளான் பறந்தது.

தாளு அடிக்க பெரியாண்ட டிரக்கு வந்தது டயர் வண்டியோட. பின்னாலயே தலையில துண்ட போட்டுகிட்டு பெரியாண்டயும் வந்துட்டாரு.

புளிய மரத்தடியில் நின்னுகிட்டு

"ஓரம் பாரம் கெடக்குற தாள அள்ளி உள்ள போடுங்கடா"
...    ...   ...   ...   ...

"வண்டிய நிறுத்திட்டு, நடுல  முட்டா கெடக்கு பாரு...நெறவி உடு"
...   ...     ...   ...  

"ம்....போதும் நிறுத்து.  ஒதறிட்டு அப்புறம் அடிக்கலாம்."
...  ....  ...  ...  ... 

"நெல்லா அடிகாண ஒதறு"

"என்னடா குள்ள பயல வைக்கலாம் கூழ் கூழா பொயிட்டது...?"
....      ....        .....    ....

சும்மா ரெண்டு சுத்து சுத்து போதும்"
....      ....        .....    ....

நெல்லா வைக்கல நெல்லு இல்லாம சிலுக்க ஒதறு"
....      ....        .....    ....

போர கெழக்கால போடு காத்த மறைக்காம, ஒருத்தம் போருல நில்லு"
...      ....        .....    ....

"நெல்ல ரெண்டு முட்டாக்கிக்க"
....      ....        .....    ....
 
"பாதி நெல்ல தெக்க தள்ளு, பாதிய வடக்க முட்டாக்கு. பிரி வச்சி தள்ளு"

....      ....        .....    ....
....      ....        .....    ....

"வெளக்க மாத்த எடுத்து கூட்டம்புள்ள.  வேடிக்க பாத்துகிட்டு நிக்குற....?"
....      ....        .....    ....

இன்னமுட்டும் அடி அடின்னு அடிச்சது.  இப்ப காத்தயே காணும்"

....      ....        .....    ....

"மூட்டம் போடுங்க....ஏய் கருக்கால அள்ளி போடுறா...ம் ....இப்ப அள்ளிபோடு கூளான. பத்தவையி"

....      ....        .....    ....

"போரையான உட சொல்லு, அவந்தான் வாட்டபிலி நெல்லா உடுவான் மேல காத்துதான் அடிக்குது.....உடு..."

....      ....        .....    ....


மொறத்தால விசுறு, நெல்லா...கூளான் போறாபல விசுறு"

....      ....        .....    ....

"இந்தா குள்ளம்  பொண்டாட்டி...சாக்க எடுத்து தலையில போட்டுகிட்டு கட்டிய தள்ளு"

....      ....        .....    ....

"உடு....உடு....உடு...கிடுகிடுன்னு அள்ளி உடு...."

....      ....        .....    ....
"மிம்மாரிய கழிச்சி உடு"
....      ....        .....    ....
"நெல்லா ஒட்ட கழி...."
....      ....        .....    ....

"ம்...கருன வையி"

....      ....        .....    ....
"அந்த அரவா, காவா நெல்ல அள்ளி தனியா கொட்டு"
....      ....        .....    ....

"காத்து அடிக்குது பாரு வாரி உடு...வாரி உடு...."

....      ....        .....    ....
என்னடா....குள்ளா...இருவது மூட்டையாவது தேறுமா....?"

"பொகையான் அடிச்சிட்டுதுங்க பெரியாண்ட...."
"யூரியாவ திட்ட மட்டமா போடுனும்...மின்னபின்ன செத்திருந்தால்ல சுடுகாட்டுக்கு வழி தெரியும்"

....      ....        .....    ....

"இன்னும் ஒரு தரம் மிம்மாரிய கழிங்கடா...."
....      ....        .....    ....
"சுருண வச்சதோட கழிச்சிங்கள...?"
....      ....        .....    ....
"தா...சாணி கெடக்கு பாரு புள்ளியாரு புடிச்சி ஒரு அருவம் பில்ல சொருவு....சனி மூலையில வையி"
....      ....        .....    ....

"பரைய எடுத்து அள"

"குள்ளன் அளக்க அளக்க ஒவ்வொரு பரைக்கும் ஒரு குத்து நெல்லை அள்ளி எண்ணிக்கைக்காக வைத்தாள் முத்தம்மா.

சாக்குகள் நிரம்ப நிரம்ப பட்டரை காலியானது.  குள்ளனின் நெஞ்சில் உலக்கை போட்டு இடித்தது.

நெற்குவியல்களை எண்ணிப் பார்த்துவிட்டு "கொல்ல வாரம் எட்டு மூட்டை, தண்ணிவாரம் பத்து மூட்ட, வண்டி வாடக ரெண்டு மூட்ட சரிதான...?" என்றார்.

"ரெண்டு மூட்டயாவது உட்டு குடுங்க பெரியாண்ட. அடுத்த போவத்துல சேத்து குடுத்துடுறன்"

"என்னா மசுருக்குடா... ஒனக்கு குத்துவைக்கு உட்டதுக்கு தெண்டம....?"

"பொகையான் அடிச்சிட்டுதுங்க ....எனக்கு ஒன்னும் மீறலன்னாலும்....கூலி நெல்லாவது உட்டுகுடுங்க சாமி"

"அன்னிக்கே பேசிதாண்ட உட்டன்.  நீ கூலிதாங் குடு எதாவது செய்யி. நான் என்னமோ ஒன்ன ஏமாத்தி வாங்கிகிட்டு  போறாபல பேசுகிறிய...ஒன்னுகிட்ட குத்துவைக்கி உட்டம் பாரு ஏம் புத்திய செருப்பால அடிக்கனும்டா"

"அய்யய்யோ....ஏங்கசாமி பெரிய வாத்தையெல்லாம் பேசுறிங்க...நீங்க நெல்லா இருப்பிங்க, நீங்களே கொண்டுகிட்டு போயி சாப்புடுங்க...."

"அடி....செருப்பால...பற  தேவடியா...."

"என்ன ஏன் அடிக்கனும்....கையால ஆவாதவன்லாம் எதுக்குடா பயிறு வைக்கனும் அவன அடிங்க..."

"இந்த பறக் கழுதைகிட்ட என்னாடா பேச்சு....நெல்ல ஏத்திகிட்டு வாங்கடா"
துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார் பெரியாண்டை.

"குள்ள சாடு மாறி...வெக்குனவ(ம்) வெளாம்பழத்த  தின்னமேரி நிக்குறாம் பாரு"

....நஞ்ச தின்னவன...பொறம்போக்கு மரத்தபாத்து  நாணுக்கியண்டா....த்தூ....!

                                                                               0000


மதம் மாறினால் பொங்கல் கொண்டாடக் கூடாதா....?
  ' மதம் மாறினால் மனமுமா மாறவேண்டும்...?'
     கிருஸ்த்துவாக மதம் மாறிய எனது நன்பர்  வீட்டிற்கு சென்றிருந்தேன். பொங்கல் பற்றி பேச்சு வந்தபோது, 'நாங்களெல்லாம் பொங்கல் கொண்டாடுவதில்லை' என்றார்.  கேட்டால் கிருத்துவ மதத்தில் பொங்கல் கொண்டாடுவது பற்றி இல்லை' என்றார்.

மூளையை மதத்திற்கு அடகு வைத்தவரை ஒரு அரை விடலாம் போல் இருந்தது. அன்னிய மதமான கிருத்துவத்தில் தமிழரின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும்....? என்று கூட அவர் சிந்திக்கவில்லை!.

கேரளாவில் மலையாள மொழி பேசும் அனைத்து  மதத்தினரும் அனைத்து சாதியினரும் 'ஓணம்'  பண்டிகையை கொண்டாடுகின்றனர்.   அங்கு மத பாகுபாட்டை யாரும் பாரம்பரிய பெருவிழாவில் காட்டுவதில்லை. கிருத்தவர்களும், முகமதியர்களும் அவரவர் முறைப்படி 'ஓணம்' கொண்டாடுகின்றனர்.  ஆனால் இங்கு....? 

ஏற்கனவே சாதியால் மதத்தால் நெல்லிக் கனியாக சிதறிக் கிடக்கும் தமிழர்கள், தங்களது பாரம்பரியமான மரபு சார்ந்த 'தமிழர் திருநாளை' மதத்தின் அடிப்படையில் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும்?. 

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த 'ஆதி தமிழன்' தன்னை பலவகையிலும் காத்து வாழவைத்த  இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறான். மனிதருடன் மனிதர் தொடர்பாடலை மேற்கொள்ளுவதற்கும் இயற்கையுடன் தொடர்பாடலை நீடிப்பதற்கும், தமிழர் பயிர்வளப் பண்பாட்டிலே 'பொங்கல்' என்ற குறீயிடு தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சூரியன் இன்றி இவ் உலகம் இயங்காது என்பதை புரிந்துவைத்த தமிழன், முதல் நாளில் (பெரும் பொங்கல்)  அதற்கு நன்றி சொல்கிறான். தனக்காக உழைத்து தன்னையும் குடும்பதினரையும் வாழவைக்கும் 'ஆவினங்களுக்கு' ஒரு நாள்  (மாட்டு பொங்கல்),  தங்களது குலத் தெய்வத்தையும், மறைந்த முன்னோர்களுக்கும் நன்றி தெரிவிக்கவே மூன்றாம் நாள் (கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல்) கொண்டாடுகிறான்.

தமிழர்களின் பூர்வீகத் தொழிற்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறப்பார்ந்த நிலையிலே பொங்கல் தோற்றம் பெற்றது என்று கூடச் சொல்லாம். உழும் கலப்பையின் உருவாக்கம், சில்லின் சுழற்சியைப் பயன்படுத்தி  மண் பாண்டங்களை உருவாக்குதல், எருதின் பலத்தை ஆற்றலாகப் பயன்படுத்தி உற்பத்தியை பெறுக்குதல் என்று 'பொங்கல்' தமிழனின் தொழிற் நுட்பத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.  அதனாலயே பொங்கல் ஒரு 'Thanks Giving'  பண்டிகையாகவும் பார்க்கப்படவேண்டும்.

இப்படி இயற்கைக்கு  நன்றி தெரிவிக்கும் விழாவாகவே 'பொங்கல்' கொண்டாடப்பட... இதில் எங்கிருந்து வந்தது மதமும் சாதியும்?  தமிழை தாய் மொழியாக கொண்ட எவரும் அவரவர் மதத்தின வழக்கப்படி பொங்கல் கொண்டாலாமே....? இதில் ஏன் தயக்கமும் வெட்கமும்?! 

அனைத்து மதத்தினரும் சாதியினரும் தமிழராய் இணைந்து கொண்டாடும் பொங்கல் பெரு நாளே  தமிழர் திருநாள்  என்பதை ஏன் இந்த மதம் மாறிய தமிழர்கள் மறந்துவிட்டார்கள்....?


வியாழன், ஜனவரி 12, 2012

புத்தகக் காட்சியில் முதல் ரவுண்ட்!
             மதியம் அமிஞ்சிக்கரையில் உள்ள 'ஆற்காடு மெஸ்'ஸில் மட்டன், வஞ்சிரம் சாப்பிட்டுவிட்டு, பொறுக்க... அஜந்தா பாக்கும், 'தங்க ராஜா' வென்சுருட்டும் பற்ற வைத்து,  ஆழ இழுத்து புகை விட்டபோது மணி மூன்று.  இப்போ போனால் புத்தகக் காட்சிக்கு அவ்வளவாக கூட்டம் இருக்காது என்று நினைத்து பைக்கை மெல்ல உருட்ட....ஏனோ முன் வாயில் வழியாக விடாமல் 'புதிய ஆவடி சாலை வழியாக உள்ளே போங்க...' என்றார்கள்.

செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் ...பொடியன்கள் வாலிபால் விளையாட...அருகில் விஸ்வரூபமாய் விரிந்திருந்தது 35வது சென்னை புத்தகக் காட்சி.

வாயிலில் வழி மறைத்தவரிடம் 'பிரஸ்' என்றேன். 'டோக்கன் இருக்கா அப்பு... டோக்கன்... டோக்கன்'  என்று சினிமாவில் கேட்பதுபோல் என்னைப் பார்த்தார்.  அவரை தாண்டி நின்ற குமரன் பதிப்பக வைரவன் கை அசைக்க ... உள்ளே சென்றபோது பப்பாசி தலைவர் ஷண்முகம் நின்றுக் கொண்டு இருந்தார். அவருக்கு ஒரு சலாம் வைத்தேன். அருகில்  ஷாஜகான் (யுனிவர்ஷல் பப்ளிகேஷன்ஸ்)  நின்றுக் கொண்டு இருந்தார்.

 "சார் எங்க... கார் பாஸ், பிரஸ் பாஸ்? "  என்றேன்.

"நீங்க எங்க வந்திங்க...இப்பதான் வர்றீங்க. வந்தாதானே தர முடியும்" என்றார்.

அதுவும் வாஸ்தவம்தான்.
  

புத்தகக் காட்சியின் தொடக்கத்தில் தினமணிக்கும் பப்பாசிக்கும் ஒப்பத்தம் போட்டுவிட்டு விளம்பரம், ஆர்ச் மற்றும் அரங்கு   வைக்க கடிதமும் கொடுத்து...ஒப்புதலும் வாங்கிக் கொடுத்துவிட்டு, அடுத்த வேலைக்கு சென்று விட்டேன். அதனால்  ஆரம்பித்து 5 நாட்கள் கழித்துதான் அங்கு செல்ல முடிந்தது.  இது ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான். வருடா வருடம் அவர் கேட்பதுதான். "எங்கே ஆளையே காணும்...?" என்று.

சரி விடுங்கள்....இந்த வருடம் முதல் ரவுண்டில் நான் வாங்கிய புத்தகங்கள்.  1) 'கிளியோபாட்ரா'
     உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய
     சரித்திரம்.
     விலை ரூ.95/-

2) 'பேய்க் கதைகளும்
     தேவதைக் கதைகளும்'
- ஜெயமோகன்.
     விலை ரூ.100/-

3)  'எக்ஸைல்' - சாரு நிவேதிதா
     விலை ரூ.250/-

4) 'ராஜராஜ சோழன்' - ச.ந.கண்ணன்
     சோழ சாம்ராஜ்ஜியத்தின் கம்பீர 
     அடையாளமான    ராஜராஜனின் வீர வரலாறு.
     விலை ரூ.90/-

5) ஜெயமோகன் - குறு  நாவல்கள்
    விலை ரூ.200/-
  
மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் கிழக்கு பதிப்பக வெளியீடு                     (Dial for Books : 044 94459 01234 / 9445 979797).  இந்த புத்தகங்கள் வாங்கியதற்கு ரூ.395/- விலையுள்ள 'Health wise Handbook' என்ற ஆங்கில புத்தகத்தை இலவசமாக தந்திருக்கிறார்கள். இது தெரியாமல் இந்தப் புத்தகம் எப்படி  வந்தது என்று ரொம்ப நேரம் குழம்பிக்கொண்டு இருந்தேன். பிற்பாடு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போதுதான் அது இலவசம் என்றார்கள்.  "யப்பா....சொல்லிட்டு கொடுங்கப்பா?!"  
 
  

6) ஊரும் சேரியும் (கன்னட தலித் சுயசரிதை)
    - சித்தலிங்கையா
   விலை ரூ.75/-

7) 'வன்மம்'   - பாமா.
     விலை ரூ.80/-

8) காக்கை சிறகினிலே இலக்கிய மாத இதழ்.
    விலை ரூ.40/-

மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் விடியல் வெளியீடு. 'சிலிக்குயில் புத்தகப் பயணம்' அரங்கில் வாங்கியது.

   
9)  'கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும்'   
        -சு.கி.ஜெயகரன்.
      வரலாற்றைச் சுமந்த மாந்தர்களின் வரலாறு. 
       விலை ரூ.110/-

10) குடுகுடுப்பைக்காரர்  வாழ்வியல்.
        - ந. முருகேச பாண்டியன்.
         விலை ரூ.60/-

11)  'யாமம்'
         -எஸ்.ராமகிருஷ்ணன்
         'சரித்திரத்தின் வழியே புதிர் மிகுந்த அந்தரங்கத்தின் கதை'. 
       விலை ரூ.275/-
 

   அடுத்த ரவுண்டு நாளை....?!
செவ்வாய், ஜனவரி 10, 2012

இணையத்தை கலக்கும் 'யாழ்பாண கொலைவெறி' !
இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி ஸ்டாலின் எழுத்தில், இசையில் வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடல் இணையத்தின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பிரபலமாகி வருகிறது.

முழுக்க, முழுக்க தமிழில் "யூ டியூப்பில்' வெளியாகியுள்ள "கொலைவெறிடா' பாடலை இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் கேட்டு ரசித்துள்ளனர். யாழ்ப்பாணம் செயின்ட் பேட்ரிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர் இப்போது கணினித் துறையில் பணியாற்றி வருகிறார். இசைஆர்வம் காரணமாக அவ்வப்போது சில கவிதைகளுக்கு இசைவடிவம் கொடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில், நடிகர் தனுஷின் "கொலைவெறி' பாடலின் அடிச்சுவடைப் பின்பற்றி ஜெர்ரி வெளியிட்டிருக்கும் "யாழ்ப்பாணத்திலிருந்து கொலைவெறிடா' பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாடலின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் நகர எல்லையில் சிங்கள மொழியில் வைக்கப்பட்டிருக்கும் எழுத்துப் பலகை காண்பிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, "என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா' எனத் தொடங்கும் பாடல் வரிகள் ஒரு தமிழ் இளைஞரின் கோபத்தை ஆக்ரோஷமாகக் கொப்பளிக்கிறது.

செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் 
கொஞ்சம்...
கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?

என்று இந்தப் பாடலின் வழியாக 28 வயதாகும் யாழ்ப்பாணத் தமிழர் ஜெர்ரி கேட்கும் கேள்விகள் உலகத் தமிழர்களின் காதுகளில் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.உள்நாட்டு போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழின் அடையாளம், தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இப் பாடல் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே தனுஷின் "கொலைவெறிடி' பாடலுக்கு இணையாகப் இந்தப் பாடலும் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. 

நன்றி தினமணி.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

இதுவல்லவோ சுயசரிதம்!

நினைவு அலைகளுக்கு தினமணியில் நான் எழுதிய கட்டுரை  


       சதா ஓசை எழுப்பி கரையைத் தொடும் அலைகள், பார்க்க மகிழ்ச்சியாகத் தெரிந்தாலும் உண்மையில் ஆக்ரோஷம் நிறைந்தது என்பதை நாம் அறிவோம். கொஞ்சம் பிசகினாலும் நம்மை ஆக்ஷ்கரிக்கக் கூடிய ஆற்றல் அலைகளுக்கு உண்டு. அத்தகைய ஆபத்து சில புத்தகங்களுக்கும் உண்டு!.   படிக்க படிக்க... அவை நம்மை சட்டென்று  உள்ளே இழுத்துக் கொள்ளும். புரட்டி எடுத்து நம்மை அதன் போக்கில் கொண்டு சென்று விடும்.

 அத்தகைய ஆபத்து நிறைந்தது டாக்டர் தி.சே.செள. ராஜனின் தன் வரலாறு
நூலான 'நினைவு அலைகள்'  'பின்ன... கல்கியே இதில் மாட்டிக்கொண்டு
தப்பிக்க முடியாமல் போய்விட்டது...! என்றால் பாருங்களேன்!'.
  
அச்சு வடிவில் படிக்க....

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் இரவு 1 1/2 மணிக்கு வீடு திரும்பிய
'கல்கி'  கிருஷ்ணமூர்த்தி மேஜை மேல் இருந்த "நினைவு அலைகள்" என்னும்
பைண்டு முடியாமல் இருந்த புத்தகத்தை எடுத்து  ' முதல் பள்ளிக் கூடம்'
என்னும் முதல் கட்டுரையை படிக்க ஆரம்பித்தார்,  1937இல் ராஜாஜி மந்திரி
சபையில் சுகாதார மந்திரியாகி சபை கூட்டத்திற்கு வந்ததுவரை... ராஜன்
எழுதியதை படித்து முடித்தப் போது விடியற்காலை 5 மணி.  சுமார்  3  1/2
மணி  நேரத்தில் 335 பக்கங்களைப் படித்துவிட்டு உடனேயே 'நினைவு அலைகள்' நூலுக்கு  முன்னுரையை எழுதி கொடுத்திருக்கிறார்.   கல்கியின் முன்னுரையே இன் நூலுக்கான அளவையாக மாறி முன் நிற்கிறது.

 பிரபல மருத்துவரான தி. சே.செள. ராஜன் மருத்துவ சேவையையே முழு மனதாகக் கொண்டவர். தனது அயராத உழைப்பினால் அயல் நாடுகளில் பணி புரிந்து, பின்னர் ராஜாஜியின் அமைச்சரவையில்  சுகாதாரத் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர்.   அவர் எழுதிய தன் வரலாறு கூறும் 'நினைவு அலைகள்'  மீள் பதிப்பாக இப்போது சந்தியா பதிப்பகத்தாரால் வெளியீடப்பட்டுள்ளது. விலை ரூ225/-

கிட்டத்தட்ட 64  ஆண்டுகள் கழித்து ' நினைவு அலைகள்' மீள் பதிப்பாக
வெளிவரக் காரணம், அதன் தடையில்லா எழுத்தோட்டம்.
பள்ளிக் கூட வாழ்க்கையில் தொடங்கும் வரலாறு, அவரது திண்ணை பள்ளிக் கூட அனுபவம், கல்லூரி வாழ்க்கை, மருத்துவம் படித்து ராணுவ மருத்துவ மனையில் வேலைபார்த்தது, பின்னர் இங்கிலாந்தில் மருத்துவம் படிக்கச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம், லண்டனில் வ.வே.சு. ஐயர், வீர சாவர்க்கர்
 நடத்திய    இந்தியா விடுதியில் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இருந்து
தனது தொழில் படிப்பில் கவனம் செலுத்தியது,  பின்னர் ஸ்ரீரங்கம் திரும்பிய
போது கடல் தாண்டிச் சென்றதால், வைதீக பிராமணர்கள் அவரை தள்ளிவைத்தது என்று அனுபவ ரேகைகள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றது.

டாக்டர் ராஜன் இன் நூலை சுய சரிதமாக எழுதாமல் ' நினைவுத் தொகுப்பாக'
எழுதியதே இதன் வெற்றிக்கு காரணம் என்கிறார், கா.நா.சு.

டாக்டர் ராஜன் தனது நினைவு அலைகளில் மிக மெதுவாக நீந்துகிறார்.
வாசகனுக்கு புரிபடும் விதத்தில் மிக நெருக்கமாக அவனுடன் உரையாடுகிறார். புத்தகம் என்றால் இதுவல்லவா புத்தகம்?! சுயசரிதம் என்றால் இதுவல்லவா சுயசரிதம்?!  எழுதியவரின் உள்ளத்தோடு நம்முடைய உள்ளமும் ஒட்டி ஒன்றாகி விடுகிறதே என்று சிலாகித்துப் பேசுகிறார் கல்கி.

மீள் பதிப்பாக வந்திருக்கும் 'நினைவு அலைகள்' நம்மை நிச்சயம் உள்ளே
இழுத்துக்கொண்டு போய்விடும்.

சென்னை புத்தகக் காட்சியில் அரங்க எண்: 94 & 95.
தொலைபேசி: 044 24896979
Email: sandhyapublications@yahoo.கம
www. sandhyapublications.com


திங்கள், ஜனவரி 02, 2012

'வந்துவிட்டது... தமிழ் நாள்காட்டி!'

    மிழர் அனைவருக்கும்  இத் தகவல் சேரவேண்டும் என்பதால், இந்தப் பதிவை தமிழன் வீதி மறு பிரசுரம் செய்துள்ளது.   மறு பிரசுரம் செய்ய ஒப்புதல் வழங்கிய ஐயா சுப.நற்குணன், (திருத்தமிழ்)., அவர்களுக்கு எனது  மனமார்ந்த  நன்றிகள் பல....!  
மற்ற பதிவர்களும் இதை மறு பிரசுரம் செய்து தமிழ் நாள்காட்டியை, தமிழரிடையே பரப்புவோம்.  
 
 
நாள்காட்டி தோற்றம்
         தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஆறாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. 
மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார். 2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தமிழ் நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணி நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்தந்து குறிப்பிடலாம்.
2012 சனவரித் திங்கள் 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2043 ஆகும்.
தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. 

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 
நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்:-
1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.
2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.  

  
உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.
இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.

இந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.
  • நாள்காட்டி விலை: RM5.00 (ஐந்து ரிங்கிட்) மட்டுமே.
  • தொடர்புக்கு: தமிழியல் ஆய்வுக் களம் - Persatuan Pengajian Kesusasteraan Tamil, No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.
  @சுப.நற்குணன், மலேசியா.

நன்றி: திருத்தமிழ்.

 


கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...