தினமணியில் எனது எழுத்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணியில் எனது எழுத்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 03, 2017

விபத்து தரும் பாடம் - தோழன் மபா


தினமணியில் வந்த கட்டுரை

By தோழன் மபா  |   Published  in Dinamani on : 29th June 2017 01:46 AM  |

   புனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

லாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகில் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.


கோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி
சுற்றி வளைத்த தீ










சுவடுகள்
அருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.
இந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.

அப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.

உடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.

இந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.
பெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின. 

எப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.

சுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மாகாண அரசு.
புனித ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.

மக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது?
காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.

போலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.

போலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது?

நமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட
நெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.

இத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

-நன்றி தினமணி

திங்கள், நவம்பர் 16, 2015

இது லா.ச.ரா நூற்றாண்டு!.


                ந்த நூற்றாண்டின் சொல்லாடல் மிக்க எழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு இது.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916 - அக்டோபர் 30ம் தேதி தமிழ் நாட்டில், லால்குடியில் பிறந்தார்.  200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளர்.  

தினமணி கதிரில் நான் எழுதிய  கட்டுரை!.
தனது 17வது வயதில் இருந்து எழுத தொடங்கிவிட்ட லா.ச.ரா தமிழின் தவிற்க முடியாத தனித்துவமிக்க எழுத்தாளர். தனது கவித்துவமான எழுத்து நடையில், புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தனது எழுத்தில் வாரி இறைத்தார். புரிந்தவன் புத்திசாலி, புரியாதவன் அபாயக்கசாலி என்ற பேதத்தின் அடிப்படையில் அவரது எழுத்துகள் துலாக்கோலில் அளவிட முடியாதவையாக இருந்தன.

1989ல் 'சிந்தா நதி' கட்டுரை தொகுப்பிற்காக லா.ச.ராவிற்கு சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது.  தினமணி கதிரில் வாரம் இரண்டு பக்கங்கள் எழுத சொன்ன போது முதலில் மறுத்த லா.ச.ரா பின்னர் ஒப்புக்கொண்டு எழுத தொடங்கினார். சிந்தா நதி 48 வாரங்கள்  தினமணி கதிரில் அலைகடலென புரண்டு மோதியது.  அதன் பிரவாகத்தில் காடுகள், மலைகள், நகரங்கள், மனிதர்கள், உணர்வுகள்,  என்று  பூமிக்கு மேல் உள்ள அனைத்தையும் இழுத்து சென்றது. இன்றளவும் இணையதள எழுத்துகளுக்கு 'சிந்தா நதி'யே முன் நதி, மூத்த நதி!.  கட்டுரையை கதை போலவும், கதையை கட்டுரை போலவும் சொல்லும் உத்தியை அவர் சிந்தா நதி முழுவதும் படரவிட்டிருந்தார். அதன் படிமங்களே இன்றும் ஆழமாய் படிந்துக் கிடக்கிறது. எல்லாம் அவரிடத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்ற!. லா.ச.ராவின் எழுத்துகள் புரிதலுக்கு அப்பாற்பட்ட அனுபவ தரிசனங்களை தரவல்லவை!

சிந்தா நதியில் 'சொல்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்:

'பிற வாயிலாகப் பிறந்த வார்த்தைகளின் தனித் தன்மையை அதனதன் ஓசையினின்று தவிர்த்து? அதனதன் மோனத்தில் நிறுத்தி, த்வனியை அடையாளம் கண்டு கொண்டதும், த்வனி தீட்டும் மறு ஓவியங்கள் பயக்கும் மயக்கும். புலன் மாறாட்டத்தில் செவி பார்க்கும், கண் கேட்கும், உணர்வு மணக்கும்.

பாதங்களடியில் மணியாங்கற்களின் சரக் சரக்...

தருக்களின் இலைகளினூடே, காற்றின் உஸ்!...

அந்தி வேளையில் விண்மீன்கள் ஜரிகை கட்டிய இருள் படுதாவின் படபடப்பு.

நட்சத்திரங்கள் போன்று மின்னும் எழுத்துகள் நம்மை விட்டு விலகியே இருக்க விரும்புகின்றன. அவை கைகளுக்குள் தட்டுப்படாதவரைக்கும்தானே அவை நட்சத்திரங்கள்?!.

ரசிக்கத்தக்க அளவீடுகளில் அவரது பாணி எழுத்துகள் பிரிதொருவர் தொடராவண்ணமே இருக்கின்றன.

"என் எழுத்துகள் புரியவில்லை என்கிறார்கள். 'புரிந்தது புரியாதது இவை இரண்டுமே தற்காலிக நிலைகள். இன்றைக்கு புரியாவிட்டால் நாளைக்கு புரிகிறது. இல்லாவிட்டால் நாளைமறுநாள். அட, கடைசிவரை புரியாவிட்டால்தான் என்ன ? இருந்து விட்டுப் போகட்டுமே எழுதுபவனுக்கே எல்லாம் புரிந்து விடுகிறதா என்ன?' புரிவதைக்காட்டிலும் வாசகன் உணரக்கூடியது, உணர வேண்டியது விஷயத்தில் தாக்குதல் அந்த முதல் பாதிப்பு Impression, Impact ரத்தத்துடன் கலந்து உள்ளத்தில் ரஸாயணம் நிகழ்வது.

நான் ஜனரஞ்சகமான எழுத்தளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு அப்படியே, அதனாலயே பிரபலமாகிவிட்டவன். ஏதாவது புரியும் படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்துவிட்டது என்று என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்துவிடுவார்கள். இரண்டு மூன்று பேர் சொல்லிவிட்டார்கள் எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடில்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?".

லா.ச.ராவின் எழுத்துகள் ஆத்ம சுத்திகரிப்பை செய்யக் கூடிய மந்திரத்தை பெற்று இருக்கிறது. கதைகளின் தோதான இடங்களில் அதை அவர் படைத்துவிடுகிறார். தனது முதல் கதையான ஜனனியில் இவ்வாறு எழுதுகிறார் "தேவி, நீ இதை அறிய வேண்டும். பொறியுள் எலி அகப்பட்ட பிறகு. கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு, அது விடுதலைக்குக்கூட பயப்படுகிறது."

மானுடத்தின் மீதான விடுதலையை இதைவிட எளிதான புரிதலில் யாரும் சொல்லிவிட முடியாது. அகப்பட்டுக்கொண்ட எலி போன்ற அவஸ்த்தையை பெற்ற பிறகே விடுதலைக்கான வாசலை அடைகிறோம். ஆனால் அந்த கதவு ஏற்கனவே திருந்துதான் இருக்கிறது என்பதை உணராமலேயே காலம் நம்மை கடத்திவிடுகிறது.

லா.ச.ரா முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கினார். பாபுஜி (Babuji) என்ற கதை Short Story என்ற பத்திரிகையில்  1934ல் வெளிவந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் யானைக்கு மதம் பிடிப்பது பற்றிய கதை அது!. அதைத் தொடர்ந்து அவரை தமிழ் முழுவதுமாய் சுவிகரித்துக் கொண்டது.  அவரை பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக் கொள்வதுமில்லை. பல சிறுகதைகள் அவரது அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன் நினைவை பழக்கிக்கொண்டவர் . அவர் கதை எழுத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார் என்று நினைவு கூறுகிறார் லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி.

நன்றி தினமணி கதிர். 
15.11.2015.

 ()()()()()

இனி லா.ச.ரா நூற்றாண்டு விழா தொகுப்பு...

விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதிதா உரையாற்றுகிறார்.
அருகில் இடமிருந்து: லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், லா.ச.ராவின் புதல்வர் லா.ச.ரா.சப்தரிஷி, கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன், விமர்சகர் முருகேச பாண்டியன்.  (Pix courtesy: Charuonline.com)


        ழுத்தாளர் லா.ச.ராவின் நூற்றாண்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், அண்மையில்  நடைபெற்றது.  டிஸ்கவரி புத்தக நிலையம் இன் நூற்றாண்டு விழாவினை முன்னெடுத்து நடத்தியது. பத்திரிகைகள் அல்லது பெரிய அமைப்புகள் செய்ய பணியை டிஸ்கவரி வேடியப்பன் செய்திருப்பது பாராட்டுக்குறியது. 


நூற்றாண்டு விழாவில் லா.ச.ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை லா.சா.ராவின் புதல்வர் சப்தரிஷி வெளியீட லா.ச.ராவின் துணைவியார் ஹைமவதி லா.ச.ரா  பெற்றுக் கொண்டார்.  383 பக்கங்களை கொண்ட நேர்த்தியான இத் தொகுப்பு புதிய வாசகர்களை தன் பக்கம் இழுக்கும் சக்தி கொண்டது.  டிஸ்கவரி தனக்கான புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

"லா.ச.ராவை வாசிக்குபோதெல்லாம் புத்தகத்தின் பக்கங்களில் அடிக் கோடிட்டு குறித்துக் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தளவிற்கு வாசகனின்று விட்டு விலகாத எழுத்து அவருடையது' என்றார் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது சிறப்புரையில்.

கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார்.  அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், விமர்சகர் முருகேச பாண்டியன் மற்றும் பேராசிரியர் ராமகுருநாதன் ஆகியோர் லா.ச.ராவைப் பற்றி  நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சிகளை கவிஞர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார். லா.ச.ராவின் நூற்றாண்டு விழாவினை கணையாழி, டிஸ்கவரி புக் பேலஸ், ஆம்பல், யாவரும் டாட் காம் ஆகியன ஒருங்கிணைந்து நடத்தின.

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

புத்துயிர் பெறுமா கபடி...?


  சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக                     
மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது.                       
 

          
 (கடந்த சனிக்கிழமையன்று தினமணியில் வந்த எனது கட்டுரை )
          றுதிக் கட்டத்தை எட்டிவிட்டது புரோ கபடி லீக் போட்டி. கடந்த மாதம் தொடங்கிய புரோ கபடி லீக், கபடி விளையாட்டில் புதிய மின்னலைப் பாய்ச்சியிருக்கிறது. கிரிக்கெட்டை தொடர்ந்து கபடி விளையாட்டிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புரோ கபடி லீக் போட்டிகள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது கபடி ஆர்வலர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திருக்கிறது.

 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 8 அணிகள் இப் போட்டிகளில் மோதுகின்றன. ஆனால், கபடியின் தாயகமான தமிழ்நாட்டிலிருந்து எந்த ஓர் அணியும் கலந்துக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று.

 சடுகுடு ஆடி வந்த முந்தைய தலைமுறை குடுகுடு கிழங்களாக மாற...மாற.. சடுகுடுவும் கிடுகிடுவென ஆடிப்போய் கிடக்கிறது. தொன்மை இனமான தமிழினத்தின் வீர விளையாட்டான சடுகுடு என்ற கபடி இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் அழிந்துக் கொண்டு வருகிறது.

 காசு செலவு இல்லாத விளையாட்டு இது. உடல் வலு, மூச்சுப் பயிற்சி என்று கூடுதல் பலனும் நமக்கு கிட்டும். 

 உத்தி பிரித்து கபடி...கபடி... என்று தொடையைத் தட்டிக் கொண்டு அடங்கா ஆவேசத்துடன் எதிர் அணிக்குள் புகுந்து களமாடினால் சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஹோவேன்று ஆர்ப்பரிக்கும். அப்படி ஓர் உணர்ச்சிமிக்க விளையாட்டு கபடி.

 அன்றைய நாள்களில் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் கபடி போட்டிகள் நடைபெறும். தெருவுக்குத் தெரு ஒரு கபடி அணி இருக்கும். பகல், இரவு ஆட்டமாக போட்டியை இரண்டு நாள் நடத்தும்போது, ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருக்கும். 

 ஆனால் இன்றோ, தமிழர்களின் வீர விளையாட்டான கபடியின் நிலை... நினைத்தாலே நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருக்கிறது. மனிதனின் நேரத்தை விழுங்கும் கிரிக்கெட்டின் வருகைக்குப் பின்னர்தான் கபடி களையிழந்து போய்விட்டது.

 தமிழகத்தில்தான் கபடி விளையாடுவது குறைவாக உள்ளதே தவிர, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், பிகார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போற்றப்படக் கூடியதாக கபடி வாழ்கிறது. வங்கதேசத்தில் கபடி தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், ஈரான், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்ச்சி பெற்ற கபடி அணிகள் இருக்கின்றன. 13 உலக நாடுகளில் கபடி விளையாடப்படுகிறது என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
 இந்தியாவுக்குத் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி தொடர்ந்து ஏழு முறை தங்கப் பதக்கம் வென்று வருகிறது. 

 1985-இல் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி முதல் முறையாக உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 1990-இல் நடைபெற்ற 11}ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கபடி களம் இறக்கப்பட்டது.

 ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய உள்விளையாட்டு அரங்கப் போட்டி, ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி என்று மூன்று பிரதான விளையாட்டுப் போட்டிகளில் கபடி சேர்க்கப்பட்டது. இம் மூன்றிலும் சேர்க்கப்பட்ட ஒரே விளையாட்டு கபடி மட்டுமே. இதுவரை கபடிக்காக நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோப்பையை இந்தியாவே வென்றிருக்கிறது. 

 இந்த ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இது கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 தற்போது நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் பல்வேறு அணிகளுக்காக புகழ்பெற்ற தமிழக வீரர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த முறை புரோ கபடி போட்டியில் பட்டம் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர வீரர்கள் இல்லாத ஜெய்ப்பூர் அணியை அவர் புரோ கபடி லீக் போட்டியின் முதல் சாம்பியனாக மாற்றினார்.

 இந்தியாவின் சிறந்த தடுப்பாட்டக்காரரான சேரலாதன் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகின்றார். தற்போதைய போட்டியில் முன்னணியில் இருக்கும் யூ மும்பா அணியில், தேர்ச்சி பெற்ற தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். தமிழக வீரர்களின் ஆட்ட பாணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

 வளமையான கபடி பாரம்பரியம் கொண்ட தமிழகத்திலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் புரோ லீக் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்திலிருந்து ஓர் அணியும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்பது நெருடலான ஒன்று. ஐபிஎல் போன்றே இதிலும் அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.

 அப்படி இருக்க தமிழகத்திலிருந்து ஒருவர் கூடவா தமிழகத்தின் பெயரில் அணியை வாங்க முடியவில்லை? ஏலத் தொகை அப்படி ஒன்றும் கோடிகளில் இருக்கவில்லை. லட்சங்களில்தான் இருக்கின்றன. தமிழக நலன் சார்ந்த எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்த நிகழ்வு கவனத்தில் வராதது மிகவும் கொடுமை.

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஏ.கே.எஃப்.ஐ.) இணையதளங்களிலும், கபடிக்கான விக்கிபீடியாவிலும் கபடி இந்தியாவின் பழைமையான விளையாட்டு என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய அளவிலோ அல்லது உலக அளவிலோ கபடி தமிழர்களின் விளையாட்டு என்பதைப் பதிவு செய்ய நாம் தவறிவிட்டோம்.

 கைப் பிடி, கைப் பிடி என்று சொல்லே கபடியாக மாறியது என்று இங்கு எத்தனை பேருக்குத் தெரியும். காலத்தே பதிவு செய்யாத நமது பிறவிக் குணத்தால் நமது பாரம்பரியமான கபடி விளையாட்டை தாரைவார்த்து இருக்கிறோம். 

 நமது வரலாற்றை நாம் மறந்தால் வரலாறு நம்மை மறந்துவிடும். எதிர்வரும் ஆண்டுகளிலாவது புரோ கபடி லீக் போட்டியில் தமிழகத்திலிருந்து கபடி அணிகள் இடம்பெற வேண்டும் என்பதே சாமானிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

புதன், பிப்ரவரி 04, 2015

'ரத்தம் விற்பவனின் சரித்திரம்'



           ரும்பு திறை கொண்ட நாட்டிலிருந்து, ரத்த வாடை வீசும் நாவல் வருவதென்பது இயல்பானதொன்று என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். இது அடக்குமுறை கவுச்சி வீசும் ரத்த சரித்திரம் அல்ல, உண்மையாகவே பஞ்சம் பிழைக்க தனது ரத்தத்தை விற்கும் ஒரு சாமானிய சீனனின் கதை!.

1994களில் வெளிவந்து சர்வதேச கவனத்தைக் கவர்ந்த யூ ஹூவாவின் 'கிராணிக்கல் ஆஃப் ஏ பிளட் மெர்ச்சண்ட்' என்ற நாவல்தான் தற்போது ரத்தம் விற்பவனின் சரித்திரமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் மைய பகுதியில் கதை நிகழ்கிறது.  இதுகாரும் திறக்கப்படாத சீனா கம்யூனிச கதைவுகளை சற்றே நெம்பி, நமது கையை பிடித்து சீனாவின் உள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார் யூ ஹூவா.

இந்தியாவை போலவே ஆணாதிக்க குடும்ப சூழலை பிரதிபலிக்கும் சீனாவில், சதாரண சீனர்கள் வாழும் தெருக்களிலும், வீடுகளிலும், உள் முற்றங்களிலும், உள் அறைகளிலும், அடுக்களைக்குமாய் நம்மை நகர்த்தி செல்கிறது கதை. அன்றைய காலகட்டத்தில் ரத்தம் விற்பது என்பது சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக இருந்தது. ரத்தம் விற்பது மூலமாக 35 யுவான்வரை கூலியாக தரப்பட்டது. இது ஆறு மாதங்கள் வயல்களில் விவசாயம் செய்தால் என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமானது.  வியற்வை சிந்தி கூலி பெறுவதும், ரத்தம் கொடுத்து பணம் பெறுவதும் ஒன்று போலவே கருதினர் அன்றைய சீனர்கள்.

மக்கள் தொகையில் உலகை மிஞ்சிவிட்ட ஒரு தேசத்தில் வறுமை என்பது வாசல்படி போன்றது.  பதற்றம் நிறைந்த மாவோ காலத்து சீனவின் குடும்ப வாழ்க்கையை முறையையும், இலகுவானதொரு அதினின்றும் சற்றே மாறுபாட்ட வாழ்வில கூறுகளையும் மிக நிதானமாக விவரிக்கிறார் யூ ஹூவா. வாழ்வின் படிமங்களையும் நுண்ணிய வாழ்வியல் முறைகளையும் மிக ஆனாயசமாக கடந்து  பயணிக்கிறது இன் நாவல்.

1960களில் பிறந்த  யூ ஹூவா  பிறந்தபோது நிலவிய கடும் பஞ்சம், லட்சக் கணக்கான சீனர்களை பலிகொண்டது. 1959ல் தொடங்கி மூன்றாண்டு  வரை பஞ்சம் நீடித்தது. அவரது மாணவப் பருவத்தில் சீனாவில் கலாச்சார புரட்சி நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டில் சீனர்கள் சந்தித்த துன்பியல் வாழ்க்கை முறையை விஷமத்தனமான நகைச்சுவையோடு சொல்கிறது இன் நாவல். 

ரத்தம் கொடுக்கும் முன்னர், சிறுநீர் கழித்துவிட்டால் அது ரத்தமாக மாறாமல் சிறு நீராக வெளியே வீணாக போய்விடும்  என்பதால் ரத்தம் கொடுக்கும்வரை சிறு நீர் கழிக்காமல் இருப்பது போன்ற கிராமத்து அறியாமை இன் நாவல் முழுவதும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. 303 பக்கம் கொண்ட இப் புகழ்பெற்ற நாவலை சந்தியா பதிப்பத்தினர் வெளியீட்டுள்ளனர். இன் நாவல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. இன் நாவலை எழுத்தாளர் யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.

யூ ஹூவா சீனாவின் மரபுகளை மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கை நச்சத்திரமாக துளிர்த்து இருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட, வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் பத்து நூல்களில் யூ ஹூவாவின் "ரத்தம் விற்பவனின் சரித்திரம்" இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மனித வாழ்வியலின் துயரங்களையும், தூசி படிந்த நினைவுகளையும் யார் சொன்னால் என்ன.....? எங்கிருந்து சொன்னால் என்ன.....? ரத்தம் விற்பவனின் சரித்திரம் சீன எல்லை கடந்து... இந்திய இதயத்தை தொட்டிருக்கிறது. படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் பிரபஞ்சமே எல்லை.!.

-தோழன் மபா.

திங்கள், பிப்ரவரி 10, 2014

உங்கள் வீட்டு வைத்தியர்.




                  மெத்த படித்த வைத்தியர் ஒருவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு, சதாசர்வக் காலமும் உடலை பேணுவது என்பது நீங்கள் பூர்வ புண்ணியத்தில் பெரும் பாக்கியம் பெற்ற மகா ஜனமாகத்தான் இருக்க முடியும்!. அதுவும் அவர் தமிழகத்தில் புகழ் பெற்ற மருத்துவர் என்றால் கேட்கவே வேண்டாம்.  நீங்கள் பெரும் கோடீஸ்வரராகத்தான் இருக்க முடியும்.

எந்த உபாதையும் இல்லாமல் மாடியிருந்து குதிக்கலாம், லட்டு லட்டாய் ஜிலேபியை முழுங்கலாம், உங்கள் காலைத் தூக்கி பின் பக்கமாய் கழுத்தில் போட்டுக் கொண்டு உஞ்சலாடலாம், திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு உப்புசத்திற்கும் பொருமலுக்கும் ஏழு வித்தியசத்தை எண்ணிக் கூறலாம். வைத்தியர் இருக்க கடவுள் எதுக்குன்னு கூட... நீங்கள் எகத்தாளம் போடலாம். இவை எல்லாவற்றிருக்கும்  டாக்டர் தி.சே.செள.ராஜன் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற நூல் உங்களிடம் இருக்கவேண்டும்!.

2012ம் ஆண்டு வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற டாக்டர் தி.சே.செள.ராஜனின் 'நினைவு அலைகளைத்' தொடர்ந்து, டாக்டர் தி.சே.செள.ராஜனின் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற அடுத்த  படைப்பினை வெளியீட்டுள்ளது சந்தியா பதிப்பகம். இன் நூலின் முதல் படைப்பு 1945ல் வெளி வந்திருக்கிறது. முதல் பதிப்பில் ராஜாஜியின்  முன்னுரையோடு இன் நூல் வெளிவந்திருக்கிறது. கிட்டதட்ட 69 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறார் இந்த வீட்டு வைத்தியர்'.

உதாரணாமாக.... இருதயம் பற்றிக் கூறும் போது, இருதயம் குவிந்த வடிவமுள்ளது. அதன் நுனி இடது மார்புக் கூட்டுகுச் சமீபத்தில் இருக்கிறது. ஒவ்வொரு தடவை இருதயம் துடிக்கும்போதும் அதன் நுனி, மார்புக்கூட்டில் வந்து முட்டுகிறது. அதற்கு இருதய முட்டுதல் (Heart Impulse)  என்று பெயர்.  இடது புறம் ஐந்தாவது ஆறாவது விலா எலும்புகளுக்கு மத்தியில் இது காணப்படும். காதைவைத்து பார்த்தாலும் அல்லது இருதய சோதினியை (Stethoscope) வைத்துப் பாத்தாலும் இரண்டு சத்தமும் கேட்கும்.  இந்த சத்தம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடுவில் சற்று ஓய்வுடன் இருக்கும். முதலில் கேட்கும் நீண்ட சத்தம் ஏற்றறைச் சுருக்கத்தினால் ஏற்படுகிறது. இரண்டாவது சத்தம் முக்கூற்று ஒரு வழி அடைப்பு முட்டி கொள்ளவதனால் உண்டாகிறது,  என்பது போன்ற மருத்துவ நுணுக்கங்களை நாம் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார் டாக்டர் ராஜன்.

நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருடம் கூடவே இருக்குந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இன் நூலை எழுதினார் என்று தனது முன்னுரையில் கூறுகிறார் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார். அந்தக் காலத்து நடையில் எந்த உருத்தலும் இல்லாமல் இந்த காலத்தில் படிப்பது என்பதே சிறந்ததொரு தருணம்தான்.

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்'   என்ற சராசரி மருத்துவ ஆலோசனையிலிருந்து ஒரு மாறுபட்ட கோணத்தில் எல்லோருக்கும் புரியும்படி வெளிவந்திருக்கிறது. அடிப்படை மருத்துவம், சுகாதாரம், வீடும் அதன் சுற்றுபுரம், பட்டினி என்று 25 அத்தியாங்களில் 563 பக்கங்களில் நம்மை காக்கும் ஒரு கடவுளாக அவதாரமெடுத்து வந்திருக்கிறது இன் நூல். வெறும் மருத்துவ குறிப்புகள் என்று ஜல்லி அடிக்கும் மனோ நிலையிருந்து விலகி, நம் அருகில் அமர்ந்து...இன்னும் ஸ்டூலை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு... நமது நோய் பற்றி விளக்கம் கூறும் கருணை மிகுந்த மருத்துவரை போன்று நம்முடன் உரையாடுகின்றது  இன் நூல்.

-தோழன் மபா.

(11/1/2014 அன்று தினமணி 'சென்னை புத்தகக் காட்சி சிறப்பு மலரில்' நான் எழுதிய புத்தக விமர்சனம்.)

ஞாயிறு, ஜனவரி 12, 2014

பள்ளியில் போதிப்போம்!.


       உலக அளவில் அதிகம் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.  பராமரிப்பு இல்லாத சாலைகள், சாலை விதிகளைப் பற்றிய அடிப்படை அறிவின்மை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில் நெகிழ்வுத் தன்மை கொண்ட சட்ட முறைகள் என்று என்னற்ற குறைபாடுகளை கூறலாம்.

மக்கள்தொகை பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள்  இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கிறது.  

இதில் தமிழகத்தின் நிலைதான் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

2003ஆம் ஆண்டு நாட்டிலேயே மிக அதிகபட்சமாக தமிழகத்தில் 51,000 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு பின் 2012ல் அதிகபட்சமாக 68,000 விபத்துக்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஒரு மணிநேரத்திற்கு எட்டு விபத்துக்கள் நடைபெறுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 16,175 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக தமிழகத்தில் சாலை விபத்து மூலம் 44 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றில் சென்னையில்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் இந்திய பெரு நகரங்களில் சென்னை முதலிடத்திலும் (9663), தில்லி இரண்டாவது இடத்திலும் (5865), பெங்களூரு மூன்றாவது இடத்திலும்(5508) உள்ளன.

பொறுமையின்மைதான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். சாலையை கண்ட இடத்தில் கடப்பது, முன் எச்சரிக்கை இன்றி வாகனத்தை நிறுத்துவது,  வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுவது, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் ஒளி உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது, முறையான சமிக்ஞை தெரிவிக்காமல், வாகனத்தை திருப்புவது, சாலைகளில் சாலை விதிகளைப் பற்றிய குறியீடு இல்லாமை,  அதிக ஒலி எழுப்பி இதர வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அலறவிடுவது, தேவையற்ற யூ திருப்பங்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கும் அல்லது மூடும் நேரங்களில் கனரக வாகனங்களை இயக்குவது, வாகனங்களின் முன் உள்ள விளக்குகளில் ஒளி மறைப்பான் இல்லாமல் இயக்குவது, வாகனங்களின் பின்புறத்தில் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் இருப்பது, செப்பனிடப்படாத சாலைகள்,  இடது புறத்தில் முந்திச் செல்லுவது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும்  வீடுகள் உள்ள சிறிய தெருக்களில் எத்தகைய வேகத்தில் செல்லவேண்டும் என்ற அறிவிப்பு பலகை இல்லாதது,   வேகத்தடை பற்றிய அறிவிப்பு இல்லாமை, வாகனங்களின் முறையற்ற பராமரிப்பு, அதிவேகம், வண்டி ஓட்டும் போது கை பேசியை பயன்படுத்துவது, சாலையை கடக்கும் போது கை பேசியில் பேசிக் கொண்டே சாலையை கடப்பது என்று விபத்திற்கான காரணங்களை பெரும் பட்டியலே போடலாம்.

தமிழகத்தில் சாலையில் விபத்து நடந்த இடம் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு, அங்கு விபத்து நடைபெற்ற சுவடே இல்லாமல் செய்து விடுகின்றனர்.  இது மிகவும் தவறானது, விபத்து நடந்த இடத்தில்,  ஒரு அறிவிப்பு பலகையை குறைந்தது ஒரு மாதத்திற்காகவாவது வைக்க வேண்டும். அப்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும், விபத்து பற்றிய அச்சமும் ஏற்படும்.

சாலை விபத்துகள் பற்றிய விழிப்புணர்வே சாலை விபத்துகளை தடுக்க ஒரு முக்கிய காரணியாக அமையும். இதற்கான ஒரே தீர்வு, சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வை, பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம் தொடங்கிவிட வேண்டும். பாதுகாப்பான பயணம், சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது, சாலை பாதுகாப்பில் சட்ட முறைகள், வாகன பராமரிப்பு, பாதுகாப்பான வேகம், சாலைகளை பயன்படுத்தும் முறை, பயணிகளின் பாதுகாப்பு,  முதலுதவி, மனித உயிர்களின் முக்கியத்துவம் என்று நாம் பாடத் திட்டத்தில் சேர்க்க நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.
இத்தகைய பாடத்திட்டங்களை நாம், ஆறு அல்லது ஏழாம் வகுப்பிலேயே தொடங்க வேண்டும். வாரத்தில் இரண்டு வகுப்புகளையாவது இதற்கென நாம் ஒதுக்க வேண்டும். இதில் தேர்வுகளையும் வைக்கவேண்டும். இந்த வகுப்புகளைத் தாண்டி வரும் மாணவர்கள்தானே பிற்காலத்தில் வாகன ஓட்டிகளாவும், வாகனங்களை பயன்படுத்துபவராகவும் வருகின்றனர்.
நற்சிந்தனை, நல்லொழுக்கம், உறவின் மேன்மை, உயிரின் உன்னதம் போன்றவற்றை நாம் கல்வியின் மூலமாகத்தான் மாணவச் சமுதாயத்திடம் விதைக்க முடியும்.

இந்த விதைகளே விருட்சமாக வளர்ந்து, விபத்தில்லாத ஒரு உலகை படைக்க உதவும். நொடியில் முடியும் மனித வாழ்க்கையை நீடித்து இருக்க,  இத்தகைய முயற்சிகள் பலன் தரும். சாலை விதிகளை பள்ளிகளில் போதித்தால் மட்டுமே, விபத்தில்லாத  நாளைய உலகை நாம் படைக்க முடியும்.

First Published : 07 January 2014 01:17 AM IST
தினமணியில் வந்த எனது கட்டுரை.

வியாழன், அக்டோபர் 31, 2013

"நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க...?!"




கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தினமணி துணை கட்டுரைப் பகுதியில்  'சமூக வலைத் தளங்ளிலுமா சாதி....?'  என்ற எனது கட்டுரை வெளிவந்தது. இன்று இணைய தேடு பொறியில் ஏதோ ஒன்றை தேடும்போது  அக் கட்டுரைக்கு இணையத்தில் வந்த பின்னோட்டங்களை பார்க்க நேர்ந்தது.

அந்த பின்னோட்டமே உங்கள் பார்வைக்கு....

முந்தைய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(http://www.tamilanveethi.blogspot.in/2013/08/blog-post.html)

கருத்துகள்(4) 

வெங்கடேசன் 

நமது கலை பண்பாடு போன்றே சாதியும் பல நுற்றாண்டு தொன்மையுடையது. குருதியுடன் கலந்துவிட்டது. சாதியை  ஒஷிக்காமல் சாதியின் செல்வாக்கை தடுக்கமுடியாது.
பதிவுசெய்தவர்  08/12/2013 05:00.


பொறுப்புணர்வுடன் ஒரு நல்ல பிரச்சினையை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் கட்டுரை ஆசிரியர் .மிகப்பிரம்மாண்டமான வெளிப்படுத்தலுக்கான வாய்ப்பை திறந்துள்ள முகனூல் அல்லது இணையதளம் மலம் போன்ற கழிவுகளையும் ஆபத்தான வெடிகுண்டுகளையும் போடும் இடமாகவும் கொண்டுள்ளது .இதை கண்காணிக்க வேண்டியுள்ளது அவசியம் .ஒரு காலத்தில் அல்லது இப்போதும் திரைப்படங்களில் வானொலியில் ஊடகங்களில் தணிக்கை இருந்தது.ஒரு முத்தக்காட்சி போன்றவை கூட பெரிய கூக்குரலை எழுப்பும்.ஆனால் இப்போது 24 மணி நேரமும் வக்கிரமான உடலுறவுக்காட்சிகளை எந்த தடையுமின்றி பார்க்கும் வாய்ப்பு உள்ளது.பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் .ஆனால் இது குறித்து கடும் கண்டனம் எழாதது கண்டிக்கத்தக்கது.மேலும் அரசுகள் டாஸ்மாக் போலவே தங்கள் ஆட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விமர்சனகள் வராமல் தடுக்க உதவுகிறதுபோல் தெரிகிறது .எனவே அரசே இவற்றை வெளியிடுகின்றன என்றே கொள்வோம்.
பதிவுசெய்தவர்  08/12/2013 07:20



 


தமிழ் பேசும் ஒரே மொழிப்பிரிவினரிடையே, பல்வேறு சாதிக்குழுக்கள், தத்தம் அளவில் சிறுபான்மைக் குழுக்களாக மாறிப்போனது, உண்மையில் வருந்தத்தக்கது! ஒவ்வொரு முறையும், 'சாதி ஒழிப்பில் தமிழகம் பரவாயில்லை' எனத்தான், நாம் கருதிக்கொள்கிறோம்! ஆனால், உண்மை அதுவன்று என்பது, பிற மாநிலங்கள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது அல்லது பிற மாநிலத்தவர்கள் இங்கு வந்து சொல்லும்போதுதான் புரிகிறது! பிற மாநிலங்களில் வாழும் குடிமக்கள், சாதியைத் தங்கள் பெயரில் மட்டுமே சுமக்கிறார்கள்; இங்குள்ளதுபோல், தங்கள் நெஞ்சில் அன்று! ஒருவரின் சிந்தனையே, முதலில் பேச்சாகி, தொடர்ந்து எழுத்தாகிப் பின் முகநூலில் வெளியானதும் கலவரமாகிறது! இவை போன்ற நிகழ்வுகள், அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் நடக்கின்றன என்பது, உண்மையில் அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியவை!
பதிவுசெய்தவர்  08/12/2013 16:13


 


தமிழகத்தில் யாருக்கு இல்லை சாதி? எதில் இல்லை சாதி?அரசியலில்,இலக்கியத்தில்,சமயத்தில், ஊடகங்களில்,அரசுத்துறைகளில்...ஜனநாயகத்தின் அனைத்துத் தளங்களிலும் சாதி இருக்கும் போது,முகநூலில் மட்டும் சாதி இருப்பதை குறைகுறுவது நியாயம்தானா?
பதிவுசெய்தவர்  08/12/2013 18:14


 


திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சமூக வலைதளங்களிலுமா சாதி?



//மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.//


 By தோழன் மபா.
First Published : DINAMANI 12 August 2013 02:15 AM IST




    நமது கலையும் பண்பாடும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. உலகின் தொன்மையான மொழிகளில் தமிழும் ஒன்று. மொழி வளமை, இலக்கியங்களின் ஆளுமை, உயர்வான கலாசாரம், ஆன்மிகம் என்று உலகிற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் கலாசார உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கண்டங்கள் இருண்ட கண்டமாக இருந்தது என்பார்கள்.


இப்படிப்பட்ட பெருமை மிக்க தமிழ்ச் சமுதாயம் சாதியின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான இணையதளங்களை சாதிப் பெருமைக்கும், சாதிய சண்டைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் தமிழர்கள் என்பது வருத்தமான உண்மை.


மார்க் சக்கம் பெர்க் என்ற 23 வயது பல்கலைக்கழக மாணவர் தனது சக மாணவர்களோடு கலந்து பழக உருவாக்கிய பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை, தமிழ்ச் சமூகம் சாதிய சண்டைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது.


முன்னெப்போதையும் விட தற்போது சாதிய சண்டைகள் தமிழகத்தில் உச்சத்தில் இருக்கிறது. முன்பு தெரு முனைகளிலும், கடைத் தெருவிலும் நடந்த சாதிச் சண்டை தற்போது இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சமூக மறுசீரமைப்பில் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ஒரு மேடையாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. லிபியா, துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, சமூக வலைதளங்களே காரணமாக இருந்திருக்கின்றன.


நவீன உலகை கட்டமைப்பதில் இன்றைய தலைமுறையினரின் கருவியாக சமூக வலைதளங்கள் செயலாற்றுகின்றன. ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழ்.


முன்பெல்லாம் எழுதுவதற்கு எளிதில் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது. நமது கருத்தை நம்மை சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியே எழுதினாலும் அது அச்சேறுவதென்பதும் இமாலைய சாதனையாகவே இருந்தது.


என்னதான் முழு திறமையைக் கொண்டு எழுதினாலும், அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையென்றால் "பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்' என்ற துண்டு சீட்டு உங்கள் வீடு தேடி வரும்.


ஆனால், இணையதளங்களிலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் எழுதலாம், எவரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. இனம், சமூகம், மதம் போன்ற மிகவும் சென்சிட்டிவான விஷயங்கள் கூட அதன் விபரீதம் புரியாமல் இங்கே விஷமத்தனத்துடன் விமர்சிக்கப்படுகிறது. இதில் தனது சாதி பெருமையை தம்பட்டம் அடிப்பதோடு இவர்கள் நின்று விடுவதில்லை. இதில் சாதிகளை தங்களுக்குள் ஒப்பீடு செய்து கொள்கின்றனர். இரு பிரிவாக பிரிந்துக் கொண்டு மோதிக் கொள்கின்றனர். இதில் பெரும் சச்சரவுகள் ஏற்பட்டு, கேட்கவே காதுகூசும் பல நாராசமான சொற்கள் எழுத்தில் வடிக்கப்படுகின்றன.


இத் தளங்களை தொடங்குவது எளிது என்பதால், தனி நபர்கள்கூட தளங்களை தொடங்கி பிற சமூகங்களை சீண்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இத் தளங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கழிவறை சுவர் போன்று எவர் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை கிறுக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.


கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தமது பெயருக்கு பின்னால் தனது ஜாதி பெயரை வைத்துக் கொள்வது ஒரு அநாகரிகமான செயல் என்ற புரிதல் 60களிலேயே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. சாதியை தனது பெயரில் இருந்து தூக்கியெறிந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது தமிழகம் என்பதை வளரும் தலைமுறை அறிந்திருக்கவில்லை.


இத்தகைய போக்கு நமக்கு நிச்சயம் பலன் தராது. நம்மை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கிதான் அழைத்துச் செல்லும். பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் நம் பொழுதையும் சிலரின் உயிரையும் அழிப்பதற்குப் பயன்படவேண்டாம்.


நமது முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகப் பெரிய தடையாக சாதியே இருக்கிறது என்பதை வளரும் தலைமுறை உணரவேண்டும்.


அரசாங்கமும் சமூகத் தளங்களை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்தவேண்டும். அதில் வரும் பதிவுகள் தணிக்கை செய்யப்படவேண்டும். ஆயுதத்தை விட கூர்மையானது எழுத்து. அது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றது என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை சாதி என்ற கொடிய நோயால் பீடிக்கப்பட்டுவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
()()()()()()()()()()()()()


தினமணியில் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுதான் எனது கட்டுரை தினமணி தலையங்கம் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.   தொடர்ந்து  எழுதி வந்தாலும் தினமணி தலையங்கப் பக்கத்தில் துணை கட்டுரையாக வெளிவருவதென்பது மிகுந்த கடினமான ஒன்று.  அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது எனது எழுத்திற்கு கிடைத்த  வெற்றியாகவே உணர்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டும் உங்கள் அனைவருக்கும் எனது  நன்றியும்  வணக்கங்களும்!. 

அன்புடன் 
-தோழன் மபா. 
நன்றி! தினமணி (12.08.2013).

ஞாயிறு, ஜூலை 28, 2013

'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'. Book Review


'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'.
தொகுப்பு: கோபிநாத் மொகந்தி
தமிழாக்கம்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்


பக்கம் : 208
விலை: ரூ.125/-
வெளியீடு: சாகித்திய அகாதெமி
'இரவீந்திர பவன்'
35, பெரோஸ்ஷா சாலை,
புதுதில்லி-110001.

        
   காடுகள் விலங்கினத்திற்கு மட்டும் சொந்தமில்லை. மனித குலத்திற்கும் சொந்தமானது. அங்கு மனிதர்களும் வாழ்கிறார்கள். ஒளிக்கதிர் ஊடுறுவும் காடுகளின் நிழல்களாக மனிதர்கள் இருக்கின்றனர். ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் முளைத்திருக்கும் குடில்களில் மலைக் பழங்குடிகளின்   ஜீவ மரண போராட்டங்கள், நாட்டுபுறத்து பெண்களின் சுய கொளரவம், சுதந்திரதிற்கு பிறகான கிராமப்புர வாழ்வியலில் வீசிய அரசியல் மாற்றங்கள் என்று 13 சிறுகதைகளை கொண்டது இத் தொகுப்பு.  ஒரிசாவில் கோராபுட் பகுதியில் மலை பழங்குடிகள்  வசிக்கும் காடுகளே இத் தொகுப்பின் கதைகலன்.


எறும்பு என்ற சிறுகதையில்  ஒரு அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாய்  தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அந்த சந்தைக்கு வருகிறான். துணைக்கு வினு என்ற உதவியாளனும், கூட நாலைந்து  மலைவாசி கோந்துகளும் வருகின்றனர்.  இத்தகைய நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று நிலையில் மிகுந்த முனைப்புடன் செயல் ஆற்றத் துடிக்கிறான்.   வழி நெடுக  மலைசாதி மக்களின் வாழ்வியல் தடங்களை ஊடுறிச் செல்லும் அவனது கண்கள், அந்த பஞ்சடைந்த கண்களை கடந்து செல்ல முடியாமல் தவிக்கிறது. இலையில் அந்த வெண்மையான அரிசி சோற்றைத் தவிர வேரொன்றுமில்லை என்றான போது ஒரு அதிகாரியின் மன நிலையிலிருந்து விலகி  மனிதனாக தனியே நடக்கத்  துவங்குகின்றான்.


'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்' எனும் இக்கதை தொகுப்பு The Bed of Arrows and other Stories என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். கோபிநாத் மொகந்தியால்  ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பு, சீத்தாகந்த் மகாபத்ராவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து  ஆனைவாரி ஆனந்தன் அவர்களின் இனிய மொழி நடையில் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்துள்ளது. நாம் அதிகம் அறியப்படாத  ஒடிஷாவிலிருந்து இக் கதை தொகுப்பு வந்திருப்பது, அந்த மண்ணையும்  அந்த மனிதர்களையும் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்துகிறது.

-தோழன் மபா.
() () () () () () ()


கடந்த திங்களன்று தினமணி நூல் அரங்கத்தில் நான் எழுதிய விமர்சனத்தின் எடிட் செய்யாத பகுதி.

திங்கள், பிப்ரவரி 25, 2013

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...



கடந்த ஜனவரி தினமணி 'கருத்துக்களத்தில்'  வந்த எனது கட்டுரை.

"நான் ரொம்ப ஸ்லோங்க... பாருங்க இவ்வளவு நாள் கழித்து இப்பதான் பதிவிடுறேன்."


எளிதாக படிக்க கட்டுரையின் மீது கிளிக் செய்யவும்.

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...