திங்கள், டிசம்பர் 31, 2012

"போட்டோ புடிங்க....பிளிக்கர்ல போடுங்க!"






                                 கொஞ்ச நாளா பிளிக்கர் பக்கமே உலாத்திக்கிட்டு இருக்கேன். பேஸ்புக், வலைத்தளம் பக்கம் தலை காட்டவே  இல்ல.  நூற்றுக் கணக்கில் எடுக்கப்பட்ட  புகைப்படங்களை பிளிக்கர்  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதிலேயே ஆர்வம் அதிகரித்துள்ளது.  புகைபடங்களை மட்டுமே பகிர என்று இருக்கும் இந்த பிரத்யேக தளத்தில் நமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.

யாகு (Yahoo) அக்கவண்ட் உள்ள எவரும் பிளிக்கரில்  புகைப்படங்களை பகிர முடியும்.  அது உலக அளவில் நமது புகைபடங்களுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுத்தரும்.

வளைத்தளம் போன்றே பிளிக்கரும்.

எப்படி தமிழில்  (Blog) வலைத்தளம் இருக்கிறதோ, அதேபோன்ற  அப்படி ஒரு செட்டப்பில் இயங்கிக் கொண்டு இருக்கிறது பிளிக்கர்.  தமிழ் வலைத்தளம் தமிழ் தெரிந்த வாசகர்களிடம் மட்டுமே இயங்கும். இங்கு நமது நட்பு வட்டம் தமிழ் சார்ந்த பதிவரிடம் மட்டுமே இருக்கும். ஆனால் பிளிக்கரின் செயல்பாடோ வேறு விதமானது.   இது முழுக்க முழுக்க உலக அளவில் இயங்கக் கூடியது.  அதனால் நீங்கள் எடுத்த புகைப்படங்களுக்கு சர்வதேச அளவில் பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.  படங்களுக்கு உடனே உடனே விமர்சனமும் கிடைக்கும்.


Pix: Gabygobou
பிளிக்கரில்  நிறைய குழுக்கள் இருக்கின்றன. பிளிக்கர் டிராவல் அவார்ட், நேஷனல் போட்டகிராபி, தெற்காசிய புகைப்படங்கள், தெரு முனைப் புகைப்படங்கள்,  இந்தியா இமேஜ், சில்க் ரூட், கெட்டி இமேஜஸ், தி பெஸ்ட் ஷாட், மத்திய சைனா, பீப்புள்ஸ் இன் த வில்லேஜ்,   பழங்கால இடங்கள் பற்றிய புகைப்படங்கள், வாழ்வியல் புகைப்படங்கள் என்று  ரகவாரியாக புகைபடங்களின் குழுக்கள் கொட்டிக் கிடக்கிறது. நீங்கள் எடுத்தப் புகைப்படங்கள் எந்த வகையைச் சார்ந்ததோ அந்த குழுவில் உங்கள் படங்களை வெளியிடலாம்.

பிளிக்கரில் பேஸ் புக்கில் இருப்பதுபோல் உங்கள் புகைப்படங்களை நீங்கள் டேக் (Tag) செய்யலாம். இது மிகவும் எளிதானது ஜஸ்ட் ஒரு கிளிக் அவ்வளவுதான். அதற்கு முன் அந்தப் புகைப்படங்களை உங்கள் தளத்தில் நீங்கள் அப்லோட் செய்திருக்கவேண்டும். பிளிக்கர் மிகவும் எளிதானதாகவும், பயன்படுத்துவதற்கு சிரமமில்லாமலும் இருக்கிறது.


முன்பெல்லாம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அது குதிரைக் கொம்புதான்.  டவுனுக்கு போயிதான் போட்டோ புடிக்கவேண்டும்.  சாமானிய மக்களால் புகைப்படக் கருவி வாங்குவதென்பது மிகுந்த கடினமானது.  இப்போது ஆளாளுக்கு கையில் காமிரா மொபையில் வைத்திருக்கிறார்கள்.  ஆட்டோ போக்கஸ் உள்ள டிஜிடல் காமிராக்கள் இருக்கிறது.  இத்தகைய  தொழிற் நுட்ப வளர்ச்சியால், இப்போது யார் வேண்டுமானாலும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
ஜிபிஸ் தொழிற் நுட்பம் உள்ள மொபைல் காமிராவில் படமெ எடுத்தால் மிக எளிதாக பேஸ் புக் மற்றும் பிளிக்கரில் பதிவேற்றம் செய்ய முடியும்.
     
ஓச்சப்பன் என்கிற ஹெங்க் (Mr.Henk) .


பிளிக்கரில் போட்டோ வெளியிட புகைப்பட அறிவு தேவையில்லை. ஆர்வம் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். தாம் எடுத்த புகைப்படங்கலை இதில் வெளியிடலாம். அதேசமயத்தில் இதில் கட்டுப்பாடும் உண்டு. முகம் சுளிக்கக் கூடிய, ஆபாசமான புகைப்படங்களை வெளியிட தடை இருக்கிறது.  படங்களை வெளியிட சுய கட்டுப்பாடு அவசியம்.

ஒச்சப்பன் என்பவரின் புகைபடம் சர்வதேசப் புகழ்பெற்றது. மதுரையைச் சுற்றி அவர் எடுத்த எடுக்கும் புகைப்படங்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். மதுரையிலிருந்து இந்த கலக்கு கலக்குகிறாரே என்று புருவம் உயர்த்தினால். சார் பக்கா பெல்ஜியம்காரர். 1985ல் மதுரை வந்தவர் , மதுரையின் அழகில் மயங்கி சுற்றுவட்ட கிராமம் கிராமமாக அலைந்து சுட்டுக் கொண்டு இருக்கிறார். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல, பெல்ஜியம் மதுரை என்று மாறி மாறி பறக்கிறார். மதுரை அவருக்கு இரண்டாவது தாய்விடாகிவிட்டது. அப்புறம் பெயர் எப்படி ஓச்சப்பன் என்று கேட்கிறீர்களா. மதுரையில் இவரை கவர்ந்த சைக்கிள் ரிக் ஷா காரரின் பெயர் ஒச்சப்பன். அவரது பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டுவிட்டார்  ஓச்சப்பன் என்கிற ஹெங்க் (Mr.Henk) .




ஒச்சப்பன் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றும் அள்ளிக்கொண்டு போகும். கிராமங்களை இவரது காமிரா மிக அழகாக பதிவு செய்கிறது. மனிதர்களையும் அவர்களது வாழ்வியலையும் வண்ணத்தில் வார்த்துதருகிறது இவரது புகைப்படங்கள். இவர் எடுத்த படங்களை காப்பி பண்ண் முடியவில்லை என்பதால், அவரது புகைப்பட லிங்கைத் தந்திருக்கிறேன் கிளிக் http://www.oochappan.be  செய்து பார்க்கவும்.




காபி கோபு. இவரது காமிராஆப்ரிகா மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக அருகில் இருந்து படம் பிடிக்கிறது. அந்த கருப்புத் தோலும் வெண்மை பற்களும் காந்தம் போல் நம்மை இழுக்கிறது. எப்போதும் தனது காமிராவால் மக்களையே குறி வைக்கிறார். மிக நேர்த்தியாக நுண்ணியமாக படம் பிடிக்கிறார். மிகக் குறைந்த காலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.



இவரது படங்களில் ஆப்ரிக்க மனிதர்களை பார்க்கும்போது நிறைய நேரங்களில் நமது தென்னிந்திய மக்களையே ஞாபப்படுத்துகிறது. அந்த அளவிற்கு வாழ்க்கைத் தரமும், உருவமும் ஒற்றுமையுடன் காணப்படுகிறது.




   





அமெரிக்கரான டானியல் என்கிற டான் ஒரு ரிடையர் மேன். தனது கடைசி மகளுக்கு திருமணம் செய்ய இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.டானுக்கு கடன் வாங்குவது பிடிக்காதாம். அதனால், ரிடையர்டு ஆன்பின்னும் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறார். சமையல் சார்ந்த புகைப்படங்களை மிக அழகாக படம் பிடித்து வெளியிடுவார். 70 வயதை கடந்த டேனியல் என்னை ஒரு மகனாகவே பார்க்கிறார். அவரது அன்பு நிச்சயம் விலைமதிக்க முடியாதது. தாங்க்யூ பாஸ்.  

                        



டான் எடுத்த புகைப்படம் பெரும்பாலும்  உணவு பொருள் மற்றும் செய்முறை சார்ந்தே இருக்கும். 70 வயது டான் இன்னும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவரது கடைசி மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்காக வேலைக்கு செல்கிறார்.

இந்திரா நாயர். இவரது காமிரா உலகம் முழுவதும் பறந்து பறந்து படம் பிடிக்கிறது. நிறைய நேரங்கங்களில் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். எப்போது இந்தியாவில் இருப்பார், எப்போது வெளி நாட்டில் இருப்பார் என்பதை இவர் பதிவேற்றும் படங்களைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். அந்த உலகம் சுற்றி வரும் இவரது காமிரா.  

அதுவும் பங்களாதேஷ் காரர்கள் எடுக்கும் புகைப்படங்கள் நிச்சயம் கவிதைதான். அங்கு எல்லோரும் புகைபடக் கலைஞர்களா என்று வியப்பு மேலிடுகிறது?!.

உஸ்பெக்கிஸ்தான், ஆப்ரிகா, கஜகஸ்தான், சீனா, கொரியா, தாய்லாந்து, அரேபியா, இத்தாலி என்று சர்வதேச சமூகம் ஃபளிக்கரில் சங்கமித்து இருக்கிறது ஒரு அதிசயம்தான்.

வியாழன், டிசம்பர் 20, 2012

நாளை உலகம் உயிரோடு இருக்குமா...?



            ன்னதான் மனுச பயல் துணிச்சல்ன்னு காட்டிக்கிட்டாலும், நேரம் நெருங்க நெருங்க டிவியை அணைக்காம எதாவது செய்தி கிய்தி வருதான்னுட்டு பார்த்துக்கிட்டுதான் இருக்கான்.  ரொம்ப நாளா சொல்லிக்கிட்டுதான் இருந்தாங்க  உலகம் அந்தா அழியப்போகுது இந்த அழியப் போகுதுன்னுட்டு. கடைசில அது நாளைக்குதான் தெரிஞ்சதும் கொஞ்சம் தவிப்போடுதான் காத்துக்கிட்டு இருக்கான்.  இருந்தாலும் எதையும் இன்னும் அவனால முழுசா சொல்ல முடியல.

மாயன் காலேண்டர் உலகம் முழுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், கிருஸ்துமசுக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் மக்கள் தயாராகிக்  கொண்டுதான் இருக்கிறார்கள்.

உலகம் எப்படி அழியும்... சூப்பர் வல்கானோன்னு சொல்ற எரிமலை வெடிக்குமா...?  இல்ல சுனாமி வந்து கடல் நீர் அப்படியே மேலெழும்பி உலகத்த லவட்டிக்குமா....?  இல்ல பூகம்பம் வந்து மொத்தத்தையும் சுருட்டிக்குமா...? இல்ல நச்சுக் கிரிமி உலகம் முழுவதும் பரவி உயிரினங்களை பலி வாங்குமா....? ஒன்னுமே புரியாமா பேதலிச்சுப் போய் கிடக்குறான்.

சென்னையில ஹை- ஸ்டையில்ன்னு ஒரு கடை.  அவுங்க ஒரு படி மேலே போயி "World End Offer' ந்னுட்டு விளம்பரம் போடுறாங்க. என்ன தாமசு பாருங்க...?  எதையும் சீரியசா எடுத்துக்கமாட்டன் மனுசப் பய.  உலகம் அழியறத டிவில தெளிவா காட்டினாதான் நம்புவான்.  அதுவும் லைவ் ரிலேன்னா  போதும் சீட்டு நுனிக்கே வந்திடுவான்.

நாளை மற்றும் ஒரு நாளா...?

இல்லை

உலகின் இறுதி நாளா...?

காத்திருப்போம்.

வெள்ளி, டிசம்பர் 14, 2012

ரஜினியைப் பற்றி சொல்ல பெருசா என்ன இருக்கு....?



              12/12/12 சிறப்பு தேதி என்று கூறிக் கொண்டு ஊடகங்கள் போட்ட ஆட்டம் சொல்லி மாளாது.  12/12/12 ல் ரஜினியின் பிறந்த நாளும் சேர்ந்த வர நூறு வருடத்திற்கு ஒரு  முறை வரும்  அந்த சிறப்புக்குறிய நாளை ரஜினியின் நாளாக்கினர். எங்கு திரும்பினாலும் ரஜினி, எதை கேட்டாலும் ரஜினி என்று அது அவருக்கே போரடித்துவிடும். அந்தளவிற்கு இருந்தது ரஜினி புராணம்.   
                
கேஷ்வல் ஸ்டைலில்


சின்ன பத்திரிகை முதற்கொண்டு வெகு ஜன இதழ்வரை, பெரிய டிவி முதல் சின்ன டிவி வரை  ரஜினியை கூட்டாக, பொறியலாக, ரசமாக, ஊறுகாயாக, சூப்பாக என்று தாளித்தெடுத்துவிட்டார்கள்.

 குமுதம் இதழும் தன் பங்குக்கு 'ரஜினி ஸ்பெஷல்' என்ற புத்தகத்தை வெளியீட்டுள்ளது. 144 பக்கங்களில் ரூ120/- விலையில் தனிப்பதிப்பாக வெளிவந்துள்ளது 'ரஜினி ஸ்பெஷல்'.  ரஜினி பற்றிய அரிய புகைப்படங்கள், வித்தியாசமான துணுக்குகள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் என்று ஒரு சின்னத்திரைக்கே உரிய இலக்கணத் தொகுப்பாக இம் மலர் வெளிவந்துள்ளது.
    
தம்பிக்கு எந்த ஊரு...?


இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், எழுத்தாளர்கள், ரஜினிக்கு வீடு கட்டித் தரும் மேஸ்திரி என்று  எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டித் தட்டியுள்ளனர்.  ரஜினியைப் பற்றி எல்லொரு சொல்லிவிட்டார்கள் இதில் இவுங்க என்ன பெருசா சொல்லிவிட போறாங்க...? என்று கையில் எடுத்தால் நிச்சயம் தோல்விதான்.  அந்த வகையில் நல்லாவே மெனக்கெட்டு இருக்கிறார்கள்!.

செவ்வாய், டிசம்பர் 04, 2012

'கருத்த லெப்பை' புத்தக விமர்சனம்.




      

            'கருத்த லெப்பை' கதையை படித்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது!.  இதே கதை மேற்கு உலகிலோ அல்லது ஆங்கில மொழியிலிலேயோ வந்திருந்தால் கதையே வேறு? ஒன்று இக் கதையை தடை செய்திருப்பார்கள்.  அல்லது எழுத்தாளரின் தலையை கொய்து வரச்சொல்லியிருப்பார்கள்.  ஆனால், இங்கே இக் கதையை யாரும் கண்டுக் கொண்டதாகக் தெரியவில்லை.

விலை ரூ 50ல், மருதா வெளியிட்டில், 70 பக்கத்தில், குறு நாவலாக வந்திருக்கும் கருத்த லெப்பை 2007ல் முதல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டாவது பதிப்பு 2010ல் வந்திருக்கிறது. நான் படித்தது 2012ல்.  எவ்வளவு வருஷ இடைவெளி பாருங்கள்!.  இருந்தும் ஒரு பரபரப்பு இல்லை.  இல்லை எனக்குத் தெரியவில்லையா...?  தெரியவில்லை?

சாத்தானின் கவிதையை எழுதி சர்வதேச கவனத்திற்கு வந்த அதிர்ஷ்டம் சல்மான் ருஷ்டிக்கு கிடைத்தது பாவம் இக் கதையை எழுதிய எழுத்தாளர் கீரனுர் ஜாகிர் ராஜாவுக்குக் கிடைக்கவில்லை. பேட் லக் ஜாகீர் ராஜா!.


சரி, நாவலுக்கு வருவோம்.

மரைக்காயர். ராவுத்தர்,  லப்பை என்று இஸ்லாமியர்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் இருப்பது நமக்குத் தெரியும்.  ராவுத்தர்மார்களுக்கும் லப்பைகளுக்கும் இருக்கும் பொருளாதார வேறுபாடு, சமூதாய வேறுபாடாய் வளர்ந்து, நான் உசத்தி, நீ கீழே என்று தொடைத்தட்டுவது வெளிஉலகம் அவ்வளவாக அறியாத ஒன்று!.  இருந்தாலும் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எந்தவித முக்காடும் போட்டுக் கொள்ளாமல் கதையை பட்டவர்த்தனமாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார்.

காலம் காலமாக லப்பைகள் ராவுத்தர்மார்களிடம் அடிமைப் பட்டுக் கிடப்பதும், அதிலிருந்து விடபட லப்பைகள் விருப்பமின்றி இருப்பதுமாய் கதை நகர்கிறது.  கருத்த லப்பைதான் இதில் கதா நாயகன். மூல நோய் வியாதிக்காரனான கருத்த லப்பைக்கு  ஊர் வம்பு வாங்குவதில் அலாதி பிரியம் போலிருக்கிறது.  வெட்டியாய் பொழுதைக் கழிக்கும் கருத்த லெப்பைக்கு ராவுத்தர்மாருங்களோடு ஒத்து போவதென்பது முடியாத ஒன்றாகிவிடுகிறது. அவ்வப்போது விடைத்துக் கொள்ளும் கருத்த லப்பை நல்லதொரு லெவ பையானாகவே வளர்கிறான்.

பொருளாதார ரீதியில் கருத்த லெவை சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும்  கொள்கை அளவில் கொஞ்சம் மாறுபட்டுத் தான் திரிகிறான்.  என்னதான் மதம் மனிதன் மீது பல கட்டுபாடுகளைத் தினித்தாலும், ஒரு தனி மனிதன் தனி அறையில் மதம் பற்றியோ அல்லது வழிபாடு பற்றியோ மறுபட்டு சிந்திப்பதில் எந்தவித வரையோ தேவையில்ல்லை.


சிறிய நாவல் என்றாலும் மிளகுப் போன்றே  எதார்த்த நடையில், பிற்போக்குத் தனமின்றி சற்று துணிச்சலுடனே கதை நகர்கிறது.   வீட்டில் குனிந்து பாத்திரம் கழுவும் அம்மாவின் பருத்த பிருஷ்டங்கள் கருத்த லப்பையை சற்றே சங்கடப்படுத்த.... அந்த சங்கடம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. எல்லோர் வீட்டிலும் சாதாரணமாய் நிகழும் ஒரு நிகழ்வை விகல்பம் இன்றி கையாண்ட  விதத்திற்கு கதையாசிரியருக்கு ஒரு சலாம் போடலாம்.  இத்தகையை கதையை கையால்வதும் ஒன்றுதான்  எரியிற கொல்லியால் தலையை சொறிந்துக் கொள்ளுவதும் ஒன்றுதான்.


உருவ வழிபாடென்பது இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது. திசையை நோக்கித் தொழும் இஸ்லாத்தில், உருவம் பொறித்த ஆடைகளை அணிவதோ, ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதோ, நல்ல ஓவியங்களை வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வதேக் கூட மத துவேஷமாகத்தான் பார்க்கப்பட்டது.  ஆனால் கால மாற்றத்தில் இத்தகைய என்னமெல்லாம் புதையுண்டு போவது நல்லதுதானே....?   சமீபத்தில் பாகிஸ்தானில் அல்லாவின் உருவத்தை வரைவோம் வாருங்கள் என்று 'ட்விட்டரில்'வந்த செய்தியை அடுத்து ஒரு வாரகாலத்திற்கு ட்விட்டரை முடக்கியது பாகிஸ்தான் அரசு. அதை ட்விட்டியவனை நோண்டி நோங்கெடுக்க,  சல்லடை போட்டு தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.  அவன் கிடைத்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா...?


ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் வெகு தூரத்தில் தள்ளிதான் நிற்கவேண்டும். அல்லா உருவம்  தொடர்பாக உங்கள் புருவம் கூட நெற்றியில் நெறிபடக் கூடாது. அந்த ஆசை இருந்தால், நீங்கள் மவுத்தாவது உங்கள் கையில் இல்லை.  இக் கதையில் கூட கருத்த லப்பைக்கு நல்லதொரு  தண்டனையை தந்திருக்கிறார் ஜாகீர் ராஜா.   இல்லை என்றால்... அவருக்கல்லவா கிடைத்திருக்கும்!?.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

கோவலன் தலையை புதைத்த இடம் 'கோவலன் பொட்டல்'










                                          மதுரையில் பழங்கனாதம் என்ற சிற்றூரில்தான் கோவலனின் தலை புதைக்கப்பட்டுள்ளது.


 
 இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர். அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்.          


சனி, அக்டோபர் 20, 2012

குமுதத்தில் வந்த 'ஏ ஜோக்' (வயது வந்தவர்களுக்கு மட்டும்)




                 குமுதத்திற்கு ரொம்பத்தான் துணிச்சல்!. கடந்த சில மாதங்களாக தனது கடைசிப் பக்கத்தில் 'ஏ ஜோக்கை' வெளியிட்டு வருகிறது.  வெகுஜன வார இதழில் ஏ ஜோக் வருவது கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தாலும், அதை நேரடியாக படிக்கக் கொடுக்காமல் உட்டாலக்கடி செய்து, முகம் பார்க்கும் கண்ணடியில் காட்டித்தான் படிக்க முடியும் என்ற மிரர் இமேஜில் தந்திருக்கின்றனர்.

ஏ ஜோக் என்றாலும் குமட்டல் அளவில் இல்லாமல், விழுந்து விழுந்து சிரிக்கும் அளவில் இருப்பது இதன் சிறப்பு.

 
சாம்பிளுக்கு சில....     
     

      

கதை 1

இரவு 12 மணி.

அந்த டாக்டருக்கு போன் வருகிறது. 

"டாக்டர்... டாக்டர்.. என் பையன் காண்டத்தை முழுங்கிட்டான். பள பள காகிதத்தில் இருந்ததால், சாக்லெட்டுன்னு நெனைச்சி முழுங்கிட்டான் டாக்டர்.  கொஞ்சம் சீக்கிரம் வாங்க டாக்டர்" என்ற பதறல் குரல் எதிர் முனையில் கேட்டது.

டாக்டரும் கலவரமாகி,"சரி...சரி பயப்படாதிங்க இதோ வந்திடுறேன். பையன பத்திரமாக பர்த்துக்குங்க" என்றார்.

எதிர் முனையில் பேசியவருக்கு இவர்தான் குடும்ப மருத்துவர். அதனால் அரக்க அரக்க இடிக்கி மற்றும்  சில மருத்துவ கருவிகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகும் போது, மீண்டும் போன் மணி அடிக்கிறது.

முன்பு பேசியவனிடமிருந்தான் போன்.

" டாக்டர்....நீங்க வர வேண்டாம். நானே எடுத்திட்டேன்"

"சபாஷ்,  நீங்களே பையன் வாயில கைய விட்டு எடுத்திட்டுங்களா....? "

"இல்ல டாக்டர், பீரோ கீழே.... துணிகளுக்கிடையே இன்னொரு  காண்டம் இருந்துச்சி. அத எடுத்துட்டேன் டாக்டர்"

".............?!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கதை 2

ஆள் அரவம் அற்ற பாலைவனம்.

பல நாள் காஞ்சி கிடந்த அந்த ராணுவ வீரனுக்கு சுயேச்சையா நின்னு... நின்னு... போரடித்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரையும் காணாத அவனுக்கு ஓட்டகம்தான் கண்ணில்  தென்பட்டது.

அதை பிடித்து இழுத்து வந்த அவனுக்கு  ஒட்டகத்தின் உயரம் பெரும்பாடாய் இருந்தது.

அதனால்,  ஒட்டகத்தின் பின் பக்கம் மணலை குமித்து வைத்து,  ஏறி நிற்கும் போது  ஒட்டகம் நகர ஆரம்பித்தது.

மீண்டும் மீண்டும் அதே மாதிரி முயற்சி செய்யும் போது, ஒட்டகம்  நகர்ந்துக் கொண்டே இருந்தது.

அப்போது...

தூரத்தில் ஒரு பெண் இவனைப் பார்த்து " காப்பாத்துங்க...காப்பாத்துங்க...." என்று   அலறிக் கொண்டு ஓடி வந்தாள்.  மூன்று பேர் அவளை  கற்பழிக்க துரத்திக் கொண்டு வந்தனர். 

இவன் அந்த மூன்று ரவுடிகளையும் சண்டைபோட்டுஅடித்து விரட்டிவிட்டு,  அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.

அந்த பெண், இவனிடம் கண்ணீர் மல்க " என்னை அந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை காப்பாத்துனதுக்கு பிரதிஉபகாரமா நீங்க என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கிங்க.   என் உடல் பொருள் எல்லாதையும் தர்ரேன் என்றாள்"

அதற்கு அந்த ராணுவ வீரன்.

"மேடம், ஒரு சின்ன ஹெல்ப்.
இந்த ஒட்டகத்த கொஞ்சம் ஆடாம பிடிச்சுக்குங்க?!" என்றான் கெஞ்சலாக!.

                                     

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

"சசிகுமாரு......என்னப்பு இப்டி பண்ணிப்புட்டியே.....???"





 
"அண்ணே வணக்கம்னே.... !"

"நேத்துதான் நம்ம அம்பத்தூர் ராக்கி தியேட்டர்ல சுந்தரபாண்டியன் படத்த பார்த்தேன்னே. பொண்டாட்டி புள்ளக்குட்டியோட படம் பாக்க போயிருந்தேன்னே. சும்ம சொல்லக் கூடாதுன்னே...அந்த போஸ்டர் ஒட்டுற சீன்லயே புரிஞ்சிடுச்சின்னே,  ஓ....இவிங்க... அவிங்கலான்னு?!". 

"நல்லவேளையின்னே, உள்ளாற போறப்ப யாரும் கேக்கல. "நீ எங்கிட்டேருந்து வர்றன்னு. இல்லேன்னா சூது வாது புரியாம நானும் தஞ்சாவூர்காரன்னுட்டு சொல்லிப்புட்டேன்னு வச்சிகீங்க, கொண்டே புடுவாய்ங்கள்ல.  அப்படி இருந்தன்னே தியேட்டரு.   பூரா உசிலம்பட்டிகாரயிங்க போலயிருக்கு...சசிகுமாரு வர்றப்பயெல்லாம் சும்மா  'விசிலு' தூள் பறக்குது.  சசிகுமாருக்கு அரசியல் ஆசை வந்திடிச்சின்னே. பாட்டு பில்டப்பும் படம் பில்டப்பும் அததான் சொல்லுது. பிரேமுக்கு பிரேமு அண்ணனோட அரசியல் ஆசை தெரியுதன்னே....?!".

"இப்படிதான்னே இரண்டு மூனு வருஷத்துக்கு முன்னாற, காமடி நடிகர் கருனாஸ், முத்துராமலிங்க தேவரோட இருக்குறாப்புல போஸ்டர் அடிச்சி ஒட்டினாருன்னே. அப்புறம் எஸ்.ஜே.சூர்யா வந்தாருன்னே. இப்போ நம்ம சசிகுமாரும் சொல்லிபுட்டாரும்னே". 

"இப்பாதான்னே பயலுவ, அக்கம்பக்கம் பக மறந்து, வேலு கம்பு, வீச்சரிவாள தூக்கி எரிஞ்சி, தாயாபுள்ளயா பழகிகிட்டு இருக்காங்க... இப்பம்போயி மறுபடியும் முதல்லேருந்தான்னே....? நல்லதா நாலு கருத்த சொல்லலாம்னே....?  அத விட்டுட்டு இப்படி சாதி பெரும ஏன்னே....? ஒன்னா மண்ணா சுத்திக்கிட்டு திரிஞ்ச பிரண்ஸ்ங்க,   கொலைவெறியோட அடிச்சிக்கிடறதான் சாதி பெருமையான்னே...?  நல்லா வெளங்கும்னே ....??" 

 "சசிகுமாரு அண்ணே... எல்லாம் நம்ம பயங்கதான்னு, பொத்தாம் பொதுவா படம் எடுங்க....?  இப்படி வேணாம்டியேய்!?"
.

திங்கள், செப்டம்பர் 17, 2012

தில்லியில் தினமணி நடத்திய அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு பற்றிய சிறப்பு தொகுப்பு




         
             மாநாட்டு மலரை  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்ட  போது  எடுத்தப் படம்.

தமிழ் தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் மற்ற நாளிதழ்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது தினமணி. சென்னையை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் தனது 8 வது பதிப்ப்பினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தொடங்கியது. தொடங்கியது முதற்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கி களப்பணி ஆற்றி வருகிறது தினமணி.

தமிழ் நாடு இல்லம் முதற்கொண்டு பாண்டிச்சேரி ஹவுஸ் வரை தினமணி தனது செல்வாக்கை  அதிகரித்து வருகிறது.  இந்த மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் டில்ல்லியில் நடை பெற்ற அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு சிதறி இருந்த தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டியுள்ளது.

தமிழகம்,புதுச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்னாடகாம், மும்பாய், டெல்லி என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அமைப்புகள் இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு தங்களது பங்களிப்பை ஆற்றியுள்ளன....!

இனி மாநாட்டு உரைகள்:




                 'அறிவார்ந்த சமுதாயம்தான்       
                          போரில்லா உலகைப் படைக்கும்!'

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

                    நாம் செய்யும் எந்தப் பணி, இந்த நாட்டை, அறிவார்ந்த நல்ல மக்களுடைய நாடாக மாற்ற விதை விதைக்கிறதோ, அந்தப் பணிதான் நாம் சமுதாயத்திற்குச் செய்யும் நற்பணியாகும். எனவே, இன்றைக்கு தமிழ்ச் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயம் மலரச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தில்லித் தமிழ்ச் சங்கமும் "தினமணி' இதழும் இணைந்து புதுதில்லியில் நடத்தும் அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியது:

இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்த விழா சிறப்பு பெறுகிறது. தமிழுக்கும், தமிழர்தம் சமுதாய நல்வாழ்வுக்கும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி விவாதிக்க இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

தமிழர்கள் வாழ்ந்த வாழ்வு மிகச் சிறப்பான போற்றுதலுக்குரிய வாழ்வு. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு பல விதமான நல்ல அறிவு சார்ந்த சாதனைகளைப் படைக்கும் திறன் பெற்ற வாழ்வு. அதே சமயத்தில் பல சோதனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் வளர்ச்சி குறித்து எண்ணும்போது புறநானுறு, சிலப்பதிகாரம், கம்பர், திருவள்ளுவர், பாரதியைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.

அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல், அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று.அதாவது அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே எமனாக மாறி அழித்திவிடும் என்பது பொருள்.

எனவே, இந்தக் கருத்துகளை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அப்படிப்பட்ட அறிவார்ந்த சமுதாயம்தான், அடுத்த தலைமுறைகளைப் போரில்லா ஓர் உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும். கம்பன் சொல்கிறார்:

"யாரொடும் பகை கொள்ளலன் எனின், போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்த பின், வேரொடும் கெடல், வேண்டல் உண்டாகுமோ'

இதன் அர்த்தம் என்னவென்றால் யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால் போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டுமென்று எவரும் சபித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனுடைய கவிதை நம் எல்லோருக்கும் அருமையாக உணர்த்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கம்பர்.

நண்பர் கவியரசு வைரமுத்து, சமீபத்தில் எழுதிய "மூன்றாம் உலகப் போர்' என்ற ஓர் அருமையான புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். விஞ்ஞான முறைப்படி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லி இருக்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வராது என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேறுவோம். நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். எனவே தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது நிச்சயம் என்றார் அப்துல் கலாம்.

                                                                                                                            வைரமுத்து உரை அடுத்தப் பதிவில்.....


ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

"நினைவுகள் மடியும் பொழுது....?!"





"எவ்வளவோ மக்க(ள் )வர்றாங்க போறாங்க அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இருக்க மாட்டங்குது. நல்லா இருக்காங்க, திடீருன்னு  எப்படி இருக்காங்க என்னு, ஊருக்கு போறப்ப  கேட்டா, உனக்கு விசயமேதெரியாதா, அவரு போயி மாசம் இரண்டாகுதுன்னு ரொம்ப அசால்ட்டாக சொல்றாங்க."


ராமச்சந்திரன் நைனா, ஓங்குதாங்கா இருந்த நாராயணசாமி மாமா,  மேரி அக்கா, எங்க வூட்டுக்கு பால் ஊத்துன இருளாயி அக்கா, 'டகு' அண்ணன்னு எல்லாம் சட்டு சட்டுன்னு போறாங்க. அவுங்கள பத்தி ஒரு பதிவு கூட இல்ல.  எவ்ளோ பேரு ஒன்னுமே இல்லாம செத்து போறாங்க. போனதடவ ஊருக்கு போறப்ப பாக்குறவுங்க அடுத்த தரவ போறப்ப இருக்க மாட்டாங்கறாங்க...?


நெனச்சி நெனச்சி மனசு ஆத்து போவுது...! இப்ப கூட எழுதறப்ப கண்ணுல தண்ணி முட்டுது. என்ன வாழ்க்கைடா சாமி!.


-தோழன் மபா

Thanks Photo: http://xavi.wordpress.com/net/

ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

இருதடமான 'இருதயம்'



                                                                                          



          இருதயம் என்பது ஒரு காரணப் பெயர்.  'இருதடம்' என்பது மருவி இருதயம் ஆனது. தடம் என்பதற்கு பாதை அல்லது வழி என்று பொருள்.  இருதயத்தில் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நல்ல ரத்தம் செல்லும் பாதை மற்றொன்று அசுத்த ரத்தம் செல்லும் பாதை. அதனால்தான் அதற்கு இருதடம் என்று பெயர் வந்தது. அதைதான் நாம் இருதயம் என்று அழைத்து பின்னர்  'இதயம்' என்று ஷர்ட் கட் செய்துவிட்டோம்.

- பேராசிரியர்  சர்.இரா. இராமகிருஷ்ணன்.
இருதய நோய் நிபுணர். சென்னை.

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

பகல் நேரத்து பஸ் பயணமும் புத்தக வாசிப்பும்!




                   ப்போதெல்லாம் பகல் நேரத்து பஸ் பயணத்தையே மனம் விரும்புகிறது.  சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதாக  இருந்தாலும் சரி பகல் நேர பஸ் பயணமே  வசதியாக இருக்கிறது. 

வீடு, அலுவலகம் என்று எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் இச் சூழ்நிலையில், புத்தகம் படிக்க நல்லதொரு வாய்ப்பு எங்கே கிடைக்கிறது?.  வீட்டில் படிக்கலாமென்றால் ஒரு பக்கம் மனைவி, மறுபக்கம் குழந்தைகள் என்று பிய்த்து எடுத்துவிடுகிறார்கள். பேருந்து பயணம்தான் புத்தகங்களை படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.  முன்பெல்லாம் பேருந்து பயணத்தின்போது ஜூவி அல்லது ஆவி என்று ஏதாவது ஒன்று கைகளில் படபடக்கும்.  இப்போதெல்லாம் அந்த தப்பை செய்வதில்லை. ஆவியை வீட்டில் பி(ப)டிப்பதோடு சரி!.

போகும் தூரத்தை கணக்கில் வைத்து புத்தகங்களின் எண்ணிக்கையும் அமைகிறது.  கடந்த இரண்டு மாதமாக ஒவ்வொரு சனிக் கிழமையும் சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்.  சனிக்கிழமை அரை நாள்தான் வேலை நாள் என்பதால், மதியம் ஒரு மணிக்கே அலுவலக  கேண்டினில்  சாப்பிட்டுவிட்டு பைக்கை உருட்டினால், அடுத்த அரை மணி நேரத்தில் கோயம்பேடு.  மாயவரம் செல்லும் ஏதாவது ஒரு சிறப்பு (?) பேருந்தில் இடம் பிடித்து உட்கார்ந்துக் கொண்டால் போதும், புத்தகம் படிக்க ஏதுவான சூழல் உருவாகிவிடும்.

ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு பர்பி அல்லது பிஸ்கெட் பாக்கெட். இது போதும் புத்தகம் படிக்க....!  இடையிடையே கொஞ்சம் ஆயாசம் ஏற்படும், அப்போது புத்தகத்தை நெஞ்சோடு வைத்து மூடிவிட்டு,கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்க்கலாம். அல்லது நல்லதொரு தூக்கம் போடலாம். இடையே பேருந்தை எங்கேயாவது ஓரங்கட்டுவார்கள், அங்கே இறங்கி சும்மா சூடாய் ஒரு டீ (அது வென்னீராய் இருந்தாலும் அமுதமாக இருக்கும்) குடிக்கலாம்.   முடிந்தால் ஒரு 'தம்'  போடலாம்.

பயணத்தின் போது வள வளவென்று பக்கத்து சீட்டு காரரிடம் பேச வேண்டாம்.  நம் குலம் கோத்திரத்தை அவர் விசாரிக்க, பதிலுக்கு நாம் விசாரிக்க...என்று மொக்கை போடவேண்டாம். முடிந்தால் சிறு  இடைவேளையில் எஸ். ராமகிருஷ்ணன் போல் பயணிகளிடம் பாடம் படிக்கலாம்.

இப்படிதான் கபூர் குல்யாம் எழுதிய 'குறும்பனை' ஒரு பஸ் நேர பயணத்தில்தான் படிக்க முடிந்தது. திருச்சி போகும் போது அலமாரியில் பொத்தாம் பொதுவாய் எடுத்ததில் 'குறும்பன்' கைக்கு அகப்பட்டான். அப் அண்ட் டவுனில் அந்த 300 பக்க நாவலை முடித்தேன். (என்னமோ... எழுதினா மாதிரி பீத்திக்கிறியேன்னு கேட்கப்படாது?! இதெல்லாம் ஒரு ஜாலி பதிவுதான்)

கி.ராஜ நாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்', சாருவின் 'எக்சைல்', கீரனூர் ஜாகிர் ராஜவின்'கருத்த லப்பை', பாமாவின் 'வன்மம்', சன்முகம் எழுதிய 'சயாம் மரண ரயில்', பல்லவி ஐயர் எழுதிய 'சீனா- விலகும் திரை', வைக்கம் முகமது பஷீரின் தொகுப்புகள், சு.கி.ஜெயகரனின் 'மூதாதையரைத் தேடி',  கரசூர் பத்மா எழுதிய 'குறவர் இன வரைவியல்'  வேல ராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' என்று படிக்கும் பட்டியல் பஸ் பயணத்தை பொறுத்து நீண்டுக் கொண்டே இருக்கிறது.

தட தடக்கும் பேருந்து பயணத்தில் 'குற்றப்பரம்பரை' பெரிய பிரயாசையையே ஏற்படுத்தியது.  லைட் ரீடிங்காய் இருந்தால், பக்கங்கள் படபடவென்று நகரும். இது கொஞ்சம் ஹாட் ரீடிங். அதன் கதையின் கனம் தாங்கமல் அவ்வப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.  கதை இன்னும் மிச்சமாய் உறங்கிக் கொண்டு இருக்கிறது?!

நான் கொஞ்சம் பொறுமையான வாசிப்பாளிதான். பிடித்த வரிகளை இரண்டு மூன்றுதரம் மறுபடியும் வாசித்துவிட்டு, பிறகுதான் அடுத்த வரிக்கு தாவுவேன்.  முழுசாய் ஐந்தாறு பக்கம் முடிந்ததும், அதைப் பற்றிய பிரமிப்போ அல்லது 'சை என்னடா...இது!' என்ற என்னமோ எழும்.  புத்தகத்தை மூடிவிட்டு கொஞ்சம் நேரம் வேடிக்கைப் பார்ப்பேன்.  பிறகு மறுபடியும் எடுத்து படிக்க ஆரம்பிப்பேன்.  வேடிக்கை பார்ப்பதும் வாசிப்பதும் பஸ் பயணத்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கும்.

சின்ன குழந்தைகள் காராசேவை வைத்து.... வைத்து.... சாப்பிடுமே அப்படி!.
 


அதுவும் பகல் நேரத்து பயணம் ஒரு கவிதைதான்.

  எங்கேயோ ஒரு ஆள் இல்லா வனாந்திரத்தில் உள்ள மோட்டலில் பஸ்ஸை நிறுத்துவார்கள்.  சொற்பமாய் இருக்கும் பயணிகள் இறங்கி அங்கொன்றாய் இங்கொன்றாய் நிற்க, வெயில் சுள்ளென்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை காய்ந்துக் கிடக்கிறது. தூங்குமூஞ்சு மரத்தின் கீழ் நிற்கும் பேருந்தில் கொஞ்சம் வெக்கையோடு மனிதர்கள் தண்ணீர் பாட்டிலைத் திறக்க, கடைசி சீட்டிற்கு முந்தைய சீட்டில் உள்ள குழந்தை எதையோ கேட்டு அடம் பிடிக்கிறது.  மோட்டல் ஓரத்தில் ஒன்னுக்கு போக போனவரை, காவலாளி துரத்திக் கொண்டு இருக்க.... ஸ்பீக்கரில்  "எத்தன முறதா காப்பி கொடுப்பா எங்கக்கா. எத்தன முறதான் பாட்டு பாடுவா எங்கக்கா" ன்னு பாடிக் கொண்டு இருந்தார் சின்னபொண்ணு.  

நின்றிருந்த பேருந்து புழுதியை வாரி இறைத்துவிட்டு சின்ன குலுக்களோடு பைபாஸ் ரோட்டில் ஏறியது.  புழுக்கம் குறைந்து காற்று சுள்ளென்று முகத்தில் மோதியது!.   சன்னலுக்கு வெளியே உலகம் கழுவி துடைத்தது போல் பளிச்சென்று நகர்ந்துக் கொண்டு இருக்க.....  பகல் நேர பஸ் பயணம் படிக்கவும், உணரவும்  நல்லதொரு இலக்கியமாகவே என்னுள் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

படங்கள் உதவி: http://voipadi.blogspot.in/

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

பறந்துபோன பட்டாம்பூச்சி


எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் மறைவு!

ரா.கி. ரங்கராஜன்


பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முக திறன் கொண்ட ரா.கி. ரங்கராஜன் தனது 85ம் வயதில் சனிக்கிழமை சென்னையில் காலமானார்.

கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்த ரா.கி. தனது 16 வயதினேலேயே எழுதத் தொடங்கிவிட்டார். சக்தி காரியாலயம், காலச்சக்கரம் போன்றவற்றில் தனது இதழியல் பணியை தொடங்கியவர், பிற்பாடு 1947ல் குமுதத்தில் சேர்ந்தார்.  கிட்டத்தட்ட 42 வருடங்கள் குமுதத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.  ரா.கி இருந்த காலம்தான் குமுதத்தின் உச்சம் என்று சொல்லாம்!.

ஹென்றி ஷாரியரின் 'பாப்பிலான்' கதையை குமுதத்தில் 'பட்டாம் பூச்சி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். ஏகோபித்த பாராட்டை பெற்ற அக் கதை மீண்டும் வராதா என்ற ஏக்கம் இன்றும் எனக்கு உண்டு.   ஜெனிபர், கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான் போன்ற  ரா.கி.யின் மொழி பெயர்ப்பு கதைகள் அன்றைய குமுதத்தில் பரபரப்பான பக்கங்கள்.   உலக புகழ் பெற்ற ஆங்கில நாவல்களை தமிழர்களுக்கு தமிழில் படிக்கக் கொடுத்த பெருமை ரா.கி.யைதான் சாரும்.

அவரது எழுத்தில் நான் கடைசியாக படித்தது 'நான் கிருஷ்ண தேவராயன்'. வரலாற்று நாவலான நா.கி.தே. வழக்கமான வரலாற்று நாவல்களின் சாயல்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியிருந்தார்.     கிருஷ்ண தேவராயரைப் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தியது ரா.கியின் எழுத்துகள்.

எழுத்துகளில் உயிர் வாழ்ந்த ஒரு மனிதருக்கு இறப்பு என்பது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்!.

                                                                                                                                                                           - தோழன் மபா. 



ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி நர்மதா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை ரூ.220/-

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்வதையே சாதனையாக நினைக்கும் இந்திய வீரர்கள்.

          


இந்திய ஹாக்கி அணியில் சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பெரிய சந்தோஷம் என்ற மன நிலையில் உள்ளனர் என்றார் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்

பதக்கம் பெறும் என்று மிகுந்த எதிர்ப்பார்போடு சென்ற இந்திய ஹாக்கி ஆணி 3 தொடர் தோல்விகளை சந்தித்து,  அரையிறுதிக்கு  தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டனர். இந்திய ஹாக்கி வீரர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு குறைவாக உள்ளதே தொடர் தோல்விகளுக்கு காரணம் என்கின்றார், பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்.

இந்திய ஹாக்கி அணியில் சில வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே பெரிய சந்தோஷம் என்ற மன நிலையில் உள்ளனர்.   இப்போது உள்ள சூழ்நிலையில் கடுமையான போராட்ட குணத்துடன் களத்தில் இறங்கினால் மட்டுமே ஹாக்கியில் வெற்றி பெற முடியும்.  நாட்டின் கொளரவத்தை மனதில் கொண்டு முழு திறனுடன் சவால்களை எதிர்கொள்ளும் வீரர்களே அணிக்குத் தேவை.   இந்திய மக்கள் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்பதை  மனதில்வைத்து வீரர்கள் சவால்களை எதிர்கொள்ளவேண்டும். என்று சற்று கடுமையாகவே சாடியுள்ளார் ஆஸ்திரேலியரான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மைகோல் நோப்ஸ்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய ஹாக்கி அணி பற்றி அதன் பயிற்சியாளர்  கூறிய குற்றச்சாட்டு இந்திய விளையாட்டுத் துறையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...