செவ்வாய், ஜூன் 28, 2022

அறியப்படாத ஆலம்பரைக் கோட்டை

தினமணியில் வந்த எனது கட்டுரை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையானது இந்தியாவின் மிக அழகான கடற்கரை சாலை என்று வர்ணிக்கப்படுகிறது! சாலையின் இரு மருங்கிலும் பச்சையம் போர்த்தி வரிசைக் கட்டி நிற்கும் மரங்கள்; கூடவே வளைந்து நெளிந்து வரும் சோழ மண்டல கடற்கரை (வங்காள விரிகுடா) அவ்வப்போது சாலைகளின் இடையிடையே குறிக்கிடும் ஆறுகள்; பருவப் பெண்ணின் வனப்போடு வளைந்து நெளிந்து கருங்கூந்தல் போல் காட்சி அளிக்கும் சாலை என்று கிழக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்) வார இறுதியில் குடும்பத்தோடு சிறிய ஜாலி டூருக்கு ஏற்ற இடம். கிழக்கு கடற்கரை சாலையில் காரில் மிதமான வேகத்தில் பயணிப்பது அலாதி சுகம். அப்படிப்பட்ட ஈசிஆரில் பெருவாரியான மக்களுக்கு தெரியாமல் ஒரு கோட்டை ஒளிந்துக் கொண்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா...? “என்னது இ.சி.ஆரில் கோட்டையா ? அங்க எங்க மலை இருக்கிறது ? கோட்டை இருக்கிறது ?” என்று கேட்கலாம். மலை இருந்தால்தான் கோட்டை கட்ட முடியுமா? இங்கு கடற்கரையில் ஒரு கோட்டை கட்டியிருக்கிறார்கள். அதன் பெயர் ‘ஆலம்பரை கோட்டை’. உருது மொழியில் ‘ஆலம்’ என்றால் ஜனங்கள், ‘பரா’ என்றால் நிறைய என்று பொருள் வருகிறது. இன்னும் இந்த கோட்டையை 'ஆலம்பரா கோட்டை'என்றுதான் உள்ளூர் மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கின்றனர். ஆலம்பரைக் கோட்டை அழகிய ஆற்றின் கழிமுகத்துவாரத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் நூற்றி பதினோராவது கிலோ மீட்டரில் கடப்பாக்கம் என்ற ஊர் வருகிறது. அந்த ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ‘ஆலம்பரை கோட்டை’.
கி.பி 18 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்டது. கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள 'ஆலம்பரை' பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது. சங்கக்கால இலக்கியமான சிறுபாணற்றுப்படையின் மூலம் இப்பகுதி ‘இடைக்கழி நாடு’ என்று பெயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. இந்த கோட்டை முழுக்க முழுக்க செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இக் கோட்டை கட்டப்பற்றிருக்கிறது. இந்தக் கோட்டை 1735 ல் நவாப் தோஸ்து அலிகானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. பிரெஞ்சு தளபதியான புகழ்பெற்ற டூப்ளே தனக்களித்த உதவியைப் பாராட்டி இக்கோட்டையை தக்காணச் சுபேதார் முஸாபர்ஜங், பிரெஞ்சுசுகாரருக்கு கி.பி.1750 –ல் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். பிரெஞ்சு ஆட்சியின் வலிமை தளர்ந்த போது, ஆங்கில தளபதி ஒருவர் கி.பி.1760-ல் இக் கோட்டையை கைப்பற்றி தகர்த்திருக்கிறார். இக் கோட்டை மட்டும் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் ப்ரெஞ்சு (புதுச்சேரி) ஆதிக்கத்தின் எல்லை கடப்பாக்கத்திலிருந்து தொடங்கி இருக்கும். கடற் கொள்ளையார்களால் இந்த கடற்பகுதி தொடர்ந்து தாக்கப்பட்டபோது, கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் இக் கோட்டை கட்டப்பட்டது. பிற்பாடு இந்தக் கோட்டையிலிருந்து ஜரிகைத் துணிகள், நெய் மற்று உப்பு போன்ற பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இக் கோட்டையின் கீழ்புறம் படகுத்துறை ஒன்று கப்பலிலுள்ள பொருட்களை ஏற்றி இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத்துறையின் நீளம் சுமார் 100 மீட்டர் ஆகும். இது கோட்டையிலிருந்து கடல் வரை நீண்டு இருந்தது. பிரெஞ்சு இந்தியாவில் ஆனந்தரங்கம் பிள்ளை, துபாஷ் முதல் தூப்ளக்ஸ் வரையிலான நாட்குறிப்புகளில் ஆலம்பரை பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆர்காட் நவாப்களுக்கான வர்த்தகத்தின் முதன்மை துறைமுகமாகும். ஆலம்பறையின் அமைந்திருந்த நாணயச்சாலையில் ஆலம்பரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்நாணயச்சாலையின் பொறுப்பாளராக இருந்த 'பொட்டிபத்தன்' கிழக்குக் கடற்கரை சாலை வழியாக காசி இராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிவன் கோயிலையும் பெரிய குளம் மற்றும் சத்திரத்தினையும் ஏற்படுத்தினார் என்கிறது வரலாற்றுக் குறிப்புகள். 2004 - ஆம் ஆண்டில் நேரிட்ட சுனாமி பேரழிவின்போது, இந்தக் கோட்டையும் சிதிலமடந்தது. சிதிலமடைந்த கோட்டை தற்போது தொல்லியல் துரை ப5ராமரிப்பில் உள்ளது. தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (டி.டி.டி.சி) இந்த கோட்டையை மாநிலத்தில் அதிகம் அறியப்படாத இருபது சுற்றுலா தலங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.
கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே பெரிய மணல் திட்டு இருக்கிறது. ஆறும் மென்னலைகளோடு சிறு கடல்போல் காட்சித் தருகிறது. மனிதர்கள் அமர்ந்து குளிக்க ஏதுவாக இருக்கிறது. சுற்றுபுர மக்கள் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து குளித்து இளைப்பாருகிறார்கள். கனிசமான சுற்றுலா பயணிகளை பார்க்க முடிகிறது. இசிஆர் நெடுஞ்சலையில் ஆங்காங்கே கோட்டைப் பற்றிய அறிவிப்புகளைப் பார்க்க முடிகிறது. கடலும் மணலும் கோட்டையும், பரந்து விரிந்த கிராமத்து அழகும் இயற்கையின் பேரமைதியும் உங்களுக்கு நல்லதொரு சுற்றலா அனுபவத்தை தரும். -மபா.

வெள்ளி, மே 20, 2022

'எதிர்குரல் டி.எம்.கிருஷ்ணா'

ரொம்ப நாளைக்குப் பிறகு நல்லதொரு நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. கர்நாடக இசைப் பாடகர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட டி.எம். கிருஷ்ணா அவர்களின் நேர்காணல்தான் அது. இந்த மாத ‘காலச்சுவடு’ (மே 2022) இதழில் வந்திருக்கிறது. பொதுவாக ஒரு மேல்தட்டு கர்நாடக இசைப் பாடகரிடம் இசையைத் தவிர்த்து என்னவிதமான கேள்வி கேட்க முடியும்? என்னவிதமாக உரையாட முடியும்? அந்த உரையாடல்கள் முழுமைக்கும் சாஸ்திரிய இசையின் மகோன்னதம் மட்டுமே நிரம்பி வழியும் அப்படிதானே? ஆனால் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் நீண்ட நேர்காணல் ...(உண்மையாகவே நீண்ட நேர்காணல்தாங்க, 13 பக்கங்கள்.) சங்கீத உலகின் மரபார்ந்த விஷயங்களையும், உயர்சாதி கட்டுமானங்களையும், விலங்கு தோல்கள் பதனிடும் மனிதர்கள் பற்றியும், விளிம்பு நிலை வாழ்வியலைக் கொண்ட, இசைக் கருவிகள் செய்யும் மக்களைப் பற்றியும் காத்திரமான உரையாடலைத் துவக்கி வைத்திருக்கிறது. வட சென்னையில் தொழிற்சாலைகளால் சாம்பல் மூடிக் கிடந்த தெருக்களையும், மாசுபடர்ந்த நீர் நிலைகளையும் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது இவரது ‘புறம்போக்கு’ பாடல். சபாக்களில் மட்டுமே நடத்தபட்ட இசை நிகழ்ச்சிகளை சென்னை பெசன்ட் நகர் ஊருர் ஆல்காட் குப்பத்தில் நடத்தத்தினார். பின்னர் அது ‘சென்னை கலைத் தெருவிழா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கரோனோவிற்கு முன்பாக பழவேற்காட்டில் நடைபெற்ற விழாவில் ‘அதானி துறைமுக பணிகளை’ எதிர்க்க அந்த நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது. பாடுவதோடு மட்டுமல்லாமல் இரண்டு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதிய 'Southern Music A Carnatic story' நூல் 2013 இல் வெளிவந்த போது கர்நாடக இசை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கச்சேரிகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நூறு வருடங்களாக நிலவும் மரபை அந்தப் புத்தகம் உடைத்தது. கர்நாடக இசை மரபுக்குள்ளே சாதி ரீதியிலான, பாலின அடிப்படையிலான மாற்றங்களை கேட்பதற்கான எதிர்குரலாக அன் நூல் ஒலித்தது. கர்நாடக இசை மரபைச் சுற்றி இன்று எழுப்பப்படுகிற கேள்விகளில் அந்தப் புத்தகத்தின் பாதிப்பு இன்றும் காணமுடிகிறது. அதைத் தொடர்ந்து ‘Sebastian & Sons’ என்ற ஆங்கில நூலை எழுதினார். தஞ்சையில் தலைமுறை தலைமுறையாக மிருதங்கம் செய்யும் மக்களையும் அதற்கு மாட்டுத் தோல்களை பதனிடும் எளிய மக்களின் வாழ்வையையும் பேசியது.
‘மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள்: செபாஸ்டியன் குடும்பக் கலை’ (Sebastian & Sons), ‘கர்னாடக இசையின் கதை’ (Southern Music A Carnatic story (2013), ஆகிய இரு ஆங்கில நூல்களையும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அரவிந்தன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். காலச்சுவடில் டி.எம். கிருஷ்ணாவுடனான இந்த நீண்ட உரையாடலையும் அவரே மேற்கொண்டு இருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வாயிலாக வெற்றி ஒரு பக்கம் என்றாலும், பெரும் பின்னடைவையும் டி.எம். கிருஷ்ணா அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. "அந்த வட்டத்திற்கு வெளியிலிருந்து யாரேனும் எழுதியிருந்தால் இந்த விளைவு இருந்திருக்காது. அவர்களுக்குள் ஒருவனே இப்படி எழுதிவிட்டதைதான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" இசைத்துறையில் என்னுடன் பணிபுரிந்தவர்கள் சிலருடனான உறவு முதல் புத்தகம் வந்தப்பிறகு கடினமாகத் தொடங்கியது. செபாஸ்டின் அண்ட் சன்ஸ் புத்தகம் வந்த பின்பு உறவு முற்றிலும் விட்டுப்போனது. அதன் பிறகே எனது சிந்தனைகள் பிறருக்கு புரிய ஆரம்பித்தது. நிறைய பேர் சண்டை போட ஆரம்பித்தர்கள். இப்பொது பழகிவிட்டது. என்கிறார் டி.எம்.கே. சமூக செயல்பாட்டிற்காக டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டது. 'பிராமணிய ஆதிக்கத்திலிருக்கும் கர்நாடக இசையுலகில் சாதி, வர்க்கத் தடைகளைத் தகர்த்து, சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் இசை சென்று சேர வேண்டும் என்பதற்காக அவர் காட்டும் வலிமையான ஆற்றலுக்கான அர்ப்பணிப்புக்காக 'மகசேசே விருது' இவருக்கு வழங்கப்பட்டது என்று குறிப்பு வழங்கியது ‘ரமோன் மக்சேசே விருது அறக்கட்டளை’. நேர்காணலில் மறைமுகமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட எந்தவித மழுப்பலும் இல்லாமல் நேரிடையான பதிலைத் தந்திருக்கிறார். அவை மிக விஸ்தாரமாகவும், வாசகனை உடனே சென்றடையக்கூடியதாகவும் இருந்தது. உள்ளார்ந்த துணிவுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட விதமே அவரை ஒரு களப்போராளியாக காண்பித்தது. ஒரு கர்நாடக இசை ஜாம்பவானிடமிருந்து இப்படியான சமூகம் சார்ந்த உரையாடல்கள் புதிது. அதை செய்திருக்கிறார் கர்னாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா. -மபா 19.05.2022 #TMKrishna #கர்நாடகஇசை

அறியப்படாத ஆலம்பரைக் கோட்டை

தினமணியில் வந்த எனது கட்டுரை சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையானது இந்தியாவின் மிக அழகான கடற்கரை சாலை என்று வர...