தமிழமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 17, 2012

தில்லியில் தினமணி நடத்திய அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு பற்றிய சிறப்பு தொகுப்பு




         
             மாநாட்டு மலரை  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்ட  போது  எடுத்தப் படம்.

தமிழ் தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் மற்ற நாளிதழ்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது தினமணி. சென்னையை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் தனது 8 வது பதிப்ப்பினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தொடங்கியது. தொடங்கியது முதற்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கி களப்பணி ஆற்றி வருகிறது தினமணி.

தமிழ் நாடு இல்லம் முதற்கொண்டு பாண்டிச்சேரி ஹவுஸ் வரை தினமணி தனது செல்வாக்கை  அதிகரித்து வருகிறது.  இந்த மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் டில்ல்லியில் நடை பெற்ற அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு சிதறி இருந்த தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டியுள்ளது.

தமிழகம்,புதுச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்னாடகாம், மும்பாய், டெல்லி என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அமைப்புகள் இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு தங்களது பங்களிப்பை ஆற்றியுள்ளன....!

இனி மாநாட்டு உரைகள்:




                 'அறிவார்ந்த சமுதாயம்தான்       
                          போரில்லா உலகைப் படைக்கும்!'

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்.

                    நாம் செய்யும் எந்தப் பணி, இந்த நாட்டை, அறிவார்ந்த நல்ல மக்களுடைய நாடாக மாற்ற விதை விதைக்கிறதோ, அந்தப் பணிதான் நாம் சமுதாயத்திற்குச் செய்யும் நற்பணியாகும். எனவே, இன்றைக்கு தமிழ்ச் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயம் மலரச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

தில்லித் தமிழ்ச் சங்கமும் "தினமணி' இதழும் இணைந்து புதுதில்லியில் நடத்தும் அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியது:

இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்த விழா சிறப்பு பெறுகிறது. தமிழுக்கும், தமிழர்தம் சமுதாய நல்வாழ்வுக்கும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி விவாதிக்க இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

தமிழர்கள் வாழ்ந்த வாழ்வு மிகச் சிறப்பான போற்றுதலுக்குரிய வாழ்வு. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு பல விதமான நல்ல அறிவு சார்ந்த சாதனைகளைப் படைக்கும் திறன் பெற்ற வாழ்வு. அதே சமயத்தில் பல சோதனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் வளர்ச்சி குறித்து எண்ணும்போது புறநானுறு, சிலப்பதிகாரம், கம்பர், திருவள்ளுவர், பாரதியைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.

அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல், அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று.அதாவது அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே எமனாக மாறி அழித்திவிடும் என்பது பொருள்.

எனவே, இந்தக் கருத்துகளை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அப்படிப்பட்ட அறிவார்ந்த சமுதாயம்தான், அடுத்த தலைமுறைகளைப் போரில்லா ஓர் உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும். கம்பன் சொல்கிறார்:

"யாரொடும் பகை கொள்ளலன் எனின், போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்த பின், வேரொடும் கெடல், வேண்டல் உண்டாகுமோ'

இதன் அர்த்தம் என்னவென்றால் யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால் போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டுமென்று எவரும் சபித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனுடைய கவிதை நம் எல்லோருக்கும் அருமையாக உணர்த்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கம்பர்.

நண்பர் கவியரசு வைரமுத்து, சமீபத்தில் எழுதிய "மூன்றாம் உலகப் போர்' என்ற ஓர் அருமையான புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். விஞ்ஞான முறைப்படி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லி இருக்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வராது என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேறுவோம். நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். எனவே தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது நிச்சயம் என்றார் அப்துல் கலாம்.

                                                                                                                            வைரமுத்து உரை அடுத்தப் பதிவில்.....


திங்கள், ஜனவரி 02, 2012

'வந்துவிட்டது... தமிழ் நாள்காட்டி!'





    மிழர் அனைவருக்கும்  இத் தகவல் சேரவேண்டும் என்பதால், இந்தப் பதிவை தமிழன் வீதி மறு பிரசுரம் செய்துள்ளது.   மறு பிரசுரம் செய்ய ஒப்புதல் வழங்கிய ஐயா சுப.நற்குணன், (திருத்தமிழ்)., அவர்களுக்கு எனது  மனமார்ந்த  நன்றிகள் பல....!  
மற்ற பதிவர்களும் இதை மறு பிரசுரம் செய்து தமிழ் நாள்காட்டியை, தமிழரிடையே பரப்புவோம்.  
 
 
நாள்காட்டி தோற்றம்
         தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஆறாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. 
மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார். 2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தமிழ் நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணி நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்தந்து குறிப்பிடலாம்.
2012 சனவரித் திங்கள் 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2043 ஆகும்.
தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. 

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. 
நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்:-
1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.
2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.


10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.  

  
உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.
இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.

இந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.
  • நாள்காட்டி விலை: RM5.00 (ஐந்து ரிங்கிட்) மட்டுமே.
  • தொடர்புக்கு: தமிழியல் ஆய்வுக் களம் - Persatuan Pengajian Kesusasteraan Tamil, No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.
  @சுப.நற்குணன், மலேசியா.

நன்றி: திருத்தமிழ்.





 


திங்கள், ஏப்ரல் 04, 2011

இன்று பெ.சுந்தரம் பிள்ளையின் பிறந்த நாள்!





இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் பிறந்தவர் சுந்தரம் பிள்ளை.




இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய சாத்திர நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.



1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார், பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.



மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையை தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். 1878இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசப்பிள்ளை பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.



பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

நன்றி! 'அதே தரண'
               இலங்கை வலைத்தளம்.


திங்கள், ஜனவரி 03, 2011

தம்பி என்று கூப்பிடுவது சரியா ?

தினமணி கதிரில் கவிக்கோ ஞானசெல்வன் 'பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை வாரம் தோறும்  வழங்கி வருகிறார்.  இந்த வாரத்தில் வந்ததை உங்களுக்காக ...

சகோதரர் என்னும் சொல்லுக்கு உடன் பிறந்தவர் என்பது பொருள். சக+உதரர் (உதரம் -வயறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர்.   தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல். ஆனால் தமையன்,தமக்கை,தம்பி,தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?

தம் + ஐயன் = தமக்கு மூத்தவன்- தமையன் (அண்ணன்)

தம் + அக்கை =தமக்கை - தமக்கு மூத்தவள் (அக்கா)

தம் + பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் (தமக்குப் பின்)  பிறந்தவன்- தம்பி

தம் + கை = தமக்குச் சிறியவள்  - தங்கை  (கை எனும் சொல் சிறிய என்று பொருள்படும்)



இப்படி எல்லாம்  ஆங்கிலத்தில் கூறிவிட முடியுமா?  அங்கு Brother என்பதோடு ஒட்டுச் சொற்களை இணைக்க வேண்டும்.  Younger Brother, Elder Brother என்றிவ்வாறு  குறிப்பிடுகிறோம்.  நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனி பெயர் இருக்கும் போது, ஆங்கில மொழியின் தாக்கத்தால் 'மூத்த சகோதரர்' என்றும் 'இளைய சகோதரர்' என்றும் அழைப்பது சரியா?  என்று இக் கட்டுரையில் நம்மை கேள்வி கேட்கிறார் கட்டுரையாளர்.

அதோடு குழந்தை பருவம் என்று சொல்லுகிறோம். இந்த குழந்தை பருவத்திலேயே பத்து பிரிவை கண்டவர்கள் தமிழர்கள்.

ஆண்பால் பிள்ளையாயின்.... 1. காப்புப் பருவம், 2. செங்கீரைப் பருவம், 3. தாலப் பருவம், 4. முத்தப் பருவம், 5. சப்பாணிப் பருவம், 6. அம்புலிப் பருவம், 7. வருகைப் பருவம்,  8. சிற்றில் பருவம், 9. சிறுதேர்ப் பருவம், 10. சிறுபறைப் பருவம்.
இதுவே பெண் பிள்ளையாயின்.... இறுதி மூன்றும் மாறுபட்டு,   8. கழங்கு (தட்டாங்கல்), 9.அம்மானை, 10.ஊசல் (ஊஞ்சல்) என்று பகுத்துப் பிரித்தார்கள். 

தமிழின் பொருள் பட வாழ்ந்தார்கள் என்று தமிழின் பெருமையை தமிழன் உணர தொடர்ந்து எழுதிவருகிறார். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

ஆனால், இன்றோ தமிழன் வேற்று மொழிக்கு வரவேற்பு செய்து 'தமிழுக்கு' சங்கு ஊதுகிறான்.   நாம் தமிழைப் பற்றி, அதன்  பெருமை பற்றி ஏதாவது  கூறினால், 'உச்' கொட்டுகிறான்.

  • தமிழன் தம் மொழி மறந்த மாந்தனாக மாறிவிட்டான்.



வெள்ளி, செப்டம்பர் 10, 2010

தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழி - தினமணி

ஒரு வரலாற்று முக்கியத்துவம் நடந்திருக்கிறது தமிழுக்கு. தினமணியின் நேற்றைய (09/09/2010) தலையங்கத்தில்   'தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும்.'  என்கிறது தினமணியின் தலையங்கம்.

தமிழ் வழிகல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவைப்பில் 20% விழுக்காடு ஒதுக்கீடு, வழங்குவது  தொடர்பாக எழுதப்பட்ட,  தலையங்கத்தில் மேற்கொண்டவாறு கூறியுள்ளது தினமணி நாளிதழ்.

தேவநேயப் பாவணார் முதற்கொண்டு பல்வேறு தமிழ் அறிஞர்கள்  இதற்காகத்தானே போராடினார்கள்.  தமிழ் மொழி சம்ஸ்கிருதத்திளிருந்துதான் வந்தது என்று பொய் உரை கூற முயன்றவர்கள் ஏராளம் ஏராளம். பொய்யை மெய்யாக்க தலைமுறை தலைமுறையாய் முயன்றவர்களும் உண்டது.

ஆனால், தமிழனுக்கே உரிய தாய்  மொழி  பற்று, அதை தவிடிப் பொடியாக்கி தமிழை நாம் இன்றளவும் வாழவைத்துள்ளும்.  தமிழ் கூறும் நல் உலகில் தமிழுக்கு முக்கியத்துவம் வந்துவிடக்கூடாது என்பதற்குத்தான் பலர் முயற்சி செய்து வரும் வேளையில் இந்த தலையங்கம் நமக்கு பெரும் ஆறுதலை தருகிறது.





....இனி தலையங்கம்.


ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?


முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும். இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.

நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.

ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.

ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.

அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!

இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!


-நன்றி தினமணி.

திங்கள், ஜூன் 28, 2010

செம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்

நடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும். மற்றபடி ரோஜா, டேரிப்பூ, லில்லி, போகன்வில்லா, டிசெம்பர், பட்ரோஸ் போன்ற பூக்களின் பெயர்கள் அத்துப்படி. தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களை கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பாடியிருப்பார். அதைதான் நடிகர் சிவகுமார் மனனம் செய்து மேடைதோறும் முழங்கினார். அதனாலேயே தமிழர்களுக்கு நமது மண்ணின் பூக்கள் பற்றி விழிப்புணர்வு வந்திருக்கிறது.



நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு வெளியிட்ட 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' மலரில் அந்த தொண்ணுற்றி ஒன்பது வகை பூக்களின் பெயர்களை படங்களோடு வெளியிட்டுள்ளது.



இனி தமிழ் மண்ணின் பெருமை மிகு பூக்களின் பெயர்கள்....





  1. செங்காந்தாள் (விடுதலை புலிகளின் தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்)


  2. ஆம்பல்


  3. அனிச்சம்


  4. குவளை


  5. குறிஞ்சி


  6. வெட்சி


  7. செங்கோடுவேரி


  8. தேமா


  9. மணிச்சிகை (செம்மணி)


  10. உந்தூழ் (பெருமூங்கில்)


  11. கூவிளம் (வில்வம்)


  12. எறுழம்


  13. கள்ளி


  14. கூவிரம்


  15. வடவனம்


  16. வாகை


  17. குடசம் (வெட்பாலை)


  18. எருவை (கோரை)


  19. செருவிளை (காக்கணம், சங்கு)


  20. கருவிளை


  21. பயினி


  22. வாணி (ஓமம்)


  23. குரவம்


  24. பசும்பிடி (இலமுகிழ்)


  25. வகுளம் (மகிழம்)


  26. காயா


  27. ஆவிரை


  28. வேரல் (சிறு மூங்கில்)


  29. சூரல்


  30. பூளை


  31. கன்னி (குன்றி மணி)


  32. குருகிலை (முருங்கிலை)


  33. மருதம்


  34. கோங்கம்


  35. போங்கம்


  36. திலகம்


  37. பாதிரி


  38. செருந்தி


  39. அதிரல் (புனலி)


  40. சண்பகம்


  41. கரந்தை


  42. குளவி (காட்டுமல்லிகை )


  43. கலிமா


  44. தில்லை


  45. பாலை


  46. முல்லை


  47. குல்லை


  48. பிடவம்


  49. மாறோடம்


  50. வாழை


  51. வள்ளி


  52. நெய்தல்


  53. தாழை (தென்னம்பாளை)


  54. தளவம்


  55. தாமரை


  56. ஞாழல்


  57. மொவ்வல்


  58. கொகுடி


  59. சேடல் (பவளமல்லிகை)


  60. செம்மல்


  61. செங்குரலி


  62. கோடல்


  63. கைதை (தாழை)


  64. வழை (சுரபுன்னை)


  65. காஞ்சி


  66. நெய்தல்


  67. பாங்கர்


  68. மரா (கடம்பு)


  69. தணக்கம் (நுணா)


  70. ஈங்கை


  71. இலவம்


  72. கொன்றை


  73. அடும்பு


  74. ஆத்தி


  75. அவரை


  76. பகன்றை


  77. பலாசம்


  78. பிண்டி


  79. வஞ்சி


  80. பித்திகம்


  81. சிந்துவாரம் (நொச்சி)


  82. தும்பை


  83. துழாய் (துளசி)


  84. தோன்றி


  85. நந்தி ( நந்தியாவட்டம் )


  86. நறவம்


  87. புன்னாகம்


  88. பாரம் (பருத்தி)


  89. பீரம் (பீர்க்கு)


  90. குருக்கத்தி


  91. ஆரம் (சந்தனம்)


  92. காழ்வை (அகில்)


  93. புன்னை


  94. நரந்தம் ( நாரத்தம்)


  95. நாகம்


  96. நள்ளிருள் நாறி (இருவாட்சி)


  97. குருந்து (காட்டு எலுமிச்சை)


  98. வேங்கை


  99. புழகு (மலை எருக்கு)


மேற்கண்ட தகவல்களை தினமணி நாளிதழ் தனது செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் படத்தோடு வெளியிட்டுள்ளது.



பி கு : தினமணியின் 'செம்மொழி கோவை' புத்தகம் விரிவான விமர்சனம் விரைவில்.















ஞாயிறு, ஜனவரி 03, 2010

செம்மொழி என்றால் என்ன ? கவிக்கோ அப்துல் ரஹ்மான்


'உலகின் 8-வது அதிசயமாக தமிழ் மொழி பார்க்கப்படுகிறது' - கவிக்கோ அப்துல் ரஹ்மான்.

சென்னை 33வது புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உரை அரங்கத்தில் 'செம்மொழி சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

செம்மொழி என்றால் என்ன என்று பெரும்பாலனவர்களுக்கு தெரியாத சூழல் உள்ளது. ஒரு மொழி தனக்குரிய அனைத்து சிறப்புகளையும் பெற்று, அதே சமயத்தில் குறை எதுவும் இல்லாமல், அதில் செம்மை தன்மை நிறைந்திருப்பின் அந்த மொழி செம்மொழி என அங்கீகரிக்கப் படுகிறது.

தமிழ் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதால், 8-வது அதிசயமாக பார்க்கப் படுகிறது.

கணியன் பூங்குன்றனாரின், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வரியின் மூலம் தமிழ் பல ஆண்டுகளுக்கு முன்னரே உலக அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. அதற்கு பிறகே இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல்வேறு கால கட்டங்களில், அந்நிய படையெடுப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சமாளித்து தாங்கி நிற்கிறது தமிழ். கலை இலக்கிய தனித்தன்மை, மொழி கோட்பாடு, தொன்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் மனித உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் வேறு எந்த மொழியிலும் இல்லாத கலைச் சொற்கள் இருப்பது தமிழில் மட்டும் தான்.

சங்க இலக்கியம் முதல் இன்று வரை தமிழில் வந்துள்ள இலக்கியங்கள் மூலம் தமிழின் சிறப்புகளை அறிவதோடு, தமிழ் உயர்தனிச் சொம்மொழி என்பதை மக்கள் பெருமிதத்துடன் உணர வேண்டும். இதுவே இப்போதைய தேவை' என்றார் அப்துல் ரஹ்மான்.

ஞாயிறு, டிசம்பர் 13, 2009

மாலை பொழுதின் மயக்கத்திலே...



சேர்ந்தவருக்கு இன்பத்தையும், பிரிந்தவருக்குத் துன்பத்தையும் தரவல்ல மாலை பொழுதினை, நம் தமிழ் இலக்கியங்களில் என்ன ஒரு அழகியலோடு விவரிக்கிறார்கள் பாருங்கள்...!

மாலைப் பொழுது வந்தாலே மங்கையர் மனமும் உடலும் வாடும், பசலை நோய் படர்ந்த நிலையில் அவர்தம் மேனியெல்லாம் ஒருவித மாற்றத்தைக் காணும். திருமணமான பெண்டிர்களின் உயிரை உண்ணும் வேலையைச் செய்யவே இந்த மாலைப் பொழுது வருவதாக வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

"மாலையே அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது"

**********************************************************



கலித்தொகையில் ஒரு காட்சி.

தம் தலைவனைப் பிரிந்த தலைவி; மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி, தோழிக்கு உரைக்கிறாள். காலையில் பகற்பொழுது காலத்தைக் கக்கி, மாலையில் மீண்டும் அதை விழுங்குகிறான். அதனால் கதிர்கள் சுருங்கி, கதிரவன் மலைவாயில் மறைந்துள்ளான். காரிருள்படர்கிறது. கார்மேக வண்ணனின் மேனி நிறைந்தது போல் வெண்ணிலவு தோன்றுகிறது. தாமரை மலர்களோ உறங்குவதுபோல் கண்மூடிக் கிடக்கின்றன, தம் புகழைத் தாமே கேட்ட பெரியார் தலை தாழ்த்தி நிறப்பதைப் போல மரங்கள் கிளை தாழ்ந்து தூயில்கின்றன.

குழலின் ஓசைபோல வண்டுகள் ஒலிக்கின்றன. தம் பார்ப்புகளை நினைத்துத் தாய்ப்பறவைகள் பறக்கின்றன. கன்றுகளை நினைத்துக் கறவைப் பசுக்கள் தம்கொட்டகைகுச் செல்கின்றன. விலங்கினங்களோ தம் வாழ்விடங்களுக்கு நோக்கி விரைகின்றன. செந்தீ வளர்த்த அந்தணர், அந்திப் பொழுதை வழிபடுகின்றனர்.

இப்படி அனைத்து உயிர்களும் மாலை நேரம் வந்தால் வீடு திரும்புகின்றனர். மணந்த, மனம் கவர்ந்த தலைவனோ மாளிகை திரும்பவில்லை. "தன் உயிரே போய்விடும் போலிருக்கிறதே" என்று தலைவி பின்வறுமாறு வருந்தி கூறுகிறாள்.

அகன்ஞாலம் விளக்கும்தன் பல்கதிர் வாயகப்
பகல்நுங்கி யதுபோலப் படுசுடர் கல்சேர
இகல்மிகு நேமியான் நிறம்போல் இருள்இரவ,
நிலவுக்காண் பதுபோல அணிமதி ஏர்தரக்
கண்பாயல் பெற்றபோல் கணைக்கால மலர்கூம்பத்
தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம்துஞ்ச,
முறுவல்கொள் பாவைபோல முகைஅவிழ்பு புதல்நந்தச்
சிறுவெதிர்ங் குழல்போலச் சுரும்புஇமிர்ந்து இம்மெனப்
பறவைதம் பார்ப்புஉள்ளக் கறவைதம் பதிவயின்
கன்றுஅமர் விருப்பொடு மன்றுநிரை புகுதர
மாவதி சேர மாலை வாள்கொள்
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ்வழல் தொடங்க-வந்ததை
வால்இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கி யோரே
(நெய்தற்கலி)
-கலித்தொகை

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...