ஞாயிறு, நவம்பர் 09, 2014

காஞ்சிபுரமும் மூத்திரச்சந்தும்?!.முந்தைய பதிவை படிக்காதவர்களுக்கு..... 
             1997 மற்றும் 98ம் ஆண்டு வாக்கில், தமிழகத்தில் இருக்கும் பத்திரிகைகள் தீபாவளி மலருக்கு ஒரு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி என்று அறிவித்து....பெரும் கல்லா கட்டிக்கொண்டு இருந்தனர். குலுக்கள் முறையில் தங்கம், வெள்ளி, மிக்சி, கிரைண்டர், பட்டுப்புடவைகள் என்று வாரி வழங்கி கொண்டு இருந்தது. அப்போது தினபூமிக்காக 300 பட்டுப்புடவை தரச் சம்மதித்து, தராமல் தலைமறைவாக இருந்த கடை ஓனரை கண்டுபிடித்த போது, அவர் ஒரு ரவுடிகளின் பிடியில் சிக்கி இருந்தார். அவரை அந்த சிக்கலில் இருந்து  காப்பாற்றினேன். அவர் எனக்கு பட்டுப்புடவைத் தராமல் மீண்டும் தலைமறைவாக, அவரை எப்படி கண்டுபிடித்தேன் என்பதுதான் இந்தப் பதிவு.

முந்தைய பதிவை விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும். (தீபாவளி மலர் வாங்கினால் ஒரு கிலோ தங்கம் இலவசம்?! ) 

                   வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியிருந்தது. பட்டுப்புடவை கடை ஓனர் சுரேஷ் மீண்டும் எங்கோ அப்ஸ்காண்டாகிவிட்டார். வீடும் கடையும் பூட்டி இருந்ததால், பிரச்சனை மீண்டும் என்னை புடனியில் தாக்கியது. மறுபடியும் எங்கிருந்து துவங்குவது என்று தெரியவில்லை. டிவியில் அறிவித்தப்படி புடவை தரவில்லை என்றால், வாசகர்கள் நம் மீது நுகர்வோர் நீதி மன்றத்திற்கு போகக்கூடும். அதனால் பத்திரிகைக்கு  பெரும் பிரச்சனைகள் உருவாகலாம் என்று எனக்கு பலமான நெருக்கடி அலுவலகத்தில் தரப்பட்டது. மேனேஜர் ஒரு படி போய், என்னை விரோதியாக பார்க்க ஆரம்பித்திருந்தார். தினமும் எனக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டு இருந்தது. என்னைப் போட்டுப் பார்க்க அவர் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருந்தது. எங்கும் தீபாவளி களைகட்டத் தொடங்கி இருந்தது.

அலைந்து திரிந்து ஒரு வழியாக கடை மேனேஜர் ராமச்சந்திரன் வீட்டை கண்டுப் பிடித்துவிட்டேன்.  அவரது வீடும் அதே வடபழனி குமரன் காலனியில், 100 அடி ரோட்டை ஒட்டி இருந்த சந்தில் இருந்தது.  காலையில் சென்று அவரது வீட்டின் கதவை தட்டினேன். அவரே திறந்தார். என்னைப் பார்த்ததும் பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. "ஸார், ஓனர் ஊர்ல இல்லை, சூரத் வரைக்கும் போயிருக்காரு. நீங்க இன்னும் இரண்டு நாள் கழிச்சி கடைக்கு வாங்க, கடையை நாளைக்கு திறந்துவிடுவோம்" என்றார்.

எனக்கு தலை சுற்றியது!. "என்ன சார், இப்படி பண்றீங்க, நான் பிரச்சனையில் மாட்டி இருக்கேன், நீங்க என்னாடான்னா, சர்வசாதாரணமாக இரண்டு நாள் கழித்து வாங்க நாலு நாளு கழிச்சு வாங்கன்னு கூலா சொல்றீங்க?" என்றேன் கோபத்தில்.

"நான் என்ன சார் பண்ணட்டும், அவரு இங்க வர்ரதேயில்லை, வந்தாதானே சொல்ல முடியும். தீபாவளி அதுவுமா கடையை மூடி வச்சிருக்கோமே, உங்களுக்கு அது தெரியலையா?" என்றார் அவரும் விடாப்பிடியாக.

இனியும் வள வளன்னு பேசிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது புரிந்தது. நேரிடையாக விஷயத்திற்கு வந்தேன். "சார், நீங்க சொல்லியபடி 300 பட்டுபுடவை கொடுக்கவில்லை என்றால், பிரச்சனையை நீங்கதான் சந்திக்கனும். பத்திரிகையிடம் வச்சிக்கிட்டிங்கன்னா பிரச்சனை உங்களுக்குதான். தேவையில்லாம பிரச்சனையை இழுத்துவிட்டுக்காதிங்க. இல்லெனா போலீஸ்ல புகார் கொடுக்கிறாப்பல ஆயிடும். சாதாரனமா நினைக்காதீங்க. உங்க ஓனரை எவ்வளவு பெரிய இக்கட்டுலேருந்து காப்பாத்திருக்கேன், கடைசில என்ன இக்கட்டுல மாட்டிவிடுவீங்க போலயிருக்கு" என்று சத்தம்போட்டேன்.

"வாங்க ஓனருட்ட பேசலாம், அவருட்ட போன போடுங்க, நான் பேசுறேன்" என்றேன். ஓனர் நம்பர் இல்லென்னு முதலில் மறுத்தவர், பிறகு கொடுத்த நெருக்கடிக்கு பேச ஓப்புக்கொண்டார். எஸ்டிடி பூத்திற்கு போனோம். அப்பெல்லாம் மொபையில் போன் ஏது....?!.

"நீங்க வெளியில இருங்க" என்று சொல்லியவர் பூத்திற்குள் புகுந்துக் கொண்டு கதவை சத்திக்கொண்டார். நம்ப நல்ல நேரம் கதவை சரியாக மூட முடியவில்லை. கதவு கொஞ்சம் திறந்து இருக்க.... என்னதான் பேசுகிறார் என்று சைடில் நின்று (ஒட்டு) கேட்டுக்கொண்டு இருந்தேன். மேனேஜர் பேசிக்கொண்டு இருந்தார். நான் தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்வதை கூறிக் கொண்டு இருந்தார். "அண்ணே காஞ்சிபுரத்தில.....அந்த மூத்திர சந்து பக்கத்திலதான இருக்கிங்க?" என்ற வார்த்தை மட்டும் எனக்கு பளிச்சென்று கேட்டது. 'ஆகா...துப்பு கிடைத்துவிட்டது!, இனியும் இந்த மேனஜரை தப்ப விடக்கூடாது' என்று நினைத்துக் கொண்டேன்.

சிலபேர் சாப்பிட்டபின் எதுவும் சாப்பிடாதமாதிரி, வாயை வைத்துக் கொண்டு வருவார்களே பார்த்து இருக்கிறீர்களா....? அப்படிதான் வந்தார் அந்த மேனஜரும். "சார், ஓனருட்ட பேசிட்டேன், அவரு சூரத்தில இருக்காரு, வந்ததும் புடவையை கொடுத்திடுறேன்" என்றார்.

 எப்படி இப்படி முழு பூசணிக்காயை இந்த ஆளு சோற்றில் மறைக்கிறானே என்று எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறியது.  "ஹலோ...உங்க ஓனர் காஞ்சிபுரத்திலதான இருக்காரு, எனக்கு தெரியும். எதுக்கு இப்படி இல்லெனு பொய் சொல்றீங்க" என்று கத்த ஆரம்பித்தேன். "வாங்க காஞ்சிபுரம் போவோம்" என்று கூறிக்கொண்டு, அவரது பதிலையும் எதிர்ப்பார்க்கமல், அருகில் போன ஆட்டோவை கூப்பிட்டேன். அவரை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு பூந்தமல்லி வந்து காஞ்சிபுரம் பஸ் பிடித்தோம்.  ஓனர் காஞ்சிபுரத்தில்தான் இருக்காரு என்று எனக்கு தெரிந்துவிட்டது. இனியும் தாமதித்தால் நிலமை மோசமாகிவிடும், காஞ்சிபுரம் போனால், பட்டுபுடவைக்கு வழி பிறக்கும் என்று எனக்குப் பட்டது.

ஓவர் டூ காஞ்சி......!.
()()()()()()()        காஞ்சிபுரத்தில் நாங்கள் இறங்கிய போது, மதியம் ஆகிவிட்டது. ஆட்டோவில் பயணித்து மார்க்கெட் பக்கம் வந்தோம். அங்கேதான் கடை ஓனர் வீடு இருந்தது. இதற்கிடையில் பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே வந்தார் மேனேஜர். எனக்கு பசியில்லை என்று சொல்லிப் பார்த்தும் விடவில்லை. பின்பு மார்க்கெட் பக்கத்தில் இருந்த ஹோட்டலைக் காட்டி இங்கே சாப்பிடலாம் என்றார். நுழைந்து அமர்ந்ததும், அவரே இரண்டு மீல்ஸ் ஆர்டர் செய்தார். பாதி சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, இலையை மூடிவிட்டு, "சார் சாப்பிட்டுக் கொண்டே இருங்கள், இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு எழுந்து அவசர அவசரமாக சென்றுவிட்டார்,

எதுக்கு இந்த ஆள் இப்படி அவசரமாக ஓடுறான்? என்று நினைத்துக் கொண்டே நானும் சாப்பாட்டை பாதியில் மூடிவிட்டு, ஹோட்டலுக்கு வெளியே வந்தேன்,  ஆனால் ஆளை காணவில்லை... சாலை இரு மருங்கிலும் ஆளை காணவில்லை 'எங்கடா போனான் இந்த ஆளு?' என்று நினைத்துகொண்டு.....சுற்றும் முற்றும் பார்த்தேன்.  அப்போதுதான் அந்த க்ளு கிடைத்தது!.  ஹோட்டலுக்கு பக்கத்தில் நடந்தவன், அதை ஒட்டி காம்பவுண்டுக்குப் பக்கத்தில் யாரும் பயன்படுத்தாத மூத்திர சந்து ஒன்று இருந்தது. அதைப் பார்த்த போது.....போனில் மேனேஜர் பேசிய போது குறிப்பிட்ட அதே மூத்திரச் சந்து இதுதான் என்று எனக்குள் பொறி தட்டியது!.

யாரும் பயன்படுத்தாத சந்து என்பதால் அது பொது கழிப்பிடமாக மாறிவிட்டு இருந்தது. சந்தில் புல் பூண்டு முளைத்து ஒற்றையடிப் பாதையாக மாறியிருந்தது. முகப்பில் ஒரு சிதிலமடைந்த ஓட்டு வீடு வேற பெரும் திகிலை கிளப்பியது. சந்தேகத்தோடு அந்தச் சந்தில் நடக்க ஆரம்பித்தேன். அதை என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் அது நிகழ்ந்திருக்காது. நானும் கொஞ்சம் தூரம் நடந்து சென்றுவிட்டு, திரும்பி ஹோட்டல் வாசலில் மேனேஜருக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பேன். சந்தில் இரண்டு தப்படி நடந்து இருப்பேனே இல்லையோ.....அந்த சிதிலமடைந்த வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி, ஒரு ஓட்டு வீடு வராந்தாவில் அமர்ந்திருந்த உருவம் தலையை வெளியே நீட்டி வாயிலில் இருந்த தண்ணிரை கொப்பளித்து வெளியே துப்பியது. அது வேறு யாரும் இல்லை, நான் யாரை தேடி வந்தேனே, யார் சூரத் போயிருக்கிறார் என்று கூறினார்களோ அவரேதான்.....ஓனர் சுரேஷேதான் அங்கு அமர்ந்திருந்தார். கூட நாளைந்து நண்பர்களும் இருந்தார்கள். கடன்காரர்களுக்குப் பயந்து உள்ளூரிலேயே ஒளிந்துக் கொண்டு இருந்தார். ஜன நடமாட்டம் உள்ளப் பகுதியில் அப்படி ஒரு சந்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்?.

நான் எதிரில் போய் நிற்கவும், ஒரு கணம் அவர் ஆடிப் போய்விட்டார். என்னை அவர் எதிர்பார்க்கவில்லை.  இந்த நேரத்தில் இந்த இடத்தில் நம்மை பார்த்தால் யாருக்குதான் அதிர்ச்சி இருக்காது?. அதிர்ச்சி மேலிட..... "வா.....மகேஸூ" என்று அழைத்தவர், "எப்படி இந்த இடத்தை கண்டு பிடிச்ச....? இந்தப் பக்கம் யாரும் வரமாட்டாங்களே....?" என்றார் முகம் சிவக்க. நான் கண்டுபிடிச்ச விபரத்தை சொன்னதும், எதிரில் இஞ்சி திண்ண குரங்காய் உட்கார்ந்து இருந்த மேனேஜரை கடிந்துக் கொண்டார்.

"சார் உங்கள சாப்பிட்டுக்கிட்டுதானே இருக்கச் சொன்னேன், எதுக்கு இப்படி இடத்த தேடி வந்தீங்க?. என்று என் மேல் எகிற அராம்பித்தார் மேனேஜர். "அட, சும்மா இருய்யா.....அவருதான் வந்துட்டாரே அப்புரம் எதுக்கு கத்துற?" என்று கூறிய ஓனர் புல் மப்பில் இருந்தார். "சார், என்ன சார் இப்படி தவிக்க விட்டுடீங்க? நான் பெரிய இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன். நீங்க இப்ப பட்டுப் புடவை குடுக்கலனா, பிரச்சனைதான் சார் அதிகமாகும். அதுக்கப்புறம் என்னை எதுவும் கேட்காதீங்க" என்று சத்தம் போட்டேன். ஆத்திரத்தில் பொறிந்து தள்ளினேன்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஓனர், "மகேஸூ கவலைப்படாத நீ மெட்றாஸூக்கு போறப்ப பட்டுப்புடவையோடத்தான் பேவே....போதுமா?. நீ என்னை காப்பாத்திருக்க......அதுவுமில்லாமல் இவ்வளவு தூரம் என்னை தேடி வேற வந்திட்ட......உனக்கு 200 பட்டுப்புடவை ஏற்பாடு பண்ணித்தரேன். மீதி இன்னும் இரண்டு நாளைக்குள்ள உனக்கு மெட்றாஸிலேயே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிடுறேன் " என்றவர் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரது நண்பர் மாரிமுத்து என்பவரிடம் "மாரி....நீ சொசைட்டி குமாரை போய்ப் பார்த்து பட்டுப்புடவை வாங்கியா....இந்தா" என்று தனது பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டு கட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

"மகேஸூ..... பட்டுப்புடவை வர ஈவினிங் ஆயிடும், அதுவரைக்கும் வா ஒரு பெக் போடு" என்றார். நான் யோசிப்பதைப் பார்த்து, "என்ன யோசிக்கிற......தண்ணி வாங்கிக் கொடுத்து உன்னை கவிழ்த்திடுவேன்னு நினைக்கிறியா...?. நீ தண்ணி அடிச்சாதான் உனக்கு சரக்கு (பட்டுப்புடவை) கொடுப்பேன். இல்லென உனக்கு பட்டுப்புடவை கிடையாது". என்றார் சிரித்திக் கொண்டு.... "வேணம் சார், ஆபிஸ் வேலையா வந்திருக்கேன், இப்போ போய் தண்ணி அடிச்சிகிட்டு இருந்தா, நல்லா இருக்காது. நான் இன்னோரு நாளைக்கு வரேன்" என்றேன். எனக்கு  வேலை முடிந்தால் போதும் என்றிருந்தது. ஆனால் அவர் விடுவதாக இல்லை.

 இருங்க.... 'ஆபிஸ்க்கு ஒரு போன் போட்டு வர்றேன்". என்று வெளியே கிளம்பி ஆபிஸ்க்கு போன் செய்தேன். மேனேஜர் விஜயன் சாரிடம் நடந்தவற்றை கூறி, இருக்கும் இடத்தையும் கூறி, ஈவினிங்குதான் சார் புடவை கிடைக்கும் என்று தகவலையும் தெரிவித்தேன். அவரும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டார். "பத்திரமாக எடுத்துகிட்டு வா" என்றார்.

எதுக்கு இருக்கும் இடத்தைக் கூறினேன் என்றால், எதாவது பிரச்சனை என்றால் நாம் இருக்கும் இடம் ஆபிஸூக்கு தெரிய வேண்டு என்பதற்காகத்தான். நான் திரும்பி போனபோது, ஒரு புல் பாட்டிலும் சிக்கன், மட்டன் முட்டை என்று அடிக்கி வைத்திருந்தார். எல்லாம் அவரது நணபர் வீட்டில் இருந்து வந்திருந்தது. நான் செய்த உதவியை அவரது நண்பர்களிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.  இப்படியாக தொடங்கிய பார்ட்டி.....மாலை வரை தொடர்ந்தது. பார்ட்டி முடியவும், பட்டுப்புடவை வருவதற்கும் சரியாக இருந்தது.

பட்டுப் புடவையைப் பார்த்ததும்தான் எனக்கு உயிர் வந்தது. எத்தனை நாள் போராட்டம். தீபாவளி நெருங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பட்டுப் புடவை கிடைத்தது பெரிய விஷயம். கிடைக்காமல் போயிருந்தால், எனக்கு நிச்சயம் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். பத்திரிகைக்கும் கெட்டப் பெயர் கிடைத்திருக்கும். வாசகர்களுக்கு அறிவித்த பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்படி மறைமுகமாக எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு செயல்களுக்கு பின்னரும் ஒரு கதை இருக்கும். ஒவ்வொரு கதைக்கும் பின்னரும் ஒரு செயல் இருக்கும். என்னைப் போன்ற மார்கெட்டிங் மனிதர்களின் வாழ்வு என்பது,  எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும். தான் வாழ வேண்டும் என்பதற்காகவே, பிறருக்காக வாழக் கூடியவர்கள் இவர்கள். இலக்குகள் நிர்ணயக்கப்பட்ட பெரிய குக்கர்களில் வேகக் கூடிய பருப்புகள் இவர்கள் என்றால் அது மிகையல்ல?!.
 
சரி, போகட்டும். கதையை முடிக்க வருவோம்.

இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகளில் வந்திரங்கிய பட்டுப்புடவையை எடுத்துக் கொண்டு, காஞ்சிபுரத்தில் பஸ் பிடித்து,  சென்னை எல்ஐசி பஸ் ஸ்டாப்பில் வந்திறங்கிய போது மணி இரவு பனிரெண்டு ஆகிவிட்டிருந்தது.  பேருந்து நிலையம் அப்போது பாரிஸ் கார்னரில் இருந்தது. கோயம்பேடுக்கு வரவில்லை. பட்டுப்புடவையை அலுவலகத்தில் இறக்கிவிட்டு, எடிட்டோரியல் பக்கம் தலையை காட்டிவிட்டு,  18K பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது....பொழுது விடிய இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.

()()()()()()()

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...