செவ்வாய், டிசம்பர் 31, 2013

சென்னை பார்களில் பாடும் பெண்கள்!சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கிறது அந்த ஹோட்டல்.   வியாபார நிமித்தமாக ஒரு நண்பர் என்னை அங்கு வந்து சந்திக்கும் படி கூறி இருந்தார்.  ஹோட்டலுக்கு சென்று அவரை தொடர்பு கொண்டால்.... "பாரில் இருக்கிறேன் வாங்க" என்றார்.  பார் ஹோட்டலின் தரை தளத்திற்கும் கீழே இருந்தது.

பாரில் குடிமகன்கள் சீப்பிக் கொண்டு இருக்க... ஒரு ஓரத்தில் மூன்று இளம் மங்கைகள் மைக் பிடித்து பாடிக் கொண்டு இருந்தனர். பழைய  மற்றும் புதிய பாடல்களாகப்  பாடி வந்திருந்த 'பார்'யாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திக் கொண்டு இருந்தனர்.  பொதுவாக இத்தகைகைய நடுத்தரவர்க்க பார்களில், யாரும் பாட மாட்டர்கள். சத்தத்தை அதிகம் வைத்து நமது காதைதான் செவிடாக்குவார்கள். ஆனால், இங்கு பெண்கள் பாடுவது புதிதாக இருந்தது.

ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ஹோட்டல் பார்களில் மட்டும்தான் இத்தகைய இசை நிகழ்ச்சிகள் நடைபெரும்., அல்லது யாராவது ஒருவர் இசை கருவியை மென்மையாக இசைத்து, குடிமகன்களை  உற்சாக மூட்டுவார்கள்.  கார்பெரேட் மனிதர்களின் வாழ்வியலில், இத்தகைய லைஃப் ஸ்டல் சகஜமான ஒன்று.

ஆனால், நடுத்தர வர்க்க  குடிமகன்கள் வாழ்வில் இப்படிப்பட்ட லைப்ஸ்டைல் இல்லை. பாட்டிலை திறந்து ஒரே கல்பாவா அடித்துவிட்டு, ஆபிஸில் இருக்கும் எவனைப் பற்றியாவது சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருப்பதைதான் நாம் அதிகம் பார்த்துக் இருக்கிறோம்.

சிறிய ரக ஹோட்டல்களில் இப்படி பாடகிகளை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது சற்று நெருடலாகவே இருக்கிறது. அதிலும் அந்த  மூன்று பெண்களில் இருவர் மணமானவர்.  பார் முழுவதும் ஆண்கள் குடித்துக் கொண்டு இருக்க, அந்த மூன்று பெண்களும்,  சங்கோஜத்துடன்  பாடிக் கொண்டு இருந்தது வேதனையாக இருந்தது.

பார்களில் பெண்கள் பாடித்தான் ஆக வேண்டுமா....???

சனி, டிசம்பர் 28, 2013

தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம்!. PART 2


                    ழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் எல்லாம் பத்திரிகைகளை நம்பிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைக்கு ஒன்றை அனுப்பிவிட்டு அது எப்போது வரும்? என்று காத்திருப்பார்கள். அப்படி வந்துவிட்டால் அந்தப் பக்கத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரிடமும் நான் எழுதியது  வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் காட்டுவார்கள்.
இப்போது எல்லாரும் கையும் கணினியுமாக அலைகிறார்கள். இணையதளங்கள் பெருகிவிட்டன. ஆளுக்கொரு அல்ல...  பல பிளாக்ஸ்பாட்கள் ஆரம்பித்து, நினைத்ததை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர்... இவர்கள் !

முந்தைய வலைப்பதிவர்கள் அறிமுகம் பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்....


தோத்தவண்டா
ஆரூர் மூனா என்ற பெயரில் எழுதிவரும் செந்தில்குமாருக்கு திருவாரூர்தான் சொந்த ஊர். சென்னையில் ரயில்வேயில் பணிபுரியும் இவர் சினிமா, அனுபவம் என்று கலந்துகட்டி எழுதுகிறார். சினிமா பார்ப்பதையே அனுபவப் பதிவாகப் போட்டு சினிமாவைவிட விறுவிறுப்பு ஊட்டக்கூடியவர். (www.amsenthil.com)

யாரும் அழைக்காத நானும்
என் கணினியும்...

நானும் ஒரு வாரமாக பாக்குறேன். ஒரு பய நமக்கு அழைப்புவிட மாட்டேங்குறான். பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க. சரி யாரும் நம்மளை மனுசனாகவே மதிக்கலை போல. நாமளும் யாரிடமும் ஒழுங்கா பழகியது இல்லையே. எங்க பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாத்தேன் போய்க்கிட்டு இருக்கு.

என்னை, நானும் என் முதல் கணினி அனுபவமும் என்ற தொடர் பதிவை எழுதும்படி  வந்த அழைப்பை ஏற்று அந்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
இருபது வயது வரை நான் கணினியை அருகில் இருந்து பார்த்தது இல்லை. படத்தில் பார்த்தது கூட "காதலர் தினம்' படத்தில்தான். அதிலும் கவுண்டமணி கையின் முட்டியால் அடிப்பதையெல்லாம் நிஜம் என்று நம்பிக்கொண்டு இருந்த அப்பாவி (நீயாடா, வெளங்கிடும்) நான்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் கம்ப்யூட்டரை பின்பக்கமாகப் பார்த்து ரசித்து இருக்கிறேன். வங்கிக்கணக்கு கூட இல்லாததால் பேங்கு பக்கம்கூட அதுவரை சென்றதில்லை. அதனால் வங்கியில் கணினியைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

நாஞ்சில் மனோ
சொந்தக் கதை சோகக் கதை என்று ரகளையாய் தனது பதிவுகளை எழுதக்கூடியவர். நாஞ்சிலை சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், பஹ்ரைனில் பணி. மும்பையில் வாசம் என்றிருந்தாலும் காமெடியில் கலக்கவே இவருக்கு விருப்பம். அனுபவம் சார்ந்த எழுத்துக்களையே அதிகம் எழுதக் கூடியவர். (http/nanjilmano.blogspot.in)

மலையாளி பெண்கள்  

மலையாளி ஆண்களுக்கு தமிழனைப் பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்பப் பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லியிருக்கேன். அது என் அனுபவமும்கூட. மலையாளி தோழிகள் வாயால் சொல்லியும் கேட்டிருக்கிறேன். அதுக்குக் காரணம் கேட்டால் அவர்கள் சொல்வது, ""தமிழர்கள் நீங்கள் மனைவிகளை பொன்னை (தங்கம்) போல நேசிக்கிறீர்கள். வேலைக்குப் போகவிடாமல் அன்பாய் நடத்துகிறீர்கள். ஆனால் கேரளாவில் வேலை இல்லாத பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள். அப்படியே நாங்கள் வேலைக்கு போய் படும் அவஸ்தை எங்களுக்குத்தான் தெரியும். அதில் உங்கள் ஊர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். கூடப் பிறந்த சகோதரிகளையும் அப்படியே நேசிக்கிறார்கள்.  அந்த குணம், பண்பு, பாசம், நேசம்  கேரளாவில் குறைவு மனோ'' என்பார்கள். எனக்கு இருக்கும் மலையாளி தோழிகளைப் பார்த்து கேரள நண்பர்கள் காதில் எப்போதும் புகை வரும் (தண்ணி வந்தாலாவது நல்லாயிருக்கும்)


அரசர் குளத்தான்
அரசியலில் அதிரடி எழுத்துக்கு சொந்தக்காரர். ரஹீம் கஸாலி என்ற பெயரில் எழுதும் இவர் அறந்தாங்கி அருகில் இருக்கும் அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கலந்து கட்டி எழுதினாலும் அரசியல்தான் இவருக்கு ஃபேவரைட்.
(www.rahimgazzali.com)

சித்திரை திங்கள் முதல் தேதி மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் கலைஞர் டி.வி., மற்ற தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி என்று எந்த மாதத்தின் முதல் தேதியையும் கண்டுகொள்ளாதது ஏன்? அதான் தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியாச்சே, அப்புறம் ஏன் இன்னும் சித்திரை கொண்டாட்டம்? ஒருவேளை சித்திரை முதல் தேதிதான் சிங்களர்களின் புத்தாண்டாம். அதைத்தான் இப்படி மறைமுகமாக கொண்டாடுகிறதோ கலைஞர் டி.வி.

இந்திய ஊடகங்கள் எந்த செய்தியை வெளியிட வேண்டும் என்பதைவிட, எதை வெளியிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருக்கின்றன.
   - மனுஷ்யபுத்திரன்.
  
நீங்ககூட அப்படித்தான் தலைவரே... டெல்லி பெண் கற்பழிப்பு, வினோதினி ஆசிட் வீச்சு என்று எல்லாவற்றிற்கும் எதிர்க்குரல் கொடுத்துவிட்டு, சன் நியூஸ் சானலை சேர்ந்த ராஜா மீது அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார் பற்றி வாயே திறக்கவில்லை. அப்படி திறந்திருந்தால், சன் டி.வி. தனக்கு வாய்ப்பு கொடுக்காது என்ற பயம்தானே காரணம்.
ஒன்பது எம்.பி., பத்து எம்.பி. வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரதமர் கனவில் இருக்கும்போது 8192 எம்.பி. அதாவது எட்டு ஜிபி வச்சிருக்க நான் ஏன் பிரதமராகக் கூடாது?

கரிகாலன்
சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜீவகரிகாலன், சமூகப் பொருளாதாரம், தலித் பொருளாதாரம், சிற்பங்கள், ஓவியங்கள், கவிதை, கதை என பதிவிட்டு வருகிறார். மாறி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபத்தான சூழலை வெளிக்கொணர்வதில் இவரது கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. (www.kalidasanj.blogspot.com)

மாற்றம்?
மெக். டொனால்டு, பீட்சா ஹட், கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு உணவகங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. இப்போது எல்லா மேலை நாட்டு உணவு விடுதிகளும் தமது ஃபிரான்சைஸ் வணிக யுக்தியில் பெரிய அளவு வெற்றி கண்டுவிட்டன என்று சொல்லலாம். இந்தக் கடைகளின் வணிகத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் பெரும்பான்மை மத்திய தர, வேலை பார்க்கும் வர்க்கத்தின் மாறிவிட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து நாம் தெளிவான பட்டியல் இட முடியாது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா போல இளைஞர்களின் பீ.எம்.ஐ. ஏற்றம், உடல் நலக் குறைவினை, மிகச் சிறிய வயதிலேயே பூப்படைதல் போன்ற குறைபாடுகளைக் கண்டறிந்தால் நமக்கு இந்த பாதிப்பு குறித்து தெளிவு பிறக்கும்.

-நன்றி தினமணி கதிர் (15/12/2013)

 குறிப்பு: இரண்டு  வாரங்கள் கழித்து இந்த பதிவு வருவதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர் வேலை பளு மற்றும் குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சி தொடர்பாகவே இந்த காலதாமதம்.

மீண்டும் அடுத்த வலைப்பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்!.
காத்திருங்கள்... அது நீங்களாகக் கூட  இருக்கலாம்?!.
நன்றி!

-தோழன் மபா.வெள்ளி, டிசம்பர் 27, 2013

ஏகே-47னும் நகை முரணும்!       சென்ற நூற்றாண்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஏகே-47 எந்திர துப்பாக்கி குறைந்தது பல லட்சம் மனித உயிர்களையாவது பறித்திருக்கும். ரஷ்யாவிற்காக தயாரிக்கப்பட்ட ஏகே-47, அதன் எளிமை மற்றும் வளமையான தாக்கும் திறனால், இன்று உலகம் முழுவதும் பல லட்சம் மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

மனித இன அழிப்புக்கு பயன்படும் கருவிகளை வரிசைப் படுத்தினால், அதில் ஏகே-47தான் முதலிடத்தில் இருக்கும். ஏகே-47 தேசிய ராணுவங்கள் காவல்துறை மட்டுமல்லாமல், தீவிரவாத குழுக்கள், இன விடுதலை குழுக்கள், போராளி அமைப்புகள், கடத்தல்காரர்கள், கடற்கொள்ளையர்கள் என்று அனைத்துத் தரப்பையும் வசீகரித்த மாபெரும் அழிவுக் கருவி அது!. அது தயாரிக்கப்பட ஆண்டான 1947ல் 47யையும், ஆட்டோமேட்டிக் என்பதலிருந்து Aயையும் அதனை கண்டுபிடித்தவரான கலாஷ்னிக்கோவ் என்பதிலிருந்த் K யையும் எடுத்துக் கொண்டு AK -47 என்ற நாமகாரணத்துடன், இவ் உலகை சுட்டுத் தள்ளி வருகிறது!.

AK -47 கருவியால் எத்தனை எத்தனை மனிதர்கள் தங்களது அல்ப ஆயுசுல் மடிந்திருப்பார்கள். ஆனால், அதை கண்டுப் பிடித்த மிகையில் கலாஷ்னிக்கோவ் மட்டும் 94 வயது வரை பரிபூர்ணமாக இருந்து தனது உயிரை விட்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மனித இன அழிப்புக் கருவியான ஒன்றை கண்டுபிடித்த மனிதன் 94 வயது வரை உயிரோடு இருந்தார் என்கின்றபோது, அவர் கண்டுபிடித்த கருவிமட்டும் பல உயிர்களை துள்ள துடிக்க பலி வாங்குகிறது... வாங்கிவருகிறது!.

'கெடுவான் கேடு நினைப்பான்' என்கிறது நமது நீதி நூல்கள், ஆனால் இங்கு மனித குலத்திற்கு கேடு விளைவித்த ஒரு கருவியை கண்டுபிடித்தவர் தனது 94 வயது வரை உயிர் வாழ்ந்தார்.

என்னே இந்த நகைமுரண்...?!.

திங்கள், டிசம்பர் 23, 2013

அப்துல் கலாமும் தேவயானியும்!                           மெரிக்க துணை தூதர்  தேவயானி கோப்ரகடே கைது நடவடிக்கை உலக அரங்கில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியிருக்கும் வேளையில்,  இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் அது  ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!.

வீட்டு வேலைக்குப் பணிப் பெண்ணை அமர்த்தியதில் விசா முறைகேடு செய்ததாக கடந்த வாரம் அமெரிக்க காவல்துறை இந்திய துணைத் தூதர்  தேவயானி கோப்ரகடேவை  கைது செய்தது.  அவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றது மட்டுமல்லாமல், அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்து, அவரை போதை பொருள் கடத்தியவர்களுடன் சிறையில் அடைத்ததால் இந்தியாவில் பெரும் பரப்பரப்பு எழுந்துள்ளது.

தேவயானி கைது நடவடிக்கை இரு அவைகளிலும் எதிரொலித்தது. எதிர்ச் கட்சிகள் முதற்கொண்டு ஆளும் கட்சிவரை அனைத்து கட்சிகளும் இச் செயலுக்கு கடும் கண்டம் தெரிவித்தது. இதனால் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த விசேஷ சலுகைகளை இந்திய அரசு உடனே விலக்கிக் கொண்டது.

இந்த எதிர்தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பார்க்கவில்லை. அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அலறி அடித்துக் கொண்டு  இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.

தேவயானி கைது நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இந்திய அரசு,  ஏன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை,  அமெரிக்க அரசாங்கம் அவமதித்த போது மெளனம் சாதித்தது?.  இந்த ஒப்பீட்டு விவகாரம், இணையத்தில் பெரும் ஆரவாரத்தோடு விவாதிக்கப்பட்டு வருகிறது!.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அவமதித்ததும், தேவயானி கைது நடவடிக்கையும் வேறு வேறு கோணத்தில் இருப்பவை.   இந்த இரண்டு பிரச்சனைகளையிம் ஒப்பிட்டு பார்ப்பது என்பது தேவையில்லாத ஒன்று!. இந்த பிரச்சனையில்  இந்திய துணை தூதுவரை கை விலங்கிட்டு கைது செய்து, 'காவிட்டிஸ் செக்'  (Cavities Check) என்று சொல்லப்படும் சோதனை செய்துள்ளது அமெரிக்க அரசு.

அதாவது ஒரு மனித உடலில் எங்கெல்லாம் துவாரங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் சக்தி வாய்ந்த வெளிச்சத்தை அடித்து சோதனை செய்வது காவிட்டு செக்காகும்.  இச் சோதனையில் இந்திய துணை தூதரின் உடைகளை களைந்து அவரது அந்தரங்கப் பகுதிகளில்   ஏதேனும் மறைத்து வைத்து இருக்கிறாரா? என்று சோதனை செய்து இருக்கிறார்கள்.   (இச் சோதனை முன்பு ஈராக் அதிபர் சதாம் உஸேனுக்கு நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்)  அதோடு மட்டுமல்லாமல் அவரை போதை பொருள் மற்றும் விபச்சார கிரிமினல்களோடு அடைத்துவைத்து இருக்கிறார்கள்.  இச் சோதனைகள்   நம்மை மிகவும் பலகீனமாக்கி, நமது மன உறுதியை குலைக்கக் கூடியது.

இந்திய துணைத் தூதுவரை கைது செய்த விதம்,  இந்திய தரப்பை மிகவும் அவேசப்பட வைத்துள்ளது. ஒரு வெளி நாட்டு தூதுவரை நடத்தப்பட வேண்டிய  வியன்னா மாநாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் அப்பட்டமாக அமெரிக்க அரசால் மீறப்பட்டுள்ளன

இந்த விஷயத்தை தனது IFS சக அதிகாரிகளுக்கு தேவயானி  மின் அஞ்சல் செய்த பிறகே விஷயம் தீவிரம் அடைத்துள்ளது.  IFS அதிகாரிகளின்  அழுத்தமே இந்திய அரசை, தீவிரமாக  செயல் படவைத்துள்ளது.

இதற்கு முன்பு தூதரக அதிகாரிகளை அவமானப் படுத்தியுள்ளனர். இந்திய தூதர் மீரா சங்கரும் கூட  அமெரிக்கா  விமான  நிலையத்தில்  தோளில்  தட்டி  உட்கார வைக்கப்பட்டனர் .இந்த சம்பவம்  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள இந்திய தூதரகத்தில்  பணியாற்றிய கீர்த்திகா  பிஸ்வாஸ்  என்பவரும்  கைது  செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு  அழைத்து செல்லப்பட்டார்.

இந்த பிரச்சனையில் எதற்கு அப்துல் கலாம் விஷயத்தை  ஒப்பிட்டு பார்க்கவேண்டும்?.

  முன்னாள்  ஜனாதிபதி  அப்துல் கலாமை  விமான  நிலையத்தில், ஷீ வை  கழற்றச்  சொல்லி  சோதனையிட்டு  அமெரிக்கா  அவமானப்படுத்தித்தியது.  இது  நாட்டில்  பெரும்  சர்ச்சையை  உண்டாக்கியது.

அப்துல் கலாமுக்கு நிகழ்ந்த போது இந்திய அரசு மௌனம் சாதித்தது போல்,  இப்பவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?.  முன்னாள் குடியரசுத் தலைவருக்கு நடந்தது ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றபோது, ஒரு பெண்ணிற்கு நடந்ததும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாததுதான். இதில் இரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது துரதிஷ்ட வசமானது.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஷாருக்கான் ,கமல்ஹாசன், மீரா சங்கர், பிரபுல் பட்டேல், ஹர்தீப் புரி,  கீர்த்திகா பிஸ்வாஸ், தேவயானி என்று அமெரிக்க அதிகாரிகளால் அவமதிப்பட்ட இந்தியர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதில் 'காவிட்டி செக்கிற்கு' ஆளானவர் தேவானி மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

அப்துல் கலாமை அவமதித்த போதே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருந்தால், இத்தகைய அவகாரமான  நடவடிக்கைகள் இந்திய தூதரகத்திற்கு நடந்திருக்காது.  அதைவிட்டு இப்போதும் முந்தயை நிலையிலே நமது அரசு இருந்திருந்தால், இந்த துயர் ஒரு தொடர்கதையாகத்தான் இருந்திருக்கும்.

அமெரிக்க அரசிற்கு எதிரான இந்த தீவிர நடவடிக்கைகள்,  நிச்சயம் சர்வதேச அளவில் நமக்கான புதிய பார்வையை உலக அரங்கில் பெற்றுத்தந்திருக்கும் என்று நம்புவோம்!.

 இப்போதாவது மத்திய அரசுக்கு சுரணை வந்ததே என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்வோமாக?!
(()) (()) (())

கொசுறு:  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரண்டுப் பிடித்த இந்திய அரசிற்கு, மன்னிப்பு கேட்க முடியாது என்று பதிலடித் தந்துள்ளார் அமெரிக்க வெளிவிவகாரத் துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ப்.

 விரைவில் இப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சல்மான் குர்ஷித்.  தேவயானியை ஐ.நா சபை தூதராக நியமித்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது இந்திய அரசு. அதன் பலனாக தேவயானி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, எரியும் நெருப்பில் சற்று நீரை தெளித்திருக்கிறது அமெரிக்க அரசு.
-தோழன் மபா. 
(()) (()) (())

சனி, டிசம்பர் 14, 2013

ஆனந்த விகடனில் 'குமுதம்' டைப் கதைகள்...!?                   இந்த வார விகடனில் (18/12/13) ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதிய 'இது காதல் இல்லாத கதை' தான் அப்படி நினைக்க வைத்தது.

அந்த கதையில் வரும் ஒரு சம்பவம்.

//தான் ஒரு பெண் என்பதற்கான  அடையாளங்களை அவள் பிடிவாதமாக மறுத்திருந்தாள். ஆனால், ஒரு ஓவியன் அவளை படமாக வரைந்தால், கழுத்துக்கு கீழே பிரஷை வெளி நோக்கிப் பெரிதாக வளைக்க வேண்டியிருக்கும்.

"ரொம்ப தப்பு....." என்றாள் வந்தனா, மிதுனை நோக்கி.

"என்ன...?"

"இப்ப நீங்க பார்த்த இடம்". //


என்று சற்றே மிகைப்படுத்தியே எழுதியிருந்தார்கள். இதைபோன்ற குமுதம் டைப் கதைகள் இதற்கு முன்னர் ஆவியில் படித்ததில்லை. வேறொரு தளத்தில் இயங்க வேண்டும் என்று நினைத்து இப்படி மாற்றிவிட்டார்களா என்று தெரியவில்லை...?

அதோடு அந்த 3D சமாச்சாரமும் எரிச்சலைதான் கிளப்புகிறது.

ஞாயிறு, நவம்பர் 24, 2013

'செஸ்'- 'இருவரும் பேசாம விளையாடனும்'

 ஒரு நேரடி ரிப்போட்! 

சதுரங்க பலகையில் எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ். 
இதன் மூலமே விளையாட்டில் காய் நகர்த்தலை நாம் காண முடியும். துள்ளியமாக கணிக்க முடியும் Pix. Karthik.சென்னையில் நடைபெற்ற 'உலக செஸ் சாம்பியன்' போட்டியைக் காண கடந்த 20ம் தேதிதான் செல்லமுடிந்தது. சர்வதேச  சதுரங்க  போட்டி சென்னையில் நடைபெறும் போது, அதை பார்க்கவில்லை என்றால் இந்த உலகம் நம்மை மன்னிக்காது என்று கிளம்பி விட்டேன். அதுவும் நமது எக்ஸ்பிரஸ் நாளிதழ்தான் மீடியா பார்ட்னர் என்பதால், அனுமதி சீட்டோடு உள்ளே செல்வது எளிதாக  இருந்தது. 


பின்னணியில் கண்ணாடி தடுப்பு
இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
அன்று  ஒன்பதாவது சுற்று நடைபெற்றுக் கொண்டு  இருந்தது. அன்றைய தினம் இந்திய ராஜாவுக்கு அதாவது ஆனந்துக்கு வாழ்வா சாவா போட்டி. அதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் கார்ல்ஸென்னே முன்னிலை வகித்திருந்ததால், ஆனந்த் கடும் நெருக்கடியில்  விளையாடிக் கொண்டு இருந்தார். இன்று ஜெயித்தால் மட்டுமே ஆனந்த் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் நார்வேயின் கார்ல்ஸென். மிக எளிதாக வெற்றியை முத்தமிட்டுவிடுவார். அதனால் போட்டி நடைபெற்ற ஹையாட் ஹோட்டல் முழுவதும் பதட்டம் நிலவியது.
ஹோட்டல் லாபியில் போட்டி திரையிடப்பட்டது
பார்வையாளர்களை கடும் சேதனைக்கு பிறகே போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.  மொபையில் போன்,  பை  போன்றவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதில்லை.  அதனால் அனைத்தையும் அரங்கிற்கு வெளியே வாங்கி வைத்துக் கொண்டனர். அரங்கின்  மேடை போன்ற பகுதியில் நீண்ட கண்ணாடி தடுப்புக்கு அப்பால் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்கள் பல அடுக்குகளாக உட்காரவைக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பேசுவது எதுவும் வீரர்களுக்கு கேட்காது. 

போட்டியில் கடுமையான சர்வேதேச விதிகள் கடைபிடிக்கப்பட்டது.

 • இதில் ஒரு ஆச்சரியமான தகவல், போட்டி நடைபெறும் போது இரு வீரர்களும் பேசக் கூடாது. அதே போல் இருவரும் ஒரே நேரத்தில் தேனீர் அருந்த செல்லக் கூடாது.
  குழந்தைகள் விளையாட பெரிய சைஸ் காய்கள்.
 • இருவருமே போட்டி நடைபெறும் ஹையாத் ஹோட்டலில்தான் தங்கி இருந்தனர். இருவருமே தனித்தனி  'லிப்ட்டுகளைத்தான்' பயன்படுத்தினர்.
 • தரைத்தளத்தில் போட்டி நடைபெற, முதல் தளத்தில் சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்திய பத்திரிகையாளர்களும் சுறு சுறுப்பாய் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
  நேரடி ஒளிபரப்பு
 • கடந்த 2011 ஆம் ஆண்டு உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர்   கிர்சன் இல்யும்சிநோவ் ஜெயலலிதாவை  தலைமைச் செயலகத்தில் சந்தித்து 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டியினை சென்னையில் நடத்துமாறு  கேட்டார். தமிழக அரசும் ரூபாய் 20 கோடி இதற்கென ஒதுக்கீடு செய்தாது. .  பின்னர் ரஷ்யா அதிக அளவில் ஏலம் கேட்டதால், 2012ம் ஆண்டு சதுரங்க சாம்பியன் போட்டி ரஷ்யாவில் நடைபெற்றது..
 • 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வாகையர் போட்டியினை நடத்த தமிழ்நாடு முன் வந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த (2013) ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் போட்டியினை ஏல முறையின்றி சென்னையில் நடத்த உலக சதுரங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
 • உலக சதுரங்க கூட்டமைப்பின் வேண்டுகோளினை ஏற்று, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க சாம்பியன்  போட்டியினை சென்னையில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.  
 • இப்போட்டிக்கென ரூபாய் 29 கோடி நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.  
 • சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சனுக்கு வரும் திங்கட்கிழமை அன்று பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
ஹோட்டலில் குழுமியிருந்த சிறுவர்கள் .
 • போட்டி நடந்த தேனாம்பேட்டை ஹயாட் நட்சத்திர ஹோட்டலில் இருந்து 20 நிமிட பயணத்தில் வீட்டுக்குச் சென்று விடலாம் என்றாலும், ஹோட்டலிலேயே தங்கினார் ஆனந்த். தேவையில்லாத நெருக்கடிகளைத் தவிர்க்க ஆனந்த் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்.
மெகா சைஸ் போர்டில் குதூகல ஆட்டம்!.
 • இந்தத் தொடர் தொடங்கும் முன் ஆனந்த்-கார்ல்ஸென் மோதலை, தலைமுறைகளுக்கு இடையிலான மோதல் என்றும், 1972ல் நடந்த பாபி ஃபிஷர்- ஸ்பாஸ்கிக்கு இடையிலான மோதலுடனும் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. 
 •  "நூற்றாண்டின் போட்டி' என வர்ணிக்கப்பட்ட ஃபிஷர்- ஸ்பாஸ்கி மோதலில் வெற்றிபெற்று, செஸ் உலகில் ரஷியர்கள் மட்டுமே செலுத்தி வந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமெரிக்காவின் ஃபிஷர். 
சென்னை மெரினா பீச்சில் வைத்திருந்த மெகா சைஸ் சதுரங்க போர்ட்
 •  சமீபத்திய தொடரில் ஆனந்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கார்ல்ஸென்.
 •  இந்தியர்களும் செஸ்ஸில் ஆதிக்கம் செலுத்த முடியும் என உலகுக்குப் புரிய வைத்தவர் ஆனந்த். 
 •  ரஷியர்களின் பிடியில் இருந்த செஸ் கோட்டையைத் தகர்த்த முதல் ஆசிய நாட்டுக்காரர்; குறிப்பாக தமிழர் என்பது பெருமைக்குரியது. 
ஹோட்டலின்  அழகிய காட்சிகள் !
ராஜா-ராணி
 •   அன்னிய மண்ணில் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் அதிகம் என்றால், ஆனந்துக்கு ரஷியாவில் ரசிகர்கள் ஏராளம்.
 • மூளைக்கான விளையாட்டு என்பதால், ஒரு மவுனப் படம் பார்ப்பது போன்றே போட்டி நடைபெறும்.
 •   சென்னையில் நடந்த தொடரில் ஆனந்த் சாதிக்கத் தவறியதை கேரி காஸ்பரோவின் வார்த்தைகளில் சொல்வதானால் "ஆனந்த் தோல்வியடைந்தார்; வீழ்ந்துவிடவில்லை'
 •   திங்கள் கிழமை பகல் 12.15 மணிக்கு நடைபெறும் விழாவில், கார்ல்சனுக்கு செஸ் சாம்பியன் பரிசும், ரூ.8 கோடியே 40 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும். 
 • உலக செஸ் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.5 கோடியே 60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
 •  
புகைப்படம் மற்றும் கட்டுரை:  தோழன் மபா. 
தகவல் உதவி : கூகுள், தினமணி.

வெள்ளி, நவம்பர் 22, 2013

தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் !

 புதிய வார்ப்புகள்!


தினமணி தீபாவளி மலர் வேலை தெடங்கியபோதே, இம் முறை வலைப்பதிவர்கள் பற்றி எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.  

தீபாவளி மலர் தயாரிப்புத் தொடர்பாக, மீட்டிங் நடைபெறும். இதில் தினமணி ஆசிரியர், மலர் குழுவினர், விளம்பர பிரிவு, பத்திரிகை விற்பனை பிரிவு, அச்சகப்  பிரிவு போன்ற பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு, மலரின் பக்கங்கள் தொடங்கி, எத்தனை பிரதி அச்சிடவேண்டும்,எப்போது சந்தைப்படுத்த வேண்டும், எந்த வகையான அச்சு, பேப்பர் தரம், எத்தனை பக்கம்  விளம்பரம், எடிட் ரேஷியோ போன்றவை விவாதிக்கப்படும்.

இரண்டாம் பக்கம்

இந்த மீட்டிங்கில்தான் வலைப்பதிவர்கள் பற்றி நான் சொல்லபோக, அடுத்து நடக்க இருந்த ஆசிரியர் குழு மீட்டிங்களிலும் நீங்களும் இருங்கள் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். வலைப்பதிவர்கள் பற்றிய கட்டுரையையும் நீங்களே எழுதுங்கள் என்று சொல்லிவிட்டார்.  

முதல் பக்கம்
முதல் கட்டமாக எனக்கு தெரிந்த மற்றும் பிரபல 20 வலைப்பதிவர்களின் வலைத்தள  முகவரியை ஆசிரியர் குழுவினருக்கு அனுப்பினேன். (இதில்  கலை, இலக்கியம், சமையல், மகளீர், சினிமா என்று கலந்து வருமாறு பார்த்துக் கொண்டேன்.)   அதிலிருந்து 12 வலைப்பதிவர்களை தேர்ந்தெடுத்து எழுதச் சொன்னார்கள். 

கிட்டத்தட்ட 15 நாள் அவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி, புகைப்படங்களைப் பெற்று கட்டுரையை முழுமைப்படுத்தி அளித்துவிட்டேன்.

  தினமணி தீபாவளி மலரில் வரும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல் நமக்கு சனியன் சகடை வேலை செய்தது. இடப்பற்றாக் குறையால் திபாவளி மலரில் அக் கட்டுரை வெளிவரவில்லை.  

எல்லோருக்கும்  போனை போட்டு சிரமத்திற்கு வருந்துகிறோம் என்ற ரீதியில் சொல்லபோக, எல்லோரும் ஓகே என்றார்கள்.

பிறகு வலைப் பதிவர்கள் கட்டுரையை தினமணி கதிரில் வெளியிடுவது என்று எடிட்டோரியலில் முடிவு செய்து,  தயார் நிலையில் இருக்க, மீண்டும் ஒரு ட்விஸ்ட் 4 பக்கத்திற்குப் பதிலாக இரண்டு பக்கம்தான் கிடைத்தது . இரண்டு பக்கம் என்பதால் 12 வலைப்பதிவர்களிலிருந்து 6 வலைப்பதிவர்கள் என்றானது.

மீண்டும் போன்... மீண்டும் எஸ்கியூஸ்....!

அந்தா  இந்தா  என்று கடந்த வாரம் ஞாயிறு (17/11/2013) அன்று தினமணி கதிரில் 'புதிய வார்ப்புகள்' என்ற வலைப்பதிவர்கள் பற்றிய எனது கட்டுரை வெளியானது.  இதில் 'யாழிசை' வலைத்தளம் மட்டும் 'தினமணி ஞாயிறு கொண்டாடத்தில்' முதல் பக்கத்தில் வெளிவந்தது.


இணையத்தில் படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்....
http://epaper.dinamani.com/185393/Kadir/17112013#dual/6/1
http://epaper.dinamani.com/185381/Kondattam/17112013#page/1/1


இக் கட்டுரையின் முக்கிய நோக்கமே  இணைய எழுத்தாளர்களை, அச்சு ஊடகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். வலைப் பதிவில் வாகை சூடிய அவர்களை அச்சு ஊடகத்தில் அறிமுகம் படுத்தவே இந்த முயற்சி!. 
மிக நேர்த்தியான முறையில் பிரபல எழுத்தாளர்களுக்கு சவால் விடும் வகையில் எழதும் இவர்களது எழுத்துகளே, வருங்காலத்தை ஆள போகிறது.  என்னாலான  சிறு முயற்சி இது. விடுபட்ட வலைபதிவர்கள் பற்றிய கட்டுரை, இனி வரும் வாரங்களில்  ஞாயிறு கொண்டாடத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இம் முயற்சி தொடரும்!.  நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!.அன்புடன் 
-தோழன் மபா.

சனி, நவம்பர் 16, 2013

"எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்...?”


                 “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே” என்ற வடிவேலின் காமெடி நினைவிருக்கலாம். படத்தில் அவரது தந்தை முதற்கொண்டு அவரது தாயார்வரை அவரை “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே”, “நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டே” என்று சொல்லி  சொல்லியே தட்டி கழிப்பார்கள். கடைசிவரையில்  எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதையும் சொல்ல மாட்டார்கள்.  ‘எதற்கு சரிபட்டு வரமாட்டேன்’ என்று  தெரியாமல் குழம்பியே,  ஊரைவிட்டு வடிவேல் செல்வது போல் அந்த திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒரு உண்மை புலப்படும்.

அரசியல்தான் வடிவேலுக்கு சரிபட்டு வராது.  அது நாள் வரையில் உச்சத்தில் இருந்த ஒரு வடிவேல்  திடிரெண்டு அரசியலில் ஈடுபட்டு, தனது இருப்பை இழந்து இருக்கிறார் என்றால், அரசியல்தானே வடிவேலுக்கு சரிபட்டு வராது!.

மிக தன்னிச்சையான ஒரு காட்சி, உண்மையாகிவிட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.

எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு வடிவேலுக்கு இப்ப புரிஞ்சி இருக்கும்.

சனி, நவம்பர் 02, 2013

திணிக்கப்பட்ட தீபாவளியும், புறம் தள்ளப்பட்ட பொங்கலும்.

 

                          ஒரு இனம் இருக்க, அந்த இனத்தின் கலாச்சாரம் அழிக்கப்படுவதென்பது, உடல் இருக்க உயிர் பறிக்கப்படுவது போல். அந்த இனத்தின் பழக்க வழக்கங்களும், பண்டிகைகளும் அந்நிய இனத்தின் வருகையால் முற்றிலும் புறம் தள்ளப்பட்டு,  அந்த அந்நிய இனத்தின் பழக்க வழக்கங்களை சுவிகரீத்துக் கொள்வது உலகில் நடவாத ஒன்று.  அப்படியே நடந்தாலும் அது முற்றிலும் மாறிவிடுவதில்லை.
  
'கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி' என்று வாய் கிழிய பேசும் நாம், நமது கலாச்சாரத்தை காவு கொடுத்தது ஏன்?  கட்டுக்கதைகளும், பொய் புரட்டல்களும் நமது மேன்மையை மறைத்து விட முடியுமா...?  யாரோ ஒருவரின் பண்டிகையை நம் பண்டிகையாக நாம் கொண்டாடத்தான் வேண்டுமா....? அதுவும் நமது பண்டிகையை புறம்தள்ளிவிட்டு....?  

அது, இங்குதான் தமிழகத்தில்தான் நடந்துக் கொண்டு இருக்கிறது.


பொங்கலைத் தின்ற தீபாவளி.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில், தமிழர் பண்டிகையான பொங்கல் மட்டுமே பிரதான பண்டிகையாக இருந்து  வந்துள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.  

பழையன கழித்து, அல்லாதவற்றை ஒழித்து, வீடு துடைத்து, வர்ணம் பூசி,  மார்கழி தொடங்கி தை வரை வாசலில்    மாக்கோலம் இட்டு, அதில் பறங்கிப் பூ வைத்து,   அப்போதுதான் அறுவடை செய்த தானியங்களை பொங்கி (சமைத்து), உலகின் முதற்கடவுளான சூரியனுக்குப் படைத்து,  உழுவதற்கு உதவி செய்த அந்த வாயில்லா ஜீவன்களுக்கு (ஆடு மாடு), நன்றி தெரிவிக்கும் விழாவாகத்தான் தமிழன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினான். தமிழர்கள் தங்களது பண்டிகைகளை இயற்கை சார்ந்தே கொண்டாடிவந்தனர் என்பது இயற்கை!.

ஆனால், இடைக்காலத்தில் ஆரியர்களின் வருகைக்குப் பின்னர்தான் எல்லாமே மாறிப்போனது. ஜோதிடம், வானசாஸ்த்திரம், யாகம், பூஜை என்று மன்னர்களிடம் அண்டிப் பிழைத்த  ஆரியர்கள், பிற்பாடு மன்னனை வளைத்து,  மண்னையும் வளைத்தார்கள்.  அவர்களது கலாச்சாரத்தை நம்முல் விதைத்தார்கள்.

அதுநாள் வரை சுமூகமாக போய்கொண்டிருந்த தமிழர்கள் வாழ்வியலில்,  பெரும் மாற்றம் காணத் தொடங்கியது. கலச்சாரா மாறுபாடும் அப்போதுதான் தோன்றியது.  வடபுலத்தார் தங்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருந்த பண்டிகைகளில், மன்னனை சிறுப்பு அழைப்பாளர்களாக அழைத்தனர்.   பிற்பாடு மன்னனிடம் கூறி  இந்தப் பண்டிகையை எல்லோரும் கொண்டாட வேண்டும், அதற்கு நீங்கள்தான் உத்திரவிட வேண்டும்  என்று ஓதி மண் ஆளும் மன்னன் மூலமாக மக்கள் மனதை மாற்றியிருப்பார்கள்.

பின்னர் சிறுக சிறுக மாற்றம் ஏற்பட்டு தமிழர் பண்டிகையின் முக்கியத்துவம் குறைந்து 'தீபாவளி' முக்கிய பண்டிகையாக மாறியிருக்கும்.


கட்டுக் கதை  தீபாவளி !

'கிருஷ்ண பக்ஷம், அமாவசை திதிக்கு முன்தினம்  சதுர்த்தசி திதி அன்று நடுநிசி காலம் கழிந்து, பிரம்ம மூகூர்த்த காலத்திற்கு முன்பாக நரகாசுரனை, ஸ்ரீ கிருஷ்ண பகவானும் ராதையும் வதம் செய்ததாகவும், இந்த நாளை அனைத்து மக்களும் புத்தாடை அணிந்து குதுகலத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று நரகாசுரன் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டதாக  சொல்லப்படுகிறது.   அதன் விளைவாக தோன்றியதுதான் தீபாவளி என்கிறார்கள். 

ஒரு திருவிழா என்றால் அதில் ஒரு பொருள் இருக்கவேண்டும். ஒரு கருத்து இருக்க வேண்டும் இது எதுவும் இன்றி,  கற்பனையின் உச்சமாகத்தான் தீபாவளி இருக்கிறது.  தின்பண்டம், புத்தாடை, பரிசுப் பொருள், வானவேடிக்கை இதுதான் இத் திருவிழாவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
போகட்டும்.

அதோடு தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் (எண்ணை குளியல்) , 'கோதார கவுரி விரதம்' போன்றவை கடைபிடிக்கப்  படுகிறது. இதில் எங்கேயாவது தமிழர் பண்பாடு,  கலாச்சாரம் இருக்கிறதா?.  அப்படி இருந்திருந்தால் 'காவேரி, தாமிரபரணி,பவானி,பெரியாறு குளியல்' என்றுதானே இருக்கவேண்டும்.  தீபாவளி பண்டிகை என்பது முழுக்க முழுக்க வடபுலத்தாரின் பண்டிகை. அதற்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை.  

நம்மீதும் குற்றம் உண்டு.


'மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் வாசம் உண்டு' என்றார் அறிஞர் அண்ணா, 

யார் எது சொன்னாலும் அல்லது காட்டினாலும், சிந்திப்பதில்லை.  'ஆவென்று' வாய் பிளக்கும் கூட்டமாக மாறிவருகிறோம்.  ஏன் என்று கேள்வி கேட்பதில்லை, அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என்று நினைப்பது.  சாதி பாகுபாடுப் பார்த்து பிரிந்தே இருப்பது.

இன்னோரு சக தமிழன் பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நமக்கு வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி விடுவது. அல்லது ஒதுங்கி வாழ்வது. என்று தமிழனிடம் பட்டியல் போட நிறையவே மைனஸ்  இருக்கிறது. 

என்னதான் பிறர் நம் மீது எதையாவது திணித்தாலும், " உன் சுய புத்தி எங்கேயா போச்சி...?" என்று எவனாவது கேள்வி கேட்டால், மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைப்பது.  பிறரை குற்றம் சொல்லும் அதே நேரத்தில்,   அதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.


தமிழர் திருவிழாவிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்:

ஒரே ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்கு எத்தனை கோடி பணம் செலவழிக்கப்படுகிறது தெரியுமா. தீபாவளி பண்டிகையில் எங்கேயாவது உண்மைத் தன்மை இருக்கிறதா?. ஒரு கட்டுக் கதைக்கு இத்தனை பெரிய ஆர்பாட்டாமா?. அதைவிட உயிரோட்டமான பொங்கல் பண்டிகைக்கு இந்த முக்கியத்துவம் உண்டா?

தீபாவளிக்கு மாஞ்சி மாஞ்சி புது துணி எடுக்கும் தமிழன், தனது  பொங்கல் பண்டிகைக்கு புதுத் துணி எடுக்கிறானா?. அதைப் பற்றிய சுய சிந்தனைக் கூட  பழந்தமிழன் முதற்கொண்டு சமகால தமிழன் வரைக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அருகில் இருக்கும் மலையாளிகள் தீபாவளி கொண்டாடுவதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.  ஓணம்தானே அவர்கள பிரதான பண்டிகை. இங்கு மட்டும் ஏன் மாறிபோனது?.

தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை.  பொங்கல் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்பதுதான் எனது கேள்வி. தமிழை தாய் மொழியாகக் கொண்ட வியாபாரிகளில் எத்தனை பேர் பொங்கல் பண்டிகைக்கு தள்ளுபடி வழங்குகிறார்கள். அதைப் பற்றிய சிந்தனை வியாபாரிகளிடத்தில் இருக்கிறதா?. அவர்களுக்கு அவர்களது கல்லாப்பெட்டியும் பானை வயிறும் நிறைந்தால் போதும். இதில் இன உணர்வாவது மண்ணங்கட்டியாவது. 'போப்பா, போயி வேலெய பாப்பியா, இக்கிட்டு நின்னுக்கிட்டு பினாத்துகிட்டு இருக்க?' என்று ஒதுங்கி விடுவார்கள்.


காலத்தின் கோலம்

காலம் எப்போதும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பூமி எத்தனை யுகங்களைக் கடந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாமா? ஒரு அறுவடை முடிந்து அடுத்த அறுவடை போன்றதுதான்,   பூமி அழிந்து புத்துயிர் பெறுவது.  நாம் எத்தனையாவது ஈடில் இருக்கிறோம் என்று யாருக்காவது தெரியுமா...!?

இப்படி பதில் தெரியா கேள்விகளுக்கிடையேதான்  மனிதன், தமது கலாச்சாரத்தையும் மொழியையும் காக்க பல காலமாக போராடி வருகிறான்.  போராடும் அதே வேளையில் பிறர் கலாச்சாரத்தையும் அவர்தம் மொழியையும் அந்த இனத்தையும் சிதைக்கவும் தயங்குவதில்லை.  இதில் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல் யார் கை ஓங்கி இருக்கிறதோ அவனது இனமும் மொழியும் காப்பாற்றப்படுகிறது.

தடுமாறி, தயங்கி, தூங்கிக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்துவரும்  ஒரு இனத்தின்  இயல்பு என்பது, நம்மை போலவே  இருக்குமானால், அதுதான் அந்த இன அழிவின் ஆரம்பம்.   அதன் தொடக்கம் வெளியில் தெரியாமல் தொடங்கி, நாம் விழித்துப் பார்க்கும்போது முடிந்து இருக்கும்.


         'உலகில் எதுவும் தானாக  மாறாது 'என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்'. 
                                                                                                                      -தோழன் மபா.
                                                                                                                          மீள் பதிவு!.

வியாழன், அக்டோபர் 31, 2013

"நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க...?!"
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தினமணி துணை கட்டுரைப் பகுதியில்  'சமூக வலைத் தளங்ளிலுமா சாதி....?'  என்ற எனது கட்டுரை வெளிவந்தது. இன்று இணைய தேடு பொறியில் ஏதோ ஒன்றை தேடும்போது  அக் கட்டுரைக்கு இணையத்தில் வந்த பின்னோட்டங்களை பார்க்க நேர்ந்தது.

அந்த பின்னோட்டமே உங்கள் பார்வைக்கு....

முந்தைய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
(http://www.tamilanveethi.blogspot.in/2013/08/blog-post.html)

கருத்துகள்(4) 

வெங்கடேசன் 

நமது கலை பண்பாடு போன்றே சாதியும் பல நுற்றாண்டு தொன்மையுடையது. குருதியுடன் கலந்துவிட்டது. சாதியை  ஒஷிக்காமல் சாதியின் செல்வாக்கை தடுக்கமுடியாது.
பதிவுசெய்தவர்  08/12/2013 05:00.


பொறுப்புணர்வுடன் ஒரு நல்ல பிரச்சினையை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் கட்டுரை ஆசிரியர் .மிகப்பிரம்மாண்டமான வெளிப்படுத்தலுக்கான வாய்ப்பை திறந்துள்ள முகனூல் அல்லது இணையதளம் மலம் போன்ற கழிவுகளையும் ஆபத்தான வெடிகுண்டுகளையும் போடும் இடமாகவும் கொண்டுள்ளது .இதை கண்காணிக்க வேண்டியுள்ளது அவசியம் .ஒரு காலத்தில் அல்லது இப்போதும் திரைப்படங்களில் வானொலியில் ஊடகங்களில் தணிக்கை இருந்தது.ஒரு முத்தக்காட்சி போன்றவை கூட பெரிய கூக்குரலை எழுப்பும்.ஆனால் இப்போது 24 மணி நேரமும் வக்கிரமான உடலுறவுக்காட்சிகளை எந்த தடையுமின்றி பார்க்கும் வாய்ப்பு உள்ளது.பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணம் .ஆனால் இது குறித்து கடும் கண்டனம் எழாதது கண்டிக்கத்தக்கது.மேலும் அரசுகள் டாஸ்மாக் போலவே தங்கள் ஆட்சிகள் மீது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விமர்சனகள் வராமல் தடுக்க உதவுகிறதுபோல் தெரிகிறது .எனவே அரசே இவற்றை வெளியிடுகின்றன என்றே கொள்வோம்.
பதிவுசெய்தவர்  08/12/2013 07:20 


தமிழ் பேசும் ஒரே மொழிப்பிரிவினரிடையே, பல்வேறு சாதிக்குழுக்கள், தத்தம் அளவில் சிறுபான்மைக் குழுக்களாக மாறிப்போனது, உண்மையில் வருந்தத்தக்கது! ஒவ்வொரு முறையும், 'சாதி ஒழிப்பில் தமிழகம் பரவாயில்லை' எனத்தான், நாம் கருதிக்கொள்கிறோம்! ஆனால், உண்மை அதுவன்று என்பது, பிற மாநிலங்கள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது அல்லது பிற மாநிலத்தவர்கள் இங்கு வந்து சொல்லும்போதுதான் புரிகிறது! பிற மாநிலங்களில் வாழும் குடிமக்கள், சாதியைத் தங்கள் பெயரில் மட்டுமே சுமக்கிறார்கள்; இங்குள்ளதுபோல், தங்கள் நெஞ்சில் அன்று! ஒருவரின் சிந்தனையே, முதலில் பேச்சாகி, தொடர்ந்து எழுத்தாகிப் பின் முகநூலில் வெளியானதும் கலவரமாகிறது! இவை போன்ற நிகழ்வுகள், அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் நடக்கின்றன என்பது, உண்மையில் அனைவருக்கும் வருத்தம் தரக்கூடியவை!
பதிவுசெய்தவர்  08/12/2013 16:13


 


தமிழகத்தில் யாருக்கு இல்லை சாதி? எதில் இல்லை சாதி?அரசியலில்,இலக்கியத்தில்,சமயத்தில், ஊடகங்களில்,அரசுத்துறைகளில்...ஜனநாயகத்தின் அனைத்துத் தளங்களிலும் சாதி இருக்கும் போது,முகநூலில் மட்டும் சாதி இருப்பதை குறைகுறுவது நியாயம்தானா?
பதிவுசெய்தவர்  08/12/2013 18:14


 


செவ்வாய், அக்டோபர் 29, 2013

அப்பாடா ... ஒரு வழியா என் தளத்தில் இணையலாம்.
                தமிழன் வீதி  வலைத்தளம் தொடங்கி 5 வருடம் ஆகிறது. 'Join this site' என்ற 'சிறு பொறியமைப்பு' (Gadgetக்கு அதுதான் தமிழ் மொழிபெயர்ப்பு என்கிறது  அகரமுதலி) என்ற உபகரணத்தை தொலைத்து விட்டேன். எங்கே எந்த அசம்பாவித நேரத்தில் அந்த கேட்ஜட்டை தொலைத்தேன் என்று தெரியவில்லை.  நானும் தேடாத தளமில்லை, போகாத கூகுள் இல்லை. தேடிய இடமெல்லாம் 'ஆஆவ்வ்வ்தான். டாஷ்போர்ட், லேஅவுட்,ADD Gadget என்று என்னன்னவோ செய்து பார்த்தும், ஒரு பயனுமில்லை.

பார்க்கும் எல்லா வலைத்தளத்தில் 'Join this site' சிறு பொறியமைப்பு இருக்க எனது வலைத்தளம் மட்டும் அந்த Gadget இன்றி இருந்தது.  சிலர் கேட்கவும் செய்தனர். ஆனால் அதன் கேட்ஜட்டை சேர்ப்பதில் மட்டும் இழுபரி நிலை இருந்தது. அந்த பொறியமைப்பை எப்படி சேர்ப்பது என்ற தொழிற் நுட்பம் எனக்குத் தெரியவில்லை. அதை முழுமையாக சேர்ப்பதிலும் எனக்கு ஒரு சுனக்கம் இருந்தது.


இன்றைக்கு  எதேச்சையாக 'how to add join this site on blogger' என்று கூகுளில் கிளிக்கினேன். உடனடி பலன் கிடைத்தது. யானி ஃபிரேம் http://yaniframe.blogspot.in என்பவர் கேட்ஜட்டை இணைப்பது எப்படி என்று அழகாக  பதிவுவிட்டிருந்தார். புரியும்படி பதிவிட்டு இருப்பதுதான் இப் பதிவின் சிறப்பு.

நன்றி யானி பிரேம் .

இனி வழி முறைகள்:

1 Go to your Dash Board of your Blog. 

2  Click on Layout tab


3  Click on Add Gadget Button 


  
4 Now go to 2nd Option ie More Gadgets at left side you can see as blow 

 5 Now in search box type 'Join this site widget by google' and give enter. 
6 Select the Option
இப்படி செய்ததில் எனக்கு கேட்ஜட் வரவில்லை. அதனால் அந்த (5 வது பாயிண்டில் உள்ளது)  Search Boxல்  'Member' என்று டைப் செய்ய, இம் முறை 'Join this site' என்ற 'கேட்ஜெட்' வந்தது. 


 கிட்டத்தட்ட பிளாக் தொடங்கிய போது இருந்த கேட்ஜட் தற்போது மீண்டு(ம்)  வந்துவிட்டது.

இனி யாவரும் என் வலைத்தளத்தில் இணையலாம்.திங்கள், அக்டோபர் 28, 2013

கோமல் சுவாமிநாதன் என்றோரு நீர்கோடு!மாயவரம் பஸ்ஸாண்டில் உள்ள புத்தகக் கடையில், சொல்லி வைத்தால்தான் 'சுபமங்களா' கிடைக்கும். கல்லூரி காலங்களில் ஏதோ ஒன்றை தேடியலைந்த போது, நவீன இலக்கியங்களை எனக்குள் அறிமுகம் செய்துவைத்தது சுபமங்களாதான்.

எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது அச் சிற்றிதழ்.  அதன் இலக்கிய ரசனைக்காக சிற்றிதழ்  என்கிறேனே தவிர அது சிற்றிதழ் கிடையாது. மிகப் பெரிய சைஸில் வரக் கூடிய இதழ். ஸ்ரீராம் சிட்ஸ் நிதி பங்களிப்பில் வெளிவந்தது. அது வெகு ஜன பத்திரிகை இல்லையென்றாலும் 90களில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சொன்ற பெருமை சுபமங்களாவையே சேரும்.

எஸ் வைதீஸ்வரன், அசோகமித்திரன்,அம்பை,ந.பி., க.நா.சு., ப.முருகன் என்று பெரும் இலக்கிய கர்த்தாக்கள், மொழிபெயர்ப்பு இலக்கியம், 'நேர்காணல்' என்ற சொல்லாடல், கோவி.ஆனந்தின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என்று இந்த கழுதைக்கு கற்பூர வாசத்தை காட்டியது சுபமங்களாதான். 
 
 
இத்தகைய அரும் பணிக்கு பின்னால் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். அவர் கோமல் சுவாமிநாதன்.  சுபமங்களா என்றால் கோமல்தான் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு ஒரு 'நீர்கோடாய்' சுபமங்களாவில் விரவியிருந்தவர். எழுத்து, நாடகம், சினிமா என்று எங்கும் எப்போதும் பேசப்பட்ட ஒரு மனிதர் கோமல் சுவாமிநாதன். எங்கலூர் திருவாலங்காட்டிலிருந்து அப்படியே திருவாவடுதுறை, மேக்கிரிமங்களம், ஆனாங்கூர், தேரழந்தூர என்று பின்பக்கமாய் சென்றால் கோமல் என்ற ஊர்  வந்துவிடும். தனது சொந்த ஊரின் பெயரையே  தனது பெயருக்கு முன்னால் வைத்து ஊருக்கு பெருமைச் சேர்த்தவர் கோமல் சுவாமிநாதன்.

இவரது 'தண்ணீர் தண்ணீர்' நாடகம் கம் சினிமா, இன்றும் நமக்குள் கண்ணீரை வரவழைத்துவிடும்.  இன்றளவுக்கும் அது பேசப்படக் கூடிய ஒரு படைப்பாகவே இருக்கிறது.  ஒரு படைப்பாளியின் வெற்றியே அதுதான். நாடகம், சினிமா, கதைகள் என்று தனது இலக்கிய ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய மனிதர் அவர்.  நாடக உலகில் அவர் விட்டுச் சென்ற இடம் அப்படியேதான் இருக்கிறது. நாடக உலகில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் அவரது இடம் அப்படியேதான் இருக்கிறது எனலாம்.

 கோமலின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றும் நல்லதொரு பணியை,  அவரது மகள் லலிதா தாரணி செய்துக்கொண்டு இருக்கிறார்.

வாழ்ந்து  மறைந்தாலும் பலர் மனதில், இன்றும் நிறைந்து வாழ்கிறார் கோமல் சுவாமிநாதன்.

இன்று அவரது 18 வது நினைவு நாள்.

-தோழன் மபா.

வியாழன், அக்டோபர் 24, 2013

"தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா?" பாலியல் கட்டுரை.                சன் நியூஸில் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு நேயரின் கேள்வி பின்வருமாறு இருந்தது.

"சார், உடலுறவின் போது 20 செகண்டிலேயே எனக்கு விந்து வெளியாகி விடுகிறது. இது எனக்கு மிகுந்த மனக் குழப்பத்தைத் தருகிறது. கல்யாணத்திற்கு முன்பு சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் இருந்தது அதனால்தான் என்று நினைக்கிறேன். இதற்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்க சார்" என்று அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம், நேயர் போனில் கேட்கிறார்.

அதற்கு அந்த நிகழ்ச்சி நடத்துபவர் "சுய இன்பம் பழக்கம் இருக்குன்னு சொல்லிறீங்க, அப்புறம் ஏன் கல்யாணம் பன்னிகிட்டிங்க?. தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா?" என்றார்.

இதைக் கேட்டதும் எத்தகையை  ஒரு முட்டாள்தனமான நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது.


 சுய இன்பம் செய்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்றால் உலகில் 99 சதவீத ஆண்களுக்கு திருமணமே நடைபெறாது. (மீதி 1 சதவீதம் என்னவென்று கடைசியில் சொல்கிறேன்.) சுய இன்பம் என்பது இயற்கையானது என்பது நவீன உலகில் நிறுபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதை வைத்து பிழைப்பு நடத்தும் உட்டாலக்கடி மருத்துவர்களுக்குதான் அது கொடிய பழக்கம். அந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் அவர்களை சந்தித்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று டீவிக்களிலும் பத்திரிகைகளிலும் பகிரங்கமாக விளம்பரம் தரக் கூடியவர்கள். 

இந்தியாவை பொறுத்தவரை பாலியல் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் சராசரி குடிமகனுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தவறான ஆலோசனைத் தரும் போலி மருத்துவர்கள்தான், செக்ஸ் தொடர்பான பிரச்சனைக்களுக்கு தீர்வு தருகிறார்கள். எனக்கு தெரிந்த மருத்துவரின் நண்பர் ஒருவர் தில்லி மும்பை என்று   பறந்து செக்ஸ் ஆலோசனை சொல்லி பெட்டி பெட்டியாய் பணம் அள்ளிக் கொண்டு வருவார்.

மருத்துவரோடு உதவிக்கு கூட சென்ற நண்பர், பிற்பாடு அவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக தொழில் (?) செய்ய தொடங்கினார். பல போலி செக்ஸ் மருத்துவர்கள் இப்படிதான் அனுபவத்தின் அடிப்படையில் தோன்றுகிறார்கள்.
()()()

                                                                                                                                                     போகட்டும்...
நாம் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு வருவோம்.

'கைமைதுனம்' தொடர்பான கேள்வியை கேட்ட, அதே நேயரிடம் டாக்டர் அடுத்த கேள்வியை கேட்கிறார்.

"உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை வருடமாகிறது...?"

"நான்கு வருஷமாச்சி  டாக்டர்"

"செக்ஸ் எப்போல்லாம் வைத்துக் கொள்வீர்கள்?"

"15 நாளுக்கு ஒரு வாட்டி இல்லன்னா, மாசத்திற்கு ஒரு வாட்டி,  அதே நேரத்தில் கட்டிங் போட்டுட்டு செக்ஸ்ல ஈடுபட்டா கொஞ்சம் அதிகம் நேரம் செய்ய முடியுது டாக்டர் " என்றார்.

டாக்டருக்கு தலையே சுற்றிவிட்டது. எனக்கும் அப்படிதான் இருந்தது.

 மோட்டார் வண்டிகளுக்கு சர்வோ ஆயில் போட்டால் எக்ஸ்ட்ரா  மைலேஜ் உண்டு என்று  விளம்பரம் செய்வார்கள்.  அப்படி இருந்தது அவர் சொன்னது.


கட்டிங் போட்டால் செக்ஸில் எக்ஸாட்ரா மைலேஜ் உண்டா...?! என்ன....?

இதெல்லாம் ஒரு வகையான 'மனப்பிராந்தி' என்றுதான் சொல்லவேண்டும்.   வக்கிர செக்ஸ் உணர்வுகள் உச்சம் பெறவும் குடிபோதை ஒரு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் வந்தப் பிறகு இந்தமாதிரி அபத்தங்கள் அதிகமாகத்தான் ஆகிவிட்டது.
()()()

முருங்கை கீரை,காய்

செக்ஸில் அதிக நேரம் ஈடு பட மிக எளிதான இயற்கை மருந்துகள் இருக்கின்றன. கைக்கு கிடைக்கும் அதை படுக்கைக்கு பயன்படுத்த நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. அதில் ஒன்று முருங்கை மரம். முருங்கை கீரை, முருங்கைக்காய், முருங்கை விதை என்று எல்லமே செக்ஸின் வீரியத் தன்மைக்கு உதவி புரிபவை. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. பேரிச்சை, வெங்காயம் (ரொம்ப காஸ்ட்லி),லவங்கம், பெருங்காயம், பூண்டு,இஞ்சி, சாதிக்காய்,ஓமம்,பாதாம்  இதையெல்லாம் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் என்கிறது இயற்கை மருத்துவம்.

அதே போல் அமுக்கரான் கிழங்கு.  இதுவும் ஒரு சிறந்த செக்ஸ் ஊக்கி என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் நாம் இதை பயன்படுத்த வேண்டும்.

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்கிறார் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி. சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். 'இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்'. ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம்.  ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்தே செக்ஸ் உணர்வு மிகைப்படவோ, குறையவோ வாய்ப்பு உண்டு. நீண்ட நேரம் செக்ஸில் ஈடுபட்டால்தான் முழு வெற்றி என்பது நமது கற்பனையே என்கிறார் எரிக் கார்ட்டி. இத்தகைய புரிதல் இல்லாமல்தான் கட்டிங் போட்டு  எக்ஸ்ட்ரா மைலேஜ்ஜுக்கு ஆசைப்படுகிறார்கள்.


இங்கிலாந்து சுகாதாரத்துறையோ டீன் ஏஜ் யுவன் யுவதிகளை கைமைதுனத்தில் ஈடுபடச் சொல்லி அறிவுறை வழங்குகிறது . பிரிட்டிஷ் போன்ற மேலை நாடுகளில் டேட்டிங் கலாச்சாரம் என்பது சர்வசாதாரனம். மாணவப் பருத்திவத்தில் செக்ஸில் ஈடுபடும் மாணவர்கள் அதிகம். தேவையில்லா கர்பத்திற்கும், எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களை தடுப்பதற்கும் சுய இன்பம் பயன்படும் என்கிறார்கள்.   சிறுவயது கர்ப்பம், பால்வினை நோய் போன்றவைகள் ஏற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு நல்லதொரு வடிகாலாகவே கைமைதுனம்  பார்க்கப்படுகிறது.


 அதே நேரத்தில் இந்தியாவில் செக்ஸ் இன்னும் 'சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்ற நிலையில்தான் இருக்கிறது!. 
 ()()()
 கடைசியில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு வருவோம்.

சுய இன்பம் செய்யும் நீங்கள் எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டீர்கள்?. ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி பாழடிக்கலாமா? என்ற ரீதியில் கேட்டுக் கொண்டு இருந்தார். அதற்கு அந்த மருத்துவரும் ஒன்றும் சொல்லவில்லை என்பதுதான் வேதனை. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பல இள வட்டங்கள் தவறான புரிதலுக்கே ஆட்படுவார்கள். சுய இன்பத்தில் ஈடுபட்டால் நாம் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது போன்ற தவறான தகவல்களைதான் இந்த அரைவேக்காட்டு நிகழ்ச்சிகள் தருகின்றன. மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கும் போது கவனத்துடன் இருப்பது அவசியம் என்பதை இவர்கள் உணரவேண்டும். .

"சரி, அந்த 1 சதவீதம் என்னாச்சி...?" என்ற கேள்விக்கு பதில் ....

"உலகில் 99 சதவீத ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். மீதி 1 சதவீத ஆண்கள் அப்படி இல்லை என்று பொய் சொல்கிறார்கள்!"
என்பது   உலகளாவிய கருத்து!.
()()()

.

சனி, அக்டோபர் 19, 2013

மூன்று ஆங்கில பத்திரிகைகள் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துகின்றன!.
                       சென்னை நந்தம்பக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் தி நியூவ்  இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிண்டு மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற மூன்று ஆங்கில பத்திரிகைகளும்,  தனித்தனியே விதவிதமான கண்காட்சிகளை நடத்துகின்றன.

இது ஒரு அதிசயமான நிகழ்வு என்றே சொல்லாம்!.

பத்திரிகை விற்பனை மற்றும் விளம்பரங்களில் போட்டிக் போட்டுக் கொண்டு இயங்கி வரும் இந்த மூன்று நாளிதழ்களும் ஒரே இடத்தில் கண்காட்சி நடத்துவது வித்தியாசமானதுதானே.....?!

தி நியூவ்  இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் 'எக்ஸ்பாண்டிங் மெட்ரோபாலிஸ்' என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்துகிறது.  இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி பிளாட் புரோமோட்டர்ஸ் கலந்துக் கொண்டு தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். அதோடு பெரிய மற்றும் நடுத்தர  பட்ஜெட் அடுக்குமாடி விற்பனையாளர்களும் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.

நிலத்தில் முதலீடு செய்யக்கூடிய வகையில், நமது பட்ஜெட்டில் வாங்கக்கூடிய மனை விற்பனையாளர்களும் தங்களது அரங்குகளை இக் கண்காட்சியில் அமைத்துள்ளனர். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உபயோகமான கண்காட்சி இது!.

தி ஹிண்டு நாளிதழ் தனது 'ஹோம் டெக்கார்' என்ற கண்காட்சியை இங்கு நடத்துகிறது. இதில் வீடு உள் அலங்காரம் மற்றும் ஃபர்னிச்சர் ஸ்டால்கள் இக் கண்காட்சியில் இடம் பெருகின்றன.

தி டைம்ஸ் ஆஃப் இண்டியா   ஹோம் அப்ளையன்ஸஸ்  மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ற ''கண்சுயூமர் குட்ஸ்'  கண்காட்சியை நடத்துகிறது.

இந்த மூன்று கண்காட்சிகளும் இன்றும் நாளையும் மட்டுமே நடைபெறுகிறது.

வாங்க.....போங்க....!

-தோழன் மபா.

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன்!.இன்று (13/10/2013)  தி இந்து (தமிழ்) நாளிதழில் சென்னை பதிப்பில் 'கருத்துச் சித்திரம்' பகுதியில் வெளிவந்த எனது கார்டூன்.

புதன், அக்டோபர் 09, 2013

பொது இடத்தில் மூக்கு குடைய தடை?

           சீ
னாவிலிருந்து உலக சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்கள் உலக நாடுகளில் நடந்துக் கொள்ளும் முறை பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்துவிடுகிறதாம். இதனால் சீன அரசாங்கம் 64 பக்க கையேட்டை  தயாரித்து வழங்கியுள்ளது. இதில் வெளி நாடுகளுக்கு சீனர்கள் சென்றால் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்ற ஒழுக்க விதிகள் அதில் வரையறுக்கப்பட்டுள்ளது.


பொது இடத்தில் மூக்கு குடைய தடை, மூக்கில் உள்ள முடியை ஒழுங்காக வெட்டி இருக்க வேண்டும், பொது கழிவரைகளில் அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது, சூப் மற்றும் நூடுல்ஸ் சாப்பிடும்போது உறிஞ்சி குடித்து சத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்று பட்டியல் நீள்கிறது.

சரி, இந்த விஷயத்தில் இந்தியர்கள் எப்படி...?


 ஒருமுறை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார் இங்கிலாந்து பிரதமர்.  பிரதமர் நேரு அவருக்கு டெல்லியை சுற்றி காட்டினார். அப்படி காட்டும் போது, மக்கள் சாலை   ஓரங்களில் அமர்ந்து 'டூ டாய்லட்' போய்கொண்டு இருந்தனர். இதைக் கண்டு முகம் சுளித்தார் இங்கிலாந்து பிரதமர்.  நேருவுக்கோ முகம் அவமானத்தால் வாடிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்துக்கு செல்லக் கூடிய வாய்ப்பு பிரதமர் நேருவுக்கு கிடைத்தது. வழக்கம்போல் இங்கிலாந்து பிரதமர் நமது பிரதமரான நேருவை அழைத்துக் கொண்டு லண்டனை சுற்றிக் காட்டினார்.  அப்போது,  தேம்ஸ் நதிக்கரையோரம் ஒருவன் அமர்ந்து 'டூ டாய்லட்' போய்கொண்டு இருந்தான். பிரிட்டீஷ் பிரதமரை அவமானப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்தே என்று நேருவுக்கு சந்தோஷமாகிவிட்டது.  "பாருங்க உங்க நாட்டிலும் இப்படிதான் இருக்காங்க" என்றார் நேரு . இங்கிலாந்து பிரதமருக்கோ தலை சுற்றிவிட்டது. கோபத்தில் முகம் சுளித்த அவர்,  டூ டாய்லட் போனவனை அழைத்துவரச் சொன்னார் "நீ யாரு எங்கேயிருந்து வர்ற, பொது இடத்தில் இப்படி செய்வது அசிங்கமில்லையா?"  என்றார்.

"சாரி...துரை,  நான் இந்தியாலேருந்து வர்றேன். இங்க இப்படி போகக்கூடதுன்னு எனக்குத் தெரியாது!" என்றான் அவன்.  மீண்டும் பல்பு வாங்கினார் நமது பிரதமர்.

இந்தியர்கள் பற்றி இப்படி நகைச்சுவையாக கதை சொன்னாலும், பெருவாரியான இந்தியர்கள் இன்றும் பொது வெளிகளில்தான் மலம் கழித்துக் கொண்டு இருக்கின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட இன் நிலை இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.   கிராமம் என்றால் ஆற்றாங்கரை, தோப்பு, வயல்வெளிகள்,திடல்கள் என்று இருக்கும். ஆனால் சென்னை பொன்ற நகரங்களில் பிரதான கழிப்பிடமே ரயில் பாதை ஓரங்களில்தான் நடக்கிறது.

பொது இடங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க விதிகளை இந்திய அரசாங்கமும் ஏற்படுத்த வேண்டும். வெளி நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு எந்தவித விதிகள் இல்லையென்றாலும் கூட, அட்லீஸ்ட் உள் நாட்டிலாவது சில பொது விதிகளை ஏற்படுத்த வேண்டும்.   'இந்தியர்களுக்கு பொது இடமும், அவர்களது வீட்டு கக்கூஸும் ஒன்றுதான்' என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.                                     பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி.....?                                


 • பஸ்டாண்டு மூலை, குப்பை தொட்டி ஓரம், சுவர் ஓரம், ஓரமாய் இருக்கும் மரம் இதையெல்லாம் பார்த்தா சட்டுன்னு பேண்டு ஜிப்பை கழட்டிடுவான்.
 •  நடக்கிற வழியில எச்சில் துப்ப இவன விட்டா ஆள் இல்லை. 
 •  வெற்றிலை, பான்பராக் போடுறதே சுவர் மூலையிலும், மாடிப்படி ஓரத்திலும் துப்புவதற்காகத்தான்.
 • எதிரில் ஆள் இருப்பதையே மறந்து 'மூக்கை தூர்' வாருவதில் இவன் கில்லாடி.
 •  தனது 'வாய் துர் நாற்றம்' அடிப்பதைக் கண்டு பிறர் முகம் சுளிக்கிறார்கள், என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாது அறிவாளிகள்(?) இந்தியாவில் அதிகம்.
 •  ஒரு மனிதனுக்கும் இன்னோரு மனிதனுக்கும் உள்ள சராசரி இடைவெளி எது என்பது கூட சராசரி இந்தியனுக்கு தெரியாது.  எங்கு  நின்றாலும் சக மனிதனோடு ஒட்டிக் கொண்டுதான் நிற்பான். 
 •  பொது இடத்தில் மெதுவாய் பேச தெரியாத, வேகத்தில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவன். 
 •  ஹோட்டல்களில் தயிர் சாதத்தை முழங்கை வரையில் ஓழுக விட்டு, முழங்கையிலிருந்தே நாக்கால்சர்ரென்று பெரும் சத்தத்துடன் நக்கக் கூடிய சக்தி படைத்தவன்.
 •  சட்டை அது எதற்கு?  என்று கேட்கக் கூடியவர்கள் இருண்டு பேர் .ஒருவர் வயலில் வேலை செய்யும் விவசாயி.  மற்றொருவர் கோயிலில் வேலை செய்யும் குருக்கள். ரெண்டு பேருமே சட்டை போடாமதான் திரிவாய்ங்க. 
 •  தனது காதை குடைந்து, முகத்தை அஷ்டகோணத்தில் காட்டி மற்றவரை பயமுறுத்துவதில் இவன் எக்ஸ்பட். 
 •  கொஞ்சமும் யோசிக்காமல் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு இவன் சொறிய,  பார்ப்பவர்கள்தான் முகத்தை திருப்பிக்கொள்ளவேண்டும். 
 •  எத்தகைய உயர் நிலையில் இருந்தாலும், அருகில் சாப்பிடுபவர்களைப் பற்றி கவலைப்படாமல் 'சவக் சவக்'  என்று சத்தம்போட்டு சாப்பிடுவர்கள் பல பேர்.  சாப்பிடும் போது சத்தம் வராமல் சாப்பிடக் கூடிய குறைந்தப் பட்ச அறிவுக்கூட இவர்களிடம் இருக்காது. 
 •  ஹோட்டலில் கை கழுவும் இடத்தில் நின்றுக் கொண்டு 'புர்'ரெண்டு கொஞ்சம், சங்கோஜப்படாமல் மூக்கை சிந்துவதில் இந்தியவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்வார்கள். 
 • நைட்டு நைட்டியை பகலிலும் போட்டு, கடைக்கார அண்ணாச்சியை அலற விடுவதில்  வீட்டு அம்மணிகளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்?. 
 •  காது குடைய பஞ்சு வைத்த பட்ஸைவிட, பைக் கீ, ஊக்கு, ஹேர் பின், தீக்குச்சி என்று கைக்கு கிடைத்தெல்லாம் பயன்படுத்தும் அதி புத்திசாலிகள் நாம்தான்.   
 •  20 லட்சம் பொறுமான காரில் சென்றாலும், கார் கண்ணாடியை இறக்கிவிட்டு,  காலி வாட்டர் பாட்டிலை ரோட்டில் வீசிச் செல்வதில், நமக்கு நிகர் நாமே?!
 •  என்னதான்  குப்பை தொட்டி பெரிய சைசில் இருந்தாலும், குப்பையை தொட்டிக்கு வெளியே விசிறிவிட்டு செல்வதில் உலகிற்கு நாம்தான் முன்னோடி.
(இன்னும் வேறு ஏதாவது மிச்சம் மீதி இருந்தா சொல்லுங்க நண்பர்களே....?!)

இப்படி பொது இடத்தில் கொஞ்சமும் சங்கோஜமின்றி  பொத்தாம் பொதுவாய் போட்டுத் தாக்குவதில் இந்தியர்கள் உலக பிரசித்தம். பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று சீனாவைப் போன்றே நாமும் ஒழுக்க விதிகளை அமுல் படுத்தலாமே....?
செய்வார்களா......?!.

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...