மாநாட்டு மலரை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெளியிட்ட போது எடுத்தப் படம். |
தமிழ் தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் மற்ற நாளிதழ்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது தினமணி. சென்னையை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் தனது 8 வது பதிப்ப்பினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தொடங்கியது. தொடங்கியது முதற்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கி களப்பணி ஆற்றி வருகிறது தினமணி.
தமிழ் நாடு இல்லம் முதற்கொண்டு பாண்டிச்சேரி ஹவுஸ் வரை தினமணி தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் டில்ல்லியில் நடை பெற்ற அகில இந்திய தமிழ் அமைப்புகளின் இரண்டு நாள் மாநாடு சிதறி இருந்த தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டியுள்ளது.
தமிழகம்,புதுச்சேரி, கேரளம், ஆந்திரா, கர்னாடகாம், மும்பாய், டெல்லி என்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அமைப்புகள் இம் மாநாட்டில் கலந்துக் கொண்டு தங்களது பங்களிப்பை ஆற்றியுள்ளன....!
இனி மாநாட்டு உரைகள்:
'அறிவார்ந்த சமுதாயம்தான்
போரில்லா உலகைப் படைக்கும்!'
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்.
நாம் செய்யும் எந்தப் பணி, இந்த நாட்டை, அறிவார்ந்த நல்ல மக்களுடைய நாடாக மாற்ற விதை விதைக்கிறதோ, அந்தப் பணிதான் நாம் சமுதாயத்திற்குச் செய்யும் நற்பணியாகும். எனவே, இன்றைக்கு தமிழ்ச் சான்றோர்கள் கூடி நல்ல அறிவார்ந்த சமுதாயம் மலரச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
தில்லித் தமிழ்ச் சங்கமும் "தினமணி' இதழும் இணைந்து புதுதில்லியில் நடத்தும் அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியது:
இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் விழா என்பதால் இந்த விழா சிறப்பு பெறுகிறது. தமிழுக்கும், தமிழர்தம் சமுதாய நல்வாழ்வுக்கும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையைப் பற்றி விவாதிக்க இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
தமிழர்கள் வாழ்ந்த வாழ்வு மிகச் சிறப்பான போற்றுதலுக்குரிய வாழ்வு. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு பல விதமான நல்ல அறிவு சார்ந்த சாதனைகளைப் படைக்கும் திறன் பெற்ற வாழ்வு. அதே சமயத்தில் பல சோதனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் வளர்ச்சி குறித்து எண்ணும்போது புறநானுறு, சிலப்பதிகாரம், கம்பர், திருவள்ளுவர், பாரதியைப் பற்றி நினைக்காமல் இருக்கமுடியாது. எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது திருக்குறள்தான். எனக்குப் பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல், அதாவது கோட்டை போல் நின்று நம்மைக் காக்கும் என்பதாகும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று.அதாவது அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே எமனாக மாறி அழித்திவிடும் என்பது பொருள்.
எனவே, இந்தக் கருத்துகளை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். அப்படிப்பட்ட அறிவார்ந்த சமுதாயம்தான், அடுத்த தலைமுறைகளைப் போரில்லா ஓர் உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும். கம்பன் சொல்கிறார்:
"யாரொடும் பகை கொள்ளலன் எனின், போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்த பின், வேரொடும் கெடல், வேண்டல் உண்டாகுமோ'
இதன் அர்த்தம் என்னவென்றால் யாருடனும் பகைமை கொள்ளாவிட்டால் போர் இல்லாத நிலை உண்டாகும். போரின்மையால் மன்னனின் புகழ் மங்காது. மன்னனின் ஆட்சியும், மன்னனின் வாழ்வும் குறைபடாது. போரில்லா நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்த ஒரு மன்னர் குலத்தையும் அடியோடு அழிய வேண்டுமென்று எவரும் சபித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். போரில்லாத நாடு உலக அமைதிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கம்பனுடைய கவிதை நம் எல்லோருக்கும் அருமையாக உணர்த்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யுத்தமில்லாத வாழ்வு உலகுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கம்பர்.
நண்பர் கவியரசு வைரமுத்து, சமீபத்தில் எழுதிய "மூன்றாம் உலகப் போர்' என்ற ஓர் அருமையான புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார். விஞ்ஞான முறைப்படி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லி இருக்கிறார். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வராது என்று கவிஞர் வைரமுத்து கூறுகிறார். அந்நிலையை நோக்கி நாம் எல்லோரும் முன்னேறுவோம். நமது எண்ணம், செயல் அனைத்தும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். எனவே தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தால், இந்தியா 2020க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது நிச்சயம் என்றார் அப்துல் கலாம்.
வைரமுத்து உரை அடுத்தப் பதிவில்.....