கிருத்துவத்தில் ஒரு பதம் உண்டு. 'பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்று.... !
நாம் தமிழர்களையும் இப்படித்தன் சொல்லவேண்டும். பல நூற்றாண்டாக தாம் செய்வது தவறு என்று கூட தெரியாமல், ஒரு மாபெரும் தவறை காலம் காலமாக செய்து வருகிறார்கள். அது, தமது பெயருக்கு முன்னால் வரும் தலை எழுத்தை அதாவது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதுவது.
பெயரை எழுதும் போது ஆங்கிலத்தில் இன்ஷியலை எழுதுவதுதனே முறை. இதில் என்ன தவறு இருக்கு என்று நீங்கள் கேட்களாம்?. உன்மைதான் ஆங்கிலத்தில் எழுதும் போது சரி. ஆனால் தமிழில் உங்கள் பெயரை எழுதும்போது, ஆங்கிலத்தில் எப்படி இன்ஷியலை எழுதுவீர்கள்?. தமிழில்தானே உங்கள் தலையெழுத்தை எழுத வேண்டும். இப்போது புரிகிறதா நாம் செய்யும் தவறு?.
உதாரணமாக...கதிரேசன் மகன் சன்முகன் என்கின்ற போது, சண்முகனின் தலையெழுத்து அதாவது இன்ஷியல் 'க' என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் நாம் எப்படி எழுதுகிறோம் என்றால் K. சண்முகம் என்றுதான் எழுதுகிறோம். இது ஒரு குறைபாடாக நமக்குத் தெரிவதில்லை.
மாறாக 'க. Shanmugam' என்று ஆங்கிலத்தில் பெயர் எழுதி தமிழில் இன்ஷியலை எழுதினால் எப்படி ஒரு அபத்தமோ அப்படி ஒரு அபத்தம்தான் ஆங்கிலத்தில் நமது பெயரின் முதல் எழுத்தையும் எழுதுவது.
கடந்த 400 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலம் இந்தியாவிற்கு வந்தது. வியாபரத்திற்காக வந்தவர்கள் நமது வெகுளித்தனத்தை கண்டு இங்கேயே தங்கி நாட்டையும் வளைத்து நம் கலாச்சாரத்தையும் கெடுத்துவிட்டார்கள். அவர்களின் அதிகார எல்லை விரிய விரிய ஆங்கிலம் பாதாளம் வரை பாய்ந்தது.
இதில் நமது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதி தவறுக்கு பிள்ளையார் சுஷி போடும் இடம் எது தெரியுமா..? அது பள்ளிக் கூடம்தான். பெரும்பாலும் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள பள்ளிக் கூடங்களில் 'டீசி'யில் நமது பெயரை தமிழில் எழுதி ஆங்கிலத்தில் இன்ஷியல் போடுகிறார்கள். இந்த தவறை நமக்கு சொல்லித் தருவதோ ஆசிரியர்கள்தான். ஒரு வகுப்பில் இரண்டு கண்ணன் இருந்தால் ஒரு கண்ணனை T.கண்ணன் என்றோ அல்லது R. கண்ணன் என்றோ அழைக்கிறார்கள்.
அவர்கள் நிர்வாக வசதிக்காக செய்யும் ஒரு செயல் நமது ஒரு தலைமுறையையே பாதிக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...? .
இன்னோரு கொடுமையான விஷயமும் நடக்கும். அதாவது இன்ஷியலை ஆங்கிலத்தில் எழுதாமல், தமிழிலேயே எழுதுவார்கள். உதா... K.பத்மனாபன் என்பதை கே.பத்மனாபன் என்று எழுதுவார்கள். கேட்டால் நான் தமிழில்தானே எழுதியிருக்கிறேன் என்று வியாக்கியானம் வேறு!. இதுவும் தவறான ஒன்று. திருத்திக் கொள்ளவேண்டிய ஒன்று.
இந்தத் தவறை சாதாரண படிப்பறிவு இல்லாதவன் என்று இல்லை, அனைத்துத் தரப்பு மக்களும் சர்வ சாதராணமாக எந்தவித கூச்சமும் இல்லாமல் செய்கின்றனர். மெத்தப் படித்தவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று அனைவரும் இந்த தவறை செய்கின்றனர்.
சினிமா அழைப்பிதழ்கள் மற்றும் விளம்பரங்கள், விளம்பரச் சுவரொட்டிகள், கல்வி நிலைய அழைப்பிதழ்கள், திருமண அழைப்பிதழ்கள், அரசியல் விளம்பர பேனர்கள், பத்திரிகை விளம்பரங்கள் என்று இந்தத் தவறு, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் உங்களது திருமண அழைப்பிதழை மீண்டும் ஒரு முறை பாருங்கள், அதில் நிறைய இடங்களில் ஆங்கிலத்தில்தான் இன்ஷியலை எழுதியிருப்பார்கள்.
 |
| ஆங்கிலத்தில் இன்ஷியல் உள்ள கல்யாண பத்திரிகை |
 |
| இது அரசியல் விளம்பரம். இதுவும் அந்த ரகம்தான். |
சினிமாக்காரர்களின் இரு மொழி மோகம்!
40களில் இருந்து தொடங்குகிறது சினிமா காரர்களின் இரு மொழிகளில் தங்களது பெயரை எழுதும் மோகம். அது ஒரு தவிற்க முடியாதா ஒரு விஷயமாகவே சினிமாத் துறையில் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது. இரு மொழிகளில் தங்களது பெயர்களை வைத்துக் கொண்டவர்களின் பட்டியல் வால் போன்று நீண்டுக் கொண்டே செல்கிறது.
M.K.தியாகராஜ பாகவதர் (MKT)
N.S. கிருஷ்னன்
T.A. மதுரம்
M.G.இராமச்சந்திரன் (MGR)
T.R.மகாலிங்கம்
A.V. மெய்யப்பச் செட்டியார் (AVM)
K.V. மகாதேவன்
S.S. ராஜேந்திரன்
M.R. ராதா
Y.A.K தேவர்
M.N. நம்பியார்
S.A. அசோகன்
V.K.ராமசாமி
M.N. ராஜம்
K.R. விஜயா
T.M. சொளந்தர்ராஜன்
T.R.பாப்பா
K.பாலச்சந்தர்
S.P. முத்துராமன்
K.பாக்கியராஜ்
M.S.விஸ்வனாதன்
T. ராஜேந்தர்
A.R. ரஹ்மான்
S.A. சந்திரசேகர்
K.S.ரவிக்குமார்
A.R. முருகதாஸ்
Y.G.மகேந்திரன்
S.J.சூர்யா
V.G.பன்னீர்தாஸ் (VGP)
H.வசந்தகுமார் (வசந்த் & கோ.,)
T.T. கிருஷ்னமாச்சாரி (TTK group)
T.R பாலு
K.N. நேரு
KKSSR. இராமச்சந்திரன்.
A.K.மூர்த்தி
எஸ். ராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)
படிக்கும் உங்களுக்கு புரிய வைப்பதற்காகத்தான் இரு மொழிகளில் பெயர் வைத்தவர்களின் பெயர் பட்டியல். இன்னும் இந்த கணக்கில் வராதவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதைப் பார்க்கும் போதே விஷயத்தின் விபரீதம் புரிந்திருக்கும்.
அதுவும் சினிமாக்காரர்கள் செய்யும் நல்லதும் கெட்டதும் மிக விரைவாக தமிழர்களிடம் பரவிவிடுவதுதான் கொடுமையிலும் கொடுமை! இரு மொழிகளில் பெயரை எழுதுவது தவறில்லை என்ற என்னம் தமிழர்களிடையே வருவதற்கு சினிமாகாரர்களே முக்கிய காரணம்.
தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களைப் பாருங்கள். அதில் வரும் தொழிற்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் எல்லாம் இரு மொழிகளில்தான் எழுதப்பட்டு இருக்கும்.
தமிழிலேயே இன்ஷியலை போட்ட செட்டியார்கள்
முன்பு வியாபரத் துறையில் கோலோச்சிக் கொண்டு இருந்த தமிழ் செட்டியார்கள் தங்களது தந்தையார் பெயரினையும் தாத்தன் முப்பாட்டன் பெயரினையும் தங்களது பெயருக்கு முன்னால அழகு தமிழில் வைத்து இருந்தனர். அதனாலயே அவர்கள் ஆனா ரூனா செட்டியார், வேனா செட்டியார், லேனா செட்டியார், தானா முனா செட்டியார் என்று அவர்களது முன்னோர் இன்ஷியலோடு அழைத்தார்கள். இன்றும் எங்கேயாவது அத்தகைய பெயர்களை வெகு அறிதாகத்தான் காணமுடியும். அதில் ஒரு பெயர் 'லேனா. தமிழ்வாணன்'.
ஆனால் காலம் செல்லச் செல்ல செட்டியார்கள் கூட தங்களது மரபுகளையும் காலச்சாரத்தையும் மற்றிக் கொண்டு வழக்கமான தமிழர்களாக மாறிவிட்டனர் என்பதுதான் வேதனையான ஒன்று.
'தானாக எதுவும் மாறாது'
தமிழர் தந்தை ஆதித்தனார் ஒரு முறை கூறும் போது " உலகை நான் நான்கு முறை சுற்றி விட்டேன். தமிழர்களிடம் மட்டும்தான் T.K.மூர்த்தி P.R கண்ணன் என்று இரு மொழிகளில் தமது பெயரை எழுதும் மனிதர்களை காணமுடியும்" என்றார்.
தாம் செய்வது தவறு என்று கூட சிந்திக்க முடியாத அளவிற்கு இந்த ஆங்கில தாகம் நமக்கு இருந்திருக்கிறது. இருந்துவருகிறது.
இதை நாம் மக்கள் மனறத்தில் கொண்டு செல்ல வேண்டும். விஷயத்தின் விபரீதத்தைப் புரிய வைக்கவேண்டும். இதை ஒரு இயக்கமாக கொண்டு சென்று நல்ல ஒரு மாறுதலை காணவேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லை.
நாம் ஒன்று சேருவோம், நமக்குத் தெரிந்தவர்கள், அருகில் உள்ள பள்ளிகள், ஊர் மக்கள், முக்கியஸ்த்தர்கள் என்று எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். சிறு துளி பெரும் வெள்ளமாய் மாறி இந்தத் தவறை தமிழனிடமிருந்து துடைத்தெறிவோம்.
முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைத் தளங்களை பயன்படுத்தி இனி வரும் காலங்களிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்கள் தங்களது பெயர்களை இரு மொழிகளில் எழுதுவதை தவிர்த்திடுவோம். அதை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.