- திமுக தலை தப்புமா?
'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் இருக்கிறது தி.மு.க., நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்ற புலனாய்வு மனநிலை அடிமட்ட திமுக தொண்டனிடம் பலத்த கேள்வியாக உறுத்திக்கொண்டு இருக்கிறது.
அது கவிதையாக இருக்கட்டும், கதையாக இருக்கட்டும் இல்லை சினிமாவாக இருக்கட்டும், கதையின் முடிவு (கிளைமாக்ஸ்) பொறுத்துதான் வெற்றி!. படம் முழுவதும் ரசிக்கும் படியாக கொடுத்துவிட்டு, கதையின் முடிவில் இயக்குனர் சொதப்பி விட்டால் படம் எப்படி 'பப்படம்' ஆகுமோ... அப்படி ஆகிவிட்டது திமுகவின் ஆட்சி.
இந்த முறை (தற்போதைய ஆட்சிக் காலத்தில்) எந்த தவறும் நடந்துவிடக்கூடாது என்ற முடிவில் தீவிரமாக இருந்தார் கலைஞர். அதனாலயே பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கட்சியை ஆட்சியை பலப்படுத்த இதுவே தக்கதருணம் என்று முனைப்புடன் செயல்பட்டார்கள். ஆனால் விதி வலியது என்று அடுத்தடுத்து வந்த சம்பவங்கள் நிருபித்தன.
- திமுக ஆட்சிக்காலத்தில் தமிழினம் அழிப்பு
அதில் முக்கியமானது, இலங்கையில் தமிழினம் அழிப்பு போர். 32 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துக் கொண்டு இருந்த சண்டை திமுக ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு வந்ததுதான் பெரும் கொடுமை. தமிழ் தமிழர் நலன் என்று மேடை தோறும் முழக்கம் இடும் கருணாநிதியால் இந்த முறை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது தமிழின ஆதரவாளர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் கருணாநிதி மீது திரும்பியது. கருணநிதியின் கையாலாகாதத்தனம் தான் இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு முக்கிய காரணம் என்று ஜெயலலிதா, வைகோ,நெடுமாறன் போன்றவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இலங்கையில் போர் உக்கிரம் கொண்டிருந்தபோது இங்கு மனித சங்கிலி நடத்தியது, உண்ணாவிரதம் இருந்தது, டெல்லிக்கு தந்தி அடித்து காங்கிரஸ் செயல்பாட்டிற்கு 'காவடி'தூக்கியது என்று ஏகப்பட்ட 'டேமேஜ்'கள் திமுகமீது.
இலங்கை தமிழனை அழிக்க இங்கு தமிழ் நாட்டில் மீனம்பாக்கத்திலிருந்து விமானங்கள் சென்றன. இது தமிழர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
திமுகவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை தமிழன் அழிந்தது ஒரு வரலாற்று சோகம். இதை முன்னின்று நடத்தியது 'காங்கிரஸ்' என்பது ஊர் அறிந்த ரகசியம்.
- வின்னைத்தாண்டி(ய) வருவாய்!
இதற்கு முன்பாகவே மக்களின் மனநிலையில் சற்று மாற்றம் வரத் தொடங்கியது. அது கலைஞரின் குடும்பம் மொத்தமும் திரைப்படத் தாயரிப்பில் இறங்கியதுதான். முடிந்து திரைக்கு வரத் தயாராய் இருக்கும் படங்களை நல்ல விலைக்கு வாங்கி வெளியீடத் தொடங்கியது சன் குழுமம். தனது பாதாளம் வரைப் பாயும் 'நெட் ஒர்க்' தந்திரத்தால், தயாரிப்பாளர்களை தடுமாறச் செய்து தங்கள் பக்கம் திருப்பியது சன் பிக்ச்சர்ஸ். விளைவு, சன் டிவில் தொடந்து பட விளம்பரங்கள் தந்து 'அட்டு' படங்களையும் 'பிட்டு' படங்களைப் போல் ஓடச் செய்தனர்!.
சன் குழுமத்தின் பட வெளீயிடு ஒரு பிரமாண்டத்தை எட்டவே, அதுவரையில் சோம்பித்திருந்த கலைஞர் குழுமம் விழித்துக் கொண்டது. 'நாமலும் ஏதாவது செய்யனும்டா' என்ற நிலைக்கு ஸ்டாலின் வர அதற்கு துணை புரிந்தார் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின். விளைவு 'ரெட் ஜெயண்ட்' பிறந்தது. இவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு படத் தயாரிப்பில் ஈடுபட, சினிமா இண்டஸ்ட்ரீயில் இந்த ஆதிக்கத்தைப் பற்றி 'டாக்'வரத் தொடங்கியது.
இவர்களுக்கு நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று அழகிரிதரப்பும் "கிளவுட் நைன்' மூலமாக சினிமா தயாரிப்பில் குதிக்க... தொடர்ந்து கலைஞரின் இன்னொரு மகன் மு.க தமிழரசும் 'மோகனா பிக்ச்சர்ஸ்' மூலம் படத்தயாரிப்பில் ஈடுபட.... மொத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீக்கும் 'கிலி' பிடித்துக் கொண்டு 'அதிரிபுதிரி'யானது. விளைவு கருணாநிதியின் குடும்ப சினிமா ஆக்கரிமிப்புப் பற்றி கதை கதையாக பல கதைகள் வரத்தொடங்கியது.
இவர்கள் யாரையும் படம் எடுக்க அனுமதிப்பதில்லை. நல்ல படங்கள் எடுத்தால் அதை இவர்களிடம் இவர்கள் சொல்லும் விலைக்கு விற்று விடவேண்டும். திரையரங்குகள் இவர்கள் வெளீயிடும் படங்களுக்கு உடனே இடம் தரவேண்டும், தாங்கள் எதிர்க்கும் படங்களுக்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது, தங்களுக்கு எதிப்புக் காட்டும் கதாநாயகர்களை வைத்து யாரும் படம் தயாரிக்கக் கூடாது. அப்படியே எடுத்தாலும், அதை வெளியீட முடியாத அளவிற்கு கிடுக்கிப்பிடி. பிறர் எடுக்கும் படங்களுக்கு சன் டிவியில் 'டாப் 10' ல் கூட இடம் கிடையாது என்பது போல் பல கதைகள் பல கிளைகளாக வளர்ந்து படர்ந்தன.
இந்த நேரத்தில் தமிழகத்தின் பாரம்பரியமான சில சினிமா தாயாரிப்பு கம்பெனிகள் 'நமக்கு எதுக்கடா வம்பு' என்று கையைக் கட்டிக் கொண்டு அமைதி காத்தன.
சாதாரணமாகவே சினிமா பற்றிய செய்தி ஒரு வினாடியில் உலகம் முழுவதும் பரவிவிடும் அத்தகைய 'வலுவான' ஊடகம் அது. அதில் இப்படி ஒரு குடும்ப ஆதிக்கம் நடப்பதால், அதை பிடிக்காதவர்கள் நாளொரு வதந்திகளை பரப்பிவந்தனர். இப்படித்தான் ஆரம்பித்தது கருணாநிதியின் குடும்பத்தின் மேல் வெறுப்பு. அந்த வெறுப்பு 'ஸ்பெக்ட்ரமில்' விஸ்வரூபம் எடுத்தது. அதுநாள் வரையில் திமுக அரசு மீது மக்கள் 'கிராப்' ஏறிக்கொண்டுதானிருந்தது. இவர்கள் சினிமாத் துறையில் அடித்த கொட்டம்தான் திமுக அரசின் மீது மக்களுக்கு எழுந்த முதல் வெறுப்பு.
அதுவே, இவர்கள் குடும்பம் மட்டுமே கோடிகளை குவித்து வாழ்கிறதே என்ற என்னத்தையும் மக்களிடையே எழச் செய்தது. அதை சரியான முறையில் எழுதி பெரிதுப் படுத்தியது அச்சு ஊடகங்கள்.
இன்நிலையில் கனிமொழியும் படத் தயாரிப்பில் இறங்கப் போகிறார் என்கிறது ஒரு கோடம்பாக்கத்து பக்ஷி!