புத்தக அலமாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக அலமாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 04, 2025

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !



ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன்று சென்னையில்  நடைபெற்றது. நிகழ்வுக்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.  விழா சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்றது.

ஆங்கிலத்தில் வெளிவந்த ஜோய் ஆலுக்காஸின் 'ஸ்ப்ரெடிங் ஜோய்' ( Spreading Joy)  தமிழ் பதிப்பை "தங்க மகன் ஜோய்" என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.

விழாவில் பெருந்திரளான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கேரளத்தில் பெரும் பணக்கார குடும்பத்தில்  பிறந்த ஜோயை குடும்பத்தினர் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  15 குழந்தைகள் உள்ள பெரிய குடும்பத்தில் இவர் 11 ஆவது குழந்தை.  தனக்கான தனிமையை உணர்ந்த ஜோய் தனது பால்யத்தில்  முழு கவனத்தையும் வியாபாரத்தில் செலுத்தினார். அவரது தீவிரமான வியாபார நுணுக்கம் உலக அளவில் தங்க நகை விற்பனையில் அவருக்கு பேரும் புகழையும் வாங்கித் தந்திருக்கிறது.
 
"கேரளம் தாண்டி எனது முதல் கடையை சென்னையில்தான்  தொடங்கினேன். அதனால் சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான நகரம்" என்றார் ஜோய் ஆலுக்காஸ்  தனது ஏற்புரையில்.

சென்னை தி நகரில்  இருக்கும்  பிரசாந்த கோல்டு டவரில்  இயங்கும் ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரிதான் இந்தியாவின் பெரிய நகைக் கடை  என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பார்க்க  தங்க நகைக்கென பிரத்யேக மால் போலவே இருக்கிறது பிரசாந்த் கோல்டு டவர்!
**

விழா முடிந்ததும், விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு விசிட்டிங் கார்டு போல ஒரு அட்டை தந்தார்கள். அதில் க்யூ ஆர் கோடு இருந்தது. அந்த க்யூ ஆர் கோர்டை நமது மொபைலில் ஸ்கேன் செய்ததும்... நம்மை ஒரு   தற்படம் (செல்ஃபி) எடுக்க சொல்கிறது,   இல்லை மொபைலிலிருந்தும் நமது புகைப்படத்தை பதிவேற்றமும் செய்யலாம்.

பதிவேற்றம் முடிந்ததும், நமது புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன்  முக அடையாளம் (Face    Recognitions) தரவுகளை  வைத்து,  நாம்  நிகழ்வில் எங்கெங்கு இருந்தோமோ அந்தப் புகைப்படங்களை  தேடி எடுத்து,  சடுதியில் நமது வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பிவிடுகிறது.  



புகைப்படங்களை பார்க்கவே பிரமிப்பாக, ஆச்சரியமாக இருந்தது. செயற்கை நுண்ணறிவு எந்தளவிற்கு நமது வாழ்க்கையில் ஊடுறுவி இருக்கிறது பாருங்கள் ?!!!

பி.கு: நல்ல வேளையாக கையில் கிளாசு இருக்கும் புகைப்படத்தை அனுப்பவில்லை  என்று நினைத்துக் கொண்டேன். விழாவில் காக்டெயில் இருந்தது.😍 இனிவரும் காலங்களில் இந்த AI என்னென்ன ரகளை செய்யப் போகிறதோ....??!!!

#AI
#joyallukas

வெள்ளி, ஏப்ரல் 25, 2025

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்


 
 
                        ஊருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். "இந்தாப்பா இதை எடுத்துட்டு போ..." என்று புதுக் கருக்கு குலையாத ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். 

அது தேவிபாரதி எழுதிய 'நட்ராஜ் மகராஜ்'

ரயில் பயணத்தில் ஜன்னலோர சீட், ரயில் சென்னையை விடுத்து திருச்சியை நோக்கி விரைய... காலை நேரக் காற்று இதமாய் அடித்துக் கொண்டு இருந்தது. படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'நட்ராஜ் மகராஜ்' என்னை இழுத்துக் கொண்டா(ர்)ன்.

ரயிலின் வேகத்தில் பக்கங்கள் சர சரவென கரைந்து கொண்டிருந்தது. குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த எதிர் சீட்டு இளைஞன் "என்ன அங்கிள், அதற்குள் இவ்வளவு பேஜ் படிச்சிட்டீங்க?" என்றான். அவன் சொன்ன பிறகுதான் கவனித்தேன் 110 பக்கங்களுக்கு மேல் தாண்டிவிட்டிருந்தேன்.

பொதுவாக புத்தக வாசிப்பில் நான் ஒரு தவணை முறைப் படிப்பாளி. எடுத்தோம் முடித்தோம் என்ற கதையெல்லாம் நம்மிடத்தில் இல்லை. ஆற அமரதான் வாசிப்பேன். இந்த முறை கொஞ்சம் ஸ்பீடு !!

சமீபகாலத்தில் நான் படித்ததில் முக்கியமான கவனிக்கதக்க ஒரு நாவல் 'நட்ராஜ் மகராஜ்' கதை சொல்லப்படுகின்ற விதமே அலாதியானது. கதையாடலில் ஒரு வசீகர நடையை ரசிக்க முடிந்தது. கதையில்...கதா பாத்திரத்தில், நடராஜைத்தவிர. யாருக்கும் பெயர் என்பது கிடையாது. எல்லாருக்கும் பெயரின் முதல் எழுத்தை மட்டுமே தந்திருப்பார் நாவலாசிரியர்.  


'செ' என்ற ஊரிலிருந்து 'தி' என்ற ஊருக்கு ரயிலில் செல்லும் 'ம' என்ற வாசகன் விடாப்பிடியாக 'ந'வின் கதையைப் படித்தான். இப்படிதான் கதை போகும். அதுவே நமக்கு சுவாரசியமான ஒரு கதைக் களத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தமிழுக்கு இப்படியான கதை சொல்லல் புதிது!

கதா பாத்திரத்திற்கு எதற்கு பெயர் ? நீட்டி முழங்கும் அளவிற்கு அந்தப் பெயர்கள் ஒன்றும் கதையில் பெரிய மாறுதலை கொண்டு வந்துவிடாது என்று நினைத்தாரோ என்னவோ...கதையாசிரியர் யாருக்கும் பெயர் வைக்க வில்லை. 

பரம ஏழையான நட்ராஜ், அந்த ஊரில் இருக்கும் சிதிலமடைந்த அரண்மனையில் வசிக்கிறான். முழு அரண்மணையும் காடு மண்டிக் கிடக்க, முகப்பில் இருக்கும் மணிகூண்டில்தான் அவனது வாசம். அவன் என்றால் அவன் மட்டுமல்ல, அவன், அவனது பொஞ்சாதி, இரு புள்ளைங்க. அரசாங்க ஊழியனாக வேண்டிய கனவில் நட்ராஜ் சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்கிறான். 

கடும் வெயிலில் ரயில் வேகமெடுத்து... விழுப்புரத்தை தாண்டுகிறது. எதிர் சீட்டு இளைஞன் மதியத்திற்கான உணவு பாக்ஸ்களை பிரிக்கிறான். சோறு தனியாக ஹைடெக் பாக்ஸில் சீலிடப்பட்டிருக்கிறது. கோழி இறைச்சியும் அவ்விதமே சீலிடப்பட்டிருந்தது. பாக்ஸ்களை ரொம்ப நேரமாக பிரித்துக் கொண்டிருந்தான்.  

அன்று ஞாயிறு என்பதால் ரயிலில் இருந்த பெருமபாலோர் அசைவ உணவுகளையே  
வீட்டிலிருந்து மதிய உணவாக எடுத்து வந்திருந்தார்கள். பக்கத்து சீட் ஆண்டி கருவாட்டுக் குழம்பு ?! எங்கள் வீட்டில் காலையிலே மட்டன் குழம்பு. குழம்பு தனி, சோறு தனியாக தருகிறேன் என்றாள் மனைவி. அப்படியெல்லாம் வேண்டாம் ரயிலில் பிரித்துவைத்து சாப்பிட சிரமமாக இருக்கும் கிளறியே கொடுத்துவிடு என்றேன். ஒரு சில்வர் டிபன் பாக்ஸில் சாப்பாட்டை கிளறி கொடுத்துவிட்டாள். சாப்பிட எளிதாக, வேலையும் விரைவாக முடிந்தது. 

எதிர் சீட்டு இளைஞன் ஒருவழியாக பிரித்து சாப்பிடத் தொடங்கினான். எந்த சங்கோஜமும் இன்றி சோறு, கறிகளை தனித்தனியே தட்டில் எடுத்துவைத்து சாப்பிட்டான். பொறுமையாக சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் பெர்த்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பிவிட்டு கட்டையை நீட்டிவிட்டான். இரண்டு மணி நேரம் நல்ல உறக்கம். 

"வீட்டில் ஒரே பிள்ளையா ?" என்றேன்
 "ஆமாம்" என்றான், கண்கள் மிளிர. 

ரயிலில் பயணிக்கும் போதே, நாளை சென்னை திரும்புவதற்காக TNSTC ஆப்பில் ஏசி பஸ்ஸில் தனி சீட்டாக பார்த்து புக் செய்துவிட்டேன். அது எளிதாக இருந்தது. பஸ்ஸ்டாண்ட் சென்று சென்னைப் பஸ்ஸில் சீட் இருக்கிறதா ? என்று ஒவ்வொரு பஸ்ஸாக அலைய வேண்டாம். TNSTC ஆப்பை தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். மிக சிறப்பாக பராமரிக்கிறார்கள். சாதாரண பேருந்து முதற்கொண்டு ULTRA DELUXE, ஏசி படுக்கை, இருக்கை என்று தமிழகம் முதற்கொண்டு, அண்டை மாநிலங்கள் வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கட்டணமும் குறைவு, பயணிப்பதும் சிரமமின்றி இருக்கிறது.

கதைக்கு வருவோம்... ஸ்ரீரங்கத்தில் கல்யாணத்தை முடித்து விட்டு, சென்னை திரும்பும் வழியில், பஸ் பயணத்தில் மீண்டும் நட்ராஜ் மகராஜ் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.  

தனது பூர்வீகத்தை மறந்து, இந்த அறத பழசான அரண்மணை புறாக் கூண்டில் வசிக்க முடியாது என்பதை உணர்ந்த 'ந' அரசாங்கத்தின் இலவச தொகுப்பு வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கிறான். அதற்காக அரசாங்கத்தின் பல அடுக்குளில் ஜீவித்து வாழும் பல ரக அரசாங்க மனிதர்களை சந்திக்கிறான்.  

அரண்மணை எப்போது இடிந்து விழுமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இனியும் வாழ முடியாது, நமக்கென்று சின்னதாக ஒரு வீடு இருந்தால் போதும், பாம்பு, தேள் என்று விஷ ஜந்துக்கள் பயமின்றி வாழலாம் என்று முடிவெடுக்கிறான்.

கதை வேகமெடுத்து வரும் இத்தருணத்தில்... இடையிடையே வரும் போன் அழைப்புகளை பதிலளித்துவிட்டு, கொஞ்சம் முக நூல், கொஞ்சம் வாட்ஸ்ஸப் என்ற நேர விரயத்தில் இரவு எட்டரை மணி வாக்கில் சென்னை கிளாம்பாக்கம் வந்தடைகிறது பேருந்து. அங்கிருந்து கோயம்பேடு, அங்கிருந்து இன்னொரு பஸ் என்று வீடு வந்து சேர இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. (இந்த நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு பஸ்ஸை நிறுத்தியவர்களை சபிக்கிறேன்.) 

வீடு வந்து மீண்டும் ஆவலாக 'நட்ராஜ் மகராஜ்' புத்தகத்தை தேடினால் புக்கை காணோம். எங்கு தேடியும் இல்லை. மொபைல் பார்க்கும் போது புத்தகத்தை சீட்டில் சைடில் செருகியாதாக நினைவு....  
 
'நட்ராஜ் மகராஜ்' என்ன ஆனார் என்று தெரியவில்லை ??

-மபா 

(வெளியீடு: காலச்சுவடு. விலை ரூ.390)
 
#நட்ராஜ்மகராஜ் 
#தேவிபாரதி 
#காலச்சுவடு 
#பயணங்கள்

திங்கள், ஜூலை 25, 2022

'வெண்ணிற ஆடை' இருட்டிலிருந்து சில உண்மைக் கதைகள்.



எனது புத்தக அலமாரியிலிருந்து மெலிதான ஒரு புத்தகத்தை உருவினேன்; அது சரவணன் சந்திரன் எழுதிய 'வெண்ணிற ஆடை'.
புத்தகம்தான் மெலிதாக இருந்ததே தவிர, உள்ளே உள்ள கதைகள் மெலிதாக இருக்கவில்லை, அவை கணத்துக் கிடக்கின்றன.
 
அக வாழ்வின் இருண்ட பக்கங்களில் வாழும் நிழல் மனிதர்களை இக் கதைகள் படம் பிடித்திருக்கிறது. அவர்கள் சக மனிதர்கள் போன்று நம்மிடையே உலவினாலும், அவர்கள் சக மனிதர்கள் இல்லை. இந்த நிழல் மனிதர்கள் பெரும்பாலும் தங்களது உறவுகள், தங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று, இவர்கள் மீதே அவர்கள் அறியாமலயே படிந்துக் கிடக்கிறார்கள். சிலர் சுதாரித்து… பதறி உதறி விலகுகிறார்கள். சிலர் அதிர்ச்சியில் செய்வதறியாது சிதைந்துப் போகிறார்கள். 
 
ஒரு கதையை முடித்துவிட்டு அவ்வளவு எளிதாக மற்றொரு கதைக்குள் நீங்கள் சென்றுவிட முடியாது. “இப்படியும் நடக்குமா ….?” என்று நீங்கள் புருவம் உயர்த்திப் பர்க்க, உங்களுக்கு நீண்ட அமைதி தேவைப்படும். அந்த அமைதியே உங்களை ஆசுவசப்படுத்தும். 
 
‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி சின்னத் திரையில் வெளிவந்தது….. இன் நிகழ்ச்சி கடும் விமர்சனங்களையும், பராட்டுதலையும் ஒருசேர பெற்றது எனலாம். அன் நிகழ்ச்சியின் இயக்குனர்தான் இந் நூலின் ஆசிரியர். “இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் எழுத்து வடிவமல்ல. தொலைக்காட்சி திரையில் சொல்ல முடியாத பல உண்மைகள் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றன. இதுவும்தான் தமிழ் வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் விசித்திரங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நம்மிடையே பதில் இல்லை” என்கிறார் இன் நூலின் பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன். 
 
கதைகள் பெரும்பாலும் மூன்று நான்கு பக்கங்களிலேயே முடிந்து விடுகிறது. கதையாசிரியர், காட்சிப் பட இயக்குநர் என்பதால், எந்த வித நீட்டலுமின்றி உள்ளதை உள்ளப்படிக்கு சொல்கிறார். ஒரு டீ குடிக்கும் நேரத்தில் ஒரு கதையை சொல்லி முடித்துவிடுகிறார். சட் சட்டென்று காட்சிகள் மாறி, நமக்குள் கடத்த வேண்டிய கதையின் வாதையை ஒரு ஷாக் போன்று நமக்குள் பாய்ச்சிவிடுகிறார். 
 
இத் தொகுப்பில் இருபது கதைகள் இருக்கிறது. எந்தக் கதைக்கும் தலைப்பு இல்லை. நீங்களாக ஒரு தலைப்பை கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் கதையில்தான் கதையாசிரியர் எதையும் மூடி வைக்க வில்லையே…..? அப்புறம் எதற்கு தலைப்பு ? மற்றவர் பார்வைக்கு....தலைப்பின்றி கதை திறந்தேக் கிடக்கட்டுமே. 
 
-மபா
 
‘வெண்ணிற ஆடை’
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 120
விலை ரூ.110/-

வியாழன், டிசம்பர் 23, 2021

இந்து தேசியம் -தொ.பரமசிவன்

சென்னை புத்ததக் காட்சி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதையொட்டி அடுத்த பத்து நாட்களுக்கு (ஜனவரி1 வரை) நீங்கள் படித்த புத்தகங்களை சிறு குறிப்பு கொண்டு வெளியிடுங்கள் என்று 'புத்தகம் பேசுது' மாத இதழ் வாயிலாக பாரதி நாகராசன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு இருந்தார்கள்.



இன்றைய தேதியில் நமது தமிழ் இளைஞர்கள் அறிவார்ந்த புத்தகங்களை தேடிச்சென்று படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய புத்தகம் தமிழ் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் எழுதிய 'இந்து தேசியம்'.
நான் இந்துவல்ல நீங்கள்?
சங்கர மடம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,
இந்து தேசியம்,
இதுதான் பார்ப்பனியம்,
புனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை
இந்திய தேசியமும் திராவிட தேசியமும் : உறவுகளும் முரண்களும் என்று ஐந்துக்கும் மேற்பட்ட குறுநூல்களின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.
இந்து, திராவிடம், நீதிக்கட்சி, வேதம், பார்ப்பனீயம்,சாதியம், மடங்கள், தமிழர் பண்பாடு என்று இன்றைய இளைஞர்கள் விடை தேடித் துடிக்கும் பல்வேறு கேள்விகளுக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
எளிய நடையும், பொட்டிலடித்தாற் போன்ற ஆதாரங்களும், வரலாற்றுத் தரவுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வெளியிட்ட நாள் முதல் பல பதிப்புகளை கண்டு, தமிழர்களிடையே ஏக போக வரவேற்புக் கண்டதே இந் நூலுக்கான வெற்றியாகும்!
பக்கம் 144
விலை ரூ.160

திங்கள், அக்டோபர் 04, 2021

'செம்மீன்' மலையாள நாவல் !


          தென்னவோ, தகழியின் 'செம்மீன்' படித்து முடித்தப்பின், கருத்தம்மா - ஃபரீக்குட்டியின் நினைவாகவே இருக்கிறது. தொடக்கத்தில் பரிக்குட்டி பெண் குட்டி என்றே நினைத்தேன். பிற்பாடுதான் தெரிந்தது அது ஃபரீக் குட்டி என்று.
மலையாளிகளின் இலக்கிய பிரஸ்தாபத்தில் செம்மீனுக்கு முக்கிய இடமுண்டு. 1956 ல் செம்மீன் நாவல் வெளிவந்த போது, அந்நாட்களில் இந் நாவல் பல பெரிய பாராட்டுகளையும், சில பல கடும் விமர்சனங்களையும் எதிர் கொண்டிருக்கிறது. 
 

சாகித்ய அகாடமி (1959) விருது பெற்ற இந் நாவலை, தகழி சிவசங்கரப் பிள்ளை 20 நாட்களில் எழுதி முடித்துவிட்டாராம்?! என்னவோரு அசாத்திய வேகம்? 
 
1956 ல் செம்படவச் சேரிகளின் நிலையையும், அரையர்களின் இனவரைவியலுமாக இக்கதை நகர்கிறது. கட்டிய கணவன் கடல் மீதேறி போகையில், கரையில் இருக்கும் மனைவியின் ஒழுக்கம்தான், கடலாடும் மீனவனை காப்பாற்றுகிறது. கடலில் அவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் என்றால், அதற்கான முழு பொறுப்பையும் தயவுதாட்சன்யமின்றி பெண்ணின் மீதே சுமத்தி வைக்கிறது இச் சமூகம். 
 
ஒரு ஆணும் பெண்ணும், அங்கே இங்கே பேசிக் கொண்டு நின்றால் போதும்....உடனே கதை கட்டிவிடுகிறார்கள். அதுவும் என்னேரமும் காத்து வீசும் பட்டிணச் சேரியில் கேட்கவா வேண்டும்? அது ஊதி ஊதி பெரிதாக்கப்படுகிறது. அப்படியான ஒரு சுழலில்தான் கறுத்தம்மாவும் முஸ்லிமான பரீக்குட்டியும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு வகையில் கருத்தம்மாவின் தந்தைக்கு பரீக்குட்டி சின்ன முதலாளி. 
 
'மரக்காத்தியின் ஒழுக்கம்தான் மரக்கானுக்குச் சொத்து' என்பது போலவே பெண்கள் இச் சமூகத்தில் வளர்க்கப்படுகிறாள். பெண்ணின் ஒழுக்க நெறியின் ஊடே, இக் கதை பயணிக்கிறது. இந்தக் காலத்தோடு அந்தக் கதையை பொறுத்திப்பார்க்க முடியாது;அது அபத்தம். ஒரு அபப் புனைவாகத்தான் இக் கதை படைக்கப்பட்டிருக்கிறது. சுந்தரராமசாமியின் தேர்ந்த மொழி பெயர்ப்பு நம்மை மலையாள மூல நாவலை வாசிப்பது போன்றே இருக்கிறது. மொழி பெயர்ப்பு நாவல் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை. 
 
செம்மீனின் ஏகோபித்த வரவேற்பையொட்டி... அது திரைப்படமாக 1965ல் எடுக்கப்பட்டது. ஒரிஜனல் நாவல் போலவே, படமும் செம ஹிட்! எட்டு லட்சம் முதல் போட்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படம் 40 லட்சத்தை சம்பாதித்து தந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அது ஜாக்பாட்! 
 
மலையாளிகளின் சுக ஜீவிதத்தில், ஒரு தேசிய கீதம் உண்டெங்கில் அது...
'கடலின் அக்கரை போனோரே
காணாப் பொன்னுக்காய்ப் போனோரே....'  என்ற செம்மீன் பாடல் தான். இன்றளவும் மலையாள திரைப்பட பாடல்களின் அடையாளமாக, கலாச்சாரமாக இப்பாடலே இருக்கிறது. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர் திரையிசை மேதை சலீல் செளத்ரி அவர்கள். 
 
 
 
 
()()()()
 
சீர்காழிக்கு அருகில் எனது மாமா (மாமனார் வீடும் கூட) வீட்டிலிருந்து... கூப்பிடும் தூரத்தில் தான் சின்ன கொட்டாய்மேடு கடல் இருக்கிறது. நல்ல வெள்ளை மணல் போர்த்திய கடல்கரை அது. தண்ணீர் அப்படியே ஸ்படிகமாட்டாம் மின்னும். அப்படி ஒரு சுத்தம். செம்மீன் வாசித்தப் பிரேமையில் அப்படியே கடற்கரை ஓரம் நடந்தேன். கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோனியில் ஃபரீக் குட்டி போல் படுத்துக் கிடந்தேன். 
 
வானில் நட்சத்திரங்கள் மின்ன தொடங்கியிருந்தன...நினைத்துப் பார்த்தால் நம்முள்ளும் ஒரு கடல் இருக்கிறது. அது சதாசர்வகாலமும் நினைவுகளோடு ஆர்பரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 
 
 
இப்படியான கடற்கரைகளில்தான் எத்தனை எத்தனை கருத்தம்மாக்களும் ஃபரீக்குட்டிகளும், பழனியும் வாழ்ந்திருப்பார்கள்? அவர்களின் துயர் மிகுந்த கதையைதான் இந்தப் பெருங்கடல் மீண்டும் மீண்டும் நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. 
 
செம்மீன் காலத்தால் அழியாத காவியம்!

சனி, டிசம்பர் 26, 2020

தொ.பரமசிவன் ஐயா அவர்களுக்கு பிரியா விடை !



தொ.பரமசிவன், நம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிடத் தகுந்த பண்பாட்டு, மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவர். பண்பாடு,சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அழிந்து வரும் பண்பாடுகளை காக்க வேண்டிய அவசியத்தை முன் வைத்தவர். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை எளிய மொழியில் புரியவைத்தவர்.

அவரது '#அறியப்படாததமிழகம்' மற்றும் #இந்துதேசியம்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் தற்போதைய கள நிலவரத்திற்கு ஏற்ற முக்கியமான நூலாக பார்க்கிறேன்.
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணத்தை, அறியப்படாத தமிழகம் மூலம் சுட்டிக் காட்டினார் என்றால்.... இந்து மதம் வாயிலாக தமிழர்கள் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்க அத்துமீறல்களுக்கு இந்து தேசியம் என்ற நூலின் வாயிலாக எதிர்க்குரல் எழுப்பினார்.
அவரது நான் இந்துவல்ல . நீங்கள்...? என்ற புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும். (இந்து தேசியம் என்ற புத்தகத்தில் இக் கட்டுரை இருக்கிறது)

இந்து மாயையில் பிதற்றிக் கொண்டு இருக்கும் தமிழர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவடைவார்கள்.
அய்யா தொ.பரமசிவன் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளும் தமிழர்களுக்கானது. அவர்களது சமூக விடுதலைக்கானது. அவரது திடீர் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அய்யா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் தலையாயக்கடமை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


செவ்வாய், மார்ச் 21, 2017

மறுதாம்பு புத்தகம் பேசுது விமர்சனம்





    னிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா.  


”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்- கவிதை நூல் வெளியீடு




                   ரண்டு நாளுக்கு முன்னர் வரை 'பாலைவன லாந்தர்' என்றால் யார் என்றே தெரியாது. அதுவும் நண்பர் வேல் கண்ணன் அவரது முக நூல் பக்கத்தில் கவிதை வெளியீடு பற்றி தெரிவித்திருந்தார். பாலைவன லாந்தர் என்பது ஒரு பதிப்பகத்தின் பெயர் என்றே நினைத்திருந்தேன். கவிதை புத்தக வெளியீட்டிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. பாலைவன லாந்தர் என்ற பெயருக்குப் பின் ஒரு பெண் கவி இருக்கிறார் என்று!. 'லீடிங் லைட்ஸ்' போல காத்திரமான ஒரு மெட்டாலிக் பெயரை சூடிக் கொள்ளவே ஒரு துணிச்சல் வேணும். அந்தத் துணிச்சல் கவிஞர் பாலைவன லாந்தருக்கு இருக்கிறது! .


சென்னை மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் குளிரூட்டபபட்ட அரங்கில் நேற்று மாலை பாலைவன லாந்தர் எழுதிய 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' கவிதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் புத்தகத்தை வெளியிட, ஓவியர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். கவிதை நூல் குறித்து இந்திரன், எஸ். சண்முகம், அமிர்தம் சூர்யா, வேல் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். உரை யூ டியூப்பில் காணக் கிடைக்கிறது.
புறம் மற்றும் அகச் சூழலில் காணும் எதுவும் கவிதை ஆகுமென்பதை இக் கவிதை தொகுப்பிலும் காண முடிகிறது. மிக சிரத்தையான வார்த்தை கோர்ப்புகளில் கவிதையெங்கும் இழையோடும் உக்கிரம், வெகுஜனத்தின் ஒரு குரலென நாம் மதிக்க வேண்டும். கொடி பிடிப்பவனுக்குள் இருக்கும் பாசாங்கற்ற முழக்கத்தினை பெண்ணிய குரலாக தனது கவிதைகளில் காட்சிப்படுத்துகிறார் கவிஞர். பெண்ணியத்தின் பொதுமை குற்றச்சாட்டுப் போல இங்கேயும் 'ஆண் குறி' ஒரு ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.

அவர்களிடம் மூன்று ஆயுதங்கள் இருந்தன
கத்தி 
மரக்கட்டை 
அவர்களது ஆண் குறி

இக் கவிதைவரிகள் ஏதோ ஒரு சம்பவத்தின் குறியீடு என்றாலும், 'அது' தொங்குவதாலையே ஆண் மிக எளிதாக எதையும் கடந்து விடுகிறான்.. அல்லது எதையும் செய்ய துணிகிறான் என்பதையே சம கால சூழல் நமக்குச் சுட்டுகிறது. போகட்டும்.... அதே நேரத்தில் தனது தந்தைக்கும் ஒரு கவிதை (என் அப்பனுக்கு ஒரு கனவு இருந்தது) எழுதி அதை சமன் செய்துவிடுகிறார் பா.லா., இப்படியான சமன்பாடுகளில்தான் உலகம் இன்றளவும், ஆண் பெண்ணுக்கான புரிதலில் அன்பு கொண்டு இயங்குகிறது என்றே நினைக்கிறேன். வேறொன்றிலிருந்து இன்னொன்றாக அல்லது பிரிதொன்றிலிருந்து வேறொன்றாக வெளி வந்திருக்கிறது 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' தொகுப்பு. பாலைவன லாந்தரின் முதல் கவிதைத் தொகுப்பு இது என்று; யாராவது சொன்னால்தான் தெரிகிறது!.

விழாவினை எழுத்தாளர் விஜய் மகேந்திரன் தொகுத்து வழங்கினார். இக் கவிதை தொகுப்பினை சால்ட் பதிப்பகம் வெளியீட்டு இருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில் கவிஞர் நரனின் மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள்!.
பக்கம் 112 
நூலின் விலை ரூ 100/-

-தோழன் மபா.

வியாழன், ஜூலை 16, 2015

தினமணியின் 'ஈகை பெருநாள் சிறப்பு மலர்'.



இந்த வருடம் ரமலானை முன்னிட்டு "ஈகை பெருநாள் மலரை வெளியீட்டு அசத்தி இருக்கிறது தினமணி நாளிதழ்.

பொதுவாக தீபாவளி பொங்கலுக்குதான் சிறப்பு மலர் வெளிவரும். ரமலான் மற்றும் கிருஸ்துமஸ் சிறப்பு மலர் எப்போதாவது அத்தி பூத்தாற்போல்தான் வெளிவரும். பத்திரிகைகளும் அதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் விட்டுவிடும்.

அதுவும் ஈகை பெருநாள் மலரென்றால் மார்க்கம் சார்ந்த கட்டுரைகளே அதிகம் இடம் பெற்று இருக்கும். மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் அளவிற்கு ஜனரஞ்சகமாக இல்லாமல் போய்விடுவது இத்தகைய மலர்களின் பொதுத்தன்மை. ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்துவமிக்க ஒரு ஈகை பெருநாள் சிறப்பு மலரை வெளியீட்டு பெருமை தேடிக் கொண்டுள்ளது தினமணி நாளிதழ்.

இத்தகைய பெருநாள் மலர்களை கலாச்சாரத்தின் காலத்தே பதிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும். பத்திரிகைகளே இப் பணியை செய்ய முடியும். அதை செய்திருக்கிறது தினமணி!. இம் மலருக்கென்று தனி வழிகாட்டுதல் குழு அமைத்து இம் மலரை தயாரித்துள்ளனர். மதம் சார்ந்த சென்ஸிட்டிவ் விஷயங்களை கையாலும் போது தனி கவனம் எடுத்துக் கொள்ளுவது எப்போதுமே நன்மைத்தரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையே முதன்மை கட்டுரையாக இம் மலரில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு உலக வரலாற்றில் முதலிடத்தில் முஹம்மது நபி, தமிழகத்தில் இஸ்லாமியர்கள், நபிவழியில் வெற்றி நிச்சயம், பேரா முனைவர் எம்.எச்,ஜவாஹிருல்லா எழுதிய விடுதலை போரின் முன்னோடிகள் முஸ்லீம் மார்க்க அறிஞர்கள், டாக்டர் கே.வி.,எஸ்,ஹபீப் முஹம்மத் எழுதிய சமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள், நோன்பு ஒரு கேடயம், பள்ளிவாசலும் தொழுகையின் அற்புதமும், கவனம் தரும் லைலத்துல் கத்ர் இரவு, யார் பயங்கரவாதிகள்?, பழ.கருப்பையா எழுதிய அழகியவற்றுளெல்லாம் அழகியது, முனைவர்  ஆர்.ராதிகா தேவி எழுதிய 'பெண்களுக்கான மார்க்கம் இஸ்லாம்', முனைவர் சொ.சேதுபதி எழுதிய பாரதியார் பேசிய இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, பக்கீர்கள் என்னும் இஸ்லாமியப் பாணர்கள் போன்ற கட்டுரைகளோடு இன்னும் பல கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய 'ஆழம் தெரியாக் கடல்', ஜே.எம் சாலி எழுதிய 'சம்மதம்', சிராஜூல் ஹசன் எழுதிய 'முத்தலாக்', எஸ்.பர்வீன் பானு எழுதிய 'முதல் பாடம்', மு.அ அபுல் அமீன் எழுதிய 'ஈமானில் சீமான்' போன்ற முத்தான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 'முனைவர் ஜெ.ஹாஜாகனி 'புரட்டிப் பாருங்கள் உங்களை புரட்டிவிடும்' என்ற மூன்று பக்க கவிதையை எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான 8 தர்காக்கள் பற்றிய கட்டுரைகள் இம் மலரில் இடம்பெற்றுள்ளன. தர்காக்கள் பற்றிய விமர்சனங்களை இக் கட்டுரைகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.

மலரெங்கும் மார்க்க துணுக்குகள் விரவிக் கிடக்கின்றன. வழுவழுத் தாளில் மாற்று மதத்தினரும் விரும்பி படிக்கும் வகையில் இம் மலரை தயாரித்துள்ளனர். இச் சிறப்பு மலர் பாரதியாரின் கவிதையை அட்டையில் தாங்கி வெளிவந்திருப்பது சிறப்பு!.

பக்கம் 160
விலை ரூ.50/-

புதன், ஏப்ரல் 08, 2015

குருபீடம் நோக்கி... வா மணிகண்டன்?



இணைய எழுத்தாளர் வா.மணிகண்டனின் 'லிண்ட்சே லோகன் w/o மாரியப்பன்' மற்றும் 'மசால் தோசை-38 ரூபாய்' ஆகிய இரண்டு நூலுக்கான விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் யாவரும்.காம் சார்பாக கடந்த ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. ஒரு அடிப்படை சம்சாரியின் ஞாயிற்றுக் கிழமை சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அரங்கு நிறைந்திருந்தது.

இப்பொழுதெல்லாம் புத்தக விமர்சனக் கூட்டங்களில் பேச வருபவர்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஏடாக் கூடாமா பேசி எதற்கு எழுத்தாளனை இம்சிக்க வேண்டும், என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாய் பாராட்டி, நாலு வார்த்தை பேசி இறங்கி விடுகின்றனர்.  இந்த கூட்டத்திலேயும் அதுதான் நடந்தது.

ஒரு மனிதனை மேடையில் வைத்துக் கொண்டு அவனை வாய்க்கு வந்தபடி புகழ்வது என்பது, அவனுக்கு அனஸ்தீஸிய கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது போன்றது.   அப்படி ஒரு அவஸ்தைக்கு ஆட்பட்டு நாற்காலியில் துவண்டுக் கிடக்கத்தான் முடிந்தது வா.மணிகண்டனால். வந்தவர்கள் எல்லாம் பாராட்டித் தள்ள முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று, இன்னும் வா.மணிகண்டனுக்கு கை கூடவில்லை போலும்?.

இந்த காலமான காலத்தில படிக்க நேரம் இருக்காது என்பதை மிக நன்றாக உணர்ந்து இருக்குகிறார் மணிகண்டன். 'பாஸ்ட் ஃபுட்' வகையை சார்ந்த இவரது எழுத்துகள், மிக எளிதாக ஒரு வாசகனை உள்ளிழுக்கும் சக்தி கொண்டது. பெரிய தரவுகளையோ, சரித்திர ஆதாரங்களையோ, மண்டயை குழுப்பும் வார்த்தை பம்மாத்துகளோ எதுவுமின்றி, 'இந்தா, இதை வாங்கி அந்தப் பக்கம் வை' என்பதுபோல் எளிமையாக கட்டுரை கம் கதை சொல்வதில் இருக்கிறது இவரது வெற்றி!.

அதே நேரத்தில் வா. மணிண்டன் எழுத்தை  விமர்சனம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?. சொல்லுங்க....?. 

நோயாளர்களை பற்றியோ, அல்லது படிக்க பணம் இல்லாமல் தவிப்பவர்களை பற்றியோ வா.மணிகண்டன் தனது 'நிசப்தம்' வலைத்தளத்தில் எழுதும் போது, அது பொது கவனத்திற்கு வந்துவிடுகிறது.  அதற்கு உதவி செய்ய நிறைய ஆதரவு கரங்கள் நீண்டு விடுகிறது.  அப்படி கிடைக்கப்பெறும் தொகையை சரியான முறையில் பயனாளர்களுக்கு கொண்டு செல்ல ஒரு அறக்கட்டளையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அதில் தற்போது 10 லட்சம் வரை சேர்ந்திருக்கிறது. வா.மணிகண்டனின் எழுத்து வீச்சிற்கு இந்த பத்து லட்சம் பதம்!.  20 நிமிடத்தில்  ஒரு பதிவை எழுதிவிடுகிறார் என்றால் பார்த்துக்  கொள்ளுங்களேன்!.

விழாவில் இயக்குனர் கவிதா பாரதி, கார்டூனிஸ்ட் பாலா, தம்பி சோழன் கூத்துப் பட்டறை, நாகேஸ்வரன்,சைதை புகழேந்தி, கிருஷ்ண பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். வா.மணிகண்டன் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளை ஜீவ.கரிகாலன் தொகுத்து வழங்கினார்.

மற்ற பிரபல எழுத்தாளர்கள் போன்று நீங்களும்  'குரு பீடத்தை' நோக்கி போகிறீர்களா...? என்றொரு முக்கியமான கேள்வியை விழாவிற்கு வந்த ஒருவர் திரும்ப திரும்ப கேட்டார்.  "நான் அப்படி எல்லாம் போகலைங்க. அதிலெல்லாம் விருப்பமும் இல்லைங்க. நான் எழுதுவது 'நிசப்தம்' வாசகர்களுக்காகத்தான்" என்றார் மீண்டும் மீண்டும். ஏதோ "விதை விதைச்சேங்க.....வெள்ளாமை நல்லா வந்தது!" என்று எளிமையான விவசாயி சொல்வது போல் இருந்தது அவரது பேச்சு!.

அதிகம் கவனிக்கப் பெறும் எழுத்தாளனுக்கு 'குருபீடம்' என்பது தவிற்கமுடியாத ஒன்று. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தன்னிச்சையாக அது நிகழ்ந்துவிடும். பாடாவதி சினிமா நடிகனுக்கு கூட அவனது ரசிகர்கள் குருபீடத்தை அமைத்து விடுகிறார்கள். எழுத்தாளனுக்கு அமைத்தால் என்ன பெரிய குடியா மூழ்கிவிடப் போகிறது?. தன்னியில்பாக நிகழ்ந்துவிடும் குருபீடத்தால் எழுத்தாளன் தன்நிலை மறந்தால், அது 'பலிபீடமாக' மாறும் என்பதையும் எழுத்தாளன் உணர்ந்திருக்க வேண்டும்.





வியாழன், மார்ச் 26, 2015

வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' வெளியீடு!



இடமிருந்து : பதிப்பாளர் வர்த்தமானன், வேலுர் கம்பன் கழக செயலாளர் இலக்குமிபதி, நூலின் உரையாசிரியர் எம்.கோவிந்தராஜன், பதிப்பக நிறுவனர் ஜெ.ஸ்ரீசந்திரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர்,பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரகந்தின் தலைவர் இல.கணேசன், கலைமகள் இதழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமனியன் & பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் உள்ளனர்.


             டந்த ஞாயிறு அன்று வர்த்தமானன் பதிப்பகத்தின் 'துளசி இராமாயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது!. 

இரண்டு நாளுக்கு முன்னரே வர்த்தமானன் சார் கூப்பிட்டு, நீங்கள் அவசியம் விழாவிற்கு வரவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். ஞாயிறுகளில் காலை 8 மணி என்பது எத்தனை அற்புதமானது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!. சென்னை போன்ற பெருநகர வீடுகளில் விடியாத(?) அந்த காலை 8 மணி என்பது, மற்ற நாட்களை போல் இல்லாமல், எந்த வித பரப்பரப்பும்மின்றி சோம்பிக் கிடக்கும். அந்த சோம்பலை உதறி தள்ளி வெளிவருவதே பெரும்பாடுதான். அந்தகாரத்தில் அலங்கோலமாகிப்போன பொழுதைப் போலவே ஞாயிறுகளின் காலைப் பொழுது இருப்பதாக எனக்குப்படும்.

விழா தொடங்குவதோ காலை 9 மணி. "பிரேக்பாஸ்ட் இருக்கு மகேஷ்" என்று வர்த்தமானன் சார் சொல்லிவிட்டார். சரி, அங்கு போய் காலை உணவை முடித்துக் கொள்ளலாம் என்று கிளம்பப் போகும்போது, அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அதற்கு பதிலளித்துக் கிளம்பவே அரைமணி நேரமாகிவிட்டது. அடித்துப்பிடித்து விழாவிற்கு வந்து சேர்வதற்கும், விழா தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. பசியை மறந்து அரங்கில் அமர்ந்து விட்டேன். விழா முடியும் போது மதியம் மணி ஒன்று!. 'செவிக்கு உணவில்லாத போதுதானே.. வயிற்றுக்கு  ஈயப்படும். இங்குதான் செவிக்கு உணவு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்புறம் எதற்கு வயிற்றுக்கு?' அதனால் பசிக்கவேயில்லை போலும்?!. 

துளசி இராமாயணம் புத்தகத்தை பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியீட, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொண்டார். காலை 9 மணிக்கு விழா அரங்கு நிறைந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இதையேதான் இல.கணேசனும் தனது பேச்சில் தெரிவித்தார். அவரது பேச்சை அப்போதுதான் முதன் முதலாக கேட்கிறேன். சும்மா சொல்லக் கூடாது பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவர் என்பதால் இலக்கியத்திலும் இராமாயணத்திலும் கொஞ்சம் விஸ்தாரமாகவே பேசினார். அதிலும் இராமாயணத்தை பற்றி கூறும் போது 'முடி'யை வைத்து அவர் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது.

வால்மீகி இராமாயணம் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் சாமான்ய மக்களால் அதைப் படித்து புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அயோத்தி வாழ் மக்களின் அடிப்படை மொழியான 'அவதி' மொழியில் வெளிவந்து, சாமான்ய மக்களின் அறிவுப் பசியையும் ஆன்மீக பசியையும் ஒரு சேர போக்கிய துளசி இராமாயணம்தான் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. துளசிதாஸர் அருளிய 'இராம சரித்திர மனஸ்' என்ற இராமாயணமே பின்னர் எழுதியவரின் பெயரோடு 'துளசி இராமாயணம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத் துளசி இராமாயணத்தை தமிழில் மூன்று தொகுதிகளில் வெளியீட்டுள்ளது வர்த்தமானன் பதிப்பகம் இம் மொழிபெயர்ப்பினை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். முனைவர் எம்.கோவிந்தராஜன்.

இந்த இடத்தில் நூல் ஆசிரியர் பற்றி கூறியே ஆகவேண்டும். அடிப்படையில் இந்தி ஆசிரியரான முனைவர் எம்.கோவிந்தராஜன் தமிழில் அசாத்திய திறமை படைத்தவர். இவ் விழாவில் தனது ஏற்புரையையும் நன்றியுரையையும் செய்யுள் பாணி கவிதை நடையில் சிறு புத்தகமாக அச்சிட்டு வழங்கி இருந்தார்!. அனைத்தும் 'ஏ' கிளாஸ் ரகம்!. 

அறிமுக உரையாற்றிய வர்த்தமானன் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ஸ்ரீ சந்திரன், கம்ப இராமாயணத்திற்கும் துளசி இராமாயணத்திற்கும் உள்ள   வித்தியாசத்தை மிக அழகாக எடுத்துரைத்தார். கம்பரின் இராமாயணத்தில்..... தனது அண்ணான இராவணனுக்காக பரிந்து வரும் கும்பகர்ணன், போரின் இறுதியில் தலை வெட்டப்பட்டு ஆழ் கடலில் விழுவது போல் எழுதி இருப்பார். துளசி இராமயணத்தில் கும்பகர்ணனின் தலை வெட்டப்பட்டு அத்தலை இராவணின் மடியில் விழுவது போல் எழுதப்பட்டு இருக்கும். இப்படி இரு கதைகளிலும் ஆங்காங்கே காணப்படும்  சிறு சிறு வித்தியாசங்களை அழகாக பட்டியலிட்டார். 

இப் பதிப்பகத்தின் வெற்றிக்கு வர்த்தமானன் அவர்களின் திட்டமிடலும், தொலை நோக்கு பார்வையுமே காரணம். புத்தகங்கள் விற்பனையில் மற்ற பதிப்பகங்களை காட்டிலும் வேறுபட்ட வியாபார உத்தியை கொண்டது வர்த்தமானன் பதிப்பகம். வர்த்தமானன் பதிப்பக நூல்களை நீங்கள் இவர்களிடம் மட்டுமே வாங்க முடியும். தங்களது தயாரிப்புகளை வாசகர்களிடம் நேரிடையாக கொண்டு சேர்க்கிறார்கள். விளம்பரங்கள் மூலம் தங்களது வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ள வர்த்தமானன் பதிப்பகத்திற்கு இது ஐம்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது!.

சனி, ஜனவரி 17, 2015

புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகங்கள்!.

38வது சென்னை புத்தகக் காட்சி இதோ முடிவுறும் தருவாயில் இருக்கிறது. மக்கள் சாரி சாரியாக புத்தகங்களை சுமந்து வெளியேறுகிறார்கள்!. சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்!. உங்களுக்கு(ம்) பயன்படும் என்றே இந்த பட்டியலைத் தருகிறேன்.

இனி....ஓவர் டூ புத்தக பட்டியல்.....!

மாவோ வாழ்க்கை வரலாறு - ஃப்லிப் ஷார்ட். விடியல் பதிப்பகம்.  விலை ரூ.350/- .

பொதுவுடமை லட்சியத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கை வரலாற்று நூல். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களைப் பற்றி நிறைய நூல்கள் வந்துள்ளன. மாவோவைப் பற்றி அதிகம் தமிழில் வந்ததில்லை. அந்த இடத்தை நிரப்ப இன் நூல் வெளிவந்துள்ளது.
****
ஒரு பனங்காட்டு நரி-மு.சுயம்புலிங்கம். உயிர்மை பதிப்பகம். விலை ரூ.90
 
வெள்ளாந்தியா இருக்கிற மனுசன், வெள்ளாந்தியா ஒரு கத சொன்னா எப்படி இருக்கும்?. அப்படி இருக்கு இந்த கத!.
***

தமிழ் மண்ணின் சாமிகள்-மணா.துடியா இருக்குற நம்ம ஊரு சாமிங்கள, தேடி போயி எழுதியிருக்கிறாரு மணா. தமிழன் சாமிக்கு இப்பதான் வரம் கெடைச்சிருக்கு?.
உயிர்மை பதிப்பகம். விலை ரூ.40.
***

கரிச்சான் குஞ்சு- கே.ஜி. சேஷாத்ரி.
ஆடுதுறை ஸ்ரீ குமரகுருபாரர் சுவாமிகள் மேல் நிலைப் பள்ளியில் படித்தபோது, பள்ளி ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா 'கரிச்சான் குஞ்சு' வந்திருந்தார். மேல சட்டை போடாம பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வந்தார். அவரது பெயர்  கொஞ்சம் வினோதமக இருந்ததால ஆளை போலவே அந்த பெயரும் என் மனசுல ஒட்டிகிடுச்சி.  அவரது பெயருக்காவே அவரை எக்கி நின்று வேடிக்கை பார்த்தோம்.
சாகித்திய அகாதமி. விலை ரூ.25.
****

தமிழகப் பழங்குடிகள். பக்தவத்சல பாரதி.மானிடவியலில் தொல்குடிச் சமூகம் பற்றிய ஆய்வு முக்கியமானது. இந்த நூல் ஆதிசமூக நிலையிலிருந்து இன்றைய நவீன காலம் வரை பதிவு செய்திருக்கிறது.
அடையாளம் பதிப்பகம். ரூ.170
***

தியாகசீலர் கக்கன், முனைவர் இளைசை சுந்தரம்.காமராஜரைப் பற்றி நினைவு கூறும் போது, எப்போதாவது தியாகி கக்கனைப் பற்றியும் கூறுவார்கள். கக்கனைப் பற்றிய அறிமுகம், நம்மிடம் அம்மட்டுமே. அந்த குறையை போக்க வெளிவந்திருக்கிறது இன் நூல். கக்கனை பற்றிய மிக உயர்வான நூல். மதுரா பாலனின் பெரும் முயற்சியால் இன் நூல் வெளிவந்திருக்கிறது. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்.
மதுரா வெளியீடு. விலை 150.
 ***

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம். தமிழில் ஞானி.
காவியின் பயங்கரம் பற்றிய சிறு கையேடு, ஞானியின் ஞானபானுவில் வாங்கியது.
 ***
அயோக்கியர்களும் முட்டாள்களும்- ஞானி.
சமூகத்தில் இருக்கும் அயோக்கியர்களையும் முட்டாள்களையும் பற்றிய ரசனையான அதே சமயத்தில் ரகளையான புத்தகம்.
அன்னம் வெளியீடு. விலை ரூ70.
***

கவிதையும் கத்திரிக்காயும்-விக்கிரமாதித்யன். 
நக்கீரன் வெளியீடு விலை ரூ.90

கவிதைக்கும் கத்திரிக்காயுக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள்?. கவிதையோடு எதையும் லிங்க் செய்துவிடலாம்.
சாம்பிளுக்கு ஒன்று!.

பொருநைவண்டல் பூராவும்
புதுமைபித்தன்
காவேரி தீரம்
கு.ப,ரா
அந்த கொங்குச்சீமைக்கு
ஆர்.சண்முகசுந்தரம்
கரிசலுக்கொரு
கி.ராஜநாராயணன்
விக்ரமாதித்யனை
வகைப்படுத்து பார்ப்போம்.
***
.
நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா.
அடையாளம் பதிப்பகம். ரூ.120

ஓராண்டுக்கு முன்பு எக்ஸ்பிரஸ் குழுமம் சென்னையில் நடத்திய கல்வி தொடர்பான ஒரு அமர்வில் காஞ்சா அய்லய்யா உறையாற்றினர். செக்குலரிசம் பற்றிய அவரது பேச்சு மிகுந்த வரவேற்பை பெற்றது. ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறை தலைவர். 'Why i am not a Hindu?' என்று ஆங்கிலத்தில் எழுதி பிரசித்துபெற்ற இன்னூல் தற்போது தமிழில் வெளிவந்துள்ளது. சாதிய பாகுபாடு மிகுந்த ஆந்திராவின் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தோன்றியவர். விளிம்பு நிலை மனிதர்களுக்கான இவரது ஆங்கில கட்டுரைகள் எப்போதும் கவனிக்கக்கூடியவை. 'நலுப்பு' என்ற தலித் பகுஜன் இதழின் நிறுவனர். கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
****

மசால் தோசை 38 ரூபாய். வா.மணிகண்டன். யாவரும்.காம். விலை ரூ.110/-
இணைய எழுத்தாளரான வா,மணிகண்டன் வளரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள். தற்போதைய இணைய உலகில் பெரும் பட்டாளத்தை வாசகராக கொண்டவர்.

***
மெனிஞ்சியோமா- கணேச குமரன். யாவரும்.காம். விலை ரூ.80/-
யாவரும்.காமின் புதிய வெளியீடு என்பதால் வாங்கினேன். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முனைப்போடு செயல்படுகின்றது யாவரும்.காம். புதிய சிந்தனையோடு களம் இறங்கியிருக்கிறார் எழுத்தாளர். பாராட்டுவோம்!.
***
கார்காத்தார் இன வரலாறு. சுப்பிரமணியன் பிள்ளை. விலை ரூ.175/- சந்தியா பதிப்பகம்.
அன்றைய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தின் அதிகாரம் மிக்க ஒரு சமூகம் கார்காத்தார். நகரத்தார் பற்றி ஏகத்திற்கும் பதிவுகள் இருக்கிறது, அனால். கார்காத்தார் பற்றி எந்த பதிவும் இது வரையில் இல்லை. அக் குறையை போக்க வந்திருக்கிறது இப் புத்தகம். தமிழனி வரலாற்றை அறிந்துக் கொள்ள சமூகம் சார்ந்த புத்தகங்கள் வாசிக்கப்படவேண்டிய ஒன்று!.
***
பூனை எழுதிய அறை -கல்யாண்ஜி. விலை ரூ.50. சந்தியா பதிப்பகம்

கல்யாண்ஜியின் கவிதைகள் எப்போதும் கவனத்திற்கு உரியவை. பசாங்கற்ற ஒரு மனிதன்  நெரிசல் மிகுந்த சாலையில் சட்டதிட்டதிற்கு உட்பட்டு நடைபாதையில் நடப்பது போல் அமைந்து விடுகிறது அவரது கவிதைகள்!.
***

ஆதி திராவிடர்கள் மாநாடுகள்-தொகுப்பாசிரியர் வாலாசா வல்லவன். தமிழ் குடிஅரசுப் பதிப்பகம். விலை ரூ.175.

ஆதி திராவிடர்கள் மாநாடுகள் என்ற இன் நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகள் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பூர்வகுடிகளே இவ் உலகில் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகமாக அமைந்துவிடுவது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையாகும். அந்த பிழையை நீக்க ஆதி திராவிடர்களெடுத்த முயற்சிகள் அக் கால நடையில் பதிவு செய்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று!.
***

பொசல்-கவிதா சொர்ணவல்லி. நிலமிசை பதிப்பகம். விலை.ரூ.80/-.
மண் மனம் வீசும் கதை தொகுப்பு. பொசல் என்ற வார்த்தைக்காகவே இப் புத்தகத்தை எடுத்தேன். அது சரி.....பொசல் என்றால் என்ன.....?
***

பூமணி சிறுகதைகள்- பூமணி. நற்றினை பதிப்பகம். விலை.ரூ.400/-
சாகித்திய அகாடமி விருதுப்பெற்ற, எழுபதுகளில் ஆற்றல்மிக்க சிறுகதைக் எழுத்தாளர்களில் ஒருவரான பூமணியின் சிறுகதை தொகுப்பு!. பூமணி தனது சிறுகதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி.
***

தாத்தா பாட்டி சொன்ன கதைகள்-கழனியூரான். பாரதிபுத்தகலாயம். விலை ரூ.60.
இந்த காலத்தில் எந்த தாத்தாப் பாட்டியும் கதை சொல்வதில்லை. யாரும் தாத்தாவாக மாறுவதுமில்லை. பாட்டிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.  புத்தகத்தில் படித்தே குழந்தைகள் புரிந்துக் கொள்ளவேண்டு. என் மகள் தேர்ந்தெடுத்தப் புத்தகம்.
***

திங்கள், பிப்ரவரி 10, 2014

உங்கள் வீட்டு வைத்தியர்.




                  மெத்த படித்த வைத்தியர் ஒருவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொண்டு, சதாசர்வக் காலமும் உடலை பேணுவது என்பது நீங்கள் பூர்வ புண்ணியத்தில் பெரும் பாக்கியம் பெற்ற மகா ஜனமாகத்தான் இருக்க முடியும்!. அதுவும் அவர் தமிழகத்தில் புகழ் பெற்ற மருத்துவர் என்றால் கேட்கவே வேண்டாம்.  நீங்கள் பெரும் கோடீஸ்வரராகத்தான் இருக்க முடியும்.

எந்த உபாதையும் இல்லாமல் மாடியிருந்து குதிக்கலாம், லட்டு லட்டாய் ஜிலேபியை முழுங்கலாம், உங்கள் காலைத் தூக்கி பின் பக்கமாய் கழுத்தில் போட்டுக் கொண்டு உஞ்சலாடலாம், திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு உப்புசத்திற்கும் பொருமலுக்கும் ஏழு வித்தியசத்தை எண்ணிக் கூறலாம். வைத்தியர் இருக்க கடவுள் எதுக்குன்னு கூட... நீங்கள் எகத்தாளம் போடலாம். இவை எல்லாவற்றிருக்கும்  டாக்டர் தி.சே.செள.ராஜன் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற நூல் உங்களிடம் இருக்கவேண்டும்!.

2012ம் ஆண்டு வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற டாக்டர் தி.சே.செள.ராஜனின் 'நினைவு அலைகளைத்' தொடர்ந்து, டாக்டர் தி.சே.செள.ராஜனின் எழுதிய 'வீட்டு வைத்தியர்' என்ற அடுத்த  படைப்பினை வெளியீட்டுள்ளது சந்தியா பதிப்பகம். இன் நூலின் முதல் படைப்பு 1945ல் வெளி வந்திருக்கிறது. முதல் பதிப்பில் ராஜாஜியின்  முன்னுரையோடு இன் நூல் வெளிவந்திருக்கிறது. கிட்டதட்ட 69 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறார் இந்த வீட்டு வைத்தியர்'.

உதாரணாமாக.... இருதயம் பற்றிக் கூறும் போது, இருதயம் குவிந்த வடிவமுள்ளது. அதன் நுனி இடது மார்புக் கூட்டுகுச் சமீபத்தில் இருக்கிறது. ஒவ்வொரு தடவை இருதயம் துடிக்கும்போதும் அதன் நுனி, மார்புக்கூட்டில் வந்து முட்டுகிறது. அதற்கு இருதய முட்டுதல் (Heart Impulse)  என்று பெயர்.  இடது புறம் ஐந்தாவது ஆறாவது விலா எலும்புகளுக்கு மத்தியில் இது காணப்படும். காதைவைத்து பார்த்தாலும் அல்லது இருதய சோதினியை (Stethoscope) வைத்துப் பாத்தாலும் இரண்டு சத்தமும் கேட்கும்.  இந்த சத்தம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நடுவில் சற்று ஓய்வுடன் இருக்கும். முதலில் கேட்கும் நீண்ட சத்தம் ஏற்றறைச் சுருக்கத்தினால் ஏற்படுகிறது. இரண்டாவது சத்தம் முக்கூற்று ஒரு வழி அடைப்பு முட்டி கொள்ளவதனால் உண்டாகிறது,  என்பது போன்ற மருத்துவ நுணுக்கங்களை நாம் புரிந்துக் கொள்ளும் வகையில் தந்திருக்கிறார் டாக்டர் ராஜன்.

நானும் டாக்டர் ராஜனும் திருச்சிராப்பள்ளிச் சிறைச்சாலையில் ஒரு வருடம் கூடவே இருக்குந்தோம். அப்போது மிகச் சிரமப்பட்டு இன் நூலை எழுதினார் என்று தனது முன்னுரையில் கூறுகிறார் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார். அந்தக் காலத்து நடையில் எந்த உருத்தலும் இல்லாமல் இந்த காலத்தில் படிப்பது என்பதே சிறந்ததொரு தருணம்தான்.

'எதைத் தின்றால் பித்தம் தெளியும்'   என்ற சராசரி மருத்துவ ஆலோசனையிலிருந்து ஒரு மாறுபட்ட கோணத்தில் எல்லோருக்கும் புரியும்படி வெளிவந்திருக்கிறது. அடிப்படை மருத்துவம், சுகாதாரம், வீடும் அதன் சுற்றுபுரம், பட்டினி என்று 25 அத்தியாங்களில் 563 பக்கங்களில் நம்மை காக்கும் ஒரு கடவுளாக அவதாரமெடுத்து வந்திருக்கிறது இன் நூல். வெறும் மருத்துவ குறிப்புகள் என்று ஜல்லி அடிக்கும் மனோ நிலையிருந்து விலகி, நம் அருகில் அமர்ந்து...இன்னும் ஸ்டூலை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு... நமது நோய் பற்றி விளக்கம் கூறும் கருணை மிகுந்த மருத்துவரை போன்று நம்முடன் உரையாடுகின்றது  இன் நூல்.

-தோழன் மபா.

(11/1/2014 அன்று தினமணி 'சென்னை புத்தகக் காட்சி சிறப்பு மலரில்' நான் எழுதிய புத்தக விமர்சனம்.)

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

'இறுதி சொற்பொழிவு'. - ரேன்டி பாஷ்.


"நாளையே நாம் இருக்குமிடத்தில்
 புல் முளைக்கப் போகிறது 
என்றால், 
நமது பெயரைச் சொல்லும்படியாக
 எதை விட்டுவிட்டுச் செல்ல 
                                                           நாம் ஆசைப்படுவோம்?"
 


      இறுதி சொற்பொழிவு என்ற தலைப்பில் பல பேராசிரியர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளனர். தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஓர் உரை நிகழ்த்த ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், எதைப் பற்றிப் பேச அவர்கள் விரும்புவார்கள் என்று கற்பனை செய்து, அதைப் பற்றிப் பேசுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். இதுதான் கடைசி வாய்ப்பு என்று அறிந்திருந்தால், உலகிற்கு நாம் எப்படிப்பட்ட ஞானத்தை விட்டுச் செல்ல விரும்புவோம்?.   நாளையே நாம் இருக்குமிடத்தில் புல் முளைக்கப் போகிறது என்றால், நமது பெயரைச் சொல்லும்படியாக எதை விட்டுவிட்டுச் செல்ல நாம் ஆசைப்படுவோம்?.

இது போன்ற 'இறுதி சொற்பொழிவு' ஒன்றை வழங்குமாறு கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி பேராசிரியர் ரேன்டி பாஷூக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது தனது கடைசி சொற்பொழிவு என்று கற்பனை செய்யவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஏனெனில், குணப்படுத்த முடியாத புற்று நோய் அவருக்கு இருந்ததை அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அவர் கொடுத்த அந்த சொற்பொழிவு மரணத்தைப் பற்றி இருக்கவில்லை. குழந்தைபருவக் கனவுகளை உண்மையிலேயே அடைவதை பற்றியும், வாழ்வின் ஒவ்வோரு கணத்தையும் எவ்வாறு குதூகலமாகக் கழிப்பது என்பதைப் பற்றியும் மட்டுமே அந்த உரை அமைந்திருந்தது.

போற்றுதலுக்குரிய நூல் இது வென்று  முதல் 10 பக்கங்களிலேயே புரிந்துவிட்டது.  இறுதி தேதி தெரிந்தபின்  தனக்குப் பிறகான ஒரு உலகத்தை ரேன்டிபாஷ் தனது மனைவி குழந்தைகளுக்காக  தனது இறுதி சொற்பொழிவில் படைக்கிறார்.  அந்த 'இறுதி சொற்பொழிவின் விரிவாக்காம்தான் இந்த நூல்.

இதுவரை 50 லட்சம் பிரதிகளுக்கு மேல் இப்புத்தகம் விற்பனையாகியுள்ளது.    'The Last Lecture'  என்ற ஆங்கில புத்தகத்தை தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழி பெயர்த்துள்ளார்.

 Manjul Publishing House Pvt ltd., New Delhi என்ற நிறுவனம்தான் இன் நூலை தயாரித்துள்ளது. ஆங்கில புத்தகத்தை மிஞ்சும் அளவிற்கு இதன் தயாரிப்பு இருக்கிறது.  தமிழுக்கு நிச்சயம் புதுவரவு  இந்த மஞ்சூள் பப்ளிஷிங் ஹவுஸ்.  இதை நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த அளவிற்கு ஒரு நேர்த்தி.  உலக அளவில் பேசப்பட்ட பல ஆங்கில நூல்கள் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.


மேலும் விரிவான விமர்சனம் பிரிதொரு நாளில்.

Rs.199/-
Manjul Publishing House Pvt ltd.,
New Delhi.
www.manjulindia.com

கொசுறு...
ஆலன் மற்றும் பார்பரா பீஸ் எழுதிய 'அலுவலகத்தில் உடல் மொழி'  என்ற புத்தகத்தை கடந்த வெள்ளி அன்று 'ஹிக்கின்போத்தம்ஸில் வாங்க நேர்ந்தது. இதுவும் மஞ்சூள் தயாரிப்புதான்.  முன்பெல்லாம் ஆங்கில புத்தங்களின் செய் நேர்த்தியைக் கண்டு நாம் வாய் பிளந்து நிற்போம். அதற்கு இனி வாய்ப்பே இருக்காது போலும். அந்தளவிற்கு மஞ்சூள் தயாரிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.  சில விஷயங்கள் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் புரியும்!   இப் புத்தகத்தை பற்றிய விமர்சனம் பிரிதொரு பதிவில்.

ஞாயிறு, ஜூலை 28, 2013

'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'. Book Review


'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்'.
தொகுப்பு: கோபிநாத் மொகந்தி
தமிழாக்கம்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்


பக்கம் : 208
விலை: ரூ.125/-
வெளியீடு: சாகித்திய அகாதெமி
'இரவீந்திர பவன்'
35, பெரோஸ்ஷா சாலை,
புதுதில்லி-110001.

        
   காடுகள் விலங்கினத்திற்கு மட்டும் சொந்தமில்லை. மனித குலத்திற்கும் சொந்தமானது. அங்கு மனிதர்களும் வாழ்கிறார்கள். ஒளிக்கதிர் ஊடுறுவும் காடுகளின் நிழல்களாக மனிதர்கள் இருக்கின்றனர். ஒற்றையடிப் பாதைகளின் ஊடே சரிவுகளில் முளைத்திருக்கும் குடில்களில் மலைக் பழங்குடிகளின்   ஜீவ மரண போராட்டங்கள், நாட்டுபுறத்து பெண்களின் சுய கொளரவம், சுதந்திரதிற்கு பிறகான கிராமப்புர வாழ்வியலில் வீசிய அரசியல் மாற்றங்கள் என்று 13 சிறுகதைகளை கொண்டது இத் தொகுப்பு.  ஒரிசாவில் கோராபுட் பகுதியில் மலை பழங்குடிகள்  வசிக்கும் காடுகளே இத் தொகுப்பின் கதைகலன்.


எறும்பு என்ற சிறுகதையில்  ஒரு அதிகாரி அரிசி கடத்தலை முற்றிலுமாய்  தடுக்கும் பொருட்டு மலைக் கிராமத்தில் பல நாட்கள் நடந்து அந்த சந்தைக்கு வருகிறான். துணைக்கு வினு என்ற உதவியாளனும், கூட நாலைந்து  மலைவாசி கோந்துகளும் வருகின்றனர்.  இத்தகைய நடவடிக்கை தனது எதிர்காலத்திற்கும் புரமோஷனுக்கும் பயன்படும் என்று நிலையில் மிகுந்த முனைப்புடன் செயல் ஆற்றத் துடிக்கிறான்.   வழி நெடுக  மலைசாதி மக்களின் வாழ்வியல் தடங்களை ஊடுறிச் செல்லும் அவனது கண்கள், அந்த பஞ்சடைந்த கண்களை கடந்து செல்ல முடியாமல் தவிக்கிறது. இலையில் அந்த வெண்மையான அரிசி சோற்றைத் தவிர வேரொன்றுமில்லை என்றான போது ஒரு அதிகாரியின் மன நிலையிலிருந்து விலகி  மனிதனாக தனியே நடக்கத்  துவங்குகின்றான்.


'உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்' எனும் இக்கதை தொகுப்பு The Bed of Arrows and other Stories என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். கோபிநாத் மொகந்தியால்  ஒரிய மொழியில் எழுதப்பட்ட இச்சிறுகதைத் தொகுப்பு, சீத்தாகந்த் மகாபத்ராவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து  ஆனைவாரி ஆனந்தன் அவர்களின் இனிய மொழி நடையில் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்துள்ளது. நாம் அதிகம் அறியப்படாத  ஒடிஷாவிலிருந்து இக் கதை தொகுப்பு வந்திருப்பது, அந்த மண்ணையும்  அந்த மனிதர்களையும் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்துகிறது.

-தோழன் மபா.
() () () () () () ()


கடந்த திங்களன்று தினமணி நூல் அரங்கத்தில் நான் எழுதிய விமர்சனத்தின் எடிட் செய்யாத பகுதி.

செவ்வாய், மே 14, 2013

ஏமாறும் கலை (புத்தக விமர்சனம்)


நூலின் பெயர்      : ஏமாறும் கலை 
எழுத்தாளர்            : யுவன் சந்திரசேகர் 
பக்கம்                       : 240
வெளியீடு               : காலச்சுவடு 
                                      669 கே.பி.சாலை, 
                                      நாகர்கோவில், 629001.
விலை                     : ரூ.190/-


நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா 'பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறு கதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள்.  கதை கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளை தந்து நீங்கள் கொடுத்த காசுக்கு மேலேயே உங்களுக்கு வாசிப்பனுவம் கிடைக்கிறது. 

சிறுகதை தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது.  அதனதன்  பிணைப்பை  மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர். 

 
 உதாரணமாக ஒரு கதை:   வங்கியில்தொடர்ந்து  பணம் கட்டவரும் பெண்மனி, தனது கணவருக்கு இரண்டு காலும் முடியாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன், என்று கேஷியரிடம்  சொல்லி  கீயுவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும்    பரிதாபப்பட்டு பர்மிஷன் தந்துவிடுகிறார். 
 
அப்படி இருக்க... ஒரு திருமண விருந்தில் அந்த பெண்மனியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.  அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர்
"சை...இந்த அம்மாள்  நம்மள இப்படி ஏமாத்திட்டாளே " எற்று குமைந்து போகிறார்.   நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்" என்று நினைத்துக் கொள்கிறார்.

இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்துக் கொள்ள, அவரோ ....'அந்த பெண்மனியிடம் எதுவும் கேட்காதிர்கள், அவர்கள் வந்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பன்னுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க'. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்கு தெரியாதே? இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...?  என்கிறார். 

 'ஏமாறும் கலை'  தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம்?!.

 தினமணியில் நான் எழுதிய  புத்தக விமர்சனம். 13 மே 2013.  


 

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...