சனி, மார்ச் 20, 2010

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?


மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இதழியல் படித்த போது, கூட படித்த ஒரு நண்பரின் பெயர் சிட்டுக்குருவி (நாங்கள் வைத்த செல்லப் பெயர்). மனுசன் மகா சுறுசுறுப்பு அதனாலயே அந்த பெயர வச்சோம். திண்டுக்கல்லிலிருந்து வருவார். கூடவே தலைப்பாகட்டி பிரியாணியும் வரும். (ஹூம்... அதெல்லாம் ஒரு காலம்!)

சரி, இந்த பதிவுக்கு அவர் ஒரு 'லீடு' மட்டும்தான். விஷயத்திற்கு வருவோம்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

நவீன மயமாக்கலில் அழிந்து வரும் உயிரினங்களில் 'சிட்டுக்குருவி'யும் ஒன்று. சிட்டுக்குருவிகளை நாம், நமது வாழ்வில் சந்தோஷம் மற்றும் சுதந்திரத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கின்றோம்.

அழியும் குருவிகள்.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்று சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நன்பனான சிட்டுக் குருவி சங்க இலக்கியங்களில் பாடப் பெற்ற உயிரினம் ஆகும். பாரதியார் தனது கவிதைகளில் சிட்டுக் குருவியின் பெருமைகளை பாட மறக்கவில்லை.

காகங்களை போல மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அறிவுத் திறன் கொண்டது சிட்டுக்குருவிகள். சிதறிய தானியங்களை தலையை சாய்த்து சாய்த்து அது தின்னும் அழகே அழகு!.

அழிந்து வரும் சிறு உயிரினங்களில் சிட்டுக் குருவி மட்டுமல்லாமல் பல்வேறு குருவி இனங்களும் அழியும் தருவாயில் இருக்கிறது.

அதுவும் அறுவடை காலம் என்றால் குருவிகளுக்கு கொண்டாட்டம்தான். எங்கள் ஊரில் வயல் வரப்புகள் ஊடே இரயில் பாதை நீண்டு இருக்கும். இரு புறமும் தந்தி மரங்கள், இரயில் பாதையை தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கும். தந்திக் கம்பிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி,கருவாட்டுவாலி, மீன் கொத்தி, நானத்தான் குருவி (மைனா), அக்கா குருவி, பச்சைக் கிளி, என்று ரகத்திற்கு ஒன்றாய் குருவிகள் வரிசை கட்டி அமர்ந்து இருக்கும்.

வயலில் ஆட்கள் நெற்கதிர்களை அறுக்க அறுக்க, அதிலிருந்து பூச்சிகள், வெட்டுக்கிளி, அந்துப் பூச்சி, தட்டான், என்று வித விதமான பூச்சிகள் பறக்கத்தொடங்கும். வரிசை கட்டி காத்திருக்கும் குருவிகள் பறந்து பறந்து பூச்சிகளை வேட்டையாடும். பிறகு தந்தி கம்பங்களில் அமர்ந்து கொள்ளும்.
அத்தகைய கவின் மிகு காட்சிகள் ஆயிரம் இலக்கியத்திற்கு சமம்!.

சில துணிச்சலான சிட்டுக்குருவிகள் மட்டும் ஆட்கள் நெற் கதிர்களை அறுத்து போடும் இடத்திற்கு அருகிலேயே நின்றுக் கொண்டு பூச்சிகளை பிடிக்கும்.

அரி காடை (அறுத்து போட்ட அரிகளில் அமர்ந்து இருக்கும் அதனாலயே அந்த பெயர்), கவுதாரி, கானாங் கோழி போன்ற பறக்க இயலா கோழியினங்கள் அறுவடை நடைபெறும் வயல்களில் மனிதர்களிடமிருந்து கூப்பிடு (ம்) தூரத்தில் இருந்துக் கொண்டு புச்சிகளை பிடிக்கும். இத்தகைய அரிய குருவியினங்கள் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது.

மொபைல் போன்களால் ஆபத்து.

களங்கள், வீட்டு முற்றம், மளிகை கடைகள், தானியத் தோட்டங்கள், உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் பார வண்டிகள், தானியங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், வீட்டின் கூரை என்று மனிதன் புழங்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிட்டுக்குருவிகள் மொபைல் போன் களின் வருகையால் 90 சதவீதம் அழிந்துவிட்டன என்கின்றன ஆய்வுகள்.

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது. அதோடு மீதமுள்ள குருவிகளின் கருப்பையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மெல்ல மெல்ல அருகி வரும் சிட்டுக்குருவியை காப்பது நமது கடமை.

குருவிகளை காக்கும் வழி.

1 பயிர்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிற்போம்.
2 சிறிய வீடானாலும், அபார்ட்மெண்டானாலும் குருவிகளை பாதுகாக்க சிறிய தோட்டங்களை பால்கனியில் அமைக்கலாம்.
3 வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து குருவிகளுக்கு உணவிடலாம்.
4 குருவிகள் குடிக்க சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்.
5 முக்கியமாக ஜன்னலில் வந்தமரும் குருவிகளை 'அச்சூ' என்று விரட்டாத மன நிலை வேண்டும்.

'காக்கை குருவி எங்கள் ஜாதியென்ற பாரதியின் கனவை புத்துயிர் பெறச் செய்வோம்'.

சனி, மார்ச் 13, 2010

ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்களும் உண்டு.

என்னைப் போன்ற மார்க்கெட்டிங் மனிதர்களுக்கு சென்னையின் வெயிலுக்கு ஒதுங்க நிழல் சார்ந்த இடங்கள் எப்போதும் பிரியமான ஒன்று. அதில் ஓமந்தூரார் தோட்டமும் ஒன்று.

அரசு உயர்மட்ட அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதி, காவல் துறை சார்ந்த அலுவலகங்கள், எப்போதும் கஞ்சிப் போட்ட வெள்ளை சட்டையில் திரியும் உடன்பிறப்புகள் என்று அதிகார வர்க்கத்தின் அத்தனை அடிப்படை இலக்கணத்தோடு காட்சி தரும் ஓமந்துரார் தோட்டம்.

மதியத்தில் மவுண்ட் ரோடு, திருவல்லிகேணி போன்ற பகுதிகளில் 'கால்ஸ்' (வாடிக்கையாளர் சந்திப்பு) இருந்தால் சிறிது மதிய ஓய்வு நிச்சயம் ஓமந்தூரார் தோட்டம்தான். நிழல் சார்ந்து வெயிலின் தாக்கம் இன்றி எப்போதும் குளு குளு என்று இருக்கும்.
பொதுவாக 'மார்கெட்டிங் பீப்புள்' மதிய உணவிற்கு ஏதாவது ஒரு இடத்தில் ஜமா சேருவார்கள். நகரம் முழுவதும் அலையும் இவர்களுக்கு எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கும், எங்கெல்லாம் உண்ட களைப்புத் தீர சிறிது ஓய்வு எடுக்கலாம் என்பதும் அத்துப்படி. அந்தப் பட்டியலில், சென்னையில் ஓமந்தூரார் தோட்டமும் ஒன்று.

மதியம் சாப்பிட்டு விட்டு வண்டியை அங்கே ஓட்டுனா. பெரிய பெரிய தூங்குமூஞ்சி மரங்கள் வரலாற்றின் வாசனையோடு வீற்றிருக்கும். எப்போதாவது ராஜாஜி ஹாலில் சினிமா படப்பிடிப்பு நடந்துக் கொண்டு இருக்கும். ராஜாஜி ஹாலின் எதிர்புரம் ஒரு பள்ளிக் கூடமும் அதன் அருகில் ஒரு ஆல மரமும் இருந்தது. அதை எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை? உள்ளேயே ஒரு தான் தோன்றி விநாயகர் கோவிலும் இருக்கிறது.

பழைய சட்டமன்ற விடுதி இருக்கும் போது உள்ளே கடைகளெல்லாம் கிடையாது. எது வாங்க வேண்டும் என்றாலும் மவுண் ரோட்டுக்கோ அல்லது அருகில் உள்ள சேப்பாக்கம் சாலைக்கோதான் சொல்லவேண்டும். பிறகு கலைஞர் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை மிக பிரமாண்டமாய் கட்டினார். அதற்கு பிறகு அந்த இடம் நிறைய மாற்றங்களை பெற்றது. ஆவின் பாலகம், அம்மா ரெஸ்டாரண்ட், தளபதி உணவகம், இரண்டு டீ கடை என்று அதன் வியாபரா உலகம் சற்றே விரிவடைந்தது.

பிறகு புதிய சட்டமன்றம் கட்டத்தொடங்கியதும் அவ்வளவாக அங்க செல்ல முடியவில்லை. இனியும் முன்புபோல் அங்கு செல்ல முடியுமா என்று தெரியவில்லை ?.

போகட்டும் அங்கு நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.

இப்படித்தான் நானும் எனது தம்பியும் (டாக்டர் ஷங்கர்) ஒரு நாள் ராஜாஜி அரங்கின் எதிரில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம், அப்போது ஒரு மனிதர் கருப்பாக கண்ணாடி போட்டுக் கொண்டு 'அரக்க பரக்க' ஓடிவந்தார். "சார்..சார்... என்னோட பணத்தை யாரோ பிக் பாக்கெட் அடிச்சிட்டாங்க சார். என்னோட பொண்ணுக்கு, செமஸ்டருக்கு பணம் கட்ட சென்னை பல்கலைகழத்திற்கு வந்தேன் சார். இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சது பஸ்ல யாரோ பணத்த பிக் பாக்கெட் அடிச்சிட்டாங்க சார். இன்னைக்கு பீஸ் கட்ட கடைசி தேதி சார். எனக்கு சொந்த ஊரு திருவள்ளுர், அங்க போயிட்டுவரத்துக்கு டைம் இல்ல சார். நான் திருத்தணியில ஒரு பள்ளிக் கூடத்தில ஹெட் மாஸ்டரா இருக்கேன் சார்" என்று பள்ளி அடையாள அட்டையைக் காட்டினார்.

சொன்னவருக்கு 50 லிருந்து 60 வயது வரை இருக்கும். மழுங்க சவரம் செய்து, கோல்ட் பிரேம் கண்ணாடி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பார்க்க கெளரவமான தோற்றத்தில் இருந்தார். " நான் திருத்தணியில ஒரு மெடிக்கல் ஷாப்பும் வச்சிருக்கேன் சார். 300 ரூபாய் பணம் கொடுத்திங்கன்னா, தேர்வுக்கு பணம் கட்டிடுவேன் சார்" என்றார். அப்போதும் அவரிடம் பதற்றம் தணியவில்லை.

"பணத்த உங்களுக்கு உடனே எம்.ஓ அனுப்புறேன் சார்" என்று தனது பெயர், தொலைபேசி எண், வீட்டு விலாசம் எழுதித்தந்தார். எங்கள் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டார். நாங்கள் பரிதாபப் பட்டு தேர்வுப் பணம் 300 கூட பஸ்ஸுக்கு 50 ம் சேர்த்துக் குடுத்தோம்.

வாங்கியவர் கண் கலங்கியப் படி நா தழுதழுக்க நன்றி கூறி சென்றார். எங்களுக்கோ உள்ளுக்குள் பெருமிதம், இப்படி கஷ்டப் பட்ட ஆளுக்கு உதவி செஞ்சோமே என்று. அவர் நா தழு தழுக்க நன்றி கூறியது ரொம்ப நாளைக்கு எங்கள் கண் முன்னாடியே நின்றது.

ஆயிற்று, நாட்கள் இரண்டானது, மூன்றானது, ஒரு வாரம் ஆனது. அவரிடமிருந்து எந்த ஒரு தொலைபேசி அழைப்பும் வரவில்லை. நான் அவர் கொடுத்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன், 'நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்' என்றது. அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்தோம்.

ஒரு மனிதன் கஷ்டம் என்று வரும்போது உதவி செய்வது தவறா?. அதுவும் வயதானவர், தேர்வுக்கு பணம் இல்லை என்கிறாரே என்று நம்பி பணம் கொடுத்தோம். இப்படி தத்ரூபமாக நடித்து நம்மை ஏமாற்றி விட்டனே என்று எங்களுக்கு மனசே சரியில்லை. 'அந்த நாயி மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவுதான்' என்று மனதிற்குள் கருவிக் கொண்டோம்.

அந்த நாளும் வந்தது.

மூன்று மாதம் கழித்து ஒரு நாள் காலை 11 மணி இருக்கும், ஷங்கர் எனக்கு போன் செய்தான். " உடனே என் கிளினிக்குக்கு வாடா, நம்பள ஏமாத்திட்டு போனவன புடுச்சி வச்சிருக்கிறேன்" என்றான். எனக்கு உள்ள கோபத்தை வண்டியில் காட்டினேன்.

போனா... சார் சேர்ல கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். போன வேகத்தில் போட்டேன் ஒன்னு. அங்க திட்டுனத இங்க எழுத முடியாது.

விசாரித்ததில் அவனுக்கு இதுதான் வேலையாம். ஒரு பகுதிக்கு வந்து ஏமாற்றினால், அந்த பகுதிக்கு மீண்டும் செல்வது 4 அல்லது 5 மாதம் கழித்துதானாம். திருவாளர் திருடனாரின் அன்றைய விஜயம் பெஸண்ட் நகர். இவன் கிளினிக் அருகில் வந்து யாரையோ புருடா விட்டு ஏமாற்ற முயல, அப்போது பிடிபட்டிருக்கிறான்.


திருத்தணி முருகன் கோயிலில் உள்ள சத்திரத்தில்தான் ஜாகை. காலையிலேயே தொழிலுக்கு கிளம்பிவிடுவாராம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாம். குறைந்தது 200 லிருந்து 500 வரை கிடைக்குமாம். ஒரே ஒரு மகனாம். தகப்பனின் இந்த திருட்டுத்தனம் தெரிந்து வீட்டை விட்டு அனுப்பி விட்டானாம். அதிலிருந்து திருட்டை முழு நெர தொழிலாக கொண்டுள்ளார். 'தினம் ஒரு ஏரியா, சுக போக வாழ்க்கை' என்று நோகாமல் நொங்கு தின்றிருக்கிறான்.

பிறகென்ன... நம்பர் 100 க்கு போன் செய்து அவனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தோம்.

பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்ற நமது 'ஈகை குனம்' இத்தகைய ஏமாற்று பேர்வழிகளால் நசுக்கப் படுகிறது. யாரவது உண்மையாய் உதவிகள் கேட்டால் கூட, நம்மால் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடிகிறது. இத்தகைய நூதன திருடர்கள் இன்றும் நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...